Advertisement

காதல் பூக்கும் தருணம் – 4

காலம் தாழ்த்தி உறங்கிய பொழுதும், அதிகம் தாமதம் செய்யாமல் ஏழு மணி என்னும் அளவில் மகிழ்வேந்தன் விழித்திருந்தான். சில வருடங்கள் கழித்து இங்கு வருகிறான் என்ற பொழுதிலும், அவனுக்கு இந்த வீடு சிறு வயதிலிருந்தே நல்ல பழக்கம் என்பதால் அந்நியத்தன்மையை அவன் உணரவில்லை.

வழக்கப்படி எழுந்தான், குளித்தான், மாடியிலிருந்து கீழிறங்கி வந்திருந்தான். மேகமித்ராவின் அன்னை விஜயா அவனைப் பார்த்ததும் வியப்பை வெளிப்படுத்தினார்.

“வா… வா… வேந்தா… எப்பப்பா வந்த?” என்று வாஞ்சையாக அழைத்தாலும், அவரிடம் ஒரு உயிரோட்டம் இல்லை எனப் புரிய அவனது மனம் கனத்தது.

“எப்படி இருக்கீங்க அத்தை?” என்று மெல்லிய புன்னகையுடன் நலம் விசாரித்தான் வேந்தன்.

அதை ஏற்கும் நிலையில் விஜயா இல்லை. அவரின் எண்ணம் முழுவதும் இங்கு இல்லை என அவனுக்குப் புரிந்தது. இதே மற்ற நேரம் என்றால், இத்தனை வருடங்களும் இங்கு வராமல் இருந்ததற்கு எத்தனை வசைமொழிகளை உதிர்த்திருக்கக் கூடும். ஆரம்பத்தில் வராமல் தவிர்த்த நாட்களில் விஜயா எத்தனை தூரம் கோபித்துக் கொண்டார் என்று வேந்தனின் மனதில் இன்னும் நினைவிருக்கிறது. இப்பொழுது அதைப்பற்றிய எந்த எண்ணங்களும் இல்லாதவரைப் போன்று தான் காட்சியளித்தார்.

அதை மெய்ப்பிக்கும் பொருட்டு, அவனது கேள்விக்குப் பதில் தராமல், “மாமாவை பார்த்தியா ப்பா? எப்படி இருக்காங்க? எப்போ ஆப்ரேஷன் செய்வாங்களாம்?” என வேந்தனிடம் கேட்டார். கண்களில் கலக்கம் தெரிந்தது. பாலாஜி இது குறித்து வீட்டுப் பெண்களிடம் வாயே திறப்பதில்லையே!

“அத்தை எதுக்கு பயப்படறீங்க? மாமாவுக்கு எதுவும் ஆகாது அத்தை” என அவரை ஆறுதல் படுத்த முயன்றான்.

கசந்த முறுவலை உதிர்த்தவர், ஏதோ எண்ணம் தோன்ற, “அச்சோ… உன்னை நிக்க வெச்சே பேசறேன் பாரு. வா வந்து உக்காரு. சாப்பிடுவியாம்” என அவனை உபசரித்தார்.

“நீங்க சாப்டீங்களா அத்தை?” அவரது சோர்ந்த தோற்றத்தைப் பார்வையிட்டபடி கேட்டான்.

விஜயா பதில் கூறும் முன்பு, “விஜயா… யாரு இந்த பையன்? வந்ததுல இருந்து அத்தை, அத்தைன்னு ரொம்பத்தான் உருகறான்” என கேட்டபடி வள்ளி அவர்களின் அருகே வந்தார். அவரது பார்வை வேந்தனை எடைபோட்டது, முகம் ஒருவித பிடித்தமின்மையை பிரதிபலித்தது. வள்ளிக்கு அவனைப் பார்த்ததுமே அடையாளம் தெரிந்து விட்டது. இருந்தும் வேண்டுமென்றே தெரியாததைப் போலக் கேட்டு வைத்தார். மனதிற்குள், ‘இவன் இப்ப வரலைன்னு யாரு அழுதாங்க…’ எனக் கடுகடுத்துக் கொண்டிருந்தார்.

வேந்தன் அவரது முக பாவனைகளைக் கவனித்து விட்டான். இருந்தும் அதற்கு எதிர்வினையாக, தன்னுடைய முகத்தில் எந்தவித பாவனையையும் அவன் பிரதிபலிக்கவில்லை. அதோடு அவர் யாரென்று புரியாததால், தன் நினைவடுக்குகளில் தேடிக் கொண்டிருந்தான். இந்த வீட்டிற்கான போக்குவரத்து நின்று சில வருடங்கள் ஆகி விட்டதே! முன்பே இவரை இங்குச் சிலமுறை பார்த்த ஞாபகம் இருந்தது, ஆனால் யாரென்று சட்டென்று பிடிபடவில்லை.

அப்பொழுது விஜயா, “நம்ம பாலாஜி அண்ணன் பையன் தான் அண்ணி. கனடால தொழிலை பார்த்துட்டு இருந்தானே?” என வள்ளிக்குப் பதில் கூறினார்.

“ஓ நீயாப்பா? சட்டுன்னு அடையாளம் தெரியலை. நல்லா இருக்கியா? எப்ப வந்த?” என்று முயன்று வருவித்த இலகு குரலில் வள்ளி கேட்க, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் அவரது போலித்தன்மையை கண்டுகொண்டவன், அதை வெளியில் காட்டாது அவருக்கு தக்க பதிலை தந்து, அவரது நலம் விசாரித்தான்.

“நல்லா இருக்கேன் பா. சரி சாப்பிடு” என சொல்லிவிட்டு நகர்ந்து விட்ட வள்ளியை வேந்தன் புருவச்சுழிப்போடு பார்த்தான்.

வேந்தனின் யோசனையான தோற்றத்தைப் பார்த்து, “மாமாவோட சொந்தம். அக்கா முறை ஆகுது. பேரு வள்ளி. செந்தில் வருவானே, அவங்க அம்மா. உனக்கு நியாபகம் இல்லை” என அவனுக்கு மட்டும் கேட்குமாறு விளக்கம் தந்தார்.

“ஓ…” என்றதோடு முடித்துக் கொண்டான். அவனுக்கு இப்பொழுது அவர் யாரென்ற நினைவு வந்துவிட்டது.

“நீ எப்பப்பா கனடா ல இருந்து வந்த?” என்று விஜயா வேந்தனிடம் கேட்க, நேற்று இரவு நடந்ததைக் கூறினான்.

கூடவே, அவரிடமும் பேசி மாமாவுக்கு ஏன் இப்படி ஆனது? என்ன, ஏதென்ற விவரங்களையும் பெற்றான். வள்ளி வந்த அன்று தான் இந்த பிரச்சனை தொடங்கியது எனப் புரிய மீண்டும் யோசனையானான்.

அவன் கேட்ட விவரங்களைப் பகிர்ந்த விஜயா, அவனுக்கு உணவு பரிமாறியபடியே தனது வேதனைகளைப் பகிரத் தொடங்கினார்.

“ஏற்கனவே நம்ம குட்டிம்மா அன்னைக்கு மாமாவுக்கு நடந்த ஆக்சிடென்டுக்கப்பறம், ரொம்ப கவலையா தான் இருக்கா. எதுக்கெடுத்தாலும் ஒதுக்கம். ஏதோ ஒரு யோசனை. எப்ப பார்த்தாலும், தன்னையே தனிமை படுத்திக்கிறா. இப்போ உங்க மாமாவுக்கு இப்படின்னதும் ரொம்ப ஒடிஞ்சு போயிட்டா. எப்பவும் நானும், அவளும் தான் அங்க ஹாஸ்ப்பிட்டல்ல நைட் தங்கி இருப்போம். நேத்து அண்ணன் அவரே இருந்துக்கறேன்னு சொன்னதுக்கப்பறம், ஹாஸ்பிட்டல்லயே தான் இருப்பேன்னு ஒரே அடம். எப்படி உன்கூட நேத்து நைட் கிளம்பி வந்தான்னே தெரியலை” என பெருமூச்சோடு கூற, வேந்தனின் நினைவுகள் எங்கெங்கோ பயணித்தது.

“ஏன் அத்தை, அப்போ கவலையா சுத்துனா?” தனக்குத் தேவையான தகவலை வாங்கிக் கொள்ளும் வேகம் அவனிடம்.

“தெரியலைப்பா. மாமா ஆக்சிடென்டுல அடிபட்டு இருந்தப்ப, இவ தனியா எதையாவது யோசிச்சுட்டே இருந்திருப்பா போல. அண்ணன் தான் கவனிச்சு சொன்னாரு. நான் உங்க மாமா கவலையிலேயே இருந்ததால, அவளைக் கவனிக்க முடியலை. அதுக்கப்பறம், நான் அவளை கவனிச்சு விசாரிச்சாலும் பேசவே மாட்டேன்னுட்டா. அவகிட்ட பழைய துருதுருப்பு சுத்தமா இல்லை. மாமாவும் ஓரளவு மீண்டு வந்தாலும் உடல் அளவுல ரொம்ப பலவீனமாகிட்டாரு. நானும், மாமாவும் அவளை எவ்வளவோ தேத்த முயற்சி எடுத்துக்கிட்டோம். அவ என்னவோ மாறவே இல்லை” என்றார் பெருமூச்சுடன்.

மகிழ்வேந்தனுக்கு அவன் மறக்க நினைக்கும் நிகழ்வுகள் எல்லாம் மனதிற்குள் சுனாமியாய் மேலெழுந்து இம்சித்தது. மூன்று வருடங்கள் கடந்து விட்ட பொழுதிலும், போகட்டும் போ என அவனால் விட்டுவிட முடியவில்லை. அதோடு அந்த நிகழ்வின் தாக்கம் மேகமித்ராவிடம் எப்படி இருக்கிறது என்றும் தெரிந்து கொள்ள வேண்டும் என அவனுடைய மனம் சிறுபிள்ளை போல அடம் பிடித்தது. ஆனால், எங்கே, அன்று கோபம் கொண்டவள், இன்று வரையிலும் கோபத்தைக் குறைக்கும் வழியைக் காணோமே!

அவளுடைய ‘தடிமாடு’ என்ற அழைப்பு எங்கே? கூடக் கூட வாயடித்துச் சண்டையிடும் குணம் எங்கே? முறைத்துப் பார்க்கும் பார்வைகள் எங்கே? எதுவுமே இல்லாமல் மழையில் நனைந்த கோழி போல ஒதுங்கி, ஒடுங்கி இருப்பவளைப் பார்க்கையில் கோபம் தான் வருகிறது. எதுவும் செய்ய முடியாத இயலாமை வேறு! அவள் கோபத்தைத் தீர்த்த பிறகே மற்றதையெல்லாம் முயற்சிக்க இயலும் எனத் தோன்றப் பெருமூச்சு எழுந்தது.

விஜயா அவனது சிந்தனைகளை கவனியாமல் உணவை முடித்திருந்தவனிடம், “அண்ணன் என்கிட்ட எதுவுமே சொல்லறதில்லை வேந்தா. நீயாச்சும் சொல்லேன். அவருக்கு ஏன் இன்னும் ஆப்ரேஷன் பண்ணாம இழுத்தடிக்கிறாங்க” என்று பரிதாபமாகக் கேட்க, அவனுக்கே மனம் உருகியது.

“அத்தை… மாமாவுக்கு எதுவும் ஆகாது” என மீண்டுமொருமுறை ஆறுதலாகக் கூறினான். அவனுக்கும் வேறு வழி இருக்கவில்லை. தந்தை நேற்று இரவு புலம்பியது, இன்று காலையில் எழுந்ததும், அவரிடம் கைப்பேசியில் உரையாடித் தெரிந்து கொண்டது என எதுவுமே உவப்பானதாக இருக்கவில்லை.

மேகமித்ரா தாமதமாக விழித்து விட்ட குற்றவுணர்வோடு, வேக வேகமாகக் கீழிறங்கி வந்தாள். “குட்டிம்மா வா வந்து சாப்பிடு” என விஜயா அவளை அழைத்து அமர வைக்க, அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை வேந்தன் எதுவும் பேசவில்லை.

உணவு உண்டு முடித்ததும், “எதுக்கு அத்தை ராத்திரி இவ மட்டும் தனியா ஹாஸ்பிட்டல்ல இருந்தா?” என மெதுவாக என்றாலும் அதட்டலாக வெளி வந்தது அவனது வார்த்தைகள்.

“சொன்னா எங்க கேக்கிறா வேந்தா…” என விஜயா பதில் கூற, இருவரின் பேச்சுவார்த்தைகளையும் கண்டுகொள்ளாமல், “அம்மா கிளம்புவமா?” எனக் கேட்டாள் மேகா.

“உன்னைத்தான் கேட்டேன் மேகா” வேந்தன் இம்முறை நேரடியாகவே கேட்க, அவள் எந்தவித பாவனையும் காட்டாமல் அமர்ந்து கொண்டாள்.

‘நேத்து ராத்திரி நான் கத்தவும் யாரும் எழுந்திட போறாங்கன்னு பேசி இருப்பா போல! பிராடு! மறுபடியும் அவ வேலையை காட்டறா’ எனக் கடுப்பாக நினைத்தான் வேந்தன். இருவரையும் விஜயா வேடிக்கைப் பார்த்தாரே தவிரப் பஞ்சாயத்திற்கு வரவில்லை. மேகாவின் பதில் இல்லா மௌனத்தில் வேந்தன் கோபமானான்.

அதன்பிறகு மூவரும் மருத்துவமனைக்குக் கிளம்ப, வள்ளியும் அவர்களோடு இணைந்து கொண்டார்.

“அண்ணி நீங்களும் வரீங்களா?” என விஜயா கேட்க,

“பின்ன தம்பி உடம்பு முடியாம படுத்து இருக்கான். அப்பப்ப பார்த்துக்கணும் இல்லை. நீயும், உன் பொண்ணும் ஒரு விவரமும் சொல்ல மாட்டீங்கறீங்க. என் தம்பி முழிச்சா கல்யாண விஷயமா வேற கேக்கணும்” எனக் கூறினார்.

அவரது இறுதி வார்த்தையில் விஜயாவிற்கே மனம் கசந்தது என்றால், மேகா முகத்தை சுளித்தாள். இவர்கள் பேசிக்கொள்வதை வேந்தன் மௌனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். வள்ளி பேசியதிலிருந்து அவனுக்குத் தேவையான விஷயங்கள் அவனுக்குச் சரியாகவே விளங்கியது. அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டவனின் மனம் சித்திரை மாதத்து ஆதவனைப் போலத் தகித்தது.

அனைவரும் மருத்துவமனைக்குச் செல்ல, பாலாஜி ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார். பொதுவாக பகலில் அவரும், இரவில் விஜயாவும் சுந்தரேசனுடன் இருப்பது வழக்கம். மருத்துவர்கள் நேற்று சுந்தரேசனின் நிலையைச் சொன்ன பிறகு, விஜயாவை ஏதேதோ பேசி வீட்டிற்கு அனுப்பி விட்டார். அதில் சந்தேகம் வந்த மேகா தான், மருத்துவமனையை விட்டு நகரவில்லை.

நேற்று முழுவதும் மருத்துவமனையிலேயே இருந்ததால், சோர்ந்திருந்த பாலாஜியைப் பார்த்து, “அப்பா நீங்க கிளம்புங்க. இங்க நான் பார்த்துக்கறேன். எதுவும் வேணும்ன்னா கூப்பிடறேன்” என வேந்தன் கூற, விஜயாவும் அதையே ஆமோதித்தார்.

“இல்லைப்பா… இங்கேயே இருக்கேன். நைட் நீங்க கிளம்பினதும் தூங்கி எழுந்தேன்” என்றவரை, “அதெல்லாம் வேலைக்கே ஆகாது. நீங்க கிளம்புங்க” என வலுக்கட்டாயமாய் அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்ட பிறகே, அவன் மற்ற வேலைகளைப் பார்த்தான்.

“மாமா ஐ.சி.யூ ல எத்தனை நாளா இருக்காரு அத்தை?”

“வந்ததுல இருந்தே இங்க தான் பா. ஆப்ரேஷன் செய்யணும்ன்னு சொன்னாங்க. அதுக்கு அவங்க உடம்பு தேறணும். ட்ரீட்மெண்ட் தறோம்ன்னு சொன்னாங்க. ஆனா, இன்னும் ஆப்ரேஷன் எப்பன்னு சொல்ல மாட்டீறாங்கப்பா” என விஜயா வேதனையாகக் கூற,

வள்ளியோ மருத்துவமனை என்றும் பாராது, “என் தம்பிக்கு மனசு உறுத்தி இருக்கும் போல. அதான் மகளுக்கு ஒரு கல்யாணம் செஞ்சு வெக்கணும்ன்னு விருப்பப்பட்டு அன்னைக்கு என்கிட்ட பேசிட்டு இருந்தான். ஆனா எங்க அவனோட கடைசி ஆசை நிறைவேறாமையே போய் சேர்ந்திடுவான் போல. இப்பவும் என் மகன் செந்திலை வர சொன்னா உடனே வந்துடுவான். கையோட கல்யாணத்தை செஞ்சுட்டா என் தம்பி நிம்மதியா கண்ணை மூடுவான்” என எங்கு என்ன பேச வேண்டும் என்கிற வரைமுறையின்றி பேச, மேகா கண்ணீரை அடக்கும் வழி தெரியாமல் அங்கிருந்து அகன்றிருந்தாள்.

ஏற்கனவே அந்த அம்மா பேசிய பேச்சில் கோபம் வரப்பெற்றவன், மேகாவின் கண்ணீரையும் பார்த்த பிறகு உச்சக்கட்ட கோபத்திற்குச் சென்று விட்டான். அவரை வார்த்தையாலேயே வதைக்கும் எண்ணத்தோடு அவன் சிலிர்த்தெழ, சட்டென இடை புகுந்தார் விஜயா.

“என்ன அண்ணி அவர் இந்த நிலைமையில இருக்கும்போது இப்படி அபசகுனமா பேசறீங்க” என வாயை ஒரு கையால் மூடிக்கொண்டு விசும்பினார் விஜயா.

“நான் தம்பிக்கு நிம்மதியா இருக்கும்ன்னு தான் சொன்னேன் விஜயா. நீ எதுக்கு அழற” என வள்ளி கூறினார்.

“உடம்பு சரி இல்லாம படுத்து இருக்கவங்களை பிழைச்சு வரணும்ன்னு தான் எல்லாரும் சொல்லுவாங்க. இப்படி யாரும் போய் சேர்ந்திடுவான்னு சொல்ல மாட்டாங்க” என வேந்தன் எரிச்சலாக மொழிய வள்ளி சினம் கொண்டார்.

‘இவனெல்லாம் பேசுவதா?’ என்னும் சினம் எழுந்தது. ஆனால், ஏற்கனவே திருமணத்தைப் பேசி நடத்தி விடலாம் என நினைத்துப் பேசப்போய் இந்த விஜயா அழுகிறாள். அந்த பெண் வேறு முதலில் இருந்தே இந்த கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தம்பி பிழைப்பதிலும் உறுதி இல்லை. இப்பொழுது போய் இவர்களிடம் வம்பு சண்டை போட்டு நம் பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்து அமைதி காத்தார்.

ஆனால், வேந்தனின் ஆத்திரம் குறையவில்லை. அதற்குள் மருத்துவர் அழைத்திருக்க விஜயா உடன் வருகிறேன் என்று சொன்னபோதும் மறுத்துவிட்டு அவன் மட்டும் தனியாக சென்றான்.

“நீங்க எப்போ வந்தீங்க?” என மருத்துவர் வேந்தனை நீண்ட நாட்கள் கழித்துப் பார்ப்பதால் கேட்க,

“நான் நேத்து வந்தேன் டாக்டர். அப்பா காலையில தான் வீட்டுக்கு போனாரு. அதான் நான் வந்தேன்…” எனச் சிறிய அறிமுகத்தோடு பேச்சைத் தொடங்கினான்.

“ஓ, ஓகே” என்றவர், “மிஸ்டர் மகிழ், நான் ஏற்கனவே உங்க அப்பாகிட்ட சொன்னது தான் பேஷண்ட் உடம்புல சர்ஜரி தாங்கற அளவு வலு இல்லை. அப்பவும் வேறு எதுவும் முயற்சிக்க முடியுமா பார்த்தோம். இம்ப்ரூவ்மெண்ட்டே இல்லை. நேத்து மதியத்துல இருந்து அவர் நிலைமை இன்னும் மோசமாகிட்டே இருக்கு. அவரோட முழு ஒத்துழைப்பும் இல்லாட்டி நாங்க எதுவுமே செய்ய முடியாது. வீ ஆர் ரியலி சாரி” என்று கையை விரித்தார்.

“புரியுது டாக்டர். நான் மாமாகிட்ட பேசணும். அவரு விழிச்சிருக்கும் போது அலவ் பண்ணுங்க… வேற யாரையும் விட வேணாம்” என அர்த்தத்துடன் மகிழ் கூற, மருத்துவரும் ஆமோதித்தார்

“எப்ப கான்ஷியஸ் வரும்?”

“இன்னும் த்ரீ ஹவர்ஸ் ஆகலாம்…”

“சரி அவரு எழுந்தா யாரையும் விட வேணாம் என்னைத் தவிர…” என மீண்டும் ஒருமுறை சொல்லிவிட்டு வெளியே வந்தான்.

அவனுக்குச் சந்தேகம், இந்த வள்ளி இன்று வந்திருப்பது எதையும் குழப்பி வைப்பதற்கோ என்று!

தானும் கடந்த மூன்று வருடங்களாகச் சுந்தரேசனிடம் இருந்து முற்றிலும் விலகி நின்ற செய்கையை அறவே வெறுத்தான். மாமா தன்னை என்ன நினைத்திருப்பார்? என்று இப்பொழுது அவனுக்குக் கவலையாக இருந்தது.

மேகா ஒருத்தியின் கோபத்தால், நிராகரிப்பால் அவன் அவர்களின் ஒட்டுமொத்த குடும்பத்திடம் இருந்தே விலகி இருக்க வேண்டியதாய் போய்விட்டதே என்று நினைக்க நினைக்க அவள்மீது ஆத்திரமாகக் கூட வந்தது.

ஆனால், அவன் திரும்பி வந்த பொழுது அவளது அத்தை பேசிய பேச்சில் அழுதழுது சோர்ந்து, வாடிப்போய் நின்றிருந்த மேகாவைப் பார்க்கையில் அவனது மொத்த கோபமும் மழையைப் பொழிந்துவிட்ட மேகம் போல வடிந்து போனது.

Advertisement