Advertisement

அத்தியாயம் 10

மேலும் இரு வாரங்கள் ஓடியிருக்க , இனியா படப்பிடிப்பு தளத்தில் நுழைந்தாள்.

 வசந்த்  மட்டும் காமிராவை கையில் வைத்து ஏதோ செய்து கொண்டிருக்க , மெதுவாக அருகில் சென்று ’பா…’ என்று பயங்காட்டினாள்.  

திடீர் தாக்குதலில் திடுக்கிட்டு , லென்ஸை கீழே போடப் பார்த்து , கடைசி நேரத்தில் பிடித்தான்.

அவளை முறைத்தபடி , “மவளே… கீழே விழுந்திருந்தால் , நீ தான் பணம் தந்திருக்கவேண்டும்…” என்றான்.

“விழவில்லை அல்லவா?  டேக் இட் ஈஸி….” என்று வியாக்கியானம் பேசினாள்.

 “தப்பித்து விட்டாய் அல்லவா? இதுவும் பேசவாய் இன்னமும் பேசுவாய்….” எனச் சிரித்தான்.

“அதை விடு, எங்கே நம் டைரக்டர்ஸ்?” 

“ஜோடிப் புறாக்கள் ஜோடியாகச் சுற்றிக் கொண்டிருக்கும்….” என வம்பளந்தான் . 

அப்போது அங்கு வந்த ராஜேஷ் , “ மீட்டிங் ஹாலில் விக்ரம் சாரோடு புது நிகழ்ச்சி பற்றிய டிஸ்கஸனில் இருக்கிறார்கள்…”  என்றான். 

“என்ன டீ டிக்காஸனோ?  , எப்படியும் ஏதாவது வெளிநாட்டு சேனலில் இருந்து சுடப் போகிறார்கள்…” எனக் கலாய்த்தபடியே திரும்ப, 

எதிரில் விக்ரம் , அனு மற்றும் அர்ஜுன் நின்றிருந்தார்கள். 

அவர்களைப் பார்த்தவுடன் , கைகளை அபிநயம் பிடித்து “மியாவ்….”  என்று நிறுத்தினாள் இனியா .

அனுவுக்கு சிரிப்பு வர , விக்ரம் கடுப்புடன் முறைப்பதைப் பார்த்து , அனைவரும் அமைதி காத்தனர்.

“என் அலுவலகத்திற்கு 12 மணிக்கு வா இனியா “என்று விக்ரம் நகர்ந்தான்.

மயான அமைதி நிலவ , அனு பக்கென்று சிரிக்க , ஃபிரண்ட்ஸ் படத்தில் வருவது போல் சுற்றி சுற்றி அனைவரும் சிரிக்க , அந்த இடமே கலகலத்தது.

“எப்படிமா சரியா மாட்டிக்கிற ?” என்று வசந்த் சிரித்தவாறு கேட்க , மீண்டும் சிரிப்பு அலையில் அந்த இடமே அதிர்ந்தது.

“ம்ம…. , வேண்டுதல்…” என்று கடுப்புடன் மொழிந்தவள்.

 “நீங்கள் எல்லாம் என் நண்பர்கள் என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது, நம் தோழி திட்டு வாங்கப் போகிறாளே…. , கூட இருந்து தைரியப்படுத்துவோம் என்றில்லாமல் , சிரிக்கிறீர்கள்.. .”

 அய்யகோ , என்ன கொடுமை சரவணா இது ..….” என இனியா டயலாக் விட , மீண்டும் சிரிப்பலை கிளம்பியது.

அனு முன்னே வந்து , அவளைக் கட்டிக் கொண்டாள் . 

“ஒரு சாரி சொல்லி விடு. எல்லாம் சரியாகிவிடும்” என்றான் அர்ஜுன். 

“நான் எதற்கு சொல்ல வேண்டும்? , இதெல்லாம் ஜாலி தான் . நானெல்லாம் சொல்லமாட்டேன் ப்பா…”என  மனதில் என நினைத்துக் கொண்டாள் . 

12 மணிக்கு விக்ரம் கேபினுக்குச் செல்ல , அவன் பி.ஏ. அவளைக் காத்திருக்கச் சொன்னாள் .  

அரை மணி நேரம் செல்ல , அவன் அழைக்கவில்லை,  இனியா மீண்டும் பி.ஏ.வைப் பார்க்க , அவள் போனில் அனுமதி கேட்க , 

விக்ரம் அந்த பக்கம் என்ன சொன்னான் என்று தெரியவில்லை… , மீண்டும் செயலாளர் , கொஞ்சம் “வெய்ட் பண்ணுங்க “என்று சொல்ல ,

அவன் மீது கடுப்பாகி அமர்ந்திருந்தாள். ” வைத்துச் செய்கிறான்…” என மனதில் சபித்தபடி இருந்தாள். 

சிறிது நேரத்தில் அழைப்பு வர , உள்ளே சென்றாள் , அமரும்படி இருக்கையைக் காட்டினான்.

அவள் அமர , மேலே பேசாமல் ஏதோ லாப்டாப்பில் பார்த்துக் கொண்டிருந்தான். 

சில நிமிடம் கழித்து ,”ஸார்….” என்று இனியா ஆரம்பிக்க ,

“என்ன? “என்பது போல் கண்களை உயர்த்திப் பார்த்தான். 

“என்னடா பார்வை இது? ஒரு நிமிடம் கூட சேர்ந்தாற் போல் பார்க்க முடியவில்லையே…” என நினைத்தாள் . உடனே அவனது பார்வையைத் தவிர்க்க , கண்களை வேறு புறம் திருப்பினாள். 

சிறிது நேரம் அங்கே அமைதியே நிலவ , “என்னடா வம்பாகிவிட்டது ?”என அவன் பக்கம் திரும்ப , 

விக்ரம் அவளைச் சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஸார்…” என்று மீண்டும் அழைக்க,

அவன் பார்வை கூர்மையாக , “வரச்சொல்லி யிருந்திங்க…”  என இழுத்தாள். 

“ஏன் என்று உனக்குத் தெரியதா?” என்பது போல் பார்வை மேலும் தீர்க்கமாக ,  

“ஸார், சும்மா விளையாட்டுக்கு தான் …..” என்று இனியா தயங்க ,

மேலும் அவன் பார்வை கூர் கத்தியாக,

 தன்னையும் அறியாமல் “ஸாரி சார்…” என்றாள்.

“ம்ம்…” என்றான். 

பின் ,” கவனித்துப் பேச வேண்டும் இனியா . அடுத்தவர்களைச் சட்டென்று குறைத்துப் பேசுகிறாய் , இது மிகவும் தவறு . உழைப்பிற்கான மரியாதையைக் கொடுக்க வேண்டும் , புரிகிறதா? “என்று வார்த்தைகளை எண்ணிப் பேசினான்.

“சரி” என்பது போல் இனியா தலையை ஆட்ட,

” ஓ.கே. இனியா , நீ போகலாம் …” 

சரியென்று கிளம்பி  கதவருகே சென்றவள் . கதவு குமிழில் கை வைத்தபடி “ இதில் கவனித்து.., குறைத்து… என்பது உங்களுக்கும் பொருந்தும் தானே ஸார்?“ என்று கேட்டு விட்டு ,  எடுத்தேன் ஓட்டம் என்று வேகமாகத் கதவைத் திறந்து வெளியேறினாள் .

 “   தல  கையில் கிடைத்தால் செத்தாய்….”  என்றபடி அந்த தளத்தை விட்டு அகன்றாள்.

அவள் பேசியதைக் கேட்டு , மெல்ல அதிர்ந்தான் . 

தன் குடும்பத்தினரே தயங்கித்தான் தன்னுடைய தவறைச் சுட்டிக் காட்டுவார்கள் என்று தோன்றியதை அவனால் தவிர்க்க முடியவில்லை .

பார்ட்டி இரவிலும் , இன்றும்  இனியா தனக்குத் திருப்பிக் கொடுத்ததை நினைத்தான் . லேசில் விடமாட்டாள் போல … ,   தைரியம் தான் எனச் சிரித்தான்

இனியா தன்னைச் சமன்படுத்துவதற்காகக் கேன்டீன் சென்றாள். “மன்னிப்பு கேட்கக் கூடாது என்று நினைத்து விட்டு, 

அவன் கேட்காமலே , நாமே சொல்லி விட்டோமே , ச்ச… , பார்வையாலே ஆட்டிவிக்கிறானே… , பயங்கரமான ஆள் தான்…,” என குமறினாள் .

 “தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்த்து விடு.. , கோபத்தைக் குறை” என்று அம்மா எத்தனையோ தடவை அறிவுறுத்தியிருக்கிறார்கள் . கேட்டால் தானே …?, என்று தலையை தட்டியவள் . 

இப்போது தலயையே குற்றம் சொல்லி விட்டு வந்திருக்கிறோம் . என்ன நடக்கப் போகுதோ ?” எனத் தன்னைத் திட்டிக்கொண்டே அமர்ந்திருந்தாள்.

இருந்தாலும் ஒருபுறம் “அவர் மட்டும் அப்படி பேசலாமா?  நான் கேலி பேசியதற்கே கூப்பிட்டுக் கண்டிப்பவர் , மனம் வலிக்கும்படி நடந்து கொண்டாரே , அது மட்டும் எப்படி சரி ?” என அவளின் இயல்பான துடுக்குத்தனமும் ஒருபக்கம் வாதிட்டது . இவ்வாறு பலவாறு யோசித்தபடி அமர்ந்திருந்தாள்.

இனியாவைத் தேடி அனுவும் , அர்ஜுனும் வர , இவள் இருந்த கோலத்தைப் பார்த்து ,” ரொம்ப திட்டி விட்டாரோ… , பிள்ளை பேய் அடித்த மாதிரி இருக்கிறாளே….” என நினைத்துக் கொண்டே அருகே வந்தனர்.

அவர்கள் வந்ததை அறியாமல் , மனத்திற்குள் விவாதம் நடத்திக் கொண்டிருந்தாள்.

 அனு வந்து தட்டிக் கொடுக்க , அர்ஜுன் என்னவென்று அக்கறையாக விசாரித்தான் . 

சின்ன திடுக்கிடலுடன் நினைவுலகிற்கு வந்தவள்  , ஒரு அசட்டுச் சிரிப்பைச் சிந்தினாள் .

“செம திட்டா?”  என அனு கேட்க , 

“அதெல்லாம் ஒன்றும் இல்லை…” என்று நடந்தவற்றைக் கூறினாள் . அவள் பகுதியை மட்டும் கத்திரித்து விட்டாள் .

“இவ்வளவு தானா? , நான் ரொம்ப பயந்திருந்தேன்…” என்றாள் அனு.

“ஹா…ஹா…” எனச் சிரித்தான் அர்ஜுன்.

“தேவையில்லாமல் பயப்படுகிறாய் எனச் சொன்னேன் அல்லவா?,  என்றான் . 

பின் இனியா பக்கம் பார்வையைத் திருப்ப ,அவள் கொலைவெறியுடன் பார்க்க ,

“சாந்தி… சாந்தி… “ என்றவாறு , என்ன ஆனாலும் மன்னிப்புக் கேட்கக் கூடாது என்று நினைத்தாய் இல்லையா இனியா ?”

“எப்படி?” என ஆச்சர்யமாக  அர்ஜனைப் பார்க்க  , 

“நான் தான் ஏற்கனவே சொன்னேன் அல்லவா?  யூ ஆர் சோ எக்ஸ்பிரஸிவ்…” என்று சிரித்தான் .

“ நீ உள்ளே போனவுடன் புரிந்து கொண்டிருப்பார், அதனால் அதை உன் வாயிலே  வர வைக்க வேண்டும் என்று நினைத்திருப்பார் . “என்று நகைக்க ,

இனியா முறைக்க , வியாபாரம் காந்தம் என்றால் சும்மாவா ?” என  மீண்டும் விக்ரமின் புகழ் பாட ,

கடுப்பான இனியா , “ உன் தோழி அவமானப்பட்டு வந்திருக்கிறாளே , அவளைச் சமாதானப்படுத்தாமல் சிரிக்கிறாய்  . நல்ல நண்பன்டா நீ….” எனப்  பொறிந்தாள்.

இது தான் சாக்கு என அனுவின் தோளணைத்து “இப்படியா? நண்பன்டா…” என சந்தானம் மாதிரி டெமோ காட்டினான். 

அனு முறைக்க , இனியா சிரிக்க , அங்கு இயல்பு நிலை திரும்பியது.

அத்தோடு விடாமல் , “ அடிக்கடி நீ விக்ரம் ஸாரைப் பற்றி மதிப்பு  குறைவாகப் பேசிகிறாய்…. இது சரியில்லை….” என்று கண்டித்தான்  .  

“மேலும்   பொது இடங்களில் கவனித்துப்  பேசு , நாளை அது உனக்கே பெரும் பிரச்சனையாகி விடும் இனியா” என நண்பனாக  அவளது குறையைச் சுட்டிக் காட்டவும் செய்தான்.

அப்படியே இனியாவிற்கு , கவிதா கண் முன்னால் வந்து போக , 

இனியா தன் தவறை உணர்ந்து ,” இனி கவனமாக இருக்கிறேன் பாஸ்” என்றாள் . சிறிது நேரம் வேறு கதைகள் பேசிவிட்டு கலைந்தனர் .

அத்தியாயம் 11

நாட்கள் அதன் பாட்டில் செல்ல ,  தற்செயலாகச் சந்திக்கும் நேரங்களில் , விக்ரமிற்கும் இனியாவிற்கும் பார்வை உரசல்கள் நடந்தேறின . இனியா குழப்பமாகப் பார்க்க , விக்ரமோ ரசனையோடு பார்த்தான் .

சாருமதி மேடம் விடுமுறை முடிந்து வர , சேனல் “சி” கன்னட மொழியில் தொடங்க , அந்தச் சேனல்  பொறுப்பிற்கு அனுப்பப்பட்டார் .  இங்கே விக்ரமே  பொறுப்பைத் தொடர்ந்தான் .

அடுத்தடுத்த வாரங்களில் “செல்லமே” நிகழ்ச்சி சூப்பர் ஹிட்டாகியது . 

“செல்லமே”யின்  வெற்றி  , அர்ஜுனுக்கு அடுத்த நிகழ்ச்சியைத் தேடித் தந்தது . அர்ஜுன் புதிய சமையல் நிகழ்ச்சிக்கு   இயக்குனரானான் . 

அனுவிற்கு “செல்லமே” இயக்குனராகப் பதவி உயர்வு கிடைத்தது . 

அர்ஜுன் சமையல் நிகழ்ச்சிக்கான டிஸ்கஷனில்  சுறுசுறுப்பாக ஓடிக் கொண்டிருந்தான் . அவ்வப்போது “ செல்லமே” செட்டிற்கு வந்து அனுவைப் பார்த்து காதல் கீதம் பாடிச் செல்வான்.

கடுப்பான வசந்த்தும் இனியாவும் , “ கொசுத் தொல்லைத் தாங்க முடியவில்லை” எனக் கலாய்த்தனர் . 

அதற்கெல்லாம் அசருகிற ஆளா அர்ஜுன்? அவன் பாட்டுக்கு வந்து ஜொள்ளினான். 

ஒரு நாள் , “தல தல என்பாயே… இப்போது ஜோடிப் புறாக்களைப் பிரித்து விட்டார் பார் “ என இனியா வம்பு பேச ,

அதற்கு அர்ஜுன் , “உனக்குத் தலயை குற்றம் சொல்லவில்லை என்றால் தூக்கம் வராதே , அவர் எங்களுக்கு நல்லது தான் செய்துள்ளார்…” என்று சொல்ல ,

“என்ன? உங்களைப் பிரித்ததா….? நல்லதா..? அனு கவனம் , பாஸ் ரூட் மாறுகிறார்  போல ….? என்று கொளுத்திப் போட ,

அனு முறைக்க , வேகமாக அனுவின் கையைப் பிடித்தபடி ,

” ஏம்மா இனியா ,  உனக்கு ஏன் இந்தக் கெட்ட எண்ணம் ?  நல்லா இருக்கிற வீட்டில் ஏன் இப்படி கும்மி அடிக்கிறாய் , நீ நல்லா வருவ….” எனக் கொதித்தான்.

பின் “நல்லது என்றால் என்ன? எனக் கேளு அனு..” என வசந்த் எடுத்துக் கொடுக்க , 

அர் ஜுன்  கைப்பிடியில் இருந்து  அனு  தன் கையை உருவ முயல ,

“ஏன்டா , உங்களுக்கு இந்தக் கொலைவெறி ? அனும்மா…. இருடா , நான் சொல்வதைக் கேள்….” எனக் கெஞ்ச. 

“விடாதே அனு…  “என்று இனியா ஏத்தி விட,  

அர்ஜுன் வேகமாக, “உனக்கும் எனக்கும் பதவி உயர்வு கிடைத்துள்ளது , அதனால் வாழ்க்கையில் சீக்கிரம் செட்டிலாகலாம் எனச் சொல்ல வந்தேன் . அதற்குள் படுபாவிகளா….. என்ன பேச்சு? “என அங்கலாய்த்தான். 

மீண்டும் , ”அனும்மா , இப்பத்தான் ரொம்பப் பயமாய் இருக்கு , இவனுங்க கூட , உன்னைத் தனியா விட…” என்று புலம்பினான் .

பின் “விக்ரம் ஸார் காலில் விழுந்தாவது , இதற்கு வேறு ஏற்பாடு செய்ய வேண்டும்..” எனப் படபடக்க , 

அந்த இடம் சிரிப்பலையில் நிறைய , விக்ரம் செட்டிற்குள் நுழைந்தான்.

“என்னாச்சு? என்ன நடக்குது, இங்கே…?” என்று ஒரு ஆர்வத்தில்  விக்ரம் கேட்க , திருவிழாவில் காணாமல் போனவர்கள் போல் அனைவரும் முழிக்க , 

உடனே இனியா அவசரமாக , “சும்மாதான்…ஒன்றும் இல்லை ஸார்…” என ஆஜராக , அவனுக்கு ஆவல் கூடியது . 

உடனே ,”எங்கே நம் அடிமை ?” என விழிகளைச் சுழற்றி , “அர்ஜுன்…” எனக் கூப்பிட ,

“சும்மாவே அர்ஜுனைக் கேட்க வேண்டாம், ஃபளாட் தான், இப்பொழுது பேர் வேறு சொல்லியாகிவிட்டது, இனி முழு கதாகாலட்சேபத்தை நடத்தி விடுவானே….” எனப் பயந்து , அனுவைச் சுரண்டினாள் இனியா .

உடனே சுதாரித்த அனு ,” ஸார்…” என ஆரம்பிக்க , 

இந்த நாடகத்தைக் கவனித்தவன் , அவளை இடைமறித்து   “சொல்லுங்க அர்ஜுன்….” என்றான்.

உடனே அர்ஜுன் அனைத்தையும் ஒப்பிக்க , ஒரு மெல்லிய புன்னகையோடு கேட்டுக் கொண்டிருந்தான்.

“என்னடா அதிசயம்…?” எனச் சுற்றுபுறத்தை மறந்து ,  அவன் புன்னகையைப் பார்த்துத் திகைத்து நின்றாள் இனியா , 

மேலும் “உங்க ஃபீலிங் புரியுது அர்ஜுன்…., ஏதாவது ஏற்பாடு பண்ணலாம் ”  என விக்ரம் சிரிக்க ,

“தல சிரிக்கக் கூட செய்யுமா? “என விழி அசைக்காது பார்க்க,

இந்த சைக்கிள் கேப்பில் யாரும் கவனிக்காதவாறு , இனியா திகைத்து நிற்பதைப் பார்த்தவன் . ஓர் ஆழ்ந்த  பார்வையை அவள் மீது செலுத்தி விட்டு, அர்ஜுனுடன் பேசியவாறு நகர்ந்தான் . 

இனியா மனம் படபடக்க நின்றாள்.

தொடரும்…

Advertisement