அதற்குள் வசந்த் உள்ளே புகுந்து,  “முதலில் ஸார்கிட்ட பேசி ஏதாவதொரு ஷோ உனக்கு அஸைன் பண்ண வேண்டும்,  உன் ஜொள்ளு தாங்க முடியவில்லை” என ராகம் பாட,  இடமே கலகலப்பாகியது.

இப்போது ‘ருசிக்க, ரசிக்க’ படப்பிடிப்பு முடிந்தால்,  இனியாவும் ரோஜாவும் போனில் பேசிக் கொண்டனர்.

அன்று இரவு,  இனியா ரோஜாவை அழைத்துப் பேச, ரோஜாவும் அவளுடைய புதிய டான்ஸ் நிகழ்ச்சியைப் பற்றி உற்சாகமாகப் பேச, நேரம் போவது தெரியாமல் கதை அளந்தனர்.

மேலும் இரண்டு நாட்கள் செல்ல,  விக்ரமின் போனை எதிர்பார்த்து ஏங்கியிருந்தாள்.

மறுநாள் வசந்த், “இந்த வார இறுதியில் யாருக்கும் ஷுட்டிங் இல்லாததால் எங்காவது வெளியே போகலாமா?” எனக் கேட்க,

இனியா அப்போது தன்னுடைய வொர்கஷாப் பற்றிக் கூற, 

“ஏன் முன்னமே சொல்லவில்லை? எப்படி? எப்போ?” 

 

“ஒரு நண்பன் மூலம் போன வாரம் தான் ஜாயின் செய்தேன், மேலும் இரண்டு,  மூன்று வாரம் சென்ற பிறகு கெத்துக் காட்டலாம் என நினைத்தேன்…” என்று சொல்லிச் சமாளித்தாள்.

“ஓ.கே….” என்று அவளுடய பயிற்சி பட்டறை முடியும் நேரத்தைக் கணக்கில் கொண்டு,  ஞாயிறு மதியம் பிரபல மாலில் சந்தித்து, படத்திற்குப் போகலாம் என முடிவு செய்தனர்.

டெல்லியில் தன் வேலைகளை முடித்துவிட்டு,  ஞாயிறு மதியம் சென்னை வந்த விக்ரம்,  மாலையே ஆசையோடு இனியாவை அழைக்க,  அவள் சினிமா பார்ப்பதற்காக, கைபேசியை சைலண்ட் மோடில் வைத்திருக்க,  இவன் அழைப்பு எடுக்காமல் போக…. , விக்ரம் மிகவும் சோர்ந்தான். வெகு நேரம் திரும்பி அழைப்பாள் எனக் காத்திருந்து கண் அசந்தான்.

இனியா,  படம் முடிந்து,  டின்னர் முடித்து வீட்டுக்கு வந்த பின், போனை எடுக்க,  தலயின் அழைப்பைப் பார்த்தாள்.

போன் போட கைகள் பரபரத்தன.  பின் நேரம் ஆனதால்,  அழைக்கத் தயங்கி,  நாளை இரவு அழைப்பதாக ஓர் பதிவைத் தட்டி விட்டு உறங்கினாள்.

அத்தியாயம் 39

காலையில் பதிவைப் பார்த்தவுடன்,  உடனே கூப்பிட பரபரத்தான், நேரம் தோதாக இல்லை என்பதை உணர்ந்து, அமைதியாக அலுவலகம் கிளம்பினான்.

இயல்பாக விக்ரம் சேனலுக்குள் நுழைந்து விட்டால், அலுவலக வேலையை மட்டுமே பார்ப்பான்.  ஆனால் இன்று பத்து நிமிட பிரேக் கிடைத்தவுடன்,  இனியாவை அழைத்தான்.

போனை எடுத்த இனியா பதட்டமாக, “என்னாச்சு விக்ரம்?” என்று கேட்க,

புரியாமல் விக்ரம், “ஏன்? என்னாச்சு?” என மீண்டும் கேட்க, 

“இல்லை… இந்நேரம்….” என இழுக்க,

“ஓ…! உன்னை ரொம்ப மிஸ் செய்தேன் தெரியுமா? உடனே பேச வேண்டும் எனத் தோன்றியது , நேரத்தை யோசிக்கவில்லை,  பிரேக் கிடைத்தவுடன் அழைத்தேன்….”

“யார் மிஸ் பண்ணச் சொன்னது? எவ்வளவு ஆசையாகப் பயிற்சிப்பட்டறைப் பற்றிப் பேசப் போன் செய்தேன் தெரியுமா? ஏதோ பிரதமரைப் பார்க்கப் போவது போல் பந்தா,  உடனே போனை வைத்து விட்டீர்கள்….” எனப் புகார் வாசித்தாள்.

உடனே சிரித்தபடி, “நெசமாகவே பிரதமரைத் தான் சந்தித்தேன் இனியா..”  

“ஆமாம், ஆமாம் பிபிசியில் சொன்னாங்க…” எனக் கிண்டல் அடித்தாள். 

“சரி விடு,  பயிற்சிப் பட்டறை எப்படி இருக்கு?” என வேறு பேச்சுக்கு மாறினான்.

“அப்படி வாங்க வழிக்கு.…” என்றபடி அவள் பயிற்சிப் பட்டறைப் பற்றிய பொழிப்புரையை ஆரம்பித்தாள். 

அவள் பேசுவதில் விசயத்தைப் பிடித்து வம்பு செய்தான். இப்படியே நேரம் போவது தெரியாமல் பேச,  செயலாளர் இரண்டு முறை வந்து அடுத்த அப்பாய்மெண்ட்டை ஞாபகப்படுத்தினாள். 

பின் மனமே இல்லாமல் போனை வைத்தான்.

இனியா போனை வைத்து விட்டு யோசிக்கும் பொழுது, தங்கள் பேச்சுக்களில் தயக்கங்கள் மறைந்து,  இயல்பாகிப் போனதை உணர்ந்தாள். கேலியும்,  கிண்டல்களும் சகஜமாகிவிட்டதைப் புரிந்து கொண்டாள்.

 தங்களுடைய நட்பு அடுத்த கட்டத்திற்குச் செல்கிறது என்பதைத் தெளிவாக உணர்ந்தாள். இந்த உணர்வும் மிகவும் பிடித்திருந்தது.

விக்ரமும் தன் விருப்பத்தைக் காட்டுவதாகத்தான் தோன்றியது. இல்லையென்றால் மிஸ் செய்கிறேன் என்ற வார்த்தையெல்லாம் வராது என்பதைப் புரிந்தேயிருந்தாள்.

ஆனாலும் ‘இது சரியா? தவறா?’ என்ற உணர்வுப் போராட்டத்தில் இருந்தாள். பின் ஒருவழியாக, “ரொம்ப யோசிக்க வேண்டாம். பின்னால் வருவதைப் பின்னர் பார்த்து கொள்ளலாம்….” என முடிவு செய்தாள்.

அத்தியாயம் 40

புதன் காலை ஒரு மணிவாக்கில்,  போன திங்கள் பிரதமர் வளரும் இளம் தொழிலதபர்களைச் சந்தித்து உரையாடினார் என்பதும், தமிழ் நாட்டில் இருந்து மீடியா துறை சார்பாக விக்ரமும்,  ஐ.டி. துறை சார்பாக மற்றொரு தொழிலதிபர் மட்டுமே பங்கேற்றது , பரபரப்புச் செய்தியாகியது.

 

இதைப் பார்த்த இனியா கடுப்பானாள், ‘வரட்டும்… இன்னைக்கு இருக்கு தல உனக்கு..’ எனக் கருவினாள்.

 

சிறிது நேரத்தில், விக்ரம் படப்பிடிப்புத் தளத்திற்கு வர,  அனைவரும் விக்ரமைச் சூழ்ந்து கொண்டு, பாராட்டு மழையில் நனைத்தனர்.

இனியா சற்றுத் தள்ளி நின்று முறைத்துக் கொண்டிருந்தாள். விக்ரம் ஒரு கள்ளச்சிரிப்போடு ரசித்தான்.

அர்ஜன் அழைக்க,   இனியா வேறு வழியில்லாது அருகே வந்து வாழ்த்த,  கிடைத்த கேப்பில் யாரும் அறியாதவாறு கண் சிமிட்டினான்.

அவள் திகைக்க, அவன் அந்த நொடியில் மற்றவர் கவனத்தைத் தன் பக்கம் திருப்பும் விதமாக,  அனைவருக்கும் நன்றி சொல்லிக் கிளம்பினான்.

இரவில் இனியா அழைப்பாள் எனக் காத்திருக்க,  நேரம் சென்று கொண்டே இருந்தது….. அவள் அழைத்த பாடில்லை,   பொறுமை இழந்து, விக்ரமே அழைத்தான்.

போனை எடுத்த இனியா கோபமாக, “ஏன் சொல்லவில்லை  விக்ரம்?” எனக் குற்றச்சாட்டினாள்.

“சொன்னேனே இனியா…” என்று இழுக்க,

“நான் தான் நம்பவில்லை என்றும் தெரியும் தானே?  பின் ஏன் நம்பும்படியாக அழுத்திச் சொல்லவில்லை, அந்தச் செய்தியைப் பார்த்த போது,  என்னை முட்டாளாக உணர்ந்தேன் தெரியுமா?” எனக் குரல் உடையக் கேட்டாள்.

விசயம் வேறுவிதமாகப் போகிறது என்பதை உணர்ந்த விக்ரம், ‘நான் நினைக்கிற மாதிரி என்று பேசியிருக்கிறாள்?’ எனப் பெருமூச்சு விட்டான். 

பின் ஜில்லு,“நீ தப்பாகப் புரிந்து கொண்டுள்ளாய்,  உன்னை மட்டம் தட்ட நான் நினைப்பேனா?” எனச் சமாதானக்கொடி ஏற்றினான்.

இனியாவின் கவனம் பிரச்சனையில் இருந்ததால்,  அவன் அழைத்த ஜில்லு எனச் செல்ல அழைப்பைக் கவனிக்காமல், காரியத்தில் கவனமாக, “ஏன் வலியுறுத்தவில்லை?” என்று சண்டை போட்டாள்.

“கூல் ஜில்லு…” என்றவன், “நான் பேசுவதை நம்பாமல்,  நீ ஓட்டுவது, எனக்குச் சுவாரசியமாக இருந்தது, பிடித்திருந்தது. அதனால் தான்…” என்றான் தன்மையாக. 

அந்த பக்கமிருந்து பதில் வரவில்லை என்பதை உணர்ந்து, “ஜில்லு, என்னுடைய அந்தஸ்த்தால் உயரத்தால் யாரும் என்னைக் கேலி செய்யமாட்டார்கள்,  வம்பு இழுக்க மாட்டார்கள். மேலும் நான் மிஸ்டர். பெர்ஃபெக்ட்டாக எல்லோரிடமும் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயமும் உண்டு.  ஆனால் உன்னிடம் அப்படி இல்லை, குழந்தைத்தனமாக வம்பு செய்ய வேண்டும்… எந்த மனத்தடையும் இல்லாமல் பழக வேண்டும் எனத் தோன்றுகிறது….”

அவனுடைய உணர்வு வெளிப்பாட்டால் திகைத்த இனியா, “விக்ரம்…” என்று விம்மினாள்.

“புரியுதா ஜில்லு? நீ எனக்கு மிகவும் நெருக்கமானவள், முக்கியமானவள்….” என்று ஹஸ்கி வாய்ஸில் சொன்னான் விக்ரம்.

“எனக்குப் புரியுது,  உங்களுக்குத் தெரிஞ்சுதான் புரிஞ்சுதான் சொல்கிறீர்களா?” எனத் தடுமாறினாள்.

“புரியவில்லையா? எனக்கா..?”என்று சிரித்தான். பின், “ஜில்லு,  பிரதமரைப் பார்க்க வேண்டிய முக்கியமான தருணத்தில் கூட,  உன்னோடு பேசியிருக்கிறேன் என்றால் நீ எனக்கு எவ்வளவு முக்கியமானவள் என்று புரிகிறதா?” என எதிர்பார்ப்புடன் கேட்க,

நெகிழ்ந்த இனியா, பேச்சு வராமல், “ம்ம்…” என்றாள்.

“என்ன இப்படி ஒரு பதில் இனியா,  நான் உனக்கு முக்கியமானவன்தானே?” எனப் படபடத்தான்.

வார்த்தை வராமல் விம்மினாள்,  உணர்ச்சிப் பெருக்கினால் கண்ணீர் வர,  பேச முடியாமல் தலை ஆட்டினாள். தடுமாறி நின்றாள்.

இனியாவின் அமைதியை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியாமல், “ஜில்லு….” எனச் சந்தேகமாக இழுக்க, 

“அதான் தலையாட்டினேன் தானே,  இன்னும் ஏன் இழுக்கிறீர்கள்….?” எனக் கோபமாகக் கேட்க,  அந்தப்பக்கம் விக்ரம் கலகலவெனச் சிரித்தான்.

முதலில் குழம்பியவள், பின்பு தான் தலையாட்டியது. அவனுக்கு எப்படித் தெரியும் என்பதை உணர்ந்து, 

“விக்ரம்….” என வெட்கபட்டுச் சிணுங்கினாள்.

“ஹா…. ஹா….” என மீண்டும் சத்தமாகச் சிரித்தவன், “ இப்போது நான் பக்கத்தில் இருந்து, உன் அழகு முகத்தைப் பார்க்க முடியவில்லையே என ஏக்கமாக உள்ளது ஜில்லு.”

“நல்லவேளை நீங்கள் பக்கத்தில் இல்லை,  ஒரே அழுமூஞ்சியாக இருக்கிறேன் விக்ரம்.” 

“அதானே காண கிடைக்காத காட்சி…., அழுகாச்சி காவியம்….” எனச் சீண்டினான்.  

பின் அவனே, “வீட்டில் யார் இருக்கிறார்கள்? வீடியோ காலில் வருகிறாயா? உன்னைப் பார்க்க வேண்டும்…” 

இனியா யோசிக்க…

“எப்படி எப்படியோ ப்ரபோஸ் பண்ண வேண்டும் எனக் கற்பனை செய்து வைத்திருந்தேன். நீ பண்ணின அலப்பறையில், எதிர்பாராத தருணத்தில் நிகழ்ந்து விட்டது…” என அலுத்துக் கொண்டான். 

இப்போது உன் முகத்தைப் பார்க்க வேண்டும்,  காதல் சொல்லிய இந்தத் தருணத்தை அப்படியே மனதிற்குள் படம்பிடித்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன், “வருகிறாயா இனியா?” என நெகிழ்ந்து கேட்டான்.

“ம்ம்….” என்றவாறு வீடியோ காலிற்கு மாறினாள்.

கண்கள் கலங்கி,  அழுததனால் மூக்கு, கன்னம் எல்லாம் சிவக்க, புன்சிரிப்போடு நின்றாள் இனியா.

அவள் அழகை ரசித்தான், அவள் கண்களை நேராக ஊடுருவி, உணர்ச்சிக் குவியலாய், காந்தப் பார்வை பார்த்து, “ஜில்லு, ஜ லவ் யூ…‘ என்றான்.

இனியா,  மனம் நெகிழ்ந்து,  கன்னம் குழைந்து,  கண்ணீரோடு, தலையை ‘ஆம்’ என ஆட்டினாள். 

அவள் உணர்ச்சிப் போராட்டத்தைப் புரிந்து கொண்டான்.

மீண்டும்,“ஜில்லு, ஐ லவ் யூ…” என்று கூறி விட்டு,  “நாளை அழைக்கிறேன்…..” எனக் கண்ணடித்து விட்டுப் போனை வைத்தான்.

விக்ரம் அப்படியே கட்டிலில் விழுந்தான்,  ஸ்கிரீன் ஸாட்டில் எடுத்த,  கண்ணீரோடு,   புன்சிரிப்போடு இருக்கும் இனியாவின் புகைப்படத்தைப் பார்த்தபடி படுத்துக் கிடந்தான்.

“நான் எதிர்பார்க்காததைச் செய்து என்னைக் காலி பண்ணுவதே இவள் வேலையாகப் போச்சு.…” எனச் சொல்லிச் சிரித்தான்.

பின், “என் செல்ல ரோஷக்காரி….” எனக் கொஞ்சிக் கொண்டான்.

இங்கோ இனியா,  உண்மையா? பொய்யா? எதுவும் புரியாத நிலையில்,  தலையணையைக் கட்டி அணைத்தபடி,  காதிற்குள் “ஜில்லு, ஜில்லு” என்று அவன் குரலே ஒலிக்க,  கண் மூடினால்,  மூடிய விழிகளில்,  அவன் காந்தப் பார்வையோடு,  மந்தகாசப் புன்னகையோடு வர, 

இத்தனை நாள் புரியாமல் இருந்த பார்வைக்கான அர்த்தம் புரிந்தது. நீ எனக்கானவள்,  என்னுடையவள் என்பதே அது. எத்தனையோ நாள் யோசிக்கப் பயந்து,  தள்ளி வைத்த விசயம் அம்பலத்திற்கு வந்து விட்டது என அவள் மனசாட்சி அவளைக் கேலி செய்தது.  இந்த உணர்வும் பிடித்திருந்தது.

அவன் அக்கறை,  என்னுடையவள் என்ற பார்வை எல்லாமே நெஞ்சுக்குள் பறக்கிற உணர்வைத் தந்தது.

அப்படியே இருவரும் ஓர் பரவச நிலையில் உறங்கினர் .