Advertisement

அத்தியாயம் 7

மழையில் நனையும்

போதும் தாகத்தில் தவிப்பது

உன்னால் பெண்ணே!!!

வெண்மதிக்கோ கல் தலையில் மோதியதால் மூளையில் லேசாக அடிபட்டு இருந்தது. அதனால் அவளுக்கு நினைவு வருவதும் போவதுமாக இருந்தது. ரத்தம் வேறு அதிகமாக போயிருந்ததால் ரத்தம் வேறு ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அது மட்டுமில்லாமல் கை கால்களில் எல்லாம் அவளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. மொத்தத்தில் சுயநினைவின்றி கிடந்தாள்.

இரண்டு வீட்டினரும் மருத்துவ மனையில் தவம் இருக்க அடுத்த இரண்டு மணி நேரங்களில் நிர்மல் இந்த உலகத்தை விட்டே சென்று விட்டான். அவனுடைய உறவினர்கள் ஒரு பக்கம் கதற மகள் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்று குற்றாலம் மற்றும் விசாலம் இருவரும் கதறினார்கள்.

நிர்மல் உடலை அவனுடைய பெற்றோர் வாங்கிச் செல்ல குற்றாலம் மற்றும் விசாலம் இருவரும் மகள் விழிப்பதற்காக தவம் இருந்தார்கள்.

“இப்ப சந்தோஸமா உங்களுக்கு? இதுக்கு தானே இவ்வளவு ஆட்டம் ஆடினீங்க? உங்களால தான் என் பொண்ணுக்கு இப்படி ஆகிருச்சு? அவ கழுத்துல கட்டின தாலிக் கயிரோட ஈரம் காயுறதுக்குள்ள அதை அறுக்க வச்சிட்டீங்களே? உங்க பாவத்தோட நிழல் என் மகளை காவு வாங்கிருச்சே? அவ கண்ணு முழிச்சு வந்ததும் அவ கிட்ட எப்படி சொல்லுவேன் உன் புருஷன் செத்துட்டான்னு. இன்னும் வாழவே ஆரம்பிக்காத பச்சை மண்ணை இந்த ஊர் உலகம் விதவைனு தானே சொல்லும்? நான் மஞ்சள் குங்குமத்தோட இருக்க என் பொண்ணு இந்த வயசிலே பூவையும் பொட்டையும் இழந்துட்டாளே?”, என்று ஏங்கி ஏங்கி அழுதாள் விசாலம்.

குற்றாலமோ இறுகிப் போய் நின்றார். போலீஸ் விசாரிக்க வந்த போது கூட அவரால் எதுவும் பேச முடியவில்லை. ஆக்ஸிடெண்ட் கேஸ் என்று எழுதிக் கொண்டு சென்றார்கள் அவர்கள்.

அடுத்த நாள் தான் சரவணன் வீட்டில் உள்ளவர்களுக்கு விஷயம் தெரிந்தது. வெண்மதிக்கு இப்படி ஆனதை சரவணனால் தாங்கவே முடியவில்லை. இதெல்லாம் பொய்யாக இருக்க கூடாதா என்று தான் எண்ணினான். அவன் மனம் ஊமையாக அவளுக்காக அழுதது.

விஷயம் அறிந்து பூர்ணிமா தோழியைப் பார்க்க போக வேண்டும் என்று அழுதாள். வெண்மதியின் நிலையை எண்ணி மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்த சரவணனுக்கும் அவளைக் காண வேண்டும் போல இருக்க தங்கையுடன் கிளம்பினான்.

அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு வந்த போது குற்றாலம் மற்றும் விசாலம் இருவரும் துவண்டு போய் இருக்க அந்த நேரத்திலும் அவர்களைச் சுற்றி குற்றாலத்தின் அடியாட்கள் இருந்தார்கள். தான் இப்போது வெண்மதியைக் காணச் செல்வது சரி இல்லை என்று எண்ணிய சரவணன் தங்கையை மட்டும் உள்ளே அனுப்பினான்.

பூர்ணிமா ஓடிச் சென்று விசாலத்திடம் பேசிக் கொண்டிருந்தாள். “பாத்தியா பூரணி என் மக நிலைமையை? புருசனோட அடக்கத்துக்கு கூட போகாம பேச்சு மூச்சில்லாம கிடக்குறாளே?”, என்று விசாலம் புலம்ப பூர்ணிமாவும் அழுதாள். ஒரு ஓரமாக நின்ற சரவணன் கண்களிலும் கண்ணீர் வடிந்தது. வெண்மதி ஐ.சி.யு வில் சீரியசாக இருந்ததால் இருவராலும் அவளைக் காண முடியவில்லை.

“அவளுக்கு ஒண்ணும் ஆகாது மா. அவ சரியாகிருவா. நான் இன்னொரு நாள் வரேன்”, என்று ஆறுதல் சொல்லி விட்டு அண்ணனுடன் கிளம்பினாள் பூர்ணிமா.

அதற்கு அடுத்து வந்த நாட்களில் சரவணன் உள்ளுக்குள் நொறுங்கிப் போனான். அவளுக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்க வேண்டாம் என்று உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்தான்.

அடுத்த நான்கு நாட்கள் கழித்து தான் நினைவு வந்தது வெண்மதிக்கு. அதற்குள் நிர்மலின் இறுதிச் சடங்குகள் எல்லாம் முடிந்திருந்தது. கண் விழித்து அன்னை தந்தையைப் பார்த்தாள் வெண்மதி.

“அம்மாடி, இப்ப எப்படி இருக்கு டா?”, என்று மகளின் தலையை வருடிய படி கேட்டார் குற்றாலம்.

“ம்ம், பரவால்ல பா. அவர் எங்க பா? அவருக்கு இப்ப எப்படி இருக்கு?”, என்று திக்கி திணறிக் கேட்டாள் வெண்மதி. அவளுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் தாய் தந்தை இருவரும் அழுதார்கள். அதைக் கண்டு மனம் முழுக்க படபடக்க “அவருக்கு ஒண்ணும் இல்லை தானே? தயவு செஞ்சு சொல்லுங்க”, என்று கேட்டாள்.

“மாப்பிள்ளை நம்மளை விட்டுட்டு போய் அஞ்சு நாள் ஆகிருச்சு மா”, என்று குற்றாலம் அழுத படி சொல்ல அடுத்து வெண்மதி எதுவுமே பேச வில்லை.

மனம் முழுக்க பித்துப் பிடித்தது போல இருந்தது. அவனின் முகத்தைக் கூட இறுதியாக பார்க்க முடியவில்லையே என்று உள்ளுக்குள் துடித்துப் போனாள். அவள் மனம் பாறையாக இறுகிப் போனது.

அவள் எதுவும் பேசாமல் இருப்பதைக் கண்ட குற்றாலம் சீஃப் டாக்டரிடம் அதைப் பற்றி சொல்ல ஒரு சைகாட்டிஸ்ட் வைத்து அவளுக்கு கவுன்சிலிங்கும் கொடுக்கப் பட்டது.

அதன் பிறகு அவள் சாதாரணமாக பேசினாளே தவிர நிர்மல் இறந்ததற்கு அவள் ஏங்கி ஏங்கி அழ வில்லை. பெற்றவர்களுக்கு தான் அவளைக் கண்டு குழப்பமாக இருந்தது.

மனது கேட்காமல் “ஏன் டி புருஷன் செத்துட்டான்னு சொல்றோம்? உன் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரலை? அம்மாடி அழுதுரு டா. துக்கத்தை உள்ளுக்குள்ள அடக்கி வைக்க கூடாது டா”, என்று சொன்னாள் விசாலம்.

“எனக்கு அழுகை வரலை மா”, என்று சொன்னவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

அவள் உடல் நிலை சரியாகி வீட்டுக்கு வர கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஆகி இருந்தது. அதற்கு பிறகும் வீட்டில் ஓய்விலே தான் இருந்தாள். ஊர் முழுக்க குற்றாலம் செய்த முந்தைய தவறுகளைப் பற்றி பேசி “அது அவனுக்கு தேவை தான். அவன் செஞ்ச பாவம் அவனோட பிள்ளையை அடிச்சிருச்சு”, என்று பேசினார்கள்.

பதினாறாம் நாள் காரியம் செய்யும் போது வெண்மதியின் கழுத்தில் கிடந்த தாலியை கழட்டி விட்டார்கள். அப்போதும் வெண்மதி அழவே இல்லை. அதற்கு பின்னர் நாட்கள் அதன் போக்கில் நகர மீண்டும் அதே பள்ளியில் வேலைக்கு போக முடிவு எடுத்தாள்.

இரண்டு மாதங்கள் கழித்து அவள் பள்ளிக்குச் செல்வதற்காக பஸ் ஸ்டாண்ட் வந்தாள். அவளைப் பார்த்த பூர்ணிமாவுக்கு வெண்மதி ஆளே மாறினது போல தான் இருந்தது.

“எப்படி இருக்க வெண்மதி?”, என்று கேட்டாள் பூர்ணிமா.

“எனக்கு என்ன? நல்லா தான் இருக்கேன்”, என்று சொன்னாலும் அவள் குரலிலும் அவள் முகத்திலும் ஜீவனே இல்லை.

“நான் என்னோட அண்ணன் கூட உன்னைப் பாக்க ஆஸ்பத்திரி வந்தேன் டி. ஆனால் எங்களால உன்னைப் பாக்க முடியலை. ஆனா அதுக்கு அப்புறம் உன்னை வீட்ல வந்து பாத்துருக்கணும். எங்க வீட்ல விடலை. ஊர்ல வேற ஆள் ஆளுக்கு ஏதோ பேச.. நானும் வந்து உன்னைக் காயப் படுத்திறக் கூடாதுன்னு விட்டுட்டேன். சாரி டி”

“நீ என்னோட ஃபிரண்ட் பூர்ணி. என்ன நடந்தாலும் நான் உன்னை தப்பா நினைக்க மாட்டேன்”, என்று சொன்ன வெண்மதிக்கு சரவணனும் தன்னைக் காண மருத்துவமனைக்கு வந்தான் என்ற செய்தி ஒரு நூலிழை அளவு அமைதியைக் கொடுத்தது மட்டும் நிஜம்.

அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் கழித்து சரவணனும் அதே பஸ்ஸில் தான் வந்திருந்தான். பூர்ணிமா மூலம் அவள் பள்ளிக்கு வருவதை தெரிந்து கொண்டு அவளைக் காண தான் வந்தான். வெண்மதியை அவன் கண்கள் பார்வை இட்டது. ஆனால் அவளிடம் எதுவுமே பேச வில்லை. அவளோ ஒரு நொடி அவனை நிமிர்ந்து பார்த்தாள். பின் படக்கென்று தலை குனிந்து கொண்டாள். அதற்கு பின் அவள் பார்வை அவன் பக்கம் திரும்பவே இல்லை.

முன்பெல்லாம் பஸ்ஸில் ஏறியதும் தோழிகள் இருவரும் இறங்கும் வரை பேசிக் கொண்டே வருவார்கள். அடிக்கடி அவள் பார்வை அவன் பக்கம் திரும்பும். இப்போதோ வெண்மதி அமைதிக்கு மகளாக போனாள். பூர்ணிமா ஏதாவது கேட்டால் மட்டுமே பதில் சொல்வாள். அவள் பார்வை அவன் இருக்கும் பக்கமே திரும்ப வில்லை. அவள் மாற்றம் அவனுக்கு நன்கு புரிந்தது.

அன்று மாலை பள்ளி முடிந்ததும் பூர்ணிமாவிடம் சொல்லி விட்டு நிர்மல் வீட்டுக்குச் சென்றாள் வெண்மதி. அவளுக்கு அங்கே செல்ல தயக்கமாக தான் இருந்தது. ஆனால் அது அவளது கடமை என்று புரிய தைரியமாகவே சென்றாள்.

Advertisement