Advertisement

காதல் வானவில் 7

“விஜிமா….எப்படா வந்த….”என்ற அன்னையின் குரலில் சுற்றம் மறந்து சிறு பிள்ளை போல் ஓடினான் விஜய்.மகனை பார்க்க நீலவேணி வாசல் வந்து கொண்டிருக்க,அதற்குள் உள் நுழைந்த விஜய்,

“ஹாய் நீலூ….”என்று கத்திக் கொண்டே அவரை ஒருதூக்கு தூக்கி சுற்ற,

“டேய் விடுடா…விடுடா….”என்று நீலவேணி கத்தினார்.

“டேய் விஜய்…அம்மாவை கீழ இறக்கு….அவளுக்கு தான் இந்த மாதிரி சுத்துனா பிடிக்காதுனு தெரியும்ல…அப்புறம் ஏன் இப்படி செய்யுற…”என்று செல்ல அதட்டலுடன் வீட்டின் பின்கட்டில் இருந்து உள்ளே வந்தார் ஆனந்தன்.

“ஹாய் ப்பா…”என்ற கூறிக் கொண்டே நீலவேணியை கீழே விட்டுவிட்டு ஆனந்தனிடம் சென்று அவரை இறுக கட்டிக் கொண்டான்.மகனை உச்சி முகர்ந்தவர்,

“எப்படா வந்த…கீதூ வந்துட்டாளா…எப்போதும் வேணிம்மானு இங்க வந்துடுவா…எங்க அவ….”என்று வாசலை பார்த்தவாறு ஆனந்தன் கேட்டார்.

“ம்ம்…அவ எங்க வர போறா….அதான் அவளோட பிரண்ட் கூட வந்துருக்காள்ல….அவளோட இருப்பா…”என்று விஜய் கூற,

“அது யாருடா….நம்ம கீதூக்கு பிரண்ட்…”என்று ஆனந்தன் ஆர்வமாக கேட்க,

“ஒரு பொண்ணு கூட நீ வெளில பேசிக்கிட்டு இருந்தியே அந்த பொண்ணா…”என்று நீலவேணி ஆர்வமாக கேட்க,விஜய் ஆமாம் என்னும் விதமாக தலையாட்டினான்.அவர் மேலும் மிருணாளினியை பற்றிக் கேட்கும் முன்,

“ம்மா…எனக்கு பசிக்குது…சாப்பாடு எடுத்து வைங்க…நான் குளிச்சிட்டு வரேன்….”என்று விட்டு மேலே தனது அறைக்கு சென்று மறைந்துவிட்டான்.போகும் மகனையே ஒருமாதிரி பார்த்துக் கொண்டிருந்தார் நீலவேணி.

“என்ன வேணிமா…”என்று அவரது தோள்களை தொட்டார் ஆனந்தன்.

“ஒண்ணுமில்லை….நான் ஏதாவது அந்த பொண்ணை பத்திக் கேட்டுவேன்னு தான் இப்படி ஓடுறான்….”என்று தன் மகனை சரியாக கனித்து கூற,

“விடுமா…அவனுக்கே தோணும் போது அவனே சொல்லுவான்…அவன் என்ன சின்ன பிள்ளையா….இன்னும் கொஞ்ச நாள்ல வேலைக்கு போகப்பாறான்….”என்று ஆனந்தன் மகனுக்கு ஆதரவாக பேச,

“சரி…சரி…நான் உங்க பிள்ளையை எதுவும் கேட்கலை போதுமா….”என்று நீலவேணி சிரித்துக் கொண்டே கூற,

“எனக்கு என் மகனும் முக்கியம்,என் வேணிமாவும் முக்கியம்….”என்று கூறி தான் ஒரு சிறந்த குடும்ப தலைவர் என்பதை நிருபித்தார் ஆனந்தன்.அவரது பதிலில் எப்போதும் போல் அவரது தோள்களில் ஒரு அடி செல்லமாக தட்டிவிட்டு சென்றார் நீலவேணி.

ஆனந்தன் அரசு வங்கி ஒன்றில் கணக்கராக வேலை பார்க்கிறார்.நீலவேணி அரசு பள்ளியில் நடுநிலை பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார்.இவர்கள் இருவரும் காதல் மனம் முடித்த தம்பிதியர்.இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்க அவர்களிடம் தங்கள் காதலுக்காக போராடி தோற்றவர்கள் வீட்டை எதிர்த்து திருமணம் முடித்தனர்.

மகன் தங்களை மதிக்கவில்லை என்று கூறி ஆனந்தன் குடும்பம் அவரை முற்றிலுமாக ஒதுக்கியது.நீலவேணியின் குடும்பமோ அவரை மன்னித்து விட்டால் அவருக்கு பின் இருக்கும் இரு மகள்களுக்கு திருமணம் முடிக்க முடியாது என்று ஏதேதோ காரணங்கள் கூறி அவர்களை விலக்கி வைத்தனர்.ஆனந்தன்,நீலவேணி தம்பதியரை ஆதரித்தது சிதம்பரமும் அவரும் துணைவியும் தான்.

ஆனந்தனும்,சிதம்பரமும் சிறுவயது நண்பர்கள்.சிதம்பரத்திற்கு,ஆனந்தனின் காதல் விஷயம் தெரியுமாதலால் அவர் ஆனந்தனுக்கு தன்னாலான அனைத்து உதவிகளும் செய்தார்.ஆனந்தன் படிப்பை முடித்தவுடன் அவருக்கு அரசு வங்கியில் வேலை கிடைத்துவிட்டது,அதே போல் நீலவேணியும் படிப்பை முடித்து ஆசிரியர் பணிக்கான தேர்வுகளை எழுதிக் கொண்டிருந்தார்.

நீலவேணிக்கும் ஒருவருடம் கழித்து அரசு ஆசிரியர் பணிகிடைத்துவிட்டது.பின் நால்வரும் சென்னைக்கு குடிபெயர்ந்தனர்.சென்னையில் சிதம்பரமும்,ஆனந்தனும் சேர்ந்தே ஒரு இடத்தை வாங்கி வீடு கட்டி குடிவந்தனர்.மகள் நல்லநிலையில் இருப்பதைக் கண்ட நீலவேணியின் குடும்பம் அவருடன் மீண்டும் ஒட்டிக்கொண்டனர்.ஆனால் நீலவேணி அவர்களை ஒரு கட்டத்திற்கு மேல் தங்களை நெருங்கவிடமாட்டார்.

தங்களை உதறிய உறவுகள் கற்று தந்த பாடம் அவர் மனதில் ஆழமாக பதிந்து போனது தான் அதற்கு காரணம்.ஆனந்தன் நீலவேணியின் குடும்பத்துடன் ஒட்டி உறவாடவும் மாட்டார் அதே சமயம் அவர்களை அவமதிக்கவும் மாட்டார்.மொத்ததில் தாமரை இலை மேல் உள்ள நீர் துளி போல இருக்கும் அவர்களது உறவு.

நீலவேணி பணியில் சேர்ந்து ஒருவருடத்தில் கருத்தரித்தார்.அவரை நன்கு கவனித்துக் கொண்டது சிதம்பரத்தின் மனைவி ஜானகி தான்.எப்போதும் அக்கா அக்கா என்று தன் பின்னே சுற்றும் கள்ளம்கபடமற்ற ஜானகி என்றால் நீலவேணிக்கு உயிர்.இருவரும் நல்ல தோழிகள் என்பதை விட சகதோரிகள் என்றே கூறலாம்.

ஆனந்தன்,நீலவேணி தம்பதியருக்கு தங்க செல்வமாக பிறந்தான் விஜய்.மாநிறம்,அழகிய முகம்,எப்போதும் சிரிக்கும் அவனது அதரங்கள் என்று அவனை பாரக்க பார்க்க தெவிட்டவில்லை அந்த தம்பதியருக்கு.ஜானகிக்கோ சொல்லவே வேண்டாம் திருமணமாகி நெடு நாட்கள் பிள்ளை இல்லாமல் தவிப்பவர் ஆதலால்.அவருக்கு விஜய் என்றால் உயிர்.

விஜய் பிறந்து இரு மாதங்கள் கழித்து ஜானகி கரு தரித்தார்.ஜானகியை தாங்கினார் சிதம்பரம்.அவர்களுக்கும் அழுகு ஓவியமாக கீர்த்தனா பிறந்தாள்.அதன் பின் அவர்களின் வாழ்வு என்பது சொர்க்கம் என்று தான் கூற வேண்டும்.கீர்த்தனா செய்யும் சேட்டைகளை,அவளை ஜானகியிடம் இருந்து காப்பதே விஜயின் வேலையாகி போனது.

நீலவேணிக்கும் கர்ப்பையில் கட்டி வளர்ந்ததால் அவருக்கும் அடுத்த குழந்தை பிறக்காமல் போனது.ஆனந்தனுக்கு எப்போதும் துருதுரு என்று சுற்றும் கீர்த்தனா என்றால் உயிர்.இவ்வாறு நால்வரின் வாழ்வில் சில கஷ்டங்கள் இருந்த போதிலும் சந்தோஷம் அமைதியாகவே சென்றது.ஆனால் அது ஜானகிக்கு புற்று நோய் என்று கண்டறியப்படும் வரை,ஆம் அவருக்கு கர்ப்பை புற்று நோய் என்று அனைவருக்கும் தெரியவர அனைவரின் சந்தோஷமும் நிலைகுலைந்து தான் போனது.

ஜானகி படுக்கையில் விழுந்தவுடன் விஜய் தான் எப்போது அவரின் பக்கத்தில் இருப்பான்.அப்போது விஜய்,கீர்த்தனா இருவரும் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தனர்.கீர்த்தனாவிற்கு தன் அன்னைக்கு ஏதோ உடல் நிலை சரியில்லை என்று மட்டும் தான் தெரியும் அவளிடம் உண்மையை கூறினாள் அவள் மிகவும் பயந்து போவாள் என்று யாரும் கூறவில்லை.ஆனால் விஜய்க்கு ஜானகியின் உடல் நிலை பற்றி தன் தாய்,தந்தையின் பேச்சில் இருந்து ஒரளவிற்கு தெரியும்.அதனால் எப்போதும் பள்ளி முடிந்ததும் அவரிடம் தான் தஞ்சம் அடைவான்.

அவ்வாறு விஜய் வரும் நேரங்களில் ஜானகி பேசும் ஒரே வாக்கியம்,

“விஜி குட்டி….நீ தான் பெரியவானாலும் என் பொண்ணை நல்ல பார்த்துக்கனும்…அவளுக்கு ஒன்னும் தெரியாது நீ தான் அவளுக்கு ஒரு நல்ல வழிகாட்டியா இருக்கனும்….எனக்காக செய்வியா கண்ணா…”என்று கேட்பார்.விஜயும் அவரிடம்,

“நான் கண்டிப்பா பார்த்துப்பேன் அத்த…நீ சீக்கிரம் எந்திரிச்சுவா…எனக்கு நீ நெய் தோசை சுட்டா தான் ரொம்ப பிடிச்சிருக்கு அதனால சீக்கிரம் வா….”என்று கூறுவான் அந்த சிறுவன்.அவனுக்கு தெரியாது இல்லையா ஜானகி இனி எழவேமாட்டார் என்று இவ்வாறு ஒவ்வொருவர் மனதையும் ரணப்படுத்தி,தன்னையும் ரணப்படுத்திக் கொண்டு இறந்தார் ஜானகி,ஆம் ஜானகியின் கடைசி நிமிடங்கள் மிகவும் கொடுமையானவை எதிரிக்கு கூட அந்த நிலை வரக்கூடாது என்று தான் கூற வேண்டும்.

ஜானகிக்கு உடல்நிலை சரியில்லாத போதே தன் மனதை சிதம்பரம் விட்டுவிட்டார்.அவரை ஆனந்தன் தான் தேற்றி கொண்டு வந்திருந்தார்.ஆனால் அவரே ஜானகி இறந்த அன்று கதறி தீர்த்துவிட்டார்.நீலவேணிக்கோ எதுவும் கண்ணிலும் கருத்திலும் பதியவில்லை அவரது சகோதிரி இனி இந்த உலகத்தில் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை.அதோடு தேம்பியபடி தன் மடியில் படித்திருந்த கீர்த்தனாவை பார்க்கும் போது எல்லாம் மனது அவளுக்காக ஊமையாக அழுததது.விஜயோ தன் பாசமிகு அத்தை இறந்ததை ஏற்க முடியாமல் தடுமாறி நின்றான்.

ஜானகி என்பவரின் இழப்பை மறக்க அனைவருக்குமே நாட்கள் தேவைப்பட்டது.ஒருவாறு அனைவரும் தேறி வந்தனர்.ஆனால் கீர்த்தனா மட்டும் தன் மனதில் உள்ள ரணத்தை மறைக்க தன்னை சுட்டி போல் காட்டிக் கொண்டாள்.அவளது மனவேதனை விஜய்க்கு மட்டும் தான் தெரியும்.அவன் ஒருவனே அவளை அதட்டி,உருட்டி அந்த வேதனைகளை போக்குவான்.தன் அன்னையின் துயரில் இருந்து கீர்த்தனாவும் வெளிவர தொடங்கினாள்.இவை அனைத்தையும் கீர்த்தனா மிருணாளினியிடம் தன் அறையில் கூறிக் கொண்டிருந்தாள்.அனைத்தையும் கேட்ட மிருணாளினிக்கு இவர்களின் அழகான கூடுபோல் இருக்கும் குடும்பம் மிகவும் பிடித்துவிட்டது.சிறுவயதில் இருந்தே குடும்பம் என்ற கட்டமைப்புக்குள் வளர்க்கப்படாதவள் மிருணாளினி.கீர்த்தனா மற்றும் விஜயின் குடும்பத்தை பார்க்கும் போது அவளுக்குள்ளும் இதே போல் ஒரு குடும்பம் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் பிறந்தது.ஆனால் அவள் கேட்ட அனைத்தும் கிடைக்காதே என்று நினைக்கையில் எப்போதும் கசந்த முறுவல் தோன்றி மறைந்தது.

தனது அறையில் படுத்துக்கொண்டு விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த விஜயின் நினைவுகளை மீண்டும் மிருணாளினியே ஆக்கரமித்தாள்.

“ச்ச..நான் ஏன் அவளை வீட்டுக்கு கூப்பிட்டேன்….திமிருபிடிச்சவ…”என்று அவளை மனதிற்குள் திட்டனான்.இவை எல்லாம் காலை அவளை பார்க்கும் வரை தான் நீடித்தது.காலை ஆறு மணிக்கு எப்போதும் போல் எழுந்தவன் தன் அறையில் உள்ள பால்கனியில் சென்று சிறிது நேரம் நின்றுவிட்டு தான் தன் வேலைகளை தொடங்குவான்.அன்றும் அதே போல் நிற்க,

“ரொம்ப அழகா இருக்கு…இந்த இடம்…..”என்று மிருணாளினியின் குரல் கேட்க,வேகமாக கீழே பார்க்க,தங்கள் வீட்டு தோட்டத்தில் காலையில் பூத்த புது மலர் போல நின்றிருந்தாள் பெண்.அவள் தோட்டத்தில் உள்ள வண்ண மலர்களை ரசிக்க,இவன் அவளை ரசிக்க என்று அந்த காலை வேளை இனிமையாக இருந்தது.

Advertisement