Advertisement

காதல் போயின்?

இரவு எட்டு மணி. இருபதாவது மாடியின் பால்கனியில் நின்றபடி தீபாவளிக்காக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பெங்களூர் நகரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் விஜய். தூரத்தில், வானத்தில் வெடித்து சிதறிய வான வேடிக்கையை அவனது கண்கள் இரசித்துக் கொண்டிருக்க அவனது மனதானது இருபது வருடங்களுக்கு முன்பு இதே போல் ஓரு தீபாவளி இரவில் பயணித்து கொண்டிருந்தது

சில நிமிடங்கள் கழித்து வீட்டின் அழைப்பு மணி இனிய இசையாக ஒலிக்க, பால்கனியிலிருந்து வாசலுக்கு அவன் செல்லுமுன், அவனைப் போலவே யோசனையாக சாப்பாடு மேஜையருகே அமர்ந்திருந்த கல்பனா, அவளது சிந்தனை ஓட்டத்திற்கு ஓய்வு கொடுத்து விட்டு, வேகமாக எழுந்து,

நான் போய்த் திறக்கறேன் விஜய்.” என்று பதற்றத்துடன் சொல்ல,

ரிலாக்ஸ்..நீயே போ..நான் போகலை….கதவைத் திற, உள்ளே அழைச்சிட்டு வா, உட்கார வை, குடிக்க கொடு, சாப்பிட வை..” என்று அவளை கேலி செய்தவனை இடைமறித்து,

நீங்களே போங்க..வாசல்லையே எல்லாத்தையும் சொல்லிடுங்க..அப்படியே வாசலோட அனுப்பிடுங்க.” என்று சொல்லி விட்டு கோபத்துடன் வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து கொண்டாள் கல்பனா.

அதற்கு,“இதுக்கு மேலே சொல்லாம தள்ளிப் போட முடியாது கல்பனா..ஷீ இஸ் இன் லவ்.” என்றான் விஜய்.

நம்மைப் போலவே அந்த உணர்வுகளை அனுபவிக்கற வாய்ப்பு அவளுக்கு கிடைச்சிருக்கறது மகிழ்ச்சியான விஷயம் விஜய்..காதலிச்சு கல்யாணம் செய்துகிட்ட எத்தனையோ பேர் கடைசிவரை சந்தோஷமா வாழறாங்க..நானும் நீங்களும் விதிவிலக்கு..ப்ளீஸ் நம்மைப் பற்றி சொல்லி அவளைக் குழப்ப வேணாம்.” என்றாள் கல்பனா

ஸாரி மா..இன்னைக்கு சொல்லி தான் ஆகணும்..குழம்பிப் போகறதும் தெளிவாகறதும் அவ கைலே தான் இருக்கு..பட் வில் வெயிட்..சாப்பிட்டு முடிச்சிட்டு நிதானமாப் பேசப் போறேன்..நீ வந்திருக்கறது அவளுக்கு தெரியாது..நீயே போய் கதவைத் திற..சந்தோஷப்படுவா..நோ பதற்றம்..சில்.” என்று சொல்லி விட்டு விஜய் மீண்டும் பால்கனிக்குச் செல்ல, மறுபடியும் அழைப்பு மணி ஒலித்தது.

ரொம்ப நல்ல முடிவு..இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதிலிருந்து படபடன்னு இருக்கு..எனக்கும் இப்போ கொஞ்சம் அவகாசம் கிடைக்கும்..’இரண்டு தடவை மணி அடிச்சேன் ஏன் திறக்கலைன்னு கத்தப் போறா’..என்னாலே அவகிட்டே திட்டு வாங்க முடியாது..நீங்க தான் காரணம்னு சொல்லப் போறேன்.” என்று பேசியபடி வாசல் கதவைத் திறந்தாள் கல்பனா.

அடுத்த நொடி,”ஹாய்..ஸர்ப்ரைஸ்என்று கத்தியபடி, பாய்ந்து வந்து கல்பனாவை அணைத்திருந்தாள் உன்னத்தி.

அவளை இறுக தன்னோடு அணைத்துக் கொண்ட கல்பனா, வாசலில் நின்றிருந்த இளைஞனைப் பார்த்து,”ப்ளீஸ் கம்.” என்று அழைப்பு விடுக்க, அவனும் அந்த அழைப்பை புன்சிரிப்புடன் ஏற்க,

கல்பனாவை விடுதலை செய்து, அந்த இளைஞனோடு கை கோத்து கொண்டு,”வா..” என்று அவனை வீட்டினுள்ளே அழைத்துச் சென்றாள் உன்னத்தி

வாசல் கதவைச் சாத்தி விட்டு வந்த கல்பனாவிடம்,”மீட் ஷரத்..மை ஃப்யூச்சர்.” என்று அறிமுகப்படுத்தி வைத்தாள் உன்னத்தி.

நான் கல்பனா.” என்று தன்னை சுய அறிமுகம் செய்து கொண்ட போது, பால்கனியிலிருந்து வந்தான் விஜய்.

உடனே,”டேட், ஏன் உடனே கதவைத் திறக்கலை?” என்று விஜய்யிடம் கேட்டாள் உன்னத்தி.

தீபாவளி இராத்திரி டா..தொடர்கதையா வெடிச்சிட்டு இருக்காங்க..கலர்கலர் லைட்லே அலங்காரம் செய்திருக்காங்க..அதையெல்லாம் வேடிக்கை பார்த்திட்டு இருந்தேன்.” என்றான்.

எல்லோரும் அதே ஜாலர் விளக்கை தான் மாட்டி வைக்கறாங்க..ஒரே போல தான் வெடி வெடிச்சு  கொண்டாடறாங்க..ஆனா நீங்க தான் புதுசு மாதிரி ஒவ்வொரு தீபாவளியையும் இப்படி வேடிக்கை பார்த்திட்டு இருக்கீங்க.” என்று அலுத்துக் கொண்டாள் உன்னத்தி

பல வருடங்களுக்கு முன் ஒரு தீபாவளித் திருநாளை முற்றிலும் வேறு விதமாக கொண்டாடியது அவள் நினைவில் இல்லை. அன்று உலகம் முழுவதும் சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்க, சந்தோஷத்தை நிரந்தரமாக தொலைத்து விட்டோமென்று வாழ்க்கை வெறுத்துப் போயிருந்த விஜய் வேறு முடிவு எடுத்திருந்தான். அந்த நேரத்தில் தான் நம்பிக்கை ஒளியாக, சந்தோஷக் கீற்றாக அவர்கள் வாழ்க்கையில் கல்பனா நுழைந்தாளென்று நான்கு வயது உன்னத்தியின் மனத்தில் பதிந்திருக்கவில்லை

விஜய்யின் பதிலிற்குக் காத்திருக்காமல்,“நீங்க எப்போ வந்தீங்க?” என்று கல்பனாவைக் கேட்டாள் உன்னத்தி.

ஆறு மணி இருக்கும்.” என்றாள் கல்பனா.

அவர் வரப் போவததை ஏன் இருவரும் அவளிடம் தெரிவிக்கவில்லை என்று உன்னத்தி கேட்கவில்லை. இன்று ஷரத்தை வீட்டிற்கு அழைத்து வரப் போவதைப் பற்றி அப்பாவிடம் சொல்லியிருந்தது கல்பனா ஆன் ட்டிக்கும் போயிருக்கிறது என்று புரிந்து போனதால், விஜய்யின் புறம் திரும்பி,”இன்னைக்கு இராத்திரி ஷரத் வீட்டு தீபாவளி பார்ட்டிக்கு நான் போகணும்..நாளைக்கு நாங்க இரண்டு பேரும் ஃப்ரீதான் ப்பா..என்கிட்டே சொல்லியிருந்தா நாம மூணு பேருமா நாளைக்குக் ரிஸார்ட்டுக்கு போயிருக்கலாமே..தீபாவளி நைட் அங்கே பிஸியா இருக்குமே..எப்படிச் சமாளிக்கறாங்களோ.” என்று உன்னத்தி சொன்னவுடன்,

நான் வரப் போகறது உங்கப்பாக்கும் தெரியாது..அவர் விஷயத்தை சொன்னதும் ஷரத்தை வீட்லேயே மீட் செய்யலாம்னு முடிவு செய்து புறப்பட்டு வந்திட்டேன்..இன்னொரு நாள் நீங்க மூணு பேரும் ரிஸார்ட்டுக்கு வாங்க.” என்றாள் கல்பனா.

அங்கே யார் பார்த்துக்கறாங்க? தீபாவளிக்கு எத்தனை புக்கிங்?” என்று விசாரித்தாள் உன்னத்தி.

அசோக் தான் பார்த்துக்கறான்..அஞ்சு பேர்.” என்று கல்பனா பதில் கொடுக்க,

உங்களோட வைட்ஃபீல்ட் ரிஸார்ட்லே தான் என் தங்கையோட எங்கேஜ்மெண்ட் நடந்தது.” என்றான் ஷரத்.

அப்படியா..உன்னத்தி எனக்குச் சொல்லவேயில்லை.” என்று கல்பனா ஆச்சரியப்பட

எட்டு வருஷம் முன்னாடி நடந்ததை நான் எப்படி உங்களுக்கு சொல்லியிருக்க முடியும்? அப்போ இவனைத் தெரியவே தெரியாதே.” என்று உன்னத்தி சொன்னவுடன்,

ஏன் சொல்லியிருக்க முடியாது? உனக்கு எப்போ தெரிய வந்திச்சோ அப்போ சொல்லியிருக்கலாமே.” என்று கல்பனா சொல்ல,

நீங்க சொல்றது சரி..இவளுக்கு எப்போ சொன்னேனோ அப்போவே அவ உங்களுக்குச் சொல்லியிருக்கணும்..தப்பு அவ பெயர்லே தான்.” என்று ஷரத் சொல்ல,

ஷரத், நான் சொல்ல மறந்தது ஒண்ணும் பெரிய தப்பில்லை.” என்று உன்னத்தி விளக்கம் கொடுக்க,

தப்பு தப்பு தான் பேபி..அதிலே சின்னது, பெரிசுன்னு எந்த வகையும் கிடையாது..யு மேட் மிஸ்டேக்..ஒத்துக்கோ.” என்று ஷரத் சொன்னவுடன், விஜய், கல்பனா இருவரின் பார்வையும் ஒரு நொடிக்கு சந்தித்து மீண்டது

அவளது தவறை ஒத்துக் கொள்ளாமல் அவள் செய்தது சரி தான்னென்று பிடிவாதமாக உன்னத்தி இருக்க, அந்தத் தர்க்கத்தை முடித்து வைக்க நினைத்த கல்பனா,“என்ன வேணும் ஷரத்? ஹாட் ஆர் கோல்ட்.” என்று உரையாடலின் திசையைத் திருப்பினாள்

பல வருடங்களாக மாதத்தில் இரண்டு வாரக் கடைசிகளை அந்த வீட்டில் செலவிடுவதால் எங்கே எந்த பொருள் இருக்கிறது என்று கல்பனாவிற்கு அத்துப்படி. எப்போதும் உடுத்தும் சல்வாரை ஒதுக்கி விட்டு இன்று இளம் பச்சை நிறச் சந்தேரி சில்க்காட்டன் புடவையில் இருந்தாள் கல்பனா. விஜய்யை விட வயதில் சிறியவளாக இருந்தாலும் விஜய்யை காட்டிலும் அதிகமாக நரைத்துப் போயிருந்த தலைமுடியை ஒரு பொனிடெய்லில் அடக்கி இருந்தாள். தலைமுடி நரைத்திருந்தாலும் முகத்தில் சுருக்கங்கள் இல்லை. முன் நெற்றியில் பெரிய சிகப்பு பொட்டு, தெளிவான கண்களில் மெலிதான காஜல், மென்மையான இதழில் லிப் க்ளாஸ், காதுகளில் முத்து ஜிமிக்கி, கழுத்தில் வெளீர் பிங்க் முத்துக்களாலான மணி மாலை, இடதுக் கையில் ஸ்மார்ட் கைக்கடிகாரம், வலது கையில் இரண்டு தங்க வளையல்கள் என்று பழமை, புதுமையின் கலவையாக ஒளிர்ந்தாள்.

அடுத்து வந்த நிமிடங்கள் விருந்துபச்சாரத்தில் கழிய, உணவு, உரையாடல் என்று உன்னத்தியின் வாய் ஓயாமல் வேலை செய்ய, கல்பனாவின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க ஷரத்தின் வாய் அவ்வப்போது திறந்து மூட, சாப்பிட மட்டும் வாயைத் திறந்து அவனுடைய மகளின் டென்ஷனை உயர்த்திக் கொண்டிருந்தான் விஜய்.

அப்பாவின் அமைதி மகளைப் பாதிக்க, ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல்,”டேட், உங்களைப் பார்க்க ஷரத்தை அழைச்சிட்டு வந்திருக்கேன்..அவனோட ஒரு வார்த்தை பேசலை..நீங்க இங்கே எங்க கூட இல்லாம வேற எங்கே இருக்கீங்க?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தாள் உன்னத்தி.

அவனது அமைதியைப் பார்த்து விஜய் எங்கே இருக்கிறானென்று கல்பனாவிற்கு புரிந்து போனது. அடுத்து வரப் போவதை அறிந்திருந்ததால் தான், அந்தக் கவலையில் தான், ஷரத் வருகையைக் கேள்விபட்டவுடன் அவள் செய்து கொண்டிருந்த முக்கிய வேலைகளை அப்படியே போட்டு விட்டுப் புறப்பட்டு வந்திருந்தாள்.

கண்ணிலிருந்த கண்ணாடியை கழட்டி அதைக் கைக்குட்டையால் துடைத்தபடி மகளின் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது என்று விஜய் யோசித்துக் கொண்டிருக்க,” எதுக்கு இவ்வளவு யோசனை செய்யறீங்க? என்ன ப்பா தெரியணும் உங்களுக்கு? ஷரத்தும் என்னைப் போல தான் படிச்சிருக்கான்..நானாவது இதே பெங்களூர்லே தான் ஆரம்பத்திலிருந்து வேலை பார்த்திட்டு இருக்கேன்அவனுக்கு வெளிநாட்லே வேலை பார்த்த அனுபவம் இருக்கு..பன்னேர்கட்டாலே சொந்த ஃபிளாட் வைச்சிருக்கான்..அங்கிளும் ஆன்ட்டியும் ராஜாஜி நகர்லே சொந்த வீட்லே இருக்காங்க..கொஞ்சம் போல குடிப்பான், ஸ்மோக் செய்வான்..என்னை நிறைய லவ் செய்யறான்..அதனாலே நான் வேணாம்னு சொன்னா அந்தப் பழக்கத்தை எல்லாம் விட்டிடுவான்ஆனா அவனா அதையெல்லாம் விடணும்னு நான் எதிர்பார்க்கறேன்.” என்று சீரியஸாக ஆரம்பித்து சிரிப்புடன் பேசி முடித்து, அவளருகே அமர்ந்திருந்த ஷரத்தின் தோளில் சாய்ந்து கொண்டாள் உன்னத்தி.

அதுவரை விஜய்யிடம் ஒரு வார்த்தை பேசியிராத ஷரத்,”நீங்க எதைப் பற்றி யோசிக்கறீங்க, ஏன் அமைதியா இருக்கீங்கண்ணு எனக்குப் புரியுது அங்கிள்..உங்களுக்கும் கல்பனா ஆன்ட்டிக்கு இருக்கற உறவு நட்பு தான்னு உன்னத்தி சொல்லியிருக்கா.. பிலீவ் ஹர்..அப்படி இல்லைன்னாலும் நாட் டூ வரி.. டூ லவ் உன்னத்தி டீப்லி..அண்ட் அவ சொன்ன மாதிரி அவளுக்கு பிடிக்காததை கைவிட முயற்சி எடுத்திட்டு தான் இருக்கேன்.” என்றான்.

அவர்களின் உறவைப் பற்றி ஷரத் அவனது அபிப்பிராயத்தை தெரியப்படுத்தியதில் கல்பனாவின் மனம் லேசானது, முகத்தில் நிம்மதி குடியேறியது. விஜய்யின் முகம் எதையும் வெளிக்காட்டாமல் அதே இறுக்கத்துடன் இருக்க,

என்ன ப்பா? வாட்ஸ் ராங்க் வித் யு?” என்று கேட்டாள் உன்னத்தி.

ஷரத்தை எந்த அளவுக்கு லவ் பண்ற குட்டி?” என்று விஜய் கேட்க, சில நொடிகள் கழித்து,”எந்த அளவுக்கு, எவ்வளவு ஆழத்துக்குன்னு சொல்லத் தெரியலை ப்பா.” என்று சொன்னவள், ஷரத்தின் கரத்தை அவளது கரத்தில் பிணைத்து, இதழருகே அதனை எடுத்துச் சென்று, அதன் மீது முத்தம் ஒன்றை வைத்து, அவளைப் பெற்ற தகப்பனிடம்,”இவன் இல்லைன்னா செத்திடுவேன் ப்பா.” என்றாள்.

அவளைப் போலவே பிணைந்த கரங்களை அவனது இதழருகே எடுத்துச் சென்று அழுத்தமான முத்தம் ஒன்றை அதில் வைத்த ஷரத்,”இவ தான் என்னோட உயிர் அங்கிள்.” என்றான்.

அடுத்து வரப் போவதை உணர்ந்த கல்பனா, விஜய் அருகே சோஃபாவில் அமர்ந்து அவனது கரத்தைப் பற்றிக் கொள்ள, அந்த செய்கையை இளையவர்கள் இருவரும் புதிராகப் பார்க்க, தொண்டையைச் செருமிக் கொண்டு, தெளிவான, திடமானக் குரலில்,”ஷரத் இல்லைன்னா செத்திடுவேன்னு நீ நினைக்கறதும், நீ தான் அவனோட உயிர்ன்னு ஷரத் நினைக்கறதுக்கும் பெயர் காதல் இல்லை கண்ணம்மா..இங்கே யாரும் நிரந்தமில்லை குட்டிம்மா..அதனாலே எந்த உறவும் நம்ம லைஃபை நிர்ணயிக்க முடியாது..கூடாது.” என்று மகளின் நுண்ணிய உணர்வுகளையும் அவளின் உன்னதமான காதலையும் உடைத்து போட்டான் விஜய்.

அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்த இளையவர்களின் மனநிலையை உணர்ந்த கல்பனா, விஜய்யின் கையில் அழுதத்ததைக் கூட்டி,

விஜய்..போதும்..இன்னைக்கு வேணாம்..அவங்க இரண்டு பேருக்கும் இன்னும் கொஞ்ச நாள்..” என்று அந்த உரையாடலை முடிக்க நினைத்த போது, நிகழ்விற்குத் திரும்பிய உன்னத்தி,

ஆன்ட்டி..அப்பா என்ன சொல்லணுமோ சொல்லி முடிக்கட்டும்..அவங்களைத் தடை செய்யாதீங்க.” என்றாள்

அவளைத் தொடர்ந்து,”யெஸ் உன்னத்தி சொல்றது சரி..அங்கிளும்  உன்னத்தி அம்மாவும் லவ் மெரேஜ்..அப்புறம் ஏன் காதலைப் பற்றி அவருக்கு இந்த மாதிரி ஒரு கருத்துன்னு எனக்குக் காரணம் தெரியணும்.” என்றான் ஷரத்.

உங்களை போலவே ஒருத்தர் மட்டும் தான் நம்ம வாழ்க்கைன்னு நினைக்கறது, அவங்க இல்லைன்னா வாழ்க்கையே இல்லைன்னு நினைக்கறது தான் காதல்னு நானும் நினைச்சிட்டு இருந்தேன்..என்னோட மனைவி என்னை விட்டு நிரந்தரமாப் போன பிறகு அதிலிருந்து என்னாலே வெளியே வரவே முடியலை..அவளை என்னோட உயிரா நினைச்சதாலே தான் அவ போனப் பிறகு என்னோட உயிர் பெரிசாத் தெரியலை..என் மகளோடதும் பெரிசாத் தெரியலை..

பல வருஷங்களுக்கு முன்னாடி இதே போல ஒரு தீபாவளி அன்னைக்கு கல்பனாவோட ரிஸார்ட்டுக்கு நானும் உன்னத்தியும் போனோம்..என்னைப் போல ஆளுங்களுக்காக ஒரு பேக்கேஜ் இருந்திச்சு..இப்போவும் இருக்குபண்டிகை சமயத்திலே குடும்பத்திலிருந்து பிரிஞ்சு இருக்கறவங்க, குடும்பத்தாலே தனிமைப்படுத்த பட்டவங்க, உறவுன்னு சொல்லிக்க யாருமில்லாதவங்களோட தனிமையை போக்க  தனிச் சிறப்பான ஓர் ஏற்பாடு..இருபது வருஷத்துக்கு முன்னாடி என் மனைவி போன பிறகு உறவுகள் உடன் இருந்தும், உன்னத்தி என்னோடவே இருந்தும் நான் தனியா உணர்ந்தேன்..கல்பனாவோட ரிஸார்டிலிருந்து உயிரோட திரும்பி வர்ற ஐடியாவோட நான் போகலை..அதுதான் எங்களோட கடைசி தீபாவளின்னு முடிவு எடுத்திருந்தேன்..

அங்கே தங்கியிருந்த இரண்டு நாளும் உன்னத்தி ரொம்ப சந்தோஷமா இருந்தா..கல்பனாவோட ஒட்டிக்கிட்டா..யாரோடேயும் பேசாம, எந்த நிகழ்வுலேயும் கலந்துக்காம என்னோட முடிவை செயல்படுத்தற நொடிக்காக அமைதியா காத்திட்டு இருந்தேன் நான்..அதே பாதைலே ஏற்கனவே பயணம் செய்த அனுபவம் கல்பனாவுக்கு இருந்ததாலே என்னோட அமைதிக்கு பின்னாடி இருந்த அபாயகரமான எண்ணங்களைச் சரியா யுகிச்சிட்டா..அதை என் முகத்துக்கு நேரே சொல்லி என்னோட முடிவுக்கான காரணத்தைக் கேட்டா..என் கதையைக் கேட்டிட்டு இவ்வளவு தானான்னு முகம் சுளிச்சா..

அவளோட காதல் கல்யாணம் விவாகரத்திலே முடிஞ்சு அவ காதல் செத்துப் போனதைத் தாங்க முடியாம அவளோட வாழ்க்கையை முடிச்சுக்க அவ நினைச்சது..காதல் செத்துப் போனா நானும் செத்துப் போகணுமா? என்னாலே இனி வாழ முடியாதா? இந்த ஓர் உணர்வு மட்டும் தான் என் உயிரைப் பிடிச்சு வைச்சிட்டு இருந்திச்சான்னு? அவளுக்கு நிறைய மனப் போராட்டம்..அதோட முடிவுலே

பற்றுக்கோடா பிடிச்சுக்க ஒரு குழந்தை இல்லாம, தனக்கான வாழ்க்கையைத் தனியா வாழ்ந்து பார்க்க முடிவு எடுத்தா..மணமுறிவுலே அவ பங்கா கிடைச்ச ரிஸார்ட்லே அவளை அமிழ்த்திட்டு, கொஞ்சம் கொஞ்சமா அவளை மீட்டு எடுத்திருக்கா..’உன்னத்திக்கும் சேர்த்து நீங்க எப்படி முடிவு எடுக்க முடியும்னுஅவ கேட்ட போது நான்  நிலைகுலைஞ்சு போயிட்டேன்நல்லவேளை அன்னைக்கு கல்பனா கடவுளா வந்து என்னை என்னோட முட்டாள்தனத்திலிருந்து காப்பாத்திட்டா..வாழ்க்கை மேல பிடிப்பை ஏற்படுத்திக் கொடுத்தாஇப்போவும் எனக்கு ஒரு நல்ல நட்பா இருக்கா..

அவளோட காதல் கல்யாணம் தோல்விலே முடிஞ்சதுலே கல்பனா அவ வாழ்க்கைலே தோற்றுப் போகலை..மகிழ்ச்சியா வாழ்ந்திட்டு இருக்கா..பல பேருக்கு அந்த வழியைச் சொல்லிக் கொடுத்திட்டு இருக்கா..என்னோட காதல் வாழ்க்கை பாதிலே முடிஞ்சு போனதிலே என் காதல் முடிஞ்சு போகலை..என் மனைவி என் பக்கத்திலே இல்லைன்னாலும் அவளைப் பற்றி எல்லாத்தையும் உன்னத்தியோடு பகிர்ந்து கிட்டு எங்க காதலை இன்னைவரை உயிரோட வைச்சிட்டு இருக்கேன்..நானும் சந்தோஷமா தான் வாழ்ந்திட்டு இருக்கேன்..அதனாலே வாழ்தல் தான் காதல்னு எனக்குத் தோணுது.” என்று விஜய் பேசி முடித்தவுடன், பாய்ந்து வந்து அவனையும் கல்பனாவையும் அணைத்துக் கொண்டாள் உன்னத்தி.

கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி,”கடைசிவரை ஷரத்தோட சந்தோஷமா வாழணும்னு நெஞ்சு கொள்ளா ஆசை இருக்கு ப்பா..அப்படி நடக்காம போயிட்டா..” என்ற உன்னத்தியின் வாக்கியத்தை,”உங்க இரண்டு பேரைப் போலவே அதைக் கடந்து போய் சந்தோஷமா வாழ அவ கத்துப்பா..நானும் கத்துப்பேன்.” என்று முடித்தான் ஷரத்.

காதல் போயின்

வாழ்தல்

Advertisement