Advertisement

“இவ்வளவு பிளான் போட்டு கடத்தினவன் அவ்வளவு சீக்கிரம் நம்ம கிட்ட சிக்க மாட்டான் அண்ணா. நீங்க இங்க இருந்தாலும் வேஸ்ட் தான். இனி மதியை கவனமா பாத்துக்கோங்க. இப்ப எங்க கூட வாங்க”, என்று சொன்னான் சரவணன்.

அதற்கு மேல் மருது மறுக்காமல் அவர்களுடன் செல்ல இருவரையும் ஏற்றிக் கொண்டு ஆட்டோ டிரைவர் ஆட்டோவை எடுத்தார். அவர்கள் பாதி வழியில் செல்லும் போது சரவணனை அழைத்தார் குற்றாலம்.

“சார் சொல்லுங்க. மதி எப்படி இருக்காங்க?”, என்று கேட்டான்.

“இப்ப ஒண்ணும் இல்லை தம்பி. சாதாரண மயக்க மருந்து தானாம். ஒரு மணி நேரத்துல கண்ணு முழிச்சிருவான்னு டாக்டர் சொன்னாங்க”

“போலீஸ்ல சொல்லப் போறீங்களா?”

“வேண்டாம் தம்பி, போலீஸ்ல கேஸ் கொடுத்தா என் மகளையும் அலைய வைப்பாங்க. அப்படி இல்லைன்னா என்னோட பழைய வாழ்க்கையை தூண்டி துருவுவாங்க. மருதை கூட கிளம்பி வரச் சொல்லணும்”

“மருது அண்ணா இங்க தான் இருக்கார். நாங்க அவரையும் கூட்டிட்டு வந்துட்டோம்”

“ரொம்ப நல்லது தம்பி. உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் பத்தாது”

“பரவால்ல விடுங்க, இனி அவங்களை நல்லாப் பாத்துக்கோங்க”, என்று சொல்லி போனை வைத்தவன் ஆட்டோ டிரைவர் மற்றும் மருதுவிடம் குற்றாலம் பேசிய விசயங்களைச் சொன்னான்.

இறங்க வேண்டிய இடம் வந்ததும் மருது மற்றும் சரவணன் இருவரும் இறங்கினார்கள். “உங்க உதவிக்கு ரொம்ப நன்றி அண்ணா. ஆட்டோக்கு பணம் எவ்வளவு?”, என்று கேட்டான் சரவணன்.

“கொடுக்குறதை கொடுங்க தம்பி”, என்று அவர் சொல்ல சரவணன் பணம் கொடுக்கப் போகும் போது அதை தடுத்த மருது “எங்க பாப்பாவைக் காப்பாத்திருக்கீங்க. நீங்க பணம் கொடுத்தா ஐயா என்னை கொன்னுருவார். நான் கொடுக்குறேன்”, என்று சொல்லி விட்டு ஐயாயிரம் பணத்தை எடுத்து ஆட்டோ டிரைவரிடம் கொடுத்தான். ஆட்டோ டிரைவர் மலர்ந்த முகத்துடன் விடை பெற்றுச் செல்ல மருதுவிடம் சொல்லி விட்டு சரவணனும் வீட்டுக்குச் சென்றான்.

அவனுடைய அறையில் சென்று படுத்திருந்தவனுக்கு வெண்மதி நினைவு வந்தது. மயங்கி கிடந்த அவளின் மதிமுகம் அவன் மனக்கண்ணில் இருந்து மறைய வில்லை. கூடவே அவளைக் கடத்தினவனை நினைத்து கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. அவரை அவன் மறக்க வில்லை.

“அந்த ஆள் எதுக்கு மதியைக் கடத்தணும்? அந்த ஆளுக்கு ஒரு அம்பது வயசு இருக்கும்? அவருக்கும் மதிக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? எல்லாம் அவ அப்பாவால தான் இருக்கும். எப்படியோ அவளுக்கு ஒண்ணும் ஆகாம காப்பாத்தியாச்சு. அது வரைக்கும் சந்தோஷம்”, என்று எண்ணிக் கொண்டான்.

அப்போது பூர்ணிமா மற்றும் செந்தில் இருவரும் அவனிடம் விஷயத்தைக் கேட்க நடந்ததை அப்படியே சொன்னான். அதைக் கேட்டு அவர்களுக்கும் அதிர்ச்சி தான்.

அதே நேரம் தன்னுடைய முயற்சி தோல்வி அடைந்த எரிச்சலில் இருந்தார் பாண்டியன். ஆட்டோ அங்கிருந்து கிளம்பியதும் அவசர அவசரமாக அந்த காட்டுக்குள் இருந்து வெளியே வந்தவர் கார் அருகே வந்து காரின் நம்பர் பிளேட்டைக் கழட்டி எரிந்து விட்டு வேறு ஒரு நம்பர் பிளேட்டை மாட்டிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.

“என்னால எதுக்கு அந்த பொண்ணைக் கொல்ல முடியலை? அப்படின்னா என்னோட மகன் சாவுக்கு நீதி கிடைக்காதா? என் மகனை கொன்னவனை என்னால பழி வாங்க முடியாதா? கடவுளே நீ இருக்குறது உண்மைன்னா இந்த விஷயத்தை நீயே பாத்துக்கோ”, என்று வேண்டிக் கொண்டவர் வீட்டை நோக்கி பயணித்தார்.

அதே நேரம் மகள் கண் விழிப்பதற்காக காத்திருந்தார் குற்றாலம். அவள் கண் விழித்ததும் “பாப்பா”, என்ற படி அவளை நெருங்கினார்.

“அப்பா”, என்று அவசரமாக அழைத்தவள் சுற்றி முற்றி பார்த்தாள். அவள் பதட்டத்தைப் பார்த்தவர் “நீ இப்ப பாதுகாப்பா தான் மா இருக்க. அப்பா உன்னைக் காப்பாத்திட்டேன்”, என்றார்.

“என்னை யாருப்பா கடத்தினா?”

“தெரியலை மா. உன்னை கடத்திட்டு போனவன் உன்னை ஒரு வீட்ல போட்டுட்டு தப்பிச்சிட்டான். அந்த பையன் மட்டும் இல்லைன்னா உன்னை என்னால மீட்டிருக்க முடியாது மா”

“யாருப்பா”

“அதான் நாம வெற்றிவேல் மகன் சரவணன். உன் சினேகிதியோட அண்ணன்”

“என்னப்பா சொல்றீங்க?”

“ஆமா மா, அவன் தான் உன்னைக் கடத்தினதும் எனக்கு தகவல் சொன்னான். அது மட்டுமில்லை உன்னைக் கடத்தினவனுடைய காரை பாலோ பண்ணிட்டு போய் எனக்கு சொன்னான். அப்புறம் மயங்கி இருந்த உன்னை அவன் தான் கார்ல தூக்கிட்டு வந்து படுக்க வச்சான். இப்ப தான் கால் பண்ணி உனக்கு ஒண்ணும் இல்லைன்னு சொல்லி நன்றி சொன்னேன். அந்த தம்பிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது மா”

“ஓ”, என்று சொன்னவளுக்கு எண்ண அலைகள் எங்கெங்கோ பயணித்தது. அவனைப் பார்க்க வேண்டும் போல ஆசையாக இருந்தது. அவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று அவள் மனம் எதிர் பார்த்தது.

“சரி மா வா வீட்டுக்கு போகலாம். அம்மாக்கு இதெல்லாம் தெரிய வேண்டாம். சும்மா உடம்பு சரியில்லை, அதான் உன்னை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வந்தேன்னு சொல்லிக்கிறேன். நீயும் எதுவும் சொல்லாத”, என்றார் குற்றாலம்.

“சரிப்பா”, என்று சொன்னவள் காரில் ஏறினாள். போகும் போது “பாப்பா, உன்னைக் கடத்தினவனை நீ பாத்தியா மா? ஏதாவது அடையாளம் இருந்தா சொல்லு. ஏற்கனவே கார் நம்பரை மருதுவை நோட் பண்ணச் சொல்லிருக்கேன். கையில கிடைச்சா அவனைக் கொன்னுட்டு தான் மறுவேலை பாக்க போறேன். நீ ஏதாவது அடையாளம் இருந்தா சொல்லு மா”, என்று கேட்டார் குற்றாலம்.

“உங்களை மறுபடியும் நான் கொலைக்காரனா ஆக விட மாட்டேன் பா”, என்று மனதில் நினைத்தவள் “அவன் முகமூடி போட்டுருந்தான் பா. அதனால பாக்கலை. அப்புறம் மயங்கிட்டேனா எதுவுமே நினைவு இல்லை பா”, என்றாள்.

“சரி மா, விடு”, என்று சொன்னவர் அதற்கு பின் மகளை எதுவும் துருவ வில்லை.

வீட்டுக்குச் சென்றதும் விசாலம் என்னவென்று விசாரிக்க “பாப்பாக்கு உடம்பு சரியில்லை விசாலம். எனக்கு கால் பண்ணினா. அதான் ஸ்கூல்ல போய்க் கூட்டிட்டு வந்தேன். அவ ரெஸ்ட் எடுக்கட்டும்”, என்று சொன்ன குற்றாலம் மகளை அவளுடைய அறைக்கு போகச் சொன்னார்.

அறைக்குள் வந்த வெண்மதிக்கு சரவணன் நினைவாவே இருந்தது. அன்று மாலை வரை அந்த எண்ணம் அவளுக்குள் இருந்து கொண்டே இருக்க அவனைப் பார்த்தால் தான் தனக்கு நிம்மதி கிடைக்கும் என்று உணர்ந்தாள்.

அன்று மாலை ஆறு மணி போல அன்னையின் அருகில் வந்து “அம்மா நான் பூர்ணிமாவை பாத்துட்டு வரட்டா?”, என்று கேட்டாள் வெண்மதி.

அதைக் கேட்ட குற்றாலம் “அதெல்லாம் வேண்டாம் மா. அதுவும் இப்ப போகவே வேண்டாம்”, என்றார்.

“ஏன் இப்படி பதட்ட படுறீங்க? அவ இங்க இருக்குற பூர்ணி வீட்டுக்கு தானே போகணும்னு சொல்றா?”, என்று சந்தேகமாக கேட்டாள் விசாலம்.

“அது வந்து விசாலம். அது…. எதுக்கு அடுத்த வீட்டுக்கு போகணும்னு தான்…”, என்றார் குற்றாலம்.

“அவ என்ன அங்க போய் விருந்தா சாப்பிடப் போறா? அந்த பிள்ளை முழுகாம இருக்காம். அதான் போய் பாக்கணும்னு ஆசைப் படுறா. அவ ஸ்கூலை விட்டா வீட்டுக்குள்ளே தானே அடைஞ்சு கிடக்கா. போயிட்டு வரட்டுமே?”, என்று சொன்னாள் விசாலம்.

அதற்கு மேல் மறுத்தால் மனைவிக்கு சந்தேகம் வரும் என்பதால் “சரி போகட்டும். ஆனா நீ அவ கூட போ. நம்ம மருது காரை எடுப்பான். அதுலே போயிட்டு வந்துருங்க”, என்றார் குற்றாலம்.

“நாலு தெரு தள்ளி இருக்குற வீட்டுக்கு போறதுக்கு காரா? கடவுளே.  சரி டி வெண்மதி, நீ கிளம்பு ஒரு எட்டு பாத்துட்டு வந்துறலாம்”, என்று மகளிடம் சொன்ன விசாலம் மருதுவை அழைத்து பழம், பூ எல்லாம் வாங்கி வரச் சொன்னார்.

“இதெல்லாம் எதுக்கு டி? என்னமோ நிச்சயதாம்பூலம் மாத்தப் போற மாதிரி போற?”, என்று கேட்டார் குற்றாலம். “மாசமா இருக்குற பொண்ணைப் பாக்கப் போனா வெறும் கையோடவா போவாங்க?”, என்று விசாலம் கேட்டதும் கப்பென்று வாயை மூடிக் கொண்டார்.

பள்ளிக்கு போகும் போது அணிந்திருந்த சேலையைக் கழட்டி விட்டு ஒரு சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டாள் வெண்மதி. முன்பெல்லாம் இப்படி எங்காவது வெளியே கிளம்ப வேண்டும் என்றால் அந்த அளவுக்கு அலைப்பறை செய்வாள். நிர்மல் இறந்த பிறகு அப்படி இல்லை தான். ஆனால் இன்று அவளுக்குள் சிறு படபடப்பாக இருந்தது.

காதல் வெடிக்கும்…..

Advertisement