Advertisement

காதல் பூக்கும் தருணம் – 11

 

எதிலிருந்தோ தப்பி ஓடுபவள் போல, இடம், பொருள், சூழலை ஆராயாமல் விறுவிறுவென்று சென்றவளை, வேகமாகப் பின்தொடர்ந்து மீண்டும் கைப்பற்றித் தடுத்து நிறுத்தினான் வேந்தன்.

 

“எங்க இருக்கோம்? எதுக்கு இங்க வந்தோம்? எதுவும் கேட்க மாட்டியா நீ பாட்டுக்கு உள்ள போற” என வேந்தன் பல்லைக் கடித்தபடி கடினமாகக் கூறிய பிறகே, மேகா சுற்றத்தை அனுஷ்டித்தாள்.

 

மருத்துவமனை என்றதும் குழப்பமாக அவனை ஏறிட, “மாமாவுக்கு சின்னதா ஏக்சிடெண்ட். பயப்படற மாதிரி எதுவும் இல்லை” அவள் மிரட்சியைப் பார்த்து அவசரமாக இரண்டாம் வாக்கியத்தைச் சேர்த்துச் சொல்லவும், அவள் இத்தனை நேரம் அடக்கி வைத்த அழுகையையும் சேர்த்து ஒருசேர அழத் தொடங்கி விட்டாள்.

 

அவள் அழுவாள் என எதிர்பார்க்காதவன், “ஸ்ஸ்ஸ்… குட்டிம்மா… இங்க பாரு. அழாத டா” என இடையிடையே சமாதானம் சொல்ல, அவனது குரல் அவளை எட்டியது போலவே தெரியவில்லை. வேறு வழியின்றி சரி அவளாகவே அழுது ஓயட்டும் என்று விட்டுவிட்டான்.

 

அவள் அழுகை மட்டுப்பட்டதும், “பாரு அங்க வாஷ்ரூம் இருக்கு. போய் முகத்தை கழுவிட்டு வா. அப்படியே வரும்போது இந்த தாலியையும் கழட்டிட்டு வா டா. கோபத்துல கண்ட இடத்துலேயும் வீசிடாத. கோயில் உண்டியல்ல எங்கேயும் போட்டுடுவோம் என்கிட்ட கொண்டு வந்து கொடு. நான் போட்டுக்கறேன்” என்று குழந்தைக்குச் சொல்லுவது போலப் பக்குவமாகச் சொல்ல, அவனைக் கோபமாகப் பார்த்தவள், எதுவும் சொல்லாமல் அகன்றிருந்தாள்.

 

அவளுக்கே ஏன் அந்த கோபம் எனப் புரியவில்லை. மிகவும் குழப்பமான மனநிலையில் இருந்தாள்.

 

வேந்தனாலும் அதை வெறும் கயிறாகப் பார்க்க முடியவில்லை. தாலியாகவே உணர்ந்தான். மேகாவின் நிலையும் அதேதான் என்று அவனுக்குப் புரியவில்லை.

 

திரும்பி வந்தவளின் முகம் ஓரளவு சமன்பட்டிருக்க, முகத்தின் கலக்கம் மட்டும் குறையவே இல்லை. கழுத்தில் அவன் கட்டிய தாலி தெரியாதது கண்டு, ஆசுவாசம் எழாமல் ஒருவித தவிப்பு எழுவதை அவனால் தடுக்க முடியவில்லை.

 

“கொடு. நான் எங்காவது கோயில் உண்டியல்ல போட்டுடறேன்” எனத் தாலிக்காக அவன் கை நீட்ட, எதுவும் பதில் சொல்லாமல் அவனை முறைத்தபடி அழுத்தமாக நின்றாள்.

 

“கொடு மேகா…” அவன் சற்று அழுத்திக் கேட்கவும், என்னவோ குற்றம் செய்த குறுகுறுப்பு அவளுக்குள். அதில் அவளது முகம் சோர்ந்து போக, அவனை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் அவனைக் கடந்து நடந்தாள்.

 

அவனுக்கு அவளது செய்கைகள் ஒன்றுமே புரியவில்லை. உண்மையில் மேகாவின் நிலையும் அதுவே தான்! அவளால் அந்த தாலியைக் கழற்ற முடியவில்லை. ஏன், கழற்றி விடலாம் என்று யோசனை கூட அவளுக்கு எழவில்லை. ஆனால், அதை வெளியில் சொல்லும் தைரியமும் அவளுக்கு இல்லை. ‘தாலியை கொடு, கொடு’ என்று கேட்கும் வேந்தனிடம் கூட அவளால் சொல்ல முடியவில்லை.

 

ஏதோ குழப்பிக் கொள்கிறோம் என்று தோன்றினாலும், அவளால் அதைத் தடுக்க முடியவில்லை. ஆடைக்குள் தாலியை மறைத்துவிட்டு, முகம் கழுவி வெளியேறியிருந்தாள்.

 

பதில் சொல்லாமல் மீண்டும் நடப்பவளின் முன்னே வந்து, “தெரிஞ்ச மாதிரி முன்னாடி போற? வா நான் கூட்டிட்டு போறேன்” என்று பல்லைக் கடித்தபடி சொல்லிவிட்டு வேந்தன் நடக்க, எதுவும் பேசாமல் அவனோடு இணைந்து நடந்தாள்.

 

அவனாகவே முந்தைய பேச்சை விட்டுவிட்டான். அவளுக்கு அது கஷ்டம் தருகிறது என்று புரிய, அவனால் மீண்டும் தாலியைக் கொடு என்பது போன்று பேச முடியவில்லை. அவளே என்னமோ செய்து கொள்ளட்டும். எங்கேயோ தூக்கிப் போடட்டும் என்னும் நிலைக்கு வந்துவிட்டான்.

 

மேகாவின் சோர்வைப் பார்த்து, தன்னிடம் ஒருவார்த்தை கூட பேசாமல் தவிர்ப்பதைப் பார்த்து வேந்தன் மெல்ல பேச்சைத் தொடங்கினான். “அங்க அவனுங்க ஏதாவது பண்ணிடுவாங்க மேகா. நீ இல்லாட்டி கூட ஆனதை பாத்துக்கங்கடான்னு சண்டைக்கு நிக்கலாம். நீயும் கூட இருக்கவும், என்னால வேற என்ன பண்ண முடியும்? ரொம்ப சாரி டா” அந்த நிகழ்வினால் தான் இப்படி இருக்கிறாள் எனப் புரியத் தன்னிலையை விளக்கி சமாதானம் பேசினான்.

 

ஆனால், மேகா எதையும் காதில் போட்டுக் கொண்டது போலத் தெரியவில்லை. எந்தவித உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல், எந்த பதிலையும் உதிர்க்காமல் அமைதியாக இருந்தாள்.

 

நடமாடும் சிலை போல உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இறுகி இருப்பவளைப் பார்த்த வேந்தன் சோர்ந்து போனான். அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. ஆனால், அதன்பிறகு நிற்க நேரமில்லை. மருத்துவமனையில் அலைவதற்கே நேரம் சரியாக இருந்தது.

 

மேகா தன்னை சுத்தமாகத் தவிர்ப்பது அவனுக்குப் புரிந்தது. அவளின் நடவடிக்கையில், ‘நான் என்ன செய்தேன்?’ என்னும் கோபமும், ஆற்றாமையும் அவனுக்குள் எழுந்தது.

 

அன்று நடந்த விஷயம் தான் அவளை ஒதுக்கி நிறுத்தி வைக்கிறது என வேந்தனுக்குப் புரிந்தாலும், மேற்கொண்டு அதுகுறித்து எதையும், அவளிடம் பேச முயற்சிக்கவில்லை. ஒருவேளை அந்த சூழல் சற்று சரியானதும், அவளை இழுத்து நிறுத்திப் பேசியிருக்க வேண்டுமோ? அவளது குழப்பங்களைக் கண்டுபிடித்துக் களைந்திருக்க வேண்டுமோ? ஏனோ அவனுக்கு அந்த பக்குவம் இல்லையா? அல்லது மேகாவின் ஒதுக்கத்தை ஏற்க முடியவில்லையா? என்று தெரியவில்லை.

 

மேகாவின் நிலையோ மிகவும் மோசம். தன் கழுத்தில் இருக்கும் தாலியைக் கழட்ட மனம் வராமல், அதை அப்படியே அணிந்து கொண்டேயும் இருக்க முடியாமல்… உறவினர் வீட்டில் பார்த்த தாலி பிரித்துக் கோர்க்கும் சடங்கு நினைவு வர, அதை செயல்படுத்திக் கொண்டாள். சுந்தரேசனின் சிகிச்சையின் தருணம், வேந்தன் இவர்கள் வீட்டில் தான் அவ்வப்பொழுது தங்கினான். அது போன்றதொரு நாளில் அவன் குடிக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து வேலையாளிடம் தந்து விட்டிருந்தாள்.

 

அவன் ஆழ்ந்து உறங்கி இருப்பான் என்று அனுமானித்து, நள்ளிரவு நேரத்திற்குச் சற்று நேரம் முன்பு போல, அவன் அறைக்குப்போய் அவனது கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியைக் களவாடியிருந்தாள். அவளுடைய நல்ல நேரமோ என்னவோ உறக்க கலக்கத்தில் அறையைத் தாளிட மறந்திருந்தான். அது அவளுக்கு வசதியாகப் போயிருந்தது.

 

மேகா, வேந்தனிடமிருந்து எடுத்த சங்கிலியைக் கோயிலுக்குச் சென்று தன் கழுத்தில் அணிந்து கொண்டு, வீட்டிற்கு வந்ததும் தாலிக்கயிற்றைக் கழற்றி பத்திரப்படுத்திக் கொண்டாள்.

 

இது எதுவும் புரியாத வேந்தனோ, சிறிது நாட்கள் மேகாவின் ஒதுக்கத்தைப் பொறுத்தவன், அதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாமல், தனது பிராஜெக்டை வேகமாக முடித்துவிட்டு, சுந்தரேசன் ஓரளவு குணமானதும் ஊரை விட்டுக் கிளம்பி விட்டான். மீண்டும் ஒரு வனவாசம் அவனுக்கு!

 

பாலாஜியும், சுந்தரேசனும் வேந்தனிடம் காரணம் கேட்டதற்கு வெளிநாடுகளுக்கு நம் மசாலா பொருட்களை எக்ஸ்போர்ட் செய்யலாம். அது தொடர்பாகப் பார்த்து வருகிறேன் என சொல்லிச் சமாளித்து வைத்தவன்,

 

கொடுத்த வாக்கிற்கு ஏற்ப, வெளிநாடுகளிலேயே சுற்றி வருகிறான். அமெரிக்கா, கனடா ஆகிய இரண்டு நாடுகளிலும் தங்கள் மசாலா பொருட்களை ஏற்றுமதி செய்து வெற்றி கண்டிருந்தான். வேந்தனின் தலையீட்டாலும், திறமையாலும் “மேகா மசாலா பிரைவேட் லிமிடெட்” புதிய எல்லையைத் தொட்டது.

 

அந்த வளர்ச்சி இவர்களை மகிழ்வித்தாலும், சொந்த ஊருக்கு வருவதையே தட்டிக் கழிப்பவனைப் புதிராக பார்த்தார்கள். அது அவர்களுக்கு மிகுந்த வருத்தத்தையும் தந்தது.

 

ஒரு நாள் தாளமாட்டாமல், சுந்தரேசனும், விஜயாவும் வேந்தனிடம், “அண்ணன், இத்தனை நாளா உன்னை பிரிஞ்சிருந்தாங்க. இன்னும் ஏன் இப்படி செய்யற? இந்த வேலையெல்லாம் நீ இங்க இருந்து பார்க்க முடியாதா? தேவையான போது போயிக்க. இங்கேயே திரும்பி வந்துடு. முன்னையாச்சும் சென்னையில இருந்த, அவரு நினைச்ச போதெல்லாம் வந்து, உன்னை பார்த்துட்டு இருந்தாரு. இப்ப இப்படி செஞ்சா எப்படி? அவரை பத்தியும் யோசிக்கணும் தான?” என்று ஆதங்கமாகப் புலம்பி வைத்திருக்க,

 

சுந்தரேசனும் சற்று கோபமாகவே வேந்தனைச் சாடியிருக்க, இதுதான் சாக்கென்று அவர்களிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டான்.

 

அவனும் என்ன செய்வான், இவர்கள் பேசும்பொழுது, மேகாவிடமும் பேச வேண்டும் போல இருந்தது. ஆனால், அந்த அழுத்தக்காரி, இவனிடம் சுத்தமாகப் பேசுவதே இல்லை. அது அவனை மிகவும் பாதித்தது.

 

மொத்தத்தில் எங்கோ, எப்படியோ நடந்த சிறு பிசகு அனைவர் வாழ்வையும் உண்டு இல்லை என்று சத்தமில்லாமல் செய்து கொண்டிருந்தது.

 

‘ஏன் சுந்தரேசனிடம் சரியாகப் பேசுவதில்லை’ என்று பாலாஜி மகனிடம் கேட்டதற்கும், “கொஞ்சம் என்னை என் போக்குல விடுங்கப்பா. எல்லாரும் கேள்வியா கேட்காதீங்க” என முதன்முறை தந்தையிடம் எரிந்து விழுந்தவன்,

 

பிறகு சிறிது நேரத்தில் அவனாகவே தணிந்து, “அப்பா பிளீஸ், கொஞ்சம் வேலையில மூழ்க்கணும் போல இருக்கு. புரிஞ்சுக்கங்க. மாமாகிட்ட இனிமே நீங்களே பேசிடுங்க. நான் என்ன சொல்லணுமோ அதை உங்ககிட்டயே சொல்லிடறேன். எனக்கு எல்லாருக்கும் பதில் சொல்ல நேரம் ஒத்து வராது பா… புரிஞ்சுக்கங்க. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க…” என அறையும் குறையுமாக மாற்றி மாற்றிச் சொல்ல,

 

“என்ன பிரச்சனைன்னு சொல்லுப்பா?” என்றார் தந்தையாகச் சரியாகக் கணித்து.

 

“அதெல்லாம் எதுவும் இல்லை. அப்படியே இருந்தாலும் சொல்ல மாட்டேன். நானும் வளர்ந்துட்டேன், எனக்கும் சமாளிக்கத் தெரியும்” என முறுக்கிக் கொண்டு பேசியவன், “மாமா, அத்தைகிட்ட மட்டும் என்னைக் கோத்து விடாதீங்க. அவங்களை நீங்களே சமாளிச்சுக்கங்க…” என்றும் சேர்த்துச் சொல்ல,

 

தோளுக்கு மேல் வளர்ந்த மகன், அவனை சரிக்கட்டவா முடியும். அதுவும் தனக்குள் எதையோ வைத்து மருகுபவனிடம். அவன் போக்கிலேயே விட்டுப் பிடிக்க நினைக்க, அவன் மூன்று வருடங்களாக இவர்களின் பிடிக்குச் சிக்காமலேயே திரிந்து வருகிறான். அந்த ஆட்டம் ஒருவழியாக இப்பொழுது முடிவுக்கு வந்திருந்தது.

Advertisement