Advertisement

அத்தியாயம் 5

ஆர்ப்பரித்து ஓடும் அருவியில் நின்று

கொண்டு தாகத்தில் தவிப்பது

காதலில் மட்டுமே சாத்தியம்!!!

“என் செல்லம்ல? இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ டா”, என்று கெஞ்சினாள் விசாலம்.

“சரி சரி எப்படியாவது வாங்கி வைக்கச் சொல்லு”, என்று சொன்ன வெண்மதி அரை மனதுடன் அந்த பிச்சிப் பூவை தலையில் சூடிக் கொண்டாள்.

அவன் பஸ் ஸ்டாண்டில் பஸ்க்காக நிற்கும் போது அவளது நீண்ட பின்னலும் அதில் இருந்த பூவும் அங்கே வந்த சரவணன் கண்ணில் பட்டது. அவள் நீளக் கூந்தலைக் கண்டு வியந்து போனான். ஆனால் அவளுடைய முகம் அவனுக்கு தெரிய வில்லை. அவள் திரும்புவாள் என்று அவன் காத்திருக்க அப்போது ஒரு பூக்காரப் பாட்டியை அழைத்தாள் வெண்மதி.

அவரிடம் பணத்தைக் கொடுத்து வெண்மதி மல்லிகைப் பூவை வாங்க “இவ என்ன பைத்தியமா? தலைல அவ்வளவு பூ வச்சிருக்கா. திருப்பியும் வாங்குறா? ஒரு வேளை வேற யாருக்கும் கொடுப்பாளோ?”, என்று எண்ணி அவளையே பார்த்திருந்தான்.

ஆனால் பூவை வாங்கிய வெண்மதியோ தலையில் பிரசாக இருந்த பிச்சிப் பூவைக் எடுத்து தூர வீசி விட்டு அந்த மல்லிப் பூவைச் சூடினாள். அதைக் கண்டு அவனுக்கு வியப்பாக இருந்தது.

அவள் பஸ்ஸில் ஏறியதும் பஸ் கிளம்பி விட சரவணனால் அவள் முகத்தைப் பார்க்க முடிய வில்லை.

“என்ன டா ஒரு மாதிரி பாத்துட்டு நிக்குற?”, என்று கேட்டான் செந்தில்.

“ஒரு பொண்ணைப் பாத்தேன் டா. தலை நிறைய பிச்சிப்பூ வச்சிருந்தது. அந்த நீள முடிக்கு அந்த பூ அவ்வளவு அழகா இருந்துச்சு. ஆனா அந்த பொண்ணு அந்த பாட்டி கிட்ட மல்லிகைப்பூ வாங்குச்சு. எதுக்கு வாங்குறான்னு பாக்கும் போதே பிச்சிப் பூவை தூர வீசிட்டு மல்லிகைப் பூவை தலையில் வச்சிட்டு போயிட்டா. ஆனா அவ முகத்தை தான் டா பாக்க முடியலை. எதுக்கு இப்படி செஞ்சிருப்பா?”

“அவளுக்கு மல்லிப்பூ தான் பிடிக்குமோ என்னவோ? ஆனாலும் நல்லா இருக்குற பூவை வீசிட்டு புதுசு வைக்கிறது அதிசயம் தான்”

“ஆமா டா. மத்த பொண்ணுங்களை விட அவ வித்தியாசம் தான். சரி வா வீட்டுக்கு போகலாம்”, என்று சொல்லி வண்டியைக் கிளப்பிய சரவணன் அதன் பின் வெண்மதியை மறந்து போனான். அவன் பின்னே ஏறி அமர்ந்த செந்தில் பூர்ணிமாவைப் பார்க்கும் ஆவலில் அவனுடைய வீட்டுக்குச் சென்றான்.

சிறிது நாட்களுக்கு பிறகு வெண்மதி வீட்டில் மதியச் சாப்பாடுக்கு அமர்ந்த குற்றாலத்துக்கு உணவு பரிமாறிய விசாலம் “என்னங்க, பாப்பாக்கு இருபத்தி மூணு வயசாகிருச்சு. ஒரு நல்ல வரனா பாக்கலாம்ல?”, என்று கேட்டாள்.

“அவ சின்ன பொண்ணு டி”

“இன்னும் என்ன சின்னப் பொண்ணு. இது தான் சரியான வயசு”

“சரி டி பாக்குறேன், தரகர் கிட்ட சொல்லி வைக்கிறேன்”, என்றார்.

“என்ன தான் சொல்லி வச்சாலும் எனக்கு அவ கல்யாணம் எப்படி நடக்குமோன்னு பயமா தான் இருக்குங்க”

“ஏன் டி அப்படிச் சொல்ற? என் பொண்ணுக்கு இருக்குற அழகுக்கு மாப்பிள்ளை அவன் இவன்னு போட்டி போட்டுட்டு வருவாங்க டி”

“அது என்னமோ உண்மை தான். ஆனா பொண்ணோட அப்பா செய்யுற தொழிலைக் கேட்டா நான் இல்லை அவன் இல்லைன்னு போட்டி போட்டுட்டு ஓடிருவாங்க”, என்று விசாலம் சொல்ல அடுத்த நொடி எச்சில் கரத்தால் அவளுடைய கன்னத்தில் ஓங்கி அடித்து விட்டார் குற்றாலம்.

கண்ணில் கண்ணீர் பெருக கன்னத்தைப் பிடித்த படி நின்றாள் விசாலம். “பொம்பளையா வீட்ல சமைச்சோமா, பிள்ளையை பாத்தோமான்னு இருக்கணும். வெண்மதிக்கு மாப்பிள்ளை பாக்கணும்னு சொல்லிட்டல்ல? அதோட நிறுத்திக்கணும். தேவையில்லாம பேசின, கொன்னு புதைச்சிருவேன்”, என்று சொன்னவர் சாப்பிட்ட தட்டில் கை கழுவி விட்டுச் சென்று விட்டார். மகள் வாழ்க்கைக்காக கடவுளிடம் வேண்டுவதைத் தவிர விசாலத்துக்கு வேறு என்ன செய்ய என்று தெரிய வில்லை.

எங்கே கணவனின் பாவங்கள் மகளை காவு வாங்கி விடுவோமோ என்று அந்த தாய்க்கு கவலையாக இருந்தது. அன்று மாலையே வெண்மதியை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றாள். அந்த கடவுளே தஞ்சம் என்று சரணடைவதைத் தவிர அவளுக்கு வேறு வழி இல்லை. அப்போது தான் வெண்மதி சரவணனை முதல் முறையாக பார்த்தாள். அவனும் அப்போது தான் அவளைப் பார்த்தான்.

செந்தில் மற்றும் பூர்ணிமாவுக்கு திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகி இருந்தது. அதனால் அவர்களையும் வசந்தா மற்றும் சாந்தியையும் அழைத்துக் கொண்டு சரவணன் மலைக் கோவிலுக்கு வந்திருந்தான். அப்போது தங்களுக்கு முன் இரண்டு பெண்கள் படிகளில் ஏறிக் கொண்டிருக்க சரவணன் கண்ணில் பட்டது அந்த நீண்ட கூந்தலும் அதில் இருந்த மல்லிகைப் பூவும் தான். பின் தோற்றத்தைப் பார்த்த உடனே அவனுக்கு அது அவள் தான் என்று புரிந்து போனது.

இன்று அவள் முகத்தைப் பார்த்து விட வேண்டும் என்று எண்ணி தான் கோவிலுக்குச் சென்றான். தாயின் நச்சரிச்சலால் கோவிலுக்கு வந்திருந்த சரவணனுக்கு இன்று அவனை அறியாமலே ஒரு ஆர்வம் வந்திருந்தது. அன்று வெள்ளிக் கிழமை என்பதால் கோவிலில் கொஞ்சம் கூட்டம் அதிகமாக தான் இருந்தது. அனைவரும் சுற்றிக் கும்பிட்டுக் கொண்டிருக்க ஐயர் தீபாராதனை காட்ட ஆரம்பித்தார்.

அவளைத் தேடிக் கொண்டிருந்தவன் அவள் எங்கு போனாள் என்று தெரியாததால் அந்த பெருமாள் சாமியையும் தீபாராதனையையும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது தான் தன் தாயுடன் அவனுக்கு எதிரே வந்து நின்றாள் வெண்மதி. அவன் அவளை பார்க்கவில்லை. அதே போலும் அவளும் அவனைப் பார்க்க வில்லை.

தீபாராதனையை கண்ணில் ஒற்ற கையை கொண்டு சென்ற போது சரவணனைக் கவனிக்காமல் ஐயர் அந்த பக்கம் திரும்பி விட்டார். அந்த பக்கம் இருப்பவர்களுக்கு காட்டிய பிறகு தனக்கு காட்டுவார் என்று எண்ணி அவன் அவரைப் பார்க்க அப்போது தான் தனக்கு எதிரே நின்ற அவளைப் பார்த்தான்.

ஐயர் நகர்ந்ததும் அவன் கண்ணில் முழுதாக விழுந்தாள் வெண்மதி. பார்த்தவனுக்கு சட்டென்று அவள் முகம் மனதில் பதிந்து போனது. அவளிடம் இருந்து அவனால் கண்ணை திருப்பவே முடியவில்லை.

“யாரு டா இந்த பொண்ணு? இவ்வளவு அழகா இருக்கு? நம்ம ஊர் தானா? முடியும் எவ்வளவு நீளம்? அன்னைக்கு பின் பக்கம் தான் நல்லா இருக்கும்னு நினைச்சா தேவதையாட்டம் இருக்கா”, என்று எண்ணியவன் மீண்டும் மீண்டும் அவளைத் திரும்பிப் பார்த்து விட்டு சாமியைப் பார்த்தான்.

அதன் பின் அவள் விசாலத்துடன் சேர்ந்து பிரகாரம் சுற்றப் போய் விட்டாள். சரவணனுடன் வந்தவர்கள் அனைவரும் அங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருக்க சரவணனுக்கு அவள் பின்னேயே போக வேண்டும் போல இருந்தது. அவன் மீண்டும் சாமியைச் சுற்றப் போக “டேய் மாப்பிள்ளை, எங்க டா போற?”, என்று கத்தினான் செந்தில்.

“இரு டா வரேன்”, என்று சொல்லிய சரவணன் அவள் பின்னேயே போக அவளோ ஒவ்வொரு சாமி அருகிலும் நின்று பொறுமையாக சாமியை வேண்டிய படி சென்றாள். அதை ரசித்தவாறு அவள் பின்னேயே சென்றான் சரவணன்.

அவனுக்கே அவனை நினைத்து வியப்பாக இருந்தது. இப்படி எல்லாம் அவன் எந்த பெண்ணின் பின்னும் அலைந்தது கிடையாது. அவள் பொறுமையாக சாமி கும்பிட்ட படி நடக்க விசாலம் முன்னே சென்று விட்டாள். அப்போது அவளுடைய காலில் இருந்த கொலு கீழே கழண்டு விழுந்தது. அவசரமாக குனிந்து அதை எடுத்தவன் “பேசாம இதை கையோட தூக்கிட்டுப் போய்றலாமா?”, என்று எண்ணினான்.

பின் தன்னுடைய தலையிலே அடித்துக் கொண்டு “என்னங்க”, என்று அழைத்தான். அவன் குரலில் வெண்மதி திரும்பிப் பார்க்க “உங்க கொலுசு கழண்டு விழுந்துருச்சு, இதோ பாருங்க”, என்று சொல்லி தன்னுடைய கையைக் காட்ட அவள் அவசரமாக அவளுடைய காலைப் பார்த்து விட்டு சிறு சிரிப்புடன் அவனை நெருங்கினாள்.

அவள் அருகே வந்ததும் அவன் தன்னுடைய கையை நீட்ட அவன் உள்ளங்கையில் தன்னுடைய கையைப் பதித்த படி அதை எடுத்துக் கொண்டவள் “ரொம்ப தேங்க்ஸ், இது எனக்கு ரொம்ப பிடிச்ச கொலுசு. இது காணாம போயிருந்தா ரொம்ப பீல் பண்ணிருப்பேன்”, என்று சொன்னவள் குனிந்து காலில் அந்த கொலுசை மாட்டினாள்.

அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க நிமிர்ந்தவள் மீண்டும் “தேங்க்ஸ்”, என்று சொல்லி விட்டு திரும்பி நடந்தாள்.

“ஒரு நிமிஷம்”, என்று அழைத்தான் சரவணன்.

அவள் குழப்பமாக அவனைத் திரும்பிப் பார்க்க “உங்களுக்கு மல்லிப் பூன்னா ரொம்ப பிடிக்குமா?”, என்று கேட்டான்.

வியப்பாக அவனைப் பார்த்தவள் “உங்களுக்கு எப்படி தெரியும்?”, என்று கேட்டாள்.

“அன்னைக்கு பஸ் ஸ்டாண்ட்ல பாத்தேன் பிச்சிப் பூவை தூர வீசிட்டு மல்லிப்பூ வாங்கி வச்சதை”, என்று அவன் சொல்ல அவனை சங்கடமாக ஏறிட்டவள் “ஏன்னு தெரியலை, மல்லிப்பூ எனக்கு அவ்வளவு பிடிக்கும். அன்னைக்கு அம்மா பிச்சிப் பூ தான் கொடுத்தாங்க. மல்லியைப் பாத்ததும் வாங்கி வச்சிட்டேன். சரி அம்மா தேடுவாங்க. நான் வரேன்”, என்று சொல்லி விட்டு நடந்து விட்டாள்.

Advertisement