Advertisement

காதல் வானவில் 15

வி.வி குரூப்ஸ் டெல்லியில் இயங்கி வரும் பெரிய குழுமம்.அந்த குழுமத்தின் தலைவர் தான் விஸ்வநாதன் ராவ்.அவர் வட நாட்டை சேர்ந்தவர்.அவருக்கு தென்இந்திய பெண்ணான மணிமேகலையின் மேல் அளவுகடந்த காதல்.மணிமேகலை அவருடை பிஏ வாக பணிபுரிந்தார்.அவரது நேர்மையும்,அமைதியும் விஸ்வநாதனுக்கு மிகவும் பிடித்துவிட இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

விஸ்வநாதனுக்கு மணிமேகலை என்றால் உயிர்.வெளிவுலகிற்கு முடிசூட மன்னனாக இருப்பவர்,தன் மனைவியிடம் மட்டும் சேவகன் போல் தான் இருப்பார்.மனைவியின் முகத்தில் சிறு சுனக்கம் வந்தாள் கூட அவரால் தாங்க முடியாது.இவர்களின் காதலுக்கு கிடைத்த பரிசு தான் நிரஞ்சனாதேவி.மணிமேகலைக்கு முதல் பிரசவமே சற்று சிக்கலாகிவிட அதன் பின் அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட நிரஞ்சனா வீட்டின் இளவரசி போலவே வளர்க்கப்பட்டாள்.

மணிமேகலை என்ன தான் பெரிய இடத்தில் திருமணம் முடித்து வந்திருந்தாலும் எப்போதும் எளிமையுடன் தான் பழகுவார்.விஸ்வநாதன் கூட ஒருசில முறை அவரது குணத்தை சற்று மாற்றும் படி கூற,மணிமேகலை தன்னால் முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.விஸ்வநாதனுக்கும் மனைவி முகசுணக்கம் பிடிக்காமல் அவரது வழியிலேயே விட்டுவிட்டார்.ஆனால் நிரஞ்சனா முழுவதும் விஸ்வநாதனின் வளர்ப்பு அதனால் பிறந்ததில் இருந்தே அவருக்கு பண செருக்கும்,தன் அழகின் மீது கர்வமும் அதிகம்.அப்படி பட்டவருக்கு தன் கல்லூரியில் படிக்கும் நடுத்தரவர்கத்தை சேர்ந்த கேசவ் மீது அளவுகடந்த காதல்.

நிரஞ்சனாவின் நட்பு வட்டம் கூட தனக்கு சமமான அந்தஸ்த்து உடையவர்கள் உடன் தான் பழகுவாள்.ஆனால் அதில் கேசவ் மட்டும் விதிவிலக்காக போனது தான் விதி போல.கேசவ் நடுத்தர வர்கம் அதாவது நிரஞ்சனாவின் செல்வநிலையை ஓப்பிடும் போது அவனது சற்று குறைவு.அவனது தந்தை வாசனை திரவியங்கள் ஏற்றுமதி செய்பவர்.கேசவ் நல்ல மூளைக்காரன் அதனால் படிப்பிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று டெல்லியில் புகழ்பெற்ற கல்லூரியில் அவனுக்கு இடம் கிடைத்தது.

கேசவ் படிப்பில் மட்டும் கெட்டிக் கிடையாது பார்பதற்கும் அழகனே.ஆறடி உயரமும்,முறுக்கேறிய புஜங்கள் என்று ஆண்களுக்கு என்றே இருக்கும் அத்தனை அம்சங்களும் உடையவன்.அதனாலே அவனின் பின்னால் பல பெண்கள் சுற்றினர்.ஆனால் அவனோ யாரையும் ஏற்றெடுத்தும் பார்க்கவில்லை.அப்படி ஆணின் இலக்கணத்துடன் இருப்பவனை எப்படியேனும் தன் காதல் வலையில் வீழ்த்தவேண்டும் என்று அவனின் பின்னே சுற்றினாள் நிரஞ்சனா.முதலில் நிரஞ்சனாவை கண்டு கொள்ளதவன் பின் கொஞ்சம் கொஞ்சமாக அவளின் அழகில் ஈர்க்கப்பட்டான்.

பின் இருவரும் கல்லூரி பாடத்துடன் காதல் பாடமும் படிக்க விளைவு இவர்களின் காதல் விஷயம் விஸ்வநாதனின் காதுகளுக்கு சென்றடைந்தது.நிரஞ்சனாதேவியை கூப்பிட்டு அவர் கண்டிக்க,அனைத்தும் விழலுக்கு இரைத்த நீர் போல் ஆனது.நிரஞ்சனா தனது காதலில் பிடிவாதமாக இருந்தார்.விஸ்வநாதன் மகளை கண்டிக்கும் நேரம் கேசவையும்,அவனது குடும்பத்தையும் தனது ஆள் பலத்தால் மிரட்டியிருந்தார்.இந்த இடத்தில் தான் விஸ்வநாதன் அனைத்தும் தந்தைகளையும் போல் தவறவிட்டார்.

நிரஞ்சனாவிற்கு எப்போதும் பணம் தான் முதன்மை மற்றது எல்லாம் இரண்டாம் பட்சம் தான் அவளிடம் கேசவிற்கு தங்களுக்கும் இடையில் இருக்கும் வசதி வாய்ப்புகளின் வித்தியாசத்தை எடுத்துக் கூறியிருந்தால் அவளே வேண்டாம் என்று விலகியிருந்திருப்பாள்.விஸ்வநாதனின் அவசர புத்தி அவரை நிதானம் இழக்க செய்திருந்தது.மகளின் விஷயத்தில் அவர் மனைவியின் பேச்சை கூட கேட்க தயாராக இல்லை.தன் குடும்பம்,அதன் கௌரவம் அது தான் முதன்மையாக பட்டது.அவரும் காதலித்து தான் திருமணம் செய்தார் என்பது எல்லாம் வசதியாக மறந்து போனது மனிதருக்கு.

விஸ்வநாதன் தொடர் தாக்குதலில் விளைவு நிரஞ்சனாதேவியின் படிப்பு நிறுத்தப்பட்டது.அவருக்கு தனது தொழில் துறை நண்பரின் மகன் யுகேந்திரனுக்கு மணமுடிக்க அனைத்தும் ஏற்பாடுகளையும் செய்தார்.திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில்  நிரஞ்சனா,கேசவுடன் வெளியேறி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு வந்து நின்றார்.

விஸ்வநாதனுக்கு மகளின் இந்த அவசர முடிவு மிகவும் கோபத்தை கிளற அவர்களை வீட்டை விட்டு வெளியேறும் படி கடுமையாக சாடினார்.நிரஞ்சனாவிற்கு தான் நினைத்த காரியம் நிறைவேறிவிட வேண்டும் என்பதில் மட்டும் தான் கவனம் இருந்ததே தவிர திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை பற்றி அவர் நினைக்கவில்லை.அதன் விளைவு அவரால் கேசவின் வீட்டில் மூன்று மாதங்களுக்கு மேல் இருக்க முடியவில்லை.அதனால் கேசவை நச்சரித்து தனி குடுத்தனம் வந்தனர்.கேசவும் இறுதி வருட படுப்பில் இருந்ததால் அவன் ஒரு பார்டையம் வேலை செய்து கொண்டு படிப்பை தொடர்ந்தான்.

இந்நிலையில் தான் நிரஞ்சனா கருவுற்றார்.கேசவின் வருமானத்தில் குடும்பம் நடத்துவது மிகவும் கஷ்டமாக இருக்க,இதில் மசக்கை வேறு அவளை படுத்தி எடுத்தது.மகள் கருவுற்றிருக்கிறாள் என்ற விஷயம் விஸ்வநாதனுக்கு தெரிய வர அனைத்தையும் மறந்து மகளை காண வந்துவிட்டார்.விஸ்வநாதன் தன் மகளின் நிலை கண்டு மனது துடித்தது.அவர் தன்னுடன் வந்துவிடும் படி மகளை அழைக்க அவரோ கேசவ் இல்லாமல் வரமேட்டேன் என்று கூற வேறு வழியில்லாமல் விஸ்வநாதன் கேசவை தன்னுடன் வரும்படி அழைத்தார்.

கேசவிற்கு போகும் எண்ணமில்லை தான் ஆனால் மனைவி குழந்தை உண்டான சமயத்தில் அவளை மிகவும் வருத்தக் கூடாது என்று நினைத்தவன் விஸ்வநாதனுடன் கிளம்பினான்.விஸ்வநாதனுக்கு என்ன தான் மகளை ஏற்றுக் கொண்டாலும் தொழில் துறையில் அவர்களை ஒதுக்கியே வைத்திருந்தார்.அதனால் அவர்களுக்கு என்று தனியாக ஒரு வீடு எடுத்துக் கொடுத்து தங்க சொன்னார்.மணிமேகலை மகளை காண அடிக்கடி வந்து போவார்.

கேசவிற்கு முதலில் எல்லாம் விஸ்வநாதன் சொத்துக்கள் மேல் எல்லாம் ஆர்வமில்லை ஆனால் நாளாக அவனுக்கு சொத்துகளின் முழு மதிப்பும் தெரிந்தபின் தானும் எப்படியேனும் விவி குரூப்பில் சேர வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.ஆனால் அதற்கு சற்றும் இடம் கொடுக்காது அடைத்திருந்தார் விஸ்வநாதன்.அதனால் கேசவிற்கு தன் மாமனாரின் மீது சற்று வன்மம் வளர தொடங்கியது.இவை அனைத்தையும் தனக்குள் வைத்துக் கொண்டான்.அதனால் நிரஞ்சனாவிற்கு கூட தெரியாது.   

முதலில் அனைத்தும் அமைதியாக தான் சென்றது கேசவ்,நிரஞ்சனாவின் வாழ்வில்.அவர்களின் மகள் மிருணாளினி பிறந்து ஒரு வருடம் வரை தான்.அதன் பின் இருவருக்கும் இடையில் பணம் சம்மாதிப்பதில் சண்டை வர தொடங்கியது.இந்நிலையில் மணிமேகலையின் உடல் நிலை பாதிப்படைய அவரை கவனிப்பதில் விஸ்வநாதன் மூழ்கிவிட,மகளை கவனிக்க தவறிவிட்டார்.அதன் விளைவு கணவன்,மனைவி இடையே சண்டைகள் வலுத்தது.

கேசவிற்கு படிப்பு முடிந்து நல்ல வேலையும் கிடைக்காமல் போக அது வேறு நிரஞ்சனாவை கோபம் அடைய வைத்திருந்தது.அதனால் கேசவை அவர் அடிக்கடி மட்டம் தட்டி பேச,ஒருகட்டத்தில் கேசவிற்கு நிரஞ்சனாவின் மீது இருந்த ஒருவித ஈர்ப்பு குறைய தொடங்கியது.இவர்களின் சண்டையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது மிருணாளினி தான்.அந்த இரண்டு வயது குழந்தையை பற்றி இருவரும் சிந்திக்கவேயில்லை.காதலிக்கும் போது தெரிந்த நிறைகள் திருமணத்திற்கு பிறகு குறைகளாக தெரிய தொடங்க வீடு நரகமாக தொடங்கியது.எப்போதும் மகளுக்கு நல்புத்தி கூறும் மணிமேகலையும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மேலும் நிரஞ்சனாவின் வாழ்வு சிக்கலாகி போனது.

கேசவிற்கு வேலையில்லாத நிலையில் அவனது பழக்கவழக்கங்களிலும் மாற்றம் வந்தது.சேரக்கூடாதவர்களோடு சேர்ந்து குடிபழக்கமும் வந்தது.நிரஞ்சனாவோ கணவன் குடிக்கிறான் என்பதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தன் இஷ்டம் போல் வெளியில் செல்லவது தண்ணீயாக பணத்தை செலவது செய்வது என்று மீண்டும் ராஜ வாழ்க்கை வாழ தொடங்கினாள்.அவளது தேவைக்கு மட்டும் அவள் தன் தந்தையிடம் பணம் போடும் படி கேட்டுருக்க அவரும் தன் மகள் நிலை கருதி சில லட்சங்களை அவ்வபோது போட்டுவிடுவார்.

மிருணாளினி வாழ்வில் அந்த கசப்பான நாள் வந்தது.எப்போதும் பெற்றொர்கள் சண்டையை பார்ப்பவள் இருவரிடமும் முடிந்தளவு ஒதுங்கி தான் இருப்பாள்.தப்பி இருவரில் ஒருவர் முன்னிலையில் சென்றுவிட்டாள் கூட அவளுக்கு வெசவுகள் தான் விழும்.தந்தை தாயைக் கொண்டு திட்டுவார்,தாய் தந்தை கொண்டு திட்டுவார்.தன்னை என்ன சொல்லுகிறார்கள் என்பது எல்லாம் புரியாது அந்த பிஞ்சிக்கு ஆனால் தன்னை பிடிக்காமல் பேசுகிறார்கள் என்பது மட்டும் புரியும் அதனாலே முடிந்தளவு ஒதுங்கியே இருப்பாள்.மிருணாளினிக்கு சாப்பாடு,தலை சீவுவது என அனைத்தும் செய்வது வீட்டில் வேலை செய்யும் பெண்மணி தான்.

அன்றும் அந்த பெண்மணி மிருணாளினிக்கு இரவு உணவு கொடுத்திவிட்டு உறங்க வைத்துவிட்டு சென்றுவிட்டார்.அவர் சென்ற சிலமணிதுளிகள் கழித்து வீடு ஒரே சத்தம் அரை தூக்கத்தில் இருந்த மிருணாளினி லேசா தன் அறை கதவை திறந்து பார்க்க வரவேற்பறையில் தாயும்,தந்தையும் சண்டையிட்டு கொண்டிருந்தனர்.அதைக் கண்டவள் பின் தன் படுக்கையில் படுத்துக் கொண்டு போர்வையை இழுத்து முழுதாக மூடிக் கொண்டு தூங்கிவிட்டாள்.

இங்கு வரவேற்பறையில் நிரஞ்சனாவும்,கேசவும் மிகுந்த வாக்குவாத்தில் இருந்தனர்.இன்று ஒரு பாட்டிக்கு நிரஞ்சனா சென்றிருக்க அங்கு தன் கணவனை வேறு ஒரு பெண்ணிடம் மிகவும் நெருக்கமாக பார்த்துவிட அதைக் குறித்து தான் கேசவ் வந்ததும் கேட்டார்.

“கேசவ்….இன்னைக்கு எங்க போனீங்க….”என்று நிரஞ்சனா அதிகாரமாக கேட்க,கேசவோ நிற்க முடியாத அளவிற்கு போதையில் இருந்தான்,

“சொல்லுங்க….”என்று வீடே அதிரும் அளவிற்கு நிரஞ்சனா கத்த,

“ஏஏஏஏய்ய்ய்…..உஉஉஉஷ்ஷ்ஷ்…..கத்தாத…எனக்கு கத்துனா பிடிக்காது….உனக்கு தெரியும்ல…”என்று குழலறாக கூறியவன் தனது அறை நோக்கி நடக்க,அவனின் கைகளை பிடித்து இழுத்த நிரஞ்சனா,

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போங்க….எங்க போயிட்டு வரீங்க….”என்று கேட்க,அவளது கைகளை உதறியவன்,

“ஏஏஏய்ய்ய்…..நான் எங்க வேணா போவேன்…உனக்கு என்ன வந்தது….அதைக் கேட்க நீ யாரு….”என்று கேட்க,

“ஓஹோ….நான் யாரா…அந்தளவுக்கு வந்துட்டீங்க….சரி இன்னைக்கு யார் கூட அந்த வர்மா குரூப் பார்ட்டிக்கு போனீங்க….எதுக்கு போனீ்ங்க….”என்று கேட்க,எள்ளலாக உதடு வளைத்தவன்,

“அதான் பார்த்துட்டியே அப்புறம் எதுக்கு கேட்குற….அவளை உனக்கு தெரியல…நம்ம காலேஜ் படிச்ச ரோஷினி….அவளை தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்….”என்று கூற நிரஞ்சனாவிறுக் கோபம் எல்லை கடந்தது,

“என்னடா சொன்ன….”என்று அகங்காரமாக கேட்டவாறே கேசவை ஓங்கி அறைந்திருந்தாள்.

நிரஞ்சனா தன்னை அடித்திவிட்டாள் என்பதையே சில நிமிடங்கள் கழித்து தான் புரிந்து கொண்டான் கேசவ்.தட்டுதடுமாறி எழுந்தவனுக்கு தலைக்கு மேல் சினம் ஏற,

“ஏய் என்னையவே அடிக்கிறீயா….உன்னை ….”என்று அவளை நோக்கி முன்னேற அதற்குள் அவனது நெஞ்சை பிடித்து வேகமாக வீட்டை விட்டு வெளியில் தள்ளியவள்,

“சீசீ…உனக்கு இனி இங்க இடமில்லை….நீ போகலாம்…..”என்று கூறிவிட்டு முகத்தில் அடித்தது போல் கதவை சாத்திவிட்டாள்.தனது அறையில் வந்து முடங்கியவளுக்கு கோபம் கோபம் மட்டுமே.எப்படி கேசவ் இப்படி செய்யலாம் என்ற கோபம் மட்டுமே.ஆனால் அதில் நிரஞ்சனா ஒன்றை மறந்தாள் இவள் மனைவியாக கணவன் மீது காதலும் அக்கறையும் காட்டியிருந்தால் அவன் தடம்மாறி போயிருக்க மாட்டான் ஆனால் அவள் அதை செய்ய தவறவிட அதன் விளைவு அவர்களின் வாழ்வு மட்டுமல்லாமல் ஒன்றும் மறியாத சிறிய பிஞ்சின் வாழ்வும் கறுகி நாசமாகியது.

நிரஞ்சனாவின் கைபேசி விடாமல் அழைக்க முதலில் புறக்கணித்தவள் பின் திரையில் தெரிந்த தன் தந்தையின் எண்ணைக் கண்டு எடுக்க அந்தபக்கம் கூறப்பட்ட செய்தியில் அவளின் உலகமே தலைகீழாக போனது.தன் தாய் உலகத்தில் இல்லை என்ற செய்தியை கேட்ட நிரஞ்சனா அனைத்தையும் மறந்து வேகமாக தன் தாயை காண சென்றுவிட்டாள்.இது எதையும் அறியாமல் சிறு பிஞ்சு உறங்கிக் கொண்டிருப்பதை தாயும் உணரவில்லை.தந்தையும் உணரவில்லை.

மணிமேகலையின் இறுதி காரியங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது.விஸ்வநாதன் மிகவும் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார்.தன் உயிருக்குஉயிரான மனைவி இனி இல்லை என்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.நிரஞ்சனாவோ அழுது அழுது ஓய்ந்து போனாள்.அங்கு நிரஞ்சனா வீட்டில் காலையில் எழுந்த மிருணாளினிக்கு வீட்டின் அமைதி சற்று பயத்தைக் கொடுத்தது.அவளை எப்போதும் எழுப்பவது வேலை செய்யும் பெண்மணி தான் ஆனால் இன்று யாரும் எழுப்பமலேயே பசியின் காரணத்தால் தானாக எழுந்த குழந்தை வீடு முழுவதும் தன் தாய்,தந்தையை தேடி அலைய வீட்டில் யாரும் இல்லை என்பதை அவளாள் உணரமுடியவில்லை.

ஒருகட்டத்தில் மனதில் பயம்பிடிக்க அழதொடங்கி வீட்டின் கதவை தட்டியபடி அழுதாள்.அது பணக்கார்கள் வசிக்கும் இடம் என்பதால் ஆட்கள் வருவது குறைவு அதனால் அவளின் அழுகை வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாமலே போனது.அழுது மேலும் பசிக்க என்ன செய்வது என்று தெரியாமல் அந்த கதவின் அருகிலேயே மடங்கி,தன் உடலை குறுக்கி படுத்துக் கொண்டது அந்த சின்னஞ்சிறு சிட்டு.

ஆயிற்று மணிமேகலையின் இறுதி சடங்குகள் முடிந்து இரண்டு நாட்கள் ஆனது.நிரஞ்சனா தனது அறையிலேயே தஞ்சம் அடைந்துவிட,விஸ்வநாதனோ மனைவியின் புகைபடத்தை பார்த்தவாறே அமர்ந்திருந்தார்.அப்போது அவரின் முன்னே சில காகிதங்கள் விழ என்ன என்று புரியாமல் பார்க்க அங்கு கோபத்துடன் நின்றிருந்தான் கேசவ்.

“இனி உங்க பொண்ணுக்கும் எனக்கும் எந்த சம்மதமும் இல்ல…இதை அவகிட்ட கொடுத்திடுங்க….”என்று கூறி சில பத்திரங்களை அவரின் முன்னே போட்டவன் அவரின் பதிலை கூட எதிர்பாராமல் வெளியேறிவிட்டான்.இதே பழைய விஸ்வநாதனாக இருந்தால் அவனை சுட்டு கொன்றாலும் கொன்றிருப்பார் ஆனால் இப்போது அவரின் சரிபாதி இறந்த நிலையில் மனதும்,உடலும் தளர்ந்து போயிருந்தது.அதனால் கேசவின் செயலை கண்டு கோபம் வந்தாலும் பெரிது படுத்தவில்லை.அவருக்கும் கேசவ் தன் மகளின் வாழ்வில் இருப்பது பிடிக்கவில்லை அதனால் அவனே செல்வது நல்லது என்றுவிட்டுவிட்டார்.

தனது மகளின் அறைக்கு வந்தவர் மகளிடம் கேசவ் வந்து சென்றதை கூற அவளோ எதுவும் பேசாமல் அவன் கொடுத்து சென்றிருந்த விடுதலை பத்திரத்தில் கையெழுத்தை போட்டுவிட்டு மீண்டும் தன் படுக்கையில் விழ.அப்போது தான் அந்த அறையை சுற்றி பார்த்த விஸ்வநாதனுக்கு பேத்தி இங்கு இல்லை என்பது புரிய,

“நீருமா….மிருணா எங்க….”என்று கேட்க,

“ப்ச் தெரியலை டாடி….”என்று அலட்சியமாக மகள் பதில் தர,மனதிற்குள் ஏதோ மணியடித்தது அந்த பெரியவருக்கு வேகமாக கீழே வந்தவர் தனது காரில் ஏறி நிரஞ்சனா தங்கியிருந்த வீட்டிற்கு சென்று கதவை திறக்க அங்கு கதவின் ஓரத்தில் அரை மயக்கநிலையில் கிடந்தாள் மிருணாளினி.அவளைக் கண்டவருக்கு நெஞ்சம் நடுங்கி தான் போனது அவளை தூக்கிக் கொண்டு தனது வீட்டிற்கு வந்தவர் தன் குடும்ப மருத்துவரை வரவழைத்து பரிசோதிக்க குழந்தை இரண்டு நாட்கள் எதுவும் சாப்பிடாமல் இருந்தால் மயங்கி உள்ளது என்று கூறிவிட்டு அவளுக்கு மருந்து எழுதி கொடுத்துவிட்டு சென்றார்.

மருத்துவர் வெளியேறியதும் தன் பேத்தியின் அருகில் அமர்ந்திருந்த விஸ்வநாதனுக்கு ஏனோ அவளைக் காண்கையில் மணிமேகலையின் நினைவு தான் வந்தது.ஏனெனில் மிருணாளினி பார்பதற்கு மணிமேகலை போல் தான் இருப்பாள்.தன் மனைவி இருந்தவரை இது அவருக்கு தெரியவில்லை இப்போது அவர் இல்லாத இடத்தை தன் பேத்தி நிரப்பியாதாக ஒரு எண்ணம்.ஆனால் பேத்தியை வைத்துக் கொண்டாள் மகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகும் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவர்.தீர்க்கமான சில முடிவுகளை எடுத்தார்.

விஸ்வநாதன் முடிவின் படி தனது வக்கீலை அழைத்தவர் அவரிடம் சில கட்டளைகளை கொடுத்துவிட்டு.தன் மகளின் விடுதலை பத்திரத்தை கொடுத்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கரம் மகளுக்கு விவாகரத்து கிடைக்க வழிசெய்தார்.பின் நிரஞ்சனாவிடம் பேசி ஏற்கனவே பேசியிருந்த தன் நண்பனின் மகனுக்கும்,நிரஞ்சனாவிற்கும் திருமணம் முடிவு செய்தார்.ஒரு தந்தையாய் தன் மகளுக்கு நல்வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்தவர் தன் பேத்தியை கற்பகம் என்ற பணிபெண்ணை நியமித்து நிரஞ்சனா தங்கியிருந்த வீட்டிலேயே வளர்த்தார்.

வெளிவுலகிற்கு மிருணாளினி என்பவள் சாதாரண பெண் போல் தான் வளர்க்கப்பட்டாள்.அவளாள் தன் மகளின் வாழ்வில் எந்த இடைஞ்சலும் வரக்கூடாது என்பதில் மிகவும் தீர்க்கமாக இருந்தார்.என்னதான் அவள் தன் மனைவியை போல் இருந்தாலும் அவள் கேசவின் மகள் என்பதை அவரால் ஏற்க முடியவில்லை.அதுமட்டும் இல்லாமல் தன் வருங்கால சந்தனியருக்கு இப்படி ஒருவள் இருக்கிறாள் என்பது தெரியாமலே பார்த்துக்கொண்டார்.

ஆனால் விஸ்வநாதனே எதிர்பாராத ஒன்று மிருணாளினியை பார்த்தவுடன் யார் என்று தெரிந்துவிடும்,ஆம் அவள் அப்படியே மணிமேகலையின் மறுவுருவமே.நடையுடை பாவனை என அனைத்திலும் அவள் மணிமேகலையை போல் தான் இருந்தாள்.அதனால் அவள் நடவடிக்கைகளில் எப்போதும் ஒரு கண் இருக்கும் அது இன்றளவும் தொடர்கிறது.மிருணாளினியின் அனைத்துவிடயங்களும் விஸ்வநாதனின் கைகளுக்கு எப்போதும் வந்துவிடும்.

மிருணாளினி படிப்புக்கு தேவையான அனைத்தும் விஸ்வநாதன் தான் செய்தார்.சிறு வயதில் மிருணாளினி எங்கு தாய்,தந்தை என்று முதலில் கேட்பாள் தான் பின் என்ன நினைத்தாளோ அவளே கேட்பதை நிறுத்திவிட்டாள்.இயல்பிலேயே புத்திசாலியான மிருணாளினிக்கு கடவுள் அனைத்தையும் வாரி வழங்கியிருந்தார்.தாய்,தந்தை இல்லை என்ற குறையை தவிர.

மிருணாளினிக்கு பக்குவப்பட்ட வயது வந்தவுடன் தான் தெரிந்து கொண்டாள் அவளது தாயும்,தந்தையும் பிரிந்துவிட்டனர் என்று.அதுமட்டுமில்லாமல் அவளது தாய்க்கு வேறு திருமணம் முடிந்து குழந்தைகள் கூட உள்ளது.இவை அனைத்தையும் தன் வளர்ப்பு தாயான கற்பகம் மூலம் தெரிந்துகொண்டாள்.அதில் இருந்து விஸ்வநாதன் வீட்டிற்கு வந்தால் கூட அவர் கேட்பதற்கு தான் பதில் தருவாள்.

விஸ்வநாதனுக்கு பேத்தியின் ஒதுக்கம் புரிந்தது தான் இருந்தும் அவரால் ஒன்றும் செய்யமுடியாது.தற்போது நிரஞ்சனாவிற்கும் இரு பிள்ளைகள் இருக்க அவர்கள் தான் அவருக்கு தொழில் துறை வாரிசுகள் இவள் இல்லையே அதனால் அவரும் பட்டும் படாமலும் தான் இருப்பார்.ஆனால் அவளின் நலனில் கருத்தில் கொண்டு அவளுக்கு எப்போதும் அனைத்தும் செய்து கொடுப்பார்.

மிருணளினி பள்ளி பருவம் முழுவதும் டெல்லியில் தான் கழிந்தது.கல்லூரி சேரும் பொழுது தான் அவளுக்கு பிரச்சனை தொடங்கியது.ஆம் அவளது உருவம் அது தான் பிரச்சனையை கிளப்பியது.மணிமேகலை பல்வேறு பொது நல தொண்டுகள் செய்பவர் அதனால் அவரை தெரியாதோர் இருப்பவர் மிகவும் குறைவு.அதனால் மிருணாளினியின் உருவம் மணிமேகலையுடன் ஒன்றுவதைக் கண்டு பலர் கேட்க மிருணாளினியால் பதில் கூற முடியாமல் போனது.

ஒருகட்டத்தில் அவளது பொறுமை பறக்க விஸ்வநாதனின் தனி நம்பருக்கு கைபேசியில் அழைத்துவிட்டாள்.இதுவரை மிருணாளினியாக அவருக்கு அழைத்தது இல்லை.அதனால் மனதில் ஒருவித தயக்கம் என்ன சொல்லுவார் என்று ஆனால் தன் படிப்பு என்று வரும் போது அனைத்தையும் பின்னுக்கு சென்றுவிட்டது.இருமுறை ரிங் போனது யாரும் எடுக்கவில்லை என்றவுடன் வைத்துவிடலாம் என்று நினைத்து கைபேசியை வைக்கபோகும் நேரம் பேசி எடுக்கப்பட்டது,

“ஹலோ…”

“…..”அந்த குரலை கேட்ட மிருணாளினிக்கு நெஞ்சம் நின்று துடித்தது.தனது தாயின் குரலை கிட்டதட்ட பலவருடங்கள் கழித்து கேக்கிறாள் என்ன தான் அவரை பிடிக்கவில்லை என்று கூறினாலும் இரத்த பாசம் என்ற ஒன்று உள்ளதே தன்னை அடக்க முயன்றும் மிருணாளினியால் அழுகையை அடக்க முடியவில்லை அவளின் தேம்பல் அவருக்கும் கேட்டதோ என்னவோ,

“ஹலோ….யாரு….”என்று மீண்டும் கேட்க அதற்குள் யாருமா போன்ல என்றபடி வந்தார் விஸ்வநாதன்.

“தெரியலை டாடி….போன் பண்ணா பேசமாட்டாங்க….இடியட்ஸ்….”என்று திட்டிவிட்டு பேசியை தந்தையிடம் கொடுத்துவிட்டு சென்றார்.விஸ்வநாதன் பேசியில் இருந்த எண்ணை பார்த்தவர் புருவங்கள் முடிச்சிட,

“என்ன மிருணா…”என்றார்.அதுவரை தன்னை கட்டுப்படுத்தி இருந்தவள்.அவரிடம் இன்று கல்லூரியில் நடந்தவற்றை சுருக்கமாக உரைத்தவள் தான் டெல்லியில் படிக்க விரும்பவில்லை என்றும் தன்னை வேறு எங்காவது கல்லூரி சேர்த்துவிடும் படி கூறினாள்.அவள் கூறுவது அனைத்தையும் கேட்டவர் தான் வேறு யோசிப்பதாக கூறிவிட்டு வைத்தார்.

“டாடி…”என்று மகளின் குரல் பின்னே கேட்க,திரும்பி பார்க்க அவரின் பின்னே நிரஞ்சனா நின்றிருந்தார்.அவளது கண்கள் கலங்கி இருந்தது.அவருக்கு மிருணாளினி பிறந்ததிலிருந்து தான் தன் வாழ்வில் பிரச்சனை தொடங்கியது என்று அவளின் மேல் ஒருவித வெறுப்பு அதனால் தான் அவளை ஒதுக்கினார்.மிருணாளினி தந்தையின் பாதுகாப்பில் இருக்கிறாள் என்பது மட்டும் தெரியும் ஆனால் அவளை பற்றி எதுவும் கேட்க மாட்டாள்.

ஆனால் இன்று மகளின் விசிம்பலை கேட்ட பின் அவளை பார்க்கும் ஒரு அவா ஏற்பட்டது.அதனால் தன் தந்தையிடம் அவளை காண தானும் வருவதாக கூற அவரோ வேண்டாம் என்று மறுத்தவர்,

“நீருமா….நீ தான் அவளை வேணாம்னு ஒதுக்கின….இப்ப திடீர்னு சொந்தம் கொண்டாடினா நல்லா இருக்காது.அதுமட்டுமில்லாம மிருணா பத்தின விஷயம் உன் பிள்ளைகள் ராகேஷ்,நந்திதா தெரிந்தால் பிரச்சனை என்று கூற,நிரஞ்சனாவும் சரி என்று கூறியவர்,

“டாடி…அவ போட்டா இருக்கா….”என்று கேட்க,தனது பேசியில் இருந்த மிருணாளினியின் புகைப்படத்தை காட்டினார்.அதை பார்த்தவருக்கு கண்கள் நகர மறுத்தது தன் தாய் மீண்டும் பிறந்து வந்தது போல் இருந்தது.

“டா…டாடி….இது….இவ..அப்படியே அம்மா….அம்மா தான் இல்லை….”என்று மிருணாளினியின் முகத்தை தடவினார்.

“ம்ம்…ஆமா…அப்படியே என் மேகலை தான்….உருவத்தில மட்டும் இல்ல குணத்திலும் தான்….”என்று சற்று நேரம் தன்னை மறந்து பேத்தியின் புகழ் பாடினார்.இவை அனைத்தையும் கேட்ட நிரஞ்சனாவிற்கோ ஒரு மனதிற்கு சந்தோஷமாகவும்,மற்றொரு மனது மிருணாளினியை தன் மற்ற பிள்ளைகள் உடன் ஒப்பிட்டும் பார்த்து கொண்டிருந்தது.

அடுத்த நாளே மிருணாளினியின் வீட்டிற்கு வந்த விஸ்வநாதன் அவளுக்கு தன் நண்பர் மூலம் கோவையில் உள்ள கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டதாக கூறினார்.மிருணாளினிக்கும் இந்த இடத்தை விட்டு நகர்ந்தால் போதும் என்ற எண்ணம் அதற்கு சில மறைமுக காரணங்களும் உண்டு அதை அவள் யாரிடமும் கூறவில்லை.அதன்படி தான் அவள் கோவை வந்து சேர்ந்தது.

தன்னை பத்திய அனைத்தையும் கூறிவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் மிருணாளினி.அவளது கண்கள் கலங்கவெல்லாம் இல்லை மாறாக அதில் இருந்தது வெறுமை மட்டுமே.கீர்த்தனா தன் தோழியை கட்டிக் கொண்டு கண்ணீர்விட்டவள்,

“மிருணா….நான் இருக்கேன் உனக்கு….”என்று அவளின் தலையை மென்மையாக வருட அதுவரை அடங்கியிருந்த மிருணாளினி உடைந்து அழுதுவிட்டாள்.அவளது அழுகையை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.விஜய்க்கு அவளின் அழுகை காண நெஞ்சம் துடித்தது இருந்தும் அழுது மனதில் உள்ள கசப்புகள் வெளிவரட்டும் என்று நினைத்தவன் அமைதியாக இருந்தான்.ஆனால் அவன் மனதில் என்னமாதிரி மனிதர்கள் இவர்கள் இவ்வளவு சுயநலகார்களாக இருக்கின்றனர் என்று கோபம் கோபம் மட்டுமே.

Advertisement