Advertisement

அதற்கு பின்னர் தான் நடப்புக்கு வந்து என்ன செய்ய என்று யோசித்தான். போலீஸ் ஸ்டேஷன் சென்று அவன் கார் நம்பரைக் கொடுத்தாலும் உடனே அவர்கள் விசாரிப்பார்கள் என்று தெரிய வில்லை. அதற்குள் அவளுக்கு ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது என்று கவலையாக இருந்தது. மதியைக் காப்பாற்றுவது தான் முதலில் முக்கியம் என்று அவனுக்கு புரிந்தது.

ஒரு ஆட்டோ பிடித்தவன் அந்த காரை பாலோ செய்தான். போகும் போதே பூர்ணிமாவுக்கு அழைத்தான். அதை எடுத்து “சொல்லுண்ணா”, என்றாள் பூர்ணிமா.

“பூர்ணி உன்னோட ஃபிரண்ட் வெண்மதி இருக்காளே, அவளோட அப்பா நம்பர் தெரியுமா மா?”

“தெரியும் அண்ணா. அவர் நம்பர் எதுக்கு கேக்குற?”

“எல்லாம் அப்புறம் சொல்றேன். நம்பர் உடனே அனுப்புமா”

“சரிண்ணா”, என்று சொல்லி விட்டு உடனே அனுப்பி வைத்தாள். நம்பர் வந்ததும் அந்த எண்ணுக்கு அழைத்தவன் அந்த பக்கம் எடுக்கக் காத்திருந்தான்.

போனை எடுத்து “ஹலோ, யாரு?”, என்று கேட்டார் குற்றாலம்.

“ஹலோ வெண்மதியோட அப்பா வா?”

“ஆமா, நீங்க”

“நான் சரவணன். உங்க ஊர் தான். கீழத் தெரு வெற்றிவேலோட பையன்”

“தெரியும் பா சொல்லு, என்ன விஷயமா என்னைக் கூப்பிட்டுருக்க?”

“இன்னைக்கு உங்க பொண்ணு ஸ்கூல்க்கு வந்தப்ப யாரோ அவங்களைக் கடத்திட்டாங்க”, என்று அவன் சொன்னதும் அதிர்ச்சியானவர் “என்னப்பா சொல்ற?”, என்று கேட்டார்.

“ஆமா சார், அவங்க பஸ்ல இருந்து இறங்கி ஸ்கூலுக்கு நடந்து போனப்ப அவங்களை ஒரு கார்ல இருந்து வந்த ஆள் கடத்திட்டான். அந்த காரை பாலோ பண்ணி தான் நான் போயிட்டு இருக்கேன். கொஞ்சம் நீங்க சீக்கிரம் வறீங்களா?”

“ஐயோ தம்பி, நிஜமா தான் சொல்றீங்களா?”

“ஆமா சார், பேச நேரம் இல்லை. கார் மதுரை ரோட்ல போகுது, சீக்கிரம் வாங்க”

“இதோ கிளம்பிட்டேன் தம்பி, போலிஸ்க்கு சொல்லவா?”

“அதுக்கு நேரம் இல்லை சார். அங்க போனா ரொம்ப தாமதமாகும். நீங்க சீக்கிரம் வாங்க. கூட யாரையாவது கூட்டிட்டு வாங்க”, என்று சொல்லி போனை வைத்தான்.

பாண்டியன் இன்று பிளான் பண்ணி தான் எல்லாம் செய்தார். அதனால் அவளைக் கொல்லுவதற்கு இடம் பார்த்துக் கொண்டிருந்தார். அவளைக் கொல்லவும் செய்ய வேண்டும். அதே நேரம் அவர் மாட்டிக் கொள்ளவும் கூடாது. அதனால் சுற்றி பார்வையை ஒட்டியவருக்கு ஒரு இடிந்த வீடு தெரிய அங்கே காரைக் கொண்டு சென்றார்.

இங்கேயே அவளைக் கொன்று விட்டுச் செல்லலாம் என்று எண்ணி அவள் கழுத்தில் கத்தியை வைத்தார். அவர் கரங்கள் நடுங்கியது. குழந்தை போல இருந்த வெண்மதியைக் கொல்ல வெகுவாக தயங்கினார்.

கடைசி நொடியில் அவரால் அது முடியாமல் போனது. என்ன தான் மகனை நினைத்துக் கொண்டாலும் அவரால் அவளைக் கொல்ல முடியவில்லை.

அதனால் அவளைத் தூக்கி கொண்டு அந்த இடிந்த வீட்டுக்குள் சென்றார். அவளை தரையில் கிடத்தி விட்டு அடுத்து என்ன செய்ய என்று யோசித்தார்.

கார் ஒதுக்கு புறமாக ஒரு இடத்தில் நிற்க “அண்ணா அந்த கார் அங்க நிக்குது பாருங்க. ஆட்டோவை நிறுத்துங்க”, என்றான் சரவணன்.

விஷயம் பிடி பட்ட அவர் அடுத்து என்ன செய்யப் போகிறாய் என்னும் விதமாக அவனைப் பார்த்தார். “அண்ணா அதோ அந்த பில்டிங்ல தான் அவன் மதியை வச்சிருக்கணும். நான் போய் பாக்குறேன். பாவம் அந்த பொண்ணு. அப்புறம் இது என்னோட போன். இதை நீங்க கையில வச்சிக்கோங்க. அவ அப்பா கால் பண்ணினா இங்க நிக்குறோம்னு சொல்லுங்க. பிளீஸ் இன்னைக்கு மட்டும் கொஞ்சம் உதவி பண்ணுங்க”, என்றான் சரவணன்.

“இல்லை தம்பி, நீ மட்டும் அங்க போனா சரியா வராது. நானும் உன் கூட வரேன் தம்பி. அங்க எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியலை. உன் ஒருத்தனால அவங்களை சமாளிக்க முடியாது”, என்று அவர் சொல்ல அவரைக் கண்டு வியந்து போனான். தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடும் மனிதர்களுக்கு மத்தியில் அவர் வித்தியாசமானவராக தெரிந்தார்.

“சரி வாங்க, போகலாம்”, என்று சொன்னவன் தன்னுடைய போனில் இருந்து குற்றாலத்துக்கு அழைத்து அந்த இடத்தைச் சொல்லிவிட்டு முன்னேறினான். ஆட்டோ ஓட்டுனரும் அவனுடன் சென்றார்.

அவர்கள் பேச்சு சத்தம் கேட்கும் போதே பாண்டியன் ஜன்னல் வழியாக அவர்களைப் பார்த்து விட்டார். அவர்கள் கண்ணில் பட்டு விடக் கூடாது என்று வேகமாக சிந்தித்தவர் பின் பக்கம் வழியாக வெளியே சென்றார்.

தன்னுடைய பிளான் சொதப்பி விட்டது என்று புரிந்து கொண்ட பாண்டியன் அப்படியே வீட்டுக்கு பின் பக்கமாக இருந்த காட்டில் ஓடிப் போய் பதுங்கிக் கொண்டார்.

சரவணன் மற்றும் ஆட்டோ டிரைவர் இருவரும் உள்ளே சென்ற போது வெண்மதியைத் தவிர அங்கு யாரும் இல்லை.

“மதி”, என்ற படி அவளை நெருங்கியவன் அவளை தூக்கி தன் மடியில் போட்டுக் கொண்டு “மதி.. மதி… இங்க பாரு மா. ஐயோ கண்ணை திற டி. கடவுளே”, என்று புலம்பியவன் “அண்ணா இங்க ஏதாவது தண்ணி இருக்கான்னு பாருங்க”, என்றான்.

“ஆட்டோல இருக்கு தம்பி. இரு எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லிச் சென்றார்.

“மதி மா, கண்ணைத் திற டி. உனக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னால தாங்க முடியாது டி”, என்று அவன் பிதற்றிக் கொண்டிருக்க கொஞ்சம் தள்ளி ஒரு மரத்தின் பின் மறைந்திருந்த பாண்டியன் அதைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்.

அடர்ந்த மரங்கள் நிறைந்த இடம் என்பதால் அவர் நிற்பது யாருக்குமே தெரியாது.

தண்ணீர் எடுக்க வந்த ஆட்டோ டிரைவர் குற்றாலம் இரண்டு ஆட்களுடன் வருவதைக் கண்டு அவரிடம் “நீங்க தான் அந்த பொண்ணோட அப்பாவா?”, என்று கேட்டார்.

“ஆமா தம்பி, என் பொண்ணு….?”, என்று பதற்றத்துடன் கேட்க “பதறாதீங்க சார். பாப்பா உள்ள மயங்கி கிடக்குது. அவளைக் கடத்திட்டு போனவன் எங்கயோ ஓடி ஒளிஞ்சிட்டான். வாங்க போகலாம்”, என்று சொல்லி உள்ளே சென்றார்கள்.

“மதி எந்திரி மா”, என்று புலம்பிக் கொண்டிருந்த சரவணன் குற்றாலம் வருவதைக் கண்டதும் “சார் முதல்ல மதியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகணும். என்ன மருந்து கொடுத்தான்னு தெரியலை”, என்றான்.

ஆட்டோ டிரைவர் அவள் முகத்தில் தண்ணீரை தெளித்தும் அவள் விழிக்காததால் “சரி தம்பி, சீக்கிரம் ஆஸ்பத்திரி போகலாம்”, என்று சொல்லி மகளைத் தூக்க வந்தார். ஆனால் அதற்கு முன் சரவணனே அவளை தன்னுடைய கரங்களில் அள்ளி இருந்தான்.

அதற்கு பின் அவசரமாக அவளை காரின் பின் சீட்டில் படுக்க வைத்தான். குற்றாலத்துடன் வந்த ஆளிடம் “மருது, நீ இங்கயே இரு. அந்த கார் காரன் வரானான்னு பாத்து எனக்கு தகவல் சொல்லு. வேலு, நீ காரை எடு”, என்று சொன்ன குற்றாலம் “ரொம்ப நன்றிப்பா உங்க ரெண்டு பேருக்கும்”, என்று சரவணன் மற்றும் ஆட்டோ டிரைவரிடம் சொல்லி விட்டு காரில் ஏறி அமர்ந்தார். வெண்மதி மயங்கி கிடக்க மகளின் நிலை கொதிப்பைக் கொடுத்தது. கார் மருத்துவமனை நோக்கி வேகம் எடுத்தது.

சரவணன், ஆட்டோ டிரைவர், மருது மூவரும் அங்கே நின்றார்கள். அவர்கள் நிற்பதைப் பார்த்த பாண்டியன் வெளியே வரவே இல்லை. “நாம வரதைப் பாத்து அவன் ஓடிட்டான் போல தம்பி. அந்த ஆளைப் பாத்தீங்களா நீங்க?”, என்று கேட்டார் ஆட்டோ டிரைவர்.

“இல்லை அண்ணா, பாக்கலை”, என்றான் சரவணன். ஏனென்றால் என்ன விவரம் என்று தெரியாமல் பிரச்சனையின் உள்ளே சென்று சிக்கி கொள்ள அவன் தயாராக வில்லை. ஏனென்றால் இந்த கடத்தல், கொலை எல்லாம் குற்றாலத்துக்கு எளிதானது என்று தெரியும். அவனால் பாதிக்கப் பட்டவர்கள் இப்படி செய்திருப்பார்கள் என்று அவனுக்கு புரிந்தது.

ஆட்டோ டிரைவர் வெகு நேரம் இங்க நிற்க முடியாது என்பதால் “நாம கிளம்பலாம் அண்ணா”, என்றான் சரவணன்.

“நீயும் வாப்பா. இங்க பஸ் கூட நிக்காது”, என்று மருதுவையும் அழைத்தார் ஆட்டோ டிரைவர். “ஆமாண்ணா வாங்க போகலாம்”, என்று சரவணனும் அழைத்தான்.

“இல்லை, இந்த காரை எடுக்க அவன் வந்து தானே ஆகணும். நான் இங்க இருக்குறேன். பாப்பாவைக் கடத்தினவன் கையில கிடைச்சா அவனைக் கொல்லனும்”, என்றான் மருது.

Advertisement