Advertisement

காதல் பூக்கும் தருணம் – 20

 

வேந்தனின் கைகளில் கார் சீரான வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. மேகாவிற்கு அவளது சிகிச்சைக்காக அழைத்து வந்திருப்பது தெரியும் என்று அபிராமி அவனிடம் சொல்லி அனுப்பியிருந்ததால், அதுகுறித்து எதுவும் பேச்சு எழுமோ என்று எதிர்பார்த்தான்! ஆனால், மேகா எதுவும் பேசவில்லை!

 

அவள் எதுவும் கேட்டால், உரிய விதத்தில் விளக்கம் தர வேண்டும் என்று காத்திருந்தவனுக்குக் குழப்பம் தான் மிஞ்சியது. ‘அப்படியென்றால் மேகா சிகிச்சையை ஏற்றுக்கொண்டாளா? தவறாக நினைக்கவில்லையா? அல்லது நம்மிடம் கேட்கப் பிடிக்காமல் இருக்கிறாளா?’ என்று வெகுவாக குழம்பினான்.

 

இது ஒருபுறமென்றால், மேகாவின் மனச்சஞ்சலங்கள் குறித்து அபிராமி சொன்னது வேறு அவனுக்கு உறுத்திக் கொண்டே இருந்தது. அதுதொடர்பாக நிறையப் பேச வேண்டும் என்று அவனுக்குத் தோன்றினாலும், எப்படித் தொடங்குவது என்று புரியவில்லை!

 

தன் முகத்தைப் பார்ப்பதும், சாலையைப் பார்ப்பதுமாக இருக்கும் வேந்தனின் செய்கையில், “ஏதாவது கேட்கணுமா?” என்று வாயைத் திறந்தாள் மேகா.

 

ம்ம் ம்ஹூம் என மாற்றி மாற்றித் தலையசைத்தபடி, “நிறைய பேசணும்…. உன்கிட்ட…” என்றான் மெல்லிய புன்னகையுடன்.

 

ஒப்புதலாகத் தலையசைத்தபடி, “நான் தடுக்க மாட்டேன்” என்றாள் அவள் கேலிக்குரலில்!

 

அவளது இலகுத்தன்மையில் வியந்தபடியே, “அது… நம்ம வீட்டுக்கு போவோமா?” என்றான் தயக்கத்துடன். தவறாக நினைக்க மாட்டாள், இருந்தும் ஒரு தயக்கம் அவனுக்குள்! கண்டிப்பாக வெளியில் அங்கே, இங்கே என்று நின்று அத்தனை பேச முடியும் என்று தோன்றவில்லை. அதனால் தான் கேட்டான்.

 

அவளுக்கு இதில் எந்த தயக்கமும் இல்லை போலும்! ‘இதில் எதற்குத் தயக்கம்?’ என்று அவனை விசித்திரமாகப் பார்த்தபடி தலையை ஒப்புதலாக அசைத்தாள்.

 

“ஹ்ம்ம்…” என்றவனின் கைகளில் கார் வேகமெடுத்தது. வழியில் ஒரு நல்ல உணவகத்தில் நிறுத்தி உணவு வாங்கித் தந்தான். காதலர் தினம் என்பதாலோ என்னவோ பல டேபிள்களிலும் காதல் ஜோடிகளே ஆக்கிரமித்திருந்தனர். ஓரக்கண்ணால் நோட்டம் விடத் தோன்றிய எண்ணத்தைச் சிரமப்பட்டு அடக்கினாள். அதைப் புரிந்து கொண்டாற்போல வேந்தன் கலகலத்துச் சிரித்தான்.

 

அவள் கேள்வியாக நோக்கவும், “அப்படி யாரும் தெரிஞ்சவங்க வந்துட மாட்டாங்க” என்று சொல்லி மீண்டும் நகைக்க, “ஸ்ஸ்ஸ்… ஏன் இப்படி சிரிக்கறீங்க. உங்களோட…” என்று தன் கையில் இருந்த மேஜைக்கரண்டியில் அவன் புறங்கையை அடித்தாள்.

 

கையை வெடுக்கென்று பின்னே இழுத்துக் கொண்டவன், “நல்லா பழகி வெச்சுக்க. பின்னாடி யூஸ் ஆகும்” என்றான் கண்களில் சிரிப்புடன்!

 

என்ன சொல்கிறான் என்று சில நொடிகள் புரியாமல் யோசித்தவளுக்கு அடித்ததைச் சொல்கிறான் என்று புரிந்து விட்டது. திருமணத்திற்குப் பிறகு உபயோகமாகும் என்கிறானே! அதை நினைக்கும் போதே அவளுக்குச் சிரிப்பு வேறு வந்தது. ‘ஆஹா அப்படியே பயந்து நடுங்குகிற ரகம் தான்!’ என்று எண்ணியவளின் புன்னகை நன்றாகவே விரிந்தது.

 

அவள் புன்னகையில் விழியுயர்த்தி, “என்னன்னு சொன்னா நானும் சிரிப்பேன். எங்களுக்கும் பல்லு இருக்கு. எங்க சிரிப்பும் அழகா தான் இருக்கும்” என்று சிரிக்காமல் கேலி பேசினான்.

 

சிரிப்பைக் கண்டுகொண்டானே! நிச்சயம் சிரிப்பின் அர்த்தமும் புரிந்திருக்கும் என்ற எண்ணத்தில் அவளது முகம் சிவந்து விட்டது.

 

அதற்கும் கேலி செய்து சீண்டுவானோ என்று மேகா தவிக்க, அவனோ ஓரக்கண்ணால் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டான். அவனாகவே அந்த பேச்சை விடுத்து, வேறு பேச்சுகளை பேசத் தொடங்கவும், தன் சங்கடம் புரிந்து கொள்கிறான் என்று பெண்ணவளின் மனம் பூரித்துப் போனது.

 

அதன்பிறகு, இருவரும் உண்டு முடித்ததும் மீண்டும் ஒரு சிறிய பயணம் மகிழ்வேந்தனின் வீட்டை நோக்கி.

 

தயங்கிய குரலிலேயே, “வீட்டுல இந்நேரத்துக்கு யாரும் இருக்க மாட்டாங்க குட்டிம்மா. பரவாயில்லை தானே?” என்றான் மீண்டுமொருமுறை.

 

“வீட்டு வேலை செய்யற அம்மா மூணு மணிக்கு வந்துடுவாங்க. அதோட அவங்க இல்லாட்டியும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஏன் திரும்பத் திரும்ப இதையே கேட்கறீங்க” என்றாள் சலிப்பான குரலில்!

 

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வேந்தன் விழித்தான்! ‘சரியான டியூப் லைட்டுடி நீ!’ என மனதிற்குள் அவன் கேலி செய்வது தெரியாமல், பதில் சொல்ல முடியாமல் அசடு வழிகிறான் போல என்று நினைத்து, “ஓட்டுங்க” என்றாள் அவள் மெல்லிய அதட்டல் குரலில்!

 

நேரம் இரண்டை நெருங்கும் நேரத்தில் வீட்டிற்கு வந்திருந்தனர். வேந்தன் கதவைத் திறந்து, மேகாவை உள்ளே அழைத்துச் செல்ல அமைதியாகச் சென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

 

பின்னோடே சென்று அவளருகே அமர்ந்தவன், எப்படிப் பேச்சைத் தொடங்க என்ற தடுமாற்றத்தில் மீண்டும் மௌனமாக இருந்தான்.

 

சிறிது நேரம் பொறுத்தவள், “நிறைய பேசணும்ன்னு சொன்னீங்க?” என்று அவளே தொடங்கி வைத்தாள்.

 

லேசான தலையசைப்புடன் ஆழ மூச்சிழுத்து வெளியே விட்டவன், “என் மேல எதுவும் கோபமா மேகா? சம்பத் வீட்டுக்கு ஏன் கூட்டிட்டு போனேன்னு உனக்கு தெரிஞ்சிருக்குமே…” என்று தயக்கமாகக் கேட்டு நிறுத்தினான். மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றதைத் தவறாக எதுவும் எடுத்திருப்பாளோ என்னும் தயக்கம் அவனுக்குள் நிறைய இருந்தது.

 

அவள் இல்லை என மறுப்பாகத் தலையசைக்கவும், ஆச்சரியம் வர, “உண்மையா தானே?” என்றான் மீண்டும்.

 

“அந்த சிகிச்சை எனக்குத் தேவை தான்! அப்போ தான என்னாலயும் என் பிரச்சனையை புரிஞ்சுக்க முடியும். எனக்குள்ளேயே ஒடுங்கி இருக்காம, பழையபடி இருக்க முடியும்” என்றாள் பிசிரற்ற குரலில். அவளது புரிதலான பதிலில் அவனுக்கு ஆசுவாசமாக இருந்தது.

 

“சரி குட்டிம்மா… அப்ப மூணு வருஷம் முன்ன நடந்த விஷயத்துக்கு?” என்று அவனது வெகு நாளைய சந்தேகத்தை ஒருவழியாக அன்று கேட்டான். அதற்கும் மறுப்பாகத் தலையசைத்தாள். ‘அதற்கும் கோபமில்லையா?’ என்று அவனுக்கு ஆச்சரியமாகிப் போனது.

 

 ‘பின்பு ஏன் விலகிப் போனாள்?’ என்று யோசித்தவனுக்குச் சட்டென்று, அபிராமி மூலம் தெரிந்து கொண்ட மேகாவின் சஞ்சலங்கள் நினைவில் வர, “தாலியைக் கழட்டி கொடுன்னு கேட்டிருக்க கூடாதல்ல” என்று கேட்க, அதற்கும் இல்லை என்று தலையசைத்தவள், “என்னால கழட்ட முடியலை. அதான் எனக்குக் கோபம்” என்றாள் தரையைப் பார்த்தபடி மென்குரலில்.

 

நிமிர முரண்டு பிடிக்கும் அவள் முகத்தை வலுக்கட்டாயமாக நிமிர்த்தி, “கழட்டி கொடுன்னு கேட்டா, எனக்கு உன்மேல விருப்பம் இல்லைன்னு எப்படி அர்த்தமாகும்? அது அவங்க நிர்பந்தத்துல, காட்டாயத்துல கட்டினது. அதோட அப்ப நீ சின்ன பொண்ணு வேற! நான் வேற என்ன யோசிக்க முடியும்?

 

அதிலேயும் ‘கழட்டி வீசிப்பேன்’ சொன்னது நீ! அதுனால தான் நான் கழட்டி கொடுன்னு கேட்டேன்” என்றான் தன்னிலை விளக்கமாக!

 

மேகா அபிராமியிடம், “அவருக்கு என்னைப் பிடிக்குமோ, பிடிக்காதோ! எங்க அப்பா, தன்னோட உடல்நிலையைக் காரணம் காட்டி, என்னைக் கல்யாணம் பண்ண சொல்லறாரு போல! அதோட அன்னைக்கு தாலி கட்டின அப்பவே, ‘அடுத்து என்ன பண்ணலாம்? இதை எப்படி சரி கட்டலாம்? வீட்டுல பேசுவோம்’ இந்த மாதிரி எல்லாம் அவர் யோசிக்கவே இல்லை. தாலியைக் கழட்டி கொடுன்னு தான் திரும்பத் திரும்ப கேட்டாரு. அவருக்கு எப்படி என்னை பிடிச்சிருக்கும்? ஆனா, என்னால அப்ப தாலியைக் கழட்டவே முடியலை” என்பது போலச் சொல்லியிருந்தாளாம்.

 

அப்பொழுது உரிய விதத்தில் அபிராமி அவளது சஞ்சலத்தைப் போக்கி இருந்தாலும், வேந்தனின் காதல் அவளுக்கு புரிவது மட்டுமே இதற்கு மருந்து என்று அவனிடம் தெளிவாகச் சொல்லி அனுப்பியிருந்தாள்.

 

அபிராமி சொன்னதைக் கேட்டபொழுது, ‘இவளுக்கு ஏன் இப்படி யோசிக்கத் தோன்றியது? பைத்தியமா இவள்?’ என்ற எண்ணம் தான் வேந்தனுக்கு!

 

வேந்தனின் கேள்வியில் சிறிது நேரம் மௌனம் காத்து விட்டு, “அவனுங்க கட்டியிருந்தா அதை செய்யணும்ன்னு தான் யோசிச்சேன்” என்றாள் மேகா.

 

“அப்ப நான் கட்டும்போதும் அப்படியே செய்ய வேண்டியது தானே! அதுல என்ன சஞ்சலம் உனக்கு?” அவளே மனதில் இருப்பதைச் சொல்லட்டும் என்று துருவித் துருவி கேள்வி கேட்கலானான்.

 

காரணத்தைச் சொன்னபிறகும் இப்படியே கேட்டால் என்ன செய்வது என்ற ஆத்திரத்தோடு, “ஏன் அவங்க கட்டட்டும்ன்னு நீங்க விட வேண்டியது தானே?” என்று காட்டமாகக் கேட்டாள்.

 

“ஸ்ஸ்ஸ் குட்டிம்மா அதெப்படி முடியும்?” என்று முறைத்தான் அவன்.

 

“அப்படித்தான் இதுவும் என்னாலயும் கழட்ட முடியலை…” முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு அவள் சொல்ல, அவனுக்குப் புன்னகை வரப்பார்த்தது.

 

“சரி கழட்ட முடியலை… அப்பறம் வேற என்ன தான் செஞ்ச?” என்று வேந்தன் கேட்க, தான் செய்தவற்றை விளக்கினாள். அவளது வீரதீர கள்ளத்தனத்தில், ‘அடப்பாவி!’ என்று வாயைப் பிளந்தான் அவன்.

 

அவளது கழுத்துச் சங்கிலியை மெல்ல வருடியபடி, “என்கிட்ட பேச என்னடி? உனக்குக் கழட்ட முடியலை தடுமாற்றமா இருக்குன்னு என்கிட்ட சொல்லியிருக்கலாம் தான? நான் உன்னைத் தப்பா நினைப்பேனா? அதை விட்டுட்டு ஏன் என்னை அவாய்ட் செஞ்ச?” என்று வேந்தன் கேட்க, இப்பொழுது அவன் நெருக்கத்தில் கூச்சத்தை உணர்ந்தாள். அவனறியா வண்ணம் மெல்ல விலகி அமர, அதைக் கவனித்தவன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

 

புன்னகையை மறைத்து, “சொல்லு… என்னை ஏன் அப்படி சுத்தல்ல விட்ட?” என்றான் மீண்டும்.

 

“எனக்குமே சந்தேகமா, ஒரு மாதிரி சங்கடமா தான் இருந்தது. நாம செய்யறது எல்லாம் சரியா? இல்லை இந்த பதின்பருவ தடுமாற்றம் மாதிரி எதுவுமான்னு… எல்லாத்துக்கும் மேல உனக்கு இப்படி எல்லாம் தோணாம போயிருந்தா… அது இன்னும் பயத்தை தந்துடுச்சு” என்றாள் மனதை மறையாமல்!

 

மேகா ஏற்படுத்திய இடைவெளியை மீண்டும் குறைக்கும் விதமாக நெருங்கி அமர்ந்து செல்லமாய் அவளது நெற்றியோடு நெற்றி முட்டியவன், “சுத்த பைத்தியம்டி நீ! சேகர் அங்கிள் மகனோட மேரேஜ் ரிசெப்ஷன்ல உன்னை ரொம்ப வருஷம் அப்பறம் முதன் முதலா பார்த்தப்பவே மொத்தமா கவுந்துட்டேன். யாரு என்னன்னு விசாரிக்கணும்ன்னு யோசிச்சப்ப தான், என் குட்டிம்மா எனக்காக வளர்ந்துட்டான்னு புரிஞ்சது. இருந்தாலும் அது நீ படிக்கிற வயசு! அப்பறம் எப்படி நான் என் மனசை சொல்ல? எங்கே உன்னைப் பார்த்தா சைட் அடிச்சு மாட்டிப்பேனோன்னு பயத்துலயே பிராஜெக்ட் பிராஜெக்ட்ன்னு சொல்லிட்டு சுத்துனேன். நீ காலேஜ் போனதும் கொஞ்ச கொஞ்சமா காதல் பயிரை வளர்க்கலாம்ன்னு நினைச்சவனை மறுபடியும் ஊரை விட்டு பேக் பண்ணி அனுப்பிட்ட…” என்றான் பெருமூச்சோடு!

 

அவன் சொன்ன காதல் கதையில் அவள் விழி விரித்தாள். அவளது மனம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது, கடைசி பகுதியை சொன்னதும், “நானா போ சொன்னேன்” என்றாள் சிணுங்கலாக!

 

“இல்லைதான்! ஆனா என்னைப் பார்த்தாலும் நீ பேச மாட்ட. கண்ணுலேயே பட மாட்ட. நீ விலகி விலகி போகும்போது எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா? அதான் எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை” என்றான் வலி தந்தவளிடம் நிவாரணம் தேடி!

 

அவனது காதல் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை அவனிடமே கேட்கவும் செய்தாள். “உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா? என்னால இன்னும் நம்ப முடியலை” என விழிகளை விரித்தவளிடம்,

 

“நான் வேணா நம்ப வைக்கவா?” என்றான் வசீகரமான புன்னகையுடன். அவன் விழிகளும், பார்வையும் புதிதாகச் சரச மொழி பேசியது. அதைக் கண்டுகொண்டவளின் உடலில் சிலிர்ப்பு ஓடி மறைய, கீழ் உதடுகளை பற்களால் சிறைப்படுத்திக் கொண்டாள்.

 

“தடிமாடு” என்று அவன் தோளில் அடிக்க முயன்றபோதும் குரலே எழும்பவில்லை.

 

“ஒருவழியா தடிமாடுன்னு சொல்லிட்ட, இதுக்கு மூணு வருஷம் ஆயிடுச்சு!” என்றான் ஏக்கத்துடன். அவனது ஏக்கக் குரலில் அவளுக்கு என்னவோ போல் இருந்தது. அத்தை உயிரோடு இருந்திருந்தால் இப்படிச் சிறு சிறு விஷயத்திற்கெல்லாம் ஏங்கியிருக்க மாட்டான் என்று தோன்ற அவளது மனம் பாரமானது.

 

உள்ளூர எழுந்த இறக்கத்தை தனக்குள்ளேயே கட்டுப்படுத்திக் கொண்டாள். கொஞ்சம் பரிதாபம், இரக்கம் காட்டுகிறோம் என்று தோன்றினால் கூட அவனுக்கு கட்டுக்கடங்காத கோபம் வந்துவிடும் என்பதை நன்கு அறிந்தவளாயிற்றே!

 

அவளது நெற்றிச் சுருக்கத்தைப் பார்த்து விட்டு, “என்ன யோசனை?” என்று சிந்தனையைக் களைத்தான்.

 

“நீ என்னை காதலிச்சிருக்க… அதுகூட புரியாம இருந்திருக்கேன் பாரு” என்றாள் செல்லமாகச் சலித்தபடி.

 

அதில் சிரித்தபடியே, “அப்ப நீ சின்ன பொண்ணு குட்டிம்மா” என்றான் அவன்.

 

“அதெல்லாம் ஓட்டு போடற வயசு தான்” என்று முறுக்கினாள் அவள்.

 

“ஹாஹா பெரிய… ஓட்டு போடற வயசு? நானா இப்ப சொல்லாட்டி உனக்கு இன்னும் கண்டுபிடிச்சிருக்க முடியாது!” என்று சீண்டினான்.

 

“ஆமா ஆமா… நீங்க கண்டீங்க!”

 

“அப்படி புரிஞ்சிருந்தா ஏன் சந்தேகம் வரப் போகுது? எனக்கு உன்னை பிடிக்கும்ன்னு கூடவா உனக்குப் புரியாது? நிர்ப்பந்தத்துக்கும், காதலுக்கும் உன்னால வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியாதா?” என்று மெலிதான குரலில் கடிந்து கொண்டான்.

 

“ம்ப்ச்… எனக்குப் புரியலையே!” என்றாள் கைகளை விரித்து.

 

“இப்பவாவது மண்டையில எதுவும் ஏறுதா?” என்றான் அவளது தலையைத் தட்டி காட்டியபடி! முறைத்தாலும் மண்டையை உருட்டினாள்.

 

“அதுசரி, கழுத்துல என்கிட்ட இருந்து களவாடி மாட்டியிருக்கியே சங்கிலி அதுல இருக்க MM க்கு கூடவா அர்த்தம் யோசிக்கலை நீ” என்றான் அவளது அறிவை மெச்சிய வண்ணம்.

 

அவள் தலையை அவளே தட்டியபடி, “நம்ம பேரு தானா?” என்றாள் அசடு வழிய!

 

“ஹ்ம்ம் ஆமா… சரி இதென்ன?” என்று வேந்தன் ஒரு பெட்டியை எடுத்து அவள் முன் நீட்ட அவள் விழி விரித்தபடி, “இது… இது…” என்று திக்கினாள்.

 

“காலையில நீ என்னையும் கப்போர்டையும் மாறி மாறி பார்த்தப்பவே தெரிஞ்சிடுச்சு அங்க என்னவோ இருக்குன்னு நீ குளிக்கப் போனதும், இதைத் தேடி எடுத்துட்டு தான் கீழ வந்தேன்” என்றான்.

 

அது மூன்று வருடங்கள் முன்பு அவன் கட்டிய தாலிச்சரடு! “தூக்கிப் போட மனசு வரலை” என்றாள் தணிந்த குரலில்.

 

“இப்படி ஒரு விஷயம் நடந்திருக்காட்டி உன் மனசுல நான் இருந்ததே உனக்கு தெரிஞ்சிருக்காதல்ல! நான் காதல் சொல்லி, அதை ஏத்துக்க வெச்சு, கல்யாணம் பண்ணி… ஆனா இப்ப பாரு நீயொரு பக்கம் என்னை நினைச்சு உருகி தவிச்சு, நான் ஒரு பக்கம் உனக்காக உருகி தவிச்சு… அப்ப கஷ்டப்பட்டாலும் இப்ப நினைக்கவே சுகமா இருக்கல்ல. யாருக்குத் தெரியும் காதல் எப்ப, எப்படி பூக்கும்ன்னு” என்று சிலிர்ப்போடு கூறியவனை ரசனையாகப் பார்த்தாள்.

 

அதன்பிறகு நீண்ட பேச்சுகள் எல்லாம் இருவரும் அந்த மூன்று வருடக் கதையைப் பேசினார்கள். பேச்சினூடே, “குட்டி பாப்பா அழகா இருந்தா என்ன?” என்றான் வேந்தன் குழந்தையின் நினைவில்!

 

மேகாவும், “ஆமாம் என்னால விட்டுட்டு வரவே முடியலை. ரொம்ப ஸ்வீட்… அழகு பாப்பா. ரொம்ப சமத்து” என்று சொன்னாள் பிள்ளையின் நினைவில் முகம் மலர!

 

“நீ பிறந்தப்ப கூட இப்படி தான் இருந்த மேகா. ரோஜாப்பூ குவியல் மாதிரி! உன்னை முதன் முதலா நான் தான் வாங்கினேன். உன்னை யாருக்கும் தரணும்ன்னு தோணவே இல்லை! உங்க அப்பா பாவம் கெஞ்சி, கொஞ்சி… ம்ம் ஹ்ம்ம்… எதுக்கும் அசைஞ்சு கொடுக்கலையே!” அன்றைய நாளின் நினைவுகளில் மூழ்கியபடி அவன் அனுபவித்துக் கூறினான்.

 

ஏற்கனவே வீட்டில் பலரும் பலமுறை சொன்னது தான்! இப்பொழுது இருவருக்குமான பிரத்தியேக விஷயமாகப் பேசும்போது மேகாவின் உடல் சிலிர்த்தது.

 

வேந்தன் மேலும் தொடர்ந்தான். “இப்ப எனக்கு அந்த ரோஜா குவியலை மறுபடியும் பார்க்கணும் போல இருக்கு மேகா” என்றான் கண்களில் ஆசை மின்ன.

 

“ஜீபூம்பா தான் போடணும்” என்றாள் கேலிப் புன்னகையுடன்!

 

“ஹாஹா… ஏன் கல்யாணத்துக்கு சம்மதம்ன்னு உங்க வீட்டுல சொன்னாலும் போதுமே!” என்றான் வாயிற்குள் மறைத்த சிரிப்புடன்!

 

அவளுக்கு விளங்கவில்லை. “அதெப்படி?” என தாடையத் தட்டியவள், “ச்சீ…” என்று முகம் சிவந்தாள்.

 

வேந்தன் உரக்க நகைக்க, அவனது கையை கிள்ளியபடி, “ஸ்ஸ்ஸ்… மெதுவா… வேலைக்காரம்மா வர நேரமாச்சு” என்றவள் மென்குரலில், “ஏப்ரல்ல எக்ஸாம் முடியட்டும். அதுவரை கல்யாணத்துக்குத் தடா தான்” என்றாள் கண்டிப்புடன்.

 

அவளைச் சீண்டி பதில் சொன்னாலும் அவள் விருப்பம் போலத் தான் திருமணம் நடந்தது! அவளது தேர்வுகள் முடிந்ததும், ஒரு சுபயோக சுபதினத்தில், உற்றார், உறவினர்கள் வாழ்த்த, மங்கள மேள தாள வாத்தியங்கள் முழங்க, பெற்றவர்களின் மனம் நிறைய, அக்னி சாட்சியாய் வேந்தன், மேகாவின் திருமணம் நடைபெற்றது.

 

இனி அவர்களின் வாழ்வில் எல்லாம் சிறக்க நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்!

 

*** சுபம் ***

Advertisement