Advertisement

காதல் பூக்கும் தருணம் – 7

 

வேந்தன் பல வருடங்கள் கடந்து சொந்த ஊருக்குத் திரும்பி வந்திருந்தான். அவனது இறுதியாண்டு கல்வி இன்னும் முடியாத போதும், பிராஜெக்ட் வேலைகள் மட்டுமே என்பதால், கல்லூரிக்கு அவன் அடிக்கடி செல்ல வேண்டியதில்லை. தேவையான சமயங்களில் மட்டும் போய் வந்தால் போதும்.

 

பிராஜெக்ட் வேலைகளை தங்கள் கம்பெனியில் தான் செய்யப் போகிறான். படிப்பு முடிந்ததும், அப்படியே தங்கள் நிறுவனத்திலேயே வேலையைத் தொடங்கவிருக்கிறான். ஆகவே, இனி நிரந்தர வாசஸ்தலம் என்பது இங்கு தான் என்று முடிவு செய்திருந்தான்.

 

சொர்க்கத்திலேயே வசித்தாலும், அது சொந்த ஊருக்கு ஈடாகாதே! சொந்த ஊருக்குத் திரும்பிய மகிழ்ச்சி அவன் முகத்தில் புதுப்பொலிவைத் தந்திருந்தது.

 

“வா வேந்தா…” கடுமையான நீண்ட நெடிய வருடங்களின் பின்பு ஊர்த் திரும்பியிருக்கும் மகனை வாத்சல்யத்துடன் வரவேற்றார் பாலாஜி. கண்கள் கூட லேசாகக் கலங்கி விட்டிருந்தது.

 

புதிதாகக் குடியேறி இருக்கும் வீட்டிற்குத் தான் அழைத்துச் சென்றார். ஏற்கனவே புது வீடு கட்டி, நெருங்கிய சொந்தபந்தங்களை மட்டும் வைத்து கிரகப்பிரவேசம் செய்து குடியேறியிருந்ததை மகனிடமும் சொல்லி இருந்தார் தான் .

 

ஆனால், வேந்தன் வருவது இதுவே முதல்முறை. இதற்கும் அவன் பன்னிரெண்டாவது படிக்கும் போதே, பாலாஜி இங்குக் குடியேறியிருந்தார்.

 

“இத்தனை நாள் அப்பா உன்னை வர விடலைன்னு சங்கடமா தம்பி?”

 

“அதெல்லாம் எதுவும் இல்லை பா..” தந்தையின் மனம் நோக இடம் கொடுக்காமல் உடனடியாக மறுத்தான்.

 

அவனே தாயின் இழப்பில் இருந்து மெது மெதுவாகத்தானே மீண்டான். தந்தை இந்த வீட்டிற்குக் குடியேறி ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது என்று தெரியும். இந்த வீட்டிற்கு தந்தை குடியேறிய தருணத்தில், அன்னையின் இழப்பிலிருந்து மீள முடியாமல் போராடிக் கொண்டிருந்தவனால், இந்த விழாவில் கலந்து கொண்டும் இருந்திருக்க முடியாது. ஆக அவனுக்குத் தந்தை செய்ததில் எந்த வருத்தமும் இல்லை. கூடவே, தந்தை ஏன் வீடு மாறியிருப்பார் என்பதையும், அந்த தருணத்தில் தன்னை ஏன் வரச் சொல்லவில்லை என்பதையும் அவனாலும் புரிந்து கொள்ள முடியுமே!

 

மகனின் பதிலில் பாலாஜியின் மனதில் இதம் பரவியது. மேலும் எதையோ அறிந்து கொள்ள விரும்பியவராக, “இந்த வீடு உனக்கு பிடிச்சிருக்கா?” என பாலாஜி சங்கடமாகவும், தவிப்பாகவும் கேட்டார். எப்படியும் மகன் வாழப்போகும் வீடு. இருந்தாலும், அவனைக்கூட வரச் சொல்லும் சூழலில் அவர் இருந்திருக்கவில்லையே! அந்த வருத்தம் அவருக்குக் கடலளவு இருந்தது. அது அவ்வப்பொழுது மனதின் ஓரம் உறுத்திக்கொண்டே இருக்கும்.

 

“ரொம்ப நல்லா கட்டியிருக்கீங்க பா” தந்தையின் மனபாரம் புரிந்து கொண்ட தனயனாய் இதற்கும் உடனடியாக பதில் தந்தான்.

 

அவன் பதிலும், அனுசரணையிலும் அவருக்கு அப்படி ஒரு திருப்தி. மனதிலிருந்த சஞ்சலங்கள் எல்லாம் கரையத் தொடங்கியிருந்தது.

 

அதன்பிறகு, வேறு சில விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தவர், “இன்னைக்கு சேகர் மகனோடு ரிசப்ஷன் இருக்கு வேந்தா. உனக்கு எதுவும் பர்சேஸ் பண்ணணும்னா பண்ணிக்கோ. சாயங்காலம் போயிட்டு வந்துடுவோமா?” எனக் கேட்க,

 

“கண்டிப்பா ப்பா…” என்று சிரித்த முகமாகப் பதில் சொன்ன மகன் மீது வாஞ்சை பெருகியது. மனைவியையும் இழந்து, மகனையும் தள்ளி நிறுத்தி… எத்தனை வேதனைகளைச் சுமந்து விட்டார். அதை மகனும் சரியாகப் புரிந்து கொண்டானே! மனதின் பாரங்கள் விலகிய உணர்வு.

 

மாலையில் மகனோடு திருமண வரவேற்புக்குக் கிளம்பிய பாலாஜியின் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம், கர்வம், பூரிப்பு.

 

காலையில் சிறிது பர்சேஸ் முடித்து, ஓய்வெடுத்தபடியால், வேந்தனும் மிகவும் புத்துணர்வோடு இருந்தான். அவன் இதழ்களில் தவழும் புன்னகை அவனது வசீகரத்தை அதிகப்படுத்திக் காட்டியது. 

 

“ஏன் ப்பா சேகர் அங்கிள் பையனுக்கு அதுக்குள்ள கல்யாணமா?” ஆச்சரியமாகத் தந்தையிடம் கேட்டான்.

 

மகன் காரோட்டும் அழகை ரசித்தவாறே, “உன்னைவிட ரெண்டு வருஷம் பெரியவன் வேந்தா…”

 

“ஹ்ம்ம் இருபத்தியஞ்சு இருக்குமா? அதுக்குள்ள கல்யாணமா?” லேசாக உதடு பிதுக்கினான்.

 

“ஹாஹாஹா… அப்பறம் எப்போ பண்ணனும்ன்னு சொல்லுவ? மீறிப்போன இருபத்தேழு வயசுக்குள்ள கல்யாணத்தை செஞ்சு வெச்சுடணும். அதுதான் பசங்களுக்கு சரியான வயசு…”

 

“அப்பா…” தந்தை தன் திருமணப் பேச்சிற்கு மறைமுகமாக அடி போடுகிறார் எனப் புரிய, செல்ல கண்டிப்பு அவனிடம்.

 

“நிஜம் தான் வேந்தா… உனக்கும் இன்னும் ரெண்டு, மூணு வருஷத்துல கல்யாணம் செஞ்சு வெச்சுடுவேன்” அவரும் மகனுக்குப் புன்னகையோடே கட்டளையிட்டார்.

 

“விளையாடாதீங்க பா… நான் என்னோட பி.ஜி.யே இப்ப தான் முடிக்க போறேன். தொழில் கத்துக்கணும். சாதிக்கணும்…” என்றவன் அடுக்க,

 

“கல்யாணம் எதுக்கும் தடையா இருக்காது வேந்தா…”

 

“அப்பா… அதுக்காக இருபத்தியஞ்சு வயசுல எல்லாம் இம்பாசிபில்…” இன்முகமாக முரண்டு பிடித்தான் மகன்.

 

“சேகரோட மகனுக்கு ஜாதகத்துல எதுவோ பிரச்சனை போல தம்பி… அதுனால தான் கொஞ்சம் முன்னாடியே செய்யறாங்க… உனக்கு இருபத்தியாறு, இல்லை இருபத்தியேழுல தான் செய்வேன்”

 

“அச்சோ ஆளை விடுங்க பா…” என்று வேந்தன் வெட்கச்சிரிப்போடு கூறியபோது, திருமண மண்டபம் வந்திருந்தது.

 

உள்ளே சென்றவர்கள் கூட்டத்தில் ஐக்கியமாகியிருந்தார்கள். பாலாஜி, ‘இதோ வருகிறேன்’ என்று சொல்லி சுந்தரேசன் குடும்பத்தினரைத் தேடிச் சென்றிருக்க,

 

‘இவரு எங்க போறாரு…’ எனத் தந்தை சென்ற திசையை நோட்டம் விட்டான் வேந்தன். அவர் தென்படவில்லை. தனியாக விட்டு விட்டுப் போய்விட்டாரே என்ற சங்கடம் அவனுக்கு.

 

அங்கிருக்கும் பலரையும் தெரிந்திருக்கும் வாய்ப்புகள் ஏராளம். ஆனால், பல வருடங்கள் கழித்துப் பார்ப்பதால், அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது. அப்படியே இவன் கண்டுபிடித்தாலும், பதிலுக்கு அவர்களும் கண்டுபிடித்து, தெரிந்து கொண்டு பேச வேண்டுமே! ஆகையால், அமைதியாக அமர்ந்து சுற்றத்தை நோட்டம் விடத் தொடங்கினான்.

 

அப்படி நோட்டம் விட்டதில், அவன் விழிகளில் விழுந்தவள் தான் அந்த தேவதை. அழகி… பேரழகி… பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தாள்.

 

வெகுநேரம் பார்த்துக் கொண்டேயும் இருந்தான். அடர் நீல வர்ணத்தில் லெஹன்காவும், தங்க நிறத்தில் துப்பட்டாவும் அணிந்து வளைய வந்தவளின் மீதிருந்து பார்வையை திருப்புவது கூட வேந்தனுக்கு அத்தனை சிரமமாக இருந்தது.

 

வேந்தனின் பார்வை அவளையே வட்டமடித்தது. அவளது புன்னகையில் லயித்தது. அவள் வயதொத்த பெண்களிடம் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தாள். அவளைச் சுற்றிலும் பல பெண்கள் இருந்த போதும், அவனால் வேறு யார் மீதும் கவனத்தைச் செலுத்த முடியவில்லை.

 

இதற்கும் சைட் அடிக்காத சாமியார் ரகமெல்லாம் இல்லை அவன்! நன்றாகவே சைட் அடிப்பான். ஆனால், இன்று… இவளைத்தாண்டி, வேறு யார் புறமும் பார்வை பயணிக்க மறந்தது.

 

‘இப்ப தான், உங்க அப்பாகிட்ட வீராவேசமா கல்யாணத்தைப் பத்தி இப்பவே பேச்சான்னு, வீம்பு பேசிட்டு வந்த’ என்று அவனுடைய மனம் நேரம் காலம் தெரியாமல், சமயத்திற்குத் தகுந்தாற்போல எடுத்துக் கொடுக்க,

 

‘ம்ப்ச்… அழகா இருக்கா… ஒரு நாள் சைட் அடிக்கலாம் அவ்வளவு தான்… அதுவும் கம்பெனிக்கு ஆள் இல்லாததால தான அடிக்கிறேன். போர் வேற அடிக்குதே!’ எனப் புத்தி முந்திக்கொண்டு பதில் சொன்னது.

 

‘அப்படியா?’ என நம்பாமல் மனம் கேட்டு வைக்க,

 

‘அப்படி இல்லை போலவே!’ என அவனது விழிகளின் லஜ்ஜை சந்தேகத்திற்கிடமில்லாமல் உணர்த்தியது.

 

அவனுக்கே தன்னிலை மிகவும் வித்தியாசமாக இருக்க, ‘ம்ப்ச்…’ என்று வேகமாகத் தலையைக் உலுக்கிக் கொண்டான்.

 

‘யாராவது நீ ஜொள்ளு விடறதை கவனிச்சா என்ன நினைப்பாங்க?’ எனத் தன்னைத் தானே கடிந்து கொண்டவன், சுற்றிலும் தன்னை யாரும் கவனித்து விட்டனரா என்றறிய பார்வையை ஓட்டினான்.

 

பலரும் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். ஆனால், அவனை அல்ல! அந்த தேவதையை. குறிப்பாகப் பல இளவட்டங்கள்… அதில் அவனுக்கு பொறாமை வந்தது. அந்த இளவட்டங்களின் மீது காரணமே இல்லாமல் கோபமும், எரிச்சலும் வந்தது. என்னவோ அவனுடைய கைப்பொருளை அவர்கள் தட்டிப்பறிக்க வந்திருப்பது போல, காரணமேயில்லாமல் அவனுக்குள் பெரும் பரிதவிப்பு.

 

அவன் கோபத்தையும், பரிதவிப்பையும் கண்டு, ‘இதுதான் நீ ஒருநாள் மட்டும் சைட் அடிக்கும் லட்சணமா?’ என்று உருண்டு புரண்டு சிரித்தபடி மனம் கேலி செய்தது.

 

அதிர்ஷ்டக்காரன் தான்! பின்னே, தலைக்குப்புற விழுந்தும், மண் ஒட்டாத மீசை அவனுக்கு! மனதின் கேள்விகளை அசட்டை செய்தவனின் பார்வை மீண்டும் லஜ்ஜையேயின்றி அவளிடம் நிலைத்தது. அவளை அருகில் சென்று பார்க்கும் ஆர்வம் அதிகரிக்க, சில அடிகள் முன்னே நடந்தவனை, சுந்தரேசனும், விஜயாவும் பார்த்துவிட்டு பிடித்துக் கொண்டனர்.

 

விஜயா மருமகனின் வளர்ச்சியைத் தலை முதல் கால் வரை ஆராய்ந்து, “வேந்தா… நீயே தானா? என்னடா இப்படி வளர்ந்துட்டா!” என ஆச்சரியமாகக் கேட்டதோடு, தன் கண்ணே பட்டு விட்டது என நினைத்தாளோ என்னவோ மருமகனுக்குத் திருஷ்டி கழித்தார்.

 

“அச்சோ அத்தை அட்டகாசம் செய்யாதீங்க… ஏன் உங்க அண்ணன் என்னைச் சென்னைக்கு பேக் பண்ணிட்டா, நீங்க என்னைப் பார்க்க வர மாட்டிங்களா?” என விஜயாவை பார்த்ததுமே கண்டுபிடித்து விட்டதால், இயல்பாகவே பேச்சை வளர்த்தான். ஆனால், விழிகள் மட்டும் அந்த தேவதையைச் சுற்றியே! அவள் அவனுடைய மேகா என்று தெரியாமலேயே!

Advertisement