Advertisement

காதல் வானவில் 13

கீர்த்தனா தனது அறையில் ஒரு டிரவல் பேக்கில் தனக்கு தேவையான துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.அப்போது அங்கு வந்த அவளது தந்தை சிதம்பரம்,

“ஏன்மா நீ போறது விஜய்க்கு தெரியுமா….”என்று கேட்க,அவளோ பதில் ஏதும் சொல்லாமல் தனது வேலையில் கவனமாக இருந்தாள்.எப்போதும் சிறுபிள்ளை போல் இருக்கும் மகளின் முகம் இன்று மிகவும் அழுது சோர்ந்து போய் இருப்பதைக் கண்ட தந்தைக்கு மனதிற்கு கஷ்டமாக இருந்தது.

“ஏன்மா நீ வருவேனு அந்த மிருணா பொண்ணுக்காவது தெரியுமா…எப்படி அந்த பொண்ணு வீட்டுக்கு போவ….”என்று சற்று கவலையாக கேட்க,தன் பிடிவாதத்தை விட்டவள் தந்தையை இறுக கட்டிக் கொண்டு,

“அப்பா….பயப்படாதீங்க ப்பா…உங்களுக்கே தெரியும் எனக்கு மிருணானா எவ்வளவு பிடிக்கும்னு…அவ என்னோட பெஸ்ட்டி ப்பா…எனக்கு ஏதோ ஓரத்தில மனசு சொல்லுது அவளுக்கு ஏதோ பிரச்சனைனு….அதான் நானே கிளம்பிட்டேன்….எனக்கு நீங்க டெல்லிக்கு டிக்கெட் மட்டும் புக் பண்ணிக் கொடுங்க ப்ளீஸ்….நான் தைரியமா தான் இருக்கேன்….ப்ளீஸ் ப்பா…..”என்று கண்கள் கலங்க கெஞ்ச சிதம்பரத்திற்கு மனது உருகி தான் போயிற்று.

தன் தாய் இறந்த போது கூட இவ்வாறு கலங்காதவள் இன்று இவ்வளவு கலங்குகிறாள் என்றால் மிருணாளினி அவளுக்கு எவ்வளவு முக்கியமானவள் என்று புரிந்தது சிதம்பரத்திற்கு இருந்தும் ஒரு தந்தையாய் அவருக்கு பயமே மகளை தனியே டெல்லி வரை அனுப்ப,அதுவும் கீர்த்தனா அனைத்திற்கும் பயப்படுபவள் இன்று ஏதோ கோபத்தில் நான் தனியாக செல்கிறேன் என்று கூறினாலும் அந்த பெரிய நகரத்தில் அவளாள் சமாளிக்க முடியாது என்று தீர்மானித்தவர் ஒரு முடிவுடன் மகளை நோக்கினார்.அவளோ தன் தந்தை தனக்கு சாதகமான பதிலை தரவேண்டுமே என்று கண்களில் பரிதவிப்புடன் அமர்ந்திருந்தாள்.அவளது தலையை ஆதரவாக தடவியவர்,

“நான் புக் பண்றேன்டா….நீ கவலைபடாத….”என்று வாஞ்சையாக கூறிவிட்டு சென்றார்.தந்தை சொன்னவுடன் தான் கீர்த்தனாவிற்கு மூச்சே வந்தது.எங்கே தன்னை செல்லவேண்டாம் என்றுவிடுவாரோ என்று மனதிற்குள் தவித்திருந்தவளுக்கு தந்தை தன்னை புரிந்து கொண்டதில் மகிழ்ச்சியே.

தன் மகளிடம் பேசிவிட்டு வந்த சிதம்பரம் முதலில் விஜய்க்கு தா ன் அழைத்து கீர்த்தனா மிருணாளினியை காண டெல்லி செல்லவிருப்பதாக கூறினார்.அவர் கூறியதைக் கேட்டவுடன் அவளை தனியே அனுப்ப வேண்டாம் தான் உடனே வருவதாக கூறினான் விஜய்.அவன் வருகிறேன் என்று கூறியவுடன் தனக்கு தெரிந்த டிராவல் ஏஜன்சிக்கு போன் செய்து டெல்லி செல்லும் விமானங்களை பற்றி விசாரித்தும் வைத்துக் கொண்டார்.

விஜய் கூறியது போல் அடுத்த அரைமணிநேரத்தில் கீர்த்தனாவின் வீட்டிற்கு வந்திருந்தான் கூடவே வருணும் வந்திருந்தான்.இருவரையும்

“வா விஜய்….வாங்க மாப்பிள்ளை….”என்று வரவேற்றார் சிதம்பரம்.

ஒருமாதத்திற்கு முன்பு தான் வருணும்,கீர்த்தனாவும் தங்கள் வீட்டில் தங்கள் காதலை பற்றிக் கூறி சம்மதம் வாங்கியிருந்தனர்.சிதம்பரத்திற்கு வருணின் எளிமையான பேச்சும் தன் மகளின் மீது அவன் காட்டும் அக்கறையுமே அவரை அவன் பால் ஈர்த்திருந்தது.

வருண் குடும்பத்திற்கும் கீர்த்தனாவின் குழந்தை தான பேச்சும் நடவடிக்கையும் பிடித்துவிட அவர்களும் சம்மதம் தெரிவித்திருந்தனர். தங்கள் குடும்பத்தில் நல்ல நாள் பார்த்துவிட்டு வந்து மற்ற நிகழ்வுகளை வைத்துக் கொள்ளலாம் என்று வருணின் குடும்பம் கூறி சென்றிருந்தது.

“கீதூ எங்க ப்பா….எங்க அவ….ஏய் கீதூ….”என்று வீடே அதிரும் வண்ணம் சத்தமிட்டான் விஜய்.

“டேய் டேய் விஜய் கொஞ்சம் அமைதியா இருடா….”என்று வருண் அவனை சமாதானப்படுத்தினான்.

“என்னடா என்ன என்னை எதுக்கு பேசாதனு சொல்லுர….ஏய் கீதூ….கீழ வா….”என்று மீண்டும் கத்தினான்.தனது அறையில் இருந்த கீர்த்தனாவிற்கு இது தந்தையின் செயல் என்று புரிந்தபோதும் பல்லைக் கடித்துக் கொண்டு கீழே இறங்கினாள்.

“எங்க மேடம் கிளம்புறீங்க….எங்க ஆங்…”என்று கோபமாக விஜய் கேட்க,அவளோ அவனை முறைத்தபடி நின்றாளே தவிர பதில் ஏதும் கூறவில்லை.அதுவே விஜயின் கோபத்தை மேலும் அதிகரிக்க,

“ப்பா யாரும் எங்கேயும் போக வேண்டாம்….நீங்க உங்க வேலையை பாருங்க…”என்று சிதம்பரத்திடம் கூற,

“நான் கண்டிப்பா போக தான் போறேன்….உனக்கு இஷ்டம் இருந்தா வா இல்லையா வராத…நான் உன்னை வற்புற்தல….ஆனா என்னை நீ போக கூடாதுனு சொல்ல கூடாது….”என்று கீர்த்தனாவும் கோபமாக கூறினாள்.எப்போதும் விஜய் சத்தம் போட்டாள் அடங்கி போகும் கீர்த்தனா இன்று அவனுடன் மல்லுக்கு நிற்பதை வருணும்,சிதம்பரமும் ஆச்சிரியமாக கண்டனர்.

“ஓகோ…என்ன எதிர்த்து சண்டை போட ஆரம்பிச்சிட்ட….அந்தளவுக்கு என்னைவிட உனக்கு அவ தான் பெரிசு இல்லை….”என்று விஜயும் சண்டைக்கு நின்றான்.அவனுக்கு தன் உயிர் தோழி தன்னைவிட வேறு ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுப்பது பிடிக்கவில்லை.

அதுமட்டுமில்லாமல் மிருணிளினி விஷயத்தில் அவனுக்கு மனதில் ஏதோ ஒன்று தோன்றிக் கொண்டே இருந்தது.அது அவள் என்ன தான் தன்னிடம் முகம் திருப்பினாலும் தன்னால் ஏன் அவளை எளிதாக கடக்க முடியவில்லை என்ற கோபம் அதுவே இன்னும் ஆத்திரத்தை தூண்டிவிட்டுருந்தது.

“என்ன என்ன சொன்ன விஜி….எனக்கு நீயும்,மிருணாவும் எப்போதும் ஒன்னு தான் இதை நான் உன்கிட்ட எத்தனை தடவை சொல்லுறது….நீ தான் இதை புரிஞ்சிக்கமாட்டேங்குற….நீ ஏன் விஜி இப்படி மாறிட்ட….ஏன்…”என்று கோபமாக ஆரம்பித்து அழுகையில் முடித்தாள் கீர்த்தனா.அவளுக்கு ஏன் விஜய் மிருணாளினி விஷயத்தில் இப்படி முறைத்துக் கொண்டு நிற்கிறான் என்று புரியவில்லை.

இருவரும் சண்டையிடுவதை பார்த்துக் கொண்டிருந்த சிதம்பரம்,

“போதும் இரண்டு பேரும் கொஞ்ச நிறுத்துங்க….இப்ப எதுக்கு இவ்வளவு சண்டை போடுறீங்க….ஏன்பா விஜய் கீர்த்திக்கு நீ எப்படியோ அதேபோல தான் மிருணாளினியும் நீ ஏன் இவ்வளவு சண்டை போடுற….”என்று கேட்க அதுவரை சண்டையிட்டு கொண்டிருந்த விஜய் அவரிடம் பதில் கூற முடியாமல் தலைகுனிந்தான்.

என்ன கூறிவான் அவனுக்கே ஒரு தெளிவு கிடைக்கவில்லை இதில் அவரிடம் என்ன என்று பதில் கூறிவது அதனால் அமைதியை கையில் எடுத்தக்கொணாடான்.மனதின் சோர்வு உடலையும் தாக்கியதோ என்னவோ சோர்வாக அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான்.அவனது தோற்றத்தைக் கண்ட சிதம்பரம் ஆதரவாக அவனது தோள்களை பற்றி,

“என்ன விஜய் ஏதாவது பிரச்சணையா….”என்று கேட்க,அவனோ இல்லை என்னும் விதமாக தலையாட்டினான்.

“பின்ன என்ன விஜய் ஏன் போகமாட்டேனு சொல்லுற….கீதூவும் அழுது கரையுறா….கீதூ நினைக்கிற மாதிரி அந்த பொண்ணுக்கு ஏதாவது ஆகியிருந்தா….”என்று அவர் கூறி முடிக்கும் முன்,

“அப்பா…”

“மாமா…”

“அங்கிள்…”என்று கீர்த்தனா,வருண்,விஜய் மூவருமே கத்திவிட்டனர்.இப்போது ஆண்கள் இருவருக்குமே மிருணாளினியை நினைத்து சற்று கலக்கமாகவே இருந்தது.விஜய்க்கு சிதம்பரம் கூறியபடி அவளுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்ற எண்ணமே சற்று நடுக்கத்தை கொடுத்தது.எப்போதும் நிதானமாக யோசிப்பவன் கூட காதல் வாய்ப்பட்டால் நிதானம் இழந்துவிடுவான் விஜய் மட்டும் விதிவிலக்கா என்ன.

அடுத்த ஒருமணிநேரத்தில் மூவரும் விமானநிலையத்தில் இருந்தனர்.வருண் கீர்த்தனாவை முறைத்தபடி இருக்க அவளோ அவனை சற்றும் கண்டுகொள்ளவில்லை.விஜய்க்கோ சிதம்பரம் கடைசியாக கூறியவார்த்தைகளே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.இனம் புரியாத உணர்வு ஒன்று மனதை ஆட்டிபடைக்க தலைதாங்கியபடி அமர்ந்துவிட்டான் விமானத்தில்.வருண் இருமுறை அவனது இருண்ட முகத்தைக் கண்டு கேட்டான்.ஆனால் விஜய் ஒன்றுமில்லை என்றதோடு கண்களை மூடிவிட,வருணும் அவனே தெளிந்து கூறட்டும் என்றுவிட்டுவிட்டான்.

இவ்வாறு நண்பர்கள் மூவரும் விடியற்காலை டெல்லி வந்தடைந்தனர்.கீர்த்தனா வைத்திருந்த வீட்டு முகவரியை கூறி கால் டாக்ஸில் ஏறினர்.அவர்கள் கூறிய அப்பார்மெண்டின் முன் காரை நிறுத்திய டிரைவர்,

“உள்ள அனுமதி இல்லாம நாம போக முடியாது….அதனால நீங்க விசாரிச்சுக்கோங்க….”என்று கூறிவிட்டு சென்றுவிட,வருணுக்கோ அந்த அப்பார்மெண்டுகளை பார்த்தவுடன் புரிந்து போனது இது மேல் தட்டு மக்கள் வசிக்கும் இடம் என்று.விஜய்யும் அந்த அப்பார்மெண்டை ஒருமுறை நன்கு சுற்றி பார்த்தவன் அங்கு இருக்கும் காவலாளியிடம் சென்று விசாரித்தான்.அந்த காவலாளியோ இவர்கள் மூவரையும் ஏற இறங்க பார்த்துவிட்டு,

“நீ்ங்க யார்….எதுக்காக மேடத்தை பார்க்கனும்….அப்பாயின்மென்ட் இருக்கா…”என்று ஹிந்தியில் கேட்டான்.விஜயும் தங்களிடம் அப்பாயின்மெண்ட் எதுவும் இல்லை என்று கூறியவன் தாங்கள் மூவரும் மிரணாளினியின் நண்பர்கள் என்று கூற,அந்த காவலாளியோ,

“அப்பாயிண்மென்ட் இல்லாமல் உள்ளே அனுமதிக்க முடியாது….”என்று கூறிவிட்டு செல்ல,விஜய்க்கு கோபத்தில் பல்லை கடிப்பதை தவிர வேறு எதுவும் செய்யமுடியவில்லை.விஜயின் மனதில் இவள பார்க்க வந்ததுக்கு எங்களுக்கு இந்த தண்டனை தேவைதான் என்று நினைத்துக் கொண்டு இப்போது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்க,அதற்குள் அவனின் அருகில் வந்த கீர்த்தனா,

“என்ன விஜி…என்ன சொல்லுறாங்க…”என்று கேட்க,அவளை முறைத்தவன் அந்த காவலாளி கூறியதைக் கூற ஒருநிமிடம் யோசித்தவள் பின் தன் மொபைலை எடுத்துக் கொண்டு அந்த காவலாளியிடம் சென்று எதையோ காட்டி கேட்க,அவனும் அலைபேசி மூலம் யாருக்கோ தொடர்பு கொண்டு பேசினான்.

தன் தனிமை நிலையை எண்ணி எவ்வளவு நேரம் மிருணாளினி அழுதாள் என்று அவளுக்கே தெரியவில்லை.அதே நிலையில் அவள் உறங்கியும் விட காலை வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கவே பிரிக்க முடியாத இமைகளை மிகவும் சிரமபபட்டு திறந்தாள்.அதற்குள் வீட்டின் மணி விடாமல் இரண்டு மூன்று முறை அடித்து ஓய்ந்துவிட,யார் இந்த நேரத்தில் என்ற நினைவுடனே வந்து கதவை திறக்க,அங்கு ஒரு நடுத்துரவயது பெண் ஒருத்தி நின்றிருந்தாள்.அவளைக் கண்டு புருவம் சுழித்த மிருணாளினி அவள் யார் என்று விசாரிக்கும் முன் அவளின் முன் ஒரு கடிதத்தை அவள் நீட்ட அதை வாங்கியவளுக்கு புரிந்து போனது அவளை யார் அனுப்பியிருக்கக் கூடும் என்று.

தன்னை நிம்மதியாகவே இருக்கவிடமாட்டார்களா என்று மனதிற்குள் சலித்தவள் அந்த பெண்ணை உள்ளே வர அனுமதித்தாள்.பின் நேராக தனது அறைக்குள் சென்று முடங்கினாள்.மனதிற்குள் அவ்வளவு கோபம் தன்னை கண்காணிப்பவர் மீது இருந்தும் ஒன்றும் கூறமுடியாதே.அனைத்தும் அவருடையது அல்லவா அவர் என்ன நினைக்கிறாரோ என்று அது தான் நடக்கும் என்று அவளுக்கு நன்கு தெரியும்.அதுவும் இப்போது அவரிடம் வாதம் செய்ய உடலிலும்,மனதிலும் தெம்பு இல்லை என்பதை நன்கு உணர்ந்தவள் பொறுத்து போதவதை தவிர வேறு வழியில்லை என்று தன்னை முயன்று கட்டுக்குள் கொண்டு வந்தாள்.

இவ்வாறு தன் மனதில் தன்னை கண்காணிக்கும் அந்த பெரிய மனிதரை திட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் போது தான் வீட்டின் அலைபேசி அழைத்தது.மிருணாளினிக்கு அவராக தான் இருக்கும் என்று நன்கு தெரியும் அதனால் அடிக்கும் அலைபேசியை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர எடுக்கவில்லை.

அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த அந்த வேலைக்கார பெண் அவள் அலைபைசியை எடுக்கப்போத்தில்லை என்பதை உணர்ந்து அவளே எடுக்க அந்த பக்கம் என்ன கூறப்பட்டதோ,

“இருங்க நான் மேடம் கிட்ட கேட்டு சொல்லுறேன்…”என்று கூறிவிட்டு,

“மேடம்…மேடம்…”என்று அழைக்க மிருணாளினியோ திரும்புவேனா என்ற ரீதியில் அமர்ந்திருந்தாள்.அவள் திரும்பி கேட்கமாட்டாள் என்று உணர்ந்த அந்த பெண்ணும்,

“மேடம் உங்களை பார்க்க உங்க பிரண்ட்ஸ் வந்திருக்காங்களாம்….”என்று கூற அப்போதும் மிருணாளினி திரும்பவில்லை.

“உங்க பிரண்டு பேரு கீர்த்தனானு சொன்னாங்க….”என்று கூற கீர்த்தனா என்ற பெயரைக் கேட்டவுடன் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து வேகமாக எழுந்த மிருணாளினி,அலைபேசியை வேகமாக வாங்கி காவலாளியிடம் பேசியவள் அவர்களை உள்ளே வீடு வரை கொண்டு வந்து விடும் படி பணிந்துவிட்டு வைத்தாள்.

அலைபேசியை வைத்த காவலாளியோ வாயிலில் நின்ற மூவரையும் அழைத்துக் கொண்டு மிருணாளினியின் வீட்டிற்கு சென்றான்.வருணோ அந்த அப்பார்மெண்டின் பிரம்மான்டத்தை கண்டு சற்று வியந்து தான் போனான்.

“டேய் இது எல்லாம் பெரியிடத்து மக்கள் தங்குர சொகுசு இடம் போல இருக்கு டா…”என்று விஜயிடம் கூற அவனோ எதையும் கூறாமல் ஒருவித இறுக்கத்துடனே வந்து கொண்டிருந்தான்.கீர்த்தனாவிற்கோ தன் தோழியை சந்திக்க போகும் ஆவல் மட்டுமே அதனால் அவளுக்கு இது எல்லாம் கண்ணிலும் கருத்திலும் படவில்லை.ஒரு வீட்டின் முன்பு அழைப்பு மணியை அடிக்க கதவை திறந்து நின்ற மிருணாளினியின் தோற்றத்தைக் கண்டு மூவரும் திகைத்து தான் விட்டனர்.

Advertisement