Advertisement

அத்தியாயம் 21

மீண்டும் ஷுட்டிங் ஆரம்பித்தது… , பரபரப்பாக சமையல் நடந்து கொண்டிருந்தது.

இனியா ரோஜாவைப் பார்க்க, அவள் முகம் தெளிந்து இருந்தது ,

 பரத் சென்றிருந்தான் . இனியாவிற்கு ஏனோ  நிம்மதியாக இருந்தது.

இடைவேளையில் ரோஜா , இனியாவை அழைத்து , “நாம் இன்று சேர்ந்து போகலாம்…” என்றாள் .

“உங்களுக்குத் தொந்தரவு இல்லையே அக்கா…” என்று இழுக்க,

 “ஒன்றும் பிரச்சனை இல்லை இனியா , சேனல் காரை வேண்டாம் என்று சொல்லி விடு . நான் உன்னை ட்ராப் செய்து விட்டு , அப்புறம் வீட்டிற்குப் போகிறேன்…” என்றாள்.

ஷுட்டிங் முடித்துவிட்டு கிளம்ப , ரோஜா காரை ஓட்ட , இனியா கதை பேசிக்கொண்டே வந்தாள் . 

இடையில் , ”   இரண்டு பேருக்கும் ஒன்றும் பிரச்சனை இல்லையே அக்கா …” எனக்  கவலையுடன் கேட்க ,

“நத்திங் சீரியஸ் இனியா , ஜஸ்ட் எ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்…” என்று புன்னகைத்தாள் .

 பின் இந்தத் தொழிலில் எல்லோருடனும் கலகலப்பாகப் பேசினால் தான் வாய்ப்பு கிடைக்கும் ,

 மேலும்  இத்துறையில்  இது சகஜம் என்பதையும்  புரிய வைத்தேன் . சரியாகிவிட்டது…..” என்று கண்சிமிட்டினாள் .

“இப்போது தான் நிம்மதி அக்கா…” என்றபடி கதையளக்க ஆரம்பித்தாள்.

இனியாவை வீட்டில் இறக்கி விட்ட பின் , “முடிந்த வரை ,  சேர்ந்தே போய் வருவோம் இனியா …. உன்னோடு பேசிக் கொண்டிருந்தது , ரொம்ப ரிலாக்ஸ் ஆக இருக்கு…” என்று சிரித்தாள் ரோஜா .

“என்னை வைத்துக் காமெடி கிமெடி பண்ணலையே…| என வடிவேல் பாணியில் கேட்க,

ரோஜா  வெடித்துச் சிரித்தாள் .

இனியா வீட்டிற்குள் அழைக்க , “இன்னொரு நாள் வருகிறேன் “ எனக் கிளம்பினாள். 

மறுநாள் ஷூட்டிங் நல்லபடியாக முடிந்தது . 

திங்கள் படப்பிடிப்பு இல்லாததால் , இனியா வீட்டிலே இருந்தாள்.

 மாலை ரோஜா போன் செய்து ,  எனக்கு நாளைக்குப் ப்ரோமோ ஷூட்டிங் …? உனக்கு எப்போது… ? சேர்ந்து போவோமா?”  என விவரம் கேட்டாள்.

” எனக்கு ப்ரோமோ பற்றி எந்த போனும் வரவில்லை, மேலும் எனக்கு ‘செல்லமே’ ஷூட்டிங் இருக்கிறது அக்கா” 

“ஓ….! உனக்கு  ‘செல்லமே’ ஷுட்டிங் இருப்பதால் போன் வரவில்லை” என்று நினைக்கிறேன். 

“உனக்கு வேறு ஷெடியூல் இருக்கும்” என்று பேசி விட்டு போனை வைத்தாள் ரோஜா.

ரோஜாவிடம் பேசிய பின் , “ஏன் தன்னை அழைக்க வில்லை “ எனக் குழம்பினாள் . 

“அர்ஜுனுக்குப் போன் செய்வோமா?” என யோசித்தாள் . 

 பின் ஷெடியூல் காரணமாக அழைப்பு லேட்டாக வர வாய்ப்பு உள்ளது என்பதும் புரிந்தது . 

“ரிலாக்ஸ் இனியா …” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு சமாதானமானாள் . 

“நாளை பாஸைப் பார்க்கும் பொழுது கேட்டு விடுவோம்… “என முடிவு செய்தாள்.

“ ஃபிரீயா விடு …” மோடுக்கு மாறினாள் . இரவு உணவின் போது காவியாவிடம் வம்பு வளர்த்து விட்டுப்  படுக்கச் சென்றாள்.

மறுநாள் காலை “செல்லமே’ படப்பிடிப்பு , எப்போதும் போல  அனு , வசந்த் , குட்டீஸோடு  ஜாலியாகப் போனது .

 மதியம் உணவு வேளையில் அர்ஜுன் இணைந்து கொண்டான். அனைவரும் கலகலத்தபடி சாப்பிட , இனியா அர்ஜுனிடம் ப்ரோமோ ஷூட்டிங் பற்றிய விவரம் கேட்டாள் .

 “நேற்று விக்ரம் ஸாரைப் பார்க்க முடியவில்லை, லிஸ்டையைச் செயலாளரிடம் தான் வாங்கினேன். அதில் உன் பேர் இல்லை ,  விடுபட்டிருக்கும் என நினைக்கிறேன் , இன்று அல்லது நாளை பார்ப்பேன் . அப்போது கேட்டுகிறேன்…” என்றான் அர்ஜுன் .

இதைக் கேட்டவுடன்  டென்ஷன் ஆன இனியா , “யார்? விக்ரம் ஸாராவது மறப்பதாவது ? போங்க பாஸ் …,  இந்த கம்பி கட்டற கதையெல்லாம் , வேற யார்கிட்டயாவது சொல்லுங்க…” எனப் பாய்ந்தாள் .

இடைமறித்துப் பேச வந்த அர்ஜுனிடம் ,  “ அவர் பேச்சைக் கேட்டு , நான் உடனே நிகழ்ச்சிக்கு ஒத்துக் கொள்ளவில்லையல்லவா ? அதனால் தல பழி வாங்குகிறார்…” என்று கொந்தளித்தாள் .

“நான்தான் இப்போது தமிழ்நாட்டில் பல வீடுகளில் அவர்கள் வீட்டுப் பெண் மற்றும் பல குட்டீஸ்களுக்கு செல்ல அக்கா தெரியுமா? என்னைப் பயன்படுத்தாவிட்டால் உங்கள் நிகழ்ச்சிக்குத்தான் நட்டம் , எனக்கு ஒன்றும் இல்லை…” என்று படபடத்தாள்.

அனு இடைபுகுந்து , “ரிலாக்ஸ் இனியா , விக்ரம் ஸாரிடம் பேசினால் தெரியப் போகுது , இப்போது நிம்மதியாகச் சாப்பிடு , நாளை பேசிக்கலாம் “ என்று பஞ்சாயத்தை முடிக்கப் பார்த்தாள் .

விக்ரமைப் பற்றி பேசியதைப் பொறுக்காத அர்ஜுன், “தப்பாகப் பேசாதே ,  ஸார் அப்படிப்பட்டவர் இல்லை ,  அவர் எது செய்தாலும் சரியாகத் தான் இருக்கும்… “ என நேரங்காலம் தெரியாமல் துதி பாடி ,  இனியா , அனுவின் கோபப் பார்வைக்கு ஆளானான்.

இந்தச் சூழ்நிலையை மாற்ற எண்ணிய வசந்த் , இனியாவைப் பார்த்து , “அக்கா… , அக்கா…” என மாயாவி படத்தில் நடிகர் சூரியா சொல்வது போல் செய்து காட்ட ,

 இனியா முறைக்க , அந்த இடமே சிரிப்பால் நிரம்பியது .

அத்தியாயம் 22

அர்ஜுனால் செவ்வாயன்று விக்ரமைப் பார்க்க முடியாமல் போக , 

விக்ரம் செயலாளரிடம் மறுநாள் சந்திப்பதற்கு , அப்பாயிண்மெண்ட் வாங்கினான்.

மறுநாள் 12 மணிக்கு விக்ரமைச் சந்திக்கச்  சென்றான்.

“ ஸார்…” என ஆரம்பிக்க , விக்ரம் கைகாட்டி இருக்கையில் அமரச் சொன்னான்.

பின் தண்ணீரை அவனிடம் தள்ளி விட்டு ,” என்ன இனியா வம்பு செய்கிறாளா?”  எனக் கேட்டான்.

இதைக் கேட்டவுடன் கண்கள் விரிய ,  அர்ஜுன் நம்பமுடியாமல் , தன்னை அறியாமல் “ஆமாம்…” என்று தலையாட்டினான் .

“எப்படி சார் கண்டுபிடித்தீர்கள்? “ எனக் கேட்க , அதற்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாகத் தந்தான்.

“ஏன் ஸார்?” என்று கேட்க ,

 “ட்ரஸ்ட் மீ அர்ஜுன் , இனியா தான் ஷோ டாப்பர் , அதனால் தான் அவளைச் ஸர்ப்ரைஸ் எலிமெண்ட்டாக வைத்திருக்கிறேன் . இந்த ஷோ முடிவில் பெரிய உயரத்தை அடைவாள்…” 

“ஓ.கே. சார்…” என அர்ஜுன் விடைபெற , 

“எனி கொஸ்டின்…?”

“நோ மோர் ஸார், ஐ டிரஸ்ட் யூ…” என்று விடை பெற்றான்.

மதியம் அனைவரும் காத்திருக்க… , அர்ஜுன் இணைந்து கொண்டான் . 

“விக்ரம் ஸார் என்ன சொன்னார்?” என்று அனு ஆர்வமுடன் கேட்க , 

“இனியாதான் இந்த நிகழ்ச்சியின் “ஸ்ர்பரைஸ் எலிமெண்ட் “என்றார் .  மேலும் இனியாவிற்கு இந்த நிகழ்ச்சி மூலம் நல்ல பெயர் கிடைக்கும் என்பது ஸாரோட ஆணித்தரமான நம்பிக்கை…” 

“ஓ…! என அனைவரும் அமைதி காக்க ,

 தல சொன்னவுடன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், “எஸ் சார் , ஓ.கே சார் என வந்திருப்பீர்களே…” எனப்  பொங்கினாள்.

அதற்கு அர்ஜுன் , “ஐ டிரஸ்ட் கிஸ் ஜட்ஜ்மெண்ட் இனியா…” என வேகமாகச் சொன்னான்.

வசந்த் சூட்டைத் தணிக்கும் பொருட்டு , “ இனியா உன் கோபம் நியாயம் இல்லாதது , அர்ஜுன்  அவனோட எல்லைக்குள் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து விட்டான் . தேவையில்லாமல் வார்த்தையை விடாதே ” என்று தடுத்தான்.

“அதில்லை… , பாஸ் எனக்காகப் பேசியிருக்க வேண்டும் அல்லவா…? ” என மீண்டும் இழுத்தாள்.

அதற்கு அர்ஜுன் , “முதலில் உன்னை ஏன் இந்த நிகழ்ச்சியில் இனணத்தார் “ எனச் சண்டை பிடித்தாய் , இப்போது ப்ரோமோவில் இல்லை” எனக் கோபப்படுகிறாய் . உன்னைக் கட்டாயமாகக் கலந்து கொள்ள வேண்டும் “ என்று சொன்ன ஸாருக்கு….  உன்னைப் ப்ரோமோவில் சேர்க்காததற்குச் சரியான காரணம் இருக்கும் .” ஐ டிரஸ்ட் ஹிம்…” என மீண்டும் வலியுறுத்தினான் . 

அப்போது அனு , “ நமது கையில் இல்லாததற்கு ஏன் சண்டை போட வேண்டும்  இனியா  ,  மேலும் நிகழ்ச்சி ஒளிபரப்பானவுடன் , விக்ரம் ஸார் மேல் யார் வைத்த அபிப்பிராயம் சரி என்று தெரிந்து விடும் . அதனால் இந்தப் பிரச்சனையை விடுங்கள் “ என்று சமாதனப்படுத்தினாள் .

“எஸ்… , நமக்குள் எதற்கு தேவையில்லாத சண்டை . ஃபரீயா விடுங்கள்” என அர்ஜுன் மற்றும் இனியாவைப் பார்த்து வசந்த்தும் சொன்னான்.

“சரி…” என்று அர்ஜுன் வேகமாகத் தலையாட்ட ,

“ம்ம்…” என்று இனியா அரைமனதாக ஒத்துக் கொண்டாள் .

மாலை ஷூட்டிங் முடிந்து , வீடு திரும்பிய பின்னும் மனம் தெளிவில்லாமல் சோர்ந்திருந்தாள் . அம்மாவிடம் டீயை  வாங்கி அமைதியாகப் பருகினாள்.

அவளின் முகத்தில் இருந்த குழப்பத்தைக் கவனித்த கவிதா , என்னவென்று விசாரிக்க.. ? நடந்தவற்றை விளக்கினாள் .

இனியாவின் வாதம் முழுவதையும் பொறுமையாகக் கேட்ட பின் ,  “ ரொம்ப சந்தோஷம் குட்டிம்மா , உனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள் , நானும் இதே அறிவுரையைத் தான் சொல்லியிருப்பேன் .

உடனே இனியா , “பாஸ் எனக்கு சப்போர்ட் செய்திருக்க வேண்டும்  என நினைப்பது தப்பாம்மா?“

 “இதை நீ பார்க்கும் கோணத்தில் யோசிக்கக் கூடாது. அப்பா உன்னை ஒரு விசயத்தைச் செய்யச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம் , உனக்கு அந்த விசயம் பிடிக்காமல் இருக்கலாம் இல்லை புரியாமல் இருக்கலாம் , உடனே என்ன செய்வாய்  ?  அப்பாவிடம் விவரம் கேட்பாய்  , இல்லையா ?” 

 அதற்கு அப்பா , “ இப்போது இதைச் செய் , உனக்கு இது இப்போது புரியாது , பின்னே விளக்குகிறேன்” என்று சொன்னால் , உடனே செய்வாய் தானே?

“ஆமாம்” என்று இனியா தலையாட்ட ,

“அதே போல் அர்ஜுனுக்கு விக்ரம் மீது பெரிய அபிமானம் இருக்கிறது, அதனால் உடனே ஒத்துக் கொண்டான். இதில் உன்னை விட்டுக் கொடுக்கிறான் என்ற பேச்சுக்கே இடமில்லை , இது வேறு விசயம்  , அது வேறு விசயம் ,  நீ தான் தேவையில்லாமல் குழம்புகிறாய்…” எனப் பொழிப்புரை ஆற்றினார் . 

இனியா மனம் தெளிந்தாள் . 

“நன்றி அம்மா. இப்பத்தான் மனசு லேசாக இருக்கிறது…” என்று அம்மாவைக் கட்டிக் கொண்டாள்.

மேலும் , “இப்போது உனக்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெரியும் என நம்புகிறேன்…” என்று கவிதா தானே தீர்வைச் சொல்லாமல் , இனியாவை யோசிக்க வைத்தாள்.

இனியா அறைக்குச் சென்று ரெஃப்ரஷ் ஆன பிறகு,  அர்ஜுனுக்கு , “ ஸாரி பாஸ் , எமோகஷனல் ஆகி விட்டேன் . “மன்னிச்சு … மன்னிச்சு…” எனப் பதிவு போட்டாள்.

அப்போதுதான்  அனுவிடம்  அர்ஜுன் , “ இனியா புரியாமல் பேசுகிறாள்…’ என்று புலம்பிக் கொண்டிருந்தான் . இனியாவின் பதிவைப் பார்த்ததும் சந்தோஷமானான் .

உடனே,  “ பல்பு லேட்டாக எரிந்து இருக்கிறது போல …” என ஹாப்பி ஸ்மைலியை அர்ஜுன் தட்டி விட்டான் .

அதைப் பார்த்தவுடன் , உடனே அர்ஜுனை அழைத்து , “ ஸாரி பாஸ் , ஸாரி பாஸ்…’  என விடாமல் இனியா  புலம்ப , 

அனு போனை வாங்கி , “விடு இனியா , இந்த மாதிரி சின்னச்சின்னச் குழப்பங்கள்தான் உங்கள் நட்பை ஆழமாக்கும் .  ஃபிரீயா விடு .”

அதற்குள் அர்ஜுன் போனை பிடுங்கி ,” எல்லாம் மன்னிச்சாச்சு , இனிமேலாவது என் ஆளோடு நிம்மதியாகக் கடலை போட விடு . இவ்வளவு நேரம் உன்னைப் பற்றித் தான் பேசிக்கொண்டிருந்தேன்…” எனச் சொல்ல ,

“ஓ.கே. பாஸ் , என்ஜாய்…” எனச் சிரிப்புடன் போனை வைத்தாள். 

“இனியா புரிந்து கொள்வாள் என்று சொன்னேன் இல்லையா… இப்போது நிம்மதியாக இருங்கள்…” என அனு சிரித்தாள். 

அந்தச் சிரிப்பு அவனையும் பிடித்துக் கொள்ள , உல்லாச மனநிலைக்கு மாறினார்கள்.

வசந்த்திற்கும் ஒரு நன்றிப் பதிவைத் தட்டி விட்டு நிம்மதியாக உறங்கினாள் இனியா .

இவர்கள் நட்பு , விட்டு கொடுத்தல் , தட்டிக் கேட்டல் , துணை நிற்றல் என்று ஆழமாக அழகாக வளர்ந்தது .

அத்தியாயம் 23

அந்த இரண்டு வாரங்களும் சேனல் செம பிஸியாக இருந்தது . “ருசிக்க ரசிக்க” ப்ரோமோ ஷுட் , ஆன்லைன் விளம்பரங்கள் , முக்கிய இடங்களில் போஸ்டர் விளம்பரங்கள் குறித்து முடிவு எடுப்பது என விக்ரம் செம பிஸியாக இருந்தான்.

“ருசிக்க ரசிக்க” நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி முடிவானதால் அர்ஜுனும் பரபரப்பாக இருந்தான். சில நாட்கள் மட்டுமே மதிய இடைவேளையில் இணைந்து கொண்டான்.

டிவியில் நிகழ்ச்சிக்கு இடையிலும் ப்ரோமோவும் அடிக்கடி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்து . 

மக்கள் மத்தியில் “ருசிக்க ரசிக்க “ நிகழ்ச்சிக்கு ஒரு எதிர்பார்ப்பும் தோன்றி இருந்தது .

 எல்லாம் விக்ரம் எதிர்பார்த்த மாதிரி சரியாக சென்று கொண்டிருந்தது .

வழக்கம் போல இனியா வார நாட்களில் ‘செல்லமே’ ஷூட்டிங் , இறுதி நாட்களில்  “ருசிக்க ரசிக்க” நிகழ்ச்சி என ஓடிக் கொண்டிருந்தாள்.  சமையல் நிகழ்ச்சியின் மூலம் ரோஜாவுடன் மிகவும் நெருக்கமானாள். 

ரோஜாவிற்குச் சின்னதிரையில் வெற்றி பெற வேண்டும் என்பது கனவாகவும் , ஏன்  வெறியாகவும் இருந்தது . அதற்காக அவள் கடந்து வந்த பாதை , உழைத்த உழைப்பு , விடாமுயற்சியைக் கண்டு இனியா அசந்து போயிருந்தாள். 

ரோஜாவின் அனுபவங்கள் இனியாவிற்கு ஆச்சரியமாகவும் , பல நேரங்களில் அதிர்ச்சியாகவும் இருந்தது . தான் எவ்வளவு எளிதாகச் சின்னத்திரைக்குள் வந்துவிட்டோம் என்பதும் புரிந்தது . அம்மா சொன்ன “நல்ல நண்பர்கள்” என்ற வார்த்தையின் அர்த்தமும் புரிந்தது.

பரத் அடிக்கடி படப்பிடிப்பு தளத்திற்கு வந்தான் . சில நாள் முடிவு வரை இருந்து , ரோஜாவை அழைத்துச் சென்றான்  , சில நாட்கள் சும்மா கொஞ்சம் நேரம் இருந்து , பேசிவிட்டு செல்வான் .

இனியா அவனைப் பார்த்து சிரிப்பதோடு நிறுத்திக் கொண்டாள் . ஏதோ தயக்கம் அவளை நெருங்க விடவில்லை.

சில நேரங்களில் படப்பிடிப்புத் தளத்தில் ,  விக்ரமைப் பார்த்தால் சண்டைக் கோழியாகச் சிலிர்த்ததுக் கொண்டு சென்றாள்.

விக்ரமும் இனியாவின் இந்தச் சண்டைக்காரி அவதாரத்தை ரசித்தான் . பொதுவாக இவனுடைய  பதவி , ஆளுமையை முன்னிட்டு பணிந்து விடுவார்கள் . இவள் முறைத்துக் கொண்டிருப்பது பிடித்து இருந்தது .

ப்ரோமோவில் நடிக்கவில்லை என்பதால் இப்படி இருக்கிறாள் என விக்ரம் நினைத்தான் , அது அவனுக்குச் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றியது . அதனால் இதை அவன் கருத்தில் கொள்ளவில்லை , நிகழ்ச்சி ஒளிபரப்பானவுடன் , எல்லாம் சரியாகி விடும் என விட்டு விட்டான்.

உண்மையில் இனியாவிற்கு , ப்ரோமோவில் கலந்து கொள்ளவில்லை என்பது பிரச்சனையில்லை , இதன் பொருட்டு பாஸோடு ஏற்பட்ட மோதல் தான் கோபத்திற்குக் காரணமாக இருந்தது .

அன்று சனிக்கிழமை , “ருசிக்க ரசிக்க” நிகழ்ச்சி முதல் எபிஸோட் ஒளிபரப்பாகியது . 

இனியாவிற்குச் ஷுட் இருந்ததால் இடைவேளையில் சிறிது நேரம் தான் ஷோவைப் பார்க்க முடிந்தது . நன்றாக இருப்பதாகத் தோன்றியது . 

நாளை குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.

ஞாயிறு காலை , சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது , குடும்பத்தினரிடம் , “நிகழ்ச்சி எப்படி இருந்தது?” என வினவினாள்.

காவியா “ சூப்பர் அக்கா , எனக்கு ரொம்ப பிடித்திருந்தது… “ என்று  பாராட்டினாள் 

“ஓ…! ,  நாம் சேர்ந்து இணையத்தில் பார்க்கலாமா? எனக் கேட்க , 

“ஆடு தானாக வந்து தலையைக் கொடுக்குது ,  பிரியாணி போட்டு விட வேண்டியது தான்…” என நினைத்தபடி ,

 “கட்டாயமாக அக்கா…” என அப்பாவைப் பார்த்துக் கண் அடித்தாள் காவியா.

கவிதா சிரித்தபடி  , “சாப்பிட்டு விட்டு அனைவரும் பார்க்கலாம்… “ என்றார்.

அனைவரும்  சேர்ந்து பார்க்க , இனியா சீதாம்மாவிடம் திட்டு வாங்கும் பொழுதெல்லாம் ஒரே சிரிப்பு  , வீடே  களைகட்டியது .

நிகழ்ச்சியின் எடிட்டிங் மற்றும் இயக்குனர் அர்ஜுனின் திறமை கண்டு அசந்து போனாள். மேலும் கிரியேடிவ் ஹெட்டோட தனித்தன்மையும் நன்றாகத் தெரிந்தது .

” தல பெரிய ஆள் தான் போல…” என வேறு வழியல்லாமல் மனதில் ஒத்துக்கொண்டாள் .

வீட்டில் அனைவரிடமும் நிகழ்ச்சி  நன்றாக இருந்தது எனப் பாராட்டு கிடைத்தது . மேலும் காவியா , “அக்கா நீ இந்த நிகழ்ச்சிக்கு மிகவும் சரியான தேர்வு “ எனச் சொல்ல , 

அதையே அம்மாவும் , அப்பாவும் ஆமோதித்தனர். 

காவியா மதியம் முழுவதும் சீதாம்மாவின் வார்த்தைகளை வைத்து ஓட்டிக் கொண்டிருந்தாள். 

மாலை படப்பிடிப்பிற்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் பொழுது வசந்த் போன் செய்து பாராட்டினான். மீண்டும் வசந்த்தும் ,” நீ சரியான தேர்வு…” என்றான்.

இரவு ஷூட்டிங்கில் அனுவும் இருக்க , அவளும் பாராட்டினாள் .

பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்கள் சொந்த பந்தங்களிடமும் , நட்பு வட்டத்திலும் பாராட்டுப் பெற்ற மகிழ்ச்சியில் இருந்தனர்.

அர்ஜுன் செட்டிற்குள் நுழைய , அனைவரும் கொண்டாடித் தீர்த்தனர் . 

கண்ணீர் மல்க ,  இந்த காட்சியை அனு ரசித்துக் கொண்டிருந்தாள் .இனியா கை கொடுக்க , அனு தழுவிக் கொண்டாள். 

கொண்டாட்ட மனநிலையோடு அன்றைய ஷுட்டிங் நடந்தது.

தொடரும்…..

Advertisement