காதல் வைபோகமே  நாள் – 10(2)

அத்தியாயம் 32

சனிக்கிழமை அன்று இனியா,  வசந்த்,  அனு,  அர்ஜுன் நால்வரும் பார்ட்டி ஹாலில் ஒரு ஓரத்தில் நின்று கலகலத்துக் கொண்டிருந்தனர். வழக்கம் போல் அனு – அர்ஜுன்,  இனியா – வசந்த் சேர்ந்து செல்வது என முடிவு செய்யப்பட்டிருந்தது.

ரோஜா,  பரத்தோடு வந்திருக்க, கார்த்திக் அவன் நண்பரோடு வந்திருக்க என யூனிட்டில் அனைவரும் வந்திருந்தனர். பார்ட்டி கொண்டாட்டமாகத் தொடங்கியிருந்தது.

வழக்கம் போல் விக்ரம் பார்ட்டி ஆரம்பித்ததும் வந்து வாழ்த்துக்களைச் சொல்லி விட்டு,  இனியாவை யாருக்கும் தெரியாமல்,  ஒரு லுக் விட்டுச் சென்றான். 

விக்ரம் ஹோட்டலில் இருந்து கிளம்பும் பொழுது, தொழில் துறை நண்பர் ஒருவரை அங்கே சந்திக்க,  வரவேற்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அரைமணி நேரம் சென்றிருக்க,  மேலும் இரண்டு நண்பர்கள் இணைந்து கொள்ள,  நேரம் போவது தெரியாமல் தொழில் பற்றிப் பேச்சு ஓடிக் கொண்டிருந்தது.

 அனு,  அர்ஜுன்,  கொஞ்சம் சிக்கிரமாகக் கிளம்ப,  வசந்த்தும் இனியாவும் சிறிது நேரம் இருந்துவிட்டுக் கிளம்பலாம் என முடிவு செய்து பார்ட்டியில் எல்லோரோடும் பேசிச் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் வசந்த்தின் நண்பன் ஒருவன்,  விபத்தில் சிக்கியுள்ளதாகப் போன் வர,  வசந்த் உடனே கிளம்ப வேண்டிய சூழ்நிலை வர,  இவன் என்ன செய்வது எனத் தெரியாமல் தயங்கினான்.

அப்போது அங்கே வந்த ரோஜா, “இனியா வீடு தாண்டித் தான் நான் செல்வேன்,  நான் டிராப் செய்கிறேன்…” என்று சொல்ல,

“இந்த நேரத்தில் நண்பன் கூட இருப்பது முக்கியமெனச் சொல்லி, ஒன்றும் பிரச்சனை இல்லை,  நான் ரோஜாவுடன் செல்கிறேன்…” என்றாள் இனியா.

 

வசந்த் அரைமனதாகக் கிளம்பினான்.

வசந்த் தனியாகப் பதட்டத்துடன் செல்வதைக் கண்டு விக்ரம் புருவம் சுருக்கினான். 

சிறிது நேரத்தில் மற்ற நண்பர்கள் கிளம்ப, 

“எனக்கு சிறிது நேரம் ஆகும்…” எனச் சொன்னான் விக்ரம். 

அவனுக்கு இனியா போவதை உறுதி செய்யாமல்,  கிளம்ப மனசில்லாமல் போனைப் பார்த்தபடி இருந்தான்.

ஒவ்வொரு நபராகக் கிளம்ப,  இனியா மட்டும் வராமல், டென்ஷன் ஏற்றிக் கொண்டிருந்தாள்.

 “எந்தச் சூழ்நிலையில் யார் கூடப் பேசிக் கொண்டிருக்கிளோ?” என நினைத்துப் போன் செய்யாமல், “ எப்படிப் போகப் போகிறாய் இனியா?” எனக் கேட்டு,  மெஸேஜ் மட்டும் அனுப்பினான். 

ஒவ்வொருவராகக் கிளம்ப,  பார்ட்டியில் இனியாவும்  டென்ஷனாகத்தான் இருந்தாள்.  பரத்தை அழைத்து வருகிறேன் என்று சென்ற ரோஜா, இருபது நிமிடமாகியும் வரவில்லை.

அவளே ரோஜாவைத் தேடிச் செல்ல, அங்கு பரத் மதுவின் உதவியால் நிலை குலைந்திருந்தான். ரோஜா அவனை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

ரோஜா, இனியாவைச் சங்கடமாகப் பார்க்க, “ஸாரி இனியா. நாங்கள் கிளம்ப முடியாது என நினைக்கிறேன்.  இங்கேயே அறை எடுத்துக் கொள்ளலாம் என யோசிக்கிறேன்…”

“நீ வேண்டுமானால் என் காரை எடுத்துக்கொண்டு போ,  நான் காலையில் கால் டாக்ஸியில் வந்து கொள்கிறேன்…” 

“எனக்கு கார் ஓட்ட தெரியாது அக்கா…” 

ரோஜா சுற்றிப் பார்க்க,  பெரும்பாலும் கிளம்பியிருந்தனர்.

ரோஜா சங்கடமாய், “ நீ வேண்டுமானால்,  பரத் விசயம் சொல்லாமல்,  வீட்டில் என்னோடு இருப்பதாகச் சொல்லி விட்டு,  அறை எடுத்துக் கொள்கிறாயா?” 

“பொய்யா?” என இனியா திகைத்தாள்.

“இது சரி வராது அக்கா,  வீட்டில் பயந்து விடுவார்கள். ஒத்துக்கொள்ள மாட்டார்கள்…”

தனக்குள்ளே, “முதலில் டென்ஷனாகாதே,  என்ன செய்யலாம் என யோசி….” என்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அமைதியாகச் சிந்திக்க ஆரம்பித்தாள் இனியா.

பின் ரோஜாவிடம், “அக்கா, நீங்க இவரைப் பாருங்கள்,  நான் ஹோட்டல் டாக்ஸி ஏதேனும் கிடைக்குமா…? என்று பார்க்கிறேன் இல்லை கால் டாக்ஸி பிடித்து போய் கொள்கிறேன்…”

“ வெரி ஸாரி இனியா” என்று ரோஜா வருத்தப்பட,

“பரவாயில்லை,  விடுங்க அக்கா சில சமயம் எதிர்பார்க்காதது நடக்கத்தானே செய்யும். எல்லாமே அனுபவம் தான்…” என்று சிரித்தாள்.

அத்தியாயம் 33

பின் வரவேற்புக்குச் சென்று,  டாக்ஸி விவரம் கேட்டாள். அவசரத்தில் இருந்ததால் அங்கு அமர்ந்திருந்த விக்ரமை இனியா கவனிக்கவில்லை.

“மேம், அனைத்து டாக்ஸியும் ட்ராப் செய்ய போயிருக்கிறது. ஐந்து நிமிடம் காத்திருங்கள்… எத்தனை மணிக்குக் கிடைக்கும் என விசாரித்துச் சொல்லுகிறேன்…” என்றார் வரவேற்பாளர்.

இவள் அதற்குள் கால்டாக்ஸி ஏதும் கிடைக்குமா? என ஆப்பில் தேடத் தொடங்கினாள்.

அப்போது விக்ரம் அருகில் வர, வழக்கம் போல் கவனிக்காமல் போனில் டாக்ஸியைத் தேடிக் கொண்டிருந்தாள் இனியா. 

கடுப்பான விக்ரம், “இனியா…” என அழைக்க, குரலை கேட்டதும், மனதில் ஒரு எதிர்பார்ப்போடு நிமிர்ந்து பார்த்தால், ருத்ரமூர்த்தியாக விக்ரம் நின்றிருந்தான்.

என்னவென்று புரியாமல் விக்ரமைப் பார்க்க, “சுற்றி நடப்பதைக் கவனி என்று எத்தனை தடவை சொல்வது,  நான் பக்கத்தில் வந்து கூப்பிடும் வரை உனக்குத் தெரியவில்லை…” என்று கோபப்பட்டான்.

“இல்லை ஸார், கொஞ்சம் டென்ஷன்….” எனத் தயங்கியபடி , தனக்கு ஏற்பட்ட பிரச்சனையைச் சொன்னாள்.

“வா,  நான் டிராப் செய்கிறேன்…” 

இனியா மனதில் நிம்மதியும்,  பாதுகாப்பு உணர்வும் தோன்றியதை உணர்ந்தாள். இருந்தும் ஒரு தயக்கம் இருக்க, அவள் தயங்க,

 அவன் முறைத்த முறையில், “ஓ.கே. ஸார்,  போகலாம்…” என்றாள்.

காரில் ஏறியதில் இருந்து இனியா அமைதியாக வர, “உன் போனை எடுத்து மெஸஜைப் பார் இனியா…” 

இனியா யோசனையோடு போனைப் பார்க்க, அதில் விக்ரமின் மெஸேஜைப் பார்த்தவுடன்,  கண்கள் விரிய அவனை பார்த்து, “எப்படி ஸார்…?” என ஆர்வமுடன் கேட்டாள்.

“வசந்த்தோடு நீ போகவில்லை என்பதைக் கவனித்தேன், அப்போதிருந்து நீ எப்படிப் போவாய் எனக் கவலை வந்து விட்டது. உனக்குப் போன் செய்யலாம் என நினைத்தேன், பின் யாரோடு பேசிக்கொண்டு இருக்கிறாயோ? உனக்கு ஏதும் தர்ம சங்கடம் ஏற்படக்கூடாது என்பதால் மெஸேஜ் மட்டும் செய்தேன்…” 

அவன் அக்கறையில் நெகிழ்ந்து,  பேச்சின்றி அசையாமல் அவனையே பார்க்க, அதற்குள், “இனியா.., இனியா…” என இரண்டு முறை அழைத்திருந்தான்.

சுதாரித்த இனியா,  சட்டென்று வெட்கச் சிரிப்போடு தலை குனிந்தாள்.

அவள் வெட்கத்தைப் பார்த்து ஃப்ரீஸ் ஆவது இவன் முறையானது.  பின்னால் கேட்ட ஹாரன் சத்தத்தில் நிதானத்திற்கு வந்தான்.

“இனியா, இப்படியெல்லாம் ஷாக் கொடுக்காதே, ஏதேனும் விபரீதம் ஏற்படப் போகிறது…” என்று கேலி செய்தான்.

இனியா முறைக்க,  இவன் கலகலவெனச் சிரித்தான். 

எப்போதும் மென் புன்னகையோடு மட்டுமே பார்த்திருந்தவளுக்கு, இந்தச் சிரிப்பு பெரிதும் கவர்ந்தது.

காரில் அமைதி நிலவ, அதை மாற்ற விக்ரம், “கார் ஓட்டத் தெரியாமலே தான்,  இந்த மாடல் கார் வாங்கப் போகிறாயா?” என வம்பிழுத்தான்.

பழைய நிகழ்வு நினைவு வந்தவுடன்,  அவனை முறைத்தபடி, “கார் வாங்கும் போது நாங்களும் ஓட்ட கத்துப்போம்” என அழகு காட்டினாள்.

“ஸாரி இனியா,  அன்று அவசரப்பட்டு தப்பாகப் பேசிவிட்டேன்”

 “அவன் ஏதாவது வம்பு செய்வான்….” என நினைத்துக் கொண்டிருக்க,  அவனுடைய ஸாரியில் திகைத்தாள்.

 பின் உஷாராகி, “ஸார்,  இப்படி அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக, டிராப் செய்வது,  ஸாரி கேட்பது என்றால் நான் தாங்க மாட்டேன். மீ பாவம்…” என்று குறும்பாகச் சிரிக்க,

“உன்னன….” என்று கலகலவெனச் சிரித்தான்.

“சரி..,சரி…. , ஜோக்ஸ் அபார்ட் , நாளை முதலில் உங்க ஏரியாவில் உள்ள நல்ல டிரைவிங் ஸ்கூலில் போய்ச் சேர்…”

“கார் வாங்கிவிட்டு நான் கற்று கொள்கிறேன். அப்போது தான் கார் தொடர்ந்து ஓட்ட முடியும்…” என்று காரணத்தைத் தேடிச் சொன்னாள் . 

 “உங்கள் வீட்டில் கார் இருக்குதானே?”

 இனியா தலையாட்ட, “அப்புறம் என்ன? டச் விட்டுப் போகாது, போய் ஒழுங்காகக் கற்றுக் கொள்…”

 “பரவாயில்லை,  நான் கார் வாங்கி விட்டே ஓட்டிக் கொள்கிறேன்…” எனப் பிடிவாதம் பிடித்தாள். 

இனியாவின் பிடிவாதத்தைப் பார்த்து,  ஏதோ உள்குத்து இருப்பதைப் புரிந்து கொண்டான் விக்ரம்.

“என்ன விசயம் இனியா?”

“ஒன்றுமில்லை ஸார்…” என்றாள் வேகமாக.

“இந்த ஒன்றுமில்லையே சொல்கிறது,  ஏதோ விசயம் இருக்கிறதென்று,  விசயத்தைச் சொல்…” என்று கட்டாயப்படுத்த,

பின் தயங்கியபடி, “நான் கல்லூரி முதல் வருடம் முடிந்தவுடன் , டிரைவிங் கற்று கொண்டேன். கொஞ்ச நாள் போனபிறகு, அம்மா சொல்லசொல்ல கேட்காமல்,  அப்பாவின் காரை எடுத்து ஆக்ஸிடென்ட் செய்து விட்டேன்.”

“எப்படி?எப்படி?” என்றான் ஆர்வமாக,

“வீட்டில் இருந்து காரை வெளியே எடுக்கிறேன் என்று காம்பௌன்ட் சுவற்றில் மோதிவிட்டேன். ஒழுங்காகக் கற்றுக்கொள்ளாமல்,  அவசரப்பட்டு ஓட்டி சேதாரமாக்கிவிட்டேன் என அம்மாவிடம் செம டோஸ்….”

“அன்று முடிவு செய்தேன், இனி என் காரில் தான் பழகவேண்டும்..” என்று தன் சபதத்தை ஏற்ற இறக்கங்களுடன் சொல்ல,  காரை ஓரமாக நிப்பாட்டி,  வயிற்றைப் பிடித்துக் கொண்டு, “ வீட்டையே தாண்டவில்லையா…?” என்று சிரிக்க,

கடுப்பான இனியா, “போதும் ஸார்,  வாய் சுளுக்கிக் கொள்ளப் போகிறது…” என்று கடுகடுத்தாள்.

இதைக் கேட்டு , விக்ரம் மேலும் சிரிக்க,  ஒரு வேகத்தில் விக்ரமின் வாயை மூடினாள்.

இனியாவின் செயலால்,  விக்ரம் திகைத்துப் பார்க்க,  அந்த நிமிடத்தில்,  தான் செய்த காரியத்தை உணர்ந்த இனியா,  கையை படக் என் எடுத்து விட்டு,  ஜன்னல் புறம் திரும்பிக் கொண்டாள்.

மனம் படபடவென அடிக்க, ‘எங்கே தன்னைத் தப்பாக நினைத்துக் கொள்வானோ?’ என்று பதபதைத்தாள். ‘என்ன பேசுவது…?’ என்று தெரியாமல் தடுமாறினாள்.

“இனியா…” என விக்ரம் பேசத் துவங்க,  இனியாவின் கைபேசி அழைத்தது.

அவள் எடுத்து, “சொல்லுங்க அம்மா”

“ஏன்டா லேட் குட்டிம்மா? எங்கம்மா இருக்க?”

“அண்ணா ஆர்ச் வந்து விட்டேன் அம்மா,  இன்னும் பத்து நிமிடத்தில் வீட்டில் இருப்பேன்.  அப்புறம் விக்ரம் ஸாரோட வரேன்…” 

“ஓ…!, சரி வாம்மா,  போனை வைக்கிறேன்…” 

மீண்டும் விக்ரம் துவங்க,  கைபேசி ஒலித்தது. “சொல்லு வசந்த்” 

“வீட்டுக்குப் போய்விட்டாயா இனியா?”

“இல்லை வசந்த்,  பத்து நிமிடத்தில் வீட்டில் இருப்பேன்,  அங்கே ஓ.கே.யா?”

“இங்கு எல்லாம் ஓ.கே.,  நண்பன் குடும்பத்தினர் வந்தவுடன் நான் கிளம்பிவிடுவேன். வீட்டுக்குப் போய் விட்டு மெஸேஜ் போடு…” என்று வைத்தான்.

அதற்குள் இனியா வீட்டுத் தெருவை நெருங்கியிருக்க,  வழி சொல்ல ஆரம்பித்தாள்,  “வலது பக்கம் கடைசியில் லைட் எரியுது பாருங்க,  அதான் வீடு…” 

விக்ரம் வண்டி வேகத்தை குறைத்து,  அவசரமாக,  “இங்கே பார் இனியா…” 

.

இனியா திரும்ப, “ரொம்ப யோசிக்காதே. இது ஒரு எதிர்வினை . இயல்பாக நடந்தது. இதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது . மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதே…” என்று சமாதனப்படுத்த,

 

 இனியா ஆசுவாசத்துடன் தலையை ஆட்ட , அவள் வீடு வரவும் சரியாக இருந்தது.

வாசலிலே கவிதாவும் கார்த்திகேயனும் காத்திருக்க,  இனியாவுடன் விக்ரமும் மரியாதைக்காக,  காரிலிருந்து கீழே இறங்கினான்.

“இனியாவைக் கூடிக் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி…” என்றார் கார்த்திகேயன்.

“வீட்டுக்கு வாங்க…” எனக் கவிதா அழைக்க, 

“நேரமாச்சு,  இன்னொரு முறை கட்டாயமாக வருகிறேன்…” என்று விக்ரம் கிளம்ப முனைய, 

“எங்களுக்கு இந்தத் துறையில் அனுபவம் இல்லை, உங்கள் வழிகாட்டுதல் இனியாவிற்கு மிகவும் உதவியாக உள்ளது.  நன்றி…” என்றார் கார்த்திகேயன். 

“நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்..” என்றார் கவிதா.

“இது சின்ன உதவிதான். பெரிய விஷயமில்லை…” எனப் புன்னகைத்தான்.

 “சரி,  நான் கிளம்புகிறேன்” என்று விடை பெற்றான்.

பின் கவிதா,  “என்னாச்சு குட்டிம்மா? , விக்ரம் ஸாரோட வந்திருக்கிறாய்?”

இனியா பேசும் நிலையில் இல்லை,  அவளுக்கு சிலது யோசிக்க வேண்டியிருந்தது. 

“ஒன்றும் பிரச்னை இல்லை அம்மா,  காலையில் விவரமாகச் சொல்லுகிறேன்,  இப்போது ரொம்பக் களைப்பாக இருக்கிறது,  படுக்கப் போகிறேன்…” 

கவிதா மீண்டும், “இனியா….” என்று ஆரம்பிக்க,

 கார்த்திகேயன் இடையில் புகுந்து, “விடு கவி,  போய் படுக்கட்டும் , காலையில் பேசிக் கொள்ளலாம்…”

“குட் நைட்…” என்று படுக்கச் சென்றாள்.

தொடரும்….