Advertisement

 

 

காதல் பூக்கும் தருணம் – 14

 

மேகா தேர்ந்த அரசியல்வாதிகளைப் போல வெளிநடப்பு செய்வது, மௌனம் சாதிப்பது, புறக்கணிப்பது என்று வேந்தனிடம் செயல்பட்டாள்.

 

வேந்தனுக்கு எப்பொழுதும் மெலிதாக கோபம் எழும். ஆனால், இன்றோ நேர் எதிரான மனநிலை. ‘என்ன சொன்னாள்? மற்றவர்கள் கட்டினால் தான் கழற்றி இருப்பாளா? அப்பொழுது நான் கட்டியது?’ அவனுக்குள் தித்தித்த உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வரும் வழி தெரியாமல் திண்டாடினான். அவனுடைய நினைவுகள் அன்றைய தினம் நடந்த நிகழ்வுகளை அசைபோட்டது. தாலியைக் கழற்றிக் கொடு என்று கேட்டபோது மேகா கோபம் கொண்டதும், இவனை விட்டு விலகிச் சென்றதும்… அன்று அலைக்கழித்த நினைவுகள் இன்று சுகம் தந்தது. கூடவே, அவளது வெண்சங்கு கழுத்தினில் கண்ட இவனது கழுத்து சங்கிலியில் மனம் சிக்குண்டு மீள மறுத்தது.

 

‘அப்படியானால் மேகாவால் இந்த பந்தத்தை இலகுவாக உதறித் தள்ள முடியவில்லையா? பிறகு ஏன் என்னை விட்டு விலகியே இருக்கிறாள்? என்ன சொல்ல வருகிறாள்?’ அவளது முரண்பாடான செய்கையில் தெளிவாகக் குழம்பினான். காதல் முரண்பாடுகளைக் கொண்டது தானே! புரிந்து கொள்ளும் வழி புரியாது தவித்தான்.

 

வேந்தனின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் கோபமாகக் காரை விட்டு இறங்கிய மேகா, சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, அரைகுறை அனுமானத்தில் குழப்பம் கொண்டவன் காரை விட்டிறங்கி அவளை நெருங்கினான். “முதல்ல காருல ஏறு மேகா. எப்ப பாரு வறட்டு பிடிவாதம்” என்று மெல்லிய குரலில் பிறர் கவனத்தை ஈர்க்காமல் அதட்ட, வழக்கம்போல அவள் அவனைக் கண்டுகொள்ளவே இல்லை.

 

“உன்கிட்ட பேசணும் மேகா. இப்படி செஞ்சா எப்படி?” அவளைப் புரிந்து கொள்ள முடியாத சலிப்பு அவனது குரலில் வெளிப்பட்டது. அதற்கும் பதில் சொல்லாமல் தொடர் மௌனம் சாதிப்பவளிடம், “பாரு கத்த வெக்காத… இப்பவும் உன் கையை பிடிச்சு இழுத்து உள்ளே தள்ளுற எண்ணம் எனக்குச் சுத்தமா இல்லை” என்றான் எரிச்சல் மிகுதியில்.

 

இப்பொழுது அவனை ஏறிட்டுப் பார்த்தாள். ‘இவன் ஒருத்தன் அடிக்கடி கையை பிடிச்சு இழுக்கிறேன்… கையை பிடிச்சு இழுக்கிறேன்னு சொல்லிட்டு…’ அவனது இந்த வார்த்தைப் பிரயோகங்களில் அவளது மனநிலை இலகுவாகி, அவனை உள்ளுக்குள் பரிகசித்தது. வெகு கவனமாக முகத்தில் எந்தவித மாறுதலையும் வெளிக்காட்டாமல், அவனை மேலும் வெறுப்பேத்தாமல் சமத்தாக காரினுள் ஏறி அமர்ந்து கொண்டாள்.

 

அவளைப் பின்தொடர்ந்து உள்ளே அமர்ந்தவன், இம்முறை கேள்விகளைக் கேட்கவில்லை. மாறாக தன் அனுமானங்களை அவளிடம் உறுதிப்படுத்திக் கொள்ள நினைத்தான். “சோ நீ நான் கட்டின தாலியைக் கழட்டலை” என்று நிதானமாக அவன் கேட்க, அவள் பதிலுக்குப் பார்த்த பார்வையின் பொருள் அவனுக்கு விளங்கவில்லை.

 

புருவங்கள் முடிச்சிட, “ஹே… என்ன தான் நினைச்சுட்டு இருக்க? நான் பாட்டுக்கு கேட்கிறேன். என்னவோ வாய் நிறையக் கொழுக்கட்டை வெச்சு இருக்க மாதிரி எப்ப பாரு லுக் விடற. என்னைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு? நானே செக் பண்ணிடுவேன் பார்த்துக்க” என்று பல்கலைக் கடித்துக் கொண்டு கறார் குரலில் வேந்தன் சொல்ல,

 

அவன் கோபத்தில் உதிர்த்த வார்த்தைகளில் அவளுக்குச் சிரிப்பு வந்தது. முகம் கனிய, ‘இவன் பரிசோதிப்பவனா?’ என்று ஆச்சரியமாக அவனை அளவிட்டாள். இல்லை இவன் இதற்குக் கண்டிப்பாகச் சரிப்பட்டு வர மாட்டான் என்று அவளுடைய மனம் உறுதியாகிக் கூறியது. மெல்லிய புன்னகை உதட்டில் தவழ, கழுத்தை ஒட்டாத வண்ணம் தன்னுடைய துப்பட்டாவை நகர்த்தியவள், “என் கழுத்துல ஒன்னும் இல்லை. நான் கழட்டிட்டேன்” என்று கழுத்தைச் சுற்றி தன் கரங்களால் தடவியபடி கூறினாள்.

 

அவளின் நக்கல் சிரிப்பு அவனது கோபத்திற்கு நெய் வார்க்க, “அப்பறம் இது என்ன?” என்றான் அவளது கழுத்தை பாந்தமாகத் தழுவியிருந்த அவனது சங்கிலியைத் தொட்டுக் காட்டி.

 

வேகமாக அவன் கையை தட்டி விட்டவள், “இது செயின். அதுக்கென்ன இப்ப?” என்றாள் அலட்சியமான குரலில். ‘அவனுக்கு, இந்த செயின் அவனுடையது என்ற நினைவெல்லாம் இருக்குமா என்ன?’ என்னும் எண்ணம் அவளுக்கு.

 

ஆனால், அந்த எண்ணத்தை வேந்தன் உடைத்தான். தன் முகம் சிடுசிடுக்க, “அது என்னோட செயின்” என்று வேந்தன் கூற, “இதென்ன வம்பா இருக்கு. உங்களோடதுன்னு பேரா எழுதி வெச்சிருக்கீங்க” என முறைத்தாள்.

 

“இது நான் ஆர்டர் செஞ்சு வாங்கினது. நான் சொன்ன டிசைன் இது. இங்க பாரு இந்த மாதிரி ஒவ்வொரு ஜாயின் இடத்திலேயும் MM ன்னு இருக்கும். இந்த செயினில் மொத்தமும் மூணு இடத்தில் இப்படி வரும்” என்று அதன் வடிவமைப்பை அவன் சரியாகக் கூற, அவள் மெலிதாக வாயைப் பிளந்தாள். வெகுசில நொடிகளில் நிதானித்து, தனது வியப்பை அவனுக்கு வெளிக்காட்டாமல் தன் முகபாவனையை மாற்றியவள், “அட இந்த செயின் உங்களோடதா? ஆமா நான் தான் நம்ம வீட்டுல இருந்ததுன்னு, அழகா இருக்கேன்னு எடுத்து போட்டுக்கிட்டேன். ஆமா, உங்க செயின் எப்படி எங்க வீட்டுக்கு வந்தது?” என்று சமயத்திற்குத் தகுந்தது போல சமாளிப்பாகக் கூறி அவனிடம் பதில் கேள்வி கேட்க, அவனது பார்வை கூர்மை பெற்றது.

 

‘ஓ நீ ஒத்துக்க மாட்ட’ என காட்டமாக எண்ணியவன், “அப்ப சரி இப்ப தெரிஞ்சுடுச்சல்ல இது என்னோட செயின் அப்படின்னு. இப்போ கழட்டி கொடு” என்று சட்டமாகக் கேட்டான்.

 

இது போன்று கேட்பான் என்று எதிர்பார்க்காததால் திருதிருத்தவள், “இல்… இல்லை… இது எனக்கு ரொம்ப லக்கியா இருக்கு. நா… நானே வெச்சுக்கிறேன். நீங்க… நீங்க வேணும்ன்னா வேற வாங்கிக்கங்க” என்று அவசர அவசரமாக மென்று விழுங்கி சொல்ல, அவன் கேலியாக உதடு சுளித்தான்.

 

அவனது பாவனையில் மிரட்சி எழ, “என்ன?” என்று உள்ளே போய்விட்ட குரலில் படபடப்பாக மேகா கேட்டாள். அவனோ அமர்த்தலாக “சரி நீயே வெச்சுக்க…” என்று சொன்னவனின் குரலில் என்ன இருந்தது என்று புரியாமல் அவள் மலங்க மலங்க விழித்தாள். அவனோ மேலும் தொடர்ந்து, “நான் உன்கிட்ட பேச வந்தது என்ன விஷயமா தெரியுமா?” என்று அவளிடம் கேள்வி கேட்டு நிறுத்தினான்.

 

குழப்பத்துடன் அவனை என்ன என்பது போலக் கேள்வியாகப் பார்க்க, “எனக்கு கல்யாணம்…” என்று சொல்லி வேண்டுமென்றே இடைவெளி விட்டான். அவள் அதிர்ந்து விழிக்க அதை ரகசியமாய் உள்வாங்கியபடியே, “உன்னோட…” என்று சேர்த்து முடித்தான்.

 

மீண்டும் திருவிழாவில் தாயைத் தவற விட்ட குழந்தை போல மலங்க மலங்க விழித்தவளிடம், “மாமா காலையில தான் என்கிட்ட கேட்டாங்க. இப்ப வீட்டுல நம்ம ரெண்டு பேருக்கும் ஜாதக பொருத்தம் பார்க்கப் போயிருக்காங்க. பொருத்தம் சரியா வந்தா உன்னோட எனக்குக் கல்யாணம் நடக்கும்” என்று வேந்தன் சொல்ல, “இல்லாட்டி?” எனக் காட்டமாக மேகா கேட்டாள்.

 

அவளது பாவனையிலும், கோபத்திலும் எழுந்த சிரிப்பை தன் இதழ்களுக்குள் மறைத்துக் கொண்டு, “இல்லாட்டி… ஹ்ம்ம் தெரியலையே” என்று வேண்டுமென்றே பாவனையாக சொன்னான். அவன் விளையாட்டு புரியாதவளோ அவன்மீது கொலைவெறி கொண்டாள்.

 

“அப்படி ஒன்னும் நீ என்னை கட்டிக்க வேணாம்” என்று வீம்பாகச் சொன்னவளின் கோபம் அவனுக்குத் தித்தித்தது. ‘இவ ஒத்துக்க மாட்டாளாம்? நான் மட்டும் சொல்லணுமாமா?’ என்று எண்ணியவன்,

 

“ஒபீனியன் எல்லாம் ஜாதகம் பொருத்தம் வந்தா தான் கேட்பாங்க. அப்ப சொல்லிக்க உனக்கு விருப்பமா, இல்லையான்னு” என்று நிர்மலமான முகத்துடன் இலகுவாக வேந்தன் சொல்ல, “பொருத்தம் வராட்டி எவளை கட்டிக்கப் போறதா உத்தேசம்?” என்று பார்வையில் அனல் வீச அவனிடம் கேட்டாள்.

 

“தெரியலையே நான் எல்லாம் சமத்துப் பையனா அப்பாவை பொண்ணு பார்க்க சொல்லிடுவேன். நமக்கு இந்த பொண்ணுங்க பின்னாடி சுத்தறது எல்லாம் செட்டே ஆகாது” என்று சொல்லி அவளுடைய கோபத்திற்கு தூபம் போட்டான்.

 

மேகாவிற்குக் கோபம், கோபம், கோபம் மட்டுமே பிரதானமாக இருக்க, கோபத்தோடு டேஷ்போர்டை திறந்து ஆராய்ந்து பார்த்தாள். அங்கே ஹெட்செட், சார்ஜர் வயர்கள் சில இருந்தது. அதில் ஒன்றை உருவி அவனது கழுத்தைச் சுற்றிப் போட்டவள், அவனை இழுத்து “சங்கை நெருச்சுடுவேன்” என்று மிரட்ட,

 

வேந்தனின் கண்ணோரம் சுருங்கிச் சிரிக்க, அவனது பாவனை, இலகுத்தன்மை எல்லாம் அவளது எரிச்சலை மேலும் மேலும் அதிகமாக்கியது. அவளது பார்வையின் உஷ்ணம் கூடுவதை உணர்ந்தவன், தன்னுடைய கழுத்திலிருந்து அவளது கரங்களை விலக்கி, அவள் மாலையாக்கிய வையரை வெளியே எடுக்க அது ஒரு மஞ்சள் வண்ண ஹெட்செட்.

 

“என்ன குட்டிம்மா பழிக்குப் பழியா? நான் உன் கழுத்தில தாலி கட்டிட்டேன்னு நீயும் கட்டி விடலாம்ன்னு பார்க்கறியா? இது பொக்கிஷம் ஆச்சே! நான் பத்திரமா வெச்சுக்கிறேன்” என்று இலகுவாகப் பேச அவள் குழம்பிப் போனாள்.

 

‘இவன் என்ன தான் யோசிக்கிறான்?’ என புரியாமல் இருந்தவளைக் கீழ்க்கண்ணால் பார்த்தவன், ‘என்னையும் நீ இப்படி தான குழப்பி விட்ட’ என்று மனதிற்குள் வசை பாடினான்.

 

“குட்டிம்மா, என்னை பிறந்ததுல இருந்து பார்க்கிற. உன்னாலேயே என்னைச் சமாளிக்க முடியாட்டி, வேற யாரு சமாளிப்பா சொல்லு?” என்று அவளை மேலும் குழப்பி விட்டான். ‘இப்ப தான் ஜாதகப் பொருத்தம் வந்தா தான் கல்யாணம்ன்னு சொன்னான். அதுக்குள்ள நான் மட்டும் தான் சமாளிக்க முடியும்ன்னு சொல்லறான். என்ன தான் நினைக்கிறான்’ என்று அவளுக்கு எதுவும் புரியாத குழப்பத்தில் முகம் சுருங்கி விட்டது. இப்பொழுது வேந்தன் தெளிவாகி, மேகாவை அழகாகக் குழப்பி விட்டிருந்தான்.

 

வீடு செல்லும் வரையிலும் இருவருக்குமிடையே நிசப்தம் மட்டுமே! வீட்டிற்குள் ஒன்றாகப் பிரவேசித்தவர்களைக் கடுகடுத்த பார்வையுடன் எதிர்க்கொண்டார் வள்ளி. நீண்ட நாட்களுக்குப் பிறகு தம்பியின் வீட்டிற்கு விஜயம் செய்திருந்தவர் கண்ட காட்சி அவரை ஏகத்திற்கும் கடுப்பேற்றியது.

 

“என்ன மேகா இப்ப தான் காலேஜ் விட்டாங்க போல” குத்தலாக வள்ளி கேட்க, அவளுக்கு அவர் தங்களின் தாமதத்தைக் கோடிட்டுக் காட்டுகிறார் என்பது புரியவில்லை. இயல்பான குரலிலேயே, “ஆமாம் அத்தை. நீங்க நல்லா இருக்கீங்களா?” என்று விசாரித்தவள், “போய் ரிஃப்ரெஷ் ஆகிட்டு வரேன் அத்தை” என்று தன்னறை நோக்கி நகர்ந்தாள்.

 

சோபாவில் அமர்த்தலாக அமர்ந்து, கண்களைக் கூர்மையாக்கி வள்ளியையே பார்த்துக் கொண்டிருந்தான் வேந்தன். அவனுக்கு அவரது மறைமுக குற்றச்சாட்டுகள் தெளிவாகப் புரிந்தது.

 

“என்ன ஆன்ட்டி? எப்படி இருக்கீங்க?” கடுப்பாக அமர்ந்திருந்தவரைப் பார்த்து, வேந்தன் கேட்டான்.

 

அவன் புறம் திரும்பியவர், “ஹ்ம்ம்… நல்லா இருக்கேன்” என்றார். தன் ஒட்டுமொத்த திட்டத்தையும் சீர்குலைக்க வந்தவனின் மீது அந்த பெண்மணிக்கு அத்தனை ஆத்திரம். வெளிக்காட்ட முடியாத சூழலில் இருந்தார்.

 

தன்னிடம் வள்ளி பேச விரும்பவில்லை என்று புரிந்தாலும், “உங்க மகன்… ஹ்ம்ம் செந்தில் தான பேரு? அவரு எப்படி இருக்காரு?” என்று அமர்த்தலாகவே வேந்தன் கேட்க, “அவனுக்கென்ன ராஜா மாதிரி இருக்கான்” என்றார் பட்டும் படாமல்.

 

“அவரு எந்த காலேஜ்ல படிச்சாரு?” அவன் படிக்கவில்லை என்று தெரிந்தும் வேண்டுமென்றே சீண்டலாகக் கேட்டான்.

 

அவனை முறைத்த வள்ளியோ, “அவனுக்கு படிக்கணும்ன்னு என்ன அவசியம்? இருக்கச் சொத்தை பார்த்துக்கிட்டா போதாதா?” என்று அலட்சியமாக வள்ளி சொல்ல,

 

அவன் சொத்துக்களை மேற்பார்வை கூட பார்ப்பதில்லை என்ற உண்மை தெரிந்திருந்த வேந்தனின் இதழ்கள் இகழ்ச்சியாய் வளைந்தது. “ஓ மறந்துட்டேன் ஆன்ட்டி. நீங்க மேகா கிட்ட இப்ப தான் காலேஜ் முடிஞ்சதான்னு கேட்டபோதே ஞாபகம் வந்திருக்கணும். ஸ்ட்ரைக் ஆகலை. உங்க மகன் காலேஜ் போயிருந்தா அது எத்தனை மணிக்கு விடுவாங்கன்னும் தெரிஞ்சிருக்குமே! தெரியாம தான அவகிட்ட அப்படி கேட்டீங்க” என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, மேகாவிடம் பேசியதற்குத் தன் கண்டனத்தை அழுத்தமாகப் பதிவு செய்தான்.

 

அதில் கோபம் வரப்பெற்றவரோ, “வயசுப்புள்ளை பொழுது சாய வீட்டுக்கு வந்தா கேட்கத்தான் செய்வாங்க” என்று வள்ளி சிடுசிடுப்பாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விஜயா அவர்களுக்கான தேநீருடன் வந்தார். “வா வேந்தா…” என அவனையும் உபசரித்து இருவருக்கும் தேநீர் தர,

 

கடுகடுத்த முகத்துடன் வேந்தன் அமர்ந்திருந்தான். ‘வயசு புள்ளைன்னு இந்த அம்மாக்கு இப்ப தான் உரைக்குதா?’ என்னும் ஆத்திரம் அவனுக்கு!

 

“புள்ளை காலேஜ் முடிஞ்சு இத்தனை நேரம் கழிச்சு வரா. இதெல்லாம் கேட்கிறதே இல்லையா விஜயா? என்னத்த புள்ளை வளர்க்கிறியோ?” என வள்ளி நேரடியாக விஜயாவை சாடத் தொடங்கினார். அதைக்கேட்ட வேந்தன் கோபத்தை அடக்கும் வழி தெரியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

 

“என்ன அண்ணி எப்பவும் வர நேரத்தை விட கொஞ்சம் தான நேரமாகியிருக்கு. படிக்கிற பிள்ளைக்கு ஏதாவது வேலை இருக்கும். இதெல்லாம் என்னன்னு கேட்க? எப்பவும் கொஞ்சம் முன்ன பின்ன ஆகும் தான் அண்ணி” என்று இலகுவாக பதில் சொல்லிய விஜயா, எரிச்சலோடு அமர்ந்திருந்த வேந்தனை ‘எதுவும் கூடக் கூடப் பேசாதே!’ என்பது போலச் சைகை செய்தார்.

 

அவனுக்குப் புரிந்தாலும் ஒரு ஆத்திரம். இந்த வள்ளி செய்து வைத்த வேலைகளால்! அதைத் தெரிந்து கொண்ட நாளிலிருந்தே கட்டுக்கடங்காத ஆத்திரம். இருந்தும் பிரச்சனை வேண்டாம் என்று பொறுமை காத்தான்.

 

அவனது கோபமான மனநிலை புரிந்து அவனைத் திசைதிருப்பும் விதமாக, “நீ மறுபடியும் ஆபிஸ் போகணுமா வேந்தா” என்று விஜயா கேட்க,

 

“போகணும்ன்னு தான் நினைச்சேன். ஆனா இப்ப இங்க ஒரு முக்கியமான வேலை இருக்கு அத்தை” என்று எச்சரிக்கை செய்யும் விதமான பாவனையோடு வள்ளியைப் பார்த்த வண்ணம் விஜயாவிடம் பதில் கூறினான்.

 

அவனது பார்வை மாற்றம் புதிதாக இருக்க, வள்ளிக்கு அதீத குழப்பம். இருந்தும் அதை அலட்சியம் செய்து அமர்ந்திருந்தார். சற்று நேரத்தில் தன் ரகசியத் திட்டங்கள் அம்பலமாகப் போவது தெரியாமல், ‘தன் திட்டங்களை எப்படிச் சாதிப்பது? அது நிறைவேறாவிட்டால் வேறு என்ன வகையில் ஆதாயம் தேடலாம்?’ என்பது போன்ற யோசனையில் அந்த பெண்மணி ஆழ்ந்தார்.

Advertisement