Advertisement

 

 

காதல் பூக்கும் தருணம் – 5

 

வள்ளியின் பேச்சைக் காது கொடுத்துக் கேட்கக் கூட பிரியப்படாததால், ஐ.சி.யூ பிரிவிலிருந்து விலகி ஒரு ஓரமாக வந்தமர்ந்திருந்தாள் மேகா. பொங்கி வழியும் விழி நீரைக் கைக்குட்டை கொண்டு ஒற்றி ஒற்றி எடுத்துக் கொண்டிருந்தாள். ஐ.சி.யூ பிரிவு இருக்கும் தளம் என்பதால், அவ்விடத்தில் கூட்டம் அதிகமாக இல்லை.

 

வள்ளி கடந்த மூன்று தினங்களாக இதே பேச்சைத் தான் பேசிக்கொண்டிருக்கிறார். அந்த பேச்சை அவள் சுத்தமாக ரசிக்கவில்லை என்பதை விட… அந்த பேச்சுக்கள் அவளுக்குள் ஒருவித வலியையும், இயலாமையையும் தந்தது.

 

வள்ளி இதுபோல பேசும் தருணங்களில் எல்லாம் கண்கள் தன்போல கலங்கி விடும். யாருக்கும் தெரியாமல், அதை நினைத்து தலையணையை நனைப்பாள். இன்று வேந்தன் முன்பும் இந்த பேச்சு எழுந்து விட்டதாலோ என்னவோ அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் ஒதுங்கி வந்திருந்தாள்.

 

மருத்துவரைப் பார்த்துவிட்டு திரும்பி வந்த வேந்தனின் பார்வையில் அழுது கொண்டிருக்கும் மேகா விழ அவனது மொத்த கோபமும் வடிந்திருந்தது. அவள் எதிரில் வந்து நின்று, “அவ்வளவு தானா? இல்லை இன்னும் அழணுமா?” என்று மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நிதானமாக கேட்டான்.

 

அவளுக்கு அப்படியொரு எரிச்சல். என்னவோ இந்த நிலையில் அவள் நிற்பதற்குக் காரணமே அவன் தான் என்பது போல அடக்க முடியாத ஆத்திரம். பல்லைக்கடித்து அழுகையோடு ஆத்திரத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

 

வழக்கம்போல அவனது கேள்விக்கு அவள் எந்த பதிலையும் சொல்லவில்லை. அதில் எரிச்சலுற்றவன், “அப்ப பேச மாட்ட?” என்று அதட்டலாக கேட்டதும், மெல்லிய நடுக்கம் அவளுள். ‘மிரட்டு வாய் கிழிய மிரட்டு… உனக்கு வேற என்ன தெரியும்?’ அவளுக்கு உள்ளுக்குள் எரிந்தது.

 

அந்தநேரம் இன்னும் தனியாக என்ன செய்கிறாள் என்று மகளைத் தேடியபடி விஜயா வர அவளது அழுது வடிந்த முகத்தைப் பார்த்ததும், “என்ன குட்டிம்மா இது? அவங்க சொன்னா நடந்துடுமா? அம்மா இருக்கேன் டா. எதுக்கு இப்படி அழற?” என ஆறுதலாக அணைத்து சொல்ல, அம்மாவை வயிற்றோடு அணைத்துக் கொண்டவள் மீண்டும் விசும்பினாள்.

 

“சின்ன குழந்தை மாதிரி அவளை ட்ரீட் பண்ணாதீங்க அத்தை” எனப் பல்லைக் கடித்துக் கொண்டு வேந்தன் கூறினான்.

 

“அவ குழந்தை தானே டா…” வேண்டுமென்றே அவன் எரிச்சலை வளர்க்க வார்த்தையாடினார் விஜயா. இவர்கள் இருவருக்குள்ளும் இது என்ன கண்ணாமூச்சி விளையாட்டு என்று காலையிலிருந்து யோசனை அவருக்குள்! அவன் கோபமாகப் பேசுவதும், இவள் அவனுக்குப் பதில் சொல்லாமல், பேசாமல் தவிர்ப்பதும்… ஏனென்றே புரியவில்லை. ஒருவேளை இவன் மூன்றாண்டுகள் தொடர்பில் இல்லாமல் இருந்ததால், மேகா கோபமாக இருக்கிறாளோ என்று எண்ணினார்.

 

“அதெல்லாம் இல்லை. அவ வளர்ந்துட்டா…” என்றான் வீம்பாக.

 

“அப்படியா?” என்ற விஜயாவின் போலி ஆச்சரியத்தில்,

 

“விளையாடாதீங்க அத்தை. முதல்ல அவளை என் கூட வர சொல்லுங்க… அவகிட்ட நான் கொஞ்சம் விவரம் கேட்கணும்”

 

இதைக்கேட்டு மேகா அதிர்ந்து விழித்த நேரம், வள்ளியும் இவர்களைத் தேடி வந்திருந்தார். அவர் செவிகளிலும் வேந்தன் பேசியது விழுந்திருக்க,

 

“என்ன நீ, எங்க வீட்டு புள்ளைகிட்ட நீ என்ன பேச போற? எதுவா இருந்தாலும், இங்கேயே கேளு. நாங்களே பதில் சொல்லறோம். புள்ளையை எல்லாம் உன்கூட அனுப்ப முடியாது” என்று வள்ளி மருத்துவமனை என்றும் பாராது கத்த,

 

மேகா பிடிவாதம் பிடித்திருந்தாலே பின்வாங்கியிருக்க மாட்டான். இப்பொழுது மறுப்பது வள்ளி என்றதும் உடனடியாக வீம்பு செய்தான்.

 

“எழுந்திரு…” என மேகாவின் கைப்பற்றி எழுப்ப, அதிர்ந்து அவனைப் பார்த்திருந்தவளுக்கு, அவனது முகத்தில் தெரிந்த பிடிவாதமும், அழுத்தமும் அவனைத் தடுக்க முடியாது என புரிந்து விட்டது.

 

“வேந்தா… சின்ன பசங்க மாதிரி பண்ணாத. அவளே வருவா விடு. போ மேகா அவனுக்கு என்ன விவரம் வேணுமோ சொல்லு… நீ என்ன அவன்கிட்ட பேசாம அலும்பு பண்ணற?” என இளையவர்களிடம் கூறிய விஜயா,

 

வள்ளியிடம், “வேந்தனும் நம்ம வீட்டு பிள்ளை தான் அண்ணி… இனி இப்படி பிரிச்சு சொல்லாதீங்க” என மெல்லிய குரலில் என்றாலும் கண்டிப்புடன் கூறியவர், “வாங்க அங்க தேடப் போறாங்க…” எனச் சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் ஐ.சி.யூ வாயிலை நோக்கி நடந்தார். வள்ளிக்குக் கோபம் கனன்ற போதும், சூழ்நிலை சாதகமாக இல்லாததால் அடக்கி வாசிக்கும் நிலை!

 

அம்மா சென்றதும், “என்ன கேட்கணும். நான் வரலை” என மேகா மறுக்க,

 

வேந்தன் தீர்க்கமாகப் பார்த்த பார்வையில் வாயை மூடிக் கொண்டாள். அவள் கால்கள் தன்போல் அவன் பின்னே போக, அவன் தன் இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டான்.

 

அவளை கேன்டீன் அழைத்துப் போய் காஃபி வாங்கி தந்தவன், தானும் வாங்கி குடித்தான். குடித்து முடிக்கும் வரையிலும் எந்த பேச்சும் இல்லை.

 

காஃபியை குடித்தவளிடம், “பவுண்டி” சாக்லேட் பாரை எடுத்து நீட்டியவனை ஆச்சரியத்தில் விழி விரித்துப் பார்த்தாள். தேங்காய் நிரம்பிய பவுண்டி சாக்லேட் என்றால் மேகாவிற்குக் கொள்ளை பிரியம்.

 

கண்கள் மின்ன அதை வாங்கிக் கொண்டவளை உரிமையோடு பார்த்துக் கொண்டன அவன் விழிகள். அவனுக்குத் தெரியுமே, அவளுள் பொங்கும் உவகை இந்த இனிப்பிற்காக இருக்காது… மாறாக இன்னமும் அவள் பிடித்தத்தை மறக்காமல் இருக்கும் தன் செய்கைக்காக என்று! கனிவுடன் அவளை பார்த்தவன், அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனையின் வெளியில் இருந்த மரத்தின் அருகே சென்றான்.

 

அதற்கு மேலும் கட்டுப்படுத்த முடியாது என்பது போல, “உங்க அத்தை யாரோட கல்யாணத்தைப் பத்தி காலையிலிருந்து பேசறாங்க” என்று சினத்தை கட்டுபடித்தியபடி அவன் கேட்க,

 

‘ஆமா இவருக்கு இது தெரியாது. அதை நான் நம்பணுமா?’ என்னும் அலட்சியம் அவளுள். அந்த அலட்சிய பாவனை முகத்திலும் பிரதிபலிக்க அமைதியாகப் பதில் சொல்லாமலேயே நின்றிருந்தாள்.

 

“கேட்டுட்டே இருக்கேன். என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது…” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவன், அவள் எதிர்பாராத நேரம் அவளை மரத்தின் பின்னே இழுத்துச் சென்று, அவளது கழுத்தை நெறிப்பதைப் போலக் கையை கொண்டு சென்று, “இப்ப நான் கேட்டதுக்குப் பதில் வரலை அவ்வளவு தான்” என மிரட்ட,

 

அவனது வீரத்தில் அவளுக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது. இதை மட்டும் விஜயா பார்த்திருந்தால், ‘என் மகள் மூன்றாண்டுகள் கழித்து மனம் விட்டுச் சிரிக்கிறாள்…’ என்று ஆர்ப்பாட்டம் செய்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி ஒரு மலர்ந்த சிரிப்பு அவளிடம்!

 

“இப்ப எதுக்கு சிரிக்கிற?” வேந்தன் யோசனையாகவும், எரிச்சலாகவும் கேட்க,

 

“அத்தனை வீரம் இருக்கவரு அங்கேயே கழுத்தை நெறிக்க வேண்டியது தானே? இப்படி மரத்துக்குப் பின்ன தள்ளிட்டு வராட்டி என்ன? சரியான தடி…” ‘தடிமாடு’ எனச் சொல்ல வந்தவள் இறுதி வார்த்தையைக் கீழ் உதடு கடித்து நிறுத்திக் கொண்டாள்.

 

‘என் குட்டிம்மா இப்படி உதட்டை எல்லாம் கடிப்பாளா?’ ஆச்சரியம், சுவாரஸ்யம் என கலவையான உணர்வுகளில் சிக்கிக் கொண்டவனுக்கு, அப்பொழுது தான் உரைத்தது அவளோடானா நெருக்கம்.

 

மேகா சொன்னதை போல யார் பார்வையிலும் விழக்கூடாது என்று தான் மரத்தின் பின்னே இழுத்து வந்து, கழுத்தை நெறிக்க போனது … அதற்கு மரத்தில் அவள் சாய்ந்திருக்க இவன் அவள் மேல் சாய்ந்து, நெருங்கி ஒட்டியல்லவா நின்றிருக்கிறான்.

 

அவன் உணர்ந்த நெருக்கம் அவளும் உணர்ந்து விட்டால் போல… “தள்ளுங்க…” என்றாள் மென்மையாக.

 

“இந்த ‘ங்க’ விகுதி புதியது” அவன் மிகவும் யோசனையானான். ஏன் ‘தடிமாடுன்னு’ சொல்ல வந்து பாதியில நிறுத்திட்டா? இது என்ன புதுசா ‘ங்க’… என யோசித்தவனின் மனதிற்குள் “என்னங்க…” என்று மாமா அத்தையை அழைப்பதும், தன் அம்மா, தந்தையை அழைத்ததும் அழையா விருந்தாளியாக நினைவில் வந்து இம்சித்தது. என்னையும் இவ அப்படித் தான் கூப்பிடுவாளோ… அவனுக்குள் ஏதோ ஒரு பரவசம். அந்த பரவசம் தேன் சுழலில் அவனை மூழ்கடிக்கப் பார்க்க,

 

‘ஆமாம் உன்கிட்ட பேசவே மாட்டீங்குறா, இதுல உன்னைக் கூப்பிடுவாளாக்கும். நினைப்பு தான்’ என அவனது புத்தி ஒரு குட்டு வைத்தது. தன்னை நிலைப்படுத்தத் தலையை வேகமாக உலுக்கிக் கொண்டான்.

 

அவனது செய்கையில், “என்ன?” என்றாள் மிரண்டு விழித்தபடி.

 

“ம்ப்ச்… சரி சொல்லு என்ன பிரச்சனை? சும்மா கதை விட்ட உண்மையிலேயே கழுத்தை நெறிச்சிடுவேன்” என்றான் மீண்டும் கழுத்தின் அருகே கையை கொண்டு சென்றபடி. ஏதோ ஒரு இடைவெளியில் அவள் மீது உராயாதவாறு நின்று கொண்டான்.

 

“அப்பாவுக்கு ஆபரேஷன் எப்பன்னு இன்னும் சொல்லலை. அதை போயி கேட்காம, என்கிட்ட என்ன பிரச்சனைன்னு கேக்கறீங்க. போயி அந்த டாக்டரை கேளுங்க. இல்லை உங்க மாமனார்… ம்ப்ச்… உங்க மாமா கண் விழிச்சா அவர்கிட்ட கேளுங்க… அதை விட்டுட்டு என்கிட்ட ஏன்னு கேட்டுட்டு இருக்கீங்க” என்று அவனுடைய கையை தட்டி விட்டாள்.

 

அவளது ‘மாமனார்’, ‘மாமா’ என்ற பேச்சு தடுமாற்றத்தில் மூழ்கி இருந்தவன் கையை கவனிக்கவில்லை. மேகா கையை தட்டி விட்டதும், அது அவளது கழுத்தை உராய்ந்து அங்கேயே நின்றது.

 

மேகாவுக்கு உடல் சிலிர்க்க, மூச்சுக்காற்று தேங்கியது.

 

மேகா தன்னிலை மறந்து, விழிகளை அகல விரித்து, ஆசுவாசமின்றி இருக்க, வேந்தனின் கவனம் இப்பொழுது அவளது கழுத்தில் நிரடிய பொருளில் பதிந்தது. அந்த சங்கிலி… அவள் அணிந்திருக்கும் சங்கிலி… அது… அது… அவனுடையது. அவனே பிரத்தியேகமாக வரைந்து தந்து, செய்யச்சொன்ன சங்கிலி. அவன் தொலைத்துவிட்டுக் கிடைக்காமல் தேடிச் சலித்த சங்கிலி.

 

‘அந்த சங்கிலி எப்படி மேகாவின் கழுத்தில்…?’

 

வேந்தனுக்கு எதுவோ புதிர் விடுபடுவது போல இருந்தது. விடுபட்ட புதிர் அவன் மனதிற்கு இதத்தையும், ஆசுவாசத்தையும், புத்துணர்வையும் தந்தது. மூன்று ஆண்டுகள் வாழ்ந்த தவிப்பான வாழ்க்கைக்கு ஒரு முடிவு வந்துவிட்டது என்று புரிந்தது. இனி நாடோடி போல எங்கோ திரிய வேண்டிய அவசியமில்லை என ஆசுவாசமாக நினைத்துக் கொண்டான்.

 

மெல்ல அவளிடம் இருந்து நகர்ந்து நின்றவன், “அவங்க சொன்னா… கல்யாணம் நடந்துடுமா? நான் இருக்கேன் இல்லை… இனி பயப்படவோ, அழவோ கூடாது. புரியுதா? வா உள்ளே போலாம்…” என்று மிரட்டலில் தொடங்கி, ஆறுதலாக முடித்து அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

 

‘என்ன எதையோ பேசினான். எதையோ சொல்லறான். நல்லா உளறி வெச்சுட்டோமோ’ என உள்ளுக்குள் குழம்பினாலும், இந்த விஷயம் தொடர்பான அவனது தலையிடலில், மேகாவின் மனம் ஆசுவாசமானது. அவன் பார்த்துக் கொள்வான் என்னும் நம்பிக்கையில், அவளது மனம் சமன் பட்டது. நிம்மதியுடன் அவனைப் பின்தொடர்ந்தாள்.

Advertisement