Advertisement

காதல் பூக்கும் தருணம் – 19

வள்ளியின் குறுக்கீடு சுந்தரேசன் குடும்பத்தில் அறவே குறைந்திருந்தது. அந்த அம்மாள் இப்பொழுது சூடு கண்ட பூனை! உள்ளதும் போய்விடுமோ என்னும் பயம் ஒருபுறம் என்றால், மகனிடம் இருக்கும் வித்தியாசமே அவரை வெகுவாக குன்றச் செய்தது. ‘இவனுக்கு எதுவும் தெரியுமோ? சுந்தரேசனுக்கு விஷயம் போயிருக்குமோ?’ என்று அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்னும் நிலையில் இருப்பவரா இனி வாலாட்டுவார்?

இங்கே சுந்தரேசனும் போதுமான அளவு ஓய்வும், நல்ல சிகிச்சையும், மன அமைதியும் கிட்டியதில் விரைவில் தேறினார். இப்பொழுதெல்லாம் வீட்டில் சோம்பி இருக்கப் பிடிக்காமல் தினமும் இரண்டு மணி நேரம் அலுவலகத்திற்கும் சென்று வருகிறார். மற்றவர்கள் தடுத்துப் பார்த்தார்கள் தான்! ஆனால், மனிதர் சோம்பியிருக்க முடியவில்லை என்று ஸ்திரமாக மறுத்துப் பேசி சாதித்து விட்டார்.

மாமா ஓரளவு தேறியதும், வேந்தன் உண்மை விவரங்களை அவரிடம் சொல்லி விட்டான். அவர் யோசிக்காமல் செய்த செயல் எங்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்று அவருக்கும் தெரிய வேண்டுமே! அதோடு சுதாரிப்பும் அவசியமாயிற்றே! அவர் இப்பொழுது உடலாலும், மனதாலும் நன்கு தேறிவிட்டார் என்று உறுதியான பிறகே சொல்லலாம் என்று முடிவெடுத்தான்.

“நீங்க உதவி செய்தது தப்பே இல்லை மாமா. ‘பாத்திரம் அறிஞ்சு பிச்சை போடணும்’ன்னு பெரியவங்க சொல்லுவாங்களே, அது மாதிரி நீங்களும் நடந்திருக்கணும். உங்க அக்கா குடும்பம் ஒடிஞ்சு, ஓஞ்சு இருக்கப்ப உதவி செய்தீங்க சரி. ஆனா, அதே உதவி காலத்துக்கும் தொடர்ந்தா எப்படி? எப்ப அவங்க, அவங்க கணவரோட இழப்புல இருந்து மீண்டாங்களோ அப்பவே அவங்களோட கடமையை நீங்க உணர்த்தியிருக்க வேண்டாமா? ‘நீங்களே உங்க நிலபுலனை மேற்பார்வை பாருங்கக்கா’ ன்னு நீங்க அப்பவே அழுத்தமா சொல்லியிருந்தா இத்தனை தூரம் ஏன் வரப் போகுது?

அவங்க இயற்கையாவே சோம்பேறியா இருந்திருக்கலாம். ஆனா, அந்த சோம்பேறித்தனத்தை வளர்த்து விட்டது நீங்க மட்டும் தான்! இலகுவா பணம் வரவும் பணத்தோட அருமை தெரியலை! தாம் தூம்ன்னு செலவு செய்து அந்த பணம் ஒரு கட்டத்துக்கு மேல பத்தலை. அதான் அவங்க எண்ணம் இப்படி எல்லாம் போயிருக்கு. இதோட பாதிப்பு நமக்குத்தானே? உதவி செய்த வீட்டுக்கே துரோகம் செய்திருக்காங்க. எல்லாம் நீங்க தந்த இடம்” என்றான் வேந்தன்.

அக்கா தான் இதெல்லாம் செய்தது என்றது சுந்தரேசனுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. இப்படியும் மனிதர்களா? அதுவும் கஷ்டத்தில் தோள் கொடுத்ததுக்குச் செய்யும் கைமாறா இது? என்று ஆத்திரம் ஒருபுறம் எழுந்தாலும், வேந்தன் சொன்னது போல, இது தானாய் இழுத்து விட்ட வம்பு என்று புரிய அது வருத்தத்தையும் தந்தது.

மாமாவின் முகம் வாடுவதைக் கண்டவன், “மாமா… சாரி உங்களுக்கும் புரியணும்ன்னு தான்…” என்று சங்கடத்துடன் இளையவன் கூறினான்.

“எனக்கு புரியுது வேந்தா. இதுல அதிக தப்பு என்னோடது தான்! இனி நான் கவனமா இருந்துப்பேன். இது வாழ்க்கையில ஒரு பாடம்!” என்றார் உணர்ந்து. அவனுக்கு, அவர் உரிய விதமாய் ஏற்றுக் கொண்டதே போதுமானதாக இருந்தது.

நாட்கள் கடந்திருக்க, வேந்தன் திட்டமிட்டிருந்த காதலர் தினமும் வந்திருந்தது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் முன்பு, ஒரு பெண்ணின் சுயநலத்தால், சூழ்ச்சியால் தனக்குள் நத்தையாய் சுருண்டு கொண்ட தன்னவளை, இன்று மீட்டெடுக்க வேண்டும் என்னும் எண்ணம் வேந்தனுக்குள்! எந்தளவு சாத்தியப்படுமோ என்னும் அச்சம் வேறு!

காலையில் நேரமாகவே மாமா வீட்டிற்குச் சென்று விட்டான். விஜயா அவனை அத்தனை சீக்கிரத்தில் எதிர்பார்க்கவில்லை போலும்! “என்ன வேந்தா இவ்வளவு சீக்கிரம்?” என்றார் விஜயா ஆச்சரியமாக.

“இன்னைக்கு எனக்கு நிறைய நேரம் வேணும் அத்தை” என்று சொல்லியவனைக் கேலியாகப் பார்த்துச் சிரிக்க, ‘அச்சோ! இந்த அத்தை தப்பு தப்பா யூகிக்கறாங்களே! அப்படி எல்லாம் இல்லை அத்தை’ என்று உள்ளூர நொந்தான்.

“சரி சாப்பிடு” என டைனிங் டேபிள் நோக்கி விஜயா செல்ல, “அத்தை மேகா சாப்பிட்டாளா?” என்றான் மாடியை நோட்டம் விட்டபடி. அவன் கேள்வியில் கேலி செய்யும் எண்ணம் எழுந்தாலும் பெற்றவளாய் மனம் நிறைந்தது. “இன்னும் இல்லைப்பா” என்றாள் பெரியவள்.

“நான் போயி கிளப்பிக் கூப்பிட்டு வரேன் அத்தை” என்று மாடிகளில் ஏறியவன், அவளது அறைக்கதவைத் தட்டியபடி காத்திருக்கலானான்.

மேகா அந்த நேரத்தில் அவனையா எதிர்பார்த்திருப்பாள்? அம்மா வந்திருப்பார் என்று நினைத்து கதவினை திறக்க மயக்கும் புன்னகையுடன் வேந்தன் நின்றிருந்தான். அவள் விழி விரித்துப் பார்க்க, இப்பொழுது வேந்தனுக்கு அவளின் அறைக்குள் செல்ல கொஞ்சம் தயக்கம் எட்டிப் பார்த்தது. திருமண பேச்சு தொடங்கிவிட்டதால் எழுந்த இயல்பான கூச்சம்.

பின்னந்தலையை அழுந்த கோதியவன் வாயிலில் நின்றபடியே, “கொஞ்சம் வெளியே போகணும் மேகா. கிளம்ப முடியுமா?” என்று கேட்டு அவள் முகம் பார்த்து நின்றான்.

முகபாவனை மேகாவிடம் சற்று கெஞ்சிற்று! அதை நம்ப மாட்டாதவளாய் மீண்டும் விழி விரிக்க, ‘எதுக்கு எல்லா விஷயத்துக்கும் இப்படி அதிர்ச்சி ஆகறா?’ என்று வேந்தன் குழம்பினான்.

இப்படி வழியில் நிற்பதற்கு உள்ளே சென்று பேசுவதே மேல் என்று தோன்ற, மெலிதாக செருமியவன் ஆட்காட்டி விரலைத் தன்னை நோக்கியும், அறையினுள்ளும் ஆட்டியவாறு “உள்ளே போவோமா?” என்று கேட்டான்.

அவளுக்கு இத்தனை நேரமும் அவனை வெளியில் நிற்க வைத்தே பேசி இருக்கோமே என்று சங்கடமாகி விட, வேகமாக வழி விட்டாள்.

உள்ளே நுழைந்தவன், “கிளம்பறியா மேகா” என்று கேட்டபடி அவள் கட்டிலில் அமர, “நாளைக்குப் போவோமா?” என்றாள் அவன் முகம் காண முடியா தயக்கத்துடன்.

“இல்லை இன்னைக்குக் கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு. நீ கொஞ்சம் கன்சிடர் பண்ணேன்”

சிறுப்பிள்ளையென தன் முகம் பார்த்து நிற்பவனிடம் அதற்கு மேலும் அவளால் மறுக்க முடியவில்லை. “சரி போலாம்” என்று சொன்னவள், எங்கென்று கூட கேட்கவில்லை. அவளது அசைக்க முடியாத நம்பிக்கையில் அவன் அகமகிழ்ந்தான்.

அவனை வெளியே போகும்படி எப்படிச் சொல்வது என்று தயங்கியபடியே, ஆடையை எடுக்க அலமாரியைத் திறந்தாள். பின்னோடே வந்தவன், “இந்த லைம் எல்லோவ் போடேன். உனக்கு நல்லா இருக்கும்” என்று சொல்லியபடி ஒரு ஆடையை எடுத்து நீட்ட, அவளது விழிகள் அகல விரிந்து அவனையும், அலமாரியையும் மாற்றி மாற்றி பதற்றத்துடன் பார்த்தது. அவள் பார்வையில் பதற்றத்தோடு, அச்சத்தையும் கண்டவன் குழம்பினான்.

அதன்பிறகு சிறிது நேரத்தில் இருவரும் கிளம்பியிருந்தார்கள். வழியில் இருக்கும் கோயிலில் வண்டியை நிறுத்தியவன், அவளோடு சென்று கடவுளை வணங்கி வர, அவனது செய்கைகள் அவளுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. மனமும் சற்று இதமாய் உணர, அடுத்து யாரோ ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

“என் ஸ்கூல் பிரண்ட் சம்பத்தோட வீடு. அவனோட அக்காவுக்குக் குழந்தை பிறந்திருக்காம். பார்த்துட்டு போவோம்” என்று உள்ளே அழைத்துச் சென்றான். நண்பனின் மனைவி அபிராமியையும் அறிமுகம் செய்து வைக்க, அந்தப்பெண் பளீர் புன்னகையுடன் மேகாவிடம் பேசத் தொடங்கினாள். அந்த புன்னகை முகம் அவளைக் கவர்ந்தது.

“அக்காவும், குழந்தையும் தூங்கிட்டு இருக்காங்க டா” என்று சம்பத் கூற, “அதுனால என்னடா வெய்ட் பண்ணறோம். இப்ப டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அவர்கள் குடிக்கத் தந்த பானத்தைப் பருகினான் வேந்தன்.

பேச்சினூடே, “என்ன அண்ணா இவ்வளவு அழகா இருக்காங்க” என்றாள் அபிராமி கேலியாக. “பின்ன எனக்குப் பொருத்தமா இருக்க வேண்டாமா?” என்றான் வேந்தனும் பதிலுக்கு அதே கேலி குரலில்!

அபிராமி அப்பொழுதும் விடாமல், “அதுனால தான் கேட்கிறேன்’ண்ணா. இவங்க ரொம்ப அழகா இருக்காங்களே!” என்று காலை வாரி விட்டுச் சிரித்தாள்.

மேகாவிற்கு சிரிப்பு வரும்போல இருக்க, லேசாக உதடு விரிந்ததைத் தவிர அவளிடம் வேறெந்த வேறுபாடும் இல்லை. வேந்தன் அவளை, அவள் எல்லைமீறா புன்னகையைக் கடைக்கண்ணால் பார்வையிட்டபடியே, அவளைச் சீண்டும் விதமாக, “அச்சோ நம்பாதீங்க சரியான அழுமூஞ்சி” என்றான்.

மெல்ல மலர்ந்த புன்னகையும் மறைந்து விட்டது. அபிராமி அதைக் கவனித்தபடியே, “ஆஹான் அழ வைக்கிறீங்கன்னு சொல்லுங்க. அதை ஒத்துக்க மாட்டீங்களே! நீங்க வாங்க மேகா நம்ம உள்ளே போயி பேசுவோம். இவங்க பாய்ஸ் டாக் பேச நம்மளை விரட்டப் பார்க்கிறாங்க” என்று சின்னவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.

அபிராமி மனநல மருத்துவர். வேந்தன், மேகாவைப் பற்றிய விவரங்களையும், அவளுடைய தற்போதைய மனநிலை மாற்றங்களையும் சொல்லி, ஆலோசனை கேட்க, தன்னிடம் அழைத்து வரும்படி பரிசீலித்திருந்தாள். மருத்துவமனைக்கு அழைத்து வருவது சிரமம் என வேந்தன் சொல்ல, வீட்டிலும் ஒரு கிளினிக் இருப்பது குறித்து அபிராமி சொல்லி, வீட்டிற்கு அழைத்து வரும்படி சொல்லியிருந்தாள்.

இப்பொழுது வேண்டுமென்றே அவள் சுணங்கும்படியாக பேச்சை வளர்த்து மேகாவை தனியே அழைத்து வந்திருந்தாள். இதுவும் அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டதே!

வீட்டின் பின்புறத்தைச் சுற்றிக் காட்டியவள், “வாங்களேன் இங்கேயும் என்னோட குட்டி கிளீனிக் ஒன்னு இருக்கு உங்களுக்கு காட்டறேன்” என்று சொல்லியபடி வீட்டின் பின்புறத்தில் சாலைகளுக்கு அருகே இருந்த கிளீனிக்கிற்கு அழைத்துச் சென்றாள்.

“நீக்க டாக்டரா?” என்றாள் மேகா ஆச்சரியமாக! அழகாகப் புன்னகைத்தபடி, “ஏங்க பார்த்தா அப்படித் தெரியலையா?” என்றாள் அபிராமி.

“அச்சோ அப்படிச் சொல்லலை. ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி தெரியறீங்க” என்று சின்னவள் புன்னகைக்க, “சரி சரி உள்ள வாங்க! வந்து பார்த்துட்டே நம்புவீங்களாம்!” என்று உள்ளே அழைத்துச் சென்றவள், யாரும் தொந்தரவு செய்யாதிருக்கக் கதவையும் அடைத்திருந்தாள். கூடவே தான் வேலை செய்யும் மருத்துவமனையின் பெயரையும் சொல்ல, மேகாவுக்கு அது இன்னும் ஆச்சரியம்!

“சூப்பர்ங்க! ஆமா நீங்க என்னைவிடப் பெரிய பொண்ணு தான, என்னைப் பேர் சொல்லியே கூப்பிடலாமே!” மேகா தயக்கம் விலகி இயல்பாகப் பேசத் தொடங்க, “சரி மேகா அப்படியே செஞ்சுடுவோம். ஹேப்பியா?” என்று மீண்டும் சிரித்தாள் அபிராமி.

‘இவங்க முகம் வாடாத சிரிப்போட எவ்வளவு அழகா இருக்கு!’ என்று உள்ளூர ரசித்தபடியே, அங்கிருக்கும் பொருட்களை மேகா நோட்டம்விடத் தொடங்கினாள்.

கிளினிக் போலத் தோன்றாமல் மிகவும் அழகான, வண்ணமயமான வரவேற்பறை. அதைத்தாண்டி உள்ளே ஒரு அறை. அங்கும் மிக அழகாக இருந்தது. அவள் நோட்டம் விட்டுக் கொண்டிருக்க, “நான் ‘சைக்கார்ட்டிக் டாக்டர்’ மேகா. இங்க நீ தேடற மாதிரி இருக்காது” என்று மூத்தவள் சொன்னாள்.

“ஓ ரொம்ப அழகா இருக்கு!” என்றவளை உள்ளிருந்த அறைக்குள் அழைத்துச் சென்றாள். அது வரவேற்பறையை விட சற்று விசாலமாக இருந்தது.

“இன்னும் கூட நல்லா இருக்கும். உனக்கு பிடிச்ச கலர் சொல்லேன். இங்க என்ன செய்வேன்னு உனக்கு சொல்லறேன். எல்லாரையும் மனசு விட்டுப் பேச வைக்கிற மேஜிக் ரூம் இது” என்றாள் அமுதக்குரலில்.

“ஸ்கை ப்ளூ” என்று மேகா பதில் சொன்னதும், அபிராமி சில ஸ்விட்ச்களைத் தட்ட, நீல வண்ண விளக்குகள் கண்ணை உறுத்தாத வண்ணம் ஒளிர, அந்த இடம் நீல வண்ணத்தில் பேரழகாக ஜொலித்தது.

அந்த வண்ணமும், அந்த அறையின் தோற்றமும் அவளை வெகுவாக வசீகரித்தது. தன்னை மறந்து அந்த அனுபவத்தில் மூழ்க ஆசை கொண்டாள்.

“மேகா தப்பா எடுத்துக்காத, அண்ணா அழுமூஞ்சி சொன்னதும் ஏன் டல் ஆகிட்ட? உன்னை ஹர்ட் பண்ணிடுச்சா?” என்று மெல்ல விசாரித்தாள் மூத்தவள்.

“ம்ம் ஹ்ம்ம் அவங்க சொன்னதுலேயும் தப்பு இல்லையே! அம்மா, அப்பாக்கு கூட அந்த கவலை தான். என்னால தான் மாத்திக்க முடியலை” என்றாள் சின்னவள் வருத்தமான குரலில். உண்மையிலேயே உள்ளூர வருத்தமும் தான்! என்றோ நடந்தது இன்றும் அதிலிருந்து மீள முடியவில்லையே என்று!

கூட சேர்ந்து பேச்சை வளர்த்தபடியே அங்கிருந்த அகன்ற சோபாவில் மேகாவை அமர்த்தி தானும் அவளருகே ஆதரவாக அமர்ந்து, அவளது கரங்களை மென்மையாக வருடிக் கொண்டிருந்தாள் மூத்தவள்.

மெல்ல மெல்லப் பேசி அவள் மனதின் தயக்கங்கள், அச்சங்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வந்து அவளுக்கு ஆறுதலான வார்த்தைகளையும் கூற மேகா தன் மனதை முழுவதும் திறந்தாள். அபிராமி திறக்க வைத்தாள் என்பது இன்னும் பொருந்தும்.

இதுவரை மேகா இதுகுறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருந்ததாலேயே அவளுக்கு மனபாரம் அதிகமாக இருந்தது. இப்பொழுது பகிர ஓர் இடம் கிடைக்கவும் தயங்கித் தயங்கி என்றாலும் அனைத்தையும் சொன்னாள்.

அபிராமி அவளது கண்ணீரைத் துடைத்து அவளுக்கு ஆறுதலும், ஆலோசனைகளையும் வழங்க மேகாவிற்குப் பாரம் விலகிய உணர்வில் மனம் நிர்மலமானது.

பேச்சை வளர்த்தபடியே, “உனக்குத் தகுந்த சிகிச்சை இருந்தால் இந்த மன அழுத்தமும், உலைச்சலும் மறந்து நீயும் பழையபடி இருக்கலாம் மேகா. உன் பெற்றோரும், வேந்தனும் சந்தோசப் படுவார்கள்” என்று அபிராமி பரிந்துரைத்தாள்.

“நான் வீட்டுல இதை சொல்ல முடியாதே!” என்று மேகா ஒப்புக் கொண்டதற்கிணங்க தன் தடையைச் சொன்னாள்.

ஏதோ யோசிப்பது போன்ற பாவனையில், “நான் வேந்தன் அண்ணா கிட்ட பேசறேன். அவரால புரிஞ்சுக்க முடியும்” என்றாள் அபிராமி ஏதும் அறியாதவள் போல!

மேகா புன்னகை முகமாக, “அவரு காரணம் இல்லாம என்னை இங்க கூப்பிட்டு வந்திருக்க மாட்டாரு” என்று சொல்ல மூத்தவளுக்குச் சிரிப்பு தான். கண்டுபிடித்து விட்டாளே கெட்டிக்காரி தான் என்று உள்ளூர மெச்சிக் கொண்டாள்.

“இப்பவே ஒருத்தருக்கொருத்தர் நல்லா புரிஞ்சு வெச்சிருக்கீங்க” எனக் கேலி போல அபிராமி பதில் சொன்னாலும், மேகா சில விஷயங்களை எளிதாக எடுத்துக் கொள்ள முயற்சி எடுப்பதில் மூத்தவளுக்கு ஆசுவாசமாக இருந்தது. அவளுக்கு இருப்பது மிகவும் சாதாரண பிரச்சனை தான்! ஒரு சில ஆலோசனைகளின் பேரிலும், அவளது அச்சம் விலகுவதன் மூலமும் அவளை மீண்டும் பழையபடி மாற்றிவிட முடியும்! அதற்கு அவளது முழு ஒத்துழைப்பு அவசியம்! மேகா அதைக் கொடுப்பாள் என்னும் நம்பிக்கை அபிராமிக்கு வந்தது.

மீண்டும் கிளினிக்கைப் பூட்டிவிட்டு, வீட்டினுள் இருவரும் வர, அபிராமியின் மலர்ந்த புன்னகை வேந்தனுக்குத் திருப்தியாய் இருந்தது.

மேகாவிடம், “குட்டிப்பொண்ணு உள்ள தான் இருக்கா. போயி பார்த்துட்டு வா. நான் இப்பதான் பார்த்துட்டு வந்தேன்” என்று சொல்ல, “நீங்களும் கூட வாங்க” என்று அழைத்துப் போனாள்.

குழந்தையைப் பார்த்தவளால் அங்கிருந்து அவ்வளவு எளிதாக நகர முடியவில்லை. இரண்டு மாத குழந்தையாம்! அவள் மடியில் கிடத்தி இருந்தார்கள். சிறிய திராட்சை கண்களை அவ்வப்பொழுது திறந்து பார்ப்பதும் சோபையாகக் கொட்டாவியை விடுவதும்… பார்க்கப் பார்க்க அத்தனை வசீகரித்தது!

வேந்தன், “நான் வெளிய பேசிட்டு இருக்கேன். நீ கொஞ்சிட்டு சீக்கிரம் வரியா?” என்று தணிந்த குரலில் அனுமதி கேட்க, ஒப்புதலாகத் தலையசைத்தாள்.

வேந்தனும் வரவேற்பறை வந்து அபிராமியிடம் மேகா குறித்துக் கேட்டறிந்தான்

அவளை வெகு சீக்கிரமே மாற்றி விடலாம், உங்கள் அன்பும், அவள் அச்சம் தகர்தலும் தான் முக்கியம். அதிகம் கவலைப் பட வேண்டியதில்லை. அதிலும் மேகா நன்றாகவே ஒத்துழைப்புத் தருகிறாள் என்று அவன் மனம் குளிரும்படி சொன்னாள் அபிராமி.

கூடவே, மேகாவின் எதிர்பார்ப்பு வேந்தனிடம் எந்தளவு என்பதையும் சொல்ல, அதைக் கேட்டவன் மெல்லப் புன்னகைத்துக் கொண்டான். ‘இப்படி ஒரு அச்சமா அவளுக்கு! சுத்தம்!’ என்று மனதிற்குள் தோன்றியது.

“இன்னும் ஒரு வாரம் கழிஞ்சு கூட்டிட்டு வாங்கண்ணா! அப்ப கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகி இருக்கணும். பார்ப்போம் உங்க திறமையை!” என்று அபிராமி முடிக்க, “ஹாஹா! அடுத்த முறை வரும்போது இனி இங்க வரவே வேண்டியதில்லைன்னு நீயே சொல்லுவ பாரு” என்று பதில் தந்தவன் அவள் மறுத்ததையும் பொருட்படுத்தாமல் அவளுக்கான கட்டணத்தைத் தந்தான்.

குழந்தையைக் கொஞ்சிவிட்டு மனமே இல்லாமல் வந்த மேகாவை அழைத்துக் கொண்டு, அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினான் வேந்தன்.

Advertisement