Advertisement

அத்தியாயம் 40

புதன் காலை ஒரு மணிவாக்கில் , போன திங்கள் பிரதமர் வளரும் இளம் தொழிலதபர்களைச் சந்தித்து உரையாடினார் என்பதும் , தமிழ் நாட்டில் இருந்து மீடியா துறை சார்பாக விக்ரமும் , ஐ.டித் துறை சார்பாக மற்றொரு தொழிலதிபர் மட்டுமே பங்கேற்றது , பரபரப்புச் செய்தியாகியது . 

இதைப் பார்த்த இனியா கடுப்பானாள் , “வரட்டும் இன்னைக்கு ‘இருக்கு தல உனக்கு..” எனக் கருவினாள் 

சிறிது நேரத்தில் , விக்ரம் படப்பிடிப்புத் தளத்திற்கு வர , 

அனைவரும் விக்ரமைச் சூழ்ந்து , பாராட்டு மழையில் நனைத்தனர் .

இனியா சற்று தள்ளி நின்று முறைத்துக் கொண்டிருந்தாள் . விக்ரம் ஒரு கள்ளச்சிரிப்போடு  ரசித்தான் . 

அர்ஜன் அழைக்க , இனியா வேறு வழியில்லாது அருகே வந்து வாழ்த்த , கிடைத்த கேப்பில் யாரும் அறியாதவாறு கண் சிமிட்டினான் . 

அவள் திகைக்க , அவன் அந்த நொடியில் மற்றவர் கவனத்தைத் தன் பக்கம் திருப்பும் விதமாக , அனைவருக்கும் நன்றி சொல்லிக் கிளம்பினான்.

இரவில் இனியா அழைப்பாள் எனக் காத்திருக்க, நேரம் சென்று கொண்டே இருந்தது….. அவள் அழைத்த பாடில்லை , பொறுமை இழந்து, விக்ரமே அழைத்தான் .

போனை எடுத்த இனியா கோபமாக ,” ஏன் சொல்ல  விக்ரம்?” எனக் குற்றச்சாட்டினாள் .

“சொன்னேனே இனியா…” என்று இழுக்க ,

“நான் தான் நம்பவில்லை என்றும் தெரியும் தானே, பின் ஏன் நம்பும்படியாக அழுத்திச் சொல்லவில்லை, அந்த செய்தியைப் பார்த்த போது, என்னை முட்டாளாக உணர்ந்தேன் தெரியுமா?” எனக் குரல் உடையக் கேட்டாள்.

விசயம் வேறுவிதமாகப் போகிறது என்பதை உணர்ந்த விக்ரம் , “என்று நான் நினைக்கிற மாதிரி பேசியிருக்கிறாள்?” எனப் பெருமூச்சு விட்டான். 

பின் ஜில்லு ,“நீ தப்பாகப் புரிந்து கொண்டுள்ளாய் , உன்னை மட்டம் தட்ட நான் நினைப்பேனா?” எனச் சமாதனக்கொடி ஏற்றினான்.

இனியாவின் கவனம் பிரச்சனையில் இருந்ததால் , அவன் அழைத்த ஜில்லு எனச் செல்ல அழைப்பைக் கவனிக்காமல் , காரியத்தில் கவனமாக ,”ஏன் வலியுறுத்தவில்லை?” என்று சண்டை போட்டாள்.

“கூல் ஜில்லு…”என்றவன் , “நான் பேசுவதை நம்பாமல், நீ ஓட்டுவது , எனக்குச் சுவாரசியமாக இருந்தது ,மேலும் பிடித்திருந்தது அதனால் தான்…” என்றான் தன்மையாக. 

அந்த பக்கமிருந்து பதில் வரவில்லை என்பதை உணர்ந்து , 

“ஜில்லு, என்னுடைய அந்தஸ்த்தால் உயரத்தால் யாரும் என்னைக் கேலி செய்யமாட்டார்கள், வம்பு இழுக்க மாட்டார்கள் .”

 மேலும் மிஸ்டர்பெர்ஃபெக்ட்டாக  எல்லோரிடமும் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயமும் உண்டு .”

“ஆனால் உன்னிடம் அப்படி இல்லை, குழந்தைத்தனமாக வம்பு செய்ய வேண்டும்… எந்த மனத்தடையும் இல்லாமல் பழக வேண்டும் எனத் தோன்றுகிறது.”

அவனுடைய உணர்வு வெளிப்பாட்டால் திகைத்த இனியா , 

‘விக்ரம்…’ என்று விம்மினாள்.

“புரியுதா ஜில்லு? நீ எனக்கு மிகவும் நெருக்கமானவள் , முக்கியமானவள்….” என்று ஹஸ்கி வாய்ஸில் சொன்னான் விக்ரம்.

“எனக்குப் புரியுது , உங்களுக்குத் தெரிஞ்சுதான் புரிஞ்சுதான் சொல்கிறீர்களா?” எனத் தடுமாறினாள்.

“புரியவில்லையா? எனக்கா?என்று சிரித்தான். 

“ஜில்லு, பிரதமரைப் பார்க்க வேண்டிய முக்கியமான தருணத்தில் கூட , உன்னோடு பேசியிருக்கிறேன் என்றால் நீ எனக்கு எவ்வளவு முக்கியமானவள் என்று புரிகிறதா?” என எதிர்பார்ப்புடன் கேட்க ,

நெகிழ்ந்த இனியா , பேச்சு வராமல், ’ம்ம்….’ என்றாள்.

“என்ன இப்படி ஒரு பதில் இனியா, நான் உனக்கு முக்கியமானவன்தானே? எனப் படபடத்தான்.

வார்த்தை வராமல் விம்மினாள் , உணர்ச்சிப் பெருக்கினால் கண்ணீர் வர , பேச முடியாமல்  தலை ஆட்டினாள். தடுமாறி நின்றாள் .

இனியாவின் அமைதியை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியாமல் , “ஜில்லு….” எனச் சந்தேகமாக இழுக்க , 

“அதான் தலையாட்டினேன் தானே, இன்னும் ஏன் இழுக்கிறீர்கள்….?” எனக் கோபமாகக் கேட்க , அந்தப்பக்கம் விக்ரம் கலகலவெனச் சிரித்தான்.

முதலில் குழம்பியவள் , பின்பு தான் தலையாட்டியது . அவனுக்கு எப்படித் தெரியும் என்பதை உணர்ந்து , 

“விக்ரம்….” என வெட்கபட்டுச் சிணுங்கினாள் .

“ஹா…. ஹா….” என மீண்டும் சத்தமாகச் சிரித்தவன் , “ இப்போது நான் பக்கத்தில் இருந்து உன் அழகு முகத்தைப் பார்க்க முடியவில்லையே என ஏக்கமாக உள்ளது ஜில்லு .”

“நல்லவேளை நீங்கள் பக்கத்தில் இல்லை, ஒரே அழுமூஞ்சியாக இருக்கிறேன் விக்ரம்.” 

“அதானே காண கிடைக்காத காட்சி…., அழுகாச்சி காவியம்….” எனச் சீண்டினான்.  

பின் அவனே , “வீட்டில் யார் இருக்கிறார்கள்? வீடியோ காலில் வருகிறாயா? உன்னைப் பார்க்க வேண்டும்…” என்றான்  

இனியா யோசிக்க ………,

“எப்படி எப்படியோ ப்ரபோஸ் பண்ண வேண்டும் எனக் கற்பனை செய்து வைத்திருந்தேன் . நீ பண்ணின அலப்பறையில் , எதிர்பாராத தருணத்தில் நிகழ்ந்து விட்டது…” என அலுத்துக் கொண்டான். 

இப்போது உன் முகத்தைப் பார்க்க வேண்டும், காதல் சொல்லிய இந்தத் தருணத்தை அப்படியே மனதிற்குள் படம்பிடித்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன், “வருகிறாயா இனியா?” என நெகிழ்ந்து கேட்டான்.

“ம்ம்….” என்றவாறு வீடியோ காலிற்கு மாறினாள்.

கண்கள் கலங்கி , அழுததனால் மூக்கு , கன்னம் எல்லாம் சிவக்க, புன்சிரிப்போடு நின்றாள் இனியா.

அவள் அழகை ரசித்தான்,அவள் கண்களை நேராக ஊடுருவி, உணர்ச்சிக் குவியலாய் , காந்தப் பார்வை பார்த்து , “ஜில்லு ,ஜ லவ் யூ…‘ என்றான்.

இனியா , மனம் நெகிழ்ந்து , கன்னம் குழைந்து , கண்ணீரோடு , தலையை ‘ஆம்’ என ஆட்டினாள். 

அவள் உணர்ச்சிப் போராட்டத்தைப் புரிந்து கொண்டான் .

மீண்டும்,“ஜில்லு, ஐ லவ் யூ…”என்று கூறி விட்டு ,

“நாளை அழைக்கிறேன்…..” எனக் கண்ணடித்துவிட்டு போனை வைத்தான்.

விக்ரம் அப்படியே கட்டிலில் விழுந்தான் , ஸ்கிரீன் ஸாட்டில் எடுத்த , கண்ணீரோடு , புன்சிரிப்போடு இருக்கும் இனியாவின் புகைப்படத்தைப் பார்த்தபடி படுத்துக் கிடந்தான் . 

“நான் எதிர்பார்க்காததைச் செய்து என்னைக் காலி பண்ணுவதே இவள் வேலையாகப் போச்சு.…” எனச் சொல்லி சிரித்தான்.

பின், “என் செல்ல ரோஷக்காரி….” எனக் கொஞ்சிக் கொண்டான் .

இங்கோ இனியா , உண்மையா? பொய்யா? எதுவும் புரியாத நிலையில் , தலையணையைக்  கட்டி அணைத்தபடி , காதிற்குள் “ஜில்லு, ஜில்லு” என்று அவன் குரலே ஒலிக்க , கண் மூடினால் , மூடிய விழிகளில், அவன் காந்தபார்வையோடு , மந்தகாசப் புன்னகையோடு வர , 

இத்தனை நாள் புரியாமல் இருந்த பார்வைக்கான அர்த்தம் புரிந்தது . நீ எனக்கானவள், என்னுடையவள் என்பதே அது . எத்தனையோ நாள் யோசிக்கப் பயந்து , தள்ளி வைத்த  விசயம் அம்பலத்திற்கு வந்து விட்டது  என அவள் மனசாட்சி அவளைக் கேலி செய்தது .இந்த உணர்வும் பிடித்திருந்தது , 

அவன் அக்கறை , என்னுடையவள் என்ற பார்வை எல்லாமே நெஞ்சுக்குள் பறக்கிற உணர்வைத் தந்தது

அப்படியே இருவரும் ஓர் பரவச நிலையில் உறங்கினர் .

அத்தியாயம். 41

மறுநாள் இருவரும் ஒருவரை ஒருவர் சேனலில் சந்திக்க முற்படவில்லை. எப்போதும் போல் வேலையைத் தொடர்ந்தனர் .

இரண்டு , மூன்று முறை அனுவிடம் கவனச் சிதறலுக்காகத் திட்டு வாங்கி , இனியா அசடு வழிந்தாள் 

ஏதோ ஒரு உலகில் சஞ்சரிப்பதாக உணர்ந்தாள். ஏனோ அடிக்கடி சிரித்துக் கொண்டிருந்தாள் .

மதிய வேளையில் சாப்பிடும் பொழுது வசந்த்தும் , இதைக் கவனித்து ஓட்டினான் , இனியா திருப்பிக் கொடுக்காமல் எல்லாவற்றிற்கும் பல்லைக் காட்டிக்கொண்டிருந்தாள் .

அப்போது அனைவருக்கும் ஸ்வீட் பாக்ஸ் வழங்கப்பட்டது , 

அர்ஜுன் வழக்கம் போல் , “ ஸார் நாம் நேற்று ட்ரீட்  கேட்டோம் இன்று தந்து விட்டார் பார்…” எனச் சிலாகித்தான் .

மற்ற மூவரும் ஒரே நேரத்தில்,” முடியவில்லை  அர்ஜுன் , எங்களை விட்டு விடு…. , ஒரு ஸ்விட் பாக்ஸ்க்கு இத்தனை அலப்பறையா?’ என ஓட்ட , அந்த இடம் கலகலத்தது.

விக்ரமும் அன்று முழுவதும் ஒரு விதமான உற்சாக மனநிலையிலேயே இருந்தான். 

இரவு இனியாவை அழைத்து , நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என வலியுறுத்தினான் .

சனி மாலை பயிற்சி பட்டறை முடிந்த பின் , அந்த தெருவின் இறுதியில் இருக்கும் ஒரு காபி ஷாப்பில் சந்திக்கலாம் என இனியா கூற , 

“நோ இனியா…,” என்றான் வேகமாக.

“ஏன்?” எனக் கேட்க , 

“அது சரி வராது இனியா, நீதான் பெரிய செலிபரட்டி ஆச்சே…. உன்னைச் சுற்றிக் கூட்டம் மொய்த்து விடும்…” என வம்பு செய்ய , 

கடுப்பான இனியா ,” விக்ரம்….” எனப் பல்லைக் கடிக்க ,

“சரி, சரி, மீடியா கண்ணில் பட வேண்டாம் எனப் பார்க்கிறேன்…” என்று உண்மையான காரணத்தைச் விளக்க, 

அவளும் ஒப்புக் கொண்டாள்.

பிரபல நட்சத்திர ஹோட்டலில் சந்திப்பது என முடிவு செய்யப்பட்ட பின்,ஸ்வீட் நத்திங்ஸ் ஆக ஏதேதோ பேசியபின் போனை வைக்கப் போக , 

“ஒரு நிமிடம் விக்ரம், பிரதமரைச் சந்தித்தது உங்களுக்குப் பெரிய விசயமா? ஸ்வீட் எல்லாம்….” எனக் கேட்க,

“நீயும் அப்படித்தான் நினைத்தாயா? என் வாழ்க்கையில் முக்கியமான கட்டத்திற்கு நகர்ந்துள்ளேன், நீ என் வாழ்வில் வந்துள்ளாய் , அதைக் கொண்டாடத்தான்…” என ஆழ்ந்த குரலில் சொன்னான் . 

இனியா அசந்து போனாள் . அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் அமைதியாக இருக்க , 

“என்ன விசயம்? ஏன் இந்த அமைதி இனியா?” 

நீங்க ரொம்ப வேகமாக யோசித்து , பெர்ஃபெக்ட் ஆகச் செயல்படுகிறீர்கள் , நான் அப்படி எல்லாம் இல்லை, கொஞ்சம் விளையாட்டுத்தனமாக இருப்பேன்…” என்றாள் தயக்கமாக .

“இது என்னுடைய இயல்பு , அது உன்னுடைய இயல்பு , மேலும் இரண்டு பேரும் ஒரே மாதிரி இருந்தால் போர் அடிக்கும் இனியா…”

“ஓ….!” என்று மட்டும் இனியா சொல்ல

“அப்புறம் ஒரு ரகசியம் சொல்லட்டுமா….?” என்று விக்ரம் நிறுத்த ,

“சொல்லுங்க விக்ரம்..…” என இனியா ஆர்வமுடன் கேட்க ,

சிறிது நேரம் போக்குக் காட்டி , நாலைந்து தடவை கெஞ்ச கொஞ்ச விட்டு ,

பின் மெதுவாக ,” எனக்கு உன்னிடம் முதலில் பிடித்ததே இந்தத் துடுக்குத்தனம் தான்….” என ரகசியம் உடைத்தான் .

இனியா நிம்மதியானாள் . பின்,” சொல்லிட்டீங்க இல்லையா? இனி என் அலப்பறையைப் பாருங்கள்” என்று சிரித்தாள்.

“ஐ ஆம் வெயிட்டிங்…” என்று அவனும் சிரித்தான். பின், “ஜோக்ஸ் அபார்ட் இனியா….”

“நீ நீயாகவும் , நான் நானாகவும் , நாம் நம் சுயத்தோடு இருப்பது தான் நல்ல காதலுக்கு அழகு”

மேலும் “திருமண வாழ்க்கையில் சில பல விசயங்களை விட்டுக் கொடுக்கலாம் , ஆனால் நமது அடிப்படை இயல்பை மாற்றமுடியாது, அதனால் நமது துணையை அவர்களின் குறை , நிறைகளோடு ஏற்றுக் கொள்வது தான் இனிய வாழ்வுக்கு அடித்தளம்” என்று நீண்ட உரையாற்ற ,

இனியா புரிந்து கொண்டாள். 

நீங்கள் சொன்னது நூறு சதவீதம் சரி , அதை நான் அப்படியே வழி மொழிகிறேன்….” என அவள் இயல்பான துடுக்குதனத்தோடு பதில் தந்தாள் . 

பின் சிறிது நேரம் வேறு கதைகள் பேசிவிட்டுப் போனை  வைத்தார்கள்.

ரோஜா மறுநாள் போன் செய்து , “இனியா, இந்த வார இறுதியில் என் நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது , பார்த்து, உன் கருத்தைச் சொல்…” என்றாள் .

“கட்டாயமாக நிச்சயமாக… “எனச் சிவாஜி போல் பேசி ,கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்த்துச் சொல்கிறேன்” என்று சிரிக்க,

“ஏதோ உன்னை மதித்துச் சொன்னால், பில்டப் ஓவராக இருக்கிறதே அடங்குமா…” என்று ரோஜா கலகலத்தாள்.

அந்த வாரம் அப்படியே படப்பிடிப்பு , கலாட்டா எனச் செல்ல ,

விக்ரம் ஆர்ஜுனை அழைத்து , ஒரு மாதத்தில் புது கான்ஸப்ட் டெவலெப் செய் என்று பணித்தான்.

இதை அர்ஜுன் சொல்ல , வசந்த்தும் , இனியாவும் ஹை_பை செய்தபடி ,” கொசுத் தொல்லை ஒழிந்ததப்பா….” எனச் சொல்ல ,

அர்ஜுன் முறைக்க ,

இன்று ஒத்துக் கொள்கிறேன் அர்ஜுன் , தலதல தான்… உனக்கு வேலை கொடுத்து விட்டார் பார்….”என்றான் வசந்த் . 

இனியாவும் ஆமோதிக்க , அந்த இடமே அதகளமாகியது .

தொடரும்……

 

Advertisement