Advertisement

காதல் பூக்கும் தருணம் – 9

பதின்பருவத்தில் காதலர் தினம் வருவதென்பது ஏகப்பட்ட முன்னேற்பாடுகளை கொண்டது. என்ன நிறத்திலான உடை என்பது முதற்கொண்டு, காதலை எப்படி வெளிப்படுத்த என்பது வரை.

இதுவரை பகிரப்படாமல் போக்கு காட்டிய காதல்கள் எல்லாம் வார்த்தைகளிலோ அல்லது பரிசுப் பொருட்களிலோ வெளிப்படுமோ என்னும் ஆவல் கொண்டது. சிலர் இதுபோன்று ஈடுபாடு காட்டாவிட்டாலும், அனைத்தையும் தள்ளி நின்று ரசனையாக வேடிக்கை பார்ப்பர்.

ஆனால், இன்னும் சிலரும் இருக்கின்றனர். வெறுப்பை உமிழும் ஜீவன்களாய்!

பொதுவெளியில் காதல் என்ற பெயரில் எல்லை தாண்டும் பலரை நாம் பார்த்திருப்போம். அவர்களின் அநாகரிகமான செயல்களில் முகத்தைச் சுழித்திருப்போம். கோபமும், அருவருப்பும் மிகுதியாக ‘என்ன ஜென்மங்களோ! ஒழுக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பது போல!’ என்று மனதிற்குள் பொரிந்து தள்ளியிருப்போம். அதோடு நாம் கடந்து விடுகிறோம்.

ஆனால், கடந்து வர முடியாத சிலர், ‘கலாச்சாரம் சீர்கெடுகிறது’ என்று சொல்லிக் கொந்தளிப்புடன் வலம் வருகிறார்கள். அவர்களின் ஆயுதங்கள் அனைத்தும் காதலர் தினத்தில் உபயோகப்படுத்தப்படும். அவர்களிடம் காதலர் தினத்தில் மாட்டிக் கொள்ளும் காதலர்களின் நிலை திண்டாட்டம் தான்.

அப்படியொரு நிலை தனக்கு வரவிருப்பது புரியாமல், வழக்கம்போல பள்ளிக்குக் கிளம்பியிருந்தாள் மேகமித்ரா.

ஒரு நாள் முன்பு தான் இவர்கள் வீட்டிற்குச் செந்தில் வந்திருந்தான்.

“அத்தை எனக்கு இன்னைக்கு கார் வேணும். நானே மேகாவை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போய் விட்டுட்டு அப்படியே கார் எடுத்துட்டு போயிக்கறேன். சாயங்காலமும் நானே கூப்பிட்டு வந்துடறேன்” எனச் செந்தில் கூற,

“சரிப்பா…” என்றிருந்தார் விஜயா. இது இவன் வரும் சமயங்களில் அவ்வப்பொழுது நடப்பது தான்! ஆக, இதற்குப் பெரிதாக ஆட்சேபனை இருக்காது.

மேகாவை பள்ளியில் இறக்கிவிட்ட செந்தில், நண்பர்களோடு சேர்ந்து ஊர்சுற்றக் கிளம்பி விட்டான்.

அன்றையதினம், “மேகா மசாலா பிரைவேட் லிமிடெட்” சார்பாக மஞ்சள் கொள்முதல் தொடர்பாக வியாபாரம் பேச வேண்டியதாக இருக்க, சுந்தரேசன் அதைக் கவனிக்கச் சென்றிருந்தார். காலையில் சென்றவர் இப்பொழுது வரும் நேரம் தான் என்பதால் பாலாஜி அவருக்காக காத்துக் கொண்டிருந்தார். சுந்தரேசன் வேலையை முடித்துவிட்டுப் புறப்பட்ட நேரத்திற்கு இந்நேரம் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்திருக்கலாம். ஆனால், இன்னும் காணோமே என்னும் பதற்றம் அவருக்கு.

“இன்னும் என்ன செய்யறான் இந்த சுந்தரேசன்?” என மகனிடம் புலம்பியபடியே நண்பனுக்குத் தொடர்பு கொண்டார். ரிங் போனது. ஆனால் எதிர்புறம் எடுக்கவேயில்லை. ஏற்கப்படாத அழைப்புகள் எல்லாம் பாலாஜியின் பதற்றத்தை அதிகரித்தது.

தந்தையின் வெளிறத் தொடங்கிய முகத்தைப் பார்த்து, “வருவாரு விடுங்க பா” என்று வேந்தன் தான் தந்தையைச் சற்று அதட்ட வேண்டியதாய் போனது. ஆனால், பாலாஜிக்குள் இனம்புரியாத பயம். எப்பொழுதும் இப்படித் தாமதம் ஆகாதே என்பதாக!

பாலாஜி மேலும் ஒரு மணி நேரம் காத்திருந்தார். ஆனால், சுந்தரேசன் வரவில்லை. பாலாஜியின் பதற்றத்திற்கு ஏதுவாக ஒரு தொலைப்பேசி அழைப்பு தான் வந்தது. சுந்தரேசன் பயணித்த கார், டயர் வெடித்ததில், இடையில் இருக்கும் தடுப்பைத் தாண்டி, எதிர்புற சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது என்றும்… ஒரு மருத்துவமனையின் பெயரைச் சொல்லி, இந்த மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார் என்றும் அழைப்பு விடுத்தவர்கள் சொன்னார்கள்.

கேட்ட பாலாஜி நிலைகுலைந்தார். “இல்லை அவனுக்கு ஒன்னும் ஆகாது” அவரது இதழ்கள் அனிச்சையாகப் புலம்ப, முகம் பயத்தில் இரத்தப்பசையை துடைத்தெடுத்தது போல வெளிறியிருந்தது.

“அப்பா என்ன ஆச்சு?” போனில் பேசியவர் திடீரென்று நிலைகுலைந்து காணப்படவும், வேந்தன் பதற்றமாகத் தந்தையில் அருகில் வந்து, அவரை அருகிலிருந்த நாற்காலியில் அமர வைத்தான்.

“சுந்தரேசன்… சுந்தரேசன்” எனத் தந்தை தடுமாறினார். அவரது பதற்றத்தைக் குறைக்க, குடிக்கத் தண்ணீரை எடுத்துத் தந்தான்.

தந்தை ஓரளவு ஆசுவாசப்பட்டதும், “என்னன்னு நிதானமா சொல்லுங்க பா” என அவரை தேற்றி, ஒருவழியாக அவரிடமிருந்து வேந்தன் விஷயத்தை வாங்கியிருந்தான். கேட்ட அவனுக்குமே பேரதிர்ச்சி.

ஆனால், இது அதிர்ந்து அமரும் நேரம் இல்லையே!

“அப்பா அத்தையை ஹாஸ்பிட்டல் வர சொல்லுங்க. நாமளும் ஹாஸ்பிட்டல் கிளம்புவோம். இப்ப இங்க நாம நேரத்தை வேஸ்ட் பண்ண முடியாது. அங்க பணம் கட்ட வேண்டிய தேவை இருக்கலாம். கையெழுத்துப் போடச் சொல்லிக் கேட்கலாம்” என நிலைமையின் தீவிரத்தை விளக்கி, பணத்தையும் எடுத்துக்கொள்ளச் சொல்லி, அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றான்.

விஜயாவும் அழுதபடியே அங்கே வந்து சேர்ந்திருந்தார். தேற்றக் கூட ஆள் இல்லாமல், சொல்லி அழக் கூட ஆள் இல்லாமல் ஒற்றை பெண்ணாய் பார்க்கவே பாவமாய் இருந்தார்.

“வேந்தா…” என அவனது கையை இறுகப் பற்றிக் கொண்டு ஆறுதல் தேட விளைந்தார். ஆனால், தோளுக்கு மேல் வளர்ந்த ஆண்பிள்ளை என்பதால் அவனிடமும் அதிகமாக ஆறுதல் தேட முடியவில்லை.

யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் என்பதுபோல பரிதாபமாக நின்றவரைப் பார்க்க அவனுக்கு நெஞ்சம் பிசைந்தது.

மருத்துவர்கள், ‘முதல்கட்ட சிகிச்சை முடித்துவிட்டுத் தான் எதையும் சொல்ல முடியும்’ என்று சொல்லி விட்டனர். சுந்தரேசனின் நிலையை எண்ணி அனைவரும் பயந்து போனார்கள்.

அத்தை தவிப்பதை வேடிக்கை பார்த்து நிற்க முடியாமல், வேந்தனுக்கு தன் அன்னையின் நினைவு எழுந்தது. அம்மா இருந்திருந்தால், இப்படி அத்தை தனியே தவிக்க வேண்டியிருக்காது! அத்தைக்கு அம்மா ஆறுதலாக இருந்திருப்பார் என்று நினைத்தவனுக்கு வேதனையாக இருந்தது.

விஜயாவின் தவிப்பை அதற்கு மேலும் காண முடியாமல், “அத்தை நான் ஸ்கூலுக்குப் போய் மேகாவை கூட்டிட்டு வரேன்…” என மேகாவின் பள்ளியை நோக்கிக் கிளம்பியிருந்தான்.

அத்தையின் அருகில் மேகா இருந்தால் சற்று ஆறுதலாக இருக்கும் என்று அவன் எண்ணினான். ஒரு சில நெருங்கிய உறவுகளிடம் தகவல் சொல்லியிருந்தாலும், அவர்கள் எல்லாம் சற்று தள்ளியிருப்பதால், அவர்கள் வர சில மணி நேரங்கள் எடுக்கும்.

அதோடு மேகாவும் வழக்கம்போல வீட்டிற்கு வந்து, வீட்டிலிருக்கும் வேலைக்காரர்கள் சட்டென்று எதையாவது சொல்லி விட்டால், சின்னப்பெண் உடைந்து போவாளே! பக்குவமாகச் சொல்லி அழைத்து வர வேண்டுமே என்றும் நினைத்தான். மேலும் தற்போதைக்கு மாமா சிகிச்சையில் இருப்பதால், அவனது தேவையும் மருத்துவமனையில் இல்லை.

இதை எல்லாம் யோசித்துத் தான் வேந்தன் மேகாவின் பள்ளிக்குச் சென்றது. பள்ளி முடிந்து கொஞ்ச நேரம் ஆகியிருக்கும் போல, மேகா வாசல் கேட்டின் அருகே அவளுடைய தோழிகளுடன் பேசியபடி காத்திருந்தாள்.

‘அச்சோ ஸ்கூல் விட்டு ரொம்ப நேரம் ஆயிடுச்சு போல. இதைக்கூட யாரும் யோசிக்கலையே!’ என தங்கள் நிலையை நொந்தவன், ‘ஆனா இவ ஏன் வீட்டுக்கு போகாம காத்திருக்கா?’ என்ற யோசனையோடே அவளருகே வண்டியை நிறுத்தினான்.

அவனை ஆச்சரியமாகப் பார்த்தபடி, தோழிகளிடம் விடைபெற்று வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

“என்ன நீ வந்திருக்க? செந்தில் மாமா தான இன்னைக்கு வரேன்னு சொன்னாங்க…” மேகா அவனிடம் கேள்வியைக் கேட்க,

‘ஓ அதனால தான் இவ காத்திருந்தாளா?’ என்று நினைத்துக் கொண்டவன், அவளுக்கு எந்த பதிலையும் சொல்லவில்லை. அதோடு இவர்கள் பின்னே, பின்தொடரும் வண்டிகளையும் கவனிக்கவில்லை.

“என்ன பதிலே சொல்ல மாட்டீங்கற?” மேகா மீண்டும் அவனிடம் கேட்க, வேந்தன் பதில் சொல்லும் நிலையிலோ, சுற்றத்தை அனுமானிக்கும் நிலையிலோ இல்லை. ஒருவேளை கவனித்திருந்தால் நிச்சயம் சுதாரித்திருந்திருப்பான்.

வேந்தனின் கவனம் முழுவதும், எப்படி மேகாவிடம் பேச்சைத் தொடங்குவது என்பதிலேயே இருந்தது. தவிப்பாக அவளது முகம் பார்ப்பதும், பிறகு உடனேயே சாலையை பார்ப்பதுமாக வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தான்.

வண்டி ஆள் அரவமற்ற இடத்திற்கு வந்ததும், வண்டியை வழிமறித்து சில இருசக்கர வாகனங்கள் நின்றன. அந்த வாகனங்கள் தான் இத்தனை நேரமும் இவர்களை பின் தொடர்ந்தவைகள்.

வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்திய வேந்தன், தன் எண்ண சூழலிலிருந்து விடுபட்டு, “என்ன?” என்றான் ஜன்னலை இறக்கி வெளியே எட்டிப்பார்த்தபடி. அதற்குள் மேலும் சில வண்டிகள் அவனது காரின் பின்புறம் வந்து நின்றது. சுற்றி வளைத்த நிலை!

வேந்தன் என்ன நடக்கிறது என்று யோசனையாகப் புருவம் சுருக்க,

அதற்குள், “இறங்குங்க முதல்ல” என அவர்களில் ஒருவன் அதட்டினான். கட்சிக்காரர்கள் போன்ற தோற்றத்தில் இருப்பவர்களை வேந்தன் குழப்பமாக ஏறிட்டான்.

‘மாமாவோட யோசனையிலேயே வண்டியை ஓட்டி, இவங்க வண்டியில எதுவும் இடிச்சுட்டு வந்துட்டோமா?’ வேந்தனது யோசனை இந்த திசையில் தான் இருந்தது.

அதற்குள், மீண்டுமொருமுறை அதிகாரமாக, “இறங்குன்னு சொல்லறோமல்ல…” என தன் கையிலிருந்த நீண்ட குச்சியால் காரை ஒருவன் வேகமாகத் தட்டி, அவர்களை அதட்டலாக அழைக்கவும், வேந்தனின் கோபம் அதிகரித்தது.

இருந்தும் மேகா உடன் இருப்பதனால் பொறுமையாகவே, “என்னன்னு சொல்லுங்க…” என்றான்.

“இப்ப நீ இறங்கலை… கார் சிதறும்” என்று ஒருவன் கத்தியதில், ஆத்திரம் அதிகமானது. இருந்தும் தன்னருகில் இருக்கும் பெண்பிள்ளைக்காக அமைதி காத்தான்.

‘சரி ஏதோ பணம் பிடுங்குவார்கள் போல… மேகாவை அருகில் வைத்துக்கொண்டு பிரச்சனை எதற்கு தந்துவிடுவோம்’ என்ற எண்ணத்தில், வேந்தன் காரிலிருந்து கீழிறங்கினான்.

Advertisement