Advertisement

அத்தியாயம் 9

தீருமோ எந்தன் காதல்

தாகம் நீயில்லாமல் போனால்!!!

வெண்மதிக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. தன் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி என்று அவள் உள்ளம் குமுறியது. ஏதோ மனதில் பாராங்கல்லை வைத்து அழுத்துவது போல அவளுக்கு வலித்தது. பூர்ணிமா இருந்திருந்தால் அந்த பாட்டி இப்படி எல்லாம் பேசி இருக்க மாட்டாளோ என்று தோழியின் அருகாமைக்காக ஏங்கினாள்.

அவள் மனதில் மிகப் பெரிய அழுத்தம் எழுந்து அவளை நிலை கொள்ளாமல் செய்தது. அது அந்த பாட்டியின் பேச்சால் விளைந்ததா? இல்லை வெகு நாட்கள் கழித்து அவனைப் பார்த்ததால் வந்த தடுமாற்றமா? இல்லை பூர்ணிமா குழந்தை உண்டானதால் வந்த ஏக்கமா? இல்லை நிர்மல் அவளை ஏன் தனியே விட்டுச் சென்றான் என்று புரியாததாலா? ஏதோ ஒன்று இன்று அவளை அடித்துப் போட்டிருந்தது.

என்ன தான் அவளைப் பின் தொடர்ந்து வந்து விட்டாலும் சரவணனால் சட்டென்று அவளை நெருங்கி விட முடிய வில்லை. இருவருக்கும் இடையில் எந்த உறவும் இல்லாத இந்த நிலையில் எப்படி அவனால் அவளுக்கு ஆறுதல் அளிக்க முடியும் என்று தயங்கினான்.

ஆனால் அவள் முகத்தில் இருக்கும் கலக்கம் சிறிதும் குறையாமல் இருப்பதைக் கண்டவன் வேகமாக அவளை நெருங்கி அவளுக்கு சற்று இடைவெளி விட்டு அதே பெஞ்சில் அமர்ந்தான். அவன் வந்து அமர்வதைப் பார்த்தவளுக்கு அழுகை மேலும் கூடியது.

“மதி இப்ப எதுக்கு இந்த அழுகை? யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க? அந்த பாட்டி பேசினதுக்கா இவ்வளவு கஷ்டப் படுற?”, என்று கேட்டான் சரவணன்.

“ம்ம்”, என்று சொன்னவளுக்கு மனதில் இருக்கும் வலியை எப்படி அவனிடம் சொல்வது என்று தெரிய வில்லை. முந்தைய நாள் நடந்தது நினைவு வந்தது. அவள் பள்ளியில் வேலை பார்க்கும் டீச்சர் ஒருவன் அவளை ஒரு மார்கமாக பார்த்து விட்டு அவள் அருகே வந்தான்.

அவன் பார்வையே அவளுக்கு பிடிக்க வில்லை. அவன் சரியில்லை, இங்கிருந்து சென்று விடு என்று அவள் மனம் அவளை எச்சரித்தது. அவள் குழப்பமாக அவனைப் பார்க்க “ஹஸ்பண்ட் இறந்தது உனக்கு கஷ்டமா இருக்காது? எப்படி நீ சமாளிக்கிற?”, என்று கேட்டான். அவன் வார்த்தையில் தவறு இல்லாமல் போனாலும் அவன் பார்வையே அவன் கேள்வியை அவளுக்கு தெள்ளத் தெளிவாக புரிய வைத்தது.

அவள் அவனை முறைத்துப் பார்க்க “இல்லை உனக்கு ஏதாவது உதவலாம்னு நல்ல எண்ணத்தில் தான் கேட்டேன்”, என்று வழிசலோடு சொன்னான்.

அவனை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்த்தவள் “இன்னும் கொஞ்ச நேரம் இங்கயே இரு. என்னோட அப்பாவை இங்க வரச் சொல்றேன். அவர் கிட்ட என்ன பேசணுமோ பேசிக்கோ”, என்றாள்.

“உங்க அப்பா என்ன பெரிய இவனா?”, என்று அவன் நக்கலாக கேட்க “அதெல்லாம் தெரியாது. ஆனா நூத்துக் கணக்கான கொலைகளை செய்றவர். நீ நூத்தி ஒன்னாவது ஆளா இரேன்”, என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு சிறு நடுக்கத்துடன் அவன் அவளைப் பார்க்க “என்ன எங்க அப்பா யாருன்னு தெரியலையா? ‘முடிவை குற்றாலம்’னா யாருன்னு கேட்டுப் பாரு. சொல்லுவாங்க”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள். ஏற்கனவே அவரைப் பற்றி கேள்விப் பட்டிருந்த அவன் நடுக்கத்துடன் அங்கிருந்து சென்று விட்டான். அந்த விஷயம் வேறு அவளுக்கு நினைவில் வந்து அவளை இம்சித்தது. மற்ற பெண்களிடம் அந்த நாய் இப்படி வாலாட்ட முடியுமா? தன்னை நினைத்தே தவித்துப் போனாள்.

அவள் மனநிலை புரியாத சரவணனுக்கு அவளுக்கு ஆறுதல் அளிப்பது மட்டுமே முக்கியமாக பட்டது. அதனால் “பேசுறவங்க எல்லாருக்கும் விளக்கம் கொடுத்திட்டு இருக்க முடியுமா? உலகத்துல இருக்குற எல்லாருக்கும் பதில் சொல்லிட்டு இருந்தா நம்ம வாழ்க்கையை யார் வாழுறது?”, என்று கேட்டான்.

“என் வாழ்க்கை இப்படி இருக்குறதுனால தானே எல்லாரும் பேசுறாங்க?”, என்று சொன்னாள் வெண்மதி.

“பேசிட்டு போகட்டுமே? யார் என்ன சொன்னாலும் நீ நீயா இருக்கலாம்ல?”, என்று அவன் கேட்க விழி விரித்து அவனைப் பார்த்தாள். அவன் பேசுவதைக் கேட்க அவளுக்கு அந்த நிமிடம் அவ்வளவு பிடித்தது. அவன் பேசும் போது அவன் கண்கள் அங்கே இங்கே அசைவதும் அவனது தொண்டைக்குழி ஏறி இறங்குவதும் அவனது தலை முடி காற்றில் ஆடுவதும் அவள் கண்களில் விழுந்தது. அவனையே பார்வையால் அளவிட்டாள்.

அவள் விழிகள் வித்தியாசமாக தன் மீது படிவதைப் பார்த்த சரவணன் சற்று திகைத்து போனான். அவன் பார்வையில் திகைப்பைக் கண்ட பிறகு தன் பார்வையை சற்று தளைத்துக் கொண்டாள்.

“நடந்து முடிஞ்சதை மாத்த முடியாது மதி. ஆனா அதுல இருந்து மீண்டு வர நம்மளால முடியும். இத்தனை நாள் தைரியமா தானே இருந்த? இன்னைக்கு மட்டும் என்ன?”, என்று ஆராய்ச்சியாக கேட்டான் சரவணன்.

“தெரியலை. என்னையே அறியாம எனக்குள்ள….. அதைச் சொல்லத் தெரியலை”, என்று அவள் மனநிலையை அப்படியே சொன்னாள்.

“நிர்மலை ரொம்ப மிஸ் பண்ணுறியா? அவங்களை உனக்கு ரொம்ப பிடிக்குமா?”

“ஆமா. அவர் ஏன் என்னை விட்டுட்டு போனார்? அந்த கடவுள் என்னை எதுக்கு காப்பாத்தினார்? அவர் கூடவே நானும் போயிருக்கணும்”, என்று அவள் சொல்ல உள்ளுக்குள் துடித்துப் போனான் சரவணன்.

“எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும் மதி மா. இவ்வளவு நடந்த பிறகு நானே உயிரோட தானே இருக்கேன்?”, என்று அவன் கேட்க அவனுடைய “மதி மா”, என்ற வார்த்தையில் உள்ளுக்குள் நெகிழ்ந்து போனாள்.

“நீங்களும் பாவம் தான். நம்ம வாழ்க்கை ஏன் இப்படி ஆச்சு?”

“விதினு தான் சொல்லணும். வேற என்ன செய்ய?”, என்று கேட்டவனின் முகமும் வேதனையை பிரதிபலித்தது. இப்போது தன்னுடைய கவலைகளை மறந்து அவனை தேற்ற வேண்டும் போல இருந்தது அவளுக்கு. அதனால் அவனை திசை திருப்ப வேண்டி “சரி பூர்ணிமா எப்படி இருக்கா?”, என்று கேட்டாள்.

“நல்லா இருக்கா. அவளை சித்தியும் அம்மாவும் கொஞ்ச நாள் ஸ்கூல்க்கு வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க”

“ஆமா சொன்னா. எனக்கு அவளைப் பாக்கணும் போல இருக்கு. சாயங்காலம் அம்மா கிட்ட கேட்டுட்டு உங்க வீட்டுக்கு வரேன்”, என்று சொல்ல அவன் முகம் மலர்ந்தது. அதைப் பார்த்தவளுக்கும் நிம்மதியாக இருந்தது.

இருவரும் அமைதியாக இருக்க “எதுக்கும் கவலைப்படாதே மதி? நீ பழைய மதியா மாறனும். சரி இப்ப ஸ்கூல்க்கு நேரம் ஆச்சு பாரு. கிளம்பு”, என்றான் சரவணன்.

“ம்ம்”, என்ற படி எழுந்து கொண்டாள். இருவரும் வெளியே நடந்தார்கள்.

அவனிடம் போய் வருகிறேன் என்னும் விதமாய் தலையசைத்தவள் அவளுடைய பள்ளி பக்கம் நடக்க அவன் மறுபக்கம் நடந்தான். எப்போதும் போல் அவன் அவளைத் திரும்பிப் பார்த்தான். அப்போது அவள் அருகே ஒரு கார் நெருக்கமாக வந்து நின்றது. அவள் சட்டென்று திகைத்து நிற்க அவனும் குழப்பமாக பார்த்த படி நின்றான்.

அப்போது காரில் இருந்து முகமூடி அணிந்த ஒருவன் இறங்கி வெண்மதியை காருக்குள் தள்ளி விட்டு சுற்றி முற்றி பார்த்தான். வெண்மதியை உள்ளே ஏற்றும் போது அவனது முகமூடி கீழே இறங்கி விட்டது. அதனால் அவனது முகம் அப்பட்டமாக சரவணன் மற்றும் வெண்மதி கண்ணில் பட்டது. ஆனால் சரவணனுக்கு அது யார் என்று தெரிய வில்லை.

வெண்மதிக்குமே தெரிய வில்லை. “யார் நீங்க? காரை நிறுத்துங்க”, என்று அவள் கத்த அவள் மூக்கில் மயக்க மருந்து தடவிய கர்ச்சிப்பை அழுத்தினார் பாண்டியன். சரவணன் காரை நோக்கி ஓடி வர அதைக் கவனிக்காத பாண்டியன் காரைக் கிளப்பிக் கொண்டு சென்று விட்டார். அந்த காரின் நம்பரை குறித்துக் கொண்டான் சரவணன்.

அடுத்து என்ன செய்ய என்று அவனுக்கு சுத்தமாக தெரியவில்லை. கடத்தல் விஷயங்களை எல்லாம் படத்தில் தான் பார்த்திருக்கிறான். அப்படி இருக்கும் போது இன்று நேரில் நடக்கவும் கொஞ்சம் திகைத்து தான் போனான். அதுவும் அவனுக்கு பிடித்த மதியை கடத்தியதால் அவன் மூளை வேலை நிறுத்தம் செய்து விட்டது போல?

Advertisement