Advertisement

காதல் வானவில் 1

சென்னை,

ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவின் வாசலில் அனைவரும் சற்று பதட்டத்துடன் அமர்ந்திருந்தனர்.அனைவர் மனதிலும் உள் இருப்பவனின் நிலை என்ன என்பதிலேயே இருந்தது.தனக்கு தெரிந்த அனைத்து தெய்வங்களையும் வேண்டியபடி அமர்ந்து இருந்தார் நீலவேணி.அவரின் கைகளை பிடித்தபடி கலங்கிய விழிகளுடன் அமர்ந்திருந்தார் ஆனந்தன்.

அவர்களது செல்ல மகன் விஜய் விபத்தாகி உள்ளே இருக்கிறான்.தன் நண்பனை பார்த்துவிட்டு வருகிறேன் என்று மாலை சொல்லி சென்றவன் இப்போது எந்தவித அசைவுமின்றி உள்ளே உயிருக்கு போராடி கொண்டிருக்க,வெளியில் இவர்களோ அவன் மீண்டு வரவேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தார்கள்.

அந்த நடைபதையில் பதட்டத்துடன் நடை பயின்றபடி இருந்தான் வருண் விஜயின் நண்பன்.அவசர சிகிச்சை பிரிவின் கதவையே பார்த்தபடி தன் தந்தையின் மடியில் படுத்திருந்தாள் கீர்த்தனா விஜயின் தோழி.இருவரும் குடும்ப நண்பர்கள்.கீர்த்தனாவின் குழந்தை பருவம் முதலே விஜய் அவளுக்கு நண்பன்.அவளது கண்களில் கண்ணீர் அருவியாக வழிந்தபடி இருந்தது.அவளது உதடுகளோ விஜி வந்துடு விஜி என்று உச்சரித்துக் கொண்டிருந்தது.அவளது கண்ணீரை துடைத்தார் அவளது தந்தை சிதம்பரம்.தந்தையின் கரம் படவும்,

“அப்பா….அப்பா…விஜி…விஜி…”என்று மேலும் கூற முடியாமல் அவள் தேம்பி அழ,

“ச்சு….குட்டிமா…அழாதடா….விஜய்க்கு ஒண்ணும் ஆகாது….நான் சொல்லுறேன்ல….”என்று அவளை சாமாதனப்படுத்தும் நோக்கத்தில் கூறினார்.ஆனால் அவருக்குமே சற்று பயமாக தான் இருந்தது.அப்போது கீர்த்தனாவின் கைபேசி இசைத்தது.அவள் இருக்கும் நிலையில் யாருடனும் பேசும் எண்ணம் இல்லை அதனால் அதனை கண்டு கொள்ளாமல் இருக்க,அதுவோ மீண்டும் மீண்டும் இசைந்து தனது இருப்பை காட்டியது.

“ப்ச்…கீர்த்தி…உன் செல் தான் அடிக்குது….எடுத்து பேசு…”என்று கண்டிப்புடன் வருண் கூற,அவனை முறைத்தவள் தனது கைபேசியை எடுத்து பார்க்க,அதில் மிருணாளினியிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது.இவளை எப்படி மறந்தோம் என்று எண்ணியவாறே,மீண்டும் அவளுக்கு அழைக்க,சிறிது நேரம் கழித்தே எடுக்கப்பட்டது,

“ஹலோ…கீதூ…”என்று மிருணாளினி அழைத்தது தான் தெரியும்,மடைதிறந்த வெள்ளம் போல் நடந்த அனைத்தையும் கூறிவிட்டாள் கீர்த்தி.அவள் கூறி முடித்து சில கணங்கள் மறுபக்கம் மௌனம்,

“மிருணி….மிருணி…இருக்கியா…”என்று கீர்த்தி இருமுறை அழைக்கவும்,

“ஆங்…இருக்கேன்…கீதூ….எந்த ஹாஸ்பிட்டல்……”என்று மிருணாளினி கேட்க,மருத்துவமனை பெயரை கூறினாள்.அடுத்த நிமிடம் கைபேசி அணைக்கப்பட்டு இருந்தது.கீர்த்தி பேசி முடித்தவுடன் அவளிடம் வந்த வருண்,

“யார் கிட்ட பேசுன…”என்று கேட்க,

“நம்ம மிருணா கிட்ட தான்….”என்று கூற,வருண் அமைதியாகவிட்டான்.அடுத்த சில நிமிடங்களிலேயே மிருணாளினி மருத்துவமனை வந்துவிட்டாள்.வரவேற்பறையில் கேட்டுக் கொண்டு அவசர சிகிச்சை பிரிவிற்கு வர அங்கே அனைவரும் ஒரு ஒரு மூலையில் அமர்ந்திருந்தனர்.வேகமாக அங்கே வந்தவள் நடை பயின்ற படி இருந்த வருணிடம்,

“என்ன ஆச்சு வருண்…எப்படி ஆச்சு…என்கிட்ட பேசிட்டு தான போனாங்க…”என்று தன் மனதில் உள்ளதை அப்படியே கேட்க,வருணுக்கு ஒன்றும் புருயவில்லை.

“என்ன விஜய் உன்கிட்ட பேசினானா…இது எப்போ…”என்று தான் மனதில் நினைத்தான்.

பின்னே மிருணாளினியிடம் விஜய் பேசியதே இருவாரம் முன்பு அவளின்  வீட்டிற்கு சென்ற பொழுதான்.அதுவும் இரண்டு வார்த்தைகளில் பதிலளிப்பான்.அவ்வாறு இருக்க இன்று பேசினான் என்று மிருணாளினி கூறியதை நம்பாமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.தான் கேட்டும் வருணிடம் இருந்து பதில் வராமல் போக,என்ன வருண் என்று கேட்க வர,அதற்குள் மிரணாளினியை கண்ட கீர்த்தி,வேகமாக வந்து அவளைக் கட்டிக் கொண்டாள்.

“மிருணி…பார்த்தியா விஜியை…எப்ப பார்த்தாலும் என்னை பார்த்து போ பார்த்து போனு சொல்லுவான்…இன்னைக்கு அவன் என்ன செஞ்சு வச்சிருக்கானு பாரு…”என்று தேம்பியபடி கூற,அவள் தோள்களை அணைத்தபடி இருந்த மிருணாளினிக்கும் நெஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்தது.

“என்ன ஆச்சு விஜய்க்கு….என்கிட்ட இப்ப தான பேசிட்டு போனார்…என்ன ஆச்சு…ஏன் இப்படி எல்லாம் நடக்குது எனக்கு…”என்று தன் மனதுடன் போராடிக் கொண்டிருந்தாள்.அவளது மனவோட்டங்களை அங்கிருக்கும் யாரும் கவனிக்கும் மனநிலையில் இல்லை அதனால் அவர்களுக்கு மிருணாளினியின் கண்ணீர் தெரியாமலே போனது.ஆனால் வந்ததிலிருந்து அவளையே கவனித்துக் கொண்டிருந்த வருணுக்கு இன்று அவன் காணும் மிருணாளினி வேறாக தெரிந்தாள்.எப்போதும் எதற்கும் கலங்காத அவளது விழிகள் இன்று கலங்கியதுடன் மட்டும் அல்லாமல் ஒருவித தவிப்புடனும்,அலைபுரிதலுடன் இருந்தது அதுவும் விஜய்க்காக.அதுதான் அவனை யோசிக்க வைத்தது.

இப்படி அனைவரையும் தவிக்கவிட்ட விஜய் அவசர சிகிச்சை பிரிவில் உறக்கத்தில் இருந்தான்.மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்ற பொழுதிலும் காலைக்குள் அவனுக்கு விழிப்பு வர வேண்டும் இல்லையேல் கோமா செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறி சென்றிருந்தனர்.அதனால் அவனை சார்ந்தவர்கள் அனைவரும் சற்று கலக்கத்தில் இருந்தனர்.

கீர்த்தியுடன் ஒரு இருக்கையில் அமர்ந்த மிருணாளினிக்கு மனது ஒருநிலையில் இல்லை ஏதேதோ எண்ணங்கள் அலைமோத கண்களை இறுகி மூடிக் கொண்டு முதல் முறையாக கடவுளிடம் வேண்டுதல் வைத்தாள்.

“கடவுளே விஜய்க்கு எதுவும் ஆகக்கூடாது….ப்ளீஸ்…நான் இதுவரைக்கும் உன்கிட்ட எனக்காக எதுவும் கேட்டது இல்லை….முதல் முறையா கேட்குறேன்….எனக்கு நல்லபடியா விஜயை மீட்டுக் கொடுத்தது அதுவே போதும்….”என்று மனதால் வேண்டுதல் வைத்தவள்,தனது கைகளில் அவன் வாங்கி அணிவித்த கை செயினனை வருடினாள். சிறிய இதயங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னியபடி இருக்க நடுவில் ஒரு பெரிய இதயத்தின் நடுவில்  ஒரு பெண்ணிற்கு ஒரு ஆண் பூ கொடுப்பது போல் இருக்கும் விரல்களால் வருடி கொண்டிருந்தவள் எண்ணங்கள் அன்றைய தினத்திற்கு சென்றது.

அன்று,

“கண்ணை மூடு மிருணா….”என்றான் விஜய்.

“எதுக்கு விஜய்???”என்றாள் மிருணாளினி.

“நான் சொன்னதை என்னைக்குமே கேட்கமாட்ட…அப்படி தான…கண்ணை மூடுன்னு சொன்னா மூடேன்டி…”என்றான் சற்று கடுப்பாகவே.

“ஓய் சரி சரி…”என்று கண்களை மூட,அவளது கரத்தை பிடித்து அவன் ஏதோ அணிவிப்பது போல் இருந்தது மிருணாளானிக்கு,

“என்ன விஜய் செய்யுற….”என்று கேட்க,

“இருடி வரேன்…..எப்ப பாரு அவசரம்…அவசர குடுக்கை…”என்று கடிந்தவன்.அவளது கைகளில் தான் வாங்கி வந்த கைசெயினை மாட்டிவிட்டுவிட்டு,

“ம்ம்…இப்ப கண்ணை திற…”என்று கூற,கண்களை திறந்த மிருணாளினிக்கு கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தது.

“விஜய்….இது…இது…”என்று கூற முடியாமல் அவள் தடுமாற,அவளை தன் தோள்களோடு சேர்த்து அணைத்தவன்,

“ம்ம்…நீ ஆசையா பார்த்துட்டு வந்தது தான்…”என்றவன்,தன் தோள்களில் சாய்ந்திருந்தவளின் காதுகளில்,

“பிடிச்சிருக்கா….”என்றான் ஹஸ்க்கி குரலில்.அவளது தலை தன் போல் ஆடியது.அன்றைய நாளின் அவனது குரலும்,அணைப்பும் மிருணாளினிக்கு இன்று நினைத்தாள் கூட மனமும்,உடலும் சிலிர்த்து தான் அடங்கும்.அவளையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது.தன் மனதில் உள்ளதை யாரிடமும் கூறமுடியாமல் அவளது மனமும் ஊமையாக அழுது கொண்டிருந்தது.

மிருணாளினிக்கு இருவாரங்கள் முன்பு வாழ்க்கையை விருப்பத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணமே வந்திருந்தது.அதுவும் விஜய் என்பவனால் என்று தான் கூற வேண்டும்.தனது மன இறுக்கத்தை போக்கி உனக்கு என்று நான் இருக்கிறேன் என்று கூறியவனும் அவனே.ஊரில் இருந்து வந்தலிருந்து அவளது நினைவுகளில் நிறைந்து இருந்தவன் இப்படி  படுக்கையில் விழுவான் என்று சற்றும் அவள் எதிர்பார்க்கவில்லை.கண்மூடி அமர்ந்திருந்தவளின் நினைவுகள் தன் போல் பின்னோக்கி சென்றன.விஜயை முதன் முதலில் கண்ட தினத்திற்கு சென்றது.

Advertisement