Advertisement

அவன் சத்தத்தில் பதறி அடித்து எழுந்தவள் “ஐயோ இவ்வளவு நேரமா என்னை தூங்க விடுவீங்க? இன்னைக்கு பஸ்ஸை விட போறேன். நீங்க தான் என்னைக் கொண்டு போய் விடணும். சரி வாங்க அம்மா வீட்டுக்கு போய் குளிச்சு கிளம்பனும். டிரஸ் எல்லாம் இங்கயே கொண்டு வந்துரலாம்னு சொன்னா யாரும் கேக்க மாட்டுக்கீங்க?”, என்று புலம்பிய படியே அறையை விட்டு வெளியே செல்லப் போனவள் அடுத்த நொடி தலை சுற்றி கீழே அமர்ந்து விட்டாள். 

“பூர்ணி… பூர்ணி என்ன செய்யுது டி?”, என்ற படி அவளை நெருங்கியவன் அவளை தூக்கி நிறுத்தி கைத்தாங்கலாக கட்டிலுக்கு அழைத்து வந்து அமர வைத்தான்.

“தெரியலைங்க, திடீர்னு தலை சுத்தின மாதிரி இருந்துச்சு”

“சரி கொஞ்ச நேரம் படு. ஹாஸ்பிட்டல் போகலாம். இன்னைக்கு ஸ்கூல்க்கு லீவ் சொல்லிரு”

“ஐயோ அதுக்கு லீவ் சொல்லு இதுக்கு லீவ் சொல்லுன்னு சொல்லி நிறைய நாள் லீவ் எடுத்தாச்சுங்க”

“இன்னைக்கு ஒரு நாள் லீவ் எடு மா. ஆஸ்பத்திரி போயிட்டு வந்துறலாம்”

“லீவ் வேணா சொல்றேன். ஆனா ஹாஸ்பிட்டல் எல்லாம் வேண்டாம். ஐயாவுக்கு நான் லீவ் போட்டா போதும் கொண்டாட்டமா ஆகிருமே?”, என்று சிரித்தாள்.

“நிஜமாவே நீ அப்படி உக்காந்ததும் பயந்துட்டேன் டி. கண்டிப்பா ஹாஸ்பிட்டல் போகணும்”

“சரி சரி, ஹாஸ்பிட்டல் போக கூட முதல்ல குளிக்கணும். வாங்க அம்மா வீட்டுக்கு போகலாம்”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீ படு. நான் அங்க போய் உனக்கு தேவையானது எல்லாம் எடுத்துட்டு வரேன்”

“அங்க போய் என்ன எடுப்பீங்களாம்? ஒண்ணு கேட்டா ஒண்ணு எடுப்பீங்க? நாம அங்க போகலாம் அத்தான். எப்படியும் சாப்பிட அங்க தான் போகணும்?”

“சரி வா”, என்று சொல்லி அவளை கை பிடித்து அழைத்து வந்தான்.

அவ்வளவு நேரம் கழித்து வந்த பூர்ணிமாவைப் பார்த்து விட்டு “என்ன டி, இவ்வளவு நேரம் கழிச்சு வர? இன்னைக்கும் லீவ் தானா? கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு?”, என்று கேட்டாள் சாந்தி.

“தலை சுத்தி கீழே விழுந்துட்டா அத்தை. அதான் லீவ் போடச் சொன்னேன். என்னன்னு தெரியலை”, என்று கவலையாகச் சொன்னான் செந்தில்.

அதைக் கேட்டு கண்கள் மின்ன “பூர்ணி தலைக்கு குளிச்சு எத்தனை நாள் ஆச்சு டி?”, என்று கேட்டாள் சாந்தி.

அப்போது தான் அவளுக்கும் அந்த விஷயம் புரிய “அம்பந்தஞ்சு நாள் ஆகிருச்சு மா”, என்றாள்.

“சந்தோஷம் டா. சரி நீ ரெஸ்ட் எடு. நான் வசந்தா அக்கா கிட்ட சொல்லிட்டு வரேன். மாப்பிள்ளை சாயங்காலமா அவளை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க”, என்று சொல்லி விட்டுச் சென்றாள். 

மாமியார் அங்கிருந்து சென்றதும் “என்ன டி நேத்து தானே தலைக்கு குளிச்ச? பின்ன அத்தை கிட்ட அப்படிச் சொல்ற?”, என்று கேட்டான் செந்தில்.

அவனைப் பார்த்து சிரித்தவள் அவன் கையை எடுத்து தன்னுடைய அடி வயிற்றில் வைத்தாள். அவன் புரியாமல் அவளைப் பார்க்க “இந்த வயித்துக்குள்ள உங்க அம்மாவோ அப்பாவோ இருக்காங்க. அதை தான் அம்மா சொல்லிட்டு போறாங்க. ஆனா டவுட் தான். டாக்டர் சொன்னா தான் தெரியும்”, என்று சேர்த்தே சொன்னாள். அவனை ஆசை காட்டி ஏமாற்றக் கூடாதே என்ற எண்ணம். 

“நிஜமாவா டி?”, என்று கேட்டவனின் கண்கள் சந்தோசத்தில் கலங்கி விட்டது. அவனை மடி சாய்த்தவள் “என்ன இது? சின்னப் பிள்ளை மாதிரி”, என்று கடிந்து கொண்டாள்.

“யாருமே இல்லாத அனாதையா இருந்தேன் டி. என் அம்மா அப்பா செத்ததும் என் சொந்தங்கள் எல்லாம் விலகிப் போயிட்டாங்க. உன் அண்ணன் தான் எனக்குன்னு இருந்தான். அப்புறம் நீ வந்த. ரெண்டு அத்தை ரெண்டு மாமா கிடைச்சாங்க. இப்ப என்னோட குழந்தையும் வரப் போகுது. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?”

“அவசரப் பட வேண்டாங்க. அப்புறம் கஷ்டமா போயிரும். டாக்டர் சொல்லட்டும்”

“கண்டிப்பா இது குழந்தை தான். நான் நம்புறேன். என்னால சாயங்காலம் வரைக்கும் காத்திருக்க முடியாது. இப்பவே எப்படி கண்பார்ம் பண்ண?”

“அப்ப மெடிக்கல் போய் கிட் வாங்கிட்டு வாங்க”, என்று சொல்ல சந்தோஷமாக சென்றான். 

அவன் கிட்டை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும் போது அனைவரும் அங்கே தான் இருந்தார்கள். அவள் உள்ளே சோதனை செய்ய போக அனைவருக்கும் எதிர் பார்ப்பு குமிழிட்டது.

சரவணன் கையை இறுகப் பற்றிய படி இருந்தான் செந்தில். அதுவே அவனது மனதை சரவணனுக்கு புரிய வைத்தது.

“கண்டிப்பா நல்லது தான் டா மாப்பிள்ளை நடக்கும்”, என்று சொன்னான் சரவணன்.

சற்று நேரத்தில் பூர்ணிமா அனைவருக்கும் வெட்கத்துடன் விஷயத்தைச் சொல்ல அங்கே சந்தோஷம் தாண்டவமாடியது.

“நான் அப்பா ஆகப் போறேன் டா”, என்று சொன்ன செந்தில் சரவணனை இறுக அணைத்துக் கொண்டான்.

“நானும் தான் தாய் மாமா ஆகிட்டேன்”, என்று சந்தோஷப் பட்டான் சரவணன்.

“அம்பத்தஞ்சு நாள் தான் ஆகிருக்கு. அதனால கவனமா இருக்கணும் பூர்ணி. கொஞ்ச நாள் வரைக்கும் யார்க் கிட்டயும் சொல்ல வேண்டாம். கொஞ்ச நாள் நீ வேலைக்கு போக வேண்டாம். லீவ் சொல்லு. இல்லைன்னா வேலையை விட்டுரு. இப்ப நீ வேலைக்குப் போய் ஒண்ணும் சாதிக்கப் போறது இல்லை”, என்று வசந்தா சொல்ல “சரி பெரியம்மா”, என்று கேட்டுக் கொண்டாள் பூர்ணிமா. 

அக்கம் பக்கத்தில் இருக்கும் யாருக்கும் சொல்லாமல் போனாலும் வெண்மதிக்கு மட்டும் அழைத்தாள் பூர்ணிமா. “என்ன டி காலைலே கால் பண்ணிருக்க? நீ பஸ் ஸ்டாண்ட் வந்துட்டியா?”, என்று கேட்டாள் வெண்மதி.

“இல்லை டி, நான் இன்னைக்கு ஸ்கூல்க்கு வரலை”

“என்ன ஆச்சு பூர்ணி? உடம்பு சரியில்லையா? இல்லை வீட்ல ஏதாவது….”

“அப்படி எல்லாம் இல்லை டி, வந்து… அது வந்து…. நான்…. நீ அத்தை ஆகப் போற போதுமா?”, என்று ஒரு வழியாக விஷயத்தைச் சொல்லி விட்டாள். 

“ஹே நிஜமாவா? இதைக் கேக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டி. சாயங்காலம் உன்னைப் பாக்க வரேன் சரியா? ஆனா அப்பா விடுவாங்களா தெரியலை”

“ரொம்ப ரிஸ்க் எடுக்காத. முடிஞ்சா வா. அப்புறம் எங்க வீட்ல இப்போதைக்கு ஸ்கூல்க்கு போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க. என்ன செய்ய தெரியலை”

“அதெல்லாம் வேற ஸ்டாப் வச்சு மேனேஜ் பண்ணிக்கலாம். அதான் சிலபஸ் எல்லாம் முடிச்சாச்சே? இன்னும் பசங்களுக்கு எக்ஸாம்ஸ் தான் இருக்கு. அதனால பிரச்சனை இல்லை டி. நான் சார் கிட்ட போய் பேசுறேன்”

“சரி டி, நீ ஸ்கூல்க்கு கிளம்பு. அப்புறம் பேசலாம்”, என்று சொல்லி போனை வைத்தாள் பூர்ணிமா.

மகள் முகம் சந்தோஷமாக இருக்கவும் “பூர்ணி தானே பேசினது? என்ன விஷயம் மா?”, என்று கேட்டாள் விசாலம். 

“பூர்ணி மாசமா இருக்காளாம் மா. அதான் ஸ்கூல்க்கு வரலைன்னு சொல்றா”

“ரொம்ப சந்தோஷம். ஆனா எங்களுக்கு அப்படி ஒரு கொடுப்பினை இல்லையே? உன்னை இப்படி பாத்து பாத்து சாகணும்னு எங்க தலையெழுத்து போல?”, என்று புலம்பி விட்டு விசாலம் அங்கிருந்து சென்றதும் மனதை பிசைந்தது வெண்மதிக்கு.

தோழிக்காக சந்தோஷப் பட்டாலும் அவளுக்குள்ளும் எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும் எழுந்தது என்னவோ உண்மை தான். அதே தவித்த மனதுடன் கிளம்பி வந்தாள். பூர்ணிமா வராததால் அவள் மனது தனிமையில் தவித்தது. அப்போது அவளுக்கு எதிரே இருந்த கடையில் நின்றிருந்தான் சரவணன்.

சரவணனும் அன்று அவளைக் காண தான் வந்திருந்தான். வீடே சந்தோசத்தில் நிறைந்திருக்க அவன் மனதில் மட்டும் ஏதோ கொஞ்சம் வெறுமை வந்தது. செந்திலின் சந்தோசத்தைக் கண்டதால் வந்த ஏக்கமாக கூட இருக்கலாம். அவனுக்கு ஏனோ இன்று வெண்மதியைப் பார்க்க வேண்டும் போலவே இருந்தது. அதனால் யாரிடமும் எதுவும் சொல்லாமல் கிளம்பி விட்டான். அவன் கல்லூரிக்கு தான் செல்கிறான் என்று மற்றவர்கள் எண்ணிக் கொண்டார்கள். 

அவனைக் கண்டதும் ஏதேதோ எண்ண அலைகள் வெண்மதிக்குள் பயணித்து அவள் கண்களையும் கலங்கச் செய்தது. இருக்கும் இடம் உணர்ந்து தன்னை சமாளித்துக் கொண்டாலும் இன்று அடிக்கடி அவள் பார்வை அவன் பக்கமே சென்றது. 

அவனும் அவளையே தான் பார்த்திருந்தான். அவனுக்கு நிச்சயம் தெரிந்தது அவள் இன்று சரியே இல்லையென்று. நிர்மல் இறந்த பிறகும் பல முறை அவளைப் பார்த்திருக்கிறான் தான். அப்போதெல்லாம் அவள் முகத்தில் கவலையோ தவிப்போ இருக்காது. முற்றும் துறந்த முனிவர் போல வெறுமை மட்டுமே இருக்கும். இன்று வெறுமையுடன் சேர்த்து வேறு ஏதோ ஒரு உணர்வை அவளிடம் கண்டான். 

அதே போல இத்தனை நாளும் அவன் பக்கமும் அவள் பார்வை செல்லாது. ஆனால் இன்றோ அவள் பார்வை அவனையே அடிக்கடி வெறித்தது. அவன் ஒரு வார்த்தை வந்து பேசி விட மாட்டானா என்று அவள் கண்கள் ஏங்குவது போல அவனுக்கு பட்டது. 

அவளுடைய கண்கள் அலைபாய்வதும் அவளுடைய விரல் நகங்கள் அவளுடைய கையில் இருந்த ஹெண்ட்பேகை கிள்ளுவதுமாக இருக்க அவனுக்கு அவள் அருகே ஓடிச் சென்று உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்க வேண்டும் போல ஒரு எண்ணம் எழுந்தது.

ஆனால் அந்த ஊரில் அது எல்லாம் சாத்தியம் இல்லையே. பூர்ணிமா வராததுக்கு அவன் காரணம் சொல்லப் போனாலே ஊர் மக்கள் அவளையும் அவனையும் இணைத்து கதை திரித்து விடுவார்கள். அதனால் மௌனமாக அவளை பார்த்த படி நின்றான்.

பஸ் ஏறிய பிறகும் ஒரு மாதிரி தான் அமர்ந்திருந்தாள் வெண்மதி. எப்போதுமே அவளை விட்டு தள்ளி இருக்க நினைக்கும் அவன் அன்று அவள் சீட்டுக்கு பின் சீட்டில் சென்று அமர்ந்தான். 

அதை அவள் பார்த்தாள் தான். வெகு நாட்கள் கழித்து மெல்லிய படபடப்பு அவளுக்குள். பக்கத்து ஊரில் ஏறிய பாட்டி அவள் அருகே வந்து அமர்ந்தாள்.

சிறிது தூரம் சென்றதும் “எந்த ஊர் மா?”, என்று கேட்டாள் அந்த பாட்டி. அந்த நிமிடத்தில் அமைதியை விரும்பிய வெண்மதி வேறு வழி இல்லாமல் பாட்டிக்கு பதில் சொன்னாள்.

பேச ஆள் கிடைத்த சந்தோசத்தில் “கல்யாணம் ஆகிருச்சா கண்ணு?”, என்று கேட்டாள் அந்த பாட்டி. 

“ஆமா”

“எத்தனை குழந்தைகள் மா?”

“எதுவும் இல்லை”, என்று சொன்ன வெண்மதிக்கு இந்த பாட்டி சற்று வாயை மூடினால் பரவாயில்லை என்று தோன்றியது. அவனும் அவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தான். ஆனால் அவனாலும் ஒன்றும் செய்ய முடியாதே. 

அதுவோ விடாமல் “அட பாவமே? கவலைபடாதே மா. கூடிய சீக்கிரம் நல்லதா நடக்கும்”, என்றாள் பாட்டி.

“ம்ம்”

“உன் புருஷன் என்ன செய்றார் மா?”, என்று அந்த பாட்டி அடுத்த கேள்வியைக் கேட்க “செத்துட்டார்… போதுமா?”, என்று கத்தி விட்டு முகத்தை வெளிப் பக்கம் திருப்பிக் கொண்டாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. வெகு நாட்கள் கழித்து அழுகிறாள். அவள் கண்களில் வழிந்த கண்ணீர் பின் சீட்டில் இருந்த அவன் முகத்திலும் பட்டது. அதை துடைத்து அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியாத நிலையில் வைத்திருக்கும் அந்த கடவுளை அந்த நிமிடம் சபித்தான்.

அவள் சொன்னதைக் கேட்டு அந்த பாட்டி முகம் பேயறைந்தது போல ஆனது. அதற்கு பிறகு அந்த பாட்டி எதுவும் பேச வில்லை. அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

அவளுடைய ஸ்டாப் வந்ததும் அவசரமாக கீழே இறங்கிய வெண்மதிக்கு உடனே பள்ளிக்குச் செல்ல மனதில்லை. மனதின் அழுத்தம் தாங்க முடியாமல் அருகிலிருந்த பார்க்கு சென்றாள். அவள் பள்ளிக்குச் சென்றிருந்தால் எப்போதும் போல சரவணன் கண்டு கொள்ளாமல் போயிருப்பான். 

ஆனால் இன்று அவளை அப்படி தனியே விட மனதில்லாமல் அவள் பின்னே விரைந்தான். காலை எட்டு மணி என்பதால் பார்க்கில் கொஞ்சம் கூட கூட்டமே இல்லை. பஸ்ஸுக்காக காத்திருந்தவர்கள் ஐந்தாறு பேர் அமர்ந்திருந்தார்கள் அவ்வளவே. ஒரு ஓரத்தில் இருந்த மரத்தடியில் போடப் பட்டிருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்தாள் வெண்மதி. 

காதல் வெடிக்கும்…..

Advertisement