Advertisement

காதல் வானவில் 26

விஜயை மாலை பார்த்துவிட்டு வந்ததிலிருந்து மிருணாளினிக்கு மனது ஒருநிலையில் இல்லாமல் தவித்தது.அவள் மருத்துவமனையில் அவனை அணைத்த போது அவனது முகத்தில் இருந்த உணர்வு அது என்ன என்று தான் அவளுக்கு புரியவில்லை.ஒருவித அலைபுரிதல் அவளின் மனதை மீண்டும் மீண்டும் அலைக்கழிக்க அந்த இரவு அவளுக்கு கழிவதே நரகமாக தான் இருந்தது.

காலை எழுந்தவுடனே விஜயை பார்க்க கிளம்பிவிட்டாள் மிருணாளினி.நாளை அவனை வீட்டிற்கு அனுப்புவதாக இருந்தனர்.அதற்குள் தன் மனதில் இருப்பதை தெளிவுபடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தாள்.அவள் வந்தபோது வருணும்,கீர்த்தனாவும் அவன் அறையின் வாயிலில் நின்றிருந்தனர்.

“என்னடி ஏன் இங்க நிக்குற…என்ன ஆச்சு…..”என்று மிருணாளினி பதட்டமாக கேட்க,

“ப்ச்….ஒண்ணுமில்லடி டாக்டர் செக்கப் பண்ணுக்கிட்டு இருக்கார்….அதான் வெளியில இருக்கோம்….”என்று கூறியவள்,

“ஓய் நீ ஏன்டி இன்னைக்கு காலையிலேயே வந்திருக்க…. ஓஓஓ…விஜியை இன்னைக்கு டிஸ்ஜார்ஜ் பண்ணுறாங்கனு வந்திருக்கியா….”என்று கேள்வியும் கேட்டு பதிலும் அவளே கூற,மிருணாளினி அவளுக்கு தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.வருணுக்கு மிருணாளினியின் முகத்தை பார்த்தே ஏதோ சரியில்லை என்று தோன்றியது.

விஜயின் அறையில் இருந்து வெளியில் வந்த டாக்டர்கள் உடன் விஜயின் பெற்றோரும் ஏதோ பேசிக் கொண்டே வந்தனர்.

“டாக்டர் மத்த எதுவும் பிரச்சனை இல்லையே….அவன்…அவன் நல்லா தான இருக்கான்….”என்று நீலவேணி உள்ளே கேட்ட கேள்வியே திரும்பி திரும்பி கேட்டவாறே வர,டாக்டரும் புன்னகை மாறாமல் வேறு ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு சென்றார்.அவர் சென்றவுடன் ஆனந்தன்,

“நீ சும்மா பயந்து பயந்து அவனையும் பயமுறுத்தாத….புரியுதா….”என்று சற்று அதட்டலாக கூறினார்.

“நான் என் மனசு தெளிஞ்சுக்க கேட்டேன்…நீங்க ஏன் இப்படி எரிஞ்சு விழரீங்க….”என்று வேணியும் பதிலுக்கு கத்த,வருண் தான் இருவருக்கும் இடையில் புகுந்து இருவரையும் சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று.அவர்கள் இருவரையும் ஒருவழியாக பேசி வீட்டிற்கு அனுப்பினான்.இன்று மாலை விஜயை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று கூறியிருந்தனர்.

நீலவேணியும்,ஆனந்தனும் சென்ற பின் மூவரும் அறைக்குள் நுழைய அங்கே கண்டது கட்டிலில் எதையோ தீவிரமாக யோசித்தபடி அமர்ந்திருந்த விஜயை தான்.அவனது முகமே ஏதோ குழப்பமாக இருப்பது போல இருந்தது மிருணாளினிக்கு மனதிற்குள் பல இடி மின்னல் அடிப்பது போல் இருந்தது.

“என்னடா என்ன யோசனை….”என்று வருண் முதல் ஆளாய் கேட்க,

“டேய் என்ன பதட்டபடாதனு சொல்லிட்டு இப்ப நீ என்ன செய்யுற….எருமை….”என்று பதட்டம் கண்டு கீர்த்தனா அவனின் தலையில் தட்ட,

“ஏய் ஏன்டி என்னை அடிச்ச…”என்று வருணும் சண்டைக்கு நிற்க அந்த இடம் மீண்டும் போர்களம் ஆனது.மிருணாளினியின் விழிகள் விஜயை தவிர வேறு எதுவும் விழவில்லை நேராக அவனின அருகில் சென்றவள்,

“என்ன ஆச்சு விஜய்….ஏன் ஒருமாதிரி டிஸ்டர்ப்டா இருக்க….”என்று கேட்க,அவளை நிமிர்ந்து பார்த்தவன் எதுவும் கூறவில்லை,

“ப்ச்….இப்ப என்ன ஆச்சுனு சொல்ல போறியா இல்லையா….”என்று மிருணாளினியின் குரல் சற்று ஓங்கி ஓலிக்க,அப்போது தான் வருண்,கீர்த்தனா தங்கள் சண்டையை விட்டுவிட்டு அவளின் அருகில் வந்து,

“ஏய் ஏன்டி நீ இப்படி கத்துற….”என்று கீர்த்தனா கேட்க,வருணோ,

“ப்ச் நீ சும்மா இரு கீதூ….டேய் மச்சி என்னடா….”என்று விஜயிடம் கேட்க,

“நீ எப்போதிலேந்து என்கிட்ட பேச ஆரம்பிச்ச…நீ தான் என் கூட சண்டை போட்டு போயிட்டல்ல….”என்று மிருணாளினி பார்த்து கேட்க,மற்ற மூவருக்கும் ஏதோ திகில் படம் பார்த்தது போல் பேயறைந்து நின்றனர்.

முதலில் தெளிந்த கீர்த்தனா,

“டேய் என்னடா சொல்லுற…அவ எப்படா உன்கிட்ட சண்டை போட்டா….”என்று கேட்க,

“ப்ச்…..கீதூ….இவளாள தான அந்த பிரசன்டேஷன் பிரச்சனை ஆச்சு…அதனால தான் சண்டை என்ன உனக்கு எப்போதும் இவ சம்மந்தபட்ட விஷயம்னா மறந்து போயிடுமே….”என்று அனைவரின் தலையிலும் இடியை இறக்கினான் விஜய்.அவளுக்கு மறக்கல உனக்கு தான் மறந்து போச்சு என்று வருண் மனதில் அலாரம் அடித்தது.

“டேய்ய்ய்…..மச்சீசீ….”என்று அதிர்ந்து அழைத்தான் என்றால் கீர்த்தனாவோ,

“என்ன விஜி சொல்லுற…எனக்கு எதுவும் புரியலை….”என்று குழம்பி நின்றாள்.

“டேய் விஜய் உனக்கு எதுவும் நியாபகம் இல்லையா…”என்று வருண் பதறி கேட்க,விஜய் அவனை புரியாத பார்வை பார்த்தான்.அதுவரை அவனின் பக்கத்தில் ஏதோ உரிமையில் நின்ற மிருணாளினியின் கால்கள் தன் போல் பின்னே செல்ல முயல ஆனால் நகர முடியாமல் போனது அவளின் கரங்கள் விஜயின் வலுவான கரங்களில் சிறைப்பட்டிருந்தது.

தன் மனதில் ஏற்படும் எரிமலை மறைத்தவாறே அவனை கலங்கிய விழிகளுடன் ஏறிட,அவனும் அவளை தான் ஆராயாயும் விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.மிருணாளினிக்கு ஏதோ நெருப்பின் மீது நிற்பது போல் இருந்தது விஜயின் வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கம் அவளை முற்றிலுமாக நிலைகுலைய வைத்திருந்தது.அவனின் கைகளில் இருந்து தன் கைகளை விடுவிக்க போராட விஜயின் பிடி மேலும் இறுகியதே தவிர தளரவில்லை.

“கையை விடு விஜய்….”என்று கரகரப்பான குரலில் மிருணாளினி கூற,அவளை முறைத்துவிட்டு அவளது கைகளை மேலும் வலிக்கும் வண்ணம் பிடித்து திருகியவன்,

“முடியாது….”என்று அழுத்தமாக கூற,

“டேய்….நான் இங்க கேட்டுக்கிட்டு இருக்கேன்…பதில் சொல்லுடா….”என்று வருண் விஜயின் தோள்களை பற்றி உலுக்க,அதில் தன்னிலை பெற்றவன் வருணின் புறம் திரும்பி,

“ப்ச் என்னடா….நீ என்ன சொல்லுற அது தான் எனக்கு புரியலை….எனக்கு என்ன ஆச்சு…”என்று கேட்க வருண் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.விஜயை வருண் உலுக்கும் போது அவனின் கைகளில் இருந்து தன் கையை விடுவித்த மிருணாளினி அவனை விட்டு எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சென்றுவிட்டாள்.அந்த அறையின் மூளையில் சுவற்றுடன் சுவர் போல் ஒன்றி நின்றுவிட்டாள்.மனது ஏற்படும் வலியை மறைக்க முயன்று முடியாமல் தோற்றவள் விஜயை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

வருண் வேகமாக வெளியில் சென்று டாக்டரை அழைத்து வந்து விபரம் கூற,அவர் மற்றவர்களை வெளியில் இருக்க சொல்லிவிட்டு விஜயிடம் சில விபரங்களை கேட்டார்.அவனை மீண்டும் பரிசோதித்துவிட்டு வந்தவர் வருணை தனியே அழைத்தார்.

“டாக்டர்….என்ன ஆச்சு….ஏன் இப்படி பேசுறான்….”என்று பதட்டத்துடன் கேட்க,

“வருண் கொஞ்சம் பொறுமையா இருங்க….அவருக்கு அந்த பிரசன்டேஷன் நடந்ததுக்கு அப்புறம் நடந்த எந்த விஷயமும் நியாபகத்தில இல்லை….இதை நாங்க பார்ஷியல் மெம்மரி லாஸ்னு சொல்லுவோம்….இது தானாவே சரியாகலாம் இல்லை அந்த நியாபகங்கள் வரமேலேயே போகலாம்….”என்று டாக்டர் கூற,

“என்ன டாக்டர் இப்படி சொல்லுறீங்க….”என்று பதட்டம் குறையாமல் கேட்க,

“ரிலாக்‌ஸ் வருண்….அவருக்கு தலையில பெரிய அடி அதனால தான் அவருக்கு இப்படி ஆகிடுச்சு…நான் திரும்பி அவரோட ரிப்போர்ட்ஸ் எல்லாத்தையும் செக் பண்ணிட்டு உங்களை கூப்பிடுறேன்….”என்று கூற வருணுக்கு அவர் கூறவதை கேட்பதை தவிர வேறெதுவும் செய்யமுடியவில்லை.அவன் டாக்டர் அறையில் இருந்து வெளியில் வர அங்கே நிராசசைகள் தாங்கிய கண்களுடன் நின்றிருந்தாள் மிருணாளினி.

வருணுக்கு அவளை எதிர்கொள்ளவே முடியவில்லை கடந்த ஒருமாதமாக தான் அவளை பற்றி அனைத்தும் விஜய்க்கு தெரியும் அதனால் தான் இருவரும் நெருங்கி வந்தனர்.ஆனால் இப்போது விஜய் இருக்கும் நிலை அதற்கு மேல் அவனால் நினைக்கமுடியவில்லை.தன் நண்பனை எண்ணி அழுவதா இல்லை மிரணாளினியை தேற்றுவதா என்று புரியாமல் அவன் அல்லாட,

“வருண்….என்னடா என்ன கீதூ…என்னவோ சொல்லுறா….என்னடா ஆச்சு என் பையனுக்கு….”என்று பதறியபடி வந்தனர் விஜயின் பெற்றோர்கள்.தலை கலைந்து ஓட்டமும் நடையுமாக வந்திருந்தனர்.வீட்டிற்கு பாதி தூரம் சென்று திரும்பியுள்ளனர் என்று அவர்கள் வந்த விதத்திலேயே புரிந்தது.இப்போது உடனே இவர்களுக்கு தெரிவிக்க வேண்டுமா என்று கீரத்தனாவின் மீது கோபம் ஒருபுறம் வர தன்னை முயன்று கட்டுபடுத்திக் கொண்டு நிற்க,

“டேய் வருண்….என்னடா சொல்லு ஏன் இப்படி நிக்குற….”என்று ஆனந்தன் பதற நீலவேணியோ பதட்டத்தில் பேச நா எழாமல் அவரின் பின் நின்றார்.இப்போது தானே பார்த்துவிட்டு சென்றோம் நன்றாக தானே பேசினான் நன்றாக இருக்கிறான் என்று நினைத்து தானே சென்றோம்,சற்று முன் கீர்த்தனாவின் அழைப்பு வரும் வரை விஜயை பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது கீர்த்தனாவிடம் இருந்து அழைப்பு வர ஏற்றவர்களுக்கு அவள் கூறிய செய்தியில் உலகம் இருண்டது போன்றதொரு உணர்வு.மகனை நினைத்து பதட்டத்துடன் வேகமாக மீண்டும் மருத்துவமனைக்கே வந்துவிட்டனர்.

“ப்ச் அங்கிள் கொஞ்சம் அமைதியா இருங்க ப்ளீஸ்….அவனுக்கு ஒண்ணுமில்லை…”என்று கூற,

“என்ன என்னடா என்ன ஒண்ணுமில்ல….ஆங் கீதூ ஏதோ சொல்லுறா….நீ என்னமோ சொல்லுற…நீ முதல்ல தள்ளு நான் போய் டாக்டரை பார்த்துட்டு வரேன்…..”என்று ஆனந்தன் பதட்டபட,வருணால் ஒருகட்டத்திற்கு மேல் அவர்களை தடுக்க முடியவில்லை அவர்கள் டாக்டரை பார்க்க சென்றுவிட,அவர்களின் பின்னே வந்த  கீர்த்தனாவிடம் வேகமாக சென்ற வருண்,

“ஏய் உனக்கு கொஞ்சம் கூட அறிவு இருக்காதா…எதை எப்ப சொல்லனும்னு தெரியாது….பைத்தியம்…..பைத்தியம்….”என்று கோபமாக திட்ட தொடங்க,கீர்த்தனாவிற்கு அழுகை பீறிட்டது.

“ஏய் ஏய் இப்ப அழுது ஊரைக் கூட்டுன…உன்னை கொன்னுடுவேன் பார்த்துக்க….”என்று அதற்கும் கத்தியவன் அங்கு அருகில் இருந்த இறுக்கையில் தலையை தாங்கியபடி அமர்ந்துவிட்டான்.

மிருணாளினி அங்கு ஓரமாக வேரில்லாத மரம் போல் அமர்ந்துவிட்டாள்.மனது முழுவதும் விஜயின் வார்த்தைகளே வலம் வர தன்னை தானே மாய்த்துக் கொள்வோமா என்று தான்  தோன்றியது.அவளால் முன் போல் எல்லாம் மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எல்லாம் இல்லை அந்தளவிற்கு விஜய் அவளின் மனதை நிறைத்திருந்தான்.அவனில்லாமல் அவளாள் இருக்கவே முடியாது.

“ஏன் இப்படி பேசுற….”என்று விஜயை இழுத்து வைத்து அறையலாமா என்று கூட தோன்றிவிட்டது மிருணாளினிக்கு,அவனின் உடல் நிலையை கருத்தில் கொண்டே தன்னை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

ஆனந்தனும்,நீலவேணியும் மருத்துவரின் அறையில் இருந்து பேயறைந்ததை போல் வந்தனர்.அவர்களின் முகமே காட்டிக் கொடுத்தது அவனின் நிலை உடனே சரியாக கூடியது அல்ல என்று.ஆனந்தன் அமைதியாக வருணின் அருகில் தளர்ந்து அமர்ந்தார்.நீலவேணியோ ஏதோ தீவிர யோசனையில் இருந்தார்.இருவரையும் பார்த்த மற்றவர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

“இப்ப எதுக்கு நீங்க இப்படி இருக்கீங்க….அவனுக்கு போன ஒருமாசம் நடந்தது தான மறந்து போச்சு போனா போகட்டும் விடுங்க……டாக்டர் தான் அவனுக்கு தானா நியாபகம் வந்துடும்னு சொல்லுறார்ல விடுங்க….இதுவும் நல்லதுக்கு தான் நினைச்சுக்குங்க….”என்று வேணி கூற ஆனந்தனும் அவர் கூறுவதை ஏற்க வேண்டிய சூழ்நிலையில் தான் இருந்தார் அதனால் அவர் அமைதியாக இருக்க,வருண் மட்டும் நிமிர்ந்து மிருணாளினியின் முகம் காண அவளோ அனைத்தையும் இழந்ததை போல நின்றாள்.

மிருணாளினிக்கு அங்கு நின்று மூச்சுவிடுவதற்கே மிகவும் சிரம்மமாக இருந்தது.தன் நிலையை எண்ணி மிகவும் கழிவிறக்கமாக உணர்ந்தவள் யாரின் கவனத்தையும் கலையாது செல்ல,விஜயின் அறையை கடக்கும் போது மட்டும் ஏதோ தன் உயிரையே இங்குவிட்டு செல்லவது போல் உணர்ந்தாள்.ஒருமுறையேனும் அவனை பார்த்துவிட்டு செல்லுவோமா என்று ஒரு மனது நினைக்க மற்றொரு மனதோ எங்கே மீண்டும் ஏதாவது கேட்டு தன்னை முற்றிலுமாக செயலிழக்க வைத்துவிடுவானோ என்று பயம் அவளை நிறுத்த,தன் கால்களை மீண்டும் நகர்த்தி செல்ல முற்பட அப்போது அறை கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தான் விஜய்.

விஜயை அங்கு சற்றும் எதிர்பாராதவள் திகைத்து நிற்க,அவனோ அதே ஆராயும் பார்வையுடன் அவளை நெருங்கினான்.அவன் நெருங்க நெருங்க எங்கே அவனிடமே உடைந்து அழுதுவிடுவோமோ என்று பயந்தவள் அவன் தன்னை நெருங்கு முன் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓட,அவள் அப்படி ஓடுவாள் என்று எதிர்பாராதவன் வேகமாக பின்னே வந்து,

“ஏய் மிருணா நில்லு….ஏய் நில்லு….”என்று கத்த அதற்குள் அவள் அவனை விட்டு வெகு தூரம் சென்றிருந்தாள்.

Advertisement