Advertisement

காதல் வானவில் 32 1

தன் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருந்த நீலவேணி வாசலை பார்ப்பதும் பின் தன் கையில் உள்ள கைபேசியில் யாருக்கோ அழைப்பதுமாக இருந்தார்.முகத்தில் அவ்வளவு கவலை அப்பிக்கிடந்தது.ஆனந்தன் அப்போது வீட்டின் உள் நுழைய அவரிடம் வேகமாக வந்த வேணி,

“என்னங்க….என்ன ஆச்சு….”என்று பதட்டத்துடன் கேட்க,அவர் இல்லை என்னும் விதமாக தலையை ஆட்டினார்.அவருக்குமே மனது கடந்து அடித்துக்கொண்டது.

“வேணிமா….”என்று கத்தியபடி உள்ளே வந்தாள் கீர்த்தனா.அவளைக் கண்டதும் இருவரும் தங்கள் கண்களை துடைத்துக் கொண்டனர்.

“வேணிமா எங்க விஜி….”என்று கேட்க,அவரோ ஆனந்தனை பார்த்தார்.அவரின் பார்வை உணர்ந்தவர்,

“எங்கோ வெளியில போயிருக்கான் டா….வந்துடுவான்….”என்று கூற,அவரை ஒருமாதிரியாக பார்த்த கீர்த்தி,

“என்ன ஆச்சு ப்பா…ஏன் ஒருமாதிரி இருக்கீங்க….”என்று கேட்க அவர்கள் இருவரிடமும் பதிலில்லை.அதேநேரம் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது.வீட்டில் உள்ளவர்கள் வேகமாக வெளிவந்தனர்.

காரில் இருந்து இறங்கிய விஜய் மறுபக்கம் சென்று கதவை திறக்க மிருணாளினி அமர்ந்திருந்தாள்.

“மகாராணிக்கு இறங்குனு சொல்லனுமா…..இறங்கு….”என்று விஜய் வார்த்தைகளை கடித்து துப்ப,தன் அடிப்பட்ட காலை ஊணமுடியாமல் இறங்கி நிற்க முயற்சி செய்யதவள் முடியாமல் போக வேகமாக வந்து அவளை தன் கைகளில் ஏந்தினான் விஜய்.மிருணாளினியை கண்டவுடன் வேகமாக அவளின் அருகில் வந்த கீர்த்தனா விஜயின் அருகில் வந்தவள் மிருணாளினியின் கோலம் கண்டு திகைத்து நின்றுவிட்டாள்.

மிருணாளினியை கைகளில் ஏந்திய விஜய் கீர்த்தனாவின் அருகில் வந்து,

“கீதூ….கொஞ்ச நேரத்தில ஒரு லேடி டாக்டர் வருவாங்க….என் ரூமுக்கு அழைச்சிட்டு வா….”என்று தகவல் போல கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றான்.வீட்டில் நுழையும் போது தங்களையே துளைக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்த விஜயையின் பெற்றோரைக் கண்டு மிருணாளினி அவனிடமிருந்து இறங்க பார்க்க அவனது பிடி மேலும் இறுகியது.

“இப்ப என்ன ஒழுங்க இரு….இல்லை….”என்று பல்லை கடித்து கூறிக் கொண்டே அவனது அறைக்கு வந்தவன் நேராக அவளை குளியலறையில் விட்டான்.அழுது கண்கள் வீங்கி அவனையே பார்த்துக் கொண்டு அவள் நிற்க,

“என்ன என் மூஞ்சில ஏதாவது எழுதி ஒட்டியிருக்கா…”என்று கேட்க,அவளோ மெல்ல மலர்ந்த புன்னகையுடன் இல்லை என்னும் விதாமக தலையாட்ட,அவளின் மருண்ட விழிகள் மேலும் அவனை இம்சை செய்ய தலையை கோதி தன்னை நிலைபடுத்திக் கொண்டவன்,

“போடி…எப்ப பாரு…வெறிக்க வெறிக்க பார்க்க வேண்டியது…..எரிச்சல கிளப்பிக்கிட்டு….”என்று எரிந்து விழுந்துவிட்டு நகர்ந்தான்.வேகமாக வெளியில் வந்து மற்றொரு அறையில் நுழைந்தவன் தன்னை சுத்தபடுத்திக் கொண்டு வெளியில் வர அப்போது அவன் அழைத்திருந்த பெண் மருத்துவர் வந்திருக்க,

“வாங்க….”என்றவன்,கீர்த்தியின் காதில் ஏதோ கூற அவள் அவனை ஒருமாதிரி பார்த்துவிட்டு வேகமாக தன் வீட்டுற்கு சென்றாள்.இவை அனைத்தையும் ஆனந்தனும்,வேணியும் ஏதோ படம் போல பார்த்துக் கொண்டிருந்தனர்.மேலே மருத்துவருடன் ஏதோ பேசிக் கொண்டே ஏறிக் கொண்டிருந்த விஜய் தன் பெற்றோரின் முகத்தைக் வைத்தே அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டவன் மருத்துவரை தன் அறைக்கு அனுப்பிவிட்டு வேகமாக அவர்களிடம் வந்து,

“நா…நான்….உங்களுக்கு எல்லாம் விளக்கமா சொல்லுறேன்….இப்ப..”என்ற அவர்களிடம் பேசினாலும் கண்கள் என்னவோ தன் அறையை நோக்கி கொண்டிருந்தது.அதை உணர்ந்த ஆனந்தன்,

“நீ முதல்ல போய் அந்த பொண்ணை பாரு….அப்புறம் பேசிக்கலாம்….”என்று தன்மனநிலையை பேசிவிட,விஜயின் கண்கள் தன் தாயை கெஞ்சலாக,யாசகமாக வேண்டியது.வேணியோ அவனை முறைத்து பார்த்தாரே தவிர வேறு எதுவும் பேசவில்லை.அவரது முகம் மேலும் இறுகி போய் இருக்க அதுவே கூறியது அவருக்கு தன் முடிவில் விருப்பமில்லை என்று எடுத்துறைத்தது.

“ம்மா….நான்….”என்று அவன் அழைக்கும் முன்னே தன் கையுர்த்தி அதை தடுத்தவர் வேகமாக தன் அறைக்குள் சென்றுவிட்டார்.தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைக்க தோன்றாமல் விஜய் நிற்க,அவனின் தோள்களை ஆதரவாக பிடித்து தட்டிக் கொடுத்த ஆனந்தன்,

“எனக்கு உன் மேல கோபமில்லைனு எல்லாம் சொல்ல மாட்டேன்…..ஆனா என் புள்ள எதுவும் தப்பான காரியம் செஞ்சிருக்க மாட்டான் அதை நான் நம்புறேன்….அவளும் அப்படிதான்….ஆனா அவளுக்கு ஒருசில விஷயங்களை ஏத்துக்க என்று கூறிவிட்டு அவனின் அறையை காட்டியவர்,புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்…கொஞ்சம் டையம் கொடு அவளுக்கு….”என்று தன் பிள்ளைக்கும்,மனைவிக்கும் பாதகமில்லாமல் பேசிவிட்டு செல்ல விஜய்க்கு தான் என்னவோ போல் ஆனது.இதை எப்படி சரி செய்ய போகிறேன் நான் என்று தனக்குள் எழுப்பிக் கொண்டவனுக்கு பதில் தான் புலப்படவில்லை.

“விஜி….விஜி….”என்று கீர்த்தியின் தொடர் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவன் தன் கண்களை துடைத்துக் கொண்டு,அவளிடம் இருந்த பொருட்களை வாங்கி கொண்டு நீயும் வா கீதூ…என்று அழைத்து சென்றான்.

விஜயின் அறையில் மிருணாளினியை பரிசோதித்த மருத்துவர் அவளின் காயங்களுக்கு மருந்திட்டு முடித்திருக்க,அப்போது கீர்த்தியும்,விஜயும் உள்ளே நுழைந்தனர்.

“கால் காயம் கொஞ்சம் பெருசா இருக்கு…தலையிலையும்,கையிலையும் காயம் சின்னது தான் பயப்பட தேவையில்லை….வலிநிவாரணி கொடுக்குறேன்….கொடுங்க….”என்றவர் சில மருந்துகளை எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.விஜயும்,மருத்துவரும் வெளியேற அதற்காகவே காத்திருந்தவள் போல் மிருணாளினியின் அருகில் வந்த கீர்த்தி,

“ஏய் என்னடி என்ன ஆச்சு….”என்று பயந்தவாறே கேட்க அதற்கு மிருணா பதிலளிக்கும் முன் வேகமாக திரும்பி வந்த விஜய்,

“உன் கதையெல்லாம் அப்புறம் உட்கார்ந்து சொல்லு…இப்ப போய் அவ கொடுத்த டிரஸை மாத்து….போ…..”என்று கட்டளையாக கூற,மிருணாவிற்கு அழுகையில் உதடு துடித்தது.என்ன தவறு செய்துவிட்டேன் என்று இவ்வாறு என்னை வதைக்கிறான் என்று மனதில் நினைத்துக் கொண்டவள் படுக்கையில் இருந்து எழுந்து நிற்க,

“நீ எந்த தப்பும் செய்யவேயில்லை….அதான….சொல்லு சொல்லுடி….”என்று விஜய் அவளின் மனதோட்டத்தை சரியாக கணித்து பேச மிருணாளினியின் கண்கள் விரிந்தது.

“உன் முட்டை கண்ணை விரிச்சு விரிச்சு பார்த்து என் உயிரை எடுக்காத போ….முதல்ல இந்த புடவையை மாத்து….போ….”என்று அவளை விரட்ட,இவர்கள் இருவரையும் ஏதோ வினோதமாக பார்த்தபடி நின்றாள் கீர்த்தனா.விஜய்,மிருணாளினி இருவரும் இரு வேறு துருவங்கள் என்று தெரியும் இவர்களுக்குள் காதல் என்று எல்லாம் கீர்த்தனா நினைத்து கூட பார்க்கவில்லை.இப்போது கூட அவள் பார்வைக்கு மிருணாளினிக்கு அவன் ஏதோ உதவி செய்து அழைத்துவந்துள்ளான் என்று தான் புரிந்துகொண்டாள்.

மிருணாளனி குளியலறைக்கு செல்லவும் அருகில் இருந்த கீர்த்தி விஜயிடம்,

“ஏன்டா இப்படி திட்டிக்கிட்டே இருக்க…அவளே ஏதோ பயந்து போயிருக்கா….உனக்கு அவளை பிடிக்கலைனா இப்படி தான் திட்டுவியா….”என்று குழந்தை தனமாக கேட்க,விஜய்க்கு அவளின் கேள்வியில் தன்போல் சிரிப்பு வந்துவிட்டது வருண் சில சமயம் கூறுவது போல் இவள் இன்னும் வளர வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு,

“சரி நான் தான் திட்டினேன்…உன் பிரண்ட் ஏன் அமைதியா போறா…அவ தான் சண்டை கோழியாச்சே குறிப்பா என்கிட்ட சண்டை போடம இருக்கமாட்டாளே….”என்று கீர்த்தியை மேலும் குழப்ப,

“ஆமா இல்லை….ஏன்….”என்று சிறிது நேரம் யோசித்துவிட்டு,

“ஆங்….அவளுக்கு இப்போ வேற எதுவோ பிரச்சனை அதான்…உன்கிட்ட சண்டை போடலை….”என்று தான் கண்டிபிடித்ததை கூற விஜய் அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான்.அப்போது தான் குளியலறையில் வெளிவந்த மிருணா தன்னவனின் விரிந்த புன்னகையை கண்டு வாயிலேயே நின்றுவிட்டாள்.வெகுநாட்களுக்கு பிறகு அவனின் முகம் மலர்ந்த புன்னகையை காண்கிறாள் இவ்வளவு நேரம் மனதில் பட்ட ரணங்களுக்கு தன்னவனின் புன்னகை மருந்தாக இருந்தது.

“டேய் எதுக்குடா இப்ப சிரிக்கிற….சொல்லு….”என்று கீர்த்தி கேட்க அதற்கும் சிரிக்க,கீர்த்தனாவிற்கு கோபம் வர,

“டேய் எருமை மாடே…எதுக்கு சிரிக்கிற…சொல்லுடா…என்னை ஏதோ கிண்டல் பண்ணுற தான…சொல்லு….”என்று அவனின் தோள்களை வேகமாக அடிக்க,மிருணாளினிக்கு அவர்களின் பிணைப்பை பார்க்கும் போது அவ்வளவு நிறைவாக இருந்தது,மறந்தும் அதில் பொறாமை இல்லை.குழந்தை மனம் மாறாத தன் தோழியை காண்கையில் அவ்வளவு பிடிக்கும் மிருணாவிற்கு அதுவும் அவள் தனக்காக விஜயிடம் சண்டையிடும் நேரங்களை மிகவும் ரசிப்பாள்.இன்றும் அதே போல் ரசித்துக் கொண்டிருக்க,

“டிரஸ் மாத்திட்டனா வெளியில வா…அது என்ன உள்ளயிருந்தே பார்த்துகிட்டு இருக்குறது….வா வெளியில…”என்று குரலில் கடுமையை காட்டி கூறினான்.அதுவரை சிரிப்பில் குலுங்கிய அவளின் அதரங்கள் இப்போது சோர்ந்து சுருங்கியது.

“நீ ஏன்டி இப்படி இருக்க…என்ன ஆச்சு…பங்ஷன் பாதியில எங்க போனீங்க இரண்டு பேரும்….”என்று கீர்த்தனா வரிசையாக கேள்வி கணைகளை தொடுக்க மிருணாளினி விஜயை பார்த்தாள்,அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க கீர்த்தனாவிற்கு தான் எதுவும் புரியவில்லை.

“ஏய் இப்ப இரண்டு பேரும் சொல்ல போறீங்களா இல்லையா….”என்று கீர்த்தி கோபத்தில் கத்த,சுயம் வந்த விஜய்,

“ஆங்….அதை உன் பிரண்ட் கிட்டயே கேளு….எப்போதும் நான் என்ன சொல்லுறேனோ அதுக்கு எதிர்பதமா செய்யுறது தான அவ வேலையே….”என்றவன் நிற்காமல் சென்றுவிட்டான்.போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்த மிருணாளினிக்கு மனதில் பாரம் ஏறிகொண்டது இன்று நடந்தவை அனைத்தும் கண் முன்னே விரிய தன்னை போல் உடலில் நடுக்கம் பிறந்தது,

“மிருணா….என்னதான் பிரச்சனை ஏன் இப்படி இரண்டு பேரும் ஏதோ போல பேசிக்கிறீங்க….”என்று கீர்த்தியின் குரல் சற்று கலக்கத்துடன் ஒலிக்க,அவளை நெருங்கிய மிருணா,

“ஏய் என்னடி இது சின்ன பிள்ளையாட்டும் அழுதுகிட்டு…..எனக்கு ஒண்ணுமில்லை….நான் நல்லா தான் இருக்கேன்…”என்று கூற அவளின் கைகளை தட்டிவிட்டவள்,

“போதும் நீ எதுவும் சொல்லவே வேண்டாம்….என்னை பார்த்த பைத்தியம் மாதிரி இருக்கா…நீ வந்த நிலை என்னனு நான் பார்த்துக்கிட்டு தான இருந்தேன்….”என்று அழுதேவிட்டாள்.அவளுக்கு மிருணாவும்,விஜயும் வேறு வேறு இல்லை.

மிருணா அவளை இழுத்துபிடித்து தன் பக்கத்தில் அமர வைத்து நடந்தவிடயங்களை கூற ஆரம்பித்தாள்.

Advertisement