Advertisement

காதல் பூக்கும் தருணம் – 6

 

சுந்தரேசன் கண் விழிக்கும் நேரத்திற்காக மருத்துவமனையில் காத்திருந்தான் மகிழ்வேந்தன். அவனோடு வந்த பெண்குலங்களை, “நீங்க இங்க என்ன செய்யப் போறீங்க? கிளம்புங்க நான் பார்த்துக்கறேன். எதுவும் தேவைன்னா நானே கூப்பிடறேன்” என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டான்.

 

அது ஒன்றும் அவ்வளவு எளிதாக இருந்துவிடவில்லை. “அதென்ன நாங்க இருக்காம நீ இருக்கிறது?” என வள்ளி எகிற,

 

“அப்படியா ஆன்ட்டி நீங்க இருக்கீங்களா? பணம் எதுவும் கட்ட சொன்னா பார்த்துப்பீங்க தானே? எதுவும் மருந்து, மாத்திரை வாங்கி வர சொன்னா வாங்கிட்டு வந்துடுவீங்க தானே? நான் இவங்களை கூட்டிட்டு வீட்டுக்கு கிளம்பவா?” எனப் பொறுப்பை உடனே தாரை வார்த்துக் கொடுத்து விட்டு இவன் கிளம்ப எத்தனித்து விட்டான்.

 

அதில் அதிர்ந்து விழித்தவரோ, “நில்லு நில்லு… அதென்ன வயசானவளா இதெல்லாம் பார்க்க முடியும். நீயே பாரு. நாங்க கிளம்பறோம்” என அவனிடம் நொடித்துக் கொண்டு,

 

“நான் முன்னாடி போயி டிரைவரை காரை எடுக்க சொல்லறேன். நீங்க வாங்க…” என விஜயாவிடம் சொல்லிவிட்டு, காலில் சுடுதண்ணீர் பட்டதுபோல வேகவேகமாக கிளம்பி விட்டார்.

 

விளக்கெண்ணெய்யைக் குடித்தது போல அவரது பாவனையில் விஜயாவிற்கு சிரிப்பே வந்துவிட்டது. மென்மையாகச் சிரித்தும் வைத்தார்.

 

விஜயாவிடம் தான் ஏற்கனவே தோண்டித் துருவி விசாரித்து வைத்திருந்தானே, ‘வள்ளி வந்த அன்று, அவரிடம் எதுவோ பேசிய பிறகே… சுந்தரேசனுக்கு இந்த நிலைமை’ என தெரிந்த பிறகு, அவரை மேற்கொண்டு சுந்தரேசனைச் சந்திக்க விட வேந்தனுக்கு இம்மியும் விருப்பமில்லை. அதனாலேயே பக்காவாக பிளான் செய்து பேக் அப் செய்தான்.

 

“மாமாவுக்கு எதுவும் ஆகாதல்ல?” மீண்டும் விஜயா அதையே கேட்க,

 

“நான் இருக்கப்ப என்ன கவலை அத்தை? நீங்க கிளம்புங்க அவரை நான் பார்த்துக்கிறேன்” எனப் பொறுமையாய் சொல்லி இவர்களை அனுப்ப முயற்சிக்க, மேகா நகர மறுத்தாள். இவர்கள் நம்மிடம் எந்த விவரமும் சொல்லாமல் சுத்தலில் விடுகிறார்கள் என்ற கோபம் அவளுக்கு.

 

வேந்தனோ நிதானமாக, “ஹ்ம்ம்… நான் தனியா தான் இருக்கேன். எனக்குத் துணைக்கு ஒருத்தங்க இருக்கலாம். தப்பில்லை? நீ இரு…” என ‘துணைக்கு’ என்பதை அழுத்தமாகச் சொல்லி மங்கையவளின் காதில் கிசுகிசுத்தான். குரலில் இழையோடிய சரசமான தொனி புதிது.

 

அதில் அதிர்ந்து விழித்தவள், தாயின் கையைப்பற்றி இழுத்தபடி, “போலாம் மா…” என்று விறுவிறுவென நடக்கத் தொடங்கிவிட்டாள்.

 

இவர்கள் இருவரும் குழப்பியடிப்பதில் ஒன்றும் புரியாமல் விழித்த விஜயா, மகளோடு நடந்தபடியே வேந்தனைத் திரும்பிப் பார்க்க, “சும்மா…” என உதடசைத்து, கண்சிமிட்டிச் சிரித்தான்.

 

‘இதுங்க ரெண்டும் என்னைப் பைத்தியம் ஆக்கிடுங்க போலயே!’ எனச் சலித்தவரின் மனதில், இவர்கள் நினைவையும் மீறி பெரும் வலி. எத்தனை திசைத்திருப்பல்கள் வந்த போதிலும், அந்த நினைவு மட்டும் மறைய மறுக்கிறது.

 

‘ஏங்க என் நினைப்பே இல்லையா? இப்படி வந்து படுத்துட்டீங்க. சீக்கிரம் வாங்க…’ என்று கணவரிடம் மூன்று நாட்களாய் பேசக் கூட முடியாத இயலாமை மனதை வருத்த மனதோடு அவரிடம் சண்டையிட்டார். கணவரின் நிலை என்னவென்று தெரியாததால் அவருக்கு மிகவும் பயமாக இருந்தது.

 

இந்த வள்ளி வேறு கடந்த மூன்று தினங்களாக பொல்லாத பேச்சுக்களைப் பேசி மேலும் நிலை குலையச் செய்திருக்க, இப்போதைக்கு வேந்தனின் வருகை தான் நம்பிக்கையைத் தந்திருந்தது.

 

அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்த வேந்தனுக்குத் தனது சிறுவயது நினைவுகள். 

 

அன்று மேகமித்ரா முதன் முதலில் ஜனனித்த தினம். விஜயா பிரசவ அறையில் இருக்க, சுந்தரேசனுக்கு ஆதரவாய் பாலாஜியின் குடும்பமும் உடன் இருந்தது. மேகா பிறந்ததும் செவிலியர் அவளை வெளியே கொண்டு வர, ஆர்வமாகப் போய் நின்ற சுந்தரேசனை முந்திக்கொண்டு ஆறு வயது வேந்தன் நின்றான்.

 

“மாமா குழந்தையை நான் தான் முதல்ல வாங்குவேன்” என அடம் பிடித்து நின்றவனைப் பார்த்து அனைவரும் அதிர,

 

“உனக்கு தூக்கத் தெரியாது…” என வேந்தனின் பெற்றவர்கள் அவனை அழைத்தனர். சுந்தரேசனோ ‘இதென்னடா வம்பு…’ என்பது போல வேந்தனையும், மகளையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தார். மகளின் அழகில் அவளை அள்ளி எடுத்துக் கொள்ள வேண்டும் போல ஆசையாக இருந்தது.

 

“முடியாது… என்கிட்ட தான் தரணும்… அத்தையோட பாப்பா எனக்குத் தான் வேணும். மாமாவுக்குத் தான் அத்தை இருக்காங்களே…” என வேந்தன் சிறுபிள்ளை பிடிவாதத்தைக் காட்ட, மருத்துவமனையில் இப்படிக் கத்துகிறானே என்று அனைவருக்கும் சங்கடமாகப் போனது.

 

“வேந்தா அடம் பிடிக்காத பா… மாமா வாங்கிட்டு உன்கிட்ட தரேன்…” எனச் சுந்தரேசன் கெஞ்ச, வேலைக்கே ஆகவில்லை.

 

விஜயாவின் அன்னை தான், “சின்ன பையன் தான மாப்பிள்ளை, விடுங்க அவன் ஆசையை ஏன் கெடுக்கணும்…” எனச் செவிலியர் காத்திருப்பதை உணர்ந்து மருமகனைச் சமாதானம் செய்தார்.

 

வேந்தனைச் சமாளிக்க முடியாமல் அவனைக் கீழே அமர்த்தி, அவன் மடியில் தான் மேகாவை முதன்முதலில் தந்தனர்.

 

சுந்தரேசன் தன் மகளை ஆசை தீரப் பார்த்தபடி, வேந்தனை முறைத்துப் பார்த்தார். அவன் எதற்கும் அசரவே இல்லை. குழந்தையை யாரிடமும் தரவும் இல்லை.

 

“பாரும்மா உன் பையனை…” பல்லைக்கடித்துக் கொண்டு பாலாஜியின் மனைவி லோகேஸ்வரியிடம் சுந்தரேசன் புகார் வாசிக்க,

 

“என்னவோ போங்கண்ணா உங்க கிட்ட வம்பு வளக்கிறதே அவன் வேலையா போச்சு…” என வாயை மூடி சிரித்தார்.

 

“என் பொண்ணை என்கிட்ட தர சொல்லும்மா…” சிறு பிள்ளை போலக் கேட்க,

 

“இதென்ன வம்பா இருக்கு… நாங்க தான, பெத்தவரு கிட்ட பொண்ணை கேட்கணும்… இங்க பிள்ளையை பெத்தவரு எங்ககிட்ட கேட்டா எப்படி?” என்று சொல்லி மீண்டும் சிரித்தவர், குழந்தையைக் கொஞ்சுவதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டார்.

 

“உன் பையன் வேற எப்படி இருப்பான்…” எனச் சுந்தரேசன் போலியாகச் சலித்துக் கொண்டாலும், பார்வை மொத்தமும் மகளிடத்தில் தான்.

 

எந்த ஆர்ப்பாட்டத்தையும் வேந்தன் கண்டு கொள்ளவில்லை. கருமமே கண்ணாக தன் மடியிலிருந்த பூக்குவியலைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். என்னவோ அந்த குழந்தையைப் பார்த்த பிறகு, தான் பெரிய பையன் என்னும் பெருமை அவனுக்கு!

 

இதேபோல, மீண்டும் ஒரு நாள், சுந்தரேசனுடன் மல்லுக்கு நின்றான் வேந்தன். அது அந்த பூக்குவியலுக்குப் பெயர் தேர்ந்தெடுக்கும் போது…

 

“என் பேரு எம்’ல தான தொடங்குது. பாப்பா பேரும் எம்’ல தான் வெக்கணும்” என உறுதியாகச் சொல்லிவிட்டான் வேந்தன்.

 

“டேய் நியூமராலஜி படி தே, தோ அப்படிங்கிற எழுத்துல தான் வைக்கணும்…” என அவன் பிடிவாதத்தில் சுந்தரேசன் அதிர்ச்சியடைந்து சொல்ல,

 

“அப்படி எல்லாம் வைக்கக் கூடாது… எனக்கு எம் எழுத்துல தான் பேரு தொடங்கணும்…” என முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டான்.

 

“உனக்கு எம்’ல தொடங்கட்டும் டா. என் பொண்ணுக்கு வேணாம்” சுந்தரேசன் அவனிடம் வம்பு செய்ய,

 

“அதெல்லாம் முடியாது மாமா…” என அவரை விட வம்பு செய்தான் இளையவன்.

 

இந்தமுறையும் சிறுப்பிள்ளையின் பிடிவாதமே வென்றது. மருமகனை ஆன மட்டும் முறைத்தார் சுந்தரேசன்.

 

“பாரு விஜி பெத்த தகப்பனுக்கு பேரு வைக்க உரிமை இல்லையா?” இம்முறை மனைவியிடம் புகார் வாசித்தார்.

 

“அச்சோ குழந்தை அப்படி சொல்லலைங்க. எழுத்து மட்டும் தான் அவன் சொன்னது… பேரு உங்களுக்கு பிடிச்சது தான்…” மனைவியும் மருமகன் பக்கமே இருக்க, மனிதனால் வேறு என்ன செய்ய முடியும்?

 

குழந்தையின் பெயரை மேகமித்ரா என்று தேர்ந்தெடுத்தனர். வேந்தனுக்கு அப்படியொரு பெருமை. ஆனால், அந்த பெயரையும் சொல்லி அழைக்காமல் ‘குட்டிம்மா’ எனக் கொஞ்சி தீர்த்தான். நாளடைவில் அதுவே அவளது செல்லப்பெயராகவும் ஆனது.

 

“பேரை வெக்க சொல்லி வம்பு செஞ்சானே… அதைச் சொல்லி கூப்பிடறானா?” என மனைவியிடம் செல்லமாக அலுத்துக் கொண்டாலும், சுந்தரேசன் வாயிலும் ‘குட்டிம்மா…’ என்றே வரும்.

 

ஆனால், இதே சிறுபிள்ளை பிடிவாதத்தோடு தான் சற்றே வளர்ந்த பின்னும் வேந்தன் இருந்தான். அவனுக்கு பதினோரு வயது இருக்கும்போது தான், நண்பர்கள் இருவரும் இணைந்து மசாலா கம்பெனி திறப்பதாக இருந்தது.

 

கம்பெனிக்குப் பெயர் வைப்பது குறித்து பெரியவர்கள் ஆலோசித்துக் கொண்டிருக்க, மாடு போல குனிந்து கொண்டு, ஐந்து வயது மேகாவை முதுகில் வைத்து சவாரி செய்து ஹாலை சுற்றி வந்து விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தான் வேந்தன். ‘எம்.எம் மசாலா’ எனப் பிள்ளைகள் இருவரின் பெயரில் இருக்கும் முதல் எழுத்தை வைத்து பெரியவர்கள் தேர்ந்தெடுத்த பெயருக்கு, உடனடியாக எதிர்ப்பு வந்துவிட்டது வேந்தனிடமிருந்து.

 

‘மறுபடியுமா என்பது போல…’ சுந்தரேசன் முறைத்துப் பார்க்க,

 

அதை இம்மியும் கண்டு கொள்ளாதவனோ, “அப்பா மேகா பேரை வையுங்க. அம்மா பக்கத்து வீட்டு ஆன்ட்டி கிட்ட சீட்டு போடும் போது கூட அவ பேரில் தான போடுறாங்க. அவ மகாலட்சுமின்னு சொல்லுவாங்களே? அவ தானேப்பா லக்கி சார்ம்… அதுனால குட்டிம்மா பேருல தான் வெக்கணும்” என வேந்தன் அடுக்கிக்கொண்டே போக,

 

அவன் பேச்சில் பெரியவர்கள் பூரித்துப் போனார்கள்.

 

“அதெப்படி மருமகனே… அப்ப உன் பேரு விடுபட்டுடுமே…” சுந்தரேசன் வழக்கம்போல எதிர்க்க,

 

“மேகா பேரு போதும் எங்களுக்கு…“ என்று மாமனை முறைத்தான்.

 

“அவன் சின்ன பையன் அவனுக்கு என்ன தெரியும்…” என மீண்டும் தொடங்கியவரை,

 

“என்ன ண்ணே சரியா தான சொல்லி இருக்கான். குட்டிம்மா பேருலயே தொடங்குவோம். அவ லட்சுமி கடாட்சம். நமக்குத் தொழில் நல்லபடியா வரும் பாருங்க…” என லோகேஸ்வரி சொல்ல, மற்றவர்களும் வழக்கம்போல வேந்தன் பக்கமே நிற்க, இம்முறையும் அவன் எண்ணியதன் படியே நடந்தது.

 

இப்படி மாமாவிடம் முட்டிக் கொண்டே, இரு வீட்டின் செல்லமாக, மேகா தொடர்பாக ஒட்டுமொத்த உரிமையையும் குத்தகை எடுத்தவன் போல வளர்ந்தவனின் வாழ்வில் முதல் இடி அவனது பதினாறு வயதில் வந்தது.

 

வேந்தன் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை முடித்து, அதன் முடிவிற்காகக் காத்திருந்த சமயம், லோகேஸ்வரி புற்றுநோயின் தீவிரத்தால் இறந்து விட்டார். நோயைக் கண்டுபிடிக்கும் முன்பே இறுதிக் கட்டத்தை நெருங்கி இருந்ததால், அவரது இறப்பு யாருமே எதிர்பாராதது.

 

அதில் அதிகம் நிலை குலைந்தது என்னவோ வேந்தன் தான். ஒற்றை பிள்ளையாய் நின்று விட்டதாலோ என்னவோ வேந்தனுக்கு வீட்டில் மிகவும் செல்லம். அதிலும் அவன் சரியான அம்மா பிள்ளை. எதற்கென்றாலும் அவன் தேடுவது லோகேஸ்வரியைத் தான். தாயின் இறப்பில், அவனைத் தேற்றவே முடியாதளவு மிகவும் இறுகிப் போயிருந்தான். இங்கேயே இருந்தால், மேலும் இறுகி விடுவான் என்று பயந்த பாலாஜி தான், அவனது மேற்படிப்பை சென்னையில் சேர்த்து விட்டார்.

 

பாலாஜி எதிர்பார்த்தது போல, காலமும், புதிய சூழலும், வேந்தனுக்குப் பெரிதும் உதவியாய் இருந்தது. பள்ளி விடுமுறை தினங்களில் கூட, வேந்தனை அவனது பாட்டி வீடுகளுக்கே அனுப்பி வைத்தார். தன்னாலும் மனைவி வாழ்ந்த வீட்டில் இருக்க முடியாமல், அதை விற்றுவிட்டு வேறொரு வீடு கட்டி குடியேறினார். அதற்குக் கூட மகனை வரவழைக்கவில்லை.

 

அவனிடமும் மெல்ல மாற்றம் வந்தது. சென்னையிலேயே அவனைக் கல்லூரியிலும் சேர்த்தவர், மகனுக்கு அன்னையின் நினைவுகளும், ஏக்கங்களும் வந்து விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் கவனம் செலுத்தினார்.

 

வேந்தனும் தனது கல்வியில் கவனம் செலுத்தி, அன்னையின் இழப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீளத் தொடங்கினான். இன்ஜினியரிங் முடித்து, எம்.பி.ஏ வும் அங்கேயே சேர்ந்திருந்தவன், எம்.பி.ஏ இறுதியாண்டு பிராஜெக்டிற்காகத்தான் ஒருவழியாக ஊர் திரும்பினான். கிட்டத்தட்ட ஏழெட்டு நீண்ட வருப்பிங்களுக்குப் பிறகு.

 

Advertisement