Advertisement

அத்தியாயம் 4

 ‘வாவ்…!’ என்று அந்த மேஜையில் இருந்த பேனாவை இனியா எடுக்க ,

 “அர்ஜுனிடம் கொடு இனியா” , என்றாள் அனு.

 “ஏன்? யாருடையது?” என்று வழக்கம் போல் வம்படிக்க ,

“விக்ரம் சாரோடது , மிகவும் விலை உயர்ந்தது, அர்ஜுன் கொடுத்து விடுவான்…. “

“ஓ! அவன் பெயர் விக்ரமா….” என மனதில் குறித்துக் கொண்டாள் . பின், “ 1000 ரூபாய் இருக்குமா? “என விளையாட்டாகப் பேனாவை ஆட்டியபடி கேட்க ,

“ 35000 ரூபாய் இருக்கும்…” என்றாள் அனு.

“ஆ…..!” என்றவாறு ,”தங்கத்தில் செய்த பேனா வா?” என இனியா நக்கலடிக்க ,

“இல்லை , தங்கத்தில் செய்த  நிப்பு….” என்றான் அர்ஜுன் .

“ஓ..!, இந்த பேனா மட்டும் வேற வேலையா செய்யும் , இரண்டு ரூபாய் பேனா போல எழுதத்தானே போகிறது….” என வியாக்கியானம் பேசியபடி , பேனாவை ஆட்டிக் கொண்டே திரும்ப , அப்படியே அசையாமல் நின்றாள்.

 என்னவென்று அனைவரும் திரும்பிப் பார்க்க , விக்ரம் வாசலில் நின்றிருந்தான்.

உள்ளே வந்து அவள் முன் நின்று , கையை நீட்ட , பேனாவைக் கொடுத்தாள். 

இனியாவைத் தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்து விட்டு நகர்ந்தான்.

இனியா “ஊப்…” என அமர , அங்கே ஒரு சிரிப்பு அலை கிளம்பியது. 

“வாயெல்லாம் எங்கக்கிட்ட தான்..” எனக் கேலி செய்ய ,  அசட்டுச் சிரிப்போடு தப்பிக்கும் விதமாக அனுவை இழுத்துக் கொண்டு கேண்டீன் சென்றாள்.

“அங்கே ஜெம்மைப் பற்றிச் சொல்….” என்று அனுவிடம் நச்சரிக்க , 

 புரியாத பார்வையை அனு வீச , “எல்லாம் உங்க விக்ரம் சாரைப் பற்றி தான்…” என்று நொடித்தாள் .

“ ஜெம்  என்றாள் என்ன? , அதை முதலில் சொல்” என்று அனு விசாரிக்க , 

அதற்கான விளக்கவுரையை இனியா சொல்ல ,  

“இதை மட்டும் அவருடைய ரசிகர் பட்டாளம் கேட்கனும் ,மவளே நீ காலி “ என அனு வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ,

“என்னப்பா, பில்டப் எல்லாம் பெரிசா இருக்கு” என இனியா அங்கலாய்த்தாள் .

அப்போது அங்கே வந்த அர்ஜுன் , “அனு உன்னோட சிரிப்பு , நம்ம ஃபளோர் வரைக்கும் கேட்குது , அது அப்படியே என்னை இழுத்து வந்துவிட்டது…” என்று  அனுவிடம் வம்பு வளர்த்தான்.

அனு முறைக்க , உடனே இனியாவிடம் ,” நீ சொல்லுமா ? என்ன விசயம்?” எனப் பம்மினான் .

“ஒன்றுமில்லை பாஸ் , நம்ம விக்ரம் சார் பற்றி விவரம் கேட்டேன்…” என்று நல்ல பிள்ளையாகச் செப்பினாள்.

“நம்பிட்டேன் , நம்பிட்டேன்  உங்க முஞ்சிகளைப் பார்த்தாலே தெரியுது” என்று நம்பாத பார்வைப் பார்க்க ,

“இல்லை…” என்று அனு ஆரம்பிக்க ,

 இனியா அவளை மறித்து , “நீங்க சொல்லுங்கள் பாஸ்…” எனத் தூண்ட ,

“மவளே …. நீ மாட்டினாய் , விவரம் கேட்பது யாரிடம் , ரசிகர் மன்ற தலைவனிடம்….” என்று மனத்தில் நக்கலடித்துக் கொண்டே அனு வேடிக்கை பார்க்க ,

“உனக்கு வீ.ஆர் குரூப் தெரியுமா ? “என அர்ஜுன் உற்சாகமாகக் கேட்க ,

“லூசாப்பா நீ?” என்பது போல் இனியா அவனைப் பார்த்துவிட்டு. “அதைத் தெரியாமல் யாராவது இருப்பார்களா? “

முகத்தில் பெருமை பொங்க அர்ஜுன் , “அது நம்ம விக்ரம் சாரோடது…“

“ஓ..! அது தான் நம்ம ‘தல’ அவ்வளவு காஸ்ட்லி பேனா வைத்திருக்குதா?” .என நினைத்தாள்.

“அப்புறம்….?” 

உடனே “விழுப்புரம்…” என்றான் அர்ஜுன்.

 உடனே , “உங்க ஜோக் , அர்த்தப் பழசு பாஸ், சகிக்கவில்லை , நீங்கெல்லாம் இயக்குனர் வேறு  , காலக் கொடுமைடா சாமி…” என இனியா அலுத்துக் கொள்ள , 

அனு ஹைஃபை தட்ட , 

“ஓ… சரி , அப்படியா? , நான் கிளம்புகிறேன்….” என பிகு செய்தான். 

வேகமாக இரண்டு பேரும் சரண்டர் ஆக , “இது நல்ல பிள்ளைக்கு அழகு…” என்றபடி ,” அதில் உள்ள “வி” ஸாரோட தாத்தா விக்ரமன் , முன்னாள் மத்திய மந்திரி . ‘ஆர்’  _ ரகுராம் அப்பா  , தற்போதைய தமிழக மந்திரி , மருத்துவம் ,பொறியியல் கல்லூரி , வி. ஆர் . மருத்துவமனை , மால் எனப் பல தொழில்கள் , பல இடங்களில் உள்ளன”,

மேலும் , “நல்ல மனிதர்கள் , ஒரளவு நேர்மையான அரசியல்வாதிகள் , பரம்பரை பணக்காரர்கள்…”” எனப் புகழ் பாடினான் .

“பார்ன் வித் டைமண்ட் , ப்ளட்டினம் ஸ்பூன் என்று சொல்லுங்க பாஸ் ..…” என்றாள் இனியா .

“ஆமாம் , ஆனால் நம்ம விக்ரம்ஸார் ரொம்ப ஸ்பெஷல் தெரியுமா?”  .

“என்னவாம்?”என இழுத்தாள் .

“ விக்ரம் ஸாரைப் பற்றி யாரும் ஒரு குறை சொல்ல முடியாது , வேலை வாங்கும் முறையாக இருக்கட்டும் , பெண்களிடம் நடந்து கொள்ளும் முறையாக இருக்கட்டும் , ஹி இஸ் ஏ ஜெம் ஆஃப்  அ பர்ஸன் தெரியுமா?  என்றதும்….” இருவரும் சிரித்து விட, 

என்ன? என்று துருவினான் .

“அது ஒரு பழைய ஜோக் பாஸ் ,  நீங்கள் மேலே சொல்லுங்கள்…” 

அர்ஜுன் முறைத்தபடி ,   “ எப்பவும் லோ பரோவைலில் தான் இருப்பார் . பெண்களுடன் கிசுகிசுக்கப்பட்டதே இல்லை..” என முடித்தான்  .

“அப்புறம் … “என உந்த

“அமெரிக்காவில் இருந்து படிப்பு முடித்து  வந்தவுடன் , தனக்கெனத் தனித்தொழில் , தனி அடையாளம் வேண்டும் என நினைத்து , நட்டத்தில் இருந்த இந்த சேனலை வாங்கினார் .

அதை நிர்வாகித்து ,  இரண்டே ஆண்டுகளிள் , அதுவும் இந்த இள வயதில் ,28 வயதில்,  அதில் வெற்றியும் பெற்று விட்டார். இன்று நாம் தான் நம்பர் ஒன் தெரியும்தானே..?” எனப் பெருமையாகச் சொல்ல ,

“காசு இருந்தால் , வெற்றி பெற முடியாத என்ன?  என  இனியா இழுக்க ,

 உடனே இடைமறித்த அர்ஜூன் , உன்கிட்ட இந்த மாதிரியான பேச்சை எதிர்பார்க்கவில்லை இனியா ” என்று கோபப்பட்டான்.

ஓகே,ஓகே  சில் பாஸ் , சும்மா விளையாட்டுக்குத்தான்….” என்று சமாதானம் செய்தாள் .

 அர்ஜுன் சமாதனமாகாமல் , “உழைப்பைக் கேலி செய்யக்கூடாது இனியா….” என்று கடுமை காட்டினான் 

“ஸாரி பாஸ் , நம்ம ‘தல’ கெத்து தான்  ஒத்துக்கிறேன்…” என்று சரண்டரானாள் .

 சற்று முறைப்போடு “ம்மம்..” என்றான் . 

உடனே இனியா முகம் வாட , 

“ உடனே அனு , விடு அர்ஜுன் சும்மா கேலிதான் செய்திருக்கிறாள்.. , ” எனச் சமாதனப்படுத்தினாள் .

அர்ஜுனின் முகம் தெளிவடையாததைக் கண்ட அனு , இனியாவை பார்த்து கண் ஜாடை செய்ய, 

“பாஸ் மன்னிச்சு …. விக்ரம் ஸார் நல்லவர் வல்லவர் , நாலும் தெரிந்தவர்….” என எழுந்து நின்று கைகளைக் குறுக்கி குனிந்து “நண்பன்” பட ஸ்டைலில் மன்னிப்பை வேண்ட ,

 “உன்னை….” என அர்ஜுன் இனியாவைக் கொட்ட வருவது போல் கையைத் தூக்கினான்

“இதெல்லாம் அநியாயம் பாஸ், ஸாரி சொன்ன பிறகும் கொட்டா” என்றபடி கையைத் தடுத்தாள்.    “மேலும் சொல்றவங்க சொன்னாத்தான் சமாதானம் ஆவீர்கள் போல” என வம்பிழுத்தாள் .

அர்ஜுன் , அனுவை ஓரு பார்வைப் பார்க்க , சட்டென்று அனு தலையைத் தாழ்த்தினாள் . 

 இந்த நாடகத்தைப் பார்த்தும் பார்க்காமல் , தங்களைக் கடந்து செல்லும் விக்ரமை , வெட்கமே இல்லாமல் இனியா வேடிக்கைப் பார்க்க , 

விக்ரம் கூர்மையான பார்வையுடன் அவளைக் கடந்தான்.

“பாஸ் , பாஸ்.. , ‘தல’ கேண்டீன் , வந்திருக்கார்…?” என ரகசியம்  பேசினாள் .

 சுதாரித்த  இருவரும் என்னவென்று பார்க்க , 

அதற்குள் விக்ரம் அவர்களைக் கடந்து சென்று இருந்தான். அங்கு இருந்த உணவை ருசி பார்த்துக் கொண்டிருந்தான். 

அவரை டிஸ்டர்ப் செய்யத் தயங்கியபடி , “விக்ரம் ஸார் பார்த்தால் சிரிப்போம் அல்லது விஷ் செய்வோம்” என நினைத்து அர்ஜுன் அங்கொரு பார்வை வைத்தபடி பேசிக்கொண்டிருந்தான் . 

இனியா அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் மிக முக்கியமாக, “‘தல’ 5 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடாமல், என்ன இங்க சாப்பிட்டுகிறார்..?” என அதி முக்கியமானக் கேள்வியைக் கேட்டுக் கொண்டிருந்தாள். 

 “உஷ்..” என்றவாறு , “ஸார் எல்லா டிப்பார்ட்மெண்ட்டையும் செக் செய்வார் , அதுவும் அவர் வெற்றிக்கு ஒரு காரணம்..” என அர்ஜுன் மீண்டும் புகழ் பாட ஆரம்பிக்க , 

மற்ற இருவரும்  “வம்பே வேண்டாம்” எனக் கைகளைத் தூக்கிப் பெரிய கும்பிடாகப் போட்டார்கள் . 

“நீங்களே கேட்க வேண்டியது… , அப்படியே ப்ளெட்டைத் திருப்பி ஓட்டவேண்டியது , ஏதாவது கேளுங்கள் , அப்போது வைத்துக் கொள்கிறேன்..” என்று முறுக்கினான் .

அனுவிடம் திரும்பி ,” இவளுடன் சேராதே உன்னைக் கெடுத்து விடுவாள்” 

“வாய்ப்பில்லை பாஸ் , அதுக்கு வாய்ப்பேயில்லை” என இனியா கண் சிமிட்டினாள்.

 ஒரு நிமிஷம் திகைத்த அர்ஜுன் , பின் “ கெட்ட பொண்ணு நீ..”  ‘எனச் சொல்ல , 

அனு அவள் தோளில் அடிக்க என அந்த இடம் கலகலத்தது .

 ஏற்கனவே விக்ரம் உள்ளே வரும்போதே  இனியாவின் பேச்சைக் கேட்டிருந்தான் , பின் மெல்ல நிதானித்து , தான் கேட்டிருக்கக்கூடும் என்ற எண்ணம் வராதவாறு சில நிமிடங்கள் போன் பேசுவது போல் நின்று தாமதித்து , உள்ளே வந்தான். 

மேலும் சாப்பிட்டுக் கொண்டே விக்ரம் , அவர்கள் அறியாதவாறு கவனித்துக் கொண்டு இருந்தான். அர்ஜுனின் தயக்கம் , இவர்களின் வம்பு  ஆகியவற்றை  கொண்டு இப்பொழுதும் அவர்கள் தன்னைப் பற்றித் தான் ஏதோ பேசுகிறார்கள் எனப் புரிந்து கொண்டான்.

கண்களில் குறும்பு , நொடிக்கு ஒரு முறை கலகலவெனச் சிரிப்பு என்று இனியா அங்கிருப்பவர்களை அடிக்கடித் திரும்பிப் பார்க்க வைத்தாள்.

அவர்கள் கிளம்புவதை உணர்ந்த விக்ரம் , தலையை உயர்த்த , விஷ் செய்து விட்டு நகர்ந்தனர்.

அன்று வீடு வந்த இனியா , ஹாலில் உட்கார்ந்த படி, “அம்மா ஸ்டராங்கா ஒரு காபி..” என்று ஆர்டர் போட ,

அப்போது அடுப்படியில் இருந்து முறுக்கோடு வெளியே வந்த காவியா , “என்னக்கா ஆபிஸில்…” எனக் கதை கேட்க , 

உடனே அளக்க ஆரம்பித்தாள் , “இன்று என் சேனல் ஹெட் டைப் பார்த்தேன்” .

உடனே காவியா ,” சொட்டை மண்டைக்கிட்ட திட்டு வாங்கினியா ?” 

“போடி , எங்க பாஸ் செம ஹான்டசம்..” தெரியுமா? என்று கெத்துக் காட்டினாள்.

 “இல்லையே…” என்றவாறு காவியா கூகுளை நோண்ட, ரகுராமின் படம் வந்தது , 

“இதுதான் உங்க ஊரில் ஹான்டசம்மா?”  எனப் படம் காட்டிச் சிரிக்க ,

 அதை வாங்கி விக்ரம் என அடிக்க , அதில் வந்த போட்டோவைக் காண்பித்தாள்

“வாவ்…! ஆளு நடிகர் அஜித் மாதிரி இருக்கிறார் . சோ ஹான்ட்சம் அக்கா..” என ஜொள்ளினாள் 

“முக்கியமான விசயம் கவனித்தாயா ?  சிங்கம் சிங்கிள் அக்கா”

“நீ வேற… சிங்கம் இல்லடி ,’ தல’ ஜெம் டி. சிரிக்கக் காசு கேட்பார் போல “ என்றாள் இனியா.

“சோ சாட்…”   எனச்  சோகமான பார்வை பார்க்க ,அப்போது காபியோடு கவிதா வர , அனைத்து விவரங்களையும் மீண்டும் கூறினாள்.

“பெரிய இடத்தில் விளையாட்டுத்தனமாக இருக்கக் கூடாது , கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார் .

 எதிர்வாதம் செய்ய முனைந்தவள் , அம்மாவின் முகத்தைப் பார்த்து விட்டு , “சரிம்மா ,-கவனமாக இருக்கிறேன்..” என முடித்தாள் .

Advertisement