Advertisement

அதை நம்பிய அவளும் வேண்டா வெறுப்பாக அமைதியாக இருந்தாள்.

அடுத்த நாள் பள்ளிக்கு வந்த பூர்ணிமாவிடம் “என்ன டி ஆச்சு?”, என்று கேட்டாள் வெண்மதி.

“அண்ணாவுக்கும் அண்ணாவோட தாய்மாமா பொண்ணு வைஷ்ணவி சொல்லிருக்கேன்ல? அவளுக்கும் கல்யாணம் பேசினாங்க டி. அண்ணன் முடியாதுன்னு சொல்லுச்சு. அப்புறம் அத்தை ஒரு வழியா பேசி சம்மதிக்க வச்சிட்டாங்க. அதான் நான் நேத்து வரலை”

“ஓ”, என்று சொன்ன வெண்மதி வேறு ஒன்றும் சொல்ல வில்லை.

அடுத்து வந்த நாட்களில் வேண்டா வெறுப்பாக சுற்றிக் கொண்டிருந்தான் சரவணன். பந்தக்கால் நடும் போதும் உடை எடுக்க போகும் போதெல்லாம் அவன் அதில் கலந்து கொள்ளவே இல்லை.

வைஷ்ணவியோ ஒவ்வொரு நிமிடமும் உள்ளுக்குள் நரகத்தில் இருப்பது போல செத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு சரவணனைப் பிடிக்கும் தான். அவள் மனதில் ரகு நுழையாமல் இருந்திருந்தால் கட்டாயம் இந்த திருமணத்தை சந்தோஷமாக எதிர் பார்த்திருப்பாள். ஆனால் காதல் அவள் மனதில் ஏறியதால் அவளால் சாதாரணமாக இருக்க முடியவில்லை.

இதற்கு மேல் இந்த வலியைத் தாங்க முடியாது என்று புரிந்த வைஷ்ணவி மெல்ல தந்தையிடம் மட்டும் விஷயத்தைச் சொன்னாள். அதைக் கேட்டு கொதித்து போய்“ஏற்கனவே உன் விசயம் தெரிஞ்சு தான் நான் இந்த ஏற்பாட்டையே பண்ணிருக்கேன்”, என்று அவள் தலையில் இடியை இறக்கினார் மூர்த்தி.

“எனக்கு ரகு தான் பா வேணும்”, என்று அவள் சொல்ல அவளை அடி பின்னி விட்டார். அது மட்டுமில்லாமல் “இனி அவனை நினைச்ச அவனைத் தான் முதலில் வெட்டுவேன். என் தங்கச்சி கிட்ட இந்த கல்யாணம் பண்ணி வைன்னு கேட்டது நான் தான். அதனால எல்லாம் சரியா இந்த கல்யாணத்துல நடக்கணும். எதையாவது பிரச்சனை பண்ணி என்னை அசிங்கப் படுத்தணும்னு நினைச்ச, நான் மனுசனா இருக்க மாட்டேன். நீ இங்க கொஞ்சம் அசைஞ்சா கூட அந்த ரகு செத்துருவான்”, என்றார். அதற்கு மேல் அவள் ஊமையாகிப் போனாள்.

ஒரு வழியாக கல்யாண நாளும் வந்தது. இதற்கிடையில் வைஷ்ணவி மற்றும் சரவணன் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை. வைஷ்ணவி ஒரு வார்த்தை அவள் மனதை அவனிடம் சொல்லி இருந்தால் அவன் சந்தோஷமாக மாமாவிடம் பேசி அவர்கள் திருமணத்தை முடித்து வைத்திருப்பான். ஆனால் அவள் அப்படி எதுவும் சொல்லி விடுவாளோ என்று பயந்து தான் அவர்களை மூர்த்தி சந்திக்கவே விடவில்லையோ என்னவோ?

அதே நேரம் ரகுவும் ஒரு திருட்டு கேசில் மாட்டி இருந்ததால் இரண்டு மாதங்கள் அவனை ஜெயிலில் தள்ளி இருந்தார்கள். அதனால் வைஷ்ணவியால் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை.

வெண்மதிக்கும் சரவணனின் கல்யாணப் பத்திரிகை போனது தான். ஆனால் “என்னை மன்னிச்சிரு பூர்ணி. ஒரு கல்யாணத்துல கலந்துக்குற அளவுக்கு எல்லாம் என் மனசு இன்னும் பக்குவப் படலை. என்னை தப்பா நினைக்காத. இது உன் அண்ணனுக்கு என்னோட சின்ன கிஃப்ட். கொடுத்துரு”, என்று சொல்லி ஒரு பார்சலைக் கொடுத்து விட்டாள் வெண்மதி. ஆனால் திருமணப் பரபரப்பில் அதை சரவணனிடம் கொடுக்க பூர்ணிமா மறந்து விட்டாள்.

நண்பனின் திருமணத்தைப் பார்க்க கூட வர முடியவில்லையே என்று செந்தில் வேறு புலம்பி பூர்ணிமாவை படுத்தி எடுத்துக் கொண்டிருந்தான்.

ஒரு வழியாக திருமண நாளும் வந்தது. அனைவரின் ஆசியோடும் வைஷ்ணவி கழுத்தில் அவன் ஒரு முடிச்சைப் போட மற்றத்தை எல்லாம் பூர்ணிமா தான் போட்டாள். மற்ற அனைவரும் சந்தோஷமாக இருக்க மணமக்கள் இருவரும் உள்ளுக்குள் புழுங்கினார்கள்.

ரகு வந்து விட மாட்டானா என்று வைஷ்ணவி நினைக்க வெண்மதி திருமணத்துக்கு வந்து விடக் கூடாது என்று எண்ணினான் சரவணன். அவளை எதிர்க் கொள்ளும் தைரியம் அவனுக்கு இல்லை.

திருமணத்திற்கு பின்னர் முதலிரவு தள்ளிப் போட மனதளவில் அவளை ஏற்றுக் கொள்ள இந்த அவகாசம் தேவை தான் என்று எண்ணி அவளிடம் சகஜமாக இருக்க முடியாமல் சரவணன் ஒதுங்கியே இருந்தான். அப்பாடி என்ற நிம்மதியுடன் அவளும் அவனிடம் இருந்து விலகியே இருந்தாள். அதற்கு பின்னர் தான் அவள் வீட்டை விட்டு ஓடிப் போனது.

இவை தான் சரவணன் மற்றும் வெண்மதி வாழ்க்கையில் நடந்தது. இனி அவர்கள் வாழ்க்கை எப்படி பயணிக்கப் போகிறது என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

அன்று காலையிலே சரவணனைக் காண வந்திருந்தார் மூர்த்தி. “வா மாமா, அத்தை வரலையா? முன்னாடி மாதிரி அத்தையை இங்க வந்து போய் இருக்கச் சொல்லு மாமா”, என்றான் சரவணன்.

“சொல்றேன் பா. தங்கச்சியும் மாப்பிள்ளையும் எங்க?”

“அப்பா வயலுக்கு போய்ருக்கார் மாமா. அம்மா சித்தப்பா வீட்டுக்கு போயிருக்கு”

“நீ காலேஜ்க்கு போகலையா?”

“இன்னும் நாலு நாளைக்கு கிளாஸ் இல்லை மாமா. காலேஜ்ல ஏதோ பங்ஷன் போல?”

“மாப்பிள்ளை உன் கிட்ட ஒரு விஷயம் பேசவா?”

“சொல்லு மாமா”

“என்னால உன்னை இப்படி பாக்கவே முடியலை மாப்பிள்ளை. இப்படி உன் வாழ்க்கையை சீரழிச்சிட்டேனேன்னு மனசு அறுக்குது டா?”

“அதை இப்ப புலம்பி என்ன செய்ய மாமா? விடு. எல்லாம் நடக்குறது தான் நடக்கும்”

“எத்தனை நாள் இப்படி தனியா இருக்க போற மாப்பிள்ளை? வேற கல்யாணம் பண்ணிக்கோ யா”

“ஏன் ஒரு தடவை நான் பட்ட அசிங்கம் பத்தாதா மாமா? என்னை என் போக்குல விடுங்க. மறுபடியும் கல்யாணம் கருமாதி எல்லாம் பாக்குற சக்தி எனக்கு இல்லை”

“என் மவ மாதிரி கேவலமா எல்லா பொண்ணுங்களும் இருக்க மாட்டாங்க மாப்பிள்ளை. நல்ல பொண்ணுங்க இருக்க போய் தான் இந்த பூமித் தாய் பொறுமையா இருக்கா”

“வைஷ்ணவியும் நல்லவ தான் மாமா. அவளோட காதல் உண்மையானது தான். அதை தேடி அவ போயிருக்கா. ஆனா அவளை கடவுள் வஞ்சிட்டார். எனக்கும் அப்ப இருந்த கோபத்துல அது புரியலை. நீ மட்டும் கொஞ்சம் சரியா யோசிச்சிருந்தா நாம அந்த ரகு யாருன்னு கண்டு பிடிச்சு அவளுக்கு விளக்கி ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்துருக்கலாம். உன் அவசர புத்தியாலும் உன் ஜாதி வெறியாலும் நம்ம வைஷு நமக்கு இல்லாம போயிட்டா. இதுல நான் வாங்க கூடாத பேர் எல்லாம் வாங்கிட்டேன். எல்லாமே போதும் மாமா. அடிபட்ட மனசு எதையும் உடனே ஏத்துக்காது. இந்த பேச்சே வேண்டாம் மாமா”, என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்று விட்டான்.

அவன் அப்படிச் சொன்னாலும் அவனை அப்படியே விட அவர் தயாராக இல்லை. வசந்தாவின் வரவுக்காக வாசலிலே அமர்ந்திருந்தார்.

அங்கே வந்த வசந்தா “என்னண்ணே வாசல்ல உக்காந்துருக்க? சரவணன் இருந்தானே? உன்னை உள்ள கூப்பிடலையா?”, என்று கேட்டாள்.

“அவன் கிட்ட தான் இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தேன். கோபப் பட்டு இப்ப தான் உள்ள போய்ட்டான் மா”

“என்ன ஆச்சு அண்ணா? உன் மேல கோபப் பட்டானா?”

“ஆமா மா, அவனுக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பேசுனேன். கோபப் பட்டுட்டான். சரி அதைப் பத்தி நீ என்ன மா நினைக்கிற? பெரிய மாப்பிள்ளை மனசுல என்ன இருக்கு?”

“எனக்கு என் பையன் நல்லா வாழனும். என் வீட்டுக்காரருக்கும் அது தாண்ணே வேணும். நீ பொண்ணு பாரு. ஆனா நல்ல பொண்ணா பாரு. எனக்கும் என் மகன் பொண்டாட்டி பிள்ளைங்க கூட வாழணும்னு ஆசையா இருக்கு”, என்று அனுமதி கொடுத்தாள் வசந்தா.

“சரி மா, நான் பாத்து சொல்றேன். எல்லாரும் சேர்ந்து நல்லா விசாரிச்சு நல்ல பொண்ணா பாத்து மாப்பிள்ளைக்கு கட்டி வைப்போம்”, என்று சொல்லி விட்டுச் சென்றார் மூர்த்தி.

அன்று செந்தில் பாரினில் இருந்து வந்திருந்தான். அவனை அழைக்க சரவணன் தான் சென்றிருந்தான். பூர்ணிமா பள்ளிக்கு லீவ் போட்டிருந்தாள். முந்தைய நாளே வெண்மதியிடமும் சொல்லி விட்டாள்.

செந்திலை நேராக தன்னுடைய வீட்டுக்கு தான் அழைத்து வந்தான் சரவணன். அங்கே தான் சக்திவேல், சாந்தி, பூர்ணிமா அனைவரும் இருந்தார்கள்.

வெகு நாட்கள் கழித்து வந்ததால் வசந்தா அவனுக்கு ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்தாள். செந்திலின் உதடுகள் மற்றவர்களிடம் நலம் விசாரித்து அவர்கள் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் அவன் கண்கள் என்னவோ மனைவியின் மீதே இருந்தது.

அவளும் ஆசையாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடைய தலை முதல் கால் வரை அவள் கண்கள் அளவிட்டது. எவ்வளவு நாள் பிரிவு? அவன் உருவத்தை கண்ணால் நிறைத்து மனதுக்குள் பத்திரப் படுத்திக் கொண்டிருந்தாள்.

காதல் வெடிக்கும்…..

Advertisement