Advertisement

காதல் பூக்கும் தருணம் – 10

 

வேந்தன் ஒரு அனுமானத்தில் இறங்கியிருக்க, “உனக்கு என்ன தனியா சொல்லணுமா? இறங்கு சீக்கிரம்” என மேகா இருந்த புறம் பார்த்து இன்னொருவன் கத்த,

 

அவளுக்கு இதெல்லாம் புதிதாக இருந்தது. குழப்பத்திலும், பயத்திலும் பள்ளி பேக்கை இறுக அணைத்தபடி அமர்ந்திருந்தாள்.

 

அவசரமாகக் குறுக்கிட்ட வேந்தன், “என்ன வேணும் சொல்லுங்க? அவ எதுக்கு?” என்று கேட்க,

 

சுற்றிலும் பத்து, பன்னிரெண்டு பேர் இருந்தனர். முரடர்களாக! இங்கு ஆட்கள் நடமாட்டமும் இல்லை. ஆக, அவன் தழைந்து போக வேண்டியதாய் இருந்தது.

 

இன்னமும் அவர்கள் பணம் எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் நினைத்தான். மேகாவை பார்த்து, மென்மையாகக் கண்மூடித் திறந்து ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று நம்பிக்கை தந்தான். தலையை அசைத்தாலும், அவளுக்குப் பதற்றம் குறையவில்லை.

 

“இறங்க சொல்லு…”

 

“அவ எதுக்கு?”

 

“இப்ப இறங்க முடியுமா இல்லை கார் கண்ணாடியை நொறுக்கவா?” அவன் கத்தியதில், அவர்களின் ஆவேசம் புரிய நன்றாக மாட்டிக்கொண்டோம் என்று வேந்தனுக்கு புரிந்தது. சண்டையை வளர்க்காமல் இதிலிருந்து தப்ப வேண்டும் என்று மட்டுமே அவனது யோசனை பயணித்தது.

 

கார் கண்ணாடி உடைந்தால் உள்ளே இருக்கும் மேகாவிற்கு காயம் ஆகும் எனப் புரிய, காரின் கதவைத் திறந்து அவளிடம் சமாதானம் பேசி, அவளை இறங்கச் சொன்னான்.

 

இறங்கியவளை ஏற இறங்க பார்த்து, “என்ன ஸ்கூல் படிக்கிற பொண்ணை எங்க தள்ளிட்டு போற” என்றான் ஒருவன் கேலியாக. அவன் அப்படிக் கேட்டதும் சுற்றி இருந்தவர்கள் எல்லாம் ஒருமாதிரி இளக்காரமாகச் சிரித்தார்கள்.

 

‘என்ன கேள்வி இது? என்ன வகையான வார்த்தை பிரயோகங்கள்?’ வேந்தனின் மனம் ஒருபுறம் உலைகலனாய் கொதிக்க, மறுபுறம் அவர்கள் தங்களைப் பணம் பறிக்க நிறுத்தவில்லையோ என்னும் சந்தேகம் எழுந்தது.

 

“அவ எங்க சொந்தக்கார பொண்ணு” என்றான் ரத்தின சுருக்கமாக, என்ன முயன்றும் குரலில் சற்றே கோபம் எட்டிப்பார்த்திருந்தது.

 

“கையில மாட்டறவனுக்கெல்லாம் ஒரு கதை இருக்கு. காதலர் தினம் வந்துட்டா போதுமே… ஊரைச் சுத்த கிளம்பிடுவீங்க” என்றான் ஒருவன் இகழ்ச்சியாக

 

“அண்ணே இப்ப எல்லாம் வாரக்கடைசி வந்துட்டாலே அப்படித்தான் பண்ணறாணுங்க…” எனப் பொங்கினான் இன்னொருவன்.

 

“அப்ப நம்ம பொதுச்சேவையை மாசத்துக்கு ஒருமுறை செஞ்சே ஆகணும் போலயே” என்று எகத்தாளமாகச் சிரித்தான் ஒருவன்.

 

இவர்கள் பேசப்பேசத் தான், இவர்கள் யாரென்றும் வேந்தனுக்குப் புரிந்தது. இன்று என்ன நாள் என்றும் நினைவு வந்தது. இது குறித்துப் பல செய்திகளை பார்த்திருக்கிறான். இப்படி அவனே மாட்டிக் கொள்வான் என்று எண்ணிப் பார்த்ததில்லை.

 

சுற்றியும் பலர் இருப்பதைக் கருத்தில் கொண்டு, வேந்தன் வாக்குவாதமோ, சண்டையோ போடாமல், “நீங்க எங்களைத் தப்பா நினைச்சுட்டீங்க. அவளை ஸ்கூலுல இருந்து கூட்டிட்டு போறேன்” என தங்களின் நிலைமையை விளக்கிப் பேச,

 

“அதேதான் நாங்களும் சொல்லறோம். நீ தள்ளிட்டு போறேன்னு… சரி போறது தான் போற இந்த தாலியைக் கட்டி கூட்டிட்டு போ” என்று சட்டென்று மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கிழங்கைக் கட்டி வைத்திருந்த தாலி சரடை எடுத்து அவன் முகத்திற்கு நேராக நீட்ட, இருவருமே அதிர்ந்து விழித்தார்கள்.

 

“என்ன பார்க்கிற? இந்தா பிடி. இதை கட்டுனா உடனே போயிடலாம். இல்லை நாங்க தாலி கட்டிடுவோம்…” எனக் கோணலாகச் சிரிக்க,

 

“நீங்க தப்பா புரிஞ்சுட்டீங்க. நாங்க லவ்வர்ஸ் எல்லாம் இல்லை. வேணும்ன்னா எங்க அப்பாக்கு போன் பண்ணி தரேன், கேளுங்க. இல்லை உங்கள்ல யாராவது எங்க கூட வந்து பாருங்க…” முயன்று பொறுமையை இழுத்துப் பிடித்தபடி கூறினான்.

 

கூடவே ‘என்ன இந்த வழியில் யாரும் வரவில்லை’ என்ற யோசனையும் ஒருபுறம் எழுந்தது. இந்த சாலையில் ஆள் நடமாட்டம் குறைவு தான். ஆனால், அவ்வப்பொழுது வாகனங்கள் வரும்! இப்பொழுது பார்த்து ஒன்றையும் காணவில்லையே என நினைத்தான்.

 

ஆனால், இங்கிருக்கும் கட்சிக்காரர்கள், சாலையின் இருபுறமும் வாகனங்களை வேறு வழியில் மாற்றி அனுப்பிக் கொண்டிருப்பது வேந்தனுக்குத் தெரிய வாய்ப்பில்லையே!

 

“இந்த பேச்சே வேணாம். தாலியை கட்டறியா இல்லை நான் கட்டவா?” என்று சொல்லியவன், சொன்னதோடு நில்லாமல் மேகாவை நெருங்கப் பார்க்க, வேந்தன் தனது மொத்த பொறுமையும் பறக்க அவனது சட்டையைக் கொத்தாகப் பிடித்திருந்தான். கூடவே, கன்னத்தில் பளாரென்று அறையை வேறு விடவும்,

 

“எங்க அண்ணனையே கை வெக்கறியா?” என இருவர் அவனிடம் எகிறிக்கொண்டு வந்து அடிவாங்கினர்.

 

அவன் எதிர்த்து அடிக்க துவங்கவுமே, மூவர் மேகாவை சுற்றி வளைத்து கத்தியை எடுத்திருந்தனர்.

 

“டேய் அவளை என்னடா பண்ணறீங்க?” வேந்தன் அவசரமாக அவளை நோக்கி வர,

 

“இந்த தாலியை வாங்கு…” என அதட்டினான் ஒருவன். மேகாவை சூழ்ந்திருக்கும் ஆட்களும், அவர்கள் கையில் தூக்கியிருந்த ஆயுதமும் அவனை அந்த நொடியே முடிவெடுக்க வைத்தது.

 

தங்களின் இக்கட்டு புரிய, “இதை கட்டணும் அவ்வளவு தானே… எல்லாரும் அவளை விட்டு விலகுங்க. நான் கட்டறேன்” என்று அவ்விடமே அதிரும்படி கத்தினான்.

 

அவன் சொன்னதில், “இதை முன்னாடியே செய்யறதுக்கு என்ன?” என மேகாவை சுற்றி நின்றிருந்தவர்கள் விலகி நின்றார்கள். 

 

தாலி சரடுடன் தன்னை நெருங்கும் வேந்தனைக் கண்டு அதிர்ந்த மேகா, “வேண்டாம் தாலியைக் கட்டாத…” என்று தீனமான குரலில் மறுத்தாள்.

 

“நான் கட்டாட்டி அவன் கட்டுவான். லூசு மாதிரி பேசாத மேகா” என்று அதட்டினான் வேந்தன். அவனுக்கும் என்னவோ போல் தான் இருந்தது. என்ன இருந்தாலும் தாலி விஷயம் ஆயிற்றே! அவனே வேறு வழியில்லாமல், தனக்குத்தானே ஆயிரம் சமாதானம் செய்து இதைச் செய்ய நினைத்தால், இவள் வேறு தடுக்கிறாளே என்றிருந்தது.

 

“எவனோ ஒருத்தன் கட்டுனா அது தாலியாயிடுமா? எந்த காலத்துல இருக்க நீ? நான் கழட்டி வீசிப்பேன். நீ கட்டாத பிளீஸ்” என்று மேகா மன்றாடினாள். சிறுபிள்ளைத்தனமான பேச்சு போல இருந்தாலும், அவளுக்கு ‘யார் மஞ்சள் கயிறை கட்டினாலும் அது திருமணம் என்றாகிவிடுமா?’ என்று தான் திடமான எண்ணம். ஆனால், அந்த ‘யார்’ என்னும் வரையறையில் அவளால் வேந்தனை பொறுத்திப் பார்க்க முடியவில்லை. அதற்காகவே அவனிடம் மறுத்தாள்.

 

அவள் சொன்ன விளக்கத்தில், “உஃப்ப்ப்… நான் கூட இந்த விஷயத்தை நீ பெருசா எடுத்துப்பேன்னு நினைச்சு பயந்துட்டேன். இதையும் அப்பறமா கழட்டிடலாம்…” என்று ஆசுவாசமாகச் சொல்லியவாறே அவர்கள் தந்த தாலிக்கயிறை அவள் கழுத்தினில் கட்டி இருந்தான் வேந்தன். நடப்பது எதுவும் புரியாமல் அதிர்ச்சியில், விழிகள் விரிய உறைந்து நின்றாள் மேகமித்ரா.

 

கட்டி முடித்தவனோ இலகுவாக, “எதுக்கு இப்படி இருக்க? ரொம்ப சிம்பிள் இதையும் கழட்டி போட்டுடலாம்…” என்று வெகு இயல்பாகக் கூறியபடி அவளது கையைப்பற்றி அழைத்து செல்ல, ‘அதெப்படி முடியும்?’ என்று உடனடியாக கேட்டது அவள் மனம்.

 

அந்த கேள்வியில் அவளுமே அதிர, மனம் நிர்தாட்சண்யமாய் கூறியது, ‘மற்றவர்களும் வேந்தனும் ஒன்றல்ல’ என்று. அதற்குமேல் அவளால் அதுகுறித்து யோசிக்க இயலாமல் தலை சுற்றுவது போல இருந்தது.

 

கண்ணில் நீர் சுரக்க அவன் இழுப்புக்கு நடந்து, காரினுள் அமர்ந்து பயணித்தாள்.

 

அவளது கவலையிலேயே உழன்று கொண்டிருந்ததால், வாகனம் வீட்டை நோக்கிச் செல்லாமல் மருத்துவமனைக்குச் செல்வதைக் கூட அவள் உணரவில்லை.

 

மருத்துவமனை வாயிலில் வண்டி நிற்கவும், சுற்றம் உணராமல் இறங்கி அவள் முன்னே நடக்க,

 

“மேகா…” என அழைத்து நிறுத்தினான் வேந்தன். அவளிடம் பதிலில்லாது போகவும், அவளது கரங்களைப் பற்றித் தடுத்தவன்,

 

“இப்படியே போற, தாலியைக் கழட்டி தந்துட்டு போ” என அவன் கை நீட்ட, அதில் மிரண்டவள் தன்போல இரண்டடி பின்னே வைத்தாள். அவனுக்கு எதுவும் பதில் சொல்லாமல் வேகமாக மீண்டும் நடக்கத் தொடங்கி விட்டாள்.

 

அவள் என்ன நினைக்கிறாள் என்று அவனுக்கு எதுவும் புரியவில்லை. அவளது செய்கையில் அவன் மிகவும் குழப்பமானான்.

Advertisement