Advertisement

அத்தியாயம் 8

பனிச்சாரலாய் மனம்

நனைத்துச் செல்கிறது

உந்தன் நினைவுகள்!!!

கூடலை விட பிரிவில் காதலை அதிகம் உணரலாம் என்பது அந்த நொடி இருவருக்கும் புரிந்தது. “பூர்ணி என்ன பாத்துட்டு இருக்க? உன் புருஷனை உன்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போ. குளிச்சு முடிச்சதும் சாப்பிட வாங்க”, என்று சொன்ன சரவணன் வசந்தாவிடம் கண்ணைக் காட்டினான். 

“சரிண்ணா”, என்று சொன்னவள் செந்திலுடன் கிளம்ப “ஒரு நிமிஷம் இரு கண்ணு”, என்றாள் வசந்தா.

“என்ன பெரியம்மா?”

“இந்தா, இந்த கூடைல இட்லி சட்னி சாம்பார் எல்லாம் வச்சிருக்கேன். மாப்பிள்ளை குளிச்சதும் ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு பேசிட்டு இருங்க. நானும் உன் அம்மாவும் மதியம் சமையல் ஆன அப்புறம் சரவணனை விட்டு போன் பண்ணச் சொல்றேன். அப்ப வந்தா போதும்”, என்று சொல்ல சிறு வெட்கத்துடன் அதை வாங்கிக் கொண்டு சென்றாள். அவர்கள் தங்களுக்கு தனிமை கொடுக்க தான் இப்படிச் செய்கிறார்கள் என்று புரிந்தது. 

சரவணன் வீட்டில் இருந்து பூர்ணிமா வீட்டுக்கு போவதற்குள் தெரிந்தவர்கள் அனைவரும் அவனிடம் நலம் விசாரிக்க மனைவியுடன் பேச முடியாமல் தவித்த படியே அவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் செந்தில்.

வீட்டுக்குச் சென்றதும் “நீங்க குளிச்சிட்டு வாங்க”, என்று அவன் முகம் பார்க்காமல் சொன்னாள் பூர்ணிமா. அவன் கண்களில் இருந்த ஏக்கத்தில் அவளால் அவனை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. 

கதவைப் பூட்டித் தாழ் போட்டவன் அவள் புறம் திரும்பி இரண்டு கைகளையும் அகல விரித்து கண்களால் அவளை அழைத்தான். அடுத்த நொடி அவனது விரிந்த கைகளுக்குள் தஞ்சம் புகுந்தாள் பூர்ணிமா. 

அவனைக் கட்டிக் கொண்டு அவள் கதறித் தீர்க்க அவன் கைகளும் அவளை வாகாக அனைத்துக் கொண்டது. செந்திலின் கண்களும் கலங்கி கண்ணீர் வடித்தது.

பிரிவின் துயரை இருவரும் மற்றவரின் அணைப்பில் போக்க முயன்றார்கள். அவளது உச்சியில் முத்தம் பதித்தான் செந்தில். காற்றில் பிடிமானம் இல்லாத தளிர் கோடி போல தளர்ந்து அவன் மேலேயே சரிந்தாள் பூர்ணிமா.

“அழாத டி”, என்று சொன்னவனின் கண்களும் கண்ணீரையே பொழிந்தது. அவன் கைகளுக்குள் இருந்த படியே அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அதிகப் படியான வேலையாலும், ஒழுங்கான சாப்பாடும் இல்லாமல், அங்கிருக்கும் சீதோஷ்ணமும் ஒத்துக் கொள்ளாமல் ஆளே மாறிப் போயிருந்தான். அவன் பட்ட கஷ்டங்களை எண்ணி அவளுக்கு அழுகையாக வந்தது.

அவள் மனதை உணர்ந்தவன் “என்ன டி பாக்க ரொம்ப அசிங்கமா மாறிட்டேனா? என்னை பிடிக்கலைன்னு சொல்லிருவியா?”, என்று சீண்டலாக கேட்டான்.

என்ன தான் சீண்டலாக கேட்டாலும் அவன் மனதில் அந்த தவிப்பு இருப்பது புரிய கண்ணீருடன் அவனை முறைத்துப் பார்த்தவள் அவன் உதடுகளை நோக்கி குனிந்தாள்.

முத்தம் கொடுக்கப் போகிறாள் என்று சந்தோஷப் பட்டவன் “ஐயோ பல்லு விளக்கலை டி”, என்றான்.

அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவனுடைய உதடுகளில் தன்னுடைய உதடுகளைப் பதித்தவள் அதை நன்கு கடித்து வைத்தாள். 

“ஏய் ராட்சசி வலிக்குது டி, விடு டி”, என்று அவன் கதறிய பிறகு தான் விட்டாள். 

“என்ன டி இப்படி பண்ணிட்ட? எரியுது டி பூர்ணி”

“அப்ப நீங்க பேசினது மட்டும் எனக்கு எரியாதா? உண்மையான அன்பு இருக்கும் போது அழகு எப்படி நடுவுல வரும்? நாளைக்கு எனக்கு ஏதாவது ஆகி நான் அசிங்கமா ஆனா உங்களுக்கு என்னைப் பிடிக்காம போயிருமா?”

“ஏய் அது எப்படி? நீ என்னோட உயிர் டி”

“அப்ப நீங்க மட்டும் என் உயிர் இல்லையா?”, என்று கேட்டவளின் கரங்கள் அவனுடைய தலை கோதியது.

“சாரி டி, என்னை மன்னிச்சிரு”

“ம்ம் விடுங்க. சரி குளிச்சிட்டு வாங்க”

“அப்புறம் குளிக்கிறேன் டி”, என்று கொஞ்சலுடன் சொன்னவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் பூர்ணிமா.

அவன் பார்வையில் ஓராயிரம் அர்த்தங்கள் இருந்தன. அவளிடம் மட்டும் கொட்டத் துடிக்கும் உணர்வுகள் இருந்தன. அவை அவர்கள் இருவருக்கும் மட்டும் புரியும் நுண் உணர்வுகள். தினமும் வீடியோ காலில் அவளது தாகத்தை கிளப்பி விடுபவன் இன்று அந்த தாகத்தைத் தீர்க்க நேராகவே வந்து விட்டான்.

இதற்கு மேல் அவளுக்கு வேறு என்ன வேண்டுமாம்? அவன் பார்வையில் முகம் சிவந்தது நின்றாள். அவன் அருகாமையில் அவள் மனம் மிருதுவானது. மெல்ல அவனுடைய கரம் பற்றி இழுத்துக் கொண்டு அவளுடைய அறைக்குச் சென்றாள். 

உறங்கிக் கிடந்த இருவரின் உணர்வுகளும் விழித்துக் கொண்டன. அவனால் மட்டும் எழுப்பப் படும் உணர்வுகள் அவளை ஆக்ரமிக்க அவன் கைகளுக்குள் அடைக்கலமானாள் பூர்ணிமா. 

அவள் இதழோடு இதழ் பதித்தவன் அவளை கட்டிலில் தள்ளி அவள் மேல் படர்ந்தான். இத்தனை நாள் பிரிவில் இருந்த ஏக்கங்கள் இருவருக்கும் பொங்கி எழ அவன் தொடுகையில் சுகமாய் கரைந்தாள் பூர்ணிமா. 

அவன் கரங்களும் உதடுகளும் அவள் உடலில் நடத்திய மாயாஜாலத்தில் எல்லையில்லா பேரானந்தம் கொண்டாள். வெகு நாட்கள் கழித்து அவர்கள் வாழ்க்கை அங்கே மலர்ந்தது. மீண்டும் மீண்டும் அவளை நாடியவன் களைப்பில் உறங்கிப் போக அவன் நெஞ்சில் சாய்ந்த படி அவளும் உறங்கி விட்டாள்.

மதிய உணவு உண்ண அவர்களை வரச் சொல்லி சரவணன் மூன்றாவது முறை அழைக்கும் போது தான் எழுந்து அவசர அவசரமாக குளித்து விட்டு அங்கே சென்றார்கள். அவர்கள் வீட்டில் பல நாட்கள் கழித்து சந்தோஷம் கரை புரண்டு ஓடியது. சாப்பிட்டு முடித்ததும் நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். 

“அடுத்து என்ன செய்யப் போற மச்சான்?”, என்று கேட்டான் செந்தில்.

“என்னை என்ன செய்யச் சொல்ற?”

“இன்னொரு கல்யாணம்…?”, என்று அவன் தயக்கத்துடன் இழுக்க “அந்த பேச்சு வேண்டாம் மாப்பிள்ளை. விடு. சரி நீ என்ன பண்ணப் போற? பாரின் எல்லாம் வேண்டாம் டா. இங்கயே ஏதாவது செய்யேன்”, என்று சொல்லி பேச்சை மாற்றி விட்டான் சரவணன்.

“நானே பாரின் போகக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் மச்சான். என்னால உங்க எல்லாரையும் விட்டுட்டு இருக்க முடியாது. இங்கயே ஏதாவது தொழில் பாக்கலாம்னு இருக்கேன். என்னன்னு யோசிப்போம். சரி நான் என்னோட வீடு வரைக்கும் போயிட்டு வரட்டா? அம்மா அப்பா நினைவாவே இருக்கு”

“உன் வீட்டுக்கு போக என்ன தயக்கம் செந்தில்? போய்ட்டு வா டா. பூர்ணியும் உன் கூட வருவா”

“அத்தை மாமா எல்லாம் என்ன சொல்லுவாங்களோன்னு இருக்கு”

“அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. தினமும் நீ அங்கயே இருந்துக்கோ. ஆனா சாப்பிட இங்க தான் வரணும். கொஞ்ச நாளுக்கு அப்புறம் எல்லாம் முடிவு பண்ணலாம். இன்னைக்கு நைட் சாப்பாடை முடிச்சிட்டு பூர்ணிமாவை கூட்டிட்டு அங்க போ. நைட் அங்கேயே தாங்கிக்கோங்க. நான் எல்லார்க் கிட்டயும் சொல்லிக்கிறேன்”

“அங்க எப்படி தங்க? ஆள் புழங்காத வீடு டா. குப்பையா இருக்கும்”

“அப்படின்னா சுத்தப் படுத்தி தங்குங்க, போங்க”, என்று சொல்லி சிரித்தான் சரவணன்.

அன்று இரவு அங்கு செந்திலும் பூர்ணியும் போகும் போது அங்கே வீடு சுத்தமாக இருந்தது. அதைக் கண்டு செந்தில் வியந்து போனான். 

“என்ன பூர்ணி இதெல்லாம்?”, என்று ஆனந்த அதிர்வாக கேட்டான்.

“என்ன இதெல்லாம்னா? என்ன கேக்குறீங்க?”, என்று அவள் புரியாமல் அவனைப் பார்க்க “வீடு சுத்தமா இருக்கு”, என்று கேட்டான்.

“இது நம்ம வீடு. என்னோட உயிரான நீங்க பிறந்த வீடு. இந்த வீட்ல உங்க அம்மா அப்பாவோட ஆத்மா இருக்கும். அப்படி இருக்குறப்ப நான் இதை எப்படி தூசி அண்ட விடுவேன். தினமும் சாயங்காலம் வந்து பெருக்கி விளக்கு போடுவேன். செவ்வா வெள்ளி கழுவி விடுவேன். நான் வர முடியாதப்ப அம்மா வருவாங்க. இது உங்களுக்கு தெரியாதா?”, என்று அவள் கேட்க அடுத்த நொடி அவளால் பேச முடியவில்லை. அவளுடைய உதடுகளை சிறை செய்திருந்தான் செந்தில். 

இதற்கு மேல் ஒரு மனைவி அவள் அன்பை அவனுக்கு எப்படி புரிய வைப்பாள்? அவன் வாழ்ந்த வீட்டை கோவில் போல அவள் வைத்திருக்க அவள் மேல் ஏற்கனவே காதல் கொண்டிருந்தவன் இன்று அவள் மேல் பித்தாகிப் போனான். அவன் கரங்கள் அவளிடம் அத்து மீற விருப்பத்துடன் அவன் கைகளுக்குள் நெகிழ்ந்தாள்.

சிறிது நேரம் கழித்து அவன் உறங்க ஆரம்பிக்க அவன் உதடுகளைக் கிள்ளி, அவன் மீசையை இழுத்து அவனை தூங்க விடாமல் செய்தாள்.

“பிளீஸ் டி தூங்க விடு டி, செல்லக் குட்டி”

“கண்டிப்பா விட மாட்டேன். அங்கே இருந்துட்டு என்னை எவ்வளவு டார்ச்சல் பண்ணினீங்க?”

“சாரி டி”, என்று அவன் சொல்ல அவன் தலையைக் கோதி விட்டவள் அவனுக்கு நிம்மதியான தூக்கத்தை வழங்கினாள்.

அடுத்து வந்த நாட்களில் பகல் முழுவதும் சரவணன் மற்றும் பூர்ணிமா வீட்டில் இருக்கும் செந்தில் இரவு மனைவியை அழைத்துக் கொண்டு அவனுடைய வீட்டுக்குச் சென்று விடுவான்.

அன்று பூர்ணிமா பள்ளிக்குச் செல்ல செந்தில் சரவணனுடன் அடுத்து என்ன செய்ய என்று யோசனையில் ஆழ்ந்தான். இருவருக்கும் எவ்வளவு முயன்றும் என்ன செய்யலாம் என்று தெரியவில்லை. பெரியவர்களிடம் கேட்கலாம் என்று எண்ணி அவர்களிடம் கேட்டார்கள். 

“கொஞ்ச நாள் பொறுங்க மாப்பிள்ளை. நிதானமா என்ன செய்யலாம்னு யோசிப்போம்”, என்றார் சக்திவேல்.

“இல்லை மாமா, வேலைக்கு போகலைன்னா நல்லா இருக்காது”, என்று தயங்கிய படி சொன்னான் செந்தில்.

“நீங்க வேலைக்கு போகாதப்ப நாங்க பொண்ணு கொடுக்கலைங்கிறதை மனசுல வச்சுட்டு தானே இப்படி பேசுறீங்க மாப்பிள்ளை?”, என்று கேட்டார் வெற்றிவேல்.

“ஆமா மாமா, அது தப்பில்லையே? பொண்ணு கொடுக்கும் போது மாப்பிள்ளைக்கு வேலை இருக்கணும்னு நினைக்கிறது சரி தான்”, என்று அவருக்காக அவனே பரிந்து பேசினான்.

“அப்ப நாங்க அப்படி நினைச்சதுக்கு காரணம் அப்ப எங்களுக்கு உங்க மேல நம்பிக்கை இல்லை மாப்பிள்ளை. உங்க அம்மா அப்பா இருந்திருந்தா கூட அந்த அளவுக்கு யோசிச்சிருக்க மாட்டோம். தனியா இருக்குற பிள்ளை, வேலையும் இல்லைன்னா எப்படி பூர்ணிமாவை நீங்க காப்பாத்துவீங்கன்னு தான் யோசிச்சோம்? ஆனா இப்ப தான் நீங்க உங்களை நிரூபிச்சிட்டீங்களே? எங்க மாப்பிள்ளை பொறுப்பானவர்னு நாங்க புரிஞ்சி ரொம்ப நாள் ஆச்சு. அதனால நீங்க உடனே வேலைக்கு போகணும்னு எல்லாம் யோசிக்காம சந்தோஷமா இருங்க. இனிமே நீங்க பாரின் எல்லாம் போக வேண்டாம். இங்கயே ஏதாவது செய்வோம். காலத்துக்கும் நிக்கப் போற தொழில், அதனால அவசரப் பட வேண்டாம்”, என்று சொல்லி விட்டார் வெற்றிவேல். மற்றவர்களும் ஒத்துக் கொண்டார்கள். 

அன்று முகம் எல்லாம் பூரித்துப் போய் வந்த பூர்ணிமாவைக் கண்டு வெண்மதிக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனால் தோழியை எப்படி எதிர் கொள்ள என்று பூர்ணிமாவுக்கு சங்கடமாக இருந்தது. தான் சந்தோஷமாக இருக்க அவள் மட்டும் இப்படி இருக்கிறாளே என்று எண்ணி வருந்தினாள்.

ஆனால் எனக்கு அந்த வருத்தமெல்லாம் இல்லை என்பது போல “ரொம்ப அழகா இருக்க டி பூர்ணி”, என்று வெண்மதி வெகுளியாகச் சொல்ல பூர்ணிமாவுக்கு வெண்மதியை நினைத்து வேதனை இன்னும் அதிகமானது.  

“என் மேல இவ்வளவு அன்பு வச்சிருக்குற இவ வாழ்க்கை எப்ப தான் சரியாகுமோ?”, என்று எண்ணி தோழிக்காக கவலை கொண்டாள் பூர்ணிமா.

காலம் யாருக்கும் நிற்காமல் நகர்ந்தது. செந்தில் ஊருக்கு வந்து மூன்று மாதம் ஓடி இருந்தது. அப்போது ஒரு நாள் செந்தில் கண் விழித்துப் பார்க்கும் போது பூர்ணிமா அவன் கை மேல் தலையை வைத்து அவன் நெஞ்சில் முகம் புதைத்து நன்கு தூங்கிக் கொண்டிருந்தாள். 

எப்போதுமே சீக்கிரம் எழுந்து விடுபவள் இன்று இன்னும் தூங்கவும் ஒரு வேலை ஞாயிற்று கிழமையோ என்று எண்ணி தலையைத் திருப்பி காலண்டரைப் பார்த்தான். 

அது புதன் கிழமை என்று காட்ட “பூர்ணி ஸ்கூல்க்கு போகலையா? நேரம் ஆச்சு பாரு”, என்று அவளை எழுப்பினான். 

Advertisement