Advertisement

உடனே தன்னைத் தேற்றிக் கொண்டு அன்னையைப் பார்த்தாள். “என்ன டா அமைதியாகிட்ட?”, என்று கேட்டாள் விசலாம்.  “அதுக்குள்ள எதுக்குமா கல்யாணம்? கொஞ்ச நாள் போகட்டுமே?”, என்று கேட்டாள். என்ன தான் அவள் திருமணம் செய்ய முடிவு எடுத்து விட்டாலும் சிறிது நாட்களாவது தள்ளிப் போகாதா என்று அவளுக்கு ஏக்கமாக இருந்தது.

“அதெல்லாம் சரியான வயசு தான். பேசாம இரு. நானே உனக்கு எப்ப டா கல்யாணம் நடக்கும்னு காத்துட்டு இருக்கேன். நீ வேற எதுவும் சொல்லிறாத. உங்க அப்பா எப்ப எப்படி மாறுவார்னு வேற தெரியாது”, என்று விசாலம் சொல்ல வேறு வழி இல்லாமல் “சரி மா, கல்யாணம் பண்ணிக்கிறேன்”, என்றாள்.

மனதுக்குள் திருமணம் செய்ய முடிவு எடுத்ததும் சரவணனை மறக்க முயன்றாள். புது மாப்பிள்ளையைப் பற்றி மட்டும் தான் இனி நினைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தாள்.

“மாப்பிள்ளை எப்படி இருப்பார்? அவருக்கு என்னைப் பிடிக்குமா? கலரா இருப்பாரா? கருப்பா இருப்பாரா? பூர்ணி அண்ணன் மாதிரி கம்பீரமா இருந்தா நல்லா இருக்கும்ல?”, என்று எண்ணிக் கொண்டிருந்தாள். அவள் மனதில் சரவணனின் பிம்பம் ஆழப் பதிந்திருந்ததை அவள் உணரவே இல்லை. ஈசியாக அவனை மறந்து விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டாள்.

நினைத்தவுடன் மறக்கும் உருவமா அவனுடைய உருவம்? அவள் ரசித்த ஒரே ஆண் மகன் அவன் மட்டுமே என்னும் போது அவனை மறப்பது சாத்தியமா? ஆனால் அவனை மறந்து விட்டோம் என்று அவளே அவளுக்கு பொய்யான நம்பிக்கையை உருவாக்கினாள்.

அதனால் மாப்பிள்ளை வீட்டினர் வரும் போது ரொம்பவே ஆர்வமாக இருப்பது போல தன்னைக் காட்டிக் கொண்டாள். அவள் மனதுக்குள் மிகப் பெரிய போராட்டமே நடந்து கொண்டிருந்ததை அவள் வெளியே காட்ட வில்லை.

அவளைப் பார்க்க வந்திருந்தான் நிர்மல். “வெண்மதி மாப்பிள்ளையைப் பாரு மா”, என்று குற்றாலம் சொல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

நிர்மலும் அழகாவே இருந்தான். அதுவும் அவன் கொஞ்சம் சரவணன் போலவே இருக்க அவளுக்கு அவனைப் பிடித்து போனது. அவள் பார்த்ததும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த நிர்மல்  கண்ணை உயர்த்தி அவளைப் பார்த்தான். அது கூட அவளுக்கு சரவணனின் செய்கையைத் தான் நினைவு படுத்தியது.

“பொண்ணைப் பிடிச்சிருக்கா பா?”, என்று நிர்மலிடம் அவனுடைய பெற்றோர் கேட்க “எனக்கு மதியை ரொம்ப பிடிச்சிருக்கு”, என்றான் நிர்மல்.

“அவனை மாதிரியே இவரும் மதின்னு சொல்றார்”, என்று வெண்மதி எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவளிடமும் அவனைப் பிடித்திருக்கிறதா என்று கேட்க ஆம் என்னும் விதமாய் தலையசைத்தாள்.

அன்றே இருவருக்கும் நிச்சயம் செய்து விட கல்யாண நாளும் குறிக்கப் பட்டது. அடுத்த நாள் அவள் வேலைக்குச் சென்ற போது “நேத்து ஏன் டி வரலை? என் போனையும் எடுக்கலை”, என்று கேட்டாள் பூர்ணிமா.

“நேத்து என்னை பொண்ணு பாக்க வந்தாங்க டி. அதனால தான் வரலை. வீட்ல சொந்தக்காரங்க வேற இருந்தாங்களா. அதான் போனை எடுக்கலை. சாரி டி”

“சூப்பர் டி, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. மாப்பிளை என்ன பண்ணுறார்?”, என்று ஆர்வமாக கேட்டாள் பூர்ணிமா.

“அவங்க பேர் நிர்மல் டி. அவங்க கவர்ன்மெண்ட் லாயர்”

“ஹா ஹா அப்படின்னா அவருக்கே நீ தான் ஜட்ஜ். அப்படித் தானே?”

“போடி”, என்று சிரித்தாள் வெண்மதி.

“அவரை உனக்கு பிடிச்சிருக்கா?”, என்று பூர்ணிமா கேட்க “ஆமா டி”, என்றாள்.

“அவர் எப்படி இருப்பார்? போட்டோ ஏதாவது வச்சிருக்கியா? எனக்கு பாக்கணும் போல இருக்கு”

“போட்டோ இல்லையே? ஆனா அவங்க எப்படி இருப்பாங்க தெரியுமா? உன் அண்ணா மாதிரி தான் இருப்பாங்க. அச்சு அசல் அவங்க கண்ணும் உங்க அண்ணா கண்ணும் ஒண்ணு போல தான் இருக்கும்”, என்று வெண்மதி சொல்ல சிறு குழப்பம் வந்தாலும் பூர்ணிமா அதை பெரியதாக எடுக்க வில்லை. அதற்கு பின்னர் பூர்ணிமா அவளை கிண்டல் செய்து கொண்டே வந்தாள்.

அன்று மாலை வெண்மதியை சந்திக்க வந்திருந்தான் நிர்மல். பள்ளிக்கு வெளியே நின்ற அவனைக் கண்டு வெண்மதி அதிர்ந்து போய் நிற்க “ஏய் என்ன டி இப்படி நின்னுட்ட? வா பஸ் போயிரும்”, என்றாள் பூர்ணிமா.

“அவங்க வந்துருக்காங்க டி?”

“யாரு? நிர்மலா? எங்க?”

“அதோ, அங்க நிக்குறாங்க பாரு. நான் சொன்னேன்ல உங்க அண்ணா மாதிரியே இருப்பாங்கன்னு. பாத்தியா அப்படி தானே இருக்காங்க?”, என்று வெண்மதி கேட்க பூர்ணிமாவும் அவனைப் பார்த்தாள். லேசாக சரவணன் சாயல் தெரிவது போல தான் இருந்தது.

“ஹே சூப்பரா இருக்காங்க டி. சரி சரி வா என்னை அவங்களுக்கு அறிமுகப் படுத்து”, என்று சொன்ன பூர்ணிமா அவள் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு நிர்மலை நெருங்கினாள்.

அவர்கள் இருவரையும் கண்டதும் நிர்மலும் என்ன பேச என்று தெரியாமல் சிறு புன்னகையுடன் அமைதியாக இருக்க “ஹாய் அண்ணா, என்னோட பேர் பூர்ணிமா. நான் வெண்மதி பிரண்டு. இன்னைக்கு தான் உங்களைப் பத்திச் சொன்னா. வாழ்த்துக்கள் அண்ணா”, என்றாள்.

“ரொம்ப தேங்க்ஸ் மா. நான் மதியைப் பாக்க வந்தேன்”, என்று தயக்கமாக சொன்னான்.

“உங்க மதியைப் பாக்க எதுக்கு இந்த தயக்கம்? சரி நான் கிளம்புறேன். சரி மதி நீ பேசிட்டு ஊருக்கு வா. வீட்டுக்கு வந்ததும் எனக்கு ஒரு தகவல் சொல்லிரு. நான் வரேன் அண்ணா”, என்று சொல்லி விட்டுச் சென்றாள் பூர்ணிமா.

அவள் சென்றதும் இருவரும் அமைதியாக இருக்க “மதி”, என்று அழைத்தான் நிர்மல்.

“ஆன்”

“உன் கிட்ட கொஞ்சம் பேசணும். இங்க ஸ்கூல் முன்னாடி வச்சு பேசினா நல்லா இருக்காது. அதோ அந்த ரெஸ்டாரண்ட் போகலாமா?”

“வீட்டுக்கு போகனுமே?”

“ஒரு அரை மணி நேரம் தான். பிளீஸ்”, என்று அவன் சொன்னதும் “சரி, வாங்க போகலாம்”, என்று சொன்னாள். அவர்கள் இருவரும் அங்கே இருந்த ரெஸ்டாரண்ட் உள்ளே நுழைந்தார்கள்.

உள்ளே சென்று அமர்ந்ததும் “என்ன சாப்பிடுற மதி?”, என்று கேட்டான் நிர்மல்.

“எனக்கு ஒண்ணும் வேண்டாம்”, என்று அவள் தயக்கமாக சொல்ல “முதல் தடவை என் கூட வெளிய வந்திருக்க. கண்டிப்பா ஏதாவது சாப்பிட்டே ஆகணும். பப்ஸ் சொல்லவா?”, என்று கேட்டான்.

“சரி, எனக்கு எக் பப்ஸ் வேணும்”, என்று வேகமாக சொன்னாள். சிறு சிரிப்புடன் அவன் ஆர்டர் செய்ய அவளோ அவனை மறந்து உண்ண ஆரம்பித்தாள். அடுத்து கட்லட், கேக், என்று அவன் கேட்டு கேட்டு அவளுக்காக ஆர்டர் செய்ய அவளோ உண்டு கொண்டே இருந்தாள்.

கடைசியாக “ஐஸ் கிரீம் சொல்லவா?”, என்று கேட்டான் நிர்மல்.

“ம்ம், வெண்ணிலா”, என்று அவள் தயக்கத்துடன் சொல்ல அதையும் வாங்கிக் கொடுத்தான்.

அதையும் உண்டு விட்டு அவனை தர்மசங்கடமாக நிமிர்ந்து பார்த்தவள் “சாரி, நான் ஒரு சாப்பாட்டு பைத்தியம். அதான் இப்படி. நீங்க ஏதோ பேச வந்தீங்க? என்ன விஷயம்?”, என்று கேட்டாள்.

“பேச எல்லாம் வரலை. எனக்கு உன்னைப் பாக்கணும் போல இருந்துச்சு. அதான் கிளம்பி வந்துட்டேன்”

“அப்படின்னா நான் போகவா?”

“கொஞ்ச நேரம் இரேன். ஏதாவது பேசலாம்”

“என்ன பேச?”

“என்னை உனக்கு பிடிச்சிருக்கா மதி?”

“ம்ம்”

“ஏன்?”, என்று அவன் கேட்க அவள் அதற்கு என்ன பதில் சொல்வாள். என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள். அதற்கு பிறகும் அவன் அவளுக்கு பிடித்த விசயங்களைப் பற்றி கேட்க தன்னுடைய தயக்கம் உதறி அவனுக்கு பதில் கொடுத்தாள்.

“உன் கிட்ட நிறைய பேசணும்னு வந்தேன் மதி. ஆனா நீ ரொம்ப பயப்படுற? நான் கேட்டதுக்கு மட்டும் தான் பதில் சொல்லிருக்க. சரி கல்யாணத்துக்கு அப்புறம் பேசிக்கிறேன். இப்ப என் கூட பைக்ல வரியா? உன்னை வீட்ல விடுறேன்”

“ஐயோ வேண்டாம். வீட்ல என்ன சொல்லுவாங்கன்னு தெரியலை”

“நான் அத்தை மாமா கிட்ட பேசிக்கிறேன்”

“இல்லை வேண்டாம், நான் பஸ்ல போய்க்கிறேன். பிளீஸ்”, என்று அவள் கண்ணைச் சுருக்கி கெஞ்ச அவள் அழகில் கவரப் பட்டான் நிர்மல்.

அவள் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து அவளை பஸ் ஏற்றி விட அவளுடன் பஸ் ஸ்டாண்ட் சென்றான். அவள் பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் ஜன்னல் வழியாக அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

Advertisement