Advertisement

அவளைக் கண்டதும் அவனுடைய பெற்றோர் இருவரும் சந்தோசமாகவே அவளை வரவேற்று பேசினார்கள்.

“எங்க மகன் போனாலும் நீ எங்களுக்கு எப்பவுமே மக தான் மா. அடிக்கடி எங்களை வந்து பாத்துட்டு போ”, என்று சொன்னாள் நிர்மலின் தாய் சாரதா.

“இந்த வயசானவங்களை எங்க மகன் கை விட்ட மாதிரி நீயும் எங்களைக் கை விட்டுறாதே மா. அப்ப அப்ப எங்களை வந்து பாத்தேன்னா எங்களுக்கு ஆறுதலா இருக்கும். நிர்மலுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். உன்னைப் பத்தியே பேசிட்டு இருப்பான். உன்னைப் பாத்து தான் மா நாங்க அவனை மறக்கணும்”, என்றார் அவனுடைய தந்தை சுந்தர்.

“நீ வந்த ராசியால் தான் எங்க மகன் இறந்து விட்டான்”, என்று பேசுபவர்கள் இருக்கும் இந்த உலகத்தில் தன்னை மகளாக எண்ணி அவர்கள் பேசுவது அவளை வெகுவாக அசைத்தது.

அதனால் அவளுக்கும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களை சந்திக்கச் செல்வாள். சிறிது நேரம் அவர்களிடம் பேசி விட்டு வரும் போது அவர்கள் ஆறுதலாக உணர்வார்கள். இது குற்றாலம் மற்றும் விசாலத்துக்கு தெரிந்தாலும் அவர்கள் எதுவும் சொல்வதில்லை. மகள் இந்த அளவுக்கு நடமாடுவதே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.

ஒரு முறை வெண்மதி அவர்களை காணச் சென்றிருந்த போது “நிர்மல் இறந்ததுக்கு பணம் வந்திருக்கு மா. அதை நாங்க உனக்கு தரதா இருக்கோம்”, என்றார் சாரதா.

“வேண்டாம் மா. அது உங்க கிட்ட தான் இருக்கணும்”, என்று சொன்னாள் வெண்மதி.

“எங்களுக்கு வேண்டாம் மா. எங்களுக்கு பணத்துக்கு பஞ்சம் இல்லை. அவன் இறந்ததுக்கு வந்த பணத்தை உனக்கு கொடுத்தா எங்க மகன் ஆத்மா சந்தோஷப் படும் மா. வாங்கிக்கோ மா”

“அப்படின்னா இந்த பணத்தை நான் என்னோட ஸ்கூல்ல படிக்கிற பசங்களுக்கு செலவு பண்ணட்டுமா? நிறைய பேர் பீஸ் கட்ட கஷ்டப் படுறாங்க”, என்று தயக்கத்துடன் கேட்டாள்.

“தாராளமா செய் மா. இது உன்னோட பணம். உன் இஷ்டப் படி செய். உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்ப. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை வரும் போது அதை நீ எங்களுக்காக ஏத்துக்கணும் வெண்மதி. அது தான் எங்க ஆசை. எங்க பையனும் சந்தோஷம் தான் படுவான்”

“இந்த பேச்சு வேண்டாம் மா. சரி நான் கிளம்புறேன்”

“சாப்பிடாம போறியே?”

“பசிக்குது. ரெண்டு வாய் ஊட்டி விடுறீங்களா மா?”, என்று கேட்க கண்களில் நீருடன் அவளுக்கு ஊட்டி விட்டாள் சாரதா.

விபத்தில் நிர்மல் இறந்து வெண்மதி பிழைத்த விஷயம் தெரிந்த பாண்டியனுக்கு பாதி அளவு சந்தோஷம் தான் வந்திருந்தது. வெண்மதியை கொன்றே ஆக வேண்டும் என்ற வெறி வந்தது தான். ஆனால் அவரது மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போக அவளைக் கவனிக்க வேண்டி இருந்ததால் இப்போதைக்கு பழி வாங்கும் எண்ணத்தை தள்ளி வைத்தார்.

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து இரண்டு வருடம் ஓடி இருந்தது. இந்த காலகட்டத்தில் குற்றாலம் முற்றிலுமாக மாறி இருந்தார். பழைய தொழில்களை எல்லாம் விட்டுவிட்டு விவசாயம் மட்டுமே செய்தார். மகளின் வாழ்க்கை தன்னால் தான் இப்படி ஆகி போனதோ என்ற குற்ற உணர்வாக கூட இருக்கலாம். வெண்மதி இந்த வாழ்க்கைக்கு பழகிப் போனாள். அதற்கு அடுத்த நாள் பூர்ணிமா பள்ளிக்கு வரவில்லை. பஸ்ஸில் ஏறியதும் அவளை அழைத்தாள் வெண்மதி.

அதை பூர்ணிமா எடுத்ததும் “பூர்ணி இன்னைக்கு ஏன் நீ வரலை? பஸ் கிளம்பிருச்சு டி”, என்றாள் வெண்மதி .

“வீட்ல ஒரு பெரிய பிரச்சனை டி. அதான் இன்னைக்கு நான் வரலை. என்ன விசயம்னு நைட் சொல்றேன். இல்லைன்னா நாளைக்கு காலைலே நேர்ல பாக்கும் போது சொல்றேன்”, என்று அவசரமாக சொல்லி விட்டு வைத்தாள் பூர்ணிமா.

உண்மையிலே அவர்கள் வீட்டில் பிரச்சனையாக தான் இருந்தது. வைஷ்ணவியின் காதல் விஷயம் தெரிந்த மூர்த்தி அதை மறைத்து குடும்ப கவுரவத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக சரவணன் வீட்டுக்கு வந்தார்.

“வாங்கண்ணா… வாங்க மச்சான்”, என்று வரவேற்றார்கள் வசந்தாவும் வெற்றிவேலும்.

“இல்லை வைஷ்ணவிக்கு இருபத்தி அஞ்சு வயசு ஆகிருச்சு. அவளுக்கு கல்யாணம் செய்யலாம்னு பாக்குறேன்”, என்று தயக்கத்துடன் சொன்னார் மூர்த்தி.

“நல்ல விஷயம் தான் மச்சான். வைஷுவும் எங்க வீட்டுப் பொண்ணு தான். நல்ல மாப்பிள்ளையா பாத்துருவோம்”, என்றார் வெற்றிவேல்.

“நீங்க பாப்பிங்கன்னு தெரியும் மாப்பிள்ளை. நான் என்ன சொல்ல வரேன்னா வைஷுவை எனக்கு நம்ம சரவணனுக்கு கொடுக்கணும் போல இருக்கு”, என்று மூர்த்தில் சொல்ல வசந்தா முகம் சந்தோசத்தால் மலர்ந்தது.

வசந்தா ஆவலாக கணவனைப் பார்க்க “எனக்கு சந்தோஷம் தான். சொந்தம் விட்டுப் போகாதுல்ல?”, என்று சொன்ன வெற்றிவேல் அப்போது வீட்டுக்கு வந்த சக்திவேலிடம் விஷயத்தைச் சொல்ல “எனக்கும் சம்மதம் தான் அண்ணா. வைஷு யாரு? நம்ம மதினிக்கு சொந்த அண்ணன் பொண்ணு தானே? தாராளமா பண்ணலாம். ஆனா சரவணன் என்ன சொல்லுவான்னு தெரியலையே”, என்று கேட்டார்.

“மாப்பிள்ளை கிட்ட கேட்டுட்டு தகவல் சொல்லு மா தங்கச்சி”, என்று சொல்லி விட்டுச் சென்றார் மூர்த்தி.

வயலுக்கு போய் விட்டு வந்த சரவணனிடம் “சரவணா உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம் பா”, என்று பேச்சை ஆரம்பித்தாள் வசந்தா.

ஒரு நொடி வெண்மதி முகம் அவன் மனக் கண்ணில் மின்னி மறைய “சரி மா, எனக்கு ஓகே தான். ஆனா பொண்ணு ஏதாவது விதவையோ ஆதரவற்ற பெண்ணையோ தான் பாக்கணும்”, என்றான்.

“அப்படி யார் இருக்குறா?”, என்று அவர்கள் கேட்கும் போது வெண்மதியைச் சொல்லலாம் என்று எண்ணினான் சரவணன்.

ஆனால் அவன் நினைத்ததற்கு மாறாக வசந்தா பெரிய பிரச்சனை செய்து விட்டாள். “ஒத்த பிள்ளையை பெத்து வச்சு ரெண்டாந்தாரமா கொடுக்கவா? இதுக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன். வைஷ்ணவி தான் உனக்கு நாங்க பாத்துருக்குற பொண்ணு. வேற எந்த பேச்சும் வேண்டாம். அப்படி எங்க பேச்சைக் கேக்க முடியாதுன்னு நீ சொன்னா இப்பவே சொல்லிரு. இந்த நிமிசமே என் வாழ்க்கையை முடிச்சிக்கிறேன்”, என்று வசந்தா சொல்ல அதிர்ந்து போனான் சரவணன்.

அன்னையின் உயிருக்கு முன் அவனுக்கு எதுவும் பெரியதாக தெரிய வில்லை. அதே நேரம் அவனால் சம்மதம் என்ற வார்த்தையை சொல்ல முடியவில்லை. மனம் முழுக்க இந்த பேச்சு ஆரம்பித்ததும் ஒரு அழுத்தம் அவனுக்குள் உருவானது.

அவன் வாயைக் மூடிக் கொண்டிருக்க அங்கு வந்த மூர்த்தி “மாப்பிள்ளை, உன் மனசுல இருக்குறதை தைரியமா சொல்லு யா”, என்றார்

அவராவது தன்னைக் காப்பாற்றுவார் என்று எண்ணி “எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் மாமா. அதுவும் வைஷ்ணவினா வேண்டாம்னு தோணுது”, என்றான்.

“ஏன் டா என் மருமகளுக்கு என்ன குறை?”, என்று கேட்டாள் வசந்தா.

“அம்மா நான் எங்க அப்படிச் சொன்னேன்? வைஷ்ணவி நம்ம வீட்டுப் பொண்ணு. அவளை நான் எப்படி குறை சொல்லுவேன்?”

“அப்புறம் என்ன? கல்யாணம் பண்ணிக்கோ”

“இல்லை மா வந்து…”, என்று அவன் தயங்க “சரவணா, சொந்தம் விட்டுப் போகக் கூடாதுப்பா. நீ வேண்டாம்னு சொன்னதும் உன் மாமா முகம் சுருங்கிப் போச்சு. உன் அம்மாவும் அழுறா பாரு. பொண்ணு நம்ம வைஷு குட்டி தானே? அப்புறம் என்ன? பண்ணிக்கோ பா”, என்றார் வெற்றிவேல்.

“ஆமாண்ணே, உங்க ரெண்டு பேரோட குணத்துக்கும் நல்லா ஒத்துப் போகும். அவளைக் கட்டிக்கோ”, என்றாள் பூர்ணிமா. அண்ணனின் மனதில் இருப்பது தெரிந்தால் அவள் அப்படிச் சொல்லி இருக்க மாட்டாளோ என்னவோ?

அப்போதும் அவன் அமைதியாகவே இருக்க “இத்தனை வருஷம் உன்னைக் வளத்து ஆளாக்கின எங்களுக்கு உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க கூட உரிமை இல்லையாப்பா? என் வாழ்க்கையில தலையிடாதேன்னு சொல்லாம சொல்லுறியா. நாங்க உனக்காக எதுவும் செய்யக் கூடாதா?”, என்று கண்ணீருடன் கேட்டாள் வசந்தா.

அன்னையின் கண்ணீரைப் பார்த்தவன் “என்னமும் செய்ங்க”, என்று சொல்லி விட்டுச் சென்றான்.

அதைக் கேட்டு மற்றவர்கள் முகம் மலர்ந்து போனது. ஆனால் அவன் அமைதியில்லாமல் இருந்தான். இதே விஷயம் வைஷ்ணவிக்கு சொல்லப் பட அவள் அதிர்ந்து தான் போனாள். உடனே அவள் விரும்பிய ரகுவுக்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல “பொறுமையா இரு யோசிப்போம். நீ எனக்கு முக்கியம்”, என்று நடித்தான் அவன்.

Advertisement