Advertisement

காதல் வானவில் 24 1

மிருணாளினியிடம் பேசிவிட்டு வைத்த விஜய் அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு டெல்லி கிளம்பிவிட்டான்.அவனுக்கு விஸ்வநாதன் மிருணாளினியின் வீட்டிற்கு வருகிறேன் என்று அவள் கூறியதைக் கேட்டவுடன் மனது ஒருநிலையில் இல்லை.அவளை அங்கே தனியாக விட்டு வந்திருக்கக் கூடாதோ என்று தோணியவுடன் அவனால் அங்கு இருக்க முடியவில்லை கிளம்பிவிட்டான்.

தன்னவளைக் காண பறந்து வந்தவன் நின்ற இடம் தங்களுக்கு பிடித்த இடத்தில் தான்.வாடிய கொடி போல அமர்ந்திருந்தவளின் அருகே வந்து அவளின் தோள்களில் கை வைக்க,முதலில் அதிர்ந்து விலகியவள் பின் வந்தது தன்னவன் என்று உணர்ந்த பின் அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டு அழுதுவிட்டாள்.சிறிது நேரம் அவளை அழவிட்டவன் அவளது முதுகை ஆதரவாக தடவிட்டவாரே,

“ரிலாக்ஸ் டா மிருணா….அதான் நான் வந்துட்டேன்ல….”என்று அவளை சாமாதன படுத்த அவளின் அழுகை மேலும் கூடியதே தவிர அடங்கவில்லை.தன் நெஞ்சில் இருந்த அவளின் தலையை வலுகட்டாயமாக நிமிர்த்தியவன்,

“ஏய் வேண்டாம் டா…இப்படி உடையாத நான் இருக்கேன்னு சொல்லுறேன்ல….இங்க பாரு….”என்று அவளை முகத்தை நிமிர்த்த,அவளோ மேலும் அவனின் நெஞ்சில் மூழ்க போக,

“ப்ச்….இங்க பாரு…ஏய் என் திமிருபிடிச்ச தங்கமே….நீயே பத்து பேரை அழ வைக்கிறவ…நீயே இப்படி அழலாமா…”என்று அவளின் மனதை மாற்றும் பொருட்டு கிண்டல் செய்ய,அவ்வளவு நேரம் அழுதளவது முகத்தில் மெல்லிய கீற்றாக புன்னகை மலர்ந்தது.

“ப்ச் போடா…உதை வாங்குவ…”என்று அவனின் தோள்களை செல்லமாக அடித்தாள்.அவளது அடியை சுகமாக தாங்கிக் கொண்டவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் இனி என்றும் விடபோவதில்லை என்பது போல் இருந்தது அவனின் அணைப்பு.அவளும் அவனின் அணைப்பில் வாகாக பொருந்தினாள்.

“ம்ம் இப்ப பெட்டரா….ம்ம்….சொல்லு….”என்று விஜய் கேட்க,

“ம்ம்ம்….”என்று தானாக ஆடியது அவளது தலை,அந்த தலையை செல்லமாக ஆட்டியவன்,

“என்ன சொன்னார் அந்த பெரிய மனுஷன்….”என்று சற்று காராமாகவே கேட்டான்.அவனுக்கு தெரியும் தன்னவள் இவ்வளவு உடைந்து அழுகிறாள் என்றால் அதற்கு அவர் தான் காரணமாக இருக்கக்கூடும் என்று.அவன் நினைத்தது போல தான் மிருணாவின் பதிலும் இருந்தது.

தன் தாத்தா தன்னை பார்க்க வருகிறேன் என்று கூறியதிலிருந்து அவளுக்கு விஷயம் ஏதோ பெரியது என்று நன்கு புரிந்தது இருந்தும் அவரே வந்து சொல்லட்டும் என்று இருந்தாள்.தானாக எதுவும் கூறி மாட்டிக் கொள்ளக் கூடாது அவளுக்கு விஸ்வநாதனை பற்றி நன்கு தெரியும் அடுத்த வரை பேசவிட்டு அதில் லாபம் காணும் மனிதர் அதனால் அவரை பேசவிட்டு அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.

விஸ்வநாதனும் கூறியது போல் பேத்தியை பார்க்க வந்தார் ஆனால் தனியாக இல்லை அவருடன் நிரஞ்சனாவும் வந்திருந்தார்.இவர் எதற்கு வந்திருக்கிறார் என்று சிறிய புருவ சுழிப்பு மட்டுமே மிருணாளினியிடம் இருந்து கிடைத்தது.வந்தவர்களை வாங்க என்றெல்லாம் அழைக்கவில்லை மரியாதை நிமித்தமாக அவர்கள் வந்தவுடன் ஒரு தலை அசைப்பு மட்டுமே.

விஸ்வநாதனும் அவள் தன்னை அழைக்கமாட்டாள் என்பது எல்லாம் தெரியும்.சிறு வயதிலேயே ஒருமுறை வந்த பொழுது வாவென்று கூப்பிடு கற்பகம் கூற அதற்கு மிருணாவோ,

“ஏன் நான் அழைக்க வேண்டும் இது அவர் வீடு தானே நாம் தான் அவர் வீட்டில் இருக்கோம்…அதனால் நான் அழைக்கமாட்டேன்….”என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.அப்போது விஸ்வநாதன் நினைத்தது இதை மட்டும் தான் இந்த சிறிய வயதில் இவளுக்கு இவ்வளவு தைரியமும்,அழுத்தமுமா பார்க்கிறேன் இது எவ்வளவு நாளைக்கு என்று நானும் பார்க்கிறேன் என்று அவருக்கு இருக்கும் செருக்குடன் நினைத்துக் கொண்டார்.ஆனால் அவரின் செருக்கு மொத்தத்தையும் அழித்துக் கொண்டிருந்தாள் மிருணாளினி.

மிருணாளினி தன்னை எப்போதும் எந்தவிதத்திலேயும் குறைத்துக் கொண்டதில்லை.ஆம் அனைத்திலும் நிமிர்வுடன் தான் எதிர்கொள்ளவாள்.தான் என்ன தவறு செய்தேன் தலை குனிய தவறு செய்தவர்களே நிமிர்ந்து நிற்கும் போது இவர்களுக்கு மகளாக பிறந்த ஓரே காரணத்திற்காக மட்டும் நான் தலைகுனிய வேண்டுமா முடியாது என்று தனக்கு தானே தைரியம் சொல்லிக் கொள்ளவாள்.அதுவே விஸ்வநாதனின் செருக்கை அடித்து நொறுக்கியது.அதிலிருந்து அவர் மிருணாளினியிடம் இருந்து எந்தவித எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்ள மாட்டார்.கண்டிப்பாக தன்னை வீழ்த்திவிடுவாள் என்று தெரியும் அதனால் சற்று அடக்கி தான் வாசிப்பார்.

நிரஞ்சனாவிற்கு இதுவே முதல் முறை மகளை காணவருவது தன்னை கண்டவுடன் அழுவாள்,கட்டிக்கொள்வாள் என்று நினைத்து வந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.அதைவிட தன்னை ஒரு மனுஷியாகவே அவள் மதிக்காதது போல் இருந்தது அவளின் அடுத்தடுத்த நடவடிக்கையும்.

“சொல்லுங்க என்ன விஷயமா என்னை பார்க்க வந்தீங்க….”என்று நேரிடையாக விஸ்வநாதனிடம் கேட்டவள்,நிரஞ்சானாவிடம் தன் பார்வையை கூட திருப்பவில்லை.அதுவே கூறியது நீ எல்லாம் எனக்கு ஒரு ஆள் இல்லை என்று.நிரஞ்சனாவிற்கு உள்ளம் குமுறியது என்ன தான் இருந்தாலும் நான் அவளுக்கு அன்னை என்னை வா என்று அழைக்கவில்லை என்றாலும் எப்படியிருக்கிறாய் என்று கேட்டு இருக்கலாம் என்று நினைத்தார்.ஆனால் அவர் ஒன்றை மறந்து போனார் இத்தனை வருடங்களாக இந்த மகள் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்பதை தான் பார்க்கவில்லை என்பதையும் அவளுக்கு அன்னை என்ற ஸ்தானத்தில் இருந்து தான் எதையும் செய்யவில்லை என்பதையும் மறந்து போனார்.

“ம்ம் எல்லாம் உனக்கு நல்ல விஷயம் தான்….”என்றார் சற்று அதிகார தோரணையில்.அவரது தோரணையே கூறியது ஏதோ தனக்கு பாதகம் நடக்கவிருப்பதாக.வரட்டும் அதுவும் அவரின் வாயாலே கூறட்டும் என்று அமைதி காக்க.அவளின் முயற்சியை புரிந்து கொண்ட விஸ்வநாதனுக்கு முதலில் சிரிப்பு தான் வந்தது.

தொழிலில் பல நபர்களின் தந்திரங்களை முறியடித்து வெற்றி பெற்றவருக்கு தன்னை சரியாக கணக்கிடும் பேத்தியின் மீது பெருமையே.அவரும் பல முறை நினைப்பார் இந்த மிருணாளினியே தன் தொழில் துறை வாரிசாக வந்தால் நன்றாக இருக்கும் என்று.ஏனென்றால் நிரஞ்சனாவின் மற்ற இரு பிள்ளைகளும் அவருக்கு ஏதோ அடுத்தவர் கூறியதை ஏற்று நடக்கும் தலையாட்டி பொம்மைகள் போலவே இருக்கும்.அதனாலே மிருணாவிடம் காட்டும் சிறு அன்பும்,அரவணைப்பு கூட அவர்களுக்கு காட்டமாட்டார் எப்போதும் இறுகிய முகத்துடன் பேசுவார்.ஆனால் மிருணாளினி எப்போதும் அவருக்கு சற்று பிடித்தம் அதிகம் தான் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.அதனாலே இப்போது அவள் தன்னை நிராகரித்த போதும் சிரித்தபடி அமர்ந்து தன் மனைவியின் மறுவருவமாக இருக்கும் பேத்தியை பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

நிரஞ்சனாவிற்கு தான் தந்தையின் சிரித்த முகத்தை பார்த்து அதிர்ந்து தான் போயிவிட்டார்.தன் மற்ற பிள்ளைகள் இது போல் பேச என்ன சற்று நிமிர்ந்து பார்த்தாலே கோபத்தின் உச்சிக்கு சென்றுவிடும் தந்தை இன்று இவள் அவரை வாவென்று அழைக்கவில்லை,திமிராக இருக்கிறாள் இவளை ஒன்றும் கூறாமல் இருக்கிறார் என்று நினைத்தார்.அவளது பேச்சும் அதில் தெரிந்த நிமிர்வும் நிரஞ்சனாவிற்கு திமிர்தனமாக தெரிந்தது போலும்.இவ்வாறு நிரஞ்சனா மிருணாளினியை பற்றி நினைத்துக் கொண்டிருக்க அவரது நினைவை தடுத்தது அவரின் தந்தையின் குரல்,

“வாம்மா நிரூ….வா இப்படி உட்கார்….”என்று தன் பக்கத்தில் தன் மகளை அமர செய்தார்.மிருணாளினி அவர்களுக்கு எதிரில் அமர்ந்து கொண்டு தந்தை,மகளை ஒருவித ஏளன பார்வை பார்த்தாள்.அதுவரை அமைதியாக இருந்த நிரஞ்சனா மிருணாவின் அந்த பார்வையை கண்டவுடன் கோபமாக,

“ஏன் இப்படி பார்க்குற…வந்தவங்கள வாங்கனு கூப்பிட மாட்ட…என்ன வளர்த்தாளோ அந்த கற்பகம்….”என்று மேலும் என்ன கூறியிருப்பாரோ அதற்குள் மிருணா,

“உங்களுக்கு சொல்லி கொடுத்தவிட எனக்கு நல்லது தான் சொல்லி கொடுத்தாங்க…இவங்க எங்க அம்மாவை பத்தி பேசாம இருக்கிறது அவங்களுக்கு நல்லது சொல்லுங்க….”என்று அம்மா என்னும் சொல்லை அழுத்தம் கொடுத்து தன் பதிலை விஸ்வநாதனிடம் கூறினாள் மிருணாளினி.அவளை பொருத்தவரை நிரஞ்சனா எல்லாம் மனிதம் என்றால் என்ன என்று கேட்க்கும் பிறவி.ஆம் அன்று தன்னை தனியாக விட்டு சென்ற பொழுது இவருக்கு என் நினைவு சிறிது கூடவா இல்லை,எப்படி எப்படி ஒரு தாயாக இருந்து கொண்டு பெற்ற மகளை மறக்க முடியும் என்று தான் அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நினைத்து பார்ப்பாள்.ஆனால் அதற்கான விடை தான் அவளுக்கு கிடைக்காது.

“நிரூ…நீ அமைதியா இரு…நான் பேசிக்கிறேன்….”என்று தன் பேத்தியின் பேச்சால் அதிர்ந்து நின்ற மகளை தன் பக்கத்தில் அமர செய்தவர்.மீண்டும் தன் பேத்தியின் முகத்தை பார்த்து,

“ம்ம்…உனக்கு கல்யாணம் பண்ணலாம் முடிவு பண்ணியிருக்கேன்….”என்று தான் வந்த காரணத்தை கூறினார்.மிருணாளினியும் இதை ஓரளவிற்கு எதிர்பார்த்தாள் என்பதால் பெரிதாக அதிரவெல்லாம் இல்லை.அமைதியாக மேலும் என்ன என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“வரதன் குரூப் ஹர்ஷவர்தன் தான் மாப்பிள்ளை…உனக்கு தெரியும் நினைக்கிறேன்…”என்று அவளுக்கு தூண்டில் போட்டு பார்க்க,அவளோ எந்தவித உணர்வையும் முகத்தில் காட்டாது அமைதியாக இருந்தாள்.அவளின் அமைதி ஏன் என்று விஸ்வநாதனுக்கு புரியும் ஆனால் நிரஞ்சனாவிற்கு புரியுமா பல தொழில்களை கட்டிக்காட்க்கும் தன் தந்தை இதுவரை இவ்வளவு பொறுமையாக யாரிடம் பேசியது கூட கிடையாது ஏன் தன் மற்ற பிள்ளைகளிடமும் எப்போதும் இறுக்கத்துடன் இருப்பவர் இன்று இவளிடம் இறங்கி பேசுவதா என்று நினைத்தவர் அதைக் கேட்கவும் செய்தார்.

“என்ன அப்பா,அவகிட்ட இதெல்லாம் கேட்டுக்கிட்டு கல்யாணம் தேதி பிக்‌ஸ் பண்ணியாச்சு சீக்கிரம் ஏதோ வேலைக்கெல்லாம் போறாளாமே அதையும் வேண்டாம்னு எழுதி கொடுக்க சொல்லுங்க….”என்று நிரஞ்சனா மீண்டும் துடுக்காக பேசி வைத்தார்.அவரை ஒரு பார்வை பார்த்தவள் மீண்டும் விஸ்வநாதனிடம் திரும்பி,

“நான் உங்கிட்ட முன்னாடியே சொல்லிட்டேன் இவங்கள அமைதியா இருக்க சொல்லுங்கனு….அப்படி இருக்க முடியாதுனா இவங்க கிளம்பலாம்…வாசல் கதவு திறந்து தான் இருக்கு….”என்று கூற,

“ஏய் என்ன பேச்சு பேசுற….கொஞ்சம் கூட அம்மானு மரியாதை இல்லாம…என்னப்பா நீங்க பார்த்துக்கிட்டு இருக்கீங்க…”என்று தன் தந்தையும் துணைக்கு அழைக்க,மிருணாளினிக்கு அதுவரை இழுத்து வைத்த பொறுமை பறந்தோடியது,

“யாருக்கு யார் அம்மா…ஆங்…சொல்லுங்க….நீங்க எனக்கு அம்மாவா…ஆங் கேட்குறேன்ல்ல சொல்லுங்க…நீங்க எனக்கு அம்மாவா….”என்று அவரை விட ரௌத்திரமாக கேட்டாள் மிருணாளினி.

“சும்மா பெத்து போட்டுட்டா நீங்க எனக்கு அம்மாவாகிட முடியுமா…..என்னை பேச வைக்காதீங்க…எனக்கு உங்க கூட பேச என்ன பார்க்க கூட பிடிக்கலை….”என்று காட்டு கத்தாலாக கத்திவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.அழுகையில் உதடு துடித்தது எங்கே இவர்கள் முன் அழுதுவிடுவோமோ என்கிற பயம் வேறு அவளை நிலைகுலைய செய்ய முயன்று தன்னை கட்டுபடுத்திக் கொண்டு நின்றாள்.

நிலைமை கை மீறி போவதை உணர்ந்த விஸ்வநாதன் தன் மகளை அடக்கினார்,

“நிரூ….நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு….”என்று கூற,நிரஞ்சனாவிற்கோ தன்னை மதிக்காமல் பேசும் மிருணாவை ஒன்றும் கூறாமல் தந்தை தன்னை சொன்னவுடன் கோபம் வர,

“என்ன அப்பா நீங்க…அவ நம்மளை மதிக்காம பேசுறா…நீங்க அவளை பேச்சை அடக்காம என்னை அடக்கி உட்கார வைக்குறீங்க…”என்று மேலும் கத்தியவர் அதோடு இருந்திருக்கலாம் ஆனால் விதி யாரை விட்டது என்பார்களே அதே போல் தான் அன்று நிரஞ்சனாவிற்கு சனி பிடித்தது போல் பேச,

“நான் உனக்கு அம்மாவா நடந்துகிட்டது கிடையாது ஆனா தாத்தா உன்னை தன்னோட பேத்தியவிட ஒருபடி மேல தான் பார்த்துக்கிட்டார்….அவருக்காவது மரியதை கொடு…அவர் உனக்கு நல்லது தான் செய்யுறார்…ஹர்ஷா போல மாப்பிள்ளை கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்க வேண்டும்….அவனுக்கு இருக்கிற பணத்துக்கும் செல்வாக்கிற்க்கும்….”என்று மேலும் பேச வந்தவரை தடுத்தது மிருணாளினியின் அகங்கார குரல்,

“வெளிய போங்க….உங்களை தான் வெளிய போங்கனு சொல்லுறேன்….”என்று கண்கள் சிவந்து விட்டால் அவரை வதம் செய்யும் காளி போல் நின்று மிருணாளினி கூற,நிரஞ்சனாவிற்கு நா ஒட்டிக் கொண்டது.

“ம்மா விட்டால் தன்னை அடித்துவிடுவாள் போல….எவ்வளவு கோபம் வருகிறது இவளுக்கு…இவள் நல்லதுக்கு என்று கூறினால் இவ்வளவு கோபம் வருமா…எல்லாம் என் தலையெழுத்து இந்த ஹர்ஷாவிற்கு ஏன் தன் பெண் நந்திதா எல்லாம் பெண் போல் தெரியவில்லையா…இவள் மட்டும் தான் வேண்டும் என்கிறான்…”என்று மனதில் நினைத்துக் கொண்டார்.அவரின் முன் சொடுக்கு சத்தம் கேட்கவும் தன்னிலைக்கு வர,அவரின் முகத்தின் சொடுக்கிட்ட மிருணாளினி,

“யாருக்கு வேணும் உங்க மாப்பிள்ளையும்,அவனோட பணமும்….நான் கேட்டேனா எனக்கு மாப்பிள்ளை பாருங்கனு….என் வாழ்க்கையை எப்படி அமைச்சிக்கனும்னு எனக்கு தெரியும்….உங்கள மாதிரி ஆளுங்க குறுக்க வராம இருந்தாலே போதும் என் வாழ்க்கை நல்லா தான் இருக்கும்….”என்றவள் பின் தலையை வேகமாக தட்டிக் கொண்டு,

“ப்ச் இதையெல்லாம் உங்கிட்ட சொல்லிகிட்டு இருக்கேன் பாருங்க….கிளம்புங்க…இன்னும் இங்க இருந்து நீங்க சீன் கிரியேட் பண்ண வேண்டாம்…போங்க…”என்று வாசல் பக்க கதவை காட்ட,நிரஞ்சனாவிற்கு கண்மண் தெரியாத கோபம்,

“உனக்கு எல்லாம் நல்லது செய்யனும் நினைக்கிறார் பாரு எங்க அப்பா…அவரை சொல்லனும்….ஒண்ணுமே இல்லைனாலும் இந்த திமிருக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை….”என்றுவிட்டு நகர,

“ஆமா….எனக்கு திமிர் ஜாஸ்தி தான்…நான் இப்படி தான்….உங்கிட்ட இருக்கிறத விட என்கிட்ட நிறையவே இருக்கு போதுமா….இப்ப கிளம்புங்க….”என்று அவரின் வாயை மொத்தமாக அடைத்துவிட்டு தான் அனுப்பினாள்.நிரஞ்சனாவை அனுப்பியவுடன் பொத்தென்று இறுக்கையில் அமர அவளின் முன்னே தண்ணீரை நீட்டினார் விஸ்வநாதன்.

“இவர் இன்னும் போகவில்லையா…..”என்று அவரை பார்க்க,அதை உணர்ந்தவர் போல,

“நான் பேச வேண்டியது முடியாமல் நான் போகமுடியாது….முதல்ல இதை குடி….”என்று நீரை அவள் கையில் திணித்தார்.அவளுக்கும் அது தேவைபட ஒன்றும் கூறாம்ல வாங்கி குடித்தவள் அவர் பேசும் முன்,

“போதும் நீங்க பேசுன வரை போதும் நான் கேட்டதும் போதும்….உங்க விருப்பத்தை என்மீது திணிக்காதீங்க….எனக்கு பிடிக்கல……”என்று கூற,

“ஏன்….”என்று ஒற்றை கேள்வி தான் அவரிடம் இருந்து வந்தது.மிருணாளினி நிமிர்ந்து அவரை ஆழ்ந்து பார்த்தவள்,

“ஏன்னு உங்களுக்கு தெரியும்….”என்று கூறிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“ம்ம்….இங்க பாரு மிருணா….நீ என்ன நினைக்கிறனு எனக்கு புரியுது….நான் உனக்கு நல்லதுக்கு தான் சொல்லுவேன்…எனக்கு ஹர்ஷா தான் உனக்கு பெஸ்ட் சாய்ஸ்னு தோணுது….அதுமட்டும் இல்ல அவனை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ நம்ப தொழிலையும் பார்த்துக்கலாம்….அதனால யோசி….”என்று கூற,

“இல்ல….என்னால இதுக்கெல்லாம் ஒத்துக்க முடியாது….நான் உங்க உறவே வேணாம்னு சொல்லுறேன்….நீங்க ஏன் என்னை விடாம பிடிச்சிக்கிட்டு தொங்கிட்டு இருக்கீங்க….நீங்க எப்ப கேட்டாலும் என் பதில் இது தான் எனக்கு இந்த கல்யாணத்தில சம்மதம் இல்லை…என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன்…இதோட என்னை விடுங்க….”என்று தன் மனதில் உள்ளதை உள்ளபடி கூறிவிட்டாள்.

மிருணாளினி நான் விஜயை காதலிக்கிறேன் என்று கூறவில்லை அதே போல் விஸ்வநாதனும் விஜயை பற்றி கேட்கவில்லை.தன் இறுக்கையில் இருந்து நிதானமாக எழுந்தவர்,

“இங்க பாரு மிருணா….எனக்கு நீ எப்போதும் முக்கியம் தான்…அதனால நீ கொஞ்சம் யோசிச்சு பதில் சொல்லு…உன்னோட எதிர்காலம் எனக்கு ரொம்ப முக்கியம்….”என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

Advertisement