சென்னை அண்ணா நகரில் இருந்த அந்த வீடு ரணகளமாகிக் கொண்டிருந்தது. அங்கு நம் கதாநாயகி இனியா , தன்னிடம் இருக்கும் உடைகள் அனைத்தையும் கட்டில் மேல் கடைப் பரப்பிருந்தாள்.
கவிதா உள்ளே எட்டிப் பார்த்து விட்டு, ஏதும் சொல்லாமல் நகர்ந்தாள்.
அம்மாவை மறித்து , “பொண்ணு முதன்முதலில் பெரிய சேனலுக்கு வேலைக்கு் போகிறாளே , கூட இருந்து அவளுக்கு டிரஸ் தேர்ந்தெடுத்துக் கொடுத்து, அழகாக ரெடியாக உதவுவோமே என இல்லாமல், எனக்கென்ன கண்டுக்காமல் போறியேம்மா…” என வம்பு வளர்த்தாள்.
அப்போது அங்கே வந்த கார்த்திகேயன் கேட்டு விட்டு, “கவி, உதவி செய்டா , குட்டிம்மா டென்ஷனாக இருக்கா பார்”
கவி பதில் சொல்ல வாயைத் திறக்கும் முன் , அவள் செல்லத் தங்கை காவியா…. தற்போது பொறியியல் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறாள்.
“நீங்கள் இப்போதுதான் பாங்க் ஆடிட்டிங் என பெங்களூர் போய் விட்டு வந்திருக்கிறீர்கள் அப்பா. ஒரு வாரமா இந்தக் கூத்து தான் நடக்குது”
கார்த்திகேயன் , டெபாசிட் இழந்த மந்திரி போல் பார்க்க, உஷாரான இனியா , ஒரு கெஞ்சும் பார்வையை வீசினாள்
“இல்லைடா , என்ன இருந்தாலும் முதல் அனுபவம் , முதல் நாள் இல்லையாடா ? ”
“ம்ம்…., சரி…”
“புளூ கலரில் ஆடித் தள்ளுபடியில் எடுத்தாயே… அந்தச் சுடிதார் போடு , நன்றாக இருக்கும்….”
“சுடியெல்லாம் போட்டால் கொஞ்சம் பெரிய மனுசி போல் தெரியாதா?” என இனியா இழுக்க ,
“எப்படியும் நான் சொல்லுவதைக் கேட்கப் போவது இல்லை….. அப்புறம் எதுக்கு?” என ஜம்ப்கட்ஸ் ஸ்டைலில் செய்தாள்
“ கருப்பு ஜீன்னும் , மஞ்சள் குர்த்தியும், போடுடா, உனக்கு நல்ல சூட் ஆகும்….”
“அது ரொம்ப சிம்பிளாக இருக்கும் அப்பா…” எனச் சிணுங்கினாள்.
இவை, அனைத்தையும் கதவில் சாய்ந்தபடி , நமட்டுச் சிரிப்போடு , பார்த்து விட்டு கவிதா நகர,
“அம்மா….” என இனியா இழுக்க ,
“ஏன், நானும் மொக்கை வாங்கவா , போடி… நான் பேராசிரியராக்கும்….” எனக் கெத்துக் காட்டினார். “ஒழுங்காக இருபது நிமிடத்தில் ரெடியாகி வா , நான் கல்லூரி செல்ல வேண்டும்”
“அப்பா…. “ என்று இனியா பார்க்க ,
அவரும் தலைக்கு மேல் பெரிய கும்பிடு போட்டு , “கவி..” என்றவாறே கீழே சென்றார்
“வருங்கால பிரபல வீ.ஜே.க்கு , இந்த வீட்டில் மரியாதை இல்லை , ஒரு நாள் நீங்க எல்லோரும், இந்த வி.ஐ.பி. கிட்ட பேசக் காத்திருப்பீர்கள்…” என அண்ணாமலை ஸ்டைலில் தொடையில் தட்டி வசனம் பேச ,
தலையில் அடித்தவாறு , “சிக்கிரம் வா லேட்டாகுது…..” என்றாள் காவியா.
பின் ஒருவாறு முடிவு செய்து , ப்ளாக் லாங் ஸகர்ட்டும், சின்ன வேலைப்பாடுகள் உடைய மெரூன் டாப் அணிந்து, அதற்கேற்றவாறு ப்ளாக் மெட்டலில் ஜிமிக்கி, அதற்கு இணையாக கழுத்துக்கு , கைக்கு அணிந்து கொண்டாள். தன் நீண்ட முடியைச் சின்னக் கிளிப்புக்குள் அடக்க முயற்சித்து, அது அவளைப் போல் அடங்காமல் பறக்க, அதை ஒதுக்கி , கண்ணில் மைதீட்டி , நெற்றியில் சின்னப் பொட்டிட்டு , லேசான உதட்டுச் சாயத்துடன் தயாரானாள்.
இனியா அசரடிக்கும் அழகியில்லை , ஆனால் கடந்து செல்பவர்களைத் திரும்பிப் பார்க்கும் வைக்கும் வகையில், குறுகுறு கண்களோடு, துறுதுறுவென, சிரித்தால் கன்னத்தில் குழி விழ , உதட்டோரத்தில் எப்போதும் ஒரு சிரிப்போடு இருப்பாள்.
இனியாவிற்கு , சிறு வயதிலேயே மீடியாவில் திரைக்கு முன்னால் வேலை செய்ய வேண்டும் என்பது கனவு. (புகழ்பெற்ற வீ.ஜே.வாக ஆசை) .
பிரபலங்களை , பெரிய தலைவர்களைச் சந்திக்க வேண்டும் , பேட்டி காண வேண்டும் என்பது லட்சியம். (லட்சியம் , கனவு என்ற வார்த்தைகளைப் பார்த்து விட்டு , நம்மாளை சின்சியர் சிகாமணி என்று நினைத்து விடாதீர்கள்!! சரியான அறுந்த வாலு)
அக்கா தங்கைக்குள் அடிதடி நடக்கும் பொழுது, ஆண்பாவம் படத்தில் வருவது போல் இவள் உயிர் அவள் கையில் , அவள் உயிர் இவள் கையில் தான்.
“ஆண் பிள்ளைகள் கூட இப்படிச் சண்டை போட்டுக் கொள்ள மாட்டார்கள்….“என்று தலையில் அடித்துக் கொண்டு கவிதா பிரித்து விடும் நிகழ்வை அடிக்கடி காணலாம்.
இனியா, பன்னிரெண்டு முடித்தவுடன் , விஸ்காம் படிக்க வேண்டுமென அடம் பிடிக்க , கவிதா பலத்த எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்பாவிடம் சிபாரிசுக்குப் போக , கார்த்திகேயன் பஞ்சாயத்துத் தலைவராகி, “ஆசிரியராக இருந்து கொண்டு நீயே குழந்தைகளின் கனவை ஒடுக்கலாமா ? அவள் இஷ்டத்துக்கு விடு, நன்றாக வருவாள்…” எனச் சொம்பில்லாமல் தீர்ப்பு அளித்தார்.
பின் ஒரு வழியாக அம்மாவிடம் கெஞ்சி, கொஞ்சி முழு சம்மதத்தைப் பெற முயல ,
கவிதாவும், அந்த வேலையில் இருக்கும் சாதக பாதகங்களைப் பேசி, அத்தொழிலால் ஏற்படும் மன அழுத்தம் , சமூக அழுத்தத்தை விளக்கி, அதற்கு மேலும் இனியா தன் முடிவில் உறுதியாகவும் , தெளிவாகவும் இருக்கிறாள் என்பதை அறிந்து கொண்டபின் சம்மதித்தார்.
சென்னையில் பிரபல கல்லூரியில், அவள் மதிப்பெண்ணுக்கு இடம் கிடைத்தது.
இனியா இயல்பிலே, படபட பட்டாசு தான். அதனால் கல்லூரியில் அவளைச் சுற்றி ஆட்கள் இருப்பதோடு, அவள் இருக்கும் இடம் மிகவும் கலகலப்பாக இருக்கும். கல்லூரி வாழ்க்கையை, தன் வீஜே கனவுக்கும் , அடித்தளமாக்கிக் கொண்டாள்.
பெரும்பாலான கல்லூரி நிகழ்ச்சிக்குத் தொகுப்பாளினியாக இருந்தாள். இறுதியாண்டில் ஒரு பிரபல யூ – டியூப் சேனலில் தன்னை இணைத்துக் கொண்டாள்
அங்கு அவள் செய்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
அதைப் பார்த்துத் தான் பிரபல ‘சேனல் சி’ யில் வேலைக்கு அழைத்திருந்தார்கள்.
அந்த வேலைக்குத்தான். மிகுந்த நம்பிக்கையோடு, ஆர்வத்தோடு கிளம்பிக் கொண்டிருக்கிறாள் .
“சரி, சரி , சாமி கும்பிட்டு விட்டு, சாப்பிட வா…” என்றார் கவிதா
பின் சாப்பிட்ட படி , “இன்று ஆக்டீவாவில் போக வேண்டாம் , காரில் போ. அப்போது தான் முகம் ஃப்ரஷ் ஆக இருக்கும்….”
“சரிம்மா….” என்றவள் , அனைவரின் வாழ்த்துக்களையும் பெற்ற பிறகு , நுங்கம்பாக்கம் நோக்கிப் புயலெனப் புறப்பட்டாள்
அத்தியாயம்2
அந்தப் பிரபல சேனலின் இரண்டாவது தளம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
வரவேற்பாளரிடம் அழைப்பைக் காண்பிக்க, வரவேற்பாளரும் புன்னகையோடு, “இடது பக்கம் திரும்பிச் சென்றால், சுரேஷ் (HR) பெயர் பலகை இருக்கும், அவரைச் சந்தியுங்கள்…”
இனியாவும் ஒரு சிநேகப் புன்னகையோடு, நன்றி நவிழ்ந்து விட்டு நடந்தாள்
கதவைத் தட்டிக் காத்திருக்க, “எஸ்… கமின்…” எனக் குரல் கேட்டு உள்ளே சென்றாள். நாற்பது வயது மதிக்கதக்கவர் அமர்ந்திருந்தார்.
“இனியா...” என அறிமுகப்படுத்திக் கொண்டு கடிதத்தைத் தந்தாள்.
கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, “உட்கார் இனியா…” என்றார் . அதன் பின் அங்கு சிலபல சம்பிரதாயங்களை முடித்துவிட்டு, “வாழ்த்துக்கள்…” எனக் கை கொடுத்தார்.
பின் உதவியாளரை அழைத்து, “சாருமதி மேடத்திடம் கூட்டிச் செல்லுங்கள்….”
உதவியாளருடன் நடக்க, “ஹாய் அண்ணா, நான் இனியா….”
ஒரு ஆச்சிரியப் பார்வையுடன் , “நான் ராஜேஷ்…”
“இங்கே வீ.ஜே.யாக, ஜாயின் பண்றேன்….”
“ஓ…!” என்றார் முகமெல்லாம் புன்னகையாக, பின்னர், “வாழ்த்துக்கள்….” என்றார்.
அந்த அலுவலகத்தில் தன் முதல் ரசிகரை பிடித்து விட்டாள்.
அப்படியே பேசியபடி நடக்க, மூன்றாவது தளம் வர , அறையைக் காட்டி விட்ட, அவர் நகர,
“நன்றி அண்ணா, அப்புறம் பார்க்கலாம்…” எனக் கை அசைத்தாள்.
“புரோகிராம் ஹெட்” என்று எழுதியிருக்க , கதவைத் தட்டி உள்ளே சென்றாள்.
கண்டிப்பான தலைமை ஆசிரியராக சாருமதி அமர்ந்திருந்தார். மீண்டும் அறிமுகப்படலம் நடந்தேறியது.
“ உன் புரோகிராம் பார்த்தேன் , நன்றாகச் செய்கிறாய்…”
“நன்றி மேடம்“ எனச் சிரித்தாள்.
“அப்புறம் ஒரு குழந்தைகள் புரோகிராம் புதுசா லான்ச் பண்றோம் . வீஜே புதுமுகமாக இருந்தால், நன்றாக இருக்கும் எனத் தோன்றியது, அதனால் தான் உன்னைத் தேர்வு செய்துள்ளோம். என் தேர்வை சரியென்று நீ நிரூபிக்க வேண்டும், புரிகிறதா?”
“கட்டாயமாக, நான் நன்றாகச் செய்வேன் மேம்…”
அப்போது கதவைத் தட்டிக் கொண்டு, அர்ஜுன் உள்ளே வர , மீண்டும் அறிமுகப்படலம். இப்பவே கண்ணைக்கட்டுதே.., முடியலை!! என மைண்டு வாய்ஸ் ஓட!… , ஆனால் வெளியே அக்மார்க் புன்னகையோடு இருந்தாள்
“இவர் தான் உன் நிகழ்ச்சி இயக்குனர்….” என சாருமதி கூற , உடனே பவ்யமான மோடுக்கு மாறினாள்
அவள் முகமாற்றங்களை வைத்து, அனைத்தையும் அர்ஜுன் கண்டு கொண்டான். பின் சிரித்தபடி கை குலுக்கினான் .
“டேக் கேர் ஆஃப் ஹெர் அர்ஜுன்….”
“ஓகே, மாம்…”
பின் இருவரும் வெளியேர , அர்ஜுன் சிரித்தபடி, “‘முடியலை’என நினைச்ச இல்ல…”
என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தவள், பின்பு ஐந்தாவது தளத்தில் நடக்கும் ஸ்டார் சிங்கர் படப்பிடிப்பிற்குச் செல்ல நினைத்து , லிஃப்ட் பயன்படுத்தாமல், படிகளில் ஏறினாள்.
எங்கோ படித்த, ‘க்ராஸ் ஆக நடந்தால், ஏறுவது சுலபம்….’ என்று மிகவும் (!!!) புத்திசாலித்தனமான யோசனையைப் பின்பற்றி ஏறினாள்.
நான்காவது தளத்தின் படியில், நீண்ட கால்கள், இவள் படியில் இந்தப் பக்கம் சென்றால் இந்தப் பக்கம், அந்தப் பக்கம் போனால் அதே பக்கம் வந்தது.
அவள் மாறினாள் என்றால், அந்தக் கால்களும் மாறின.
“யார்டா விளையாடுவது?” என்று நிமிர்ந்து பார்க்க,
சுட்டெரிக்கும் பார்வையோடு நின்றிருந்தான் ஒரு நெடியவன் .
‘யாருடா இவன்?’ என்று யோசிக்க, ஒரு கோபப் பார்வையோடு, அவளைக் கடந்தான் .
‘ஜெம் (GEM) இஞ்சி தின்ன குரங்கு)’என்று மனதில் திட்டியவாறே, ஸ்டார் சிங்கர் செட்டிற்குச் சென்றாள்.
புயலடித்து ஓய்ந்த சென்னை மாதிரி இருந்தது தளம். என்னவென்று வினவ….. , கிரியேடிவ் ஹெட் கைங்கர்யம் என்று புரிந்தது.
மேலும் கேள்விக்கணையைத் தொடுக்க வாயைத் திறக்க, அவள் கைபேசி மணி அடித்தது , “உடனே வா…” என்றாள் அனு.
அங்கிருந்தவர்களுக்குக் கை அசைத்தவாறு தன் தளத்திற்கு ஓடினாள்.
“உன்னை இங்கே தானே இருக்கச் சொன்னேன்….” என்று அர்ஜுன் கடிந்தான்.
“மன்னிச்சு.. மன்னிச்சு… “எனக் கையை வளைத்துத் தலை வணங்கினாள்.
“உன்னை..” என்று அர்ஜுன் சிரிக்க , அந்த நெடியவன் இந்த விளையாட்டைப் பார்த்தவாறு உள்ளே நுழைந்தான்.
“வெல்கம் சார்…..” என அர்ஜுன் அழைக்க, அந்த இடம் பரப்பரப்பாக, அவன் நடுநாயகமாக அமர்ந்தான்.
“தென், வாட் அபௌட் யுவர் நீயூ பிராஜக்ட்?” அதிகாரமாகக் கேட்டான் .