Advertisement

காதல் பூக்கும் தருணம் – 16

 

வள்ளியின் மனநிலை அவ்வளவு உவப்பாக இருக்கவில்லை. அவருக்கு வேந்தன் என்றாலே வேப்பங்காய் கசப்பு தான்! அவன் திரும்பி வந்தது பிடிக்கவில்லை. இங்கேயே தங்கி விட்டது பிடிக்கவில்லை. அனைத்தையும் பொறுப்பெடுத்துக் கொண்டு, குடும்பத்தில் ஒருவனாய் இயல்பாக வலம் வருவது சுத்தமாக பிடிக்கவில்லை.

 

ஆனால், என்ன செய்ய முடியும் தம்பியின் வீட்டில் ஓரளவிற்கு மேல் நாட்டாமையும் செய்ய முடியாதே! எனவே எட்ட நின்று மனம் குமைய மட்டுமே முடிந்தது.

 

நமக்கு நம் காரியம் தானே பெரியது என்னும் எண்ணத்தில் தான், இன்று சுந்தரேசனிடம் பேசி விடலாம் என்று வந்திருந்தார். ஆனால், வந்த இடத்தில் வேந்தனோ வேண்டுமென்றே முந்திக்கொண்டது போல இருந்தது. சுந்தரேசன் குறித்து விஜயாவிடம் பேசத் தொடங்கியதுமே மூக்கு வேர்த்தது போல, தம்பியின் அறைக்குள் போய்விட்டான். அதில் எரிச்சல் அடைந்தவர் மனதிற்குள் பொறுமித் தள்ளினார். இருந்தும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவன் வெளியே வரும் வரை காத்திருந்து அதன்பின் தம்பியிருந்த அறைக்குச் சென்றார்.

 

“வாங்க கா” என்று சுந்தரேசன் மெல்லிய புன்னகையோடு வரவேற்க, இதுகூட உவப்பாக இல்லை மூத்தவளுக்கு. உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் இருந்தவன், இப்பொழுது இன்முகமாக வரவேற்பதென்ன! முகத்தில் புதிதாய் முளைத்த பொலிவென்ன! எல்லாம் அவன் தந்த திடம் என்று மனம் வெம்பியது.

 

பார்வைக்கு சிரித்த முகமாக வைத்தவர், “இப்ப எப்படி இருக்குப்பா?” என நலம் விசாரிக்க, “முன்னத்துக்கு இப்ப பரவாயில்லை கா. நல்ல முன்னேற்றம் தெரியுது. இனி கொஞ்சம் கொஞ்சமா நடமாட ஆரம்பிச்சிடலாம்” என்று பதில் சொன்னவரின் குரலில் அத்தனை நிறைவும், பூரிப்பும்.

 

“நல்லது பா” என்ற வள்ளி சிறிது நேரம் பொதுவாகப் பேசிவிட்டு, “சரி மேகா கல்யாண விஷயமா நான் சொன்னதைப்பத்தி எதுவும் யோசிச்சியா?” என்று கொக்கிற்கு மீனே இலக்கு என்பதுபோல தன் காரியத்தில் கண்ணாய் கேட்டார்.

 

சுந்தரேசனும் இந்த கேள்வியை எதிர்பார்த்தே இருந்ததால், “யோசிச்சுப் பார்த்தேன் கா. மேகாவுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கிறது தான் எனக்கும் சரின்னு படுது” என்று பட்டென்று சொல்லிவிட, வள்ளியின் முகம் பூரித்துப் போனது. இத்தனை நேரமும் உதட்டளவில் தவழ்ந்த புன்னகை சட்டென்று விழிகளையும் எட்டி பிரகாசிக்க வைத்தது.

 

“நல்ல விஷயம் நல்ல விஷயம். நான்தான் முன்னாடியே சொன்னேனே, பொம்பளைப்பிள்ளை விஷயம் அலட்சியமா விட முடியாது. மேகாவுக்கு கல்யாணம் செய்யறது தான் சரின்னு. இப்பவாவது உனக்கு தோணிச்சே! சரி சரி நல்ல விஷயத்தை ஏன் தள்ளிப் போடணும்? கையோட கல்யாணத்தை முடிச்சுடலாம்” என்று தங்கள் பிள்ளைகளுக்குத் தான் திருமணம் என நினைத்து முகம் விகசிக்க, வாயெல்லாம் பல்லாக வள்ளி சொல்ல, அவரின் அதிகப்படியான மகிழ்ச்சி இளையவருக்கு உறுத்தியது.

 

அதைக் கவனித்தபடியே, “ஆமாம் கா நானும் அதேதான் நினைச்சேன். அதான் கையோட வேந்தன், மேகா ரெண்டு பேரோட ஜாதகமும் பொருத்தம் பார்த்துட்டு வரச் சொன்னேன். பொருத்தம் நல்லா இருக்காமாக்கா. கையோட கல்யாண வேலையைத் தொடங்கிடலாம்” என்று அலட்டல் இல்லாமல் சொல்ல, வள்ளியின் முகம் சிரிப்பைத் தொலைத்து உஷ்ணமானது.

 

“என்ன பேசற சுந்தரேசா நான் என் மகனுக்கு மேகாவை கேட்டேன்” குரலின் ஸ்ருதி ஏறி, விழிகள் சிவக்க ஆத்திரமாகத் தம்பியிடம் கேட்டார்.

 

முகத்தில் அதிருப்தியை காட்டியபடி, “அந்த பேச்சு தான் அப்பவே வேணாம்ன்னு சொல்லிட்டனேக்கா. இது சரி வராது. செந்திலுக்கு வேற இடம் பார்ப்போம்” என்று முகத்திற்கு நேராகவே நிர்தாட்சண்யமாய் மறுத்துப் பேசினார் இளையவர். இந்த பேச்சு எப்பொழுதுமே சுந்தரேசனுக்குப் பிடிக்காது. இத்தனை நாளும் நாசூக்காகத் தவிர்த்து வந்தவர், தொடர்ந்து இந்த பேச்சு நீளவும் இன்று உடைத்தே சொல்லி விட்டார்.

 

அதில் ஆத்திரம் வரப்பெற்ற வள்ளியோ, “என்ன சுந்தரேசா பேச்சு ஒரு தினுசா இருக்கு. ஏன் என் மகனுக்கு என்ன குறைச்சல்? புதுசா பணம், காசு பார்க்கவும் நாங்க கீழ தெரியறோமா?” என்று இகழ்ச்சியாகக் கேட்டார்.

 

சுந்தரேசனின் முகம் சுருங்க, “இதுல கீழ, மேலன்னு எல்லாம் எதுவும் இல்லைக்கா. ஒத்து வராதுன்னு பட்டுச்சு. நானும் உங்ககிட்ட பலமுறை பிடி கொடுக்காம வந்தேன். நீங்க கவனிக்கிற மாதிரியே தெரியலை. இனி இந்த பேச்சை விட்டுடுங்க. வேந்தனுக்குத் தான் மேகாவை கட்டி தரணும்ன்னு நினைக்கிறேன்” என்று மேற்கொண்டு இதுகுறித்து பேச்சு எழக்கூடாது என்பதற்காக அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

 

இதில் வள்ளி கொஞ்சம் சுதாரித்தார். ‘திருமணம் இல்லாவிட்டாலும், ஏற்கனவே கிடைத்து வரும் ஆதாயத்திற்குப் பங்கம் வந்து விடப்போகிறது’ என்று ஜகா வாங்கிக்கொண்டார்.

 

இருந்தாலும் கடைசியாக ஒரு கல்லெறிந்து பார்க்கும் முயற்சியில், “நம்ம புள்ளை வீடியோ வேற இருக்கே சுந்தரேசா. எவன் கையிலயோ தாலி வாங்கற மாதிரி. அதுப்பத்தி யோசிச்சுப் பார்த்தியா? ஏன் சொல்லறேன்னா, நமக்குள்ளன்னா சொந்தபந்தம், ஒன்னுக்குள்ள ஒன்னு அதையெல்லாம் பெருசு பண்ண மாட்டோம். ஆனா, வேந்தன் என்னதான் தொழில் கூட்டாளின்னாலும் வெளி ஆள் தான… நம்ம புள்ளைக்காக தான் பார்த்தேன்” என்று நஞ்சில் தோய்த்த வார்த்தைகளை வள்ளி அனாயசமாக வீச,

 

அக்காவையே ஊன்றிப் பார்த்த வண்ணம், “அதெல்லாம் அவன் ஒன்னும் சொல்ல மாட்டான் கா” என்று சுந்தரேசன் முடித்து விட்டார். என்னவோ அக்காவிடம், வேந்தன் தான் மேகாவின் கழுத்தில் தாலி கட்டியது என்று சொல்லத் தோன்றவில்லை. மனதில் எதுவோ உறுத்தியது போல!

 

வள்ளியால் இதற்கு மேலும் என்ன சொல்ல முடியும். முகம் கருத்து விட்டது. இயன்றவரை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “சரிப்பா அதுக்குமேல உன் இஷ்டம்” என்றதோடு அப்போதைக்குப் பேச்சை முடித்துக் கொண்டாலும், உள்ளுக்குள் மிளகாயை அரைத்துப் பூசியது போலக் காந்தியது.

 

‘எத்தனை திட்டங்கள்? அனைத்தும் தவிடுபொடியாகி விட்டதே!’ மனதின் புகைச்சல் அடங்க மறுக்க, “சரி சுந்தரேசா நீ ஓய்வெடு. நான் போயிட்டு இன்னொரு நாள் வரேன்” என்று விடைபெற்றுச் சென்றவர் வேறு யாரிடமும் பேச்சை வளர்க்காமல் வீட்டிற்கு கிளம்பி விட்டார்.

 

வரவேற்பறையில், விஜயா மேகாவை தன்னருகே அமர்த்திப் பேசத் தொடங்கினார். “ஏன் குட்டிம்மா நம்ம வேந்தன் பத்தி என்ன நினைக்கிற?”

 

அன்னை இப்படி நேரடியாகப் பேச்சைத் தொடங்கி விடுவார் என்று எதிர்ப்பார்க்காததால் மேகா பதற்றமானாள். அன்னை தன் முகத்தையே பதிலுக்காகப் பார்த்திருப்பது புரியவும், “என்னம்மா திடீர்ன்னு?” என்று பதில் சொல்ல முடியாமல் எதிர்க் கேள்வி கேட்டாள்.

 

அவளையே ஆராய்ச்சியாய் பார்த்த வண்ணம், “வேந்தன் உன்கிட்ட எதுவும் பேசலையா குட்டிம்மா…” என்று அன்னை கேட்கவும், “ஹ்ம்ம் சொன்னாங்க” என்றாள் உள்ளே போய்விட்ட குரலில்.

 

“நீ என்ன சொல்லற மா? உனக்குச் சம்மதமா? வேந்தனை பிடிச்சிருக்கா?” என்று ஆர்வமாகக் கேட்டார்.

 

இப்பொழுதும் அவளுக்குப் பதில் சொல்ல நா எழவில்லை. “இப்பவே என்னம்மா அவசரம்?” என்று தவிப்பான குரலில் கேட்க, விஜயாவிற்கு மகளின் நிலைப்பாடு புரியவே இல்லை. ஒருவேளை படிப்பு இன்னும் முடியவில்லை என்று தயங்குகிறாள் போலும் என்று, “அப்பா பிரியப் படறாரு மா” என்று சொன்னார்.

 

“அப்பாவுக்கு இன்னும் குணமாகலையாம்மா? அவருக்கு மறுபடியும் என்ன?” என்று கவலையாகக் கேட்ட மகளின் தலையை ஆதரவாக வருடி, “சரியாயிட்டாரு டா. இருந்தாலும் பிரியப் படறாரு” என்று வாஞ்சையான குரலில் அன்னை சொல்ல, நிராசையுடனும், ஏமாற்றத்துடனும் இளையவள் பார்த்தாள். அந்த பார்வையின் பொருள் புரியாமல் அன்னை குழம்பினாள்.

 

“அப்பாவுக்காகத்தான். என்னம்மா?” என்று மேகா கேட்க, இந்த அவசர திருமணம் அப்பாவிற்காகத் தானே என்னும் நினைவில் ‘ஆம்’ என்று விஜயாவும் தலையசைத்தார். ஆனால், மேகா கேட்டது இந்த திருமணம் அப்பாவிற்காகத்தானா என்று.

 

அன்னையின் பதில் அவளை கலங்கச் செய்தது. இம்முறையும் ஒரு நிர்ப்பந்தம். அதைக்கொண்டு எங்களுக்கு திருமணம். இப்படித்தான் எண்ணியது மங்கையின் மனம். ஆக ஏதோவொரு கட்டாயத்தின் பேரில் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறான். இந்த நினைவே அவளுக்கு கசந்தது.

 

அவன் மீது அவளுக்கு மட்டும் கொள்ளை கொள்ளையாய் பிரியம் இருக்க, அவனோ எப்பொழுதும் ஒரு நிர்ப்பந்தத்திற்குக் கட்டுப்பட்டே என்னிடம் வந்து சேர்கிறான். இந்த எண்ணம் தந்த அவமானம் அவளை உள்ளுக்குள் சிதைத்தது. எங்கே கண்ணீர் வழிந்து விடுமோ என்னும் அச்சம் பிறக்க,

 

“அம்மா கொஞ்சம் படிக்கிற வேலை இருக்கு. மேல ரூமுக்கு போறேன்” என்று அவசரமாக எழுந்து கொண்டாள். “எதுவும் சொல்லாம போற குட்டிம்மா?” என்று கேட்டு அன்னை மகளை மீண்டும் நிறுத்தினாள்.

 

“உங்க விருப்பம் மா” என்று முகத்தில் எந்தவுணர்வும் இல்லாமல் சொல்லிவிட்டுச் செல்லும் மகளை விஜயா ஆயாசமாக பார்த்தார். ‘என்ன பிரச்சனை இவளுக்கு? கல்யாண பேச்சை எடுத்தா வர சந்தோசம், பூரிப்பு, வெட்கம் எதுவுமே இல்லை. சரி பிடிக்கலை, இப்ப வேணாம் அப்படி எதுவும் சொல்லறான்னா அதுவும் இல்லை. இதென்ன இப்படி இருக்கா? யாருக்கோ கல்யாணம்ங்கிற மாதிரி நடந்துக்கிறா? என்ன தான் நினைக்கிறான்னு தெரியலையே’ என்று மகளைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்த போதுதான் வள்ளி அறையிலிருந்து வெளியே வந்தது.

 

“பேசிட்டீங்களா அண்ணி” என்று விஜயா பேச்சைத் தொடங்க, “ஆச்சு ஆச்சு. சரி நேரமாயிடுச்சு நான் கிளம்பறேன்” என்று வாசல் நோக்கி வள்ளி சென்றார்.

 

“என்ன அண்ணி. அதுக்குள்ள கிளம்பறீங்க. சாப்பிட்டுப் போகலாம் இருங்க” என்று விஜயா சொன்னதற்கு, “இல்லை விஜயா வீட்டுல போயி பார்த்துக்கறேன். வீட்டுக்கு அக்கா வரேன்னு போன் பண்ணுச்சு” என்று சொல்லிவிட்டு அப்பொழுதே கிளம்பியும் விட்டார். ‘இவர் ஏன் அவசரமாகப் போகிறார்?’ என்று விஜயா குழம்பினாள்.

 

அந்த நேரம் தனது கைப்பேசி உரையாடலை முடித்துவிட்டு வந்த வேந்தன் குழப்பத்துடன் வாயிலில் நின்றிருந்த விஜயாவைக் கண்டு, “என்ன அத்தை?” என்று கேட்டு அவரை கலைத்த வண்ணம் உள்நுழைய, “ஒன்னும் இல்லைப்பா” என்று சொல்லியபடி உள்ளே திரும்பியவருக்கு மீண்டும் மகளின் கவலையே!

 

அதற்கு தகுந்தாற்போல, “பேசுனீங்களா அத்தை? என்ன சொன்னா?” என்று ஆவலாக முகம் பார்க்கும் மருமகனைப் பார்க்கையில் கவலை இன்னும் அதிகமானது. அவரும் யாருக்கென்று பார்ப்பார். மகளின் திருமணத்தை நல்லபடியாக நடத்த நினைக்கும் கணவருக்காகவா, இல்லை அவளை மணக்க ஆவலோடு அவள் சம்மதம் எதிர்நோக்கி காத்திருக்கும் மருமகனுக்காகவா, இல்லை இதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல நடந்து கொள்ளும் அருமை மகளுக்காகவா சோர்ந்து போனார்.

 

“என்ன அத்தை? அவளுக்கு விருப்பம் இல்லையா?” விஜயாவின் தோற்றத்தில் வேந்தன் குழம்பினான்.

 

“அதெல்லாம் எதுவும் இல்லை வேந்தா. வழக்கம்போலத் தான் ஒரு மாதிரி சோர்வாவே இருக்கா? மனசுக்குள்ள அவளுக்கு என்ன குழப்பம்ன்னு தெரியலை” என்றார் கவலையாக. ‘திருமணம் குறித்து சம்மதம் கேட்டால் சோர்வெதற்கு?’ என்று வேந்தன் குழம்பினான்.

 

விஜயா ஏதோ யோசித்தவராய், “ஏன் வேந்தா, காலேஜ் போனதுல இருந்து ரெண்டு வருஷமா இந்த காதலர் தினம் வந்துட்டா லீவு போட்டுடறா. வெளியவே போறதில்லை. ஒருவேளை அவளுக்கு யாரும் தொல்லை தராங்களோ? யாருக்காவது பயப்படறாளோ?” என்று யோசனையாக மூத்தவள் கேட்க, அவனுக்கு திக்கென்றது. அன்றைய நாளின் நிகழ்வு அவளுக்கு மிகுந்த மனவுளைச்சலை தந்து விட்டதோ என்று குழம்பினான்.

 

கண்டிப்பாகக் கசப்புணர்வு இருக்கும் தான்! ஆனால், கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் கடந்த பிறகும் இன்னும் அதிலேயே உழல்வதை எந்த வகையில் எடுத்துக் கொள்வது? அவளுக்கு அந்த நாளை கடந்து போகுமளவு பக்குவமும், அதிலிருந்து மீளும் அளவு தைரியமும் இல்லையோ? அப்படியானால் இதை எப்படிச் சரி செய்வது என்று குழம்பிப் போனான்.

 

இதில் என்னை எதற்காகத் தவிர்க்கிறாள்? ஏன் என் கழுத்துச் சங்கிலியை அணிந்திருக்கிறாள் அதற்கு என்ன அர்த்தம்? என்று யோசித்து யோசித்து அவன் மண்டை சூடாவது போல இருந்தது. ஏதோ கொஞ்சம் தெளிந்தது போல இருந்த நிலை இப்பொழுது மீண்டும் தலைகீழானது.

 

“என்ன யோசனை வேந்தா?” விஜயா அவனைக் கலைக்க,

 

“ஹ்ம்ம் அத்தை… இன்னும் ரெண்டு வாரத்துல பிப்ரவரி ரெண்டாம் தேதி வருது. அப்ப நான் வந்து அவளை கூட்டிட்டு போறேன் அத்தை. அவளுக்கு என்ன குழப்பம்ன்னு நான் கேட்டுக்கறேன். அதுவரை அவகிட்ட கல்யாணம் சம்பந்தமா நீங்களோ மாமாவோ எதுவும் பேச வேணாம்” என்று எதையோ யோசித்தபடி பதில் கூறினான்.

 

“ஏன் வேந்தா?” எனப் புரியாமல் குழம்பியவரிடம், “எனக்கு புரியுது அத்தை. இப்பவே கேட்கலாமேன்னு நீங்க நினைக்கறீங்க. ஆனா ஒரு காரணமா தான் நான் சொல்லறேன். அதோட எனக்கும் அதுக்கு முன்னாடி முடிக்க வேண்டிய வேலைகள் கொஞ்சம் இருக்கு. எல்லாம் சரியாகிடும். என்னை நம்புங்க அத்தை” என்று உறுதியோடு பேசுபவனிடம் மறுத்துப் பேசுவதற்கு மூத்தவளுக்கு மனம் வரவில்லை.

 

முகம் தெளியாமல் இருந்த அத்தையைப் பார்த்தவன், “நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இருக்காது அத்தை. அப்படி அவளுக்கு வேற எதுவும் விருப்பம் இருக்கிறதா தெரிஞ்சா கண்டிப்பா நான் அவளைக் கட்டாயப் படுத்த மாட்டேன்” என்று கூறினான்.

 

“ம்ப்ச்… நான் அப்படி நினைக்கலை பா. இந்த பொண்ணு ஏன் இப்படி இருக்கா. நான் இன்னும் கொஞ்சம் கவனிச்சிருக்கணும் இல்லை. இப்ப சரியாகிடுவா அப்பறம் சரியாகிடுவான்னு வீணா நாள் கடத்திட்டேன்” என்று குற்றவுணர்வுடன் சொல்ல,

 

“அத்தை, நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. அவளைப் பத்தின கவலையை என்கிட்ட விடுங்க. நான் பார்த்துக்கறேன்” என்று ஆறுதலாகக் கூற, “சரிப்பா” என்று விஜயாவும் ஒப்புக் கொண்டார்.

 

அதன்பிறகு வேந்தன் மாமாவைப் போய் பார்த்து வள்ளி ஆன்ட்டி என்ன சொன்னார் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டான். வள்ளியின் பின்வாங்கலும் மனதை எதுவோ உறுத்தியது. எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், தன் அனுமானங்களை தனக்குள்ளேயே வைத்துக் கொண்டு அனைவரிடமும் விடைபெற்று தன் இல்லம் நோக்கிச் சென்றான்.

Advertisement