Advertisement

காதல் பூக்கும் தருணம் – 13

‘எதுவோ புதிதாகச் செய்யப்போகிறான். மீண்டும் இங்கிருந்து புறப்பட்டு சென்று விடுவதற்கு புது திட்டம் போடுகிறான்’ என்பது போன்ற எண்ணத்தில் தான் விஜயாவும், பாலாஜியும் இருந்தது. ஆனால், இப்படி ‘எனக்கும் மேகாவுக்கும் பொருத்தம் பார்த்து வாருங்கள்!’ என்று சொல்வான் என்று அவர்கள் இம்மி கூட எண்ணவில்லை.

ஏதோ இதுவரை கேட்டே கண்டிராத அதிசயத்தைக் கேட்டவர்கள் போல, பேசும் மொழி மறந்து விழி விரித்து பதிலற்று அமர்ந்திருந்தனர் இருவரும்.

அவர்களது பாவனையில் குழம்பியவன், “என்ன ஆச்சு?” என்று புரியாமல் கேட்க, “என்ன செய்யணும்?” என்று உறுதிப்படுத்தும் பொருட்டு மீண்டுமொருமுறை விஜயா கேட்டார்.

“கல்யாணத்துக்குப் பொருத்தம் பார்ப்பாங்களே அத்தை! போயி பார்த்துட்டு வாங்கன்னு சொன்னேன்” என்று வெகு இலகுவாக வேந்தன் சொல்ல, இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“உங்ககிட்ட மாமா தான் சொல்லறேனாரு. நான் தான் நீங்க ஸ்ட்ரெயின் பண்ண வேணாம். நானே பேசறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்” என்றவனை இருவரும் இன்னும் ஆச்சரியமாகப் பார்க்க,

‘இவங்க ஏன் இப்படி பார்க்கிறாங்க’ எனப் புரியாமல் குழம்பியன், “அஃப்கோர்ஸ் என்னோட முழு விருப்பத்தோடும், சம்மதத்தோடும் தான் இந்த ஏற்பாடே!” ஒருவேளை அதற்குத் தான் இப்படிப் பார்க்கிறார்களோ என்று நினைத்து இவன் அந்த விளக்கத்தையும் சேர்த்தே சொல்ல,

‘என்ன நடக்கிறது இங்கு?’ என்று ஒரு அதிசயித்த, குழப்பமான மனநிலைமை தான் இன்னும் இருவருக்கும்.

பின்னே, இரண்டு வீட்டிலும் ஒற்றை பிள்ளைகள். அவர்களுக்கான திருமண பேச்சுவார்த்தை தொடங்கலாம் என்ற முடிவு! நல்ல விஷயம் தான்! இருந்தாலும் இவ்வளவு பெரிய விஷயத்தை அனைவரும் ஒன்றாகக் கலந்தாலோசித்து முடிவு செய்யாமல், இப்படி இளையவன் வந்து சொன்னால்?

சந்தோஷமான விஷயம் என்றாலும், குழப்பமும், அதிர்ச்சியுமே பெரியவர்களுக்கு முன் நின்றது. இன்னமுமே முகம் தெளியாதவர்களைக் கண்டு, இந்த செய்தி அவர்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கும் எனப் புரிய, அவர்கள் பேச வேண்டிய விஷயத்தை நாம் சட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்று கால தாமதமாகவே தெளிவு கிடைத்தது அவனுக்கு.

‘ஏற்கனவே மேகாவிற்குத் தாலி கட்டிய விஷயம், வீடியோ அது இதென்று எதுவும் அவர்களுக்குத் தெரிந்து விடக்கூடாது’ என்னும் பதற்றம் அவனுக்கு. அதனாலேயே அவர்கள் எதிர்வினை எப்படி இருக்கும் என அனுமானிக்காமலேயே… திருமணம், பொருத்தம் என்று வந்து நின்றிருந்தான்.

இப்பொழுது அவர்கள் மனநிலை புரிய, ‘அச்சோ’ என்று உள்ளூர நொந்தவன், “அது… அத்தை… அது வந்து… மாமா என்கிட்ட கேட்டாங்க. நானும் சரின்னு சொல்லிட்டேன். என் சம்மதம் வாங்கினதும் அவரு இது விஷயமா உங்ககிட்ட எல்லாம் பேசணும்ன்னு தான் சொன்னாரு. நான் தான் அவரு ரெஸ்ட் எடுக்கட்டும்ன்னு… அது… அதனால தான் நான் பேச வேண்டியதா போயிடுச்சு” வேந்தனுக்கு இந்தளவு பேச்சு தயங்கும் என்பதே இன்றுதான் இருவரும் உணர்கிறார்கள்.

அவன் தயங்கியதில் “என்ன திடீர்ன்னு?” என்று விஜயா தான் முதலில் வாயைத் திறந்தார். அவர் முகத்தில் கலவரம். கணவருக்கு அறுவை சிகிச்சை முடிந்திருக்கிறது. முன்பைவிட மிகவும் சோர்வாகத் தெரிகிறார். இந்த நேரத்தில் படித்துக் கொண்டிருக்கும் பெண்ணுக்குத் திருமணம் செய்ய நினைக்கிறார் என்றால், அவர் முழுதாக குணமாகவில்லையோ என்று அஞ்சினார். நடந்த சிகிச்சைகள் அவரது வலியைத் தற்காலிகமாக ஒத்திப்போடுகின்றனவா? மொத்தமாகக் குணமாக்கவில்லையா? என்று மனைவிக்கே உரிய கவலையும், பயமும் தோன்றி அவரை அலைக்கழித்தது.

பாலாஜிக்கு ‘ஏன் திடீரென்று இப்படி ஒரு முடிவு?’ என்று புரியவில்லை. கூடவே மெல்லிய கோபமும், ‘என்னிடம் ஒப்புதல் கேட்க கூட மனமில்லையா?’ என்று தந்தைக்கே உரிய தார்மீக கோபம் அவரிடம். இது ஒருவகை உரிமை போராட்டம்!

விஜயாவின் கலவரமான முகத்தைப் பார்த்து, “அத்தை, மாமாவுக்கு எதுவும் இல்லை. ஆனா ஆசைப் படறாரு. அவ்வளவு தான்! நீங்க வீணா கவலை படாதீங்க” என்று அவருக்குச் சமாதானம் கூறியவன், தந்தையிடம், “சாரி பா. நீங்க பேசி முடிவெடுங்க. நான் இதுல தலையிட்டிருக்கக் கூடாது” என்று தேய்ந்த குரலில் கூற,

அவன் முகம் வாடியதில், “அச்சோ… இதுக்கு ஏன் இப்படி இருக்க?” என்று இடையிட்ட விஜயா, “என்னண்ணா வீட்டுல இருக்க நிலைமை புரிஞ்சும்… நாம ஏன் தயங்கறோம்? அவருக்கு ஏதோ தோணி இருக்கும். இவனைப் பார்க்கவும் கேட்டு இருப்பாரு. இப்ப அவரு இருக்க நிலைமையில நம்மகிட்ட அவரால பேசிட்டு இருக்க முடியுமா? ‘படிக்கிற பிள்ளைக்கு எதுக்கு கல்யாணம்? இப்ப என்ன அவசரம்ன்னு’ மாத்தி மாத்தி கேட்டு அவரை ஒருவழியாக்கி இருப்போம். அது தெரிஞ்சு தானோ என்னவோ இவன் சொல்லறேன்னு பொறுப்பை எடுத்திருப்பான். இதுக்கு நாம சுணங்கினா… அவனும் வருத்தப் படுவான்” என்று விளக்கம் தர, பாலாஜியும் கொஞ்சம் தெளிந்தார்.

“இவன் கேட்ட தோரணை தான்ம்மா… என்னவோ போயி துணி வாங்கிட்டு வாங்கன்னு சொல்லற மாதிரி சாதாரணமா சொல்லறான்” எனக் கொஞ்சம் மகனை முறைத்தபடியே சொல்ல,

அசடு வழியும் சிரிப்பொன்றை உதிர்த்தவன், பிடரி முடியை அழுந்த கோதிக் கொண்டான். வெட்கமாம்! ஆண்களின் வெட்கம் வரையறுக்க முடியாத கவிதைகளில் ஒன்று தான்! அதை உணர்த்திக் கொண்டிருந்தான் மகிழ்வேந்தன்.

அவன் செய்கை சிரிப்பைத் தான் வரவழைத்தது மூத்தவர்களுக்கு. “சரி இன்னைக்கு நல்ல நாள் தான். இன்னைக்கே போயி நாங்க ஜோசியரை பார்த்துட்டு வந்துடறோம்” என்று விஜயா சொன்னார். கூடவே வேலைக்கார பெண்மணியிடமும், சுந்தரேசன் எழுந்தால் குடிக்க என்ன தர வேண்டும் என்கிற விவரங்களை எல்லாம் சொல்லிவிட்டுக் கிளம்ப, வேந்தனும் கிளம்பி நின்றான்.

அவனை யோசனையாகப் பார்த்தபடி, “மூணு பேரா போகக் கூடாது வேந்தா” என விஜயா தடை சொல்ல,

“உங்களோட வரேன்னு சொன்னேனா அத்தை?” என முறுக்கிக் கொண்டு பதில் சொன்னவன், விஜயாவிற்கு மட்டும் கேட்கும் குரலில், “என்கிட்ட சுத்தமா பேச்சுவார்த்தையே இல்லை அத்தை. ரொம்ப கோபமா இருக்கா. அதுதான் மலையிறக்கப் போறேன். ரெண்டு பேரும் வரதுக்கு கொஞ்சம் நேரம் ஆகும்” என்று சொல்ல,

“பொருத்தம் தான் பார்க்க போறோம். உனக்கென்ன அவசரம்?” என பாலாஜிக்குக் கேட்டு விடாமல் அவனிடம் கண்டிப்பு காட்டினார்.

“அதெல்லாம் இருக்கும். நான் ஏற்கனவே ஆன்லைன்’ல ஜாதகம் பார்த்துட்டேன். பொருத்தம் எல்லா இருக்கு. இந்த ராகு, கேதுன்னு ஏதாவது சொன்னாங்கன்னா… பரிகாரம் கேட்டுக்கங்க” என அலட்டலே இல்லாமல் கூறிவிட்டுச் சென்றவனை வாயைப் பிளந்து வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்னம்மா நின்னுட்டே இருக்க. வா போவோம். சுந்தரேசன் எழறதுக்குள்ள வந்துடலாம்” என்று விஜயாவை அழைத்துக் கொண்டு ஜோசியரிடம் சென்றார் பாலாஜி.

இங்கோ காரை இயக்கி மேகா படிக்கும் கல்லூரிக்கு வந்திருந்த வேந்தன், கல்லூரி முடியும் நேரம்தான் என்பதால் காத்திருக்கலானான். கல்லூரி முடிந்து மேலும் சில நிமிடங்கள் காத்திருந்தவன், மேகாவை காணோம் என்றதும் கைப்பேசி எடுத்து அழைப்பு விடுத்தான். அந்த நேரம் தான் கல்லூரி வளாகத்தை விட்டு நட்பு வட்டங்கள் சூழ நடந்து வந்து கொண்டிருந்தாள் அவள்.

இருவரும் ஒருவரை ஒருவர் இன்னும் கவனித்துக் கொள்ளவில்லை. கைப்பேசி சிணுங்கியதும், யாரெனப் பார்த்த மேகா புருவங்களைச் சுளித்தாள். வேந்தன் பொதுவாக அவளுக்கு அழைப்பு விடுப்பதெல்லாம் இல்லை. இன்று என்ன புதிதாய் என்னும் யோசனை அவளுக்கு. யோசனை தானே தவிர அழைப்பை ஏற்கும் எண்ணம் எல்லாம் இல்லை. சும்மாவே கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தவளை,

“யாரு டி?” என் கலைத்தாள் தோழி. “ம்பச்.. பீரியா விடு” என்றவள் மீண்டும் அரட்டையில் இணைந்து கொள்ள, இப்பொழுது வாசலில் காத்திருந்த வேந்தன் தெரிந்தான்.

அவனை கண்ணுற்ற நேரம் மீண்டும் கைப்பேசி சிணுங்கியது. அவன் தான்! ‘எதற்கு வந்தான்?’ என்னும் பதற்றம் அவளுக்கு. இம்முறையும் அடித்து ஓய்ந்தது. இப்பொழுது வாயிலில் காத்திருக்கிறேன் என்றொரு குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தான். அதைப் பார்த்தவளின் முகம் கலவரமானது.

“என்னடி?” என்றாள் மீண்டும் தோழி. மேகா ஒன்றுமில்லை என்று தலையசைத்துக் கொண்டிருந்த நேரம், எதேச்சையாகப் பார்வையைச் சுழலவிட்ட வேந்தன் அவளைப் பார்த்து விட்டான்.

அவளை பார்த்ததுமே நெருங்கி வர, இவள் இப்பொழுது அவன் தன்னை நோக்கி வருவதை கவனித்து விட்டாள். இயல்பாக அருகில் வந்து, “போன் எங்க?” என்று வேந்தன் கேட்க, அவள் என்ன சொல்வது என்பது போல விழித்தாள். அவளுடைய தோழிகள் இவர்கள் இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருக்க,

“இவங்களை கிளம்ப சொல்லிடு. நான் உன்னை கூட்டிட்டு போகத் தான் வந்தேன்” என்று வேந்தன் சொல்ல, என்ன சொல்லிச் சமாளிக்க என்பது போல அவள் யோசித்தாள். அதற்குள் அவள் தோழிகளோ, “சரிடி நாளைக்குப் பார்க்கலாம்” என்று நகர, ஒருத்தி அவள் காதருகே, “சொல்லவே இல்லை…” என்பது போல கிசுகிசுத்து விட்டுப் போய் விட்டாள்.

‘இவளுக வேற!’ அவளுக்குக் கடுப்பாக வந்தது. “நான் வந்துப்பேன் தான நீ எதுக்கு வந்த?” என்று மேகா அவனிடம் சிடுசிடுக்க, ‘என்னடா மரியாதை தேயுது. அன்னைக்கு எத்தனை அழகா பேசினா’ எனப் பெருமூச்சு விட்டவன், “போலாம் வா” என்றான் அமைதியாக.

“இல்லை நீங்க போங்க. நான் போயிக்கறேன்” என்று பட்டும் படாமலும் சொல்லிவிட்டு நகர எத்தனித்தவளைப் பார்க்க அவனுக்கு உஷ்ணம் ஏறியது. ‘இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இந்த நிராகரிக்கும் திட்டம்?’ அவன் கைவிரல்கள் இறுகிய விதத்தில் அவனது கோபம் தெரிந்தது.

“உன் பின்னாடி கெஞ்சிட்டு வரணுமா? இல்லை உன் கை பிடிச்சு இழுத்து காருக்குள்ள ஏத்தி விடணுமா?” என்றான் அழுத்தம் திருத்தமாக அவன் கேட்ட விதத்தில், அவள் பார்வை தன்போல உயர்ந்து அவன் முகத்தில் நிலைத்தது. அந்த கடுமை அவளுக்கு பதட்டத்தைத் தர, அசைய மறந்து நின்றிருந்தாள்.

“எனிவே எனக்கு ரெண்டும் வராதுன்னு உனக்கு நல்லாவே தெரியும்” அசட்டையாகச் சொல்லிவிட்டு, என்னோடு வந்தே ஆக வேண்டும் என்று பிடிவாதத்துடன் நின்றவனை இயலாமையுடன் பார்த்தாள்.

‘எதற்கு?’ என்ற கேள்வி குடைந்தாலும், மேலும் இங்கு நின்று காட்சிப்பொருள் ஆக வேண்டாம் என்று தோன்றியதோ என்னவோ… பேசாமல் சென்று காருக்குள் அமர்ந்து கொண்டாள். வாழ்க்கை அவளுக்கென்று என்ன வைத்திருக்கிறது என்று அவளுக்குச் சத்தியமாகப் புரியவில்லை.

அவன் கட்டிய தாலியை அவளால் கழட்டவே முடியாமல் திணறியபோதே அவளுக்கு அவளுடைய மனம் தெளிவாகப் புரிந்து விட்டது. ஆனால், அது முடிவெடுக்கும் வயதில்லையே! ஆக, அனைத்தையும் மறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாள். ஒருவேளை, வேந்தன் அடுத்து என்ன செய்யலாம் என்று பேசியிருந்தாலோ… இதற்கு நல்லவிதமாக ஒரு தீர்வை சொல்லியிருந்தாலோ… அவளுக்கு இத்தனை பாரம் இருந்திருக்காது. அதைவிடுத்து தாலியைக் கழட்டிக் கொடு என்பதிலேயே அவன் பிடிவாதமாக நிற்க, அவளுக்கு அவனிடம் ஒதுங்கி இருப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அது குறித்து பேச்சு வந்துவிடுமோ என்னும் பயமே அவளை அவனிடமிருந்து இத்தனை ஆண்டுகளாகத் தள்ளி நிறுத்தியிருந்தது.

அவள் அமைதியாகச் சென்று ஏறியதில், அவன் கடினமும் குறைய, ‘ஏன் இப்படி இருக்கா?’ என எப்பொழுதும் போல அவனுக்கு அங்கலாய்ப்பே! வாகனத்தை இயக்கிவன், ஒரு பூங்காவின் முன் நிறுத்த, எதுவோ பேச அழைத்து வந்திருக்கிறான் என்று புரிந்தது. அப்பொழுதும் அதைக் குறித்து எதுவும் கேட்காமல் அவள் அப்படியே அமர்ந்திருக்க,

“ஏன் இப்படி பிடிச்சு வெச்ச பிள்ளையார் மாதிரி இருக்க?” என்றான். ஒருமாதிரி சோர்வான குரல் தான். எதற்கு எதையோ நினைத்தது மருகுகிறாள், அதுவும் என்றோ நடந்து முடிந்துவிட்டதற்காக என்னும் சலிப்பு அவனிடம்.

பதில் பேசாமல் அமர்ந்திருந்தவளை நோக்கித் திரும்பி அமர்ந்தவன், “குட்டிம்மா… உனக்கு என்ன பிரச்சனை? நீ சொன்னா தானே தெரியும். அன்னைக்கு வேற வழி தெரியலை டா. நான் வேணும்ன்னே அப்படிச் செய்வேனா?” அவன் ஆறுதலாகக் கூற,

அவளுக்கு உண்மையான பிரச்சனையே இதுதான்! ஏதோ சூழல், நிர்ப்பந்தம் செய்து விட்டான். அதை சாக்காக வைத்து என்னையே திருமணம் செய்து கொள் என்று சொல்லுவது எந்தவிதத்திலும் சரியில்லை. அதுவும் அன்று நடந்தது வேறு வழியே இல்லாமல் நடந்த ஒன்று என்று திரும்பிச் திரும்பி சொல்பவனிடம். அவளுக்கு என்னவோ பெரும் தவறு செய்வது போல இருந்தது. கலக்கத்துடன் அமர்ந்திருந்தவளை, யோசனையாக பார்த்தவன், அவள் எந்த கேள்விக்குப் பயந்து ஓடுகிறாளோ அதைக் கேட்டான்.

“நான் கட்டின தாலியை என்ன பண்ணின?”

இதை எதிர்பார்க்காதவள் பதறினாள். முகத்தில் வியர்வை பூக்கத் தொடங்கியது. ஆனாலும் ஒரு ஆத்திரம். விட்டுவிட்டுச் சென்றவனுக்குக் கேட்க உரிமை இல்லை என்பது போல! “ஸ்ஸ்ஸ்… கட்ட வேண்டாம்ன்னு சொன்னேன். கட்டிட்டீங்க தானே! இனி அந்த பேச்சு வேண்டாம்” என்றாள் அந்த கேள்வியைப் புறக்கணிக்கும் விதமாக.

“அதெப்படி பேசாம இருக்க முடியும்?” என்றவன் குரலை உயர்த்த,

“நான் அன்னைக்கே காட்டாதீங்கன்னு சொன்னேன்”

“திரும்பத் திரும்ப குழந்தை மாதிரி பேசாத மேகா. நான் கட்டலைன்னா அவனுங்க கட்டிடுவேன்னு மிரட்டுனாங்க தானே?”

“ஏன் நீங்கதான் எல்லாத்தையும் இலகுவா எடுத்துக்கும் ஆள் ஆச்சே! அவனே தாலி கட்டட்டும்ன்னு விட வேண்டியது தானே!”

“பைத்தியம் மாதிரி பேசாத மேகா” எனக் கர்ஜித்தான் வேந்தன். பதில் பேசாமல் அவள் முறைக்க, “நான் இலகுவா எடுத்துப்பேன்னு உன்கிட்ட வந்து சொன்னேனா? நீ தானேடி தாலியை கழட்டி வீசிப்பேன்னு சொன்ன?”

ஒரு வேகத்தில், “அது அவனுங்க கட்டி இருந்தா…” எனக் கத்தி சொன்னாள்.

அவனது முகம் கடுமையைத் தொலைத்து மிருதுவானது. அவனுக்குள் சுவாரஸ்யம் பொங்கியது. “அப்போ நான் கட்டினா?” என்றான் புன்சிரிப்புடன். பதிலில்லை அவளிடம். “நான் என்ன ஸ்பெஷல்?” இதற்கும் பதிலில்லை அவளிடம்.

“மேகா…” அழுத்தி அழைத்தவனுக்கு எந்த பதிலும் கூறும் திராணியற்று சட்டெனக் காரை விட்டு இறங்கியிருந்தாள் அவள்.

Advertisement