Advertisement

அத்தியாயம் 6

ஒவ்வொரு நொடியும் அடங்க

மறுக்கிறது எந்தன் மனம்

உந்தன் நினைவில்!!!

தந்தை பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வெண்மதிக்கு அடுத்து ஒரு வாய் உணவு கூட உள்ளே இறங்க வில்லை. இறந்து போன அந்த பையனை எண்ணி அவள் மனம் அலைபாய்ந்த படி தான் இருந்தது.

“எனக்கு போதும் மா. என்னால சாப்பிட முடியலை. நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு வெண்மதி பள்ளிக்கு கிளம்பிச் செல்ல விசாலம் கடவுளைத் தான் தஞ்சம் புகுந்தாள். காலை உணவைக் கூட அவள் மறந்தாள்.

எவ்வளவு சாதாரணமாக ஒரு கொலையைச் செய்ய முடிகிறது தன்னுடைய கணவனால் என்று எண்ணி அழுதாள். அவளால் வேறு என்ன செய்ய முடியும்?

பஸ்ஸில் ஏறியதும் வெண்மதி முகம் ஒரு மாதிரி இருப்பதைப் பார்த்து “என்ன ஆச்சு டி?”, என்று கேட்டாள் பூர்ணிமா.

சட்டென்று அவளால் தந்தையைப் பற்றிச் சொல்ல முடியவில்லை. ஏற்கனவே அவளுடைய தந்தையைப் பற்றி பல பேச்சுக்கள் ஊருக்குள் பேசப் பட்டுக் கொண்டு தான் இருந்தன. ஒரு முறை பூர்ணிமாவே கூட “உங்க அப்பா பெரிய தாதாவா டி?”, என்று கேட்டிருக்கிறாள். அதனால் அவளிடம் உண்மையை மறைத்து “ஒண்ணும் இல்லை பூர்ணி, சும்மா தலைவலி”, என்று சொல்லி சமாளித்தாள்.

“இவ்வளவு முடியை ஈரத்தோட பின்னி கொண்டை போட்டுட்டு வந்தா தலை வலி வராம என்ன செய்யும்?”, என்று கேட்ட பூர்ணிமா செந்திலுடன் பேச ஆரம்பிக்க வெண்மதியோ தலையைத் தாங்கிய படி அமர்ந்து விட்டாள்.

அன்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் போது பூர்ணிமா முகம் ஒரு மாதிரி இருந்தது.

“இப்ப உனக்கு என்ன ஆச்சு பூர்ணி?”, என்று வெண்மதி கேட்க “கொஞ்சம் மனசு சரி இல்லை டி”, என்றாள் பூர்ணிமா.

“என்ன ஆச்சு? கிளாஸ்ல ஏதாவது பிரச்சனையா?”

“இல்லை டி, இது வேற”

“என்ன டி? என் கிட்ட சொல்லக் கூடாதா?”

“இதோ இந்த நியூசைப் பாரு. இதைப் பாத்ததுல இருந்தே எனக்கு மனசு சரியில்லை”, என்று சொல்லி தன்னுடைய போனைக் காண்பித்தாள் பூர்ணிமா.

அதில் செல்வி என்ற இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை. தன்னுடைய காதலன் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டப் பட்டு கொல்லப் பட்டதால் அது தாங்க முடியாமல் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள். அதைப் பற்றிய விசாரணையை போலீஸ் ஆரம்பித்திருக்கிறார்கள் என்ற நியூஸ் இருந்தது.

அதைப் படித்து விட்டு மனம் கணத்துப் போனது வெண்மதிக்கு. இது நிச்சயம் தனது தந்தையால் தான் என்பதால் அமைதியாக இருந்தாள்.

“லவ் பண்ணுறது அவ்வளவு குத்தமா டி? பாவம், கண்டிப்பா அந்த பையனை அந்த பொண்ணோட அப்பா தான் டி ஆள் வச்சு கொன்னுருப்பான். இப்ப மகளே போய்ட்டா. என்ன செய்வானாம் அந்த ஆள்? அதை விட அந்த கூலிப் படைங்களை நினைச்சா நெஞ்சே எரியுது டி. பணத்துக்காக ஒரு இருபத்தி அஞ்சு வயசு பையனைக் கொல்ல அவனுங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு? அவங்களை எல்லாம் நடு ரோட்ல நிக்க வச்சு சுடனும் டி”, என்று பூர்ணிமா பொரிந்து கொண்டிருக்க “அந்த கூலிப் படைக்கு தலைவனே என்னோட அப்பா தான் டி”, என்று வேதனையாக மனதில் எண்ணிக் கொண்டாள் வெண்மதி.

அதே நேரம் இறந்து போன ஆனந்த் வீட்டில் அவனுடைய அடக்கம் எல்லாம் முடிந்திருந்தது. ஆனந்துடைய தந்தை பாண்டியன் தன்னுடைய ஒரே மகன் இறந்த துக்கத்தில் உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தார். அவரது மனைவி பார்வதியோ மகன் இழப்பைத் தாங்க முடியாமல் மருத்துவமனையில் மயக்கத்தில் இருந்தாள். அவர்கள் தவம் இருந்து பெற்ற பிள்ளையின் இழப்பு அவர்களால் தாங்க முடியவில்லை. அப்போது தான் மகன் காதலித்த பெண்ணும் இறந்து விட்டதாக தகவல் வந்தது. அதைக் கேட்டு அவருக்கு சந்தோஷமாக இருந்தது.

ஏனென்றால் செல்வி இறந்ததற்கு அவர் தான் காரணம். மகன் இறந்து சிறிது நேரத்தில் அவருக்கு ஆனந்தின் காதல் விவகாரம் தெரிய வந்தது. தன்னுடைய மகனுக்கு எந்த எதிரிகளும் இல்லாத போது அவனைக் கொன்றது நிச்சயம் அந்த பெண் வீட்டினராக தான் இருக்கும் என்று அவருக்கு புரிந்தது. தன்னுடைய மகனைக் கொன்று விட்டு அவர்கள் மட்டும் நிம்மதியாக இருப்பார்களா என்ற வஞ்சம் நெஞ்சில் எழுந்தது.

தன்னுடைய மகனின் போனில் இருந்து “மை லவ்”, என்று போட்டிருந்த அந்த பெண்ணின் எண்ணுக்கு அழைத்தார். அதை செல்வி எடுத்ததும் “ஏமா நீ அரிப்பு எடுத்து திரிஞ்சதுக்கு என் மகனை காவு வாங்கிட்டல்ல? நாங்க வேற ஜாதின்னா அதுக்கு உயிரை எடுப்பீங்களா? என் மகன் சாவுக்கு காரணமா இருந்த யாரையும் உயிரோட விட மாட்டேன். உன்னையும் சேத்து தான் சொல்றேன். என் பிள்ளையைக் கொன்னுட்டு எவனையாவது கட்டிட்டு போகணும்னு கனவு கூட காணாத. உன்னையும் உன் குடும்பத்தையும் வேறருக்காம விட மாட்டேன்”, என்று சொல்லி விட்டு போனை வைத்தார்.

காதலன் இறந்த அதிர்ச்சியில் இருந்த செல்வி தன்னுடைய தந்தையைக் கேள்வி கேட்க அவரும் “ஆமா நான் தான் ஆள் வச்சு கொன்னேன். கொல்லாம அவன் கூட நீ ஓடிப் போறதை வேடிக்கை பாத்துட்டு இருப்பேனு நினைச்சியா?”, என்று கேட்டார்.

தன்னுடைய காதலனைக் கொன்றது தன்னுடைய தந்தை தான் என்று தெரிந்ததும் அடுத்த பத்து நிமிடத்தில் செல்வி இறந்து போனாள். பாண்டியனுக்கு அந்த தகவல் வந்தது. செல்வி இறந்து போனது அவருக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் மகனை கொன்ற அனைவரையும் கொன்று குவிக்க காத்திருந்தார்.

வீட்டுக்கு வந்த வெண்மதி யாரிடமும் பேசாமல் அறைக்குள் சென்று விட்டாள். அவளுக்கு டீ எடுத்துக் கொண்டு வந்தாள் விசாலம்.

“இந்தா மா, டீ குடி”, என்று விசாலம் சொல்ல “இப்ப டீ ஒண்ணு தான் மா குறைச்சல். இன்னைக்கு இவரால ரெண்டு உயிர் போச்சு மா”, என்றாள்.

“தெரியும் மா. இது இன்னைக்கு நேத்தா நடக்குது? அதை எல்லாம் கடந்து போய்கிட்டே இருக்கணும். எனக்கு இருக்குற ஒரே பயம் உன்னோட வாழ்க்கை தான். உன்னை ஒரு நல்லவன் கையில பிடிச்சுக் கொடுத்தா நிம்மதியா போய்ச் சேந்துருவேன்”, என்று சொல்லி விசாலம் அழ அவளைக் கட்டிக் கொண்டு வெண்மதியும் அழுதாள்.

அதே நேரம் அந்த நியூசை சரவணனிடமும் காட்டிக் கொண்டிருந்தாள் பூர்ணிமா. அவனுக்கும் மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அதற்கு மேல் அவன் அதை ஆராய முயலவில்லை.

ஆனந்த் இறந்து பத்து நாட்களுக்கு பிறகு பாண்டியன் தன்னுடைய மகனைக் கொன்ற செல்வியின் தந்தையை பிளான் செய்து கொன்று விட்டார். மகள் இறந்த துக்கம் தாழாமல் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்னும் விதமாக தான் நியூஸ் பரவியது. அதைச் செய்தது பாண்டியன் என்று யாருக்கும் தெரியவில்லை.

ஆனால் மகனைக் கொன்றது குற்றாலமும் அவருடைய ஆட்களும் தான் என்று பாண்டியனுக்கு தெரிய வந்தது. ஆனால் ஒரு சாதாரண மனிதரால் அந்த கூலிப் படையை நெருங்க முடியவில்லை. ஆனால் மனதுக்குள் வன்மம் வைத்துக் காத்திருந்தார்.

அப்போது ஒரு நாள் “வெண்மதி, நீ இன்னைக்கு ஸ்கூல்க்கு போக வேண்டாம். உன்னை இன்னைக்கு பொண்ணு பாக்க வராங்களாம். அப்பா சொன்னாங்க”, என்றாள் விசாலம்.

அதைக் கேட்டு வெண்மதிக்கு சந்தோஷம் எல்லாம் வரவில்லை. அதற்காக கண்ணீர் விட்டுக் கதறவும் இல்லை. திகைத்துப் போய் அசைவற்று நின்று விட்டாள். அவள் மனக்கண்ணில் உலா வந்தான் சரவணன். ஆனால் அவளுக்கு அவன் மீது இருக்கும் உணர்வுக்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. அவன் வந்து அவளிடம் காதலைச் சொல்லி இருந்தால் தெளிந்திருப்பாளோ என்னவோ?

அப்போதும் தந்தையிடம் காதலைப் பற்றி மூச்சு கூட விட்டிருக்க மாட்டாள். அவள் மட்டும் காதலித்திருந்தால் நிச்சயம் குற்றாலம் அவனைக் கொன்று விடுவார் என்று அவளுக்கு தெரியும். அதனால் தான் அவள் காதலைப் பற்றியே யோசிக்க வில்லையோ என்னவோ?

“இங்க பார் வெண்மதி உன் அப்பா பத்தி உனக்கு நல்லா தெரியும். நீ உன்னோட கல்யாண விசயத்துல சுதந்திரமா எந்த ஒரு பதிலையும் சொல்ல முடியாது. நீ சரவணனைப் பிடிக்கும்னு ஒரு வார்த்தை சொன்னா அவன் அடுத்த நிமிஷம் உயிரோட இருக்க மாட்டான். நீ எவனையோ கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா அவன் வாழ்க்கையும் நல்லா இருக்கும். யோசிச்சு முடிவு எடு”, என்று எடுத்துரைத்தது அவள் மனசாட்சி.

Advertisement