பின் வேகமாக ‘செல்லமே’ செட்டிற்கு வந்து, “நாம் அனைவரும் ஒரே டீமாகப் போகிறோம்….” என்ற சந்தோஷமான விசயத்தைப் பகிர்ந்தான் அர்ஜுன்.
எல்லோரும் குஷியாக, பின்னர் வந்த இனியாவிடம், “நான் சொன்னேன் தானே…. , தல செய்வதைத் தான் சொல்வார், சொல்வதைத் தான் செய்வார் என்று பெருமை பேசி. இப்போது பார் நாமெல்லாம் ஒரே டீம்….” என்று புகழ்ந்து தள்ளினான்.
“ஐயோ…..!” என அனைவரும் ஒரே நேரத்தில் சொல்ல, அந்த இடத்தில் சிரிப்பலை பரவியது.
அன்று இரவு, “என்ன இனியா, ஹாப்பியா?” என விக்ரம் கொக்கி போட,
“நான் ஹாப்பியோ இல்லையோ, எங்க பாஸைக் கையில் பிடிக்க முடியவில்லை, அது மட்டுமா…, இனிமே நீங்க தான் என் பாஸோட குலதெய்வம்…..” எனச் சிரித்தாள்.
பின், “என்ன விக்ரம் திடீர் கரிசனம்….?” என இனியா வம்பிழுக்க,
“இப்போதுதானே, பிரிந்திருக்கும் கஷ்டம் புரிந்திருக்கிறது ஜில்லு….” என ஆதங்கப்பட,
“ஹா…ஹா…. , இனி நம் சேனலில் பல ஜோடிப் புறாக்களுக்கு வாழ்வு தான்….” எனக் கலகலத்தாள். பின் சற்று நேரம் வேறு விசயங்களைப் பேசினர்.
“அப்புறம், ‘செல்லமே’ முடிந்து விட்டது. அடுத்த பிராஜெக்ட் ஆரம்பிக்க, எப்படியும் ஒரு மாதமாகும். என்ன செய்ய போகிறாய்?”
“அதற்கெல்லாம் தான் நாங்க ஆளு வைத்திருக்கோமே… அவர் சொல்வார்….” எனக் கெத்துக் காட்டினாள்.
“ஆஹா….. தப்புப் பண்ணிட்டேனோ? காரியம் யாவிலும் கை கொடுப்பேன் எனச் சொல்லி, முத்திரையை வாங்கியிருக்கலாம். மிஸ் செய்து விட்டாயே விக்ரம்….” எனப் புலம்ப,
“சரி, சரி, என்ன யோசித்து வைத்திருக்கிறீர்கள்?” என ஆர்வமுடன் கேட்டாள்.
“ஒரு தமிழ் வாத்தியார் முகவரி அனுப்புகிறேன், வாரம் 3 வகுப்பு இருக்குமென நினைக்கிறேன், உச்சரிப்பை மெருகேற்றிக் கொள், அதே மாதிரி நிறைய புத்தகங்கள் சொல்வார், அதைப் படித்து நிறைய தமிழ் வார்த்தைகளைக் கற்றுக் கொள், தொகுத்து அளிக்கும் போது, புது வார்த்தைகளைப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்..” என ஐடியா கொடுத்தான்.
“கல்யாணமே வைபோகமே ஷூட்டிங் ஆரம்பித்த பிறகு வகுப்பின் நேரத்தை மாற்றி கொள்ளலாம்….”
“சரியான ரீங் மாஸ்டர் நீங்க….” எனக் கோபிக்க,
“ஓபாமா, மோடியைப் பேட்டி எடுக்க வேண்டும் என ஆசையிருந்தால் மட்டும் போதாது, உழைப்பு, உழைப்பு வேண்டும்மா….” எனக் கிண்டல் அடித்தான்.
“சரி , சரி, போகிறேன் தல….” எனப் பவ்யமாகச் சொல்லிப் போனை வைத்தாள்.
இனியாவும் தமிழ் வகுப்பிற்குப் போக ஆரம்பித்தாள். வகுப்பில் சேர்ந்த பின் நிறைய விசயங்களைக் கற்று கொண்டாள். அவர் சொல்கிற புத்தகங்களை வாசித்தாள்.
‘பொன்னியன் செல்வன்’ வாசித்து விட்டு, அவனுடன் அதைப் பற்றி அலசினாள். ‘ஆழிப் பேரலை’ (சுனாமி)என்ற வார்த்தை அதில் குறிப்பிட்டு இருப்பதைக் கண்டு வியந்தாள்.
அதை வாசித்து விட்டு, “சூப்பராக இருந்தது…” என்று பாராட்டினாள். “முக்கியமாக கடல்புறா கப்பல் மீது காதாலாகி விட்டது…” என்று மெய்சிலிர்த்தாள்.
“சரி, கதையின் நாயகன் இளையபல்லவன் பற்றி என்ன நினைக்கிறாய்?”
“அவன் கப்பலோட்டியாக மாறிய விதம், உழைப்பு, அறிவு, அவன் போர் தந்திரம், வாவ்…! செம ஹிரோயிஸம் இல்ல?” எனப் புகழ் பாடினாள்.
“முக்கியமான விசயத்தை விட்டு விட்டாயே ஜில்லு….” எனத் தூண்டில் போட,
“எதைச் சொல்கிறீர்கள்?” என அவன் உள்குத்து தெரியாமல் கேட்டாள்.
“காதல் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே ஜில்லு… காஞ்சனா தேவி, மஞ்சள் அழகி…” எனச் சிலாகித்துச் சொல்ல,
“இப்போதுதானே பூனைக்குட்டி வெளியே வருகிறது…” எனச் சிரித்தாள்.
“இதென்ன வம்பாகிவிட்டது….? காதல்ரசத்தை விடுத்து, சாண்டில்யனை சிலாகிக்க முடியுமா?” எனப் பாயிண்டைப் பிடித்தான்.
இவ்வாறாகக் காதல் பொழுதுகள் போனில் இனிமையாகச் சென்றது.
அத்தியாயம் 53
நாட்கள் ஓட… , அர்ஜுன், அனு ‘கல்யாண வைபோகமே’ முன்தயாரிப்பில் பிஸியாகி விட,
இனியாவும் தமிழ் வகுப்பைத் தொடர்ந்தாள்.
விக்ரமும் தெலுங்குச் சேனல் ஆரம்பிப்பதில் பிஸியாகி விட, இரவுகளில், அவர்கள் போன் உரையாடல்கள் மட்டுமே தொடர்ந்தன.
.
அப்படி ஒரு உரையாடலின் போது, “உங்களிடம் முக்கியமான விசயம் பேச வேண்டும்….” என்று இனியா ஆரம்பிக்க,
அவள் குரலில் இருந்த சீரியஸ்னஸைப் புரிந்து கொண்ட விக்ரம், “சொல்லுடா….” எனத் தன்மையாகக் கேட்க,
“இல்லை, நேரில் பேசலாம், எப்போது வருவீங்க?” எனக் கேட்டாள்.
“இந்தவாரயிறுதி வர முடியாது என நினைக்கிறேன் ஜில்லு, வேலை இருக்கிறது….அடுத்த வாரம் கண்டிப்பாக வந்து விடுவேன். அப்போது பேசலாம். உனக்கு ஓ.கே. தானே…”
“ஓ.கே., நோ பிராப்ளம் விக்ரம்…”என்றாள். பின் சிறிது நேரம் வேறு கதை பேசிப் போனை வைத்தனர்.
அந்த வாரத்தில் சூப்பர் ஹிட் டான்ஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வர, எதிர்பார்த்ததைப் போல் ரோஜா –கௌதம் ஜோடி வெற்றிக் கோப்பையைத் தட்டியது. ரசிகர்களால் விரும்பப்படும் ஹிட் ஜோடியானார்கள்.
“சூப்பர் அக்கா, நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று சொன்னேன் அல்லவா, அப்படியே நடந்து விட்டது பார்த்தீர்களா?” எனப் போனில் அழைத்துக் கொண்டாடினாள்.
ரோஜாவும் நன்றி தெரிவித்து விட்டு, பிரபல ஹோட்டல் பெயரைச் சொல்லி, சனி இரவு வெற்றிக் கொண்டாட்ட விருந்திற்கு இனியாவை அழைத்தாள்.
விக்ரம் வராததால் போரடிக்குமே என வருத்தப்பட்டுக் கொண்டிருந்ததாள், உடனே ஓப்புக் கொண்டாள்.
சனிக்கிழமை, உணவருந்தும் அறையில் நுழைந்த போது, ரோஜா மட்டும் தனித்து இருப்பதைக் கண்டு ஆச்சரியமானாள்.
“என்ன அக்கா, மற்ற நண்பர்கள் எல்லாம் லேட்டா?” எனக் கேட்டபடி அமர்ந்தாள்.
“யாரையும் கூப்பிடவில்லை இனியா, நீ மட்டும் தான். எங்கே நமது துறையில் ஆத்மார்த்தமான நட்பு இருக்கிறது…”
“ஏன் அக்கா இப்படிச் சொல்கிறீர்கள்? நான் உங்களுக்கு நல்ல நட்பு இல்லையா? மேலும் நீங்கள் என் நல்ல நண்பர் அல்லவா? பல நேரத்தில் என்னை வழி நடத்தினீர்களே….”
மேலும், “என்னுடைய நண்பர்கள் அனு, வசந்த், அர்ஜுன் பற்றித் தெரியும் அல்லவா? நல்ல நட்பு இருக்கிறது அக்கா. இப்போது நீங்கள் ஏதோ மன வருத்தத்தில், குழப்பத்தில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். அதனால்தான் எல்லாவற்றையும் வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள். முதலில் பிரச்சனையில் இருந்து வெளியே வாருங்கள்….”
“நீ சொல்வது சரிதான் இனியா. ஏனோ ஒரு வித சலிப்பு, ஒரு விரக்தி மனநிலையே உள்ளது. இவ்வளவு பெரிய வெற்றிக்குப் பின்னால், கொண்டாட்ட மனநிலை வரவில்லை. என் வெற்றியைக் கொண்டாட யாருமே இல்லை என்றே தோன்றுகிறது….” என அலுத்துக் கொண்டாள்.
ரோஜாவின் மனநிலையை மாற்ற எண்ணி, “அக்கா, இந்த வெற்றிக்குப் பின்னால், நிறைய ப்ராஜெக்ட் வந்திருக்குமே…. அதைப் பற்றிச் சொல்லுங்கள்…”
ரோஜாவும் உற்சாகமானாள்.
“நிறைய ஆப்பர் வருகிறது இனியா. முக்கியமாக நம்ம சேனலில் இருந்தே ஒரு சீரியலுக்கு அழைக்கிறார்கள். நல்ல பேமெண்ட், சீரியல் ஹிட் அடித்தால், மூன்று வருடத்திற்குக் கவலையில்லை…”
“வாவ்….! சூப்பர் அக்கா. வாழ்த்துக்கள். ஓ.கே. செய்து விட்டீர்களா?” என ஆர்வமுடன் கேட்க,
“இல்லைடா, ஒரு சின்ன சிக்கல், அதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்….”
“உங்களுக்குப் பிரச்சனையில்லை என்றால், என்னவென்று சொல்லுங்கள் அக்கா….. சில நேரம் மனசு விட்டுப் பேசினால் தெளிவு வரும்”
“என்ன இனியா? இப்படியெல்லாம் கேட்கிறாய். உன்னிடம் சொல்லாமல்வேறு யாரிடம் சொல்லப் போகிறேன். அது வேறு ஓன்றுமில்லை… நானும், கௌதமும் ஜோடியாக நடிக்க வேண்டும் என்கிறார்கள். அதான் யோசனை…. நீ என்ன நினைக்கிறாய்….?”
“அக்கா, தப்பாக நினைக்க மாட்டீர்கள் என்றால், இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணிக்க முடியாது என நினைக்கிறேன்.”
“ஏன்….?”
“ஒன்று பிரச்சினையாக உள்ள இந்த ரிலேஷன்ஷிப்பில் இருந்து வெளியே வாருங்கள், இல்லையென்றால்இந்த வாய்ப்பை வேண்டாம் என்று விட்டு விடுங்கள்…”
“நீ நினைக்கிற மாதிரி ஈஸியாக ரிலேஷன்ஷிப்பில் இருந்து வெளியே வரமுடியாது இனியா. நான் இந்த பாதையில் நெடுந்தூரம் பயணித்து விட்டேன். சட்டென்று திரும்பிப் போக முடியாது.”
மேலும், “இது ஒரு வகையான கமிட்மென்ட், டக்கென உதற முடியாது. இது உணர்வு பூர்வமானது…” என்று ஏதேதோ சமாதானம் சொன்னாள்.
“இல்லை அக்கா, நீங்கள் இந்த உறவில் சந்தோஷமாக இருப்பது போல் தெரியவில்லையே, நிறைய கஷ்டங்களை அனுபவிப்பது போல் தோன்றுகிறதே, சில நேரம் தப்பான முடிவு எடுத்து விடுவோம். அப்போது அதில் இருந்து வெளியே வருவது தானே புத்திசாலித்தனம்…” என வாதிட்டாள்.
சற்று நேர அமைதிக்குப் பின், தயங்கியபடி,
“இல்லை இனியா, இது எல்லா ரிலேஷன்ஷிப்பில் வரும் சாதாரண உரசல் தான், பரத் இந்தத் துறையில் இல்லாததால், சில சிக்கல்கள் வருகின்றன…. , சமாளிக்கக் கூடியது தான்…”
“அக்கா, நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள், பரத் முக்கியம் என்றால் வேறு வாய்ப்புகள் வரும்…. பார்த்துக் கொள்ளலாம். சிக்கலாகிக் கொள்ளாதீர்கள்.”