Advertisement

காதல் பூக்கும் தருணம் – 12

 

தன் சிந்தனையில் மூழ்கியிருந்த வேந்தனை, “பேஷன்ட் கண் விழிச்சுட்டார் சார்” என்று எதிர்கொண்டாள் நர்ஸ்.

 

சின்ன தலையசைப்புடன் அதை ஏற்றவன், சுந்தரேசன் இருந்த அறைக்குள் நுழைந்தான். சோர்வாகப் படுத்திருந்தவரை நெருங்கியவன், “மாமா…” என்றழைத்து அவரது கரங்களை தொட,

 

கண்கள் மெலிதாக ஒளிர, “வா வேந்தா, எப்பப்பா வந்த?” எனச் சோர்வான குரலில் கேட்டார்.

 

“ஹ்ம்ம்… உங்களுக்கு ரெஸ்ட் எடுக்க இடம் இல்லாம இங்க படுத்து தூங்கிட்டு இருக்கீங்களே அதான் எழுப்பி விடலாம்ன்னு வந்தேன்…” என்று இடக்காக தொடங்கியவன், அவரது விழிகளை ஊடுருவியபடி, “என்ன மாமா? எதை யோசிச்சுட்டு இருக்கீங்க? என்ன பிரச்சனை?” என மேற்பூச்சு எதுவுமில்லாமல் நேரடியாக விசயத்திற்கு வந்திருந்தான்.

 

ஒன்றும் இல்லை என மறுப்பாக தலையசைத்தவரை, நம்பாத பார்வை பார்த்து மெலிதாக முறைத்தவன், “எங்க அப்பாகிட்ட மூணு நாளா ஏமாத்தற மாதிரி என்னையும் ஏமாத்தலாம்ன்னு பார்த்தீங்களாக்கும். என்னன்னு உண்மையை சொல்லாம நான் விட போறதில்லை” என கண்டிப்புடன் கூறியவன், குரலைத் தணித்து, “அத்தையையும், குட்டிம்மாவையும் பத்தி யோசிக்கவே மாட்டீங்களா மாமா? நீங்க இங்க வந்து படுத்துட்டா அவங்க என்ன பாடு படுவாங்க?” என அக்கறையாகக் கேட்க,

 

மகளைப் பற்றிய பேச்சு எழுந்ததும் அவரின் முகம் கலவரமானது. “மாமா என்ன பண்ணுது?” என்று பதறியவனிடம், “குட்டிம்மாவை நல்லா பார்த்துக்கணும் வேந்தா…” எனக் கலக்கமாக முணுமுணுத்தார்.

 

“அதுக்கு முதல்ல நீங்க எழுந்து வரணும் மாமா” என்று சொன்னவன், பிறகு ஏதோ புரிந்தவனாய், “ஆமா அவளுக்கு என்ன?” என்றான் அவரை ஆராய்ச்சியாகப் பார்த்தபடி. தன் உளறலைக் கண்டு கொண்டான் என புரிந்ததும், “அச்சோ வேந்தா அதில்லை. அது… அது… குட்டிம்மாவுக்கு ஏதோ பிரச்சனை, என்னன்னு சரியா தெரியலை…” என்று திக்கித் திக்கி சோர்வாகச் சொல்ல,

 

புருவங்கள் முடிச்சிட, “தெளிவா சொல்லுங்க” என்றான் சிறு கண்டிப்புடன். அவருக்கும் யாரிடமும் சொல்லி விட்டால் போதும் என்றாகி விட்டது. நம்மாலேயே பிரச்சனையை சமாளிக்க முடியாமல் திணறுகிறோம் என்றால், நமக்கு ஏதாவது ஆகிவிட்டால் சிறுபெண் என்ன செய்வாள் எனக் கலக்கம் கொண்டார். அதனால் இப்பொழுது வேந்தன் கேட்டதும் அவனிடம் சொல்லிவிட நினைத்தார்.

 

இதேபோக்கில் பேசி இருந்தால், பாலாஜியும் சுந்தரேசனிடம் விஷயத்தை வாங்கியிருக்கலாம். ஆனால், அவரோ நண்பனைப் பார்க்கும் போதெல்லாம், வருந்துவதும், புலம்புவதுமாக இருந்து சொதப்பி வைத்திருந்தார். சூழலைக் கையாளும் திறன் அனைவருக்கும் அமைவதில்லையே!

 

“என் போன்?” என சுந்தரேசன் கேட்க, “அப்பாகிட்ட இருந்து நான் தான் வாங்கி வெச்சேன். என்கிட்ட தான் இருக்கு” என எடுத்துக் காட்டிய வேந்தனிடம், “செந்தில் அனுப்பின வீடியோ பாரேன்” என்று தளர்வாகச் சொன்னார்.

 

‘என்ன வீடியோ?’ என்று பார்க்க, பார்த்தவன் அதிர்ந்தான். ‘இதெப்படி அவனிடம்?’ என்னும் குழப்பம் எழ, அதை தனக்குள் மறைத்துக் கொண்டு, மாமாவின் முகத்தை ஏறிட்டான்.

 

“யாருன்னு தெரியலை வேந்தா” எனச் சுந்தரேசன் கலக்கமாகச் சொல்ல, அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அன்று நடந்த கலவரத்தை அவரிடம் பொறுமையாக விளக்க வேண்டும் என்று புரிய, நிதானமாக நடந்தவற்றை விளக்கினான்.

 

அவன் தயக்கம் கலந்து சொன்னது… நிலைமையை சரிக்கட்டி, தன்னை அமைதிப்படுத்த அவனே புனைந்த கதை போல அவருக்குத் தெரிய, “நீ என்னை ஏமாத்த சொல்லறியா?” என்று நம்பாமல் கேட்டு வைத்தார்.

 

“ஆமா, உங்களை ஏமாத்தி மொத்த சொத்தையும் பிடிங்கிடுவேன். ஜாக்கிரதையா இருந்துக்கங்க” எனக் கண்ணை உருட்டி அவன் சொன்ன பாவனையில், “விளையாடாம சொல்லு வேந்தா?” என்றார் தளர்வாக.

 

“மாமா நானே உங்க பொண்ணு துரத்தி விட்டான்னு, நாடு நாடா சுத்தறேன். நீங்க வேற உங்க பங்குக்கு எதையாவது சொல்லுங்க. எல்லாம் என் விதி தாலி கட்டுன புருஷனை அவளும் மதிக்க மாட்டேங்கறா… மாப்பிள்ளையை நீங்களும் நம்ப மாட்டீறீங்க” என பரிதாபமாகப் புலம்ப,

 

சுந்தரேசன் சிரித்தபடியே, “உண்மையை தான் சொல்லறியா?” என்று கேட்டு வைத்தார். மலை போலத் தெரிந்த பிரச்சனை இப்பொழுது இவ்வளவு தானா விஷயம் என்று மாறியிருந்ததை அவரால் இன்னமும் நம்ப முடியவில்லை.

 

“உங்களுக்கு நம்பிக்கை வரணும்ன்னா வேணா எங்க அம்மா மேல சத்தியம்” எனச் சிறு புன்னகையுடன் சொல்ல,

 

“ஸ்ஸ்… என்ன வேந்தா இது. நான் நம்பறேன் பா” என்று வேகமாக உரைத்தவர், “இப்படி ஒன்னும் இல்லாத விஷயத்துக்கா நான் வீணா அலட்டிக்கிட்டேன்” என்று ஆசுவாசமாக சொல்ல இளநகையோடு தோளைக் குலுக்கினான்.

 

“ஈஸியா ஒன்னும் இல்லாத விஷயம்ன்னு சொல்லிட்டீங்க மாமா. அந்த நிகழ்வுக்கப்பறம் உங்க பொண்ணு என்கிட்ட பேசவே இல்லை தெரியுமா? என்னைப் பார்த்தாலே ஓடி ஒழியறா” என்று பெருமூச்சோடு வேந்தன் சொல்ல, பார்வைக்கு விளையாட்டு பேச்சு போல தோன்றினாலும், அது அவனது மனதை அழுத்தும் வலி!

 

அவருக்கோ அவனது வலி புரியாததால், “அப்படியா! பாவம் அவளுக்கும் கல்யாணம்ன்னா எத்தனை கனவு இருந்திருக்கும். எல்லாமே நீ செஞ்ச வேலையால களைஞ்சு போயிருக்கும்” என கேலியாகச் சொன்னவர், பிறகு அவனை ஆழ்ந்து பார்த்து, “எங்க கிட்ட இதைப்பத்தி முன்னாடியே சொல்லி இருக்கலாம் தானே” என்று கேட்டார். அவரது முகத்தில் வந்திருந்த தெளிவும், ஆசுவாசமும் அவனுக்கு நிம்மதியைத் தந்தது.

 

‘தான் இங்கு வந்ததும், மருத்துவமனையில் இருந்து கொண்டதும் நல்லது தான்’ என்று நினைத்துக் கொண்டான்.

 

“உங்க பொண்ணு என்கிட்ட பேசியிருந்தா கண்டிப்பா சொல்லியிருப்பேன் மாமா. அவ பண்ணுன டென்ஷன்ல எனக்கு எதுவுமே ஓடலை” என்று உண்மையைச் சொல்லிவிட்டவன், “சரி இப்போ சொல்லிட்டேன் தானே? நீங்களே மேற்கொண்டு என்ன பண்ணலாம் சொல்லுங்க” என்று சமத்துப் பிள்ளையாகக் கேட்டான்.

 

“கல்யாணம் தான்” என உடனடியாக சுந்தரேசன் கூற, “மாமா அவ இன்னும் படிக்கிறா” எனத் தடை சொன்னான் வேந்தன்.

 

“இல்லை வேந்தா கல்யாணம் செய்துட்டு படிப்பைத் தொடரட்டும்” என்று அவர் முடிவாகச் சொல்லிவிட,

 

“ஹ்ம்ம் முதல்ல உங்க உடம்பு தேறனும். கொஞ்சம் கண்டதையும் யோசிக்காம ரிலாக்ஸா இருங்க. அவ என் பொண்டாட்டி தான். நீங்க என்ன அவளை கல்யாணம் பண்ணிக்க என்கிட்ட சொல்லறது. நீங்க சொன்னாலும், சொல்லாட்டியும் அவ தான் என் பொண்டாட்டி” என அவரிடம் வம்பு பேச,

 

அதில் புன்னகைத்தவர், “தேங்க்ஸ் பா” என்றார் உணர்ந்து. இருவரின் மனதிலும் பாரம் அகன்ற உணர்வு. அதன்பிறகு மருத்துவரைப் பார்த்துப் பேசிவிட்டு, வேந்தன் மாலை வரை அங்கேயே இருந்தான்.

 

இரவு மருத்துவமனையில் தங்குவதற்கு விஜயாவும், மேகாவும் வந்துவிட, “எப்படி இருக்காருப்பா? முழிச்சாரா? எதுவும் பேசினாரா?” என விஜயா கேள்விகளை அடுக்க,

 

“நீங்க மாமாவை திட்டிட்டே இருக்கீங்களாமே, கண்ணுல ஜலம் வெச்சுண்டார். உங்ககிட்ட இருந்து தப்பிக்கத் தான், இப்படி வந்து படுத்துட்டு இருக்காராம். என்னத்த சொல்ல?” என்று பாவனையாக வேந்தன் பதில் சொல்ல,

 

“வாயடிக்காம சொல்லேன் டா” என துரிதப்படுத்தினர் விஜயா.

 

“மாமா கிட்ட பேசிட்டேன் அத்தை. அவரு நல்லா இருக்காரு. எந்த பிரச்சனையும் இல்லை. நீங்க வீீணா கவலை படாம இருங்க. டாக்டர் கிட்டேயும் விசாரிச்சுட்டேன். ட்ரீட்மெண்ட் முடிஞ்சதும் சர்ஜரி டேட் சொல்லுவாங்களாம். அவங்களும் ஹாஸ்பிட்டல் நடத்த வேணாமா? மாமாவை வெச்சு வருமானம் பார்க்கிறாங்க. அதான் நீங்க நிறைய காசு வெச்சிருக்கீங்களே, ஹாஸ்பிட்டலையும் கொஞ்சம் வாழ வையுங்க” வெகு இலகுவாக பேசுபவனை ஆதுர்யமாக பார்த்தவர்,

 

“என்னை சமாதானம் செய்ய இப்படி பேசறியா வேந்தா” என்றார் விஜயா.

 

‘குடும்பமே நம்ப மாட்டீங்குது’ என நொந்தவன், “அத்தை இதுவும் என் விதி தான் போலயே!” என சுந்தரேசனிடம் பேசியதை வைத்து வேந்தன் சொல்ல, அவருக்கு அவன் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை.

 

அவரது புரியாத பாவனையைப் பார்த்தவன், “ஒன்னும் இல்லை அத்தை. நான் இவ்வளவு சாதாரணமா பேசறேன் அப்படின்னாலே, பயப்பட எதுவும் இல்லைன்னு தான அர்த்தம். நீங்க அனாவசியமா கவலைப் படாதீங்க. இந்த நேரத்துல நாம தான் மாமாக்கு தைரியம் தரணும்” என்று சொல்ல,

 

“தேங்க்ஸ் பா. என்னவோ நீ வரவும் பெரிய பலமே வந்த மாதிரி இருக்கு” என்று உணர்ந்து சொன்னார்.

 

“அதெல்லாம் இருக்கட்டும். இவ என்ன காலேஜ் மட்டம் போடற வேலை மட்டும் தானா? எப்ப காலேஜ் போறதா இருக்கா? இப்படி ராத்திரியும், பகலும் இங்கேயே ஏன் சுத்தறா?” என்று வேந்தன் கடிந்து கொண்டதன் பயனாக அடுத்த நாளிலிருந்து மேகா கல்லூரி சென்று வரத் தொடங்கினாள்.

 

‘அவன் வரும் முன்பு நிலைமை என்ன? இப்பொழுது எப்படி எல்லாவற்றையும் சரி செய்தான்? ஏதோ மந்திரக்கோலை சுழற்றியது போல…’ மேகாவின் எண்ணங்கள் வேந்தனைச் சுற்றி மட்டும் தான். அவனது ஆளுமை, செய்கைகள் அனைத்தும் அவளை ஆகர்ஷித்தது.

 

மேகா அப்படி எண்ணவும் காரணம் இருந்தது. வேந்தன் பேசிய பிறகு சுந்தரேசனின் உடல்நிலையில், நல்ல முன்னேற்றம் தெரிய, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய அடுத்த ஓரிரு தினங்களிலேயே நாள் குறித்து, சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்திருந்தது. அதோடு, வள்ளி அத்தையும் அன்றைய தினத்திற்குப் பிறகு செந்திலுடனான திருமணம் குறித்து வாயே திறப்பதில்லை.

 

சுந்தரேசன் சிகிச்சை முடிந்து, வீட்டிற்கு வந்திருக்க, வேந்தனிடம் ஒருநாள், “உங்க கல்யாணத்தை பத்தி பேசிடலாம்ன்னு இருக்கேன் வேந்தா. சும்மா தட்டிக் கழிக்காத” என்று சொன்னார்.

 

“அப்பாகிட்டேயும், அத்தைகிட்டேயும் நீங்க சொன்னதா நானே சொல்லி ஜாதகம் பார்க்க சொல்லறேன் மாமா. நீங்க பீரியா இருங்க” என்று அவன் பதில் சொல்ல, ஜாதகமா என்ற ரீதியில் அவனை ஏறிட்டுப் பார்த்தார் சுந்தரேசன்.

 

“அத்தை நான் புதுசா ஒரு மாகாணம் விட்டு இன்னொரு மாகாணத்துக்குத் தொழிலை விரிவு செய்யப் போனாலே நல்ல நாளு, நேரம்ன்னு பார்ப்பாங்க. ஜாதகம் இல்லாம அவங்களுக்கு ஒரு வேலையும் ஓடாது. இப்ப மட்டும் விட்டுடுவாங்களா என்ன?” என்றான் மாமனாரின் கேள்வி புரிந்து.

 

அப்பொழுதும் அவர் நம்பாமல் பார்க்க, “எப்படியும் ஜாதகம் பார்த்துத் தான் தொடங்குவாங்கன்னு தெரியும். அதான் நானே தனியா ஆன்லைன்ல பொருத்தம் பார்த்துட்டேன். ரெண்டுபேர் ஜாதகமும் பொருந்தி வருது” முகத்தைச் சாதாரணம் போல வைத்துச் சொன்னாலும், செய்த செயல்கள் வீரியமில்லாததாகி விடுமா? சுந்தரேசன் வாயைப் பிளந்தபடி தான் பார்த்திருந்தார், ‘அடப்பாவி’ என்பது போல.

 

இதற்கும் இவன் சுந்தரேசனைச் சந்தித்த முதல் நாள், இவனிடம் அவர் திருமணம் குறித்துப் பேசியது. அப்பொழுது மேகா படிப்பு முடியட்டும், வேண்டாம் என்று பிகு செய்தவனிடம், மீண்டும் அடுத்த முறை பேச்செடுத்ததே இன்று தான். ஆனால், அதற்குள் இவனோ ஜாதகம் பார்ப்பது வரை திட்டமிட்டு, அது சரி வருமா என்று பார்த்தும் வைத்து விட்டானே? இவன் எதில் சேர்த்தி? என்பது போலப் பார்த்து வைத்தார்.

 

“என்ன மாமா அப்படி பார்க்கறீங்க? பின்ன ஜாதகம் பார்ப்பாங்கன்னு கூடவா எனக்குத் தெரியாது” என்று இலகுவாகக் கேட்க,

 

“இல்லை குட்டிம்மாவுக்கு படிப்பு முடியட்டும்ன்னு ஒரு மானஸ்தன் சொன்னானே அவனை தேடிட்டு இருக்கேன்” என்று சுந்தரேசன் வாரினார்.

 

லேசாக அசடு வழிந்தபடி, “இருங்க நான் தேடிப் பார்க்கிறேன்” எனச் சொல்லியவன், மேலும் சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டு வரவேற்பறைக்கு வந்தான்.

 

“என்ன சாப்பிடற வேந்தா?” என்று விஜயா கேட்க, “ஒன்னும் வேணாம் அத்தை” என்றவன், “அத்தை அப்பாவை என்னோட ஜாதகம் கொண்டு வர சொல்லுங்க” என்றும் சேர்த்து சொல்ல,

 

“ஏன் வேந்தா தொழில் இத்தனை தூரம் விரிவு செஞ்சது பத்தாதா? கொஞ்சம் ஓய்வெடேன் பா. எப்ப பாரு தொழில் தொழில்ன்னு” என்று விஜயா சலித்துக் கொள்ள, “அத்தை” என்று வேந்தன் பல்லைக் கடித்தான். ‘தொழில் தொழில் என்று அதன் பின்னால் நானா போனேன். அவள் விரட்டி அடிச்சதால தானே போனேன்’ என்று அவனுக்கு ஒருமாதிரி எரிச்சலாக இருந்தது.

 

‘இப்ப என்ன சொல்லிட்டேன்னு கத்தறான்’ என்று அவனை வினோதமாகப் பார்த்தவர், “சரி சரி கூப்பிடறேன்ப்பா” என்று அவனிடம் சொல்லிவிட்டு, பாலாஜிக்கு அழைத்து, “வேந்தனோட ஜாதகம் கொண்டுட்டு வீட்டுக்கு வாங்கண்ணா” என்று சொல்ல,

 

“இப்ப எங்க தொழில் செய்யப் போறோம்?” என்றார் பாலாஜி.

 

“உங்களுக்கும் அப்படித்தான தோணுதுண்ணா. எனக்கும் அப்படித்தான் தோணுச்சு. ஆனா, இந்த வேந்தன் இல்லைன்றான். என்னடான்னு கேட்டா அதுக்கும் எதையாவது கத்தப் போறான். எதுக்கு வம்பு நீங்க எடுத்துட்டே வாங்க. நீங்களும் வந்ததும் அவன்கிட்ட பேசிக்கலாம்” என விஜயா சொல்லி கைப்பேசி அழைப்பைத் துண்டிக்க,

 

விஜயா பேசி பாவனையில் இறுக்கம் தளர்ந்தவன், நடப்பதை நமட்டு சிரிப்போடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

பாலாஜியும் குழப்பத்தோடு மகனின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு சுந்தரேசன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

Advertisement