Advertisement

அதற்கு மேல் அவள் பின்னே சென்றால் அவளை பின் தொடர்வது போல இருக்கும் என்பதால் அவன் திரும்பிச் சென்று செந்தில் அருகே அமர்ந்து கொண்டான்.

“எங்க டா போன? சரி வாங்க, வீட்டுக்கு போகலாம்”, என்று வசந்தா சொல்ல “கொஞ்ச நேரம் உக்காந்துட்டு போகலாம் மா”, என்றான் சரவணன்.

“இவ்வளவு நேரம் உக்காந்து தானே டா இருந்தோம்?”

“நான் இப்ப தானே உக்காந்தேன். கொஞ்ச நேரம் இருப்போம்”, என்று சொல்ல அவனை ஒரு மார்கமாக பார்த்து விட்டு சாந்தியிடம் கதை பேச ஆரம்பித்து விட்டாள்.

செந்தில் மற்ற நேரமாக இருந்திருந்தால் நண்பனின் தடுமாற்றத்தை கவனித்திருப்பான். ஆனால் இப்போது பூர்ணிமாவிடம் அவன் கவனம் இருக்க சரவணனை அவன் கவனிக்க வில்லை.

வெண்மதி தாயுடன் கிளம்பிச் செல்லும் போது அனிச்சையாக சரவணன் புறம் திரும்பினாள். அவனும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவனைக் கண்டு நட்பாக புன்னகைத்தவள் அங்கிருந்து சென்று விட்டாள்.

“டேய் செந்தில்”, என்று சரவணன் அழைக்க செந்திலோ அவனை கவனிக்க வில்லை.

பின் அவன் தொடையை நறுக்கென்று கிள்ளி வைக்க “ஆ ஏன் மச்சான் கிள்ளி விட்ட?”, என்று கேட்டான் செந்தில்.

“கூப்பிட்டேன் நீ கண்டுக்கலை. அதான். சரி அது யாரு டா?”, என்று வெண்மதியைக் காட்டிக் கேட்டான்.

“எது டா?”

“அதோ போகுதே அந்த பொண்ணு தான்”

“அது வெண்மதி டா. குற்றலாம் பொண்ணு. நம்ம ஸ்கூல்ல தான் படிச்சா. நீ கொஞ்ச நாள் வேற ஊர்ல படிச்சல்ல? அதான் உனக்கு தெரியலை. ஆமா ஏன் கேக்குற? நீ பொண்ணுங்க பத்தி கேக்க மாட்டியே?”, என்று சந்தேகமாக கேட்டான்.

“இல்லை டா, அன்னைக்கு பிச்சிப் பூவை எறிஞ்சிட்டு மல்லிப் பூ வச்சான்னு சொன்னேன்ல? அவ தான் இவ”

“அப்படியா? வெண்மதி தலைல எப்பவுமே மல்லிப்பூ இருக்கும் டா. ஸ்கூல்ல பாத்துருக்கேன். சரி சரி என்னை டிஸ்டர்ப் பண்ணாத. இப்ப தான் உன் தங்கச்சி கொஞ்சமா என் பக்கம் திரும்புறா. நான் இன்னும் ரெண்டு வாரத்துல பாரின் போகணும். அதுக்குள்ள ஏதாவது கிடைக்குதான்னு பாக்குறேன்?”

“என்னது இப்ப தான் பாக்கவே செய்றாளா? அப்படின்னா இத்தனை நாளும்?”, என்று அதிர்ந்து போய்க் கேட்டான் சரவணன்.

“இத்தனை நாளும் ரெண்டு பேரும் தனித்தனி தான். கிட்ட போனாளே பயந்து சாகுறா”

“அதான் அவளுக்கு கொஞ்சம் மெச்சூரிட்டி வரட்டும், ஒரு ரெண்டு வருஷம் பொறு. அப்புறம் கல்யாணம் பேசலாம்னு சொன்னேன். நீ தான் கேக்கலை”

“பரவால்ல மச்சான். இப்ப அவ என்னோட பொண்டாட்டி. எனக்கு அந்த நிம்மதியே போதும். இன்னும் ரெண்டு வருஷம் காத்துருந்தேன்னு வை அவ எனக்கு கிடைப்பாளா மாட்டாளான்னு பயந்தே சாகணும்”, என்று சொன்ன செந்தில் பூர்ணிமாவிடம் பேச அதற்கு மேல் அவனை சரவணன் தொந்தரவு செய்ய வில்லை.

அவனுக்கு நினைக்க வெண்மதியைப் பற்றிய நினைவுகள் நிறைய இருந்தது. வீட்டுக்குச் சென்ற வெண்மதிக்கும் அவனைப் பற்றிய நினைவு தான். படுக்கையில் படுத்து புரண்டு கொண்டிருந்தாள். அவளுக்கு உறக்கம் எல்லாம் வரவில்லை. அதே நேரம் எழுந்து வேறு ஏதாவது வேலை செய்யவும் மனதில்லை. அன்று அவனைப் பார்த்த நினைவு மட்டுமே மனதில் நிழலாடியது.

முதல் முறையாக ஒருவன் அவளுடைய கண்களை நேருக்கு நேர் பார்த்து உரையாடியதாலா? இல்லை அவளுக்கு மல்லிப்பூ பிடிக்கும் என்பதை அவன் அறிந்து கொண்டதாலா? ஏதோ ஒரு சலனம் அவளுக்குள் எழுந்தது. அன்றைய கனவில் கூட அவன் வந்து கொலுசை நீட்ட பட்டென எழுந்து அமர்ந்து விட்டாள்.

அவள் உடல் எல்லாம் வியர்த்துப் போனது. “சே நான் ஏன் இப்படி எல்லாம் நினைக்கிறேன்? அவன் எதுக்கு என்னோட கனவுல வரான்? அவன் யாருன்னே தெரியலை. அப்படி இருக்க இது எப்படி சாத்தியம்?”, என்று தனக்கு தானே எண்ணிக் கொண்டாள்.

இது வரை பள்ளியிலும் கல்லூரியிலும் எந்த ஆண்களும் வந்து காதல் என்று நின்றதில்லை. அவளுடைய தந்தைக்கு பயந்தே யாரும் அவளிடம் பேசியது இல்லை. அதனால் அவளுக்கு பெண் நண்பர்களும் குறைவு என்னும் போது ஆண்களுடன் அவள் அதிகம் பேசியதே இல்லை. முதல் முறையாக உரையாடியவன் சரவணன் தான். அந்த வகையில் அவன் அவளுக்கு ஸ்பெஷல் தான்.

அடுத்த நாள் பஸ்ஸுக்கு காத்திருந்த போது அவள் கண்கள் அவனைத் தேடி அலை பாய்ந்தது. “நான் இங்க வச்சு தானே தலைல பூ வச்சேன். அவன் என்னை எங்க இருந்து பார்த்தான்?”, என்று எண்ணிக் கொண்டாள். ஆனால் அவள் அவனை எவ்வளவோ தேடிய போதும் அவன் அவளுக்கு தரிசனம் தர வில்லை. செந்தில் பாரின் கிளம்பப் போவதால் அவனுக்கு தேவையான பொருள்கள் வாங்குவதில் பிசியாக இருந்தான் சரவணன். அதனால் அவன் அவளைப் பார்க்க வர வில்லை.

ஒரு மாதம் கடந்திருந்த நிலையில் செந்தில் பாரின் சென்று விட்டான். வெண்மதியும் கிட்டத்தட்ட சரவணனை மறந்து போனாள். செந்தில் நினைப்பில் பூர்ணிமா ஒரு மாதிரி பித்துப் பிடித்தவளைப் போல இருக்க அவனுக்கு தங்கையை எண்ணி கஷ்டமாக இருந்தது.

“மாப்பிள்ளை போனதுல இருந்து பிள்ளை முகம் சரியாவே இல்லை. அதுக்கு தான் கொஞ்ச வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணலாம்னு சொன்னோம். நீ தான் கேக்கலை. இப்ப எப்படி அவளை மாத்தப் போற?”, என்று கேட்டாள் வசந்தா.

அவள் மனதை மாற்ற தங்கையை வேலைக்கு அனுப்ப முடிவு எடுத்து இரண்டு தந்தைகளிடம் கேட்டான். “அவ உன்னோட தங்கச்சி. அவ சந்தோஷமா இருக்க என்ன செய்யணுமோ செய்”, என்று அவர்கள் சொல்லி விட்டார்கள். அதனால் பள்ளியில் பேசி அவளுக்கு வேலை வாங்கித் தந்தான்.

முதல் நாள் பூர்ணிமாவை பள்ளியில் விடுவதற்காக கிளம்பினான் சரவணன். அப்போது பார்த்து அவன் பைக் பஞ்சர் ஆகி இருக்க அவளுடன் பஸ் ஸ்டாண்ட்க்கு சென்றான். அவன் கண்கள் வெண்மதியைத் தேடியது. ஆனால் அவள் அன்று பூரிக் கிழங்கை ஒரு கை பார்த்து விட்டு தாமதமாக தான் வந்தாள்.

பஸ் கிளம்பிய பிறகு தான் அவள் பஸ்ஸில் ஏறி இருந்ததைப்  பார்த்தான். தங்கையிடம் திரும்பி “பூர்ணி அதோ அந்த பொண்ணு பக்கத்துல போய் உக்காரு. அந்த பொண்ணும் உங்க ஸ்கூல்ல தான் டீச்சரா வேலை பாக்குது. உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா அவ கிட்ட கேட்டுக்கோ”, என்று சொல்ல “சரிண்ணா”, என்று சொல்லி விட்டு வெண்மதி அருகில் சென்று அமர்ந்தாள் பூர்ணிமா.

“ஹாய், என்னோட பேர் பூர்ணிமா. நீங்க வி.என் ஸ்கூல்ல தான் வொர்க் பண்ணுறீங்களா?”, என்று பேச்சு கொடுத்தாள்.

“ஆமா, என்னோட பேர் வெண்மதி. நீங்க இந்த ஊர் தானா?”

“ஆமா இதே ஊர் தான்”

“என்னோட வேலையைப் பத்தி உங்களுக்கு எப்படி தெரியும்? என்னை இதுக்கு முன்னாடி நீங்க பாத்துருக்கீங்களா?”

“இல்லை இப்ப தான் பாக்குறேன். எனக்கும் அந்த ஸ்கூல்ல தான் வேலை கிடைச்சிருக்கு. இன்னைக்கு தான் ஜாயின் பண்ணப் போறேன்”, என்று சொன்ன பூர்ணிமா யார் அவளுக்கு தகவல் சொன்னது என்று கடைசி வரை சொல்லவே இல்லை.

“எந்த கிளாஸ்க்கு எடுக்கப் போறீங்க?”, என்று வெண்மதி கேட்க அவர்கள் பேச்சு சகஜமாக தொடர ஆரம்பித்தது. அப்போது டிக்கட் எடுக்க வந்தார் கண்டக்டர்.

“உங்களுக்கும் டிக்கட் எடுக்கவா பூர்ணிமா?”, என்று கேட்டாள் வெண்மதி.

“இல்லை வேண்டாம், எனக்கு அண்ணா எடுப்பாங்க. பின்னாடி தான் இருக்காங்க”

“அண்ணாவா? அவங்களும் வந்துருக்காங்களா? யாரு?”, என்ற படி வெண்மதி திரும்பிப் பார்க்க “அதோ அந்த நீல கலர் சட்டை போட்டுருக்காங்கல்ல? அவங்க தான். என்னோட பெரியப்பா பையன். ஆனா சொந்த அண்ணன் தான். அவங்க பேர் சரவணன். அக்ரி காலேஜ்ல கெஸ்ட் லெக்சரரா இருக்காங்க. கூடிய சீக்கிரம் பெர்மனண்ட் ஸ்டாஃபா ஆகிருவாங்க. அது போக விவசாயமும் பாப்பாங்க”, என்றாள்.

“இவனா?”, என்று எண்ணிய படி வெண்மதி பார்த்துக் கொண்டே இருக்க அவள் தன்னையே பார்க்கவும் கண்களால் என்னவென்று கேட்டான். அவன் செய்கையில் திகைத்தவள் படக்கென்று திரும்பிக் கொண்டாள். அவன் உதடுகளில் அழகான புன்னகை உதயமானது.

Advertisement