Advertisement

அத்தியாயம் 18

இரண்டு வாரங்கள் கழித்து , அன்று தான் விக்ரம் சென்னை வந்திருந்தான். 

காலையில் இருந்தே “ இனியாவைக் காணப் போகிறோம்” என மனம் பரபரத்துக் கொண்டிருந்தது. 

அவனுக்கே இது புது உணர்வாக இருந்தது , இது பிடித்தும் இருந்தது . எத்தனையோ பெண்களைக் கடந்து வந்திருக்கிறான் . யாரும் இனியாவைப் போல் பாதித்தது இல்லை என்பது புரிந்தது .

 தன்னை அறியாமல் விசில் அடித்துக் கொண்டு   அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருக்க , 

விசில் சத்தம் கேட்டு , தாத்தா அறைக்கு வந்தார் . “என்னடா, முகத்தில் 1000 வாட் வெளிச்சம்?” 

“அப்படி ஒன்றும் இல்லையே தாத்தா…..”

 “எனக்குத் தெரியாதா?  என்ன விசயம்? என மீண்டும் துருவ ,  

“ஒரு வேளை ரொம்ப நாள் கழித்து வீட்டுக்கு வந்ததாக இருக்கும்….” என மழுப்பினான் . 

அவனை அழ்ந்த பார்க்க ,” வரேன் , தாத்தா…” எனச் சிரித்தபடி நழுவினான்.

ஆபிஸ் வந்தவுடன் வேளைகள் இழுத்துக் கொண்டன . மதியம் ‘செல்லமே’ படப்பிடிப்பு தளத்திற்கு போக நினைத்திருக்க , 

இன்று படப்பிடிப்பு இல்லை என்பதை அறிந்து கொண்டான். சற்று ஏமாற்றமாக உணர்ந்தான் . பின் மற்ற வேளைகளை முடித்து விட்டுக்  கிளம்பினான்.

மறுநாள் “செல்லமே” படப்பிடிப்புக்குச் செல்ல , அங்கு அனைவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு விக்ரமைப் பார்த்ததும் மிகுந்த சந்தோஷத்துடன் வரவேற்றனர் .

நீண்ட இடைவெளிக்குப் பின் தலயை சந்தித்தவுடன் மனம் படபடக்க , அவனைக் கண் இமைக்காமல் பார்த்தவாறு திகைத்து நின்றாள் . இனியாவிற்கு  இந்த உணர்வு புதிதாக இருந்தது . சற்று யோசிக்க வேண்டி இருந்தது .

விக்ரம் அனைவரின் அன்பை ஏற்று , அவளைத் தேடிப் பார்க்க , அதற்குள் தன்னைச் சமன்படுத்தி கொண்டு சிரித்தவாறு “குட் மார்னிங் ஸார்” என்றாள்.

அவளைப் பார்க்க ஆசைப்பட்டதும் , பார்த்தவுடன் மனதில் ஏற்பட்ட பரவசமும்  ஏதேதோ செய்ய , 

அதற்கான எதிர்வினை அவளிடம் இல்லாத போது எங்கோ தோற்றது போல் உணர்ந்தான்.

மேலும் அவன் பேச முயல , அப்போது இனியா அருகில் இருந்த குட்டி ஒன்று உச்சா போக வேண்டுமென்று அழைக்க , 

தன்னுடைய படபடப்பை , தவிப்பை மறைப்பதற்கு அந்தக் குழந்தையுடன் வேகமாக நகர்ந்தாள். 

இதைக் கண்டவுடன் விக்ரம் மிகவும் கோபமானான்.  பின் சிறிது நேரம் அனைவரையும் நலம் விசாரித்து விட்டு கிளம்பினான்

அத்தியாயம் 19

விக்ரம் கோபமான மன நிலையோடே வீடு வந்து சேர்ந்தான் .  

வழக்கம் போல் மனநிலையைச் சமன்படுத்துவதற்குச் செல்வத்திடம் டீ சொல்லி விட்டு , தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தான் . 

செல்வம் டீயை கொண்டு வந்து கொடுக்க , தோட்டத்தில் டீ குடித்தபடி அமர்ந்திருந்தான் . 

தாத்தாவும் நடைபயிற்சி முடித்து , அவன் அருகில் வந்து அமர்ந்தார்.

தாத்தாவை பார்த்துப் புன்னகை சிந்த , “என்னாச்சு? குழப்பமாக இருக்கிறாய்….” என்று தாத்தா கேட்க ,

“ ஒன்றும் இல்லை … நான் பார்த்துக் கொள்கிறேன் தாத்தா”

“நீ நன்றாகக் ஹேண்டில் செய்வாய் “என்று எனக்குத் தெரியும். ஆனால் சில நேரம் யாரிடமாவது  பேசினால் மனசு தெளிவாகும் . மேலும் நம் மாதிரி ஸ்டேட்டஸில் இருப்பவர்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது . அதனால் தான் சொல்கிறேன் , “டாக் டு மி….” .

சற்று யோசித்து விட்டு , “தாத்தா எனக்கு ஒரு பெண்னணப் பிடிச்சிருக்கு” 

“வாவ்! இன்டரஸ்டிங்… அதில் என்ன பிரச்சனை ?”

சற்று தயங்கியவாறு , “அந்தப் பெண்ணுக்கு என்னைப் பிடிச்சிருக்கான்னு தெரியவில்லை…?” 

“அதெப்படிடா ஒரு பொண்ணுக்கு உன்னைப் பிடிக்காமல் போகும்? நீ தேவையில்லாமல் யோசிக்கிறாய் “ என நினைக்கிறேன் .

“இல்லை தாத்தா, அவள் என்னைப் பார்க்கும்பொழுது , அவள் கண்களில் பரவசமோ , விருப்பமோ கொஞ்சம் கூட தெரியவில்லை , ஏன் ஒரு சுவாரசியம் கூட இல்லை…” 

“எத்தனை தடவை பார்த்திருப்பாய்?”

“ஒரு சில நிகழ்வுகள் தான் தாத்தா, மேலும் நான் ஆழ்ந்து பார்க்க நினைத்தால் கண்களைத் தாழ்த்தி விடுவாள் , இல்லை நகர்ந்து விடுவாள்…” என மொழிந்தான்.

“அப்ப இன்னும் நிறைய வாய்ப்பு இருக்குடா  பையா…” 

“எப்படி சொல்கிறீர்கள் தாத்தா?”

“உன்னைப் பார்க்கும் பொழுது வெறுப்போ , கோபமோ இருந்தால் தான் கவலைப்பட வேண்டும். நீ சொல்வதைப் பார்த்தால் காதல் பற்றிய யோசனையே அவளுக்கு இல்லை என நினைக்கிறேன்டா….” 

“அப்படியும் இருக்குமோ…. “ என யோசித்தான்  . சற்றுத் தெளிந்தான் , 

பின் மேலும் ,” எப்படி தாத்தா? நான் பிடிச்சிருக்கு” என்று சொன்னவுடன் ,

 “யார்? என்ன? “என எந்தக் கேள்வியும் கேட்காமல் ஒத்துக் கொண்டீர்கள்?” 

அவன் தோளைத் தட்டியபடி , “ நீயொன்றும் சின்னப் பையன் இல்லை ,  எத்தனையோ பெண்களைக் கடந்து வந்திருக்கிறாய் . அத்தனையும் தாண்டி நீ இந்த முடிவுக்கு வரும் முன் பலமுறை யோசித்து இருப்பாய் என்பது நிச்சயம்….” 

“பெண்ணைப் பற்றிய விவரம் சொல்லவா தாத்தா?” 

“வேண்டாம் ராஜா, வெற்றி பெற்றவுடன் கூட்டிக் கொண்டு வா…” எனச் சிரித்தார்.

பின் , “உன் முடிவு சரியாகத்தான் இருக்கும் .  கவலைப்படாதே , எல்லாம் நல்லபடியாக நடக்கும்…” என  ஆசிர்வதிப்பது போல் விக்ரம் தலையைத் தடவிச் சென்றார்.

தாத்தாவுடன் பேசிய பிறகு உற்சாக மூடிற்கு மாறினான் விக்ரம்.

அத்தியாயம் 20

மறுநாள் புதன்கிழமை அலுவலகம் சென்றான் . மனமோ அவளைப் பார்க்க முரண்டியது . மீண்டும் “செல்லமே” செட்டுக்குச் செல்வது நன்றாக இருக்காது என்பதை உணர்ந்திருந்தான் . அதனால்  “ருசிக்க ரசிக்க” செட்டில் அவளைப் பார்த்துக் கொள்ளலாம் என வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.

சேனலில் புதிய டான்ஸ் ஷோவிற்கான ஏற்பாடுகள்  ஆரம்பித்திருந்தது . அதே நேரம்  ”ருசிக்க ரசிக்க” என இனியா இருக்கும் சமையல் நிகழ்ச்சிக்கான லான்ச் , ப்ரோமோ எனச் சேனல் பரபரத்துக் கொண்டிருந்தது.

சனிக்கிழமை அன்று இனியா கார்த்திக்கோடு ஜோடி சேர்க்கபட்டிருந்தாள் . இதை அறிந்தவுடன் டென்ஷனான் விக்ரம் . 

கடைசி நேரத்தில் செல்ல வேண்டும் என நினைத்திருந்திருந்தவன் , படப்பிடிப்பு தொடங்கும் நேரத்திற்கே சென்று விட்டான்.

வழக்கம் போல் அனைவரின் வணக்கத்தைப் பெற்றுக் கொண்டு அமர , ரோஜா வலிய வந்து அவனுடன் பேச்சுக் கொடுத்தாள்.

இனியா அதை ஓரப்பார்வைப் பார்த்தபடி , மற்ற பங்கேற்பாளர்களோடு பேசிக்கொண்டிருந்தாள் . 

இதைக் கவனித்த விக்ரமிற்கு , மனம் துள்ளியது. வேண்டுமென்றே ரோஜாவுடன் பேச்சை வளர்த்தான்.

அப்போது செட்டிற்குள் பரத் நுழைய ,  அவனைப் பார்த்த இனியா , ரோஜாவின் அருகில்  வந்து வேகமாக அழைத்தாள்.

முதலில் புரியாத ரோஜா , பின் இனியாவின் கண் ஜாடையைப் பார்த்துப் புரிந்து கொண்டாள் . உடனே விக்ரமிடம் விடை பெற்று நகர்ந்தாள் .

தன்னிடம் விடைபெற்ற ரோஜாவைக் குழப்பத்துடன் விக்ரம் பார்க்க ,

 ரோஜா நேராகச் சென்று , அப்போது உள்ளே நுழைந்த புதியவனுடன் கை கோர்த்தபடி பேசுவதைக் கவனித்தான் . புரிந்து கொண்டான்.

ஷுட்டிங் ஆரம்பித்து , அனைவரும் அவர்களுக்குகான ஜோடியோடு போய் நின்று கொண்டார்கள் . 

பரத்தும் செட்டில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நான்கு வாரங்களாகச் சேர்ந்து பணியாற்றுவதால் , டீமில் நல்ல நட்பு நிலவியது . ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டு வேலை செய்தனர். 

கார்த்திக் கேட்ட பொருட்களைக் கொண்டு வந்து இனியா கொடுக்க  , “ திராட்சை எடுத்து வந்த போது உன் கண்கள் போல் உள்ளது , மாதுளை உன் பற்கள் , ஆரஞ்சு உன்..…” என ஜொள்ளினான் . ஆனால்  பேசுவதோடு நிறுத்திக் கொண்டான். 

தொட்டுப் பேசுவது , கை பிடிப்பது போன்ற செய்கைகளைச் செய்யாமல் கவனத்துடனே கார்த்திக் இருந்தான் .

இனியாவும் பேச்சில் எல்லை மீறும் பொழுது நன்றாக  சிரித்துக் கொண்டே நோஸ்கட் செய்தாள் . சேப்பங்கிழங்கைப் பார்த்து ,”உங்கள் மண்டை மாதிரி உள்ளது… இதில் களிமண் வேறு ஒட்டியிருக்கிறது பார்“ எனப் பதில் கொடுத்தாள் .

கார்த்திக்கின் முகம் அஷ்ட கோணலாகியது . 

இவை அனைத்தையும் பார்த்தும் பார்க்காத மாதிரி  கவனித்துக் கொண்டிருந்தான் விக்ரம் .

 இனியா தைரியமாகச் சமாளிப்பதைப் பார்த்து மகிழ்ந்தான் . தன்னுடைய டென்ஷன் தேவையற்றது என்பதை உணர்ந்தான் . ஆனாலும் கார்த்திக் மீது ஏதோ இனம் புரியாத கோபம் எட்டிப் பார்த்தது .

இன்னொரு பக்கம் பரத் ,  ஆண்களிடம்  ரோஜா பேசினால் , அவளைக் கோபமாகப் முறைத்துக் கொண்டிருந்தான்.

அடுத்த பகுதிக்கு எடுப்பதற்கு முன் பிரேக் விடப்பட்டது . ரோஜா பரத்தைச் சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தாள் .  

அர்ஜுன் அடுத்த ஷாட்டிற்காக மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருக்க , இனியாவும் இணைந்து கொண்டாள் .

 மற்றவர்கள் ஆங்காங்கே நின்று டீ , ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.

இங்கிருந்து அர்ஜுனை அழைத்தால் இனியாவுடன் பேச முடியாது என்பதை யூகித்து ,  விக்ரமே அவர்கள் அருகில் சென்று ,” அர்ஜுன்…” என்று அழைக்க  , 

மற்றவர்கள் விக்ரமைப்  பார்த்து நகர  , இனியா நெஞ்சம் படபடக்க நின்றாள் . 

பின் சுதாரித்து இனியாவும் நகர முற்பட , “நீ இருக்கலாம்.. .” என்றான் விக்ரம் .

“நான் கிளம்புகிறேன் அர்ஜுன் , திங்கட்கிழமை  நிகழ்ச்சியோட பிரோமோஸை முடிவு செய்து விடலாம் , காலை 11மணிக்கு என் ரூமில் மீட் பண்ணுங்கள்…” என்று பேசியபடி இனியாவைக் கூர்ந்து கவனித்தான். விக்ரம்  கண்ணாடி அணிந்திருந்ததால்  , இனியாவிற்கும் அர்ஜுனுக்கும் , விக்ரம்  கவனிப்பது தெரியவில்லை .  

அவள் கண்கள் படபடப்பதை , அலைப்புறுவதைக் கவனிக்க முடிந்தது . மனதிற்குள் சந்தோஷம் வந்து ஒட்டிக் கொண்டது . பின் மெதுவாக “வெல்டன் இனியா” என்றான் .

என்னவென்று புரியாமல் இனியா திகைத்துப் பார்க்க,” கார்த்திகைப்  பலமாகக் கவனித்து விட்டாய்…” என்று சிரித்தான் .

 இனியாவிற்கு வழக்கமான துடுக்குத்தனம் முன்னே வர , “ நான் எப்போதும் ஸ்மார்ட் தான்” என்று இல்லாத காலரைத் தூக்கினாள். மேலும் இந்த மாதிரி விசயங்களைச் சமாளிக்கிற தைரியமும்  எனக்கு உண்டு…” என்றாள் வேகமாக .

இதைக்  கேட்டவுடன்  விக்ரமின் முகத்தில் புன்னகை விரிய , 

” என்ன இனியா?” என்று அர்ஜுன் படபடக்க , 

“கார்த்திக் கொஞ்சம் வழிந்தான் “ எனக் கிசுகிசுத்தாள்.

“எப்படி கவனிக்காமல் போனேன், ஸாரி இனியா”  என்று  அர்ஜுன் வருத்தப்பட ,

இடைபுகுந்த விக்ரம் ,” எந்தக் குற்றவுணர்வும் வேண்டாம் அர்ஜூன்… உங்கள் வேலைப்பளு , எதையும் கவனிக்க விடவில்லை” என்று அவன் வருந்துவதை மாற்றினான் . 

அர்ஜுன் சற்று சமாதனமானான் .

“இப்போது ஒத்துக்கிறாயா இனியா? எனக் கேட்டான் விக்ரம்

“இவன் வேற…. ,  புரியாத மாதிரியே பேசுவான்…” என மனதில் வசை பாடியவாறு அவனைப் பார்த்தாள் 

ஒரு குறும்புப் புன்னகையுடன் , “அவள் முகத்தில் வந்து போன பாவங்களை ரசித்துக்கொண்டு , “ஸ்மார்ட்“ என்றாயே…. , புரியவில்லையா? என அவனும் விடாக் கொண்டனாகக் கேட்க ,

கடுப்பான இனியா , “ நாங்க ஸ்மார்ட் தான் , ஆனால் பேசறவங்க புரிகிற மாதிரி தெளிவாகப் பேசணும் ஸார்….” என ஸாரில் ஒரு அழுத்தத்துடன் முடித்தாள்.

அவன் புன்னகை  சிரிப்பாக மாற , இடையில் புகுந்து அர்ஜுன் , “ ஸாரி ஸார் , இனியா தெரியாமல் பேசிவிட்டாள் “ என அவளுக்கு வக்கிலாக  ஆஜாரானான்.

“லீவ் இட் அர்ஜுன் , அவங்களுக்குப் புரியவில்லை , அதான் கேட்கிறார்கள்…” எனச் சிரிப்புடன் முடித்தான்.

அர்ஜுனை முறைத்தபடி இனியா நிற்க , 

“பெண்களிடம்  தவறாக நடப்பவர்களை  வெளிப்படுத்த தயங்கக் கூடாது என்று அன்று சொன்னேன் இல்லையா? நீ அதை முழு மனதோடு ஏற்றுக்கொள்ள வில்லை, இல்லையா?”

“ஆம்…” என்பது போல் இனியா பார்க்க ,

இப்போது பார் ,”  நீ அர்ஜுனோட பெஸ்டி என்று கார்த்திக்கிற்கு நன்றாகத்  தெரியும்  . மேலும் அன்று நான் வேறு தலையிட்டுக்  கேட்டேன் . அப்படியிருந்தும் அவன் சும்மா இருக்கிறானா ?  பிஸிக்கல் அபியூஸ் இல்லையே தவிர வார்த்தைகளில் செய்து கொண்டிருந்தான்  , இல்லையா? “

“ஆம்…” என்பது போல் தலையையாட்ட ,

“அதற்குத்தான் படக்கென்று தைரியமாக வெளியே சொல்லி விட வேண்டும்” என்றேன்

மேலும் “இன்று அவன் பேசுவதைச் சிரித்துக் கொண்டு கேட்காமல், நகர்ந்து செல்லாமல், தைரியமாகப் பதில் கொடுத்தாய் பார்”, அதற்குத்தான் இந்த பாராட்டு . ஆனால் இது  பத்தாது  இனியா , உன்னை இம்சை செய்தால் , பட்டென்று இந்தப் பேச்சுகள் பிடிக்காது என்றும் தொடர்ந்தால் மேலிடத்தில் சொல்ல நேரிடும் என்று எச்சரித்து விடு “ என்றான் விக்ரம் தெளிவாக .

இந்தச் சேனல் இந்த மாதிரி நடவடிக்கைகளை அனுமதிக்காது என்று அவனுக்குத் தெரியும் . அதனால் அடங்கி விடுவான் . புரிகிறதா?

” புரிகிறது” என்பது போல் இனியா தலையாட்ட ,

 “நீ பேசுவதில் தான் , இங்கிருக்கும் மற்ற தைரியமில்லாத பெண்களுக்கும் , உதவிக்கு ஆளு இல்லாதவர்களுக்கும் தைரியம் வரும் , பேச முனைவார்கள் , பாதுகாப்புக் கிடைக்கும்  “ என்று நீண்ட உரையாற்றினான் ,

 இனியாவும் அர்ஜுனும் உரைந்து நின்றனர் , 

பின் தன்னைச் சமன் செய்து கொண்ட இனியா , அவன்  பேசியதிலிருந்த  நியாயத்தைப்  புரிந்து கொண்டு , “கண்டிப்பாகச்  செய்கிறேன் ஸார்  ” என்றாள்.

“குட்..” என்றான்  சின்ன சிரிப்போடு  . பின் அங்கிருந்து கிளம்பினான்.

“ஆ…” எனக் கத்தலுடன் , கையைத் தடவியபடி விக்ரம் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தவள் திரும்பினாள், 

“ஏன் பாஸ் , கிள்ளினீங்க ?” என்று கடுப்புடன் கேட்க ,

“நடப்பதெல்லாம் உண்மை தானா ? நிஜம் தானா?” என்று தெரிந்து கொள்வதற்காகத் தான்” எனச் சிரிக்க ,

“பாஸ்…” என இனியா சிணுங்க ,

 “உடனே ஒத்துக்கொண்டாயே அதான்….” என்று கலாய்த்தான்

“மறுக்க முடியாத உண்மை என்றால் , அந்தக் கருத்து யாரிடம் இருந்து வரும் பொழுதும் , அதை ஏற்றுக்கொள்ள தானே வேண்டும்” என்று கெத்துக் காட்டினாள்.

“தத்துவம் எல்லாம் பேசாதே , வேண்டாம்மா… நான் அழுதுவிடுவேன்…”என இவனும் வடிவேல் பாணியில் செய்ய ,

“பாஸ்…” என இனியா சிரித்தாள் .

“விக்ரம் ஸார் எல்லாவற்றையும் கவனிக்கிறார்  பார் , வெற்றி சும்மா வந்து விடுமா…. ? என வழக்கம் போல் அர்ஜுன் புகழ் பாட , 

இனியாவும் மறுக்க முடியாமல் அமைதி காத்தாள் . பின் இருவரும் இணைந்து சாப்பிடச் சென்றனர்.

தொடரும்……

Advertisement