Advertisement

பஸ் எடுக்க இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்பதால் “நீங்க வேணா கிளம்புங்க. நான் போய்க்கிறேன்”, என்றாள்.

“சரி பாத்துப் போ”, என்று சொல்லி விட்டுச் சென்றான் நிர்மல். ஆனால் போகும் முன் அவளுடைய மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டு தான் சென்றான்.

சரியாக பஸ்ஸை எடுக்கப் போகும் போது தன்னுடைய கிளாஸ் முடிந்து சரவணனும் அந்த பஸ்ஸில் தான் ஏறினான். அப்போது அவன் கண்ணில் விழுந்தாள் வெண்மதி. ஆனால் அவள் அவனைப் பார்க்க வில்லை. போனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன வெண்மதி மட்டும் இருக்கா? பூர்ணியைக் காணும்”, என்று எண்ணிக் கொண்டவன் அடிக்கடி அவளைப் பார்த்த படி அமர்ந்திருந்தான். ஆனால் அவள் அவனைத் திரும்பிக் கூட பார்க்க வில்லை. அவன் இருக்கிறான் என்று தெரிந்திருந்தால் நிச்சயம் அவள் திரும்பித் திரும்பிப் பார்த்திருப்பாள்.

பஸ் ஸ்டாண்டில் இறங்கிய பின்னரும் கூட அவள் அவனைப் பாராமலே அவளுடைய வீட்டை நோக்கி நடந்து விட்டாள். அவனுக்கு தான் அவள் திரும்பிப் பாராதது கஷ்டமாக இருந்தது. அவனுக்கு தெரியும் அவள் அவனைக் கவனிக்க வில்லை என்று. ஆனாலும் ஆசை கொண்ட மனம் எதிர்பார்த்து ஏமாறத் தான் செய்தது.

“ஒரு தடவை திரும்பிப் பாத்தா தான் என்னவாம்?”, என்று சிணுங்கிய மனதுடன் வீட்டை நோக்கி நடந்தான் சரவணன். அவன் வீட்டுக்குச் சென்ற போது வசந்தாவிடம் “பெரியம்மா எத்தனை நாள் கொழுக்கட்டை வேணும்னு சொல்லிட்டு இருக்கேன். செஞ்சு தரவே மாட்டியா? என் ஃபிரண்ட் வெண்மதிக்கு ரொம்ப பிடிக்கும். அம்மா செஞ்சா நல்லாவே இருக்காது. நீ செஞ்சு தாயேன்”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள் பூர்ணிமா.

“எப்ப பாத்தாலும் உனக்கு திங்குறது மேல தான் யோசனை இருக்குமா பூர்ணி? பாவம் செந்தில்”, என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தான் சரவணன்.

“போ அண்ணா, ரசிச்சு ருசிச்சு சாப்பிட தானே இந்த வாழ்க்கையே? அப்புறம் உன் பிரண்டைப் பத்தி ரொம்ப கவலைப் படாதே. அவர் எனக்கு மேல சாப்பாட்டு பிரியர்”, என்று சொல்லி சிரித்தாள் பூர்ணிமா.

“சரி, நீ என்ன இன்னைக்கு சீக்கிரம் ஸ்கூல் விட்டு வந்துட்ட?”, என்று கேட்டான் சரவணன்.

“நான் எங்க சீக்கிரம் வந்தேன்? எப்பவும் போல தான் வந்துருக்கேன்”

“அப்படியா? ஆனா ஏழு மணி பஸ்ல தான் உன் பிரண்டு வந்தா. நீ மட்டும் எப்படி சீக்கிரம் வந்த? பிள்ளைங்க கிளாஸ் கட் அடிக்கிற மாதிரி டீச்சர் நீயே கட் அடிச்சிட்டியா?”

“அப்படி எல்லாம் இல்லை அண்ணா. நீ வெண்மதியைப் பாத்தியா?”

“ஆமா நான் வந்த பஸ்ல தான் வந்தா. எதுக்கு அவ லேட்டா வந்தா?”

“அவளைப் பார்க்க அவ உட்பி வந்துருந்தார். அதான் நான் முதல்லே தனியா வந்துட்டேன். அவ அவர் கூட பேசிட்டு இப்ப வந்துருப்பாளா இருக்கும்”

“உட்பியா? கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டாங்களா?”, என்று அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு கேட்டான்.

“ஆமா அண்ணா, பேர் நிர்மல். கவர்ன்மெண்ட் வக்கீலாம். அவங்க அப்பா தொழிலுக்கு சரியான ஆளைத் தான் பிடிச்சிருக்கார். நாள பின்ன சிக்கிட்டா கேஸ் இல்லாம போயிரும் பாரு”, என்று சொன்ன பூர்ணிமா நிர்மல் சரவணன் போலவே கொஞ்சம் இருக்கிறான் என்பதைச் சொல்ல வில்லை. “உங்க அண்ணா போலவே இருக்காங்கல்ல?”, என்று வெண்மதி சொன்னதையும் அண்ணனிடம் சொல்ல வில்லை.

“அடுத்தவங்களைப் பத்தி அப்படி பேசக் கூடாது பூரணி”, என்று தங்கையைக் கடிந்தவன் “சரி உன் பிரண்டுக்கு மாப்பிள்ளையை புடிச்சிருக்கா?”, என்று ஆராய்ச்சியாக கேட்டான்.

“ரொம்ப பிடிச்சிருக்காம். நிர்மல் அண்ணாவும் சூப்பரா இருக்காங்க. என் கிட்ட கூட நல்லா பேசினார். ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு பொருத்தம்”, என்று பூர்ணிமா சொல்ல “ஓ”, என்று சொன்னான். அவன் மனதில் என்ன உணர்வு எழுந்தது என்று அவனே அறியவில்லை. அதை அவன் ஆராயவும் முயலவில்லை. “அவ நல்லா இருக்கட்டும்”, என்று மட்டும் எண்ணிக் கொண்டான்.

ஒரு வழியாக வெண்மதி நிர்மல் திருமண நாளும் வந்தது.  அன்று நிம்மதி இல்லாமல் தவித்தான் சரவணன். ஏதோ தனக்கு பிடித்த பொருளைத் தொலைத்தால் ஒரு வலி வருமே. அப்படி ஒரு உணர்வு அவனுக்கு வந்தது.

அங்கே நிர்மல் அனைவரின் ஆசியோடு வெண்மதி கழுத்தில் தாலி கட்டினான். சரவணன் வீட்டுக்கும் பத்திரிகை வந்திருந்தது. இவனைத் தவிர மற்ற அனைவரும் திருமணத்துக்கு சென்றிருந்தார்கள். அங்கே சென்று விட்டு வந்து அங்கே போடப் பட்ட பிரியாணியைப் பற்றி பேசியே சரவணனை ஒரு வழி செய்தாள் பூர்ணி. அதுவும் தன்னுடைய போனில் எடுத்த அவர்களின் திருமணப் புகைப்படத்தை அவனிடம் காட்டினாள்.

அவனும் அதை வாங்கிப் பார்த்து “ரெண்டு பேரும் அழகா இருக்காங்கல்ல? நீ சொன்ன மாதிரி நல்ல ஜோடி பூர்ணி”, என்றான்.

“ஆமா அண்ணா நிர்மல் அண்ணா சூப்பர் டைப். வக்கீல் வேறயா? பேச்சுல பொழந்து தள்ளுறார். அப்படியே உன்னை மாதிரி”, என்று சொல்லிச் சென்றாள் பூர்ணிமா. மனதில் எழுந்த வலியை மறைத்துக் கொண்டு நின்றவன் வெண்மதியை மறக்க முயன்றான். ஆனால் அது அவனுக்கு அவ்வளவு எளிதாக இருக்க வில்லை.

முதல் முறை அவன் பார்த்து ரசித்த பெண்ணாயிற்றே. அதனால் அவனுக்கு கஷ்டமாக இருந்தது. “ரொம்ப பீல் பண்ணாத சரவணா? அவ என்ன உன்னோட லவ்வரா? ரெண்டு மூணு தடவை சைட் அடிச்சிருக்க? அதுக்கு இந்த அளவுக்கு வருத்தப் படணுமா? இப்ப அவ இன்னொருத்தனோட பொண்டாட்டி. இனி நீ அவளை நினைக்கிறது சரி இல்லை”, என்று அவனுக்கு எடுத்துரைத்தது அவன் மனசாட்சி.

அவன் அவளுடைய நினைவுகளில் போராடிக் கொண்டிருக்க அங்கே திருமண சடங்குகளில் மூழ்கி இருந்தாள் வெண்மதி. அதுவும் நிர்மல் அவளை செல்லமாக சீண்டிக் கொண்டிருக்க அவள் சிவந்து கொண்டிருந்தாள். ரிசப்ஷன் மிகப் பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருந்தது. பணத்தை தண்ணீராக வாரி இறைத்திருந்தார் குற்றாலம்.

அந்த திருமண ரிசப்சனுக்கு பாண்டியனும் வந்திருந்தார். அவர் தான் குற்றாலத்தை பழி வாங்க வாய்ப்புக்காக அலைகிறாரே? கிராமத்தில்  நடக்கும் திருமணம் என்பதால் அவரை யாரும் கண்டு கொள்ள வில்லை. அது மட்டும் அல்ல அவன் ஆனந்தின் தந்தை என்று யாருக்கும் தெரிய வில்லை. வேஷ்டி சட்டையில் கம்பீரமாக இருந்ததால் அவரை ஏதோ பெரிய மனிதர் என்று தான் எண்ணிக் கொண்டார்கள். அதுவும் அந்த ஊரில் அவருக்கு சொந்தங்களும் இருக்க அவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததால் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை.

வெண்மதியும் நிர்மலும் மேடையில் நின்றிருந்தார்கள். மகளின் புன்னகையைப் பார்த்து குற்றாலம் சந்தோஷமாக இருந்தார். “சிரிக்கிரியா? சிரி குற்றாலம். இன்னைக்கு தான் நீ சிரிக்கிறது கடைசியா இருக்கும். இத்தனை நாள்ல என்னால உன்னை நெருங்க முடியலை. ஆனா இன்னைக்கு கிடைச்சிருக்குற வாய்ப்பை தவற விட மாட்டேன்”, என்று எண்ணிக் கொண்டு மனதில் எழுந்த வஞ்சத்துடன் அமர்ந்திருந்தார் பாண்டியன்.

பாண்டியன் முதலில் நினைத்தது குற்றாலத்தைக் கொல்லத் தான். ஆனால் மகனைப் பிரிந்து தான் துடிப்பது போல அவனும் மகளைப் பிரிந்து தவிக்க வேண்டும் என்று எண்ணம் பிறகு தான் அவருக்கு வந்தது.

பங்ஷன் நல்ல படியாக முடிந்ததும் நிர்மல் வீட்டுக்கு கிளம்பினாள் வெண்மதி. கார் பைபாசில் ஏறியதும் அவர்கள் காரை ஒரு லாரி பின் தொடர்ந்தது. கார் ஒட்டிக் கொண்டிருந்த நிர்மல் மனைவியிடம் கதை பேசிக் கொண்டு வந்தானே தவிர அந்த லாரியைக் கவனிக்க வில்லை.

ஆள் அரவம் இல்லாத இடத்தில் வைத்து அந்த காரை லாரியால் இடித்து தள்ளினார் பாண்டியன். அதை அவர்கள் இருவருமே எதிர் பார்க்க வில்லை. லாரி வேகமாக மோதியதால் நிர்மல் ஸ்டீரிங்கில் தலை கவிழ்ந்து கிடக்க வெண்மதி ரத்த வெள்ளத்தில் காரிலிருந்து தூக்கி எரியப் பட்டாள். அதை குரூர மனதுடன் பார்த்து ரசித்து விட்டு லாரியை ஓட்டிச் சென்றார் பாண்டியன். அவர் மனதில் சிறிது நிம்மதியும் சொல்ல முடியாத பாரமும் வந்து அமர்ந்தது. இது என்ன விசித்திர நிலை என்று அவரே குழம்பிப் போனார்.

அது பைபாஸ் என்பதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார்கள். தீவிர சிகிச்சையை இருவருக்கும் ஆரம்பித்தார்கள். நிர்மல் நிலை மோசமாக தான் இருந்தது. காரின் ஸ்டியரிங் வேகமாக அவனுடைய நெஞ்சில் மோதியதால் அவனது இதயம் சேதம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான் நிர்மல்.

காதல் வெடிக்கும்…..

Advertisement