Advertisement

 

காதல் பூக்கும் தருணம் – 18

 

வேந்தன் சில யூகங்களை வைத்திருந்தான். இப்படி இருக்கலாம், இதற்கு பின்னால் இவர்கள் இருக்கலாம், இந்த காரணத்திற்காகச் செய்திருக்கலாம் என்று. ஆனால், அந்த காவலர் சொன்னதோ… அவன் அனுமானித்ததெல்லாம் ஒன்றுமே இல்லையென்று தகர்த்தெறியும் படியான விஷயங்கள்! கேட்ட வேந்தனுக்கு அத்தனை அதிர்ச்சிகரமாக இருந்தது.

 

எப்படி இது சாத்தியம்? இப்படியும் ஒருவரால் சுயநலத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு சிந்திக்க இயலுமா? அதிலும் தனக்கு துன்பத்தில் தோள் கொடுத்து உதவி செய்த இரத்த பந்தத்திற்கு! அவனால் அந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

 

“சொல்லு வேந்தன். எப்படி இந்த விஷயத்தை ப்ரோஸீட் பண்ணலாம்?” காவலர் விஷயத்தைப் பகிர்ந்து விட்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பது குறித்துக் கேட்டார்.

 

“அண்ணா கண்டிப்பா தெரியும் தான அவங்க கிட்ட வீடியோ பேக்கப் இல்லை தானே”

 

“இல்லை வேந்தன். அவன், அவன் சொன்ன கூட்டாளிங்க எல்லாரையும் நம்ம கஸ்டடியில எடுத்தாச்சு. எல்லாருகிட்டேயும் தீர விசாரிச்சுட்டோம். இருந்த மொத்த டேட்டாவையும் கிளீன்அஃப் பண்ணியாச்சு. நீ கேட்டேன்னு அந்த கம்ப்ளீட் வீடியோ மட்டும் உனக்கு ஒரு காஃபி அனுப்பியிருக்கேன்”

 

“ஓ தேங்க்ஸ்ண்ணா. மாமா மறுபடியும் கவலைப்பட்டா அவருகிட்ட காட்டத்தான்” என்று வேந்தன் விளக்கத்தைச் சொல்ல அவருக்கும் புரிந்தே இருந்தது.

 

“ஹ்ம்ம் பைன். இவனுங்களை என்ன பண்ணறது? அப்பறம் அந்த லேடியை?”

 

“இல்லண்ணே இப்போதைக்கு எதுவும் வேண்டாம். முடிஞ்சா அவனுங்களை கொஞ்ச நாள் உள்ளே வெச்சுட்டு அனுப்புங்க. இந்த விஷயத்துல இனி அவனுங்க நுழையக் கூடாது” என்று மட்டும் தீவிரமாகச் சொல்ல,

 

“அதெல்லாம் சிறப்பா செஞ்சுடலாம்” என்றார் அந்த காவலர் புன்னகையோடு.

 

“தேங்க்ஸ்ண்ணா. உங்க உதவியை எப்பவும் மறக்க மாட்டேன்” என்று சொல்லி மேற்கொண்டு சிறிது விவரங்கள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவனுக்கு ஆத்திரமாக வந்தது. அவர்கள் விசாரித்துச் சொன்ன விஷயம் இது தான்.

 

அனைத்திற்கும் மூல காரணம் வள்ளி தான். அனைத்திற்கும் என்பதில் மூன்று வருடம் முன்பு நடந்த திருமண கலாட்டாவும் அடங்கும் என்பதுதான் இவனின் உச்சக்கட்ட அதிர்ச்சிக்குக் காரணம்.

 

சுந்தரேசன் செய்து வந்த உதவிகளால் சொகுசாக வாழ்க்கையை ஓட்டி வந்த வள்ளி, தனது செல்லவச் செழிப்பை மேலும் அதிகரிக்கப் போட்ட திட்டமே செந்தில், மேகா திருமணம். ஜாடையாகத் தம்பியிடம் திருமண பேச்சைத் தொடங்கியிருக்க, “பள்ளிக்கூடம் போற புள்ளைக்குக் கல்யாணமா? என்ன பேச்சு பேசறக்கா?” என்று சுந்தரேசன் கடிந்து கொண்டதோடு, “பள்ளிக்கூடப் படிப்பைக் கூட முடிக்காதவனை என் புள்ளைக்குக் கட்டி வைக்கிறதா…” என்று புலம்பியும் விட்டார். அது வள்ளியின் காதுகளிலும் ஸ்பஷ்டமாக விழுந்திருந்தது

 

‘இவ்வளவு பெரிய புள்ளைக்குக் கல்யாணம் செய்யறதுக்கு என்ன?’ என மனதிற்குள் பொருமினாலும் வெளியில் எதுவும் காட்டிக் கொள்ளாமல், வேறு ஏதாவது திட்டம் தீட்டலாம் என்று எண்ணிக் கொண்டார்.

 

இப்பொழுதே தம்பி இப்படிப் பேசுகிறான். இனி மேகா பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி வேறு சேர்ந்து விட்டால் தம்பியிடம் பேசவே முடியாது என்று தோன்ற, வெகு நாளைய யோசனையின் பின் போட்ட திட்டம் தான், காதலர் தினத்தன்று செந்திலுக்கும், மேகாவிற்கும் திருமணத்தை நடத்துவது. அதுதான் வருடா வருடம் தொலைக்காட்சி செய்திகளில் அப்படி நடக்கும் திருமணத்தைப் பார்க்கிறாரே!

 

என்ன இது போன்ற விஷயத்திற்கெல்லாம் செந்தில் ஒத்துக் கொள்ள மாட்டான் என்பதால் அவனிடம் சொல்லவில்லை. அவன் தோழர்களோடு ஊரைச்சுற்றப் போகும்போதெல்லாம் அவ்வப்பொழுது சுந்தரேசன் வீட்டில் தங்கி அவர்கள் காரை உபயோகப்படுத்துவது வழக்கம்.

 

அந்த காரில் தான் மேகாவை பள்ளிக்கு அனுப்புவார்கள் என்பதால், செந்தில் மேகாவை காலையில் பள்ளியில் விட்டுவிட்டு, மாலையில் அழைத்து வரும் பொறுப்பை எடுத்துக் கொள்வான். இதை தன் திட்டத்திற்கு சாதகமாகப் பயன்படுத்தி அவர்கள் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க வள்ளி திட்டமிட்டார்.

 

காதலர் தினத்தில் கலாச்சார காப்பாளர்கள் என்று சுற்றும் ஒரு இளைஞனைத் தேடிப்பிடித்து அவனுக்குப் பணம் தந்து இந்த காரியத்தைச் செய்யச் சொன்னார். மேகாவின் பெயர், பள்ளி என அனைத்து விவரங்களையும் தந்து, “காரில் அழைத்துப் போக ஒரு பையன் வருவான் அவனோடு கல்யாணம் செய்து வைத்து… அந்த வீடியோ கொண்டு வந்து தந்துவிட்டு மீதிப்பணத்தை வாங்கிக் கொள்” என்று சொல்லி கணிசமான தொகையை அட்வான்ஸ் ஆக தந்து விட்டார்.

 

பணம் வாங்கியவனும் அவன் கூட்டாளிகளோடு சென்று இரண்டு நாட்கள் முன்னேயே வள்ளி குறிப்பிட்டனுப்பியிருந்த மேகாவை பார்த்து வைத்து விட்டான்.

 

திட்டத்தைப் போட்ட வள்ளி அறியாதது செந்தில் காலையில் மேகாவை பள்ளியில் விடுவது மட்டும் தான் உறுதி. மாலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் அவன் வராவிட்டால், அவள் மத்த தோழியரோடு வீடு சென்று விடுவாள். இது அவர்களுக்குள் இருக்கும் குட்டி ஒப்பந்தம். அன்றும் அப்படித்தான் காலையில் பள்ளியில் இறக்கிவிட்ட செந்தில், மாலையில் அழைத்துச் செல்ல வரவில்லை.

 

வழக்கம்போல செந்திலுக்காகக் காத்திருந்த மேகாவை, வேந்தன் வந்து அழைத்துக் கொண்டான். சுந்தரேசனுக்கு நடந்த எதிர்பாரா விபத்தினால் வேந்தன் வர வேண்டியதாகப் போனது. இருவரும் காரில் ஏறிப் புறப்பட்டதும், அதற்காகவே தயாராய் இருந்த ஆட்கள் அவர்களைப் பின்தொடரத் தொடங்கினர்.

 

அன்றையதினம் வேந்தனுக்கிருந்த மனநிலையில் அவனைப் பின்தொடர்ந்த வாகனங்களைப் பார்த்து சுதாரிக்காமல் போக, வள்ளியின் திட்டப்படி திருமணம் முடிந்திருந்தது. என்ன மணமகன் தான் மாறியிருந்தான்.

 

சுயநலத்தின் உச்சியில் ஒரு பெண் செய்த மோசமான காரியம்! அதில் பாதிப்பிற்குள்ளாவது சிறு பிள்ளை என்று கூட உணராமல் இப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார். சரி அதன் பிறகேனும் திருந்தியிருக்கலாம்.

 

நீறு பூத்த நெருப்பாய் இத்தனை நாட்கள் மனதிற்குள்ளேயே குமைந்து, எப்படி யோசனை கிடைத்ததோ… அந்த காணொளியில் மேகாவை மட்டும் தெரியுமாறு மாற்றித் தரச் சொல்லி அதை வைத்துக் காய் நகர்த்தி இருக்கிறார். அதன் விளைவு சுந்தரேசனின் உடல் சுகவீனம்!

 

உதவி செய்த குடும்பத்திற்கு இத்தனை தீமைகளைச் செய்திருக்கிறாரே என்று அப்பொழுதே ஆத்திரம் தான். இருந்தும் மாமாவின் உடல்நிலை குறித்து அமைதியானான். வீணாக பிரச்சனை வேண்டாம் என்றும் நினைத்திருந்தான். மேற்கொண்டு வள்ளி இதில் தலையிட்டால் பார்த்துக் கொள்வோம் என்ற எண்ணமும்.

 

அவன் எதிர்பார்த்துக் காத்திருந்தது போலவே இன்று வள்ளி மாமாவைச் சந்திக்க வந்திருக்கிறார். திருமணம் தொடர்பான பேச்சையும் தொடங்கியிருக்கிறார். ஆனால், அதற்கு மாமா நிர்தாட்சண்யமாக மறுப்பு தெரிவித்த போதும் அமைதியாக போயிருக்கிறார் என்றால், நிச்சயம் ஏதோ திட்டம் இல்லாமல் இருக்காது.

 

‘என்ன செய்வார்?’ என்று மண்டை குடைந்தவனுக்கு இன்னொரு விஷயம் நினைவில் வர, செந்திலுக்கு அழைத்தான்.

 

“ஹலோ வேந்தா சொல்லுப்பா”

 

“அண்ணா நம்ம மேகாவோட வீடியோ நீங்க டெலிட் பண்ணிட்டீங்க தான?”

 

“அது மாமாவுக்கு அனுப்பினதும் பண்ணிட்டேன் வேந்தா. என் போன் எங்க பசங்க யாரும் எடுத்து யூஸ் பண்ணிட்டா. அதுக்காகத்தான்”

 

“ஓ சரிண்ணா. ரொம்ப தேங்க்ஸ்”

 

“என்ன நீ இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லிட்டு. ஆமா மாமா போன் ல இருக்குமே?”

 

“அதை நான் டெலிட் பண்ணிட்டேன் ண்ணா” என்றவன் சில நொடி தயக்கத்தின் பின், “அந்த வீடியோ மறுபடியும் வந்தாலோ இல்லை அம்மா எதுவும் அதைப்பத்தி பேசினாலோ எனக்கு சொல்லுங்க ண்ணா” என்று சொல்ல,

 

“எதுவும் காரணம் இல்லாம சொல்ல மாட்ட. சரி அப்படியே பண்ணறேன்” என்று செந்தில் பதில் தந்தபிறகே வேந்தனுக்கு நிம்மதியானது.

 

என்னதான் வேந்தன் இப்படி துருவி துருவி சொன்னாலும் ‘அம்மா அதைப்பத்தி என்ன கேட்கப் போறாங்க?’ என்றுதான் செந்தில் நினைத்தான்.

 

ஆனால், வேந்தனின் சொல்லை மெய்ப்பிப்பது போல வள்ளி செந்திலிடம் பேசினார். “ஏன் தம்பி நம்ம மேகாவை நீ கல்யாணம் செஞ்சுக்கறயா? அந்த வீடியோ விஷயம் வெளிய தெரிஞ்சா புள்ளை வாழ்க்கையே வீணாயிடுமே…” மகன் மறுக்கவே முடியாத வண்ணம் உரிய காரணங்களோடு வள்ளி பேச்சை தொடங்க, செந்தில் முகம் சுளித்தான்.

 

“மேகாவுக்கு என்னோட கல்யாணமா? உங்களுக்கென்ன பைத்தியமா? நான் பார்த்து வளர்ந்த புள்ளை அது. அதை கட்டிக்கிட்டு…” கோபத்துடன் ஆட்சேபித்தான்.

 

“எனக்குன்னு வந்து சேர்ந்திருக்கியே. இவன் பார்த்து வளர்ந்த புள்ளையாம். கட்டிக்க மாட்டானாம். ஏன்டா அந்த வேந்தனுக்கும் கூடத்தான் மேகாவை சிறுசுல இருந்தே தெரியும்… அவனெல்லாம் கட்டிக்கறேன்னு மண்டையை ஆட்டலை” மகன் சொன்ன காரணங்கள் எரிச்சலைத் தரவே வள்ளி உளறியிருந்தார்.

 

“வேந்தனா?” செந்தில் புருவம் சுருக்கவும், “ஆமா அவனோட தான் உங்க மாமா மேகாவுக்கு கல்யாணம் பேசறாரு” என்று நொடித்தாள் மூத்தவள்.

 

“அப்பறம் என்கிட்ட மேகாவை கட்டிக்கிறியா கேட்கறீங்க?”

 

மகனின் பார்வை தன்னை ஆராயும் விதத்தில் படிந்ததில் அன்னை சுதாரித்தார். “அது இல்லை செந்திலு. என்னதான் இருந்தாலும் வேந்தன் வெளியாளு. நம்ம புள்ளை யாரோகிட்ட தாலி வாங்கினது தெரிஞ்சா சும்மா விடுவானா… அதான் உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லறேன்” என்று வள்ளி உண்மையான அக்கறையோடு சொல்வது போல முகபாவத்தை மாற்றி வைத்துக் கொண்டு சொன்னார்.

 

‘வேந்தனா? வேந்தனுக்கு தான் அது தெரியுமே! எத்தனை பக்குவமாக கையாள்கிறான். அவன் என்ன செய்வான் என்று இந்த அம்மாவுக்கு பயம்?’ என்ற எண்ணம் வர புன்னகையுடன், “ச்சே ச்சே நம்ம வேந்தன் அப்படி இல்லைம்மா” என்று மறுத்தான்.

 

“நீ கண்டியா? அவன் எப்படின்னு? எப்ப இருந்து அவன் நம்ம வேந்தன் ஆனான்? அவன் என்ன நமக்கு சொந்தமா பந்தமா? நீ தான் நான் பார்த்து வளர்ந்த புள்ளைன்னு ஒதுங்கற. அவன் அப்படியா ஈ’ன்னு இளிச்சுட்டு கட்டிக்க ஒத்துக்கலை”

 

அன்னையின் ஆத்திரத்தை நோட்டம் விட்டபடியே, “அவன் இங்க வளரலை மா. அவன் பல வருஷம் இங்க இல்லை. கிட்டத்தட்ட பத்து, பதினோரு வருஷம். அதோட இப்படி தோனறதும், தோனாததும் அவங்கவங்க பார்வையில. எனக்கு மேகாவை அப்படி நினைக்க தோன்லை” என்றான் கறார் குரலில்.

 

‘எனக்குன்னு வந்து வாச்சிருக்கானே’ என்று மனதிற்குள் கடுகடுத்துக்கொண்டு, “சரிடா அவன் நல்லவனாவே இருக்கட்டும். அந்த வீடியோ விஷயம் தெரிஞ்சா நம்ம புள்ளையை சும்மாவா விடுவான். அதுலயும் பணம், காசு இருக்கவன். வெளிநாடெல்லாம் போயி வந்து இருக்கான்” சுந்தரேசனிடம் பயன்படுத்திய அதே அஸ்திரத்தை மகனிடமும் பயன்படுத்தினார். கூடவே வேந்தனை குறை படிக்கவும் மறக்கவில்லை.

 

பணம், காசு பார்ப்பவன் வேந்தனா? இன்னும் அதே மரியாதை இம்மியும் குறையாமல் ‘அண்ணன்’ என்று உறவு சொல்லி அழைப்பவனை செந்திலால் அப்படி எண்ண முடியுமா? உடனே அன்னையின் கருத்தை ஆட்சேபித்தான்.

 

“என்னம்மா நீங்க. அதெல்லாம் வேந்தன் எப்பவோ வீடியோ பார்த்துட்டான். இன்னும் சொல்லனும்’ண்ணா அவனுக்கு தான் இந்த விஷயத்துல அத்தனை நிதானம், பக்குவம். அவன் மேகாவை நல்லா பார்த்துப்பான் மா. நீங்க கவலைய விடுங்க” என்று சொல்ல, வள்ளியின் முகம் வெளுத்துப் போனது.

 

செந்திலுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், வள்ளிக்கு நன்கு தெரியுமே அந்த தாலியை கட்டுவது வேந்தன் என்று! அவர்தானே அவனை நீக்கி அந்த காணொளியை தயார் செய்ய சொன்னதே! இப்பொழுது செந்தில் சொல்வது போல வேந்தன் அந்த வீடியோவை பார்த்திருந்தால் அவனுக்கு ஏதோ தவறு நடக்கிறது என்று தெரிந்திருக்கும். கண்டிப்பாக எதையாவது கண்டுபிடிக்க முயற்சித்திருப்பான். அச்சோ! அதனால் தான் அந்த வீடியோ வைத்திருந்த பையனை வேறு இப்பொழுது பிடிக்க முடியவில்லையா? ஒருவேளை வேந்தன் அவனை கண்டுபிடித்திருப்பானோ? நினைக்க நினைக்க பதற்றமானது.

 

“என்னம்மா ஏன் இப்படி முழிக்கறீங்க?”

 

“ஒன்னும் இல்லை… ஒன்னும் இல்லை. ஆமா உன்கிட்ட அந்த வீடியோ இருக்கு?”

 

“அதை டெலிட் பண்ணிட்டேன் மா. ஏன் கேட்கறீங்க?”

 

“சரி சரி சும்மா தான் கேட்டேன்… வேற ஒன்னும் இல்லை. ஆமா வேந்தன் வேற என்ன சொன்னான்?” என்ற வள்ளியின் குரலில் ஏகத்திற்கும் பதற்றம் நிறைந்திருந்தது.

 

“அவன் என்னம்மா சொல்லுவான். ஒன்னும் சொல்லலையே!” என்ற மகன் அன்னையின் தோற்ற வேறுபாட்டை ஆராய்ச்சியாகப் பார்த்தான்.

 

இத்தனை நேரமும் மகனின் மனதை மாற்றி எப்படியாவது கல்யாண ஆசையை விதைத்து விடலாம், அப்படியும் இல்லையா அந்த வீடியோவை வைத்து சுந்தரேசனிடம் கணிசமான தொகையை வாங்கிக் கொள்ளலாம் என்றெல்லாம் திட்டம் போட்டு வைத்திருந்த வள்ளி, நொடியில் வேரருந்த மரம் போல ஆனார்.

 

“சரிப்பா எனக்கு ஒருமாதிரி தலை வலியா இருக்கு. காலையில பேசிப்போம். நான் போயி தூங்கறேன்” என்று வள்ளி சென்றுவிட, செந்திலுக்கு அன்னையின் செய்கைகள் சந்தேக விதையை விதைத்தது.

 

‘இந்த வேந்தன் கண்டுபிடித்திருப்பானா மாட்டானா? அப்படியே கண்டு பிடித்திருந்தாலும் தன் வரை விஷயத்தை அறிந்திருப்பானா? அச்சோ உள்ளதும் போகப் போகிறதா?’ இவ்வாறு பலதும் யோசித்து அன்றைய இரவு தூக்கத்தை இழந்தார் வள்ளி.

 

செந்திலோ அம்மாவிடம் பேசி முடித்ததும் வேந்தனை அழைத்து கேலி செய்யத் தொடங்கி விட்டான். ‘உனக்கும் மேகாவுக்கும் கல்யாணம் பேசறாங்களாமே! இதை சொன்னியா நீ…’ என்று பேசி கேலி செய்யத் தொடங்கியவனிடம், “எப்படித் தெரியும் அண்ணா” என்று பேசத் தொடங்கிய வேந்தன், பேசிப்பேசியே மொத்த விஷயத்தையும் கறந்திருந்தான்.

 

“நீ வீடியோ பார்த்துட்டன்னு சொன்னதும்… எங்க அம்மா ஏன் அப்படி ஷாக் ஆகறாங்கன்னு தெரியலை வேந்தா” என்று செந்தில் யோசனையாகக் கேட்டான்.

 

மெல்ல முறுவலித்தவனுக்கு வள்ளியின் தற்போதைய நிலை புரிந்து விட்டது. பேராசை பெரும் நஷ்டம்! நன்கு அனுபவிக்கட்டும். எங்கே நான் மாமாவிடம் சொல்லி விடுவேனா என்று பயந்து பயந்தே சாவார்களே… நன்றாக வேண்டும்! அனுபவிக்கட்டும்! என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

 

இப்படி எந்த தண்டனையும் இல்லாமல் விடுவது வேந்தனுக்கும் பிடிக்கவில்லை தான். ஆனால் என்ன செய்வது தண்டனை தர வேண்டுமெனில் அவர் செய்ததையும் சொல்லியாக வேண்டுமே! அவரின் துரோகத்தை நிச்சயம் யாருமே தாங்கிக் கொள்ள மாட்டார்கள் என்பதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டான்.

 

ஆனால் யாரிடமேனும் வள்ளியின் செய்கைகளைச் சொல்லி சற்று கண்காணிக்க வேண்டுமே! ஆக செந்திலிடம் நடந்ததை மேலோட்டமாக விளக்கி, “நீங்க தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க ண்ணா. ஆனா, அவங்களை கொஞ்சம் கவனிச்சுட்டே இருங்க” என்று மட்டும் சொன்னான்.

 

சில சம்பவங்களை இணைத்துப் பார்த்த செந்திலுக்கும் வேந்தன் சொல்வது உண்மை என்று புரிந்து விட்டது. “எங்கம்மா இத்தனை வேலை செஞ்சிருக்கா. இருக்கட்டும் இருக்கட்டும் இனி மாமா வீட்டுப் பக்கமே வர விடாம பார்த்துக்கறேன். எத்தனை வில்லத்தனம்?” என்று செந்தில் ஆத்திரப்பட்டான்.

 

எப்படியும் தனக்குத் தெரிந்திருக்கும் என்ற பயத்தில் அந்தம்மா வாலாட்ட மாட்டார், அதை மீறி முயற்சித்தாலும் இனி செந்தில் பார்த்துக் கொள்வான் என்று வேந்தனுக்கு நம்பிக்கை வந்தது. அதில் அவனது மனம் அலைப்புறுதல் குறைந்து நிம்மதியடைந்தது.

Advertisement