காதல் வைபோகமே… நாள்-13

அத்தியாயம் 41

மறுநாள் இருவரும் ஒருவரை ஒருவர் சேனலில் சந்திக்க முற்படவில்லை. எப்போதும் போல் வேலையைத் தொடர்ந்தனர்.

இரண்டு,  மூன்று முறை அனுவிடம் கவனச் சிதறலுக்காகத் திட்டு வாங்கி,  இனியா அசடு வழிந்தாள்.

 

ஏதோ ஒரு உலகில் சஞ்சரிப்பதாக உணர்ந்தாள். ஏனோ அடிக்கடி சிரித்துக் கொண்டிருந்தாள்.

மதிய வேளையில் சாப்பிடும் பொழுது வசந்த்தும்,  இதைக் கவனித்து ஓட்டினான்.   இனியா திருப்பிக் கொடுக்காமல் எல்லாவற்றிற்கும் பல்லைக் காட்டிக்கொண்டிருந்தாள்.

அப்போது அனைவருக்கும் ஸ்வீட் பாக்ஸ் வழங்கப்பட்டது.

அர்ஜுன் வழக்கம் போல், “ஸார் நாம் நேற்று ட்ரீட் கேட்டோம் இன்று தந்து விட்டார் பார்…” எனச் சிலாகித்தான்.

மற்ற மூவரும் ஒரே நேரத்தில்,‌ “முடியவில்லை அர்ஜுன்,  எங்களை விட்டு விடு…. , ஒரு ஸ்விட் பாக்ஸுக்கு இத்தனை அலப்பறையா?” என ஓட்ட,   அந்த இடம் கலகலத்தது.

விக்ரமும் அன்று முழுவதும் ஒருவிதமான உற்சாக மனநிலையிலேயே இருந்தான். 

இரவு இனியாவை அழைத்து,  நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என வலியுறுத்தினான்.

சனி மாலை பயிற்சிப் பட்டறை முடிந்த பின்,  அந்த தெருவின் இறுதியில் இருக்கும் ஒரு காபி ஷாப்பில் சந்திக்கலாம் என இனியா கூற, 

“நோ இனியா…” என்றான் வேகமாக.

“ஏன்?” 

 

“அது சரி வராது இனியா,  நீதான் பெரிய செலிபரட்டி ஆச்சே…. உன்னைச் சுற்றிக் கூட்டம் மொய்த்து விடும்…” என வம்பு செய்ய, 

கடுப்பான இனியா, “விக்ரம்….” எனப் பல்லைக் கடிக்க,

“சரி, சரி, மீடியா கண்ணில் பட வேண்டாம் எனப் பார்க்கிறேன்…” என்று உண்மையான காரணத்தை விளக்க, 

அவளும் ஒப்புக் கொண்டாள்.

பிரபல நட்சத்திர ஹோட்டலில் சந்திப்பது என முடிவு செய்யப்பட்ட பின்,  ஸ்வீட் நத்திங்ஸ் ஆக ஏதேதோ பேசியபின் போனை வைக்கப் போக, 

“ஒரு நிமிடம் விக்ரம்,  பிரதமரைச் சந்தித்தது உங்களுக்குப் பெரிய விசயமா? ஸ்வீட் எல்லாம்….” எனக் கேட்க,

“நீயும் அப்படித்தான் நினைத்தாயா? என் வாழ்க்கையில் முக்கியமான கட்டத்திற்கு நகர்ந்துள்ளேன்,  நீ என் வாழ்வில் வந்துள்ளாய்,  அதைக் கொண்டாடத்தான்…” என ஆழ்ந்த குரலில் சொன்னான்.

இனியா அசந்து போனாள். “அடுத்து என்ன பேசுவது?” என்று புரியாமல் அமைதியாக இருக்க, 

“என்ன விசயம்? ஏன் இந்த அமைதி இனியா?” 

“நீங்க ரொம்ப வேகமாக யோசித்து,  பெர்ஃபெக்ட் ஆகச் செயல்படுகிறீர்கள்,  நான் அப்படி எல்லாம் இல்லை,  கொஞ்சம் விளையாட்டுத்தனமாக இருப்பேன்…” என்றாள் தயக்கமாக.

“இது என்னுடைய இயல்பு.. , அது உன்னுடைய இயல்பு,  மேலும் இரண்டு பேரும் ஒரே மாதிரி இருந்தால் போர் அடிக்கும் இனியா…”

“ஓ….!” என்று மட்டும் இனியா சொல்ல,

“அப்புறம் ஒரு ரகசியம் சொல்லட்டுமா….?” என்று விக்ரம் நிறுத்த,

“சொல்லுங்க விக்ரம்..…” என இனியா ஆர்வமுடன் கேட்க,

சிறிது நேரம் போக்குக் காட்டி,  நாலைந்து தடவை கெஞ்ச, கொஞ்ச விட்டு,

பின் மெதுவாக, “எனக்கு உன்னிடம் முதலில் பிடித்ததே இந்தத் துடுக்குத்தனம் தான்….” என ரகசியம் உடைத்தான்.

இனியா நிம்மதியானாள். பின், “சொல்லிட்டீங்க இல்லையா? இனி என் அலப்பறையைப் பாருங்கள்” என்று சிரித்தாள்.

“ஐ ஆம் வெயிட்டிங்…” என்று அவனும் சிரித்தான். பின், “ஜோக்ஸ் அபார்ட் இனியா….”

“நீ நீயாகவும்,  நான் நானாகவும்,  நாம் நம் சுயத்தோடு இருப்பது தான் நல்ல காதலுக்கு அழகு.

மேலும், திருமண வாழ்க்கையில் சில பல விசயங்களை விட்டுக் கொடுக்கலாம்,  ஆனால் நமது அடிப்படை இயல்பை மாற்றமுடியாது, அதனால் நமது துணையை அவர்களின் குறை,  நிறைகளோடு ஏற்றுக் கொள்வது தான் இனிய வாழ்வுக்கு அடித்தளம்…” என்று நீண்ட உரையாற்ற,

இனியா புரிந்து கொண்டாள். 

“நீங்கள் சொன்னது நூறு சதவீதம் சரி , அதை நான் அப்படியே வழி மொழிகிறேன்….” என அவள் இயல்பான துடுக்குத்தனத்தோடு பதில் தந்தாள்.

பின் சிறிது நேரம் வேறு கதைகள் பேசிவிட்டுப் போனை  வைத்தார்கள்.

ரோஜா மறுநாள் போன் செய்து, “இனியா,  இந்த வார இறுதியில் என் நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது, பார்த்து,  உன் கருத்தைச் சொல்…” 

“கட்டாயமாக, நிச்சயமாக….” கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்த்துச் சொல்கிறேன்” என்று சிரிக்க,

“ஏதோ உன்னை மதித்துச் சொன்னால்,  பில்டப் ஓவராக இருக்கிறதே அடங்குமா…” என்று ரோஜா கலகலத்தாள்.

அந்த வாரம் அப்படியே படப்பிடிப்பு, கலாட்டா எனச் செல்ல,

விக்ரம் ஆர்ஜுனை அழைத்து, “ ஒரு மாதத்தில் புது கான்ஸப்ட் டெவலெப் செய்” என்று பணித்தான்.

இதை அர்ஜுன் சொல்ல,  வசந்த்தும்,  இனியாவும் ஹைஃபை செய்தபடி, “ கொசுத் தொல்லை ஒழிந்ததப்பா….” எனச் சொல்ல,

அர்ஜுன் முறைக்க,

இன்று ஒத்துக் கொள்கிறேன் அர்ஜுன்,  “தலதல தான்… உனக்கு வேலை கொடுத்து விட்டார் பார்….” என்றான் வசந்த்.

இனியாவும் ஆமோதிக்க,  அந்த இடமே அதகளமாகியது .

அத்தியாயம் 42

சனி மாலை பயிற்சிப் பட்டறை முடிந்தவுடன்,  ஆட்டோ பிடித்து ஹோட்டலுக்குச் சென்றாள் இனியா. 

வரவேற்பில் விசாரித்து,  ரிசர்வ் செய்யப்பட்ட மேஜைக்குச் செல்லும் பொழுது,  ஹோட்டல் அமைப்பில் இருந்த பிரைவசிக்கான முக்கியத்துவத்தைப் பார்த்து, அசந்து போனாள்.

தல சரியான ஹோட்டலைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறார் என மனதிற்குள் மெச்சினாள்.

இனியா ஹோட்டலில் நுழைந்ததில் இருந்து கண்ணெடுக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம். 

மேக்கப்பிற்கு ரொம்ப அலட்டிக் கொள்ளாமல்,  ஜஸ்ட் ரெஃப்ரெஷ் மட்டும் செய்து கொண்டு,  காலையில் போட்ட கசங்கிய உடையுடன் வந்திருந்தாள். அந்த அலுங்கிய தோற்றமே ஓர் அழகைக் கொடுத்திருந்தது.

கிளம்பும் முன்,  தான் டிரஸ் தேர்ந்தெடுக்க எடுத்துக் கொண்ட நேரத்தை நினைத்துச் சிரித்தான். 

அவனைப் பார்த்தவுடன் கை ஆட்டியபடி, முகம் கொள்ளா புன்னகையோடு வந்து மேஜையில் அமர்ந்தாள்.

“அடுத்து ஏதாவது அப்பாயிண்மெண்ட் இருக்கா விக்ரம்?” எனக் கேட்க, 

விக்ரம் புரியாது முழித்தான்.

“இல்லை, செமையா டிரஸ் செய்து கொண்டு வந்திருக்கிங்களே?” என இனியா கேட்க,

‘எப்போதும் நம்மைக் காலி பண்ணுவதே இவள் வேலை…’ என மனதில் செல்லமாக அலுத்தபடி,  இனியாவை முறைத்தவன், “முதன் முதலில் நம்மாளைப் பார்க்கப் போகிறோம் என டிரஸ் செய்து வந்தால் நீ இதுவும் பேசுவாய் இன்னமும் பேசுவாய்….” எனக் கடுப்பாய் சொன்னான்.

 

“ஓ…!”, என உதட்டைக் கடித்தபடி சிரிக்க,  பேரர் வரவும் சரியாக இருந்தது.

“என்ன சாப்பிடுகிறாய் இனியா?” 

“காபி…” 

“முதல்சந்திப்பு ஸ்வீட் எடு கொண்டாடு,   ஸ்விட் ஏதாவது சொல் இனியா….”  

“பாஸந்தி சாப்பிடலாமா?” என ஆசையாகக் கேட்டாள்.

உடனே, “இரண்டு…” என விக்ரம் சொல்ல, 

பேரர் ஆர்டரை எடுத்துக் கொண்டு நகர்ந்த பின், “உங்களுக்கும் பாஸந்தி பிடிக்குமா?” 

“நான் ஸ்வீட் லவ்வர் கிடையாது, எதுவானாலும் கொஞ்சம் சாப்பிட்டுக் கொள்வேன்….”

“ஆனால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்,  அப்படியே சாப்பிடுவேன்….” எனக் ஹார்லிக்ஸ் விளம்பரம் போல் சொன்னாள்.  மேலும் “ஸ்வீட் செய்தால் வீட்டில் எனக்கும்,  காவியாவிற்கும் அடிதடி தான்…” என அளந்தாள்.

விக்ரம் சுவராசியமாக அவளையே பார்த்துக் கொண்டு இருக்க,

அவன் பார்வையை ஏதோ செய்ய,  அதில் இருந்து தப்பிக்கும் விதமாகப் பேச்சைத் தொடங்கினாள்.

”நம்ப முடியவில்லையே விக்ரம்,  நீங்க இவ்வளவு சென்டிமெண்டா?” 

விக்ரம் சிரித்தபடி,“நானே நினைக்கவில்லை இனியா…., உன் விசயமென்றால்,  எல்லா சென்டிமெண்ட்டும் வந்து ஒட்டிக் கொள்கிறது….”

இனியா மென்னகைப் புரிய, “அப்புறம் இன்றைக்கு வகுப்பு எப்படி போச்சு?” 

“நன்றாகப் போனது..” என்று சிறிது நேரம் சம்பிரதாயப் பேச்சுகள் ஓட,

பின் மெதுவாக, “உங்களுக்கு ஏன் என்னை பிடித்தது விக்ரம்?” 

விக்ரம் புரியாமல் பார்க்க, 

“இல்லை…. உங்கள் உயரமே வேற….. அதான்….” என இழுத்தாள்.

உடனே சுதாரித்த விக்ரம்,  ஆரம்பத்திலேயே இந்த மாதிரி எண்ணங்களைச் சரி செய்திட வேண்டும் என முடிவு செய்தான்.

“மோதலுக்கு பின் வந்த காதலோ…?” என வம்பு செய்ய,

இனியா முறைக்க, “சரி, சரி, சொல்கிறேன். முதல் சந்திப்பு ஒன்றும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.  கார் பார்க்கிங்கில் உன்னைச் சில பெண்கள் மாதிரி நினைத்துத் திட்டினேன் அல்லவா?”

இனியா கோபமாகப் பார்க்க,

“அது உன்னைப் புரிந்து கொள்வதற்கு முன் இனியா…” என்று நிறுத்தியவன்,  கண்ணில் குறும்போடு, “ஒரே விசயத்திற்கு இரண்டு தடவை ஸாரி சொல்லமுடியாது” என இனியா போல் சொல்ல,

இனியாவும் ஒரு மென்னகையோடு, “தென்….” என அவனைத் தொடரம்படி, விக்ரமை போல் இமிடேட் செய்ய,

“விடமாட்டாயே……” எனச் சிரித்தபடி தொடர்ந்தான். “அந்த சம்பவத்திற்குப் பிறகு,  உன் கலங்கிய கண்கள் என்னை ஏதோ செய்து கொண்டே இருந்தது . நான் செய்தது சரியா? தப்பா? என விவாதம் எனக்குள் ஓடிக் கொண்டேயிருந்தது. நான் செய்தது சரிதான் என்பதை உறுதி செய்யும் பொருட்டே , உன்னை கவனிக்க ஆரம்பித்தேன்….”

இனியா ஆர்வமுடன் பார்க்க,

“நீ ரொம்ப எக்ஸ்பிரஸ்ஸிவ் இனியா, அதனால் தான் உன்னை ‘ருசிக்க ரசிக்க’ நிகழ்ச்சிக்குச் சிபாரிசு செய்தேன். அதில் முதலில் கலந்து கொள்ளமாட்டேன் என நீ சொன்னதைச் சும்மா ஸ்டண்ட் என தான் நினைத்தேன். என்னைக் கவரும் முயற்சியோ? எனத் தோன்றியது.”

இனியாவின் பார்வையில் அனல் பறக்க,

“அது அப்போது…. பழைய கதை….” எனச் சமாதானக் கொடி பறக்க விட்டான்.