Advertisement

காதல் பூக்கும் தருணம் – 15

 

வள்ளியின் வருகை, சுந்தரேசனிடம் திருமணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக என்பது வேந்தனுக்குத் திண்ணம். ஆனால், இந்தமுறை மாமா முன்பு போலத் தயங்க வேண்டிய அவசியம் இருக்காது. அந்த காணொளி குறித்தும் கலங்க வேண்டியதில்லை. அனைத்திற்குமான விளக்கத்தையும் தான் ஏற்கனவே தந்திருக்கிறோமே! எனவே, மாமா வள்ளி ஆன்ட்டிக்குத் தக்க பதில்களை தந்து, திடமாகவே சூழலைச் சமாளித்து விடுவார் என்னும் நம்பிக்கை அவனுக்கு இருந்தது. 

 

கூடவே, மாமாவின் அறுவை சிகிச்சை முடிந்து, அவர் ஓரளவு தேறி இருந்த சமயமே, ‘வள்ளி ஆன்ட்டி மூலம் இனி எந்த பிரச்சனை என்றாலும் தன்னிடம் தயங்காமல் சொல்லிவிட வேண்டும்’ என்று கண்டிப்புடன் சொல்லி வைத்திருக்கிறான். வள்ளியின் குணம் ஓரளவு புரிபட்டிருந்ததாலோ என்னவோ சுந்தரேசனும் மறுக்காமல் ஒப்புக் கொண்டிருந்தார்.

 

இப்பொழுது இந்த மூத்தவள் வேறு எதுவும் புது பிரச்சனைகளைக் கிளப்பி விடாமல் இருந்தால் சரி என்னும் யோசனை மட்டும் தான் வேந்தனுக்கு! தற்சமயம் அலுவலகம் செல்லாமல் காத்திருப்பதும், இவர் பிரச்சனையை விட்டு விடும் ஆள் இல்லை என்னும் எண்ணத்தில் தான்! இவர் பார்க்கச் செல்லும் முன்பும், பார்த்துவிட்டு வந்த பிறகும் மாமாவைப் போய் பார்த்து விசாரிக்க வேண்டியிருந்தது அவனுக்கு. அதற்குத்தக்க சில நடவடிக்கைகளும் அணிவகுத்து நின்றன.

 

வேந்தன் எதிர்பார்த்தது போலவே, வள்ளி சுந்தரேசன் குறித்து விஜயாவிடம் பேச்சை தொடங்கினார். “தம்பி என்ன செய்யறான்? தூங்கிட்டு இருக்கானா? இப்ப பரவாயில்லையா?” என்னும் பொதுவான விசாரிப்புகள் தொடங்கியிருந்தது.

 

எப்படியும் அடுத்து மாமாவைச் சந்திக்கத் தான் கேட்கப் போகிறார் என்பதை ஊகித்ததும், வேண்டுமென்றே கைப்பேசியை இயக்கியவன், “ஆமாம் பா. இப்ப தான் வீட்டுக்கு வந்தேன். மாமாகிட்ட பேசணும் சொன்னீங்க தானே… இருங்க அவரு என்ன செய்யறாருன்னு பார்க்கிறேன்” என்று பேசியபடி சுந்தரேசனின் அறைக்குள் சென்றவன்,

 

யாருமில்லா கைப்பேசி அழைப்பைச் சிறு புன்னகையுடன் துண்டித்தான். சுந்தரேசன் விழித்துக் கொண்டு தான் படுத்திருந்தார். தொலைக்காட்சியில் ஏதோ திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.

 

“என்ன மாமா… ஜாதகம் பொருத்தம் எப்படி இருக்காம்? உங்களை எதுவும் கேள்வி கேட்டாங்களா?” என பொதுவாக விசாரித்தான்.

 

“ஹ்ம்ம் எதுக்கு அவசரம்ன்னு கேட்டாங்க பா” என்றார் மெலிதாக சிரித்த வண்ணம்.

 

“ஆமா, நானும் அதே தான் கேட்கறேன். அவ படிப்பு முடியறதுக்குள்ள என்ன அவசரம் மாமா உங்களுக்கு” என்றான் வேந்தன். நேரம் காலம் தெரியாமல் அவனது மனசாட்சி வேறு, ‘உனக்கு அவசரமேயில்லை பாவம்!’ என்று வாரிவிட்டது.

 

அதற்கேற்றாற்போல் சுந்தரேசனின் புன்னகை விரிய, “ஏற்கனவே நீ பொருத்தம் பார்த்துட்டு தான் அவங்களை ஜோசியர் கிட்ட அனுப்பி வெச்சியாமே? என்கிட்ட படிப்பு முடியட்டும்ன்னு கதை அளந்துட்டு நீ எதுக்கு ஜாதகம் பார்த்த?” மருமகனைப் பரிகாசித்த வண்ணம் கேள்வி கேட்டார் மூத்தவர்.

 

பிடறி முடியைக் கோதிக் கொண்டவன், “அது… எதுக்கும் இருக்கட்டுமேன்னு பார்த்து வெச்சேன்” என்று அசடு வழியச் சொல்ல,

 

அவன் செய்கையில் சிரித்தபடியே நடந்ததைக் கூறினார். “உங்கப்பனுக்குத் தான் மூஞ்சியில சுரத்தே இல்லை. அவன்கிட்ட சொல்லாம உன்கிட்ட சொல்லிட்டேனாம். அவன் முகத்தைத் திருப்ப… என் பொண்டாட்டி என்னைத் திருப்ப… ஒரே கூத்தா இருந்தது போ”

 

“அச்சோ… அதைக்கிட்ட வாங்கி கட்டிக்கிட்டீங்களா? அப்ப இதுதான் சாக்குன்னு இன்னும் ரெண்டு வாரம் பெட் ரெஸ்ட் எடுப்பீங்களே நீங்க” என்று வேந்தன் புலம்ப,

 

அதில் முறைத்தவர், “என்ன மருமகனோ போ… வீட்டுல ரெஸ்ட் எடுங்க மாமான்னு சொல்லாம, கையோட ஆபிஸ் இழுத்துட்டு போயிடுவ போல” என்று போலியாகச் சலித்துக் கொண்டார்.

 

அதற்கு வேந்தனோ, “எதுக்கு இந்த மொக்கை படங்களை பார்த்துட்டு நேரத்தை ஓட்டறதுக்கா? உங்களுக்கு எதுவும் இல்லை மாமா. நீங்க ஆரோக்கியமா இருக்கீங்க. சின்னதா அந்த ஹார்ட் மட்டும் டேமேஜ் ஆச்சு. அதையும் சரி பண்ணியாச்சு. இனி நீங்க வழக்கம்போல இருக்கலாம்” என்று நம்பிக்கையாகச் சொன்னான்.

 

இந்த சொற்கள் சுந்தரேசனுக்கு இதமாக இருந்தது. அந்த இதத்தை உள்வாங்கியபடியே, “ஆமாம் பா. நாள் முழுக்க இந்த ரூமுக்குள்ளேயே அடைஞ்சு இருக்கிறது ரொம்ப சிரமமா இருக்கு. நேரமே போகலை. உடம்பு தேறினதும் ஆபிஸ் வந்துடுவேன். இந்த பொம்பளைங்க தான் பாவம், நாள் முழுக்க ஹவுஸ் வைஃப்ங்கிற பேருல அடைச்சு வெச்சிடறோம். அவங்களுக்கு எப்படித்தான் நேரம் போகும் பாவம்? இதுல காலையில எழுந்ததுல இருந்து டைம் டேபிள் போட்டு வெச்ச மாதிரி வரிசையா வேலைங்க… எதையும் நாளைக்கு செய்யலாம்ன்னு ஒத்திப் போடக் கூட முடியாது…” என்றார் மனத்தாங்கலாக.

மாமா சொன்னதைக் கேட்டுப் புன்னகைத்தவன், “நிறைய ஆராய்ச்சி நடக்குது போலயே மாமா” என்று கேட்க,

 

“கண்டிப்பா… ‘தலைவலியும். காய்ச்சலும் தனக்கு வந்தா தான் தெரியும்ன்னு’ சொல்லற மாதிரி, வீட்டுல அடைஞ்சு இருக்கும்போது தான் அவங்க கஷ்டமும் புரியுது” என்றார் உணர்ந்து.

 

அவரிடம் ஆமோதிப்பாய் தலையசைத்தவன், “நீங்க சொல்லறது ரொம்ப சரிதான் மாமா. இப்ப தானே நம்ம சமூக கட்டமைப்பு மாறத் தொடங்கியிருக்கு. மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்போம். உங்களை மாதிரி ஒவ்வொரு மனுஷனையும் தனியா விட்டா நிறைய யோசிப்பாங்க போலவே!” என்று இலகுவாக அந்த பேச்சை முடித்து வைத்தவன்,

 

கூடவே, “சரி நான் சொல்ல வந்த விஷயத்தை மறந்திட போறேன். வள்ளி ஆன்ட்டி வந்திருக்காங்க. அவங்ககிட்ட உரிய விதமா பேசுங்க. அவங்க எதுவும் சொன்னா, வீண் டென்ஷன் வேண்டாம். நான் இருக்கேன். நான் பார்த்துப்பேன். அவங்க என்ன சொன்னாலும் உங்களுக்குக் குழப்பம் இருக்கும் பட்சத்தில, ‘யோசிக்கறேன் க்கா’ன்னு சொல்லி அனுப்பி வெச்சுடுங்க. அப்பறமா அதைப்பத்தி நாம பேசிப்போம்” என்று மென்குரலில் பள்ளி செல்லும் சிறுவனுக்கு நடைமுறையை விளக்குவது போல வேந்தன் சொல்ல,

 

“அவங்க என்ன சொல்ல போறாங்க? என் பொண்ணு கல்யாணம். அது என்னோட விருப்பம். இதுல அவங்க சொல்ல என்ன இருக்கு? அதோட அந்த வீடியோ பத்தி பேசினாலும், அதுல இருக்கிறதே நீ தான்னு சொல்லி, நடந்ததைச் சொல்லிட போறேன். வேற என்ன பெருசா வந்துட போகுது. நீ வீணா அலட்டிக்கிற” என்று சுந்தரேசன் சொல்ல, “அப்படி இருந்தா நல்லது மாமா” என்று மென்னகையோடு வேந்தன் சொன்னான்.

மாமா பாம்புக்குப் பால் வார்க்கிறார் என்பது அவனுக்குப் புரிந்தாலும், அதை வெளிப்படையாக அவரிடம் சொல்ல முடியவில்லை. மேற்கொண்டு வள்ளி பிரச்சனை செய்தால் சொல்லலாம். இல்லையா, அந்த அம்மாள் ஒதுங்கி விட்டால், சில விஷயங்களை அநாவசியமாக மாமாவிற்குச் சொல்ல வேண்டியதே இல்லையே என்னும் எண்ணம் அவனுக்கு.

 

சிறு புன்னகையுடனே, “சரி மாமா, அவங்க வெளிய இருக்காங்க. நான் போனா தான் வருவாங்க. நீங்க பேசிடுங்க. எது நடந்தாலும் நான் இருக்கேன்னு ஞாபகம் இருக்கட்டும்” என்று மகனாய் மாறி தாங்குபவனிடம், “சரிப்பா” என்ற வார்த்தை மூத்தவருக்கு தன்போல வந்தது.

 

வேந்தன் அறையை விட்டு வெளியேறுவதற்காகவே காத்திருந்தாற்போல், “சரி நான் போயி தம்பியை பார்த்துட்டு வரேன்” என்று சொல்லியபடி வள்ளி அறையினுள் சென்றார்.

 

மேகா, அம்மா தந்த தேநீரையும், சிற்றுண்டியையும் டைனிங் டேபிளில் அமர்ந்து எடுத்துக் கொண்டிருக்க, அவளைப் பார்வையால் அளந்தபடியே சோபாவில் அமர்ந்தான். வேந்தனை அவள் வழக்கம்போல அவள் கண்டுகொள்ளவே இல்லை.

 

மேகாவை பார்த்துக் கொண்டிருந்தவனிடம் வந்த விஜயா, “மாமாகிட்ட பேசுனியா? என்ன சொல்லறாரு?” என்று கேட்க, “நீங்க மாமாவைப் புரட்டி எடுத்தீட்டிங்களாமே! அதுனால இன்னும் நாலு நாள் லீவு கேட்கிறாரு” என்றான் இம்மியும் சிரிக்காமல்.

 

அதில் முறைத்த விஜயா, “நாளைக்கு என் பொண்ணு, உன்னைப் போட்டுப் புரட்டி எடுக்கிறதை இந்த கண்குளிர பார்க்கணும் டா” என்று கடுகடுவென்று முகத்தை வைத்துக்கொண்டு பதில் தர, வேந்தன் பதறிவிட்டான்.

 

“அத்தை அத்தை… ஏன் இப்படி? ஏற்கனவே அடி, தடி, வெட்டு, குத்துன்னு வன்முறையா தான் போயிட்டு இருக்கு. இதுல நீங்க வேற சாபத்தை வாரி வழங்காட்டி என்ன?” என்று கண்களில் கலவரத்துடன், பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு சொல்லுபவனைப் பார்த்து, கட்டுப்படுத்த முடியாமல் விஜயா உரக்கச் சிரித்தார். அன்னையின் மலர்ந்த சிரிப்பில் மேகாவின் கவனம் சிதற, இவர்கள் இருவரையும் புரியாத பாவனையுடன் பார்த்து வைத்தாள்.

 

அதைக் கவனித்த வேந்தனோ, “ஸ்ஸ் அத்தை… அவளை ஏன் நம்ம பக்கம் திருப்பறீங்க. அமைதியா சிரிங்க” என முணுமுணுப்பாய் மூத்தவளிடம் கோரிக்கை வைக்க, அதற்கும், “என்ன வேந்தா இப்பவே இப்படி பயப்படற?” என்று முகம் மலரச் சொல்லியவருக்குச் சிரிப்பே அடங்க மறுத்தது.

 

தன்னை பரிகசித்துச் சிரிக்கும் அத்தையைப் பார்த்துக் கடுப்பானவன், “நீங்க இப்படியே சிரிங்க. உள்ள போன உங்க நங்கையா வந்து, ‘புருஷன் உடம்பு முடியாம படுத்துட்டு இருக்கான். குடும்ப பொம்பளைக்கு சிரிப்பென்ன வேண்டி கிடக்குன்னு’ சீரியல் வில்லி மாதிரி டோஸ் கொடுத்தா தான் உங்களுக்கு சரிவரும்” என்று முனங்க,

 

சட்டென்று வாயை மூடியவர், “அடியாத்தி, இது என் சாபத்தை விட பெருசா இருக்கே!” என்று விழி விரியச் சொல்ல,

 

‘புருஷனையும், பொண்டாட்டியையும் ஒத்த பொம்பளை ஆட்டி வெக்கும் போலயே!’ என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டவன், “அப்படி வாங்க வழிக்கு” என்று அத்தையிடம் சொல்ல, உடனே ஜகா வாங்கியவர் வேறு பேச்சுக்குத் தாவி விட்டார். “சரி சரி ஏதோ பேசணும்ன்னு சொன்னியே பேசிட்டு வந்தியா?” என்று மேகாவை கண்ஜாடை காட்டி கேட்க,

 

முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு, “ஆமாம் பேசிட்டாலும்…” என்று மென்குரலில் சலித்தவனின் வார்த்தைகள் அவருக்கு எட்டும்முன் பேச்சை மாற்றினான்.

 

“சரி உங்க பிரண்ட் என்ன சொன்னாங்க?” என்று விஜயாவிடம் கேட்க, அவருக்குப் புரியவில்லை “அது யாரு டா என் பிரண்ட்?” என்று குழப்பத்துடன் கேட்க, “ஹ்ம்ம் ஜோசியர்…” என்றான் இழுவையாக.

 

“வாயி குறையறதே இல்லை வேந்தா உனக்கு” என்று செல்லமாகச் சலித்துக்கொண்டவர், “ஜோசியர் என்ன சொல்லுவாரு. நீ தான் ஏற்கனவே பொருத்தம் பார்த்துட்டு தான அனுப்புன, அவரும் பொருத்தம் நல்லா இருக்குன்னு தான் சொன்னாரு” என்று சொல்ல, “அதைக் கொஞ்சம் சிரிச்சுட்டே தான் சொல்லுங்களேன்” எனச் சீண்டினான்.

 

சிரித்தபடியே, “சரி பொருத்தம் வராட்டி என்னடா பண்ணியிருப்ப?” என்று சந்தேகம் கேட்க, “ஜாதகம் பார்க்கவே கூடாதுன்னு பிடிவாதம் பிடிச்சிருப்பேன்” என்றான் புருவத்தை ஏற்றி இறக்கி, ‘அடப்பாவி’ என்று விஜயா தான் வாயைப் பிளக்க வேண்டியதாகி விட்டது.

 

“இப்ப அதுவா அத்தை முக்கியம். ஜோசியம் பார்த்தா போதுமா? உங்க பொண்ணு கிட்ட சம்மதம் கேளுங்க, நான் ‘இந்த மாதிரி உங்க அப்பா என்கிட்ட பேசினாரு. நம்ம வீட்டுல நமக்கு ஜாதகம் பார்க்கப் போயிருக்காங்கன்னு’ மட்டும் சொல்லி வெச்சிருக்கேன்” என்று வேந்தன் சொல்ல,

 

அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்தபடி, “ஜோசியம் எல்லாம் நீயே பார்த்துக்கிற, பொண்ணுகிட்ட நீ பேச மாட்டியா?” என்று ஒற்றை விரலை நாடியில் வைத்த வண்ணம் ஆச்சரியமாக விஜயா கேட்டார்.

 

மீண்டும் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டவன், “உங்க பொண்ணு தான, பேசிட்டு தான் மறுவேலை பார்ப்பா. நீங்க வேற ஏன் அத்தை!” எனச் சலிப்பான குரலில் சொல்லியவன், பின் முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு, “சரி எனக்கு ஒரு போன் பேச வேண்டியிருக்கு அத்தை. நான் வெளிய போய் பேசிட்டு வந்துடறேன். நீங்க அவ கிட்ட பேசி வையுங்க. சொதப்பிடாதீங்க அத்தை. என் வாழ்க்கையைவே உங்க கையில தான் ஒப்படைச்சிட்டு போறேன்” என்று விளையாட்டு குரலில் மனதில் இருப்பதை சொல்லியவன் திரும்பியும் பாராமல் கைப்பேசியோடு நகர்ந்து விட, அவனது முதுகை ஆச்சரியமாகவும், ஆராய்ச்சியாகவும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் விஜயா.

 

‘ஏன் மேகாவை இவனுக்குத் தெரியாதா? அவகிட்ட பேச என்னைத் தூது அனுப்பாட்டி என்ன? என்ன தான் விளையாட்டு ரெண்டு பேருக்கும் நடுவுல?’ வெகுவாக குழம்பியது மூத்தவளின் மனம்.

 

அவரது யோசனையைத் தடை செய்யும் விதமாக, “என்னமா தீவிர யோசனை போல” என்றபடி அன்னையின் அருகில் வந்தாள் மேகா.

 

“ஹ்ம்ம் ஒன்னும் இல்லை குட்டிம்மா. உன்கிட்ட கொஞ்சம் பேசணும். இங்க வா உட்காரு” என முகத்தை இயல்பாக்கி மகளை தன்னருகே அமர வைக்க, என்ன கேள்வி வரும் என்று புரிவது போல இருந்தது மேகாவிற்கு. பதற்றத்துடன் தாயின் முகத்தைப் பார்க்க தயங்கியபடி அவரின் அருகே அமர்ந்தாள்.

Advertisement