Advertisement

அவளுடைய நீண்ட பின்னலையும் அவள் தலையில் சூடி இருந்த மல்லிகையையும் பார்த்தவாறே சென்ற அந்த பயணம் அவனுக்கு அவ்வளவு இனிமையாக இருந்தது.

“உங்க ஹஸ்பண்ட் என்ன செய்றாங்க பூர்ணிமா?”, என்று வெண்மதி கேட்க அதற்கு பதில் சொன்ன பூர்ணிமா அவளை வா வென்று பேசி அவளையும் அப்படியே அழைக்கச் சொன்னாள். அதற்கு பிறகு பூர்ணிமா வெண்மதி நட்பு மிக ஆழமாக இறுகிப் போனது.

மற்றொரு நாள் வெண்மதியைக் காண வேண்டும் என்ற ஆசையில் தன்னுடைய பைக்கை வீட்டில் விட்டு விட்டு பஸ்ஸில் காலேஜுக்கு கிளம்பினான் சரவணன்.

அவளையும் பார்த்தான். அவனைக் கண்டதும் அவள் தலை குனிந்து விட அவனுக்கு சுவாரசியமாக இருந்தது. தன்னைக் கண்டு வெட்கத்துடன் முகம் சிவக்கும் பெண்ணை யாருக்கு தான் பிடிக்காது?

பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் தோழிகள் இருவரும் பேசிக் கொண்டே வர அவர்கள் இருவருக்கும் சரவணனே டிக்கட் எடுத்து விட்டான்.

அது தெரியாமல் பர்சில் இருந்து வெண்மதி பணத்தை எடுத்து “உனக்கும் நானே எடுத்துறேன் டி”, என்றாள்.

“அதெல்லாம் வேண்டாம். அண்ணா எடுத்துருப்பாங்க”, என்று சொன்னாள் பூர்ணிமா.

“சரி எனக்கு மட்டும் எடுத்துக்குறேன்”

“உனக்கும் அண்ணா எடுத்துருப்பாங்க. பணத்தை உள்ள வை டி”

“உங்க அண்ணா உனக்கு மட்டும் தான் எடுத்துருப்பாங்க. எனக்குமா எடுப்பாங்க?”

“நீ என்னோட டியரஸ்ட் பிரண்டுன்னு அவங்களுக்கு தெரியும். அதனால உனக்கும் எடுத்துருப்பாங்க. சந்தேகமே வேண்டாம்”, என்று பூர்ணிமா அடித்து சொன்னதும் பணத்தை உள்ளே வைத்துக் கொண்டாள். ஆனாலும் வெண்மதிக்கு கொஞ்சம் திக் திக்கென்று தான் இருந்தது.

தனக்கும் அவன் டிக்கட் எடுத்திருப்பானா? இல்லை என்றால் செக்கிங்க் இன்ஸ்பெக்ட்டரிடம் மாட்டிக் கொள்வோமோ என்று பயந்து கொண்டே தான் வந்தாள். ஒரு ஆளைப் பார்க்க வேண்டும் என்று எண்ணி அவர்கள் இறங்குவதற்கு முந்தைய நிறுத்தத்தில் பஸ்ஸில் இருந்து கீழே இறங்கினான் சரவணன். மற்ற ஆட்கள் பஸ்ஸில் இருந்து ஏறி இறங்கிக் கொண்டிருக்க வெண்மதி மற்றும் பூர்ணிமா அமர்ந்திருக்கும் ஜன்னல் அருகே வந்தான்.

“பூர்ணி”, என்று அவன் அழைக்க ஜன்னல் ஓரத்தில் இருந்த வெண்மதி சற்று திகைத்து அவனைப் பார்த்தாள்.

“என்ன அண்ணா?”, என்று பூர்ணிமா தலையை நீட்டி அவனிடம் கேட்க “நான் இங்க என்னோட பிரண்டைப் பாத்துட்டு தான் காலேஜ் போவேன். நீ இந்தா இந்த டிக்கட்டை வச்சிக்கோ. திடீர்னு செக்கிங்க் வருவாங்க”, என்று சொல்லி நீட்டினான்.

அதை வெண்மதி தான் வாங்கி பூர்ணிமாவிடம் கொடுத்தாள். அதில் இரண்டு டிக்கட் இருக்க அப்போது தான் நிம்மதி வந்தது வெண்மதிக்கு. பஸ் எடுக்கப் பட தன்னாலே அவனைத் திரும்பிப் பார்த்தாள் வெண்மதி. அவனும் போகும் பஸ்ஸையே பார்த்துக் கொண்டு நின்றதால் அவள் பார்த்தது அவனுக்கு தெரிந்தது.

ஒரு நொடி தான். ஒரே ஒரு நொடி தான். இருவர் பார்வையும் பின்னிக் கொண்டது. அடுத்த நொடி அவளும் தலையை உள்ளே இழுத்துக் கொள்ள அவனும் அதற்கு பின் அதை மறந்து விட்டான்.

அதற்கு அடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு சரவணனைப் பார்த்தாள் வெண்மதி. அன்று அவள் தாமதமாக வர பஸ் கிளம்பி விட்டது. அவள் வரவில்லையா என்று பார்த்துக் கொண்டிருந்த சரவணன் தான் கடைசியாக பஸ்ஸில் ஏறினான். அப்போது அவள் ஓடி வருவது தெரிந்தது. “டிரைவர் பஸ்ஸை நிறுத்துங்க. ஆள் வராங்க”, என்று சொன்னான் சரவணன். உடனே பஸ் நின்றது.

அவள் முன்னால் சென்று ஏறுவாள் என்று எண்ணி அவன் படியில் நிற்க அவளோ அவசரத்தில் பின்னால் ஏறி விட்டாள். அதை எதிர் பார்க்காத அவன் அவளுக்கு வழி விட நினைக்கும் போது பஸ் கிளம்பி விட்டது. திடீரென்று பஸ் கிளம்பும் என்று தெரியாமல் அப்படியே கீழே விழப் போனாள் வெண்மதி.

அவன் கரங்கள் சட்டென்று அவளை இடையோடு சேர்த்து பிடித்து நிறுத்தி இருந்தது. பயத்தில் அவள் கரங்கள் உயர்ந்து அவனது சட்டையை இறுகப் பற்றி இருந்தது. அவள் அவனை திகைப்பாக நிமிர்ந்து பார்க்க “பாத்து மதி”, என்று உச்சரித்தான்.

அவள் உடல் மொத்தமாக அவன் மேல் பதிந்திருந்தது. அவனது கரம் அவளுடைய வெற்றிடையில் பதிந்திருந்தது என்றால் அவளது கரமோ அவனது நெஞ்சில் பதிந்திருந்தது. இவ்வளவு நெருக்கத்தை அவன் எதிர் பார்க்கவே இல்லை. அனைவரும் அவர்களைப் பார்க்கவே அவன் தன்னுடைய கைகளை விலக்கிக் கொள்ள அவள் தான் இன்னும் பதட்டத்துடன் அவனைப் பற்றி இருந்தாள். விழுந்து விடுவோமா என்ற பதட்டமா? இல்லை அவன் மதி என்று அழைத்ததாலா? எதுவோ ஒன்று அவள் மூளையை செயல் இழக்க வைத்தது.

அவள் அவனையே விழி எடுக்காமல் பார்க்க அவள் கண்களில் இருந்த உணர்வுகளை மொழி பெயர்க்க முயன்றான் சரவணன்.

“படியில நிக்காதீங்க. மேல வாங்க”, என்று கண்டக்டர் குரல் கொடுத்ததும் அவனை விட்டுவிட்டு கம்பியைப் பிடித்தவள் மேலே ஏறி வந்து பூர்ணிமா அருகில் அமர்ந்தாள். அவனும் மேலே ஏறி வந்து ஒரு சீட்டில் அமர்ந்தான்.

நடந்தது ஒரு விபத்து தான் என்றாலும் அவனுக்கும் ஒரு மாதிரி தான் இருந்தது. அவனுடைய அன்னை, சிற்றன்னை, தங்கை, அத்தையைத் தவிர அவன் நெருக்கமாக நின்ற முதல் பெண் வெண்மதி தான். அவ்வப்போது பார்க்கும் வைஷ்ணவி கூட அவனை இந்த அளவுக்கு பாதிக்க வில்லை. ஆனால் வெண்மதி அவனை மொத்தமாக சாய்த்திருந்தாள்.

அவள் பயத்துடன் தான் தன்னருகில் நெருக்கமாக நின்றாள் என்று மூளைக்கு உரைத்தாலும் மனம் என்னவோ தடுமாறித் தான் போனது.

சீட்டில் அமர்ந்திருந்த வெண்மதிக்கோ இதயத் துடிப்பு பலமாக தான் இருந்தது. முதல் முறை உணர்ந்த அன்னிய ஆடவனின் நெருக்கம் அவளுக்குள் சில பல உணர்வுகளை தூண்டி விட்டிருந்தது.

“என்ன ஆச்சு டி?”, என்று கேட்டாள் பூர்ணிமா.

“விழப் பாத்துட்டேன் டி. அதான் படபடப்பா இருக்கு”, என்று சொல்லி சமாளித்தாள் வெண்மதி.

பஸ் நின்றதும் சரவணன் ஒரு திசையிலும் வெண்மதி மற்றும் பூர்ணிமா இருவரும் அதற்கு எதிர் திசையிலும் நடந்து சென்றார்கள். அவளைக் காண வேண்டும் என்ற ஆவலில் அவன் தான் முதலில் திரும்பிப் பார்த்தான்.

அந்நேரம் அவளும் திரும்பிப் பார்க்க அவன் பார்த்ததும் “தேங்க்ஸ்”, என்று மெதுவாக அவள் உதடுகள் உச்சரிக்க அதை சரியாக படித்தவன் சிறு சிரிப்புடன் அங்கிருந்து சென்று விட்டான். அன்று முழுவதுமே அந்த நிகழ்வின் தாக்கம் இருவருக்குள்ளும் இருக்க தான் செய்தது.

அதற்கு பின் அவளால் அவனைக் காண முடியவில்லை. ஆனால் பூர்ணிமாவிடம் அடிக்கடி அவனைப் பற்றி விசாரிப்பாள். பேச்சு வாக்கில் கேட்பதால் பூர்ணிமாவும் அதை பெரியதாக நினைக்க வில்லை. அப்போது ஒரு நாள் வெண்மதி பள்ளிக்கு கிளம்பி தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்தாள். அன்று குற்றாலம் கொஞ்சம் டென்சனுடன் அமர்ந்திருந்தார்.

இப்போது அவரிடம் எதுவும் பேசி விட முடியாது என்பதால் மௌனமாக சாப்பிட அமர்ந்தாள். விசாலமும் எதுவும் பேசாமல் மகளுக்கு பரிமாறினாள். இப்போது மகளும் மனைவியும் ஏதாவது பேசினால் கேவலமாக எரிந்து விழுவார் என்பதால் அமைதியாக இருந்தார்கள்.

அப்போது குற்றாலத்தின் போன் அடித்தது. அதை எடுத்தவர் “சொல்லு மணி, போன காரியம் என்ன ஆச்சு?”, என்று கேட்டார்.

“தடையமே இல்லாம முடிச்சிட்டோம் ஐயா. ஆள் ஸ்பாட் அவுட். நம்ம பேர் வெளிய வராது”, என்றான்.

“சரி டா, எதுக்கும் கவனமா இரு”, என்று சொல்லி போனை வைத்தவர் மீண்டும் ஒரு எண்ணுக்கு அழைத்தார். அந்த பக்கம் எடுக்கப் பட்டதும் “சார், எங்க வேலை முடிஞ்சிருச்சு. பையனை முடிச்சாச்சு. எங்க பக்கம் எந்த தடையமும் இல்லை. உங்க பொண்ணு மூலமா நீங்க மாட்டாம இருந்துக்கோங்க”, என்றார்.

“நான் ஜெயில்லுக்கு போனா கூட பரவாயில்லை. அந்த பையன் செத்துட்டான்ல? எனக்கு அது போதும். ரொம்ப நன்றி குற்றாலம். அவனை எல்லாம் என் வீட்டு மாப்பிள்ளை ஆக்கினால் என் கவுரவம் என்ன ஆகுறது? சரி மீதி பேமண்ட் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க அக்கவுண்டுக்கு வரும்”, என்று சொல்லி விட்டு வைத்தார் அந்த பெரிய மனிதன்.

சிறிது நேரத்தில் பணம் அக்கவுண்டில் ஏறி விட சந்தோஷமாக அங்கிருந்து எழுந்து சென்றார் குற்றாலம். அவரையே அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள் அம்மாவும் மகளும். அவர் பேசியதை வைத்தே உண்மை அவர்களுக்கு புரிந்து போனது.

காதல் வெடிக்கும்….

Advertisement