கவிதா மற்றும் கார்த்திகேயன் வர, மீண்டும் ஒரு அறிமுகப் படலம் நடந்தது.
“ஸாரி மாமா, முன்அறிவிப்பின்றி வந்துவிட்டேன். முறையாக என் பெற்றோரோடு வந்து பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் இனியா இரண்டு நாட்களாகப் பேசவில்லை…. தொடர்பு கொள்ள முடியவில்லை…. கொஞ்சம் டென்ஷாகி விட்டது. மேலும் நடந்த விசயத்தில் மிகவும் டிஸ்டர்ப் ஆகி இருப்பாள் எனத் தோன்றியது…
நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள் எனத் தெரியும். ஆனால் எனக்கு மனசு கேட்கவில்லை…” எனத் தன்மையாக. அதே நேரம், கார்த்திகேயன் மறுக்க முடியாத ஆளுமையோடு பேசினான்.
பின் கார்த்திகேயனோடு, சிறிது நேரம் பொதுவான விசயங்கள் பேசி விட்டு, “சீக்கிரமே என் பெற்றோரோடு வருகிறேன்…” என விடை பெற்றான்.
இனியா அப்பாவைப் பார்த்து அசடு வழிய,
“விக்ரமையும் விட்டு வைக்கவில்லை போல…” எனக் கவிதா கேலி செய்தார்.
“போங்க அம்மா…” என அறைக்குள் ஓடி விட்டாள்.
“தெளிவாகி விட்டாள். விக்ரம் நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்….” எனக் கவிதா சந்தோஷபட்டார்.
கொஞ்ச நேரத்தில் காவியா வர, ரெஃப்ரெஷ் செய்து வந்தவள்,
“என்னாச்சு அம்மா? இனியாவின் முகத்தில் 1000 வாட்ஸ் பல்பு எரியது. உங்கள் அறிவுரையைப் போட்டுத் தாக்கிட்டீங்களா?” எனக் கேலி செய்தாள்.
“விக்ரம் வந்தார்டா….” எனக் கார்த்திகேயன் அறிவிக்க,
“என்ன? மாமஸ் வந்தாரா?”என அதிர்ச்சி அடைந்தாள்.
ஹாலில் இருந்து, “ இனியா, இனியா…..” எனக் கத்த,
“என்ன காவியா?” என்றபடி இனியா வர,
“மாமஸ் வந்தாரா?”
“ஆமாம்…”
“மாமஸ் லண்டன் போயிருந்தாரே….?” என விசாரிக்க,
இதைக் கேட்டு கவிதா, “இது உண்மையா?” எனப் பார்க்க, இனியா தயங்க,
உடனே நிலைமையைப் புரிந்த கவிதா, “கவனமாக இருக்க வேண்டும் குட்டிம்மா… இப்போது பார், உனக்காக வேலையைக் கெடுத்து வந்திருக்கிறார். அவர்கள் வீட்டில் என்ன நினைப்பார்கள்?” எனக் குற்றஞ்சாட்டினார்.
“ஸாரி அம்மா, இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை… நான் இருந்த மனநிலையில் போனைக் கவனிக்கவில்லை. அவர் பயந்து விட்டார்…” என அசடு வழிந்தாள்.
இடைபுகுந்த காவியா, “மாமஸ் சூப்பர் போ… வாரணமாயிரம் சூரியாவிற்கே டஃப் பைட் கொடுப்பார் போல…” எனக் கலாய்க்க,
இனியா முகம் சிவந்து சிரித்தாள்.
“என்னுடைய அக்காதானா? வெட்கம் எல்லாம் படுகிறாள்? அம்மா புடிங்க…புடிங்க…. மயக்கம் வருது….” எனச் சோபாவில் சாய,
முதலில் பதட்டத்தில் அருகில் வந்த கவிதா, பின் புரிய, ஒரு அடியைப் போட்டு விட்டு, “கவனம் குட்டிம்மா …”என உள்ளே சென்றார்.
“அக்கா உன்னை அறிவுரை மழையிலிருந்து காப்பாற்றி விட்டேனா?” எனச் சிரிக்க,
இனியா பெரிய கும்பிடாகப் போட்டு அறைக்குள் சென்றாள்.
பின்னாலே சென்ற காவியா, “இருந்தாலும் மாம்ஸ் செம ரொமாண்டிக்….” எனப் பாராட்டு பத்திரம் வாசித்தாள். பின,“நான்தான் அவரைப் பார்க்கவில்லை, மிஸ் செய்து விட்டேன்…” என வருந்தினாள்.
“ என்ன பிள்ளைகளோ போ… இந்தச் சின்ன விசயத்திற்காக லண்டனில் இருந்து வந்திருக்கார்…” எனக் கார்த்திகேயன் சொல்லிச் சிரித்தார்.
கவிதா சிரித்தபடி, “உங்கள் பேச்சில் பெருமை தெரிகிறதே….” எனக் கேலி செய்ய,
“ஆமாம், எவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறார். ஆனால் அதையெல்லாம் ஒதுக்கி விட்டு, நம்ம பெண்ணுக்காக ஓடி வருகிறார் என்றால் இருக்காதா?” எனப் புளகாங்கிதமடைந்தார்.
“ஆமாங்க , பெரிய இடமென்று ஒரு பயம், தயக்கம் இருந்து கொண்டே இருந்தது , இப்போது அந்தக் கவலை தீர்ந்தது. இப்போது தான் நிம்மதி…” எனப் பெருமூச்சு விட்டார்.
விக்ரம் வீட்டிற்கு வர, ஹாலில் இருந்த தாத்தா, “என்னடா ராஜா இங்கே? இந்நேரம்…? ஏதும் பிரச்சனையா?” எனப் பதறினார்.
“ஒன்றுமில்லை தாத்தா, பதறாதீங்க….” எனக் கையைப் பிடித்தவன், “எல்லாம் உங்கள் பேத்தி உபயம் தான்…” எனச் சிரித்தான்.
“ஜஸ்ட் பத்து நிமிடம் தாத்தா, நான் போய் ரெஃப்ரெஷ் ஆகி வருகிறேன். நீங்கள் தோட்டத்தில் இருங்கள்….” என்றவாறு மேலே ஏறினான்.
அவன் பதிலில் ஆசுவாசமானார்.
பின் சிறிது நேரத்தில் தோட்டத்திற்கு வந்தவன், விசயத்தை விளக்கினான்.
“இப்போது ஓ.கே. தானே? செட்டிலாகிவிட்டாள் தானே…?” என விசாரித்தார்.
“சரியாகிவிட்டாள் தாத்தா, வேப்பிலை அடிச்சாச்சு…” எனச் சிரித்தான்.
“ஆனாலும் பேராண்டி, முத்திப் போய்விட்டது….” எனத் தாத்தா கேலி செய்தார்.
“கொஞ்சம் டென்ஷன் ஆகிவிட்டது தாத்தா. வேறு எதுவும் ஓடவில்லை…” என வெட்கப்பட்டான்.
“லாஜிக்கலா , பிராக்டிகலா யோசிக்கிறஎன் ராஜாவா இது? எல்லாம் காதல் படுத்தும் பாடு…” எனப் பெருங்குரலெடுத்துச் சிரித்தார்.
“தாத்தா பிளீஸ்…” என அழகாக முகம் சிவந்தான்.
அவர் குறுஞ்சிரிப்போடு, “சரி, சரி, இப்ப என்ன பிளான்?”
“எமர்ஜென்சி எனச் சொல்லிக் கிளம்பி வந்துள்ளேன். எல்லாவற்றையும் இரண்டு அல்லது மூன்று வாரம் கழித்து ரீ ஷெடியூல் செய்யச் சொல்லியிருக்கிறேன். இங்கும் சில வேலைகள் செய்ய வேண்டியது உள்ளது. அதன் பின் மீண்டும் லண்டன் தான்.”
“ஓ.கே..டா, போய் சாப்பிட்டுப் படு. களைத்து இருப்பாய்…”
“ம்ம்…, நீங்கள் வந்த போன பின், வீட்டில் செம டோஸ்…” எனச் சிணுங்கினாள்.
“என்னாச்சு ஜில்லு?” எனக் கவலைப்பட,
“நீங்கள் லண்டனில் இருந்து வந்தீர்கள் எனக் காவியா போட்டுக் கொடுத்து விட்டாள். உடனே ஆரம்பித்தது கச்சேரி, பொறுப்பாக, கவனமாக எனப் பல ‘ஆக’ இருக்க வேண்டும் என அம்மா நடத்திவிட்டார்கள்.”
“ஹா…ஹா…” எனச் சத்தமாகச் சிரிக்க,
“தல… வேண்டாம்…” எனக் கோபப்பட்டாள்.
“அடி…. நான் செய்ய வேண்டிய வேலையை அத்தை செய்திருக்கிறார்கள். உன் முகத்தைப் பார்த்தவுடன், நான் பரிதாபப்பட்டு விட்டு விட்டேன். நான் பட்ட கவலை எனக்குத் தான் தெரியும்…” எனப் பொங்க,
மீண்டும் மன்னிச்சு படலத்தை அரங்கேற்றி, அவனைக் கூல் செய்தாள்.
“அப்புறம் என் அம்மா, அப்பா எல்லாம் ஃபிளாட், உங்களைப்போல் ஒருவன் உண்டா எனத் துதிபாடல் நடக்கிறது. அது மட்டுமா? காவியா உங்களை ரொமாண்டிக் ஹிரோவாகக் கொண்டாடுகிறாள்.”
“அப்ப எல்லாமே நன்மைக்குத்தான் சொல்லு. ஆனால் நீ என்றைக்கு நான் பிளான் செய்த மாதிரி நடக்க விட்டிருக்கிறாய் ஜில்லு… மாப்பிள்ளையாககெத்தாக வர வேண்டிய என்னை…? கலைந்த தலையும், கசங்கிய ஆடையுமாக…” என இழுக்க,
“இப்போது அதைவிட பலமடங்கு கெத்து கிடைத்து விட்டதே…” எனச் சமாதானம் பேச,
“இந்த வாய் மட்டும் இல்லையென்றால், நாய் கவ்வி விட்டுப் போய் விடும்”என்று ஓட்ட,
“என் பொழைப்பே அதில் தான் ஓடுகிறது தல…. கண் வைக்காதீர்கள்…” எனப் பெருமை பேச,
இருவரும் சிரித்தனர்.
இனியா மெதுவாக, “உங்கள் வீட்டில் என்ன சொன்னார்கள்?”
“இன்னும் அப்பா அம்மாவைப் பார்க்கவில்லை, தாத்தா தான் ஓட்டித் தள்ளி விட்டார்…”
“ஓ…! சமாளித்துவிட்டீர்கள் தானே விக்ரம்…”
“ம்ம்…” எனக் களைப்புடன் முனங்கினான்.
“சரி,சரி, தூங்குங்க, நாளைக்குப் பேசலாம்…” எனச் சிலபல முத்தங்களை வாரி வழங்கி விட்டுப் போனை வைத்தாள்.
அத்தியாயம் 65
காலையில் கிளம்பி உணவிற்கு வரும்போது, அம்மா, அப்பாவும் உணவு மேஜையில் இருப்பதைக் கண்டான்.
“என்ன? இரண்டு பேரும் ஃப்ரீயா? தாத்தா எங்கே?” எனக் கேட்டபடி அமர்ந்தான்.
“தாத்தா ஐந்து நிமிடத்தில் வந்து விடுவார். நீ எங்கடா திடீரென இங்கே? வேலை முடிந்து விட்டதா?” என மாலினி கேட்க,
அம்மாவிற்குப் பதில் சொல்லும் முன், அப்பாவைப் பார்க்க, அவர் ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.
அம்மாவிடம் திரும்பி, “சின்ன எமெர்ஜென்ஸிம்மா. அதான் வரவேண்டியதாகி விட்டது…” என விளக்கம் கொடுத்தான்.
உடனே மாலினி பதட்டத்துடன், அவனை மேலிருந்து கீழ் ஆராய்ந்து விட்டு, நெற்றியை தொட்டுப் பார்த்தார்.
“நான் நன்றாக இருக்கிறேன் அம்மா. உடம்புக்கு ஒன்றும் இல்லை, பயப்படாதீர்கள்…”
பின், “ஏதாவது பிஸினஸ் எமெர்ஜென்ஸியா?” எனக்கேட்க,
ரகுராம் அவன் மீது பார்வையைக் கூர்மையாக்கினார். (இப்போது தெரிந்திருக்கும்.., பார்வையால் மற்றவர்களை ஆட்டுவிக்கும் பழக்கம் யாரிடமிருந்து வந்திருக்கும் என்று)
‘அப்பாவிற்கு ஏதோ தெரிந்து இருக்கிறது’ என்பதை உணர்ந்தவன், சொல்லி விடுவதுதான் நல்லது என முடிவு செய்து,
“அம்மா…, அப்பா.., உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்…” எனத் தொடங்க, தாத்தாவும் வந்து அமர்ந்தார்.
‘மேலே சொல்’ என்பது போல் ரகு இருக்க,
“நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன்ம்மா…”
“ என் பையன்தானா சொன்னது?” என அதிர்ச்சியாக மாலினி பார்க்க,
அந்த அதிர்ச்சி அப்பாவிடம் இல்லாததை உணர்ந்து, ஏற்கனவே அப்பாவிற்கு விசயம் தெரியும் எனப் புரிந்து கொண்டான்.
“உங்க இரண்டு பேரிடம் சொல்லத்தான், நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். நாம் மூன்று பேரும் மாறிமாறி வெளிநாடு போய்க் கொண்டிருந்தோம். அதனால் சந்தர்ப்பம் அமையவில்லை. இந்த லண்டன் டிரிப் முடிந்து வந்தவுடன் கட்டாயமாகப் பேச வேண்டும் நினைத்திருந்தேன்…” என இழுத்தான்.
“ஓ….! இப்போ நீ பாதியில் வந்ததது, அந்தப் பெண்ணிற்காகத் தானே?” எனச் சரியாக நூலைப் பிடித்தார் ரகுராம்.
‘ஆமாம்…’ எனத் தலையாட்ட,
“என்னடா பிரச்சனை?” என மாலினி கேட்க,
“இப்போது சரியாகி விட்டதம்மா…” என முடித்தான்.
மகன் பிரச்சினையை வெளிப்படுத்தாததை உணர்ந்து, கண்ணில் மெச்சுதல் பார்வை வர, “அந்த பெண்ணும் விரும்புகிறாளா?” என ரகு கேட்டார்.
“என்ன கேள்வி இது? இதில் என்ன சந்தேகம்?” என்பது போல் பார்த்து, “ஆமாம்ப்பா…” என்றான்.
அதைப் புரிந்து கொண்டவர், சின்னச் சிரிப்போடு, “நீ இதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறாயா?” என மீண்டும் உறுதிப்படுத்த,
இடைபுகுந்த தாத்தா, “இந்த அளவிற்கு ஓடி வந்துள்ளான் என்பதே உறுதியைக் காட்டவில்லையா ரகு?” எனச் சூசகமாக விக்ரமன் தன் சம்மதத்தைத் தெரிவிக்க, அதில்,‘நான் உனக்கு அப்பாடா….’ என்ற தொனி இருந்தது.
“அப்ப, உங்களுக்கு ஏற்கனவே தெரியும், பார்த்துப் பேசியாகி விட்டது தானே….?” எனக் குட்டி பதினாறு அடி பாயும் என்பதை ரகுராம் காண்பித்தார்.
உடனே மாலினி, “ஏன் மாமா சொல்லவில்லை?” எனக் குற்றம் சாட்டினார்.
“அவனுடைய விசயத்தை, அவன் தான் உங்களிடம் சொல்வது முறை, மரியாதை….”
‘எப்போதும் போல் மூன்று பேரும், இம்மி கூட விட்டுக் கொடுக்க மாட்டார்களே….’ என மாலினி நினைத்து கொண்டார்.
“சரிடா, பெண் யார்? என்ன?” என்ற விபரத்தைக்கேட்க
“அவள் பெயர் இனியா….” என ஆரம்பித்து விக்ரம் அனைத்து விபரத்தையும் சொன்னான்.
“நம்ம சேனலில் வேலை பார்க்கிறாளா? எந்த நிகழ்ச்சியில்…?”
விக்ரம் நிகழ்ச்சியின் பெயர்களைத் தெரிவித்தான்.மாலினிக்குச் சரியாக முகம் ஞாபகம் வரவில்லை, விக்ரம் போட்டோவைக் காட்ட, திருப்தியானார்.
மேலும், இந்த விபரங்களைச் சொல்லும்போது, மகனின் முகத்தையே ஆழ்ந்து கவனிக்க, அதில் இருந்த மலர்ச்சியே அவனின் காதல் அளவைச் சொல்ல, மாலினி புன்னகைத்துக் கொண்டார்.
பின் மாலினி, “ உன் சந்தோஷம் தான் முக்கியம், பணம் பெரிய விசயமில்லை ராஜா. அது நமக்கே ஏழு தலைமுறைக்கு இருக்கிறது. நல்ல குடும்பமாக இருக்க வேண்டும். அது தான் மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். எல்லாம் உனக்குத் திருப்தி தானே?” என விசாரணையைத் துவக்க,
“நிச்சயமாக அம்மா…” என உறுதி அளித்தான்.
பின் அனைத்து விவரத்தையும் கூற, மாலினி திருப்தியாக, பின் தன் சம்மதத்தை தெரிவித்தார்.
“உன் தேர்வை நம்புகிறோம், மதிக்கிறோம்….” என ரகுராமும் சொல்ல,
“தேங்க்ஸ்ப்பா… தேங்க்கஸ்அம்மா…” எனச் சந்தோஷமானான்.
“அவர்கள் வீட்டில் தெரியுமா? சம்மதமா ராஜா?” என ரகு கேட்க,
“சம்மதம் தான் அப்பா, இனியா சொல்லிவிட்டாள் அப்பா…” என, “ ஏன் சொன்னாள்? எதற்குச் சொன்னாள்? எனக் காரண காரியங்களை விளக்கோ விளக்கு…” என விளக்கினான்.
விக்ரமன் நமுட்டுச் சிரிப்போடு, “ ரகு பாருடா, இப்போதே இனியாவிற்கு ஸ்கோரை ஏற்றுகிறான்…” எனக் கேலி செய்தார். அனைவரின் முகத்திலும் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.
“உங்களுடைய அடுத்த பிளான் என்ன?” என ரகுராம் கேட்க,
“திருமணம் ஒரு வருடம் கழித்து என யோசித்துள்ளோம் அப்பா.”
“ஏன்?” என மாலினி கேட்க,
“அவள் இப்போதுதான் இந்தத் துறைக்கு வந்துள்ளாள். மேலும் இத்துறைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள, தகுதி படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறாள். அதற்கு எந்த கமிட்மெண்ட்ஸ் இல்லாமல் தீவரமாக வேலை பார்க்க வேண்டும், அதான்…..”
“நானும் இந்த இரண்டு புதுச் சேனலில் பயங்கர பிஸி, பெங்களூர், ஹைதராபாத் என அலைந்து கொண்டிருக்கிறேன். அதனால் யோசித்தோம்…”
“சரி, ஆனால் நிச்சயதார்த்தம் இப்போதே செய்து விடவேண்டும்…” என உறுதியாகச் சொன்னார் ரகுராம்.
“ஏன் அப்பா?”
“ஒரு வருடம் என்பது நீண்ட காலம்விக்ரம். ஏதாவது பத்திரிக்கை மோப்பம் பிடித்து விட்டால், தேவையில்லாமல் நாமே செய்தி கொடுத்த மாதிரி ஆகிவிடும். மேலும் உனக்கு நிறைய வரன்கள் வருகிறது, தேவையில்லாமல் யாருக்கும் எந்த நம்பிக்கையும் கொடுக்க வேண்டாம் பார்… . நாம் நம் ஸ்டாண்ட்டை கிளியர் செய்து விட வேண்டும் என நினைக்கிறேன்.”
“சரிப்பா, இனியா கிட்ட பேசுகிறேன்…”
“நீ லண்டன் போவதற்குள், அவங்க பெற்றோரைப் பார்த்துப் பேச, ஏற்பாடு செய்.”
“இந்த வெள்ளி, எங்களுக்கு ஓ.கே. அவங்களும் ஃப்ரீ என்றால் பேசி விடலாம்.”
“சரிப்பா, கேட்டுச் சொல்கிறேன்..”
அதற்குள் அனைவரும் சாப்பிட்டு முடிக்க, மாலினி அவன் தலையைக் கோதியவாறு, “எல்லாம் நல்லாபடியாக நடக்கும்….” என்று வாழ்த்தி விட்டு நகர்ந்தார்.
“ராஜா…” எனத் தாத்தா அழைக்க, வேகமாகச் சென்று கட்டிக்கொண்டான்.
இனியாவை அழைத்து, இச் சந்தோஷச் செய்தியைப் பகிர்ந்து, அப்படியே வெள்ளியன்று மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்தான்.