Advertisement

அத்தியாயம் 24

விக்ரம் புதிய சேனல் காரணமாக மீண்டும் பெங்களூர் பயணம் மேற்கொண்டிருந்தான்.

“ருசிக்க ரசிக்க” அடுத்தடுத்த வாரங்கள் ஓளிபரப்பாக, டி.ஆர். பி எகிறிக் கொண்டிருந்தது . மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்தத்தடுத்த எபிஷோட்டிற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்து .  

அன்றைய  படப்பிடிப்பில் ரோஜா மிகவும் சந்தோஷமாக இருந்தாள் .

 இனியா அருகே வந்ததும் கட்டிக் கொண்டாள். தனக்கு சேனலில் ஆரம்பிக்கும் புதிய நடன நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்துள்ளதாகச் சொன்னாள்.

“எனக்கு நடனம் மிகவும் பிடிக்கும். அதுவும் இந்த சேனலில் வாய்ப்பு என்றால் எங்கோ போய்விடுவேன்…  ,என் இத்தனை வருட உழைப்பிற்குப் , போராட்டத்திற்குப் பலன் கிடைக்கப் போகிறது “என்று ஆர்ப்பரித்தாள்   ரோஜா

“சூப்பர் அக்கா…” என உற்சாகப்படுத்தினாள் இனியா.

“நீ…?” எனக் கேள்வி எழுப்ப , 

“அக்கா, நடனத்திற்கும் எனக்கும் ரொம்ப தூரம்ம்ம்…” என்று தூரத்தில் அழுத்தத்தைக் கொடுக்க,

“எப்படி இனியா, மீட்டர் கணக்கிலா…? “என்று நகைக்க,

“ஏக்கர் கணக்கில்… “என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு சொல்ல,

ரோஜா வாய் விட்டுச் சத்தமாகச் சிரிக்க , தளத்தில் இருந்த சில பேர் திரும்பிப் பார்க்க ,  ரோஜா சிரிப்பை அடக்கினாள் . 

“உன் கூட இருந்தால், மனசே லேசாகி விடுகிறது இனியா “

“ரெடி, ரெடி…  “என அர்ஜுனின் குரல் கேட்க, அவரவர் இடத்திற்குச் சென்று நின்றனர்.

அடுத்தடுத்த வாரங்களில் , இனியா ஷோ டாப்பர் ஆனாள் . 

சோஷியல் மீடியா முழுவதும் அவள் குறும்புகள் , சேட்டைகள் , முகபாவங்கள் என டிரண்ட்டானது . மீம்ஸ்கள்  பறந்தன . மொத்தத்தில் வைரலானாள் . இனியா ஆர்மி கூட உருவாகியது .

இனியா  வெளியே செல்லும் போது கவனிக்கப்பட்டாள் .  மொத்தத்தில் ஒரு ஸ்டாரானாள்.

ஞாயிறு காலை உணவின் போது காவியா ,” அக்கா , காலேஜில் எல்லோரும் உன் விசிறி ஆகிவிட்டார்கள் , இப்போது  எனக்குத் தனி மரியாதை தான் . உன் ஆட்டோகிராப்  வேண்டும் எனக் கேட்கிறார்கள்…” எனப் பெருமை பட்டாள் .

இனியா சிரித்தபடி இல்லாத காலரைத் தூக்க . இடையில் கவிதா , “ உன்னிடம் பேச வேண்டும் குட்டிம்மா , சாப்பிட்ட பின் பேசலாம்…” என்றார் .

சிறிது நேரத்தில் அனைவரும் ஹாலில் கூட “ நீ இப்போது எப்படி உணருகிறாய் ?” எனக் கவிதா கேட்டார்

“தெரியவில்லை அம்மா, ஒரு நேரம் பயங்கர சந்தோஷமாக இருக்கு, மற்றொரு நேரம் இந்தத் திடீர் புகழ் பயமாகவும் இருக்கிறது. “

“இந்த உணர்வு சரி தான். இதை எப்படிக் கையாளப் போகிறாய் ? என்ன யோசித்திருக்கிறாய் ?” 

 “ஒன்றும் யோசிக்க வில்லை அம்மா, ஜஸ்ட் என்ஜாயிங்க தி மொமெண்ட்” 

“அது ஓ.கே குட்டிம்மா , ஆனாலும் நீ அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்க வேண்டும் .  இந்தச் சூழ்நிலை , உனக்கு நண்பர்களை , துரோகிகளை , விரோதிகளை அடையாளம் காட்டும் . பல அதிர்ச்சிகளைக் கொடுக்கும் .  இந்த அதிர்ச்சிகளை எப்படிக் கையாளவது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்”

இனியா பாவமாகப் பார்க்க , “முதலில்  நான் சொல்வதைக் கவனமாகக் கேள் , உன்னை பார்த்துச் சிலர் பொறாமைப்படுவார்கள் , சிலர் கேலி செய்வார்கள் , சிலர் மகிழ்வார்கள் .  இவை அனைத்தையும் சரியாக அவர்கள் மனநிலையில் இருந்து புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.”  

இனியா குழப்பமாகப் பார்க்க , “உதாரணத்திற்கு ஒருத்தர் இந்தச் சின்னத்திரையில் பல வருடங்களாக , எல்லா திறமைகளோடு உழைத்தும் அவர் நினைத்த உயரத்தை அடைந்திருக்க மாட்டார் . ஆனால் உனக்கு உன்னுடைய ப்ளஸ்க்கு ஏற்றாற்போல் நிகழ்ச்சி  மிக விரைவில் அமைந்து , அதன் மூலம் புகழும் அடைந்துவிட்டாய்.  அப்போது அதற்கான விளைவுகள் இருக்கத்தானே செய்யும்…?” 

இனியா தெளிவடையாமல் பார்க்க ,  காவியா இடைபுகுந்து ,” மணிரத்னம் படத்தில் அறிமுகமான ஹீரோவிற்கும் , சிறிய இயக்குனர் , சிறிய படத்தில் அறிமுகமான ஹீரோவிற்கும் இடையில் இருக்கும் போராட்டம் , ஏற்ற தாழ்வுகள் , நடைமுறைச் சிக்கல்களைத்தான் அம்மா சொல்கிறார்” 

“சூப்பர் காவியா, டக்கென்று பிடித்துவிட்டாய்…” எனக் கார்த்திகேயன் பாராட்டினார். 

இனியா நார்மலாக இருந்திருந்தால் , ” நான் தான் டாப்…” எனச் சண்டைக்கு வந்திருப்பாள் . அவள் இருந்த குழப்பத்தில் அமைதியாக இருந்தாள் .

மேலும் கவிதா ,” இதை எப்படிப் பக்குவமாகக் கையாள வேண்டும் என யோசி இனியா…” 

இனியா முழிக்க , கார்த்திகேயன் அருகில் வந்து அவள் கைபிடித்து “ஒவ்வொரு விசயத்தையும் , அவர்கள் பார்வையில் அணுகினால் , பாதி டென்ஷன் குறைந்து விடும் குட்டிம்மா” , ப்பூ …. என்று விசயத்தை ஊதித் தள்ளி விடலாம் என்று ஆறுதல் படுத்தினார் .

“மேலும் புகழ் ஒரு போதை, அதை தலைக்குள் ஏற்றாமல் பார்த்துக் கொள் “என்றார் கவிதா .

காவியா நடுவில் புகுந்து , “ நான் ஒரு பஞ்ச் சொல்லட்டுமா?”என்று கேட்க  ,  

கவிதா ஆமோதிக்க , “ எல்லா புகழும் இறைவனுக்கே என ரஹ்மான் ஸாரைப் பின்பற்று இனியா …”

இனியாவும் அப்படியே ஆகட்டும் குருவே.. “என்று வாய் பொத்திக் குனிந்தாள் .

“ வாழ்க வளமுடன்” என்று காவியா கைகளைத் தூக்கி ஆசிர்வதிக்க…  என இருவரும் கலகலத்தனர் .

விளையாட்டு போதும்…. என்று இருவரையும் கண்டித்த கவிதா , முக்கியமான விசயம் இனியா… , கவனமாகக் கேள் என ஆரம்பித்தார் .

தொழில் முறை போட்டி பொறாமைகள் எப்படியாவது சமாளித்து விடலாம் . ஆனால்….. என்று கவிதா இழுக்க ,

“என்னம்மா?”

இந்தத் துறையை நீ தேர்ந்தெடுக்கும் போது பேசியது தான் ,  சமூக அழுத்தங்களை எப்படி கையாளப் போகிறாய்….?

“என்னம்மா பயமுறுத்துகிறீர்கள் ?”

கொஞ்சம் யோசி இனியா ,” இப்போது உன்னுடைய புகைப்படங்கள் இணையம் முழுவதும் பரவிக்  கிடக்கின்றன . இதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் . மேலும் உன்னை ப் பற்றி எப்படிபட்ட கருத்துக்களையும் , அசிங்கங்களையும் தங்கள் முகத்தை மறைத்துக்  கொண்டு , இணைய வழியாக அவர்கள் காழ்ப்புணர்ச்சியைக் கொட்டலாம் . அவர்கள் வக்கிரங்களை வெளிப்படுத்தலாம் . “

இனியா அதிர்ந்து பார்க்க , 

இது தான் எதார்த்தம் . இது மாதிரி நடக்கவும் வாய்ப்பு இருக்கு . அப்படி நேர்ந்தால் ,,.. அதைத் மன தைரியத்துடன் கையாள உன்னை தயார் படுத்திக் கொள் , பக்குவப்படுத்திக் கொள் “என்று கவிதா நீண்ட  உரையாற்றினார் .

உடனே கார்த்திகேயன் ,”  நீ தைரியமாக இரு , நாங்கள் எப்பொழுதும் உனக்கு துணையாக இருப்போம் “

“நன்றி அப்பா, நன்றி அம்மா” என்று கட்டிக் கொண்டாள் .

மனம் தெளிவானாள் இனியா . எதையும் எதிர்நோக்க தயாரானாள். சபை கலைய , இனியாவும் , காவியாவும் தங்கள் அறைக்குச் சென்றனர் .

கவிதாவும் , கார்த்திகேயனும் மட்டும் இருக்க , சரியான விசயத்தை , சரியான நேரத்தில் பேசினாய் கவிதா , குட்” என்று பாராட்ட ,

“ இல்லைங்க , கல்லூரியில் இந்த மாதிரி பிரச்சினைகள் பலவற்றைக் காண்கிறோம் . பெற்றோர்கள் , சொந்தங்கள் , நண்பர்கள் சொல்கிறார்கள் என்று   படிப்பைப்  பற்றிய புரிதல் இல்லாமல் எடுத்து விட்டு , அதைச் சரியாகப் படிக்க முடியாமல் , பின் அதனால் வரும் விளைவுகளைச் சமாளிக்க முடியாமல் விரக்தி , மன அழுத்தம் போன்றவற்றில் சிக்கித் தவிக்கிறார்கள் . 

அதனால் தான் இனியா மீடியா துறைக்கு வர வேண்டும் என்று சொன்ன போது அவ்வளவு யோசித்தேன்….”

இன்று மீண்டும் ஒருமுறை பேசி தெளிவு படுத்தினேன் . 

“நீ சொல்வது சரி தான்” எனக் கார்த்திகேயனும் ஆமோதித்தார்.

அத்தியாயம்  25

அன்றைய படப்பிடிப்பின் போது  கார்த்திக் வந்து ,” நீ ஓவர் நைட்டில் ஒபாமாகிவிட்டாய் “ எனப் பொறாமையோடு பேசினான் .

 “ நீ ரொம்ப லக்கி…” எனப் பாடகர் வந்து பெருமூச்சு விட்டார். 

“ரொம்ப சந்தோஷம் இனியம்மா…” என ராஜேஷ் தேடி வந்து பாராட்டினார்.

சின்னத்திரை நடிகை மதி கூட இனியாவிடம் , “மாய்ந்து மாய்ந்து சமைப்பது நாங்கள் , ஆனா நீ ஈஸியா பெயர் வாங்கி விட்டாய்…” எனப் புலம்பினாள் .

பெற்றோரின் வழிகாட்டுதலால் , அவள் அனைத்தையும் சின்னச் சிரிப்போடு கடந்தாள்.

“ இதே மாதிரி நல்ல நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து செய்து, இதைத் தக்க வைத்துக்கொள்… “ என்றாள் ரோஜா .

“ஓ.கே… , நன்றி அக்கா. ஏதாவது ஆலோசனை தேவைப்பட்டால் உங்களைக் கேட்கிறேன்…” 

இந்த வெற்றி , இனியாவிற்கு நண்பர்களை , நலம் விரும்பிகளைக் கண்டு கொள்ள உதவியது. அனுபவங்கள் பாடங்களாகின.

இரண்டு வாரங்கள் சென்றிருக்க , அன்று “செல்லமே” படப்பிடிப்பு தளத்தில் , அனைவரும் கூடி இருந்தனர் .இனியாவே பேச்சைத் தொடங்கினாள் .

“ஸாரி பாஸ், உங்களோட ஜட்ஜ்மெண்ட் சரி…” என ஒத்து கொள்கிறேன்.

“விடு இனியா , உனக்குப் புரிந்துவிட்டது அல்லவா , அது போதும்…” என்றான் அர்ஜுன் .

“இல்லை பாஸ், இது  உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது , ஆனால் நான் என் தவறை ஒப்புக் கொள்ள வேண்டும்…” என விடாப்பிடியாகப் பேசினாள்.

“ செண்ட்டிமெண்ட் தாங்கவில்லை , இரண்டு பேரும் ஃபிரீயா விடுங்க…” என வசந்த்  தீர்ப்பு சொன்னான்.

பிறகு பேச்சு வேறு விசயங்களுக்குச் சென்றது. கிளம்பும் போது ,“ அக்கா ,அக்கா…” என வசந்த் ஓட்ட, 

கடுப்பான இனியா , அவனை அடிக்க ஓட , எதிரே வந்த விக்ரம் மீது மோதி நின்றாள்.

“ஸாரி , ஸாரி சார்…” என இனியா சொல்ல,  விக்ரமை எதிர்பார்க்காததால் மற்ற அனைவரும் சிலை போல் திகைத்து நின்றனர்.

இந்தக் காட்சியால் விக்ரம் அதிர்ந்தான் . அர்ஜுன் , இனியாவின் நட்பை நன்கு அறிந்திருந்தான் . அதனால் டென்ஷன் இல்லை . 

ஆனால் “ வசந்த்தோடு இருக்கும் நட்பு , எந்த வகை?” என்பதில் குழம்பினான் . பெரிய வியாபார சாம்ராஜ்ஜியம் நடத்துபவன் என்பதால் , அதிர்வைக் காட்டாமல் நன்கு சமாளித்தான் .  

சாதாரணமாக இதையெல்லாம் கண்டுக்க மாட்டான் , ஃபன் என விட்டு விடுவான். ஆனால் அவனுக்கு விடை உடனே தெரிய வேண்டி இருந்தது . 

அதனால் ,”என்ன நடக்கிறது அர்ஜுன்? “ எனக் கேட்டான் .

உடனே இனியா இடையில் ,” சார் , ஒன்றும் இல்லை சின்ன  ஃபன்…” என்றாள்.

“ஆர் யூ அர்ஜுன்? எனக் கேட்க ,

“ஏன் நடுவில் புகுந்து பேசி, திட்டு வாங்குகிறாள்?” எனப் புரியாமல் பார்த்தான் வசந்த்.

அர்ஜுன் வாய்ப்பு கிடைத்தால் சும்மா விடுவானா ? இரண்டு மாதம் முன்பு போட்ட சண்டையில் ஆரம்பித்து , இப்போது கேட்ட மன்னிப்பு வரை சபீனா போட்டு விளக்கினான்.

இப்போது வசந்த் , நெஞ்சைப் பிடித்து நின்றான்.

அனைத்தையும் கேட்ட விக்ரம் ,” படப்பிடிப்பை முடித்துவிட்டு , 5 மணிக்கு என்னை கேபினில் வந்து பார் இனியா …”என ஆணையிட்டுச் சென்றான்.

இனியா வசந்தைப் பார்த்து ,” எஸ் சார் , ஓ.கே சாருக்கு அர்த்தம் புரிகிறதா?” எனக் கேட்டாள்.

 “இப்படியா எல்லாத்தையும் உளறுவாய்? யோசிக்க மாட்டாயா அர்ஜுன்? “ என்று  வசந்த் திட்டினான்.

அதற்கு அர்ஜுன் , “என்ன மாயமோ , மந்திரமோ தெரியலை , விக்ரம் ஸார் கேட்டால் அனைத்தையும் சொல்லி விடுகிறேன் அபிராமி… அபிராமி…” என்று குணா கமல் பாணியில் பேச ,

கடுப்பான வசந்த் , “ யார் இந்த அபிராமி எனக் கவனி அனு “ என்று போட்டுக் கொடுத்தான் .

அனு ஏற்கனவே அவன் மீது கோபத்தில் இருக்க , வசந்த் பேசியதைக் கேட்டு , கண்ணால் எரித்தாள்.

“கவனம் அனு , தல கேட்டால் முதல்இரவில் நடந்ததைக் கூட சொல்வார் நம்ம பாஸ்…” என இனியா கடுப்படிக்க , 

“ச்சீ…, ஸார் அப்படியெல்லாம் கேட்கமாட்டார்…” என்று அர்ஜுன் சொல்ல ,

மேலும் சூடான இனியா , “ ஜாக்கிரதை அனு , இப்போது கூட நான் சொல்ல மாட்டேன் “ என்று சொல்லவில்லை . தல கேட்கமாட்டார் என்று தான் சொல்கிறார்…” என விளக்க ,

கோபத்தில் அனு வெளிநடப்பு செய்ய , ”  உண்மையைத் தானே சொன்னேன் , ஏன் கோபப்படுகிறாள்?” என இனியாவிடம் விளக்கம் கேட்க , 

“ஐய்யோ பாஸ்… “ எனத் தலையில் கை வைத்தாள்.

“அப்புறம் சொல்கிறோம், இப்போது அனுவைப் போய்  சமாதானப்படுத்து…” என வசந்த் அனுப்பி வைத்தான். 

“என்ன இனியா செய்யப் போகிறாய்?” என்று வசந்த் கவலையுடன் கேட்க ,

உள்ளுக்குள் பயம் இருந்த போதும் , வெளியே , “எவ்வளவோ  பார்த்துட்டோம் ,  இதைப் பார்க்க மாட்டோமா…? என்று வீர வசனம் பேச ,

“தெரியும் தெரியும்… பாடி ஸ்ட்ராங் , பேஸ்மெண்ட் வீக் “என திரும்பிக் கலாய்த்தான்.

கேன்டீனில் அனு , அர்ஜுனின் தவறை விளக்க , யோசிக்காமல் பேசியதை நினைத்து மிகவும் வருந்தினான் . 

பின் இனியாவிடம் வந்து மன்னிப்பு கேட்டான் , “நான் கூட வருகிறேன் “என்றான் அர்ஜுன்.

“விடுங்க பாஸ், நான் பார்த்துக் கொள்கிறேன்” 

“ஸாரி இனியா  , விக்ரம் ஸார் கொடுத்த வாய்ப்பு , அதனால் அவர் திறமைக்குக் கிடைத்த மரியாதை , புகழ் , மேலும் விக்ரம் ஸார் மீது உள்ள அபிமானம் , எல்லாம் சேர்ந்து உளற வைத்து விடுகிறது. இல்லையென்றால் நிச்சயம் உன்னை விட்டுக் கொடுத்திருக்க மாட்டார்…” என்றாள் அனு.

“தெரியும் அனு ,  நம்ம பாஸ் தானே… , விடு , டெக் இட் இஸி…” என்றாள் . ஆனால் கொஞ்சம் கவனம்…. என்று குறும்பாகச் சிரிக்க ,

அனு இரண்டு அடி போட்டாள் .

பின் அர்ஜுன் கிளம்ப , படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.

தொடரும்…..

Advertisement