Advertisement

அத்தியாயம் 31

மேலும் சில நாட்கள் செல்ல… , ராம்குமார் உதவியுடன் , இனியா சில விளம்பரங்களில் நடித்து இருந்தாள்.

“ருசிக்க ரசிக்க” நிகழ்ச்சியும் மாபெரும் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதிரி புதிரி வெற்றியானது . 

 விக்ரம் இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாட , கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி என முடிவு செய்தான் . 

இதை அர்ஜுனிடமே சொல்லி , அறிவித்திருக்க முடியும் . ஆனால் இனியாவைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தானே நேராக வந்து ,

 “ருசிக்க ரசிக்க” டீமின் மாபெரும் வெற்றியை கொண்டாட, “அடுத்த சனிக்கிழமை , கிழக்குக் கடற்கரையில் உள்ள பெரிய ஹோட்டலில் பார்ட்டி” என அறிவித்தான்.

எல்லோரும் சந்தோஷத்தில் கூச்சலிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் , வழக்கம் போல் ஒரு காந்தப் பார்வையை அவள் மீது செலுத்தி விட்டு , நல்ல பிள்ளையாகப் பார்வையை மாற்றிக் கொண்டான் .

இனியா வழக்கம் போல் , “பார்த்தானா ? இல்லையா?” என்ற குழப்பத்தில் திகைத்து நின்றாள்.

அப்போது ரோஜா , “ ஸார் , டீம் மக்கள் மட்டும் தானா?”  என்று கேட்க ,

 உடனே அனைவரும் ,” உனக்கு உன் கவலை…” என ஓட்ட ,  

உடனே ரோஜா , “எனக்கு நான்தானே பேசவேண்டும்” எனப் பதில் சொல்ல , 

அப்படியே அர்ஜுனைப் பார்த்து ,” ஸார் நாமெல்லாம் ஒரே கட்சி தானே…?” என கேட்க , அங்கே சிரிப்பலை பரவியது.

உடனே விக்ரம் சிரித்தபடி ,” எஃஸ்டரா ஒரு நபர் ஓ.கே.” என்றான்.

 “தென் , ஓ.கே. கய்ஸ் , ஐ ஆம் லீவிங் ” என்று கிளம்பினான்.

விக்ரம் கிளம்பியவுடன் , அர்ஜுன் பிரேக் அறிவித்து விட்டு இனியாவுடன் காற்றாட,  செட்டை விட்டு வெளியே வர, 

“பாஸ் “ அனு இல்லாமல் போவது எப்படி எனச் சோக கீதம் பாடிக்கொண்டு இருந்திருப்பீர்கள் , ரோஜா புண்ணியத்தில் தப்பித்தீர்கள் என்று கேலி செய்தபடி வெளியே நின்றார்கள் .

அப்போது தான் காரை  பார்க்கிங்கில் இருந்து எடுத்த வரச் சொல்லி , வாசலில் காத்திருந்த விக்ரம் , இவர்களைப் பார்த்தவுடன் ,

“ அர்ஜுன்…” என அழைக்க  ,  இனியாவும் அர்ஜுனும் அருகே வர ,

 எல்லோருடைய பாதுகாப்பையும் பார்த்துக் கொள்ளுங்கள் .  இ . சி .ஆர் இல் இருந்து வீட்டிற்குப் போவதற்கு என்ன ஏற்பாடு என்று கேட்டுக் கொள்ளுங்கள் . நாளைக்கு எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது, கவனம்” என்றான் .

“ஓகே ஸார், கண்டிப்பாகப் பார்த்துக் கொள்கிறேன். 

அப்புறம் இனியா , “ ஹவ் அபௌவ்ட் யுவர் ஆட் ஷூட்டிங்ஸ் “

“குட் ஸார், நோ இஸ்யூஸ்….” 

அதற்குள் கார் வர , “ஓ.கே…. என்றவாறு அர்ஜுன் அறியாமல் கண் சிமட்டிச் சென்றான் .

இனியாவின் இதயமோ இந்தச் செயலால் , இரயில் வேகமெடுத்தது .

இதைக் கவனிக்காமல் ,அர்ஜுன் வழக்கம் போல் , “பார் இனியா , ஸார்  எப்படி எல்லாவற்றையும் கவனித்து அக்கறை எடுத்துக் கொள்கிறார்…” எனப் பெருமை பேசினான் .

மற்ற நேரமாக இருந்தால் ஏதாவது கவுண்ட்டர் கொடுத்திருப்பாள் .

மனம் வேறு ஏதோ யோசனையில் இருந்ததால் , “ஆம்” எனத் தலையாட்ட ,

“இன்று மழை கொட்டப் போகிறது போ…” , என்றான் அர்ஜுன்

அவள் சிரித்தபடி,” நாங்க உண்மையை ஒப்புக் கொள்வோம் பாஸ்….” என்று கெத்துக் காட்ட , 

அவன் சிரித்தபடி ,” வா  நேரமாச்சு , உள்ளே செல்வோம்…” என்று சொல்ல ,

 இருவரும் உள்ளே சென்றனர் .

அத்தியாயம் 32

சனிக்கிழமை அன்று இனியா , வசந்த் , அனு , அர்ஜுன் நால்வரும் பார்ட்டி ஹாலில் ஒரு ஓரத்தில் நின்று கலகலத்துக் கொண்டிருந்தனர் . வழக்கம் போல்   அனு _ அர்ஜுன் , இனியா _ வசந்த் சேர்ந்து செல்வது என முடிவு செய்யப்பட்டிருந்தது .

ரோஜா , பரத்தோடு வந்திருக்க ,கார்த்திக் அவன் நண்பரோடு வந்திருக்க  என யூனிட்டில் அனைவரும் வந்திருந்தனர் . பார்ட்டி கொண்டாட்டமாகத் தொடங்கியிருந்தது.

வழக்கம் போல் விக்ரம் பார்ட்டி ஆரம்பித்ததும் வந்து வாழ்த்துக்களைச் சொல்லி விட்டு , இனியாவை யாருக்கும் தெரியாமல் , ஒரு லுக் விட்டுச் சென்றான். 

விக்ரம் ஹோட்டலில் இருந்து கிளம்பும் பொழுது தொழில் துறை நண்பர் ஒருவரை அங்கே சந்திக்க , வரவேற்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் .

அரைமணி நேரம் சென்றிருக்க , மேலும் இரண்டு நண்பர்கள் இணைந்து கொள்ள , நேரம் போவது தெரியாமல் தொழில் பற்றிப் பேச்சு ஓடிக் கொண்டிருந்தது . 

 அனு , அர்ஜுன் ,  கொஞ்சம் சிக்கிரமாகக் கிளம்ப , வசந்த்தும் இனியாவும் சிறிது நேரம் இருந்துவிட்டுக் கிளம்பலாம் என முடிவு செய்து பார்ட்டியில் எல்லோரோடும் பேசிச் சுற்றிக் கொண்டிருந்தார்கள் .

சிறிது நேரத்தில் வசந்த்தின் நண்பன் ஒருவன் ,  விபத்தில் சிக்கியுள்ளதாகப் போன் வர , வசந்த் உடனே கிளம்ப வேண்டிய சூழ்நிலை வர , இவன் என்ன செய்வது எனத் தெரியாமல் தயங்கினான் .

அப்போது அங்கே வந்த ரோஜா, “ இனியா வீடு தாண்டி தான் நான் செல்வேன் , நான் டிராப் செய்கிறேன்…” என்று சொல்ல , 

“இந்த நேரத்தில் நண்பன் கூட இருப்பது முக்கியமெனச் சொல்லி , ஒன்றும் பிரச்சனை இல்லை , நான் ரோஜாவுடன் செல்கிறேன் என்றாள் இனியா 

வசந்த் அரைமனதாகக் கிளம்பினான்.

வசந்த் தனியாகப் பதட்டத்துடன்  செல்வதைக் கண்டு விக்ரம் புருவம் சுருக்கினான். 

சிறிது நேரத்தில் மற்ற நண்பர்கள் கிளம்ப , 

“எனக்கு சிறிது நேரம் ஆகும்…’ எனச் சொன்னான் விக்ரம் . 

அவனுக்கு இனியா போவதை உறுதி செய்யாமல் , கிளம்ப மனசில்லாமல் போனைப் பார்த்தபடி இருந்தான் .

ஒவ்வொரு நபராகக் கிளம்ப , இனியா மட்டும் வராமல் , டென்ஷன் ஏற்றிக் கொண்டிருந்தாள் .

 “எந்தச் சூழ்நிலையில் யார் கூடப் பேசிக் கொண்டிருக்கிளோ ?” என நினைத்துப் போன் செய்யாமல் ,

“ எப்படிப் போகப் போகிறாய் இனியா ? “எனக் கேட்டு,  மெஸேஜ் மட்டும் அனுப்பினான். 

ஒவ்வொருவராகக் கிளம்ப , பார்ட்டியில் இனியாவும்  டென்ஷனாகத்தான் இருந்தாள் , பரத்தை அழைத்து வருகிறேன் என்று சென்ற ரோஜா  இருபது நிமிடமாகியும் வரவில்லை .

அவளே ரோஜாவைத் தேடிச் செல்ல , அங்கு பரத் மதுவின் உதவியால் நிலை குலைந்திருந்தான் . ரோஜா அவனை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தாள் .

ரோஜா இனியாவைச் சங்கடமாகப் பார்க்க , “ஸாரி இனியா . நாங்கள் கிளம்ப முடியாது என நினைக்கிறேன் , இங்கேயே அறை எடுத்துக் கொள்ளலாம் என யோசிக்கிறேன் . “

“நீ வேண்டுமானால் என் காரை எடுத்துக்கொண்டு போ, நான் காலையில் கால் டாக்ஸியில் வந்து கொள்கிறேன்…” 

“எனக்கு கார் ஓட்ட தெரியாது அக்கா…” 

ரோஜா  சுற்றிப் பார்க்க , பெரும்பாலும் கிளம்பியிருந்தனர் .

ரோஜா சங்கடமாய் , “ நீ வேண்டுமானால் , பரத் விசயம் சொல்லாமல்  ,  வீட்டில் என்னோடு இருப்பதாகச்  சொல்லி விட்டு ,  அறை எடுத்துக் கொள்கிறாயா?” என்று கேட்டாள்.

“பொய்யா ?” என இனியா திகைத்தாள் . 

“இது சரி வராது அக்கா, வீட்டில் பயந்து விடுவார்கள். ஒத்துக்கொள்ள மாட்டார்கள் …”

தனக்குள்ளே ,” முதலில் டென்ஷனாகாதே , என்ன செய்யலாம் என யோசி….” என்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு , அமைதியாகச் சிந்திக்க ஆரம்பித்தாள் இனியா .

பின் ரோஜாவிடம் , “அக்கா நீங்க இவரைப் பாருங்கள், நான் ஹோட்டல் டாக்ஸி ஏதேனும் கிடைக்குமா…? என்று பார்க்கிறேன் இல்லை கால் டாக்ஸி பிடித்து போய் கொள்கிறேன் “என்றாள் .

“  வெரி ஸாரி இனியா “ என்று ரோஜா வருத்தப்பட ,

“பரவாயில்லை , விடுங்க அக்கா சில சமயம் எதிர்பார்க்காதது நடக்கத்தானே செய்யும். எல்லாமே அனுபவம் தான்…” என்று சிரித்தாள்.

அத்தியாயம் 33 

பின் வரவேற்புக்குச் சென்று , டாக்ஸி விவரம் கேட்டாள் . அவசரத்தில் இருந்ததால் அங்கு அமர்ந்திருந்த விக்ரமை  இனியா கவனிக்கவில்லை.

“மேம் , அனைத்து டாக்ஸியும் ட்ராப் செய்ய போயிருக்கிறது , 5  நிமிடம் காத்திருங்கள்… எத்தனை மணிக்கு கிடைக்கும் என விசாரித்துச் சொல்லுகிறேன்…’ என்றார் வரவேற்பாளர் .

இவள் அதற்குள் கால்டாக்ஸி ஏதும் கிடைக்குமா, என ஆப்பில் தேடத் தொடங்கினாள் .

அப்போது விக்ரம் அருகில் வர , வழக்கம் போல் கவனிக்காமல் போனில் டாக்ஸியைத் தேடிக் கொண்டிருந்தாள் இனியா . 

கடுப்பான விக்ரம் ,”இனியா…” என அழைக்க  , குரலை கேட்டதும் , மனதில் ஒரு எதிர்பார்ப்போடு நிமிர்ந்து பார்த்தால் , ருத்ரமூர்த்தியாக விக்ரம் நின்றிருந்தான்.

என்னவென்று புரியாமல் விக்ரமைப் பார்க்க , “சுற்றி நடப்பதைக் கவனி என்று எத்தனை தடவை சொல்வது , நான் பக்கத்தில் வந்து கூப்பிடும் வரை  உனக்குத் தெரியவில்லை…” என்று கோபப்பட்டான் .

“இல்லை ஸார், கொஞ்சம் டென்ஷன்….” எனத் தயங்கியபடி , தனக்கு ஏற்பட்ட பிரச்சனையைச் சொன்னாள் .

“வா, நான் டிராப் செய்கிறேன்…” என்றான்.

இனியா  மனதில் நிம்மதியும் , பாதுகாப்பு உணர்வும் தோன்றியதை உணர்ந்தாள் . இருந்தும் ஒரு தயக்கம் இருக்க , அவள் தயங்க ,

 அவன் முறைத்த முறையில் , “ஓ.கே. ஸார் , போகலாம்…” என்றாள்.

காரில் ஏறியதில் இருந்து இனியா அமைதியாக வர, 

“ உன் போனை எடுத்து மெஸஜைப் பார் இனியா” 

இனியா யோசனையோடு போனைப் பார்க்க , அதில் விக்ரமின் மெஸேஜைப் பார்த்தவுடன் , கண்கள் விரிய  அவனை பார்த்து , “எப்படி ஸார்…?” என ஆர்வமுடன் கேட்டாள் .

“வசந்த்தோடு நீ போகவில்லை என்பதைக் கவனித்தேன் , அப்போதிருந்து நீ எப்படிப் போவாய் எனக் கவலை வந்து விட்டது . உனக்கு போன் செய்யலாம் என நினைத்தேன் , பின் யாரோடு பேசிக்கொண்டு இருக்கிறாயோ ? உனக்கு ஏதும் தர்ம சங்கடம் ஏற்படக்கூடாது என்பதால் மெஸேஜ் மட்டும் செய்தேன்” 

அவன் அக்கறையில் நெகிழ்ந்து  , பேச்சின்றி அசையாமல் அவனையே பார்க்க , 

அதற்குள் “இனியா , இனியா “என இரண்டு முறை அழைத்திருந்தான் . 

சுதாரித்த இனியா ,  சட்டென்று வெட்கச் சிரிப்போடு தலை குனிந்தாள்.

அவள் வெட்கத்தைப் பார்த்து ஃப்ரீஸ் ஆவது இவன் முறையானது .  பின்னால் கேட்ட ஹாரன் சத்தத்தில் நிதானத்திற்கு வந்தான் . 

“இனியா , இப்படியெல்லாம் ஷாக் கொடுக்காதே , ஏதேனும் விபரீதம் ஏற்படப் போகிறது…” என்று கேலி செய்தான் .

இனியா முறைக்க , இவன் கலகலவெனச் சிரித்தான். 

எப்போதும் மென் புன்னகையோடு மட்டுமே பார்த்திருந்தவளுக்கு , இந்த சிரிப்பு பெரிதும் கவர்ந்தது .

காரில் அமைதி நிலவ , அதை மாற்ற விக்ரம் , “கார் ஓட்டத் தெரியாமலே தான் , இந்த மாடல் கார் வாங்கப் போகிறாயா ? “என வம்பிழுத்தான் .

பழைய நிகழ்வு நினைவு வந்தவுடன் , அவனை முறைத்தபடி , “கார் வாங்கும் போது நாங்களும் ஓட்ட கத்துப்போம் “என அழகு காட்டினாள் .

“ஸாரி இனியா ,  அன்று அவசரப்பட்டு தப்பாகப் பேசிவிட்டேன் .”

 “அவன் ஏதாவது வம்பு செய்வான்” என நினைத்துக் கொண்டிருக்க, அவனுடைய ஸாரியில் திகைத்தாள்.

 பின் உஷாராகி , “ஸார் ,  இப்படி அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக டிராப் செய்வது , ஸாரி கேட்பது என்றால் நான் தாங்க மாட்டேன் . மீ பாவம்…” என்று குறும்பாகச் சிரிக்க ,

“உன்னன….”என்றவாறு கலகலவென சிரித்தான்.

“சரி ,சரி , ஜோக்ஸ் அபார்ட் , நாளை முதலில் உங்க ஏரியாவில் உள்ள நல்ல டிரைவிங் ஸ்கூலில் போய்ச் சேர்”

“கார் வாங்கிவிட்டு நான் கற்று கொள்கிறேன். அப்போது தான் கார் தொடர்ந்து ஓட்ட முடியும்… என்று காரணத்தைத் தேடிச் சொன்னாள் . 

 “உங்கள் வீட்டில் கார் இருக்குதானே  ?”

 இனியா தலையாட்ட , “ அப்புறம் என்ன? , டச் விட்டுப் போகாது, போய் ஒழுங்காகக் கற்றுக் கொள் “ 

 “பரவாயில்லை, நான் கார் வாங்கி விட்டே ஓட்டிக் கொள்கிறேன்…” எனப் பிடிவாதம் பிடித்தாள். 

இனியா பிடிவாதத்தைப் பார்த்து,  ஏதோ உள்குத்து இருப்பதைப் புரிந்து கொண்டான் விக்ரம் .

“என்ன விசயம் இனியா ? “

“ஒன்றுமில்லை ஸார்…” என்றாள் வேகமாக.

“இந்த ஒன்றுமில்லையே சொல்கிறது, ஏதோ விசயம் இருக்கிறதென்று , விசயத்தைச் சொல்…” என்று கட்டாயப்படுத்த ,

பின் தயங்கியபடி ,” நான் கல்லூரி முதல் வருடம் முடிந்தவுடன் , டிரைவிங் கற்று கொண்டேன். கொஞ்ச நாள் போனபிறகு , அம்மா சொல்ல சொல்ல கேட்காமல் , அப்பாவின் காரை எடுத்து ஆக்ஸிடென்ட் செய்து விட்டேன்.”

எப்படி ?எப்படி? என்றான் ஆர்வமாக ,

“வீட்டில் இருந்து காரை வெளியே எடுக்கிறேன் என்று காம்பௌன்ட் சுவற்றில் மோதிவிட்டேன். ஒழுங்காகக் கற்றுக்கொள்ளாமல் , அவசரப்பட்டு ஓட்டிச் சேதாரமாக்கிவிட்டேன் என அம்மாவிடம் செம டோஸ் . 

அன்று முடிவு செய்தேன் , “இனி என் காரில் தான் பழகவேண்டும் என்று…”

தன் சபதத்தை ஏற்ற இறக்கங்களுடன் சொல்ல , காரை ஓரமாக நிப்பாட்டி , வயிற்றைப் பிடித்துக் கொண்டு , வீட்டையே தாண்டவில்லையா…? என்று  சிரிக்க ,

கடுப்பான இனியா , “போதும் ஸார் , வாய் சுளுக்கிக் கொள்ளப் போகிறது…” என்று கடுகடுத்தாள் . 

இதைக் கேட்டு , விக்ரம் மேலும் சிரிக்க , ஒரு வேகத்தில் விக்ரமின் வாயை மூடினாள்.

இனியாவின் செயலால் , விக்ரம் திகைத்துப் பார்க்க, அந்த நிமிடத்தில் , தான் செய்த காரியத்தை உணர்ந்த இனியா , கையை படக் எடுத்து விட்டு , ஜன்னல் புறம் திரும்பிக் கொண்டாள் .

மனம் படபடவென அடிக்க , “எங்கே தன்னைத் தப்பாக நினைத்துக் கொள்வானோ?” என்று பதபதைத்தாள் . 

“என்ன பேசுவது…?” என்று தெரியாமல் தடுமாறினாள்.

“இனியா…” என விக்ரம் பேசத் துவங்க , இனியாவின் கைபேசி அழைத்தது , 

அவள் எடுத்து , “சொல்லுங்க அம்மா” என்றாள் .

“ஏன்டா லேட் குட்டிம்மா? எங்கம்மா இருக்க?”

“அண்ணா ஆர்ச் வந்து விட்டேன் அம்மா , இன்னும் பத்து நிமிடத்தில் வீட்டில் இருப்பேன் , அப்புறம் விக்ரம் ஸாரோட வரேன்…” 

“ஓ…! , சரி வாம்மா , போனை வைக்கிறேன்…” என்றார் . 

மீண்டும் விக்ரம் துவங்க , கைபேசி ஒலித்தது . “சொல்லு வசந்த்” 

“வீட்டுக்குப் போய்விட்டாயா இனியா? “ 

“இல்லை  வசந்த் ,  பத்து நிமிடத்தில் வீட்டில் இருப்பேன் , அங்கே ஓ.கே.யா?”

“இங்கு எல்லாம் ஓ.கே. , நண்பன் குடும்பத்தினர் வந்தவுடன் நான் கிளம்பிவிடுவேன். வீட்டுக்குப் போய் விட்டு மெஸேஜ் போடு…,” என்று வைத்தான்.

அதற்குள் இனியா வீட்டுத் தெருவை நெருங்கியிருக்க , வழி சொல்ல ஆரம்பித்தாள் ,  

“வலது பக்கம் கடைசியில் லைட் எரியுது பாருங்க , அதான் வீடு…” 

விக்ரம் வண்டி வேகத்தை குறைத்து , அவசரமாக ,” இங்கே பார் இனியா …” என்றான் .

இனியா திரும்ப ,  ரொம்ப யோசிக்காதே . இது ஒரு எதிர்வினை . இயல்பாக நடந்தது . இதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது . மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதே” என்று சமாதனப்படுத்த 

 இனியா ஆசுவாசத்துடன் தலையை ஆட்ட , அவள் வீடு வரவும் சரியாக இருந்தது . 

வாசலிலே கவிதாவும் கார்த்திகேயனும். காத்திருக்க , 

இனியாவுடன் விக்ரமும் மரியாதைக்காக , காரிலிருந்து கீழே இறங்கினான் .

“ இனியாவைக் கூடிக் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி என்றார் கார்த்திகேயன் . 

“வீட்டுக்கு வாங்க…” எனக் கவிதா அழைக்க , 

“ நேரமாச்சு , இன்னொரு முறை கட்டாயமாக வருகிறேன்…” என்று விக்ரம் கிளம்ப முனைய  , 

எங்களுக்கு இந்தத் துறையில் அனுபவம் இல்லை , உங்கள் வழிகாட்டுதல் இனியாவிற்கு மிகவும் உதவியாக உள்ளது . நன்றி…” என்றார் கார்த்திகேயன். 

நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம் என்றார் கவிதா . 

“இது சின்ன உதவிதான் . பெரிய விஷயமில்லை…”எனப் புன்னகைத்தான் .

 “சரி, நான் கிளம்புகிறேன்” என்று விடை பெற்றான் .

பின் கவிதா , என்னாச்சு குட்டிம்மா? , விக்ரம் ஸாரோட வந்திருக்கிறாய்?”

.இனியா பேசும் நிலையில் இல்லை, அவளுக்கு சிலது யோசிக்க வேண்டியிருந்தது. 

“ஒன்றும் பிரச்னை இல்லை அம்மா, காலையில் விவரமாகச் சொல்லுகிறேன் , இப்போது ரொம்பக் களைப்பாக இருக்கிறது , படுக்கப் போகிறேன்…” .

கவிதா மீண்டும் “இனியா… “ என்று ஆரம்பிக்க ,

 கார்த்திகேயன் இடையில் புகுந்து , “விடு கவி ,  போய் படுக்கட்டும் , காலையில் பேசிக் கொள்ளலாம்…” என்றார்.

“குட் நைட்…” என்று விட்டு படுக்கச் சென்றாள்.

தொடரும்….

Advertisement